நான் மாலை ரயிலுக்கு ஈரோடு செல்வதாகத்தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் முன்பதிவு செய்த பயணச்சீட்டைப் பார்த்தால் அதிகாலை ஆறுமணி. மாலை ஆறு மணி அல்ல. ஆகவே முழு இரவும் அமர்ந்து வெண்முரசு எழுதினேன். காலையில் அப்படியே கிளம்பி ரயிலில் ஏறிப் படுத்து கரூர் கடந்தபின் விழித்துக்கொண்டேன். ஒரு முட்டைப்பிரியாணி சாப்பிட்டேன். பிரியாணி மட்டுமே இருந்தன. மற்ற இரு பிரியாணிகளைவிட முட்டை பாதுகாப்பானது.
ஆனால் என் வாழ்நாளில் இப்படி ஓர் உணவை உண்ண நேரிட்டதில்லை. உணவு மோசமாக ஆவது இயல்பு, பொதுவாக எனக்கு உணவுமேல் புகார்கள் இல்லை. ஆனால் ரயிலில் உள்ள சமையலறைகளில் சாப்பிடுபவர்கள்மேல் தீராத வஞ்சம்கொண்டவர்கள் சமைக்கிறார்கள் என நினைக்கிறேன். உண்மையிலேயே அந்த உணவை இன்னொரு மனிதன் உண்பான் என ஒருவன் அதைச் சமைக்கும்போது எண்ணியிருக்கிறான் என்பதே ஆச்சரியம்தான்.
நான் ரயிலில் சாப்பிடுவதில்லை. அரிதாக சாப்பிட்டபோதெல்லாம் குப்பையிலும் கீழான உணவை மட்டுமே சாப்பிட்டிருக்கிறேன். ஒருநாள் கூட ஓரளவு சுவையுடன் சமைக்கப்பட்ட ஓர் உணவை சாப்பிட்டதில்லை. இந்த உணவு அதனினும் கீழ். தக்காளிச்சாதன் எலுமிச்சைச்சோறு போன்ற ஏதோ சாதங்களை கலந்து அதில் முட்டையைச் செருகி வைத்திருந்தார்கள். முட்டை இரண்டுமே கெட்டுப்போனவை. அதன்மேல் சம்பந்தமில்லாமல் ஏதோ குழம்பை ஊற்றியிருந்தான். அதுவும் கெட்டுப்போனது..
உண்மையில் வெளியே பல இடங்களில் எஞ்சிய, கழித்துகட்டிய உணவை கொண்டுவந்து ரயிலில் பரிமாறுகிறார்கள் என்று தோன்றுகிறது. ரயில் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் செல்லாமல் இப்படி நிகழவே முடியாது. ஆகவே எங்கும் புகார்கொடுத்து பயனே இல்லை. என் பெட்டியிலிருந்த ஒன்பதுபேரும் அப்படியே தூக்கிவீசிவிட்டு பெருமூச்சுவிட்டனர். இந்தியாவெங்கும் ரயில்நிலைய – ரயில் உணவால் நோயுறுபவர்கள் ஒருநாளில் சில லட்சம்பேர் இருக்கக் கூடும். ஸ்வச் பாரத் எல்லாம் இதில் செல்லுபடியாகாது போல.
ஈரோட்டில் ஒரு சிறுகதை முகாம் ஒருங்கிணைக்கவேண்டும் என்பது கிருஷ்ணனின் முதலெண்ணம். அவருக்கு அங்கே ஒரு நண்பர்க் கூட்டம் உண்டு, ஆணையிட்டால் தலைக்கொள்ள. பாரி, மணவாளன், அந்தியூர் மணி, சந்திரசேகர், சிவா. நண்பர் சென்னை செந்திலின் ராஜ்மகால் திருமண மண்டபம் காலியாக இருக்கும், இது ஆடிமாதம் என்பதனால். ஆகவே சட்டென்று முகாமை ஒருங்கிணைத்தோம். தமிழ்ச்சிறுகதையின் இன்றைய போக்குகளை, அதன் மீதான வாசிப்புகளை தெளிவுபடுத்திக்கொள்வது செயல்திட்டம்
தனிப்பட்ட காரணங்களால் தேவிபாரதி, சு.வேணுகோபால் ஆகியோர் பங்கெடுக்க முடியவில்லை. எண்பதுபேர் பங்கெடுத்தனர். நான் கல்யாணமண்டபத்திற்குச் சென்றபோது ஏற்கனவே இருவர் வந்துவிட்டிருந்தனர். பதினைந்துபேர் இரவே வந்தனர். இரவில் பத்துமணிவரை பேசிக்கொண்டிருந்தோம். இலக்கியம் கொஞ்சம், கொஞ்சம் நகைச்சுவை. இரவெல்லாம் வந்துகொண்டிருந்தார்கள்.
