இலக்கியமும் அரசியல் அறிவும்(அரசியலில் பங்கு என்று சொல்லவில்லை) பெண்களுக்கு எவ்வளவு தூரம் தெரிந்திருக்க வேண்டும்? ஏன் இன்னமும் இலக்கியம் பேசும் பெண்ணை அவளது உள்வட்டமும், அரசியல் ஆர்வமுள்ள பெண்ணை வெளிவட்டமும் விநோதமாகவே பார்க்க வேண்டும்?
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
மனிதனுக்கு இவ்வளவுதான் தெரிந்திருக்க வேண்டும் என்ற எல்லையே இல்லை. நான் அத்வைதி என்பதனால் நாராயணகுருவை மேற்கோள் காட்டி ‘அறிவதை அறிந்து அறிவில் அறிவாக அமர வேண்டும்’ என்று சொல்வேன். எல்லாவற்றையும் அறிந்து அறிந்தவற்றை ஒன்றுடன் ஒன்றாக இணைத்து அவை முழுமையான அறிவாக ஆகும்வரை முன்னகரவேண்டும். பேரறிவு என்ற அமைப்பில் ஒவ்வொரு அறிவும் தனக்குரிய இடத்தில் முழுமையாகப் பொருந்திக் கொள்ளும் என்பது அத்வைத மரபு. இதில் ஆண் அறிவு பெண் அறிவு என்ற பேதமெல்லாம் இல்லை.
இலக்கியம், அரசியல், அறிவியல் எல்லாமே அறிவுதான். பயனற்ற அறிவு என்று ஏதும் இல்லை. தனக்குரிய இடத்தில் பொருத்திக் கொள்ளப்படாமையினால் ‘அத்து அலையும்’ அறிவுதான் பயனற்றுச் சிக்கலை உருவாக்குகிறது. அறிவானது தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு ஆகிய மூன்று தளங்களையும் தழுவியதாக இருக்கும்படி வளரவேண்டும்.
முழுமைநோக்கி அறிவு செல்லும்போது சில அடையாளங்கள் வெளிப்படும் என்பது நித்ய சைதன்ய யதி கூற்று
1] எந்தப் புதிய ஞானமும் பெரும் பரபரப்பை அல்லது கிளர்ச்சியை அளிக்காது. ஆழமான உவகையை மட்டுமே அளிக்கும்.
2] எந்தப் புதிய ஞானத்தையும் நாம் உடனடியாக மறுக்க ஆரம்பிக்க மாட்டோம். ஏனெனில் நம்மிடம் இருக்கும் ஞானத்தை தக்கவைத்துக் கொள்ளும் பதற்றம் நம்மிடம் இருக்காது. அதன் மீது பற்றும் அதுதான் நம் ஆளுமையின் அடிப்படை என்ற எண்ணமும் இருக்காது.
3] ஞானம் நம்மைப் பற்றிய மதிப்பை நமக்கு உருவாக்குவதாக இருக்காது. பறவை வந்து கிளையில் அமர்வதுபோல இயல்பாக அமரும்
4] நம்மிடம் உள்ள அனைத்து ஞானத்தையும் மறுக்கும் புதிய ஒரு ஞானம்கூட நம்முள் உள்ள ஆழமான ஞானம் ஒன்றை ஆமோதிப்பதாகவே இருக்கும். அதாவது அப்புதியஞானம் நம்மை வலிமைப்படுத்தும்.
5] ஞானம் நம்மை செயலுக்கு ஊக்கப்படுத்தி நம் செயல்களுக்கு அடிப்படையாக அமையலாம். அதேசமயம் அது செயல்கள் மீது உணர்வுசார்ந்த ஈடுபாடு இல்லாமல் விலகி நின்று வேடிக்கைபார்க்கும் தன்மையை நமக்கு அளிக்கும்
6] ஞானம் உங்களை நகைச்சுவைமிக்கவராக ஆக்கும். கசப்பற்ற சிரிப்பே ஞானத்தின் ஒளி. உலகை, உங்களைப் பார்த்து சிரிப்பதே ஞானம் சமநிலை கொண்டு முதிர்வதன் அடையாளம். ஆகவே ‘கற்க கசடற’. உள்ளே இருக்கும் அறியாமையின் கசடு அறும்படியாக கற்க என்பார் நித்யா. சரி, இது எனக்கு அறிதல்மட்டுமே, அனுபவமல்ல.
