துயருற்ற கிறிஸ்து

விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம்

அன்புள்ள ஜெ,

தடம் இதழில் வெளிவந்த நத்தையின் பாதை தொடர் மூலம் கஸண்ட் ஸகீஸின் கிறிஸ்துவின் இறுதிச்சபலம் வாசிக்க நேர்ந்தது. என் சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவை ஒருபோதும் அணுக்கமாக உணர்ந்ததில்லை. அதற்குக் காரணம் பள்ளியிலும்,மறைவகுப்புகளிலும் கிறிஸ்துவை ஒரு கண்டிப்பான பேராசிரியராகவே நிறுவியிருந்தார்கள். சிற்றின்பத்தை விட்டுவிட்டு ஏசுவிடம் சரணடையுங்கள் என்னும் கூற்றை கேட்கும்போதெல்லாம் குற்றவுணர்வு ஆட்கொள்ளும்.சாத்தானின் போர்வையில் வரும் பாலியல் கொந்தளிப்புகளை சேசுவே ரட்சியும் என்று சொல்லியும் விரட்ட முடிந்ததில்லை.

பிற்காலத்தில் தும்மும் போது மட்டும் சேசுவே ரட்சியும் என்று சொல்லுமளவுக்கு மாற்றியமைத்தது ஓஷோ.அந்நாட்களில் ஓஷோவை மிகத்தீவிரமாக வாசிக்க ஆரம்பித்திருந்தேன். அனைத்தையும் நிராகரிக்கும் ஒரு nihilisitc மனநிலையை ஓஷோவின் வாசிப்பு தந்தது. வாழ்க்கையின் அன்றாட பிரச்சனைகளுக்கு கூட ஓஷோ அதற்கு என்ன பதில் வைத்திருப்பார் என்றே என தேடல் இருந்தது.காலப்போக்கில் ஓஷோவின மூலம் ஒரு ஆன்மீக வெற்றிடமே எஞ்சியது. (சமீபத்தில் netflixஇல் ஒஷோவை பற்றிய டாக்குமெண்டரி “Wild wild country” பார்த்தேன். ஓஷோ நிச்சயமாக உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் தான்.)

என்னத்தத் தின்னா பித்தம் தெளியுமென்கிற நிலையில் எதேச்சையாக சோற்றுக்கணக்கு வாசிக்க நேர்ந்தது.இம்முறை நான் எதிர்கொண்ட குழப்பங்களுகக்கான விடையை தங்கள் தளத்தில் தேட ஆரம்பித்தேன். மனஉளைச்சல், தோல்வி, காமம், முறிவு, பிரிவு, வலி, என்றே என் தேடல் உள்ளீடுகள் இருக்கும். பாலுமகேந்திரா திரையாக்கம் செய்யவிருந்து பின் கைவிடப்பட்ட காரணத்தினால் அனல்காற்றை முதலில் வாசிக்க ஆரம்பித்தேன்.தங்கள் படைப்புகளின் மையச்சரடாக நான் வகுத்துக்கொள்வது,காமத்தின் அலைக்கழிப்புகளுக்கு ஆட்கொள்ளப்பட்டிருக்கும் மையக்கதாப்பாத்திரம் இறுதியில் அதன் வெம்மையை உணர்ந்து மேலெழுகிறது அல்லது அப்பிரம்மாண்டத்தின் முன் நிலைகுலைந்து நிற்கிறது.

பற்றி எரியும் காமம் என்னும் தன்மையை அடியொற்றி காடு நாவலின் கிரிதரனையும் கஸண்ட் ஸகீஸின் கிறிஸ்துவையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்திப்பார்க்கிறேன்.இளம்பருவத்தில் நாம் எதிர்கொள்ளும் அலைக்கழிப்புகளை கிறிஸ்துவும் எதிர்கொள்கிறார். கிறிஸ்துவின் புறவயச்சிக்கல்கள்,ஆன்மீக அலைக்கழிப்புகள் நம் உளச்சிக்கல்களோடு ஒத்திருந்து,மனித குமாரனை முதல்முறையாக அணுக்கமுடன் உணரச் செய்கிறது. அடிப்பதற்கு மறுகன்னத்தை காட்டும் அன்பின் எளிமையின் முன் நம் அகம் நிலைகுலைந்து பின் அதற்கிணையாக விரிவடைகிறது. பாவத்தின் கவர்ச்சிக்கு இணங்கி மீட்சியின் வழியைக் கண்டடையும் மையதரிசனம் பிடிபடும்போது இப்படைப்பு காவியத்தன்மையை பெற்றுவிடுகிறது

நாவலின் ஓரிடத்தில் கிறிஸ்து மத்தேயுவிடம்,’சிலுவை,மரணம்,பரலோக ராஜ்ஜியம் என்று நான் மொழிந்தவைகளின் பொருளை அவரவர் தத்தம் சுயவிருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்றியமைத்துக் கொண்டு,என் சொற்களின் ஆன்மாவை குலைத்துவிடுகிறீர்கள்.ஒருபோதும் இதை நான் அனுமதிக்கப்போவதில்லை,’என்கிறார். இன்றைய கிறிஸ்துவை எந்த அமைப்பையும் சாராத ஒருவராக கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. ‘A man who sought to convert flesh into spirit by means of art.’என்று கஸண்ட் ஸகீஸைப் பற்றிக் குறிப்பிடுகிறார் இந்நாவலின் மொழிப்பெயர்ப்பாளர். தங்கள் கூற்றுப்படி பெரிய நாவல் நம்மைக் குலைத்துவிடுகிறது. திரும்ப அடுக்கும்போதுதான் அந்நாவலைப் புரிந்து கொள்கிறோம்.

நன்றி,

ஜான்பால் நவீன் ரொஸாரியோ.

***

அன்புள்ள ஜான்

நீங்கள் வாசித்தது ஒரு நல்ல வாசிப்புக்கோணம்தான். கஸந்த் ஸகீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நவீனத்துவ இலக்கியவாதிகள் கிறிஸ்துவை  ‘துன்பத்தினூடாக விடுதலை பெற்ற மனிதர்’ என்ற கோணத்தில் அணுகுகிறார்கள். கிறிஸ்துவை ஒரு சமூகப்போராளி, ஆன்மிகத்தேடல்கொண்டவர், மானுடருள் உலவிய மெய்ஞானி என்னும் கோணங்களில் அணுகலாம்தான். ஆனால் அவற்றைவிடவும் அந்தரங்கமானது நம்மைப்போலவே அலைக்கழிந்த, துயருற்ற மானுடர் என அணுகுவது. அது அவரை இன்னும் அணுக்கமாகக் கொண்டுவருகிறது.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-34
அடுத்த கட்டுரைஇன்றைய காந்திகள், லடாக்- கடிதம்