சனி, ஞாயிறு இரண்டுநாட்களும் நிகழ்ச்சி. தொடர்ச்சியாகச் சிறுகதை பற்றிய பல்வேறு கோணங்கள் திறந்தன. சுனீல் கிருஷ்ணன் சென்ற பதினைந்தாண்டுகளில் தமிழ்ச்சிறுகதைகளில் என்ன நிகழ்ந்திருக்கிறது என ஒரு விரிவான சித்திரத்தை அளித்தார். அதற்காக 130 சிறுகதைத் தொகுதிகளை பரிசீலித்திருந்தார். எம்.கோபாலகிருஷ்ணன் சிறுகதைகளின் குறிப்பமைதி எப்படி அமைகிறது என்பதை விளக்கினார். சாம்ராஜ் பகடி இலக்கியம் குறித்துப் பேசினார். மோகனரங்கன் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட கதைகளின் தாக்கம் பற்றியும் நரேன் உலக இலக்கியத்தில், குறிப்பாக அமெரிக்க எழுத்தில், இன்று நிகழ்வதென்ன என்று பேசினார். விஷால்ராஜா நவீன எழுத்துமுறைகளைப் பற்றி விளக்கினார். இறுதியில் விவாதம் நடைபெற்றது.
மன்னார்குடிக்காரரான சாந்தமூர்த்தி சுனீல்கிருஷ்ணன் தொடங்கிய ஆயிரம் மணிநேர வாசிப்புச் சவாலில் எழுநூறு மணிநேரத்தை அணுகிவிட்டார். அவருக்கு ஒரு பரிசை எம்.கோபாலகிருஷ்ணன் வழங்கினார். சாந்தமூர்த்தி நன்றியுரை வழங்கினார்..
அன்றிரவிலும் கல்யாணமண்டபத்திலேயே தங்கினோம். இரவில் திருமூலநாதனின் கவனகம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னரும் பேசிக்கொண்டிருந்தோம். சனிக்கிழமை ஒரு மாலைநடை. மறுநாள் ஒரு காலைநடை. ஞாயிறு மதியத்துடன் சந்திப்புகள் முடிந்தன. நான் கல்யாணமண்டபத்திலேயே தங்கினேன். அந்திவரை முப்பதுபேர் உடனிருந்தார்கள். அன்று இரவு அங்கே தங்கி மறுநாள் காலை கிளம்பி சித்தேஸ்வரன் மலைக்கு ஒரு மலையேற்றம் செல்வதாகத் திட்டம். நாங்கள் ஐவர் செல்வதாகவே திட்டம். அது பெருகி கடைசியில் பன்னிரண்டுபேர் செல்வதாக ஆகிவிட்டது.
எட்டரை மணிக்கு இரண்டு வேன்கள் ஒரு காரில் கிளம்பி பவானி வழியாக முப்பது கிமீ தொலைவிலுள்ள குருவரெட்டியூர் என்னும் ஊருக்குச் சென்றோம். அங்கிருந்து பாலமலைக்குச் செல்ல உள்ளூரிலுள்ள வண்டி ஒன்று ஏற்பாடு செய்திருந்தோம். அதை என்ன வண்டி என்று சொல்லமுடியாது. ஆனால் ஓடியது. சில விலங்குகள் அங்குள்ள மண்ணுக்கு ஏற்ப பரிணாமம் அடைந்திருக்கும். அந்த வண்டி அத்தகையது. வெறுமே மலையை வெட்டி கற்களாக உருட்டி விடப்பட்டிருந்த ஒரு தடத்தை வழி எனக்கொண்டு அது மேலேறிச்சென்றது. அதற்கு அதிர்வுதாங்கி விற்களே இல்லை. ஆகவே அந்தச் சாலை அதிர்வது தெரியவில்லை.