சரி, உங்கள் கேள்விக்கு வருகிறேன். இலக்கியம் அல்லது தத்துவம் பேசும் பெண்ணைச் சுற்றியுள்ளோர் ‘ஒருமாதிரிப்’ பார்ப்பது உண்மை. ஆனால் ஆண்களையும்தான் அப்படிப் பார்க்கிறார்கள். என் நண்பரான கல்லூரிப் பேராசிரியர் புலம்புவார், கல்லூரிக்கு ஒரு புத்தகம் கையில்கொண்டு சென்றால் விசித்திரமாகப் பார்க்கிறார்கள், நக்கல் செய்கிறார்கள் என்றெல்லாம். தமிழ்நாட்டில் எவராக இருந்தாலும் இலக்கிய ஆர்வத்தை பரமரகசியமாகத்தான் வைத்திருக்கவேண்டும். நான் எழுத்தாளன் என்பதை என்னைச் சுற்றியுள்ள பெரும்பாலானவர்கள் அறியமாட்டர்கள். நான் இலக்கியம் கலை அரசியல் குறித்து நண்பர்களிடமன்றி வாயே திறக்கமாட்டேன். சிலருக்கு எனக்குத் தமிழ் தெரியும் என்ற விஷயமே தெரியாது. நண்பர்கள் என்றால் கூட எல்லாவற்றையும் வேடிக்கையாக எடுத்துக் கொண்டு சிரித்துப் பேசுவதில்தான் எனக்கு விருப்பம். என் நண்பர்கள் அனைவருமே அப்படித்தான்.
மத்திய வர்க்கத்தினர், எளிய அன்றாட வாழ்க்கையை ஒருவகை சீரான இயக்கமாக மாற்றி வைத்திருக்கிறார்கள். அதற்கான தத்துவம் நம்பிக்கைகள் எல்லாமே அவர்களிடம் உள்ளன. ஒருவர் செய்வதையே எல்லாரும் செய்கிறார்கள். இந்த பொது அடையாளத்துக்கு மாறாக எதை யார் செய்தாலும் கண்ணுக்குத்தெரியாத ஒழுங்கு குலைவதாக உணர்வார்கள். எரிச்சல் கிண்டல் எல்லாம் வெளிப்படும். நாகர்கோவிலில் பத்து வருடம் முன்பு காலையில் நடை சென்றால் ஊரே மிரண்டு பார்க்கும். பதினைந்துவருடம் முன்பு சுடிதார் போட்டபெண்ணை பொது இடத்தில் கூடி கிண்டல் செய்வதைக் கண்டிருக்கிறேன். இரு வருடம் முன்புகூட பெர்முடாஸ் அணிந்த ஆளை நக்கல்செய்வதைக் கேட்டிருக்கிறேன்.
கூடுமானவரை சூழலில் உள்ளவர்களை உறுத்தாமல் வாழ்வதுதான் மேலான வாழ்க்கை. ‘அவன் வனத்தில் நுழையும்போது புற்கள் நசுங்குவதில்லை நீரில் இறங்குகையில் சிற்றலையும் எழுவதில்லை’ என்ற ஜென் கவிதை புகழ்பெற்றது. எனக்கு சூழலில் துருத்தி நிற்பதில் நம்பிக்கை இல்லை. நான் எவரிடமும் தனிவாழ்வில் வாதாடுவதில்லை. பிறர் அறியாதபடி சாதாரணமாக இருