சிற்பங்களைப் பயில
அன்புள்ள ஜெயமோகன்,
சமீபத்தில் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானின் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலை வாசித்தேன். பாலாறு, காவிரி, பொருநைக் கரைகளில் இருக்கும் ஆலயங்களுக்கு நேரில் சென்று வந்த தன் பயண அனுபவங்களை கல்கி இதழில் இரண்டரை ஆண்டுகள் தொடராக எழுதியிருக்கிறார். பின்னர் அது நூல் வடிவம் பெற்றிருக்கிறது. தொடராக வெளியான போதே பரவலான வாசக கவனமும் பெற்றிருக்கிறது. ’’தமிழ் கூறு நல்லுலகின்’’ பண்பாட்டு மையங்களை அடையாளப்படுத்துகிறார் ஆசிரியர். ஸ்ரீரங்க நாதரையும் தில்லை நடராஜரையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாளே தமிழ்நாட்டின் பொன்னாள் என்று திராவிட முன்னேற்றக் கழகம் பரப்புரை செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் இத்தொடர் வெளியாகியிருக்கிறது. அக்குரலுக்கான ஆக்கபூர்வமான பதில் என்றும் இதனைக் கருத முடியும்.
ஆசிரியர் ஒவ்வொரு தலம் பற்றியும் எழுதும் போது அதன் புராணத்தைக் கூறுகிறார். பின்னர் சிற்பங்களின் அழகு குறித்து பேசுகிறார். தமிழின் பக்தி இலக்கியங்களில் அத்தலங்கள் எவ்வாறு பாடப்பட்டுள்ளன என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். கம்பனையும் வள்ளுவனையும் இளங்கோவையும் மேற்கோள் காட்டுகிறார். புராணங்கள் – அவற்றை மையமாய்க் கொண்டு கலைஞன் உருவாக்கும் சிற்பங்கள் – அவை செறிந்த ஆலயங்கள் என அனைத்தையும் இணைத்து விடுகிறார். இந்திய சிற்பங்களின் கலை அழகை முழுதுணர இந்திய புராணங்கள் அறியப்பட வேண்டும். இந்தியக் கலை தன் பங்களிப்பை நிகழ்காலத்திலும் நிகழ்த்த வேண்டுமெனில் இந்திய புராணங்கள் நுண்கலைகளின் ஒரு பகுதியாகவேனும் பயிலப்பட வேண்டும்.
கிட்டத்தட்ட 1300 பக்கங்கள் கொண்ட நூல். ஒவ்வொரு ஆலயமாக ஒவ்வொரு பதிகமாக ஒவ்வொரு சிற்பமாக எழுந்து வந்து கொண்டேயிருக்கிறது. நம் மண் குறித்த பெருமிதத்தையும் பண்பாட்டைக் காப்பது எப்படி சமூகத்தின் கடமை என்ற நினைவுறுத்தலையும் வாசிக்கும் போது உருவாக்குகிறது. ஒவ்வொரு தலத்திற்கும் எப்படி செல்ல வேண்டும் என சாலை ரயில் மார்க்கங்களை கூறுகிறார் ஆசிரியர். ஒருவகையில் அது தமிழ்ச் சமூகத்தின் முன் அவர் முன்வைக்கும் மன்றாட்டு என நினைத்துக் கொண்டேன். வாசகர் ஒவ்வொருவரிடமும் நீங்கள் பெரும்பாலும் நகராமல் இருக்கும் இடத்திலிருந்து கிளம்பிச் சென்று உங்கள் முன்னோர்கள் நிர்மாணித்திருக்கும் கலைப் பொக்கிஷங்களைச் சென்று பாருங்கள் என்று கேட்கும் மன்றாட்டு.
கல்கியில் ஒவ்வொரு வாரமும் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ தொடரை காஞ்சிப் பெரியவர் வாசிப்பதாக தொ.மு. பாஸ்கரத் தொண்டைமானிடம் கி.வா.ஜ கூறுகிறார். தொ.மு. பா அதிர்ச்சியடைகிறார். இந்நூல் இரண்டு , மூன்று , மற்றும் நான்காம் பாகங்களை முறையே தருமபுரம் சந்நிதானத்துக்கும் காஞ்சிப் பெரியவருக்கும் வெள்ளகால் சுப்ரமணிய முதலியாருக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டு ஆலயங்கள் குறித்த விரிவான அறிமுகத்தை அளிக்கும் நூல் ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’. இந்நூலைக் கையில் எடுத்துக் கொண்டு இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கால்வாசி ஆலயங்களுக்குச் சென்றாலே தமிழ் சிற்பக்கலையின் அழகையும் விரிவையும் அறிந்திட முடியும்.
அன்புடன்,
பிரபு மயிலாடுதுறை
***
[தொ மு பாஸ்கரத் தொண்டைமான்]
அன்புள்ள பிரபு
இந்நூல் சிறு பகுதிகளாக முதலில் வெளிவந்தது.அன்று வெளிவந்த நூலின் ஒரு பகுதி என்னிடம் உள்ளது. முழுநூலையும் வாசித்திருக்கிறேன். என்னை ஆலயங்களை நோக்கி கொண்டுசென்ற நூல் இது. அந்தத் தாள்களின் வழியாகவே ஒரு பயணத்தை மேற்கொண்டேன். அந்தக் கனவைச் சென்றடையவே நேரில் செல்லத் தொடங்கினேன்
தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் [ஜூலை 22, 1904 – மார்ச் 31, 1965] தொ.மு.சி.ரகுநாதன் அவர்களின் தமையன். இந்திய ஆட்சிப்பணியில் இருந்தவர். தந்தை தொண்டைமான் முத்தையா,தாய் முத்தம்மாள். திருநெல்வேலி இந்துக்கல்லூரியில் பயின்றார். டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் வட்டத்தொட்டி என்னும் இலக்கியக்குழுமத்தைச் சேர்ந்தவர். மீ.ப.சோமு, அ.ஸ்ரீனிவாசராகவன், ரா.பி.சேதுப்பிள்ளை,கல்கி, ராஜாஜி போன்ற அக்குழுவின் நட்சத்திரங்கள் பலர்.வனத்துறையில் பணியாற்றி இறுதியில் இந்திய ஆட்சிப்பணி பதவியைப் பெற்றார் அவருடைய இந்நூல்தான் இன்று முதன்மையான பெரும்படைப்பாக நிலைகொள்கிறது.