மேலே மலையாளிகள் என்னும் பழங்குடிகளின் கிராமம். அதன்பெயர் தும்மம்பொதி. பொதுவாக தமிழகத்திலுள்ள எல்லா மலைக்கிராமங்களும் தூய்மையானவை. பத்தாண்டுகளுக்கு முன் ராசிபுரம் அருகே ஒரு மலைக்கிராமத்திற்குச் சென்றபோதும் இதே தூய்மையைக் கண்டேன். அதன்பின்னர் கொல்லிமலையில். ஆனால் ராசிபுரம் அருகே அந்த மலைக்குடிகளின் ஊர் ஓலைக்குடில்களால் ஆனது. தும்மம்பொதியில் ஓலைக்குடில்கள் இல்லை. பெரும்பாலானவை சென்ற ஐந்தாண்டுகளுக்குள் அரசு உதவியுடன் கட்டப்பட்ட சிறிய கான்கிரீட் வீடுகள். எல்லாமே நன்றாக வண்ணம்பூசப்பட்டு அன்றுகட்டியவை போல் இருந்தன. வீடுகளையும் சூழலையும் தூய்மையாகப் பேணுவதனால் அப்பகுதியே மனநிறைவூட்டுவதாக இருந்தது.
ஏழுமலைகளால் ஆனது பாலமலை. ஏழாவது மலையின் உச்சியிலிருக்கிறது சித்தேஸ்வரன் கோயில். மலைஏறிச் செல்வது சற்று கடினமான பயணம்தான். எனக்கு முதலில் மூச்சுவாங்கியது.ஒரு கட்டத்திற்குப்பின் உடல் இயல்பாக ஆகியது. ஏழாம் மலை கொஞ்சம் விளிம்பினூடாகச் செல்லும். இருட்டிலோ மழையிலோ செல்லமுடியாது. விளையாடுவதும் தாவுவதும் அபாயம். கவனமாகக் கால்வைத்துச் செல்லவேண்டும்.
கந்தகம் கொண்ட பாறைகள் மஞ்சள் அரைத்து பூசிக்கொண்டவைபோலிருந்தன. கரிய மலைகளில் கந்தகமஞ்சள் கரைந்து வழிந்திருந்தது. யானைப்பூ போல பாறைகளில் பாறைதேமல். பல இடங்களில் அமர்ந்து பேசி மூச்சு வாங்கிக்கொண்டுதான் மேலேறிச்சென்றோம். மலைக்குமேல் சித்தேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது நெடுங்காலமாக சிறிய கல்பதிட்டையாக அமைந்திருந்தது. சமீபத்தில் கான்கிரீட்டில் கட்டியிருக்கிறார்கள்.