ந.சுப்பு ரெட்டியார் இதே பணியை செய்த இன்னொரு முன்னோடி திருச்சி அருகே பெரகம்பி என்ற ஊரில் பிறந்தார். திருச்சி சூசையப்பர் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து திருப்பதி வேங்கடேஸ்வரா பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். வெங்கடேஸ்வரா பல்கலையின் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றினார். சுப்பு ரெட்டியார் பெரும்பாலும் வைணவ ஆலயங்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். பாண்டிநாட்டு திருப்பதிகள், சோழநாட்டுத் திருப்பதிகள், வடநாட்டுத் திருப்பதிகள் என அவர் எழுதிய நூல்கள் முக்கியமானவை.
இதற்கு இணையான பெரும்பணி மலையாளத்தில் .நாலாங்கல் கிருஷ்ணபிள்ளை அவர்களால் செய்யப்பட்டது. அவருடைய மகாக்ஷேத்திரங்களுடே முன்னில் என்னும் நூல் ஆயிரம் பக்கங்கள் கொண்ட 6 பகுதிகள் கொண்டது. அந்நூலை நான் பேரார்வத்துடன் ஒவ்வொருநாளும் காசர்கோடு மாவட்ட மையநூலகம் சென்று வாசித்ததை நினைவுறுகிறேன். அதுவும் ஒரு செவ்வியல் ஆக்கம்
நாலாங்கல் கிருஷ்ணபிள்ளை கவிஞர்.கோட்டயம் அருகே ஒளஸை என்னும் சிற்றூரில் 1916 செப்டெம்பர் 15 அன்று பிறந்தார். தந்தை அறைக்கல் கேசவபிள்ளை. அன்னை நாலாங்கல் ஜானகிக்குட்டியம்ம. கோட்டயத்தில் பள்ளிப்படிப்பும் திருவனந்தபுரம் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பும் முடித்தார். எம்.ஏ, எல்.டி பட்டம் பெற்றபின் ஆசிரியராக பணியில் நுழைந்தார். வட்டார துணை இயக்குநராக கல்வித்துறையீலிருந்து ஓய்வுபெற்றார். 1991 ஜூலை 2 ஆம் தேதி தன் 81 ஆம் அகவையில் காலமானார். பத்து கவிதைத் தொகுதிகளும் எட்டு வாழ்க்கை வரலாறுகளும் எழுதியிருந்தாலும் நாலாங்கல் கிருஷ்ணபிள்ளையின் சாதனைப்படைப்பு ஆலயங்களைப் பற்றிய நூல்தான். கேரளத்தின் முதன்மையான அனைத்து ஆலயங்களுக்கும் சென்று அவற்றின் சிற்ப அமைப்பு, தொன்மங்கள், வழிபாட்டு முறைகள் முதலிய அனைத்தையும் முறைப்படி ஆவணப்படுத்தியவர் அவர்.
இந்நூல்கள் அனைத்துமே கவனிப்பாரற்று போயின என்பதுதான் வருந்தற்குரியது. உரிய முறையில் இணையத்தில் [பிடி.எஃப் வடிவில் அல்ல] கிடைப்பதற்காவது எவரேனும் முயலலாம். அவ்வப்போது அச்சில் வந்தாலும் நூலகங்களில் உடனடியாக மறைந்துவிடுகின்றன. கேரளத்திலேயே நாலாங்கல் கிருஷ்ணபிள்ளையின் முழுமையான நூல் கிடைப்பதில்லை. சுருக்கமான பதிப்பும் அச்சிலிருந்து மறைந்துவிட்டது
இந்திய ஆலயங்கள் வழிபாட்டிடங்கள் மட்டும் அல்ல. தொன்மையான கலைகளின் மையங்கள் அவை. இசை, இலக்கியம் அனைத்துமே ஆயிரம் ஆண்டுகளாக ஆலயங்களைச் சார்ந்தே செயல்பட்டுள்ளன. ஓர் இலக்கியவாதிக்கு அவை மாபெரும் படிமப்புதையல்கள். உலகில் எங்கேனும் இத்தனைபெரிய பண்பாட்டுச் செல்வத்தின்மேல் அந்நிலத்து எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் இப்படிப்பட்ட முழுமையான அறியாமையும் அக்கறையின்மையும் கொண்டிருப்பார்களா, கலைக்காகவும் படிமங்களுக்காகவும் தங்களுக்கு என்னவென்றே தெரியாத நிலங்ளின் இலக்கியங்களையும் கலைகளையும் தேடி அரைகுறையாகக் கற்று உளறிக்கொண்டிருப்பார்களா என்று ஐயமாகவே இருக்கிறது. நாம் ஒரு விந்தையான குடிகள், தாழ்வுணர்ச்சியால் மிகையுணர்ச்சியை உருவாக்கிக்கொண்ட ஒருவகை நோயாளிகள்.
ஜெ
***