இங்கே சனிக்கிழமை மட்டும்தான் பூசை செய்யபடுகிறது. புரட்டாசிமாதம் நாள்தோறும் பூசை செய்யப்படும். புரட்டாசி வார இறுதிகளில் கூட்டமாக மலையேறிச்செல்வார்கள். மற்றபொழுதுகளில் எவரும் செல்வதில்லை. இந்த மலையில் பல இடங்களில் வெறும் பாறைமேல் நிறுவப்பட்ட சிவலிங்கங்களைக் காணலாம். ஓரிடத்தில் பாண்டுரங்கப்பெருமானின் சிலை வெறும் பாறைமேல் நின்றிருக்கிறது. நெடுங்காலமாக வழிபடப்படுபவை இவை. சித்தேஸ்வரன் கோயில் அத்தகைய சிவலிங்கங்களில் ஒன்றுக்கு கட்டப்பட்டது
கான்கிரீட்டில் ஒற்றைக்கோபுரத்துடன் அமைந்த சிறு ஆலயம். லிங்கம் சித்தேஸ்வரன் என அழைக்கப்படுகிறார். அருகே மாதேஸ்வரன் என்னும் லிங்கமும் உள்ளது. விஷ்ணுசிலை ஒன்றும் அமைந்துள்ளது. நேர் எதிரிலுள்ள பீடத்தில் திருக்கொடி அம்மன், தேள்சாமி போன்ற உள்ளூர் தெய்வங்களுடன் நந்திசிலைகளும் பிள்ளையார் வினாயகர் சிலைகளும் உள்ளன. எல்லாமே உள்ளூர் அம்மிகொத்தும் கலைஞர்களால் வடிக்கப்பட்டவை. முற்றிலும் சதுர வடிவிலேயே செதுக்கப்பட்ட ஒரு நந்தி சிலையும் உள்ளது. கிராமியக் கியூபிஸம்
தும்மம்பொதியில் இருந்து சித்தேஸ்வரன் மலைக்கோயில் வரைச்செல்ல ஒன்றரை மணிநேரம் போதும். திரும்பிவர ஒன்றரை மணிநேரம். அங்கே ஒருமணிநேரம் என்றால் நான்கு மணிநேரம். நாங்கள் பதினொருமணிக்கு மேலேறினோம். திரும்பிவந்தது மாலை ஐந்து மணிக்கு. பகலுணவு இல்லை. பவானியில் சாப்பிட்ட காலையுணவுதான். ஆனால் எனக்குப் பசி தெரியவில்லை. தண்ணீர் கொண்டுசென்றிருந்தோம்.
இப்போது தும்மம்பொதி வரை ஜீப்போ வேனோ இரண்டுமல்லாததோ ஆன அந்த வண்டி வருகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்புவரை குருவரெட்டியூரிலிருந்து பதினைந்து கிமீ நடந்துதான் மேலே செல்லவேண்டும். நடுவே பாண்டுரங்கனையும் வினாயகரையும் வழிபடலாம். அன்று இது ஒரு தவம்போல மேலேறவேண்டிய பயணமாக இருந்திருக்கும். இப்போதுகூட ரிலிருந்து மேலே செல்வது ஒரு நல்ல மலையேற்ற அனுபவம்தான்.
சித்தேஸ்வரன் மலையைச் சுற்றி பச்சைக்காடு. ஜூன்மத மழையில் எழுந்த பசுமை. பொதுவாக இது மழையில்லா கரட்டு நிலம்தான். மலையாளிகள் கீழே கூலிவேலைக்குச் செல்கிறார்கள். பெங்களூருக்கும் வேலைக்குச் செல்கிறார்கள் என்று சொன்னார்கள். நல்லகுளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது. இந்தப்பருவத்தில்தான் மேலே செல்ல முடியும்
மேலிருந்து கீழே காவேரி நீலப்பட்டையாக வளைந்துசெல்வதைக் காணலாம். சூழ விரிந்த நிலம் மாபெரும் வரைபடம்போல. கூகிள் வரைபடத்தையே பார்ப்பதுபோலிருந்தது. ஒன்று கவனித்தேன். அங்கிருந்து நோக்கியபோது நோக்கு தொடுவதுவரை தெரிந்த பெரும்பாலும் எல்லா வீடுகளுமே புதியவை, வசதியானவை. சட்டென்று கிராமப்புறத் தமிழகம் குடிசைகளில்லாத மாநிலமாக ஆகிவிட்டிருக்கிறது. கொடூரமான தங்குமிடங்கள் இன்றிருப்பது நகரங்களில்தான். தமிழகத்தில் இன்று பட்டினியும் இல்லை. குடிமட்டும் கட்டுப்பாட்டிலிருந்தால் தமிழகம் இன்னும் மேலே சென்றுவிடும்.
ஆறுமணிக்கு குருவரெட்டியிலிருந்து ஈரோடு வந்து நாகர்கோயில் ரயிலைப் பிடித்தேன். கிட்டத்தட்ட மூன்றுநாள் இரவு நல்ல தூக்கமில்லை. ஆகவே பத்துமணிக்கே படுத்தேன். பத்துமணிவரை தூங்கிய பக்கத்து இருக்கைக் குழந்தை எழுந்துகொண்டு அழ ஆரம்பித்தது. கிட்டத்தட்ட மதுரை வரை அதன் கூப்பாடு வழியாகவே பயணம் செய்தேன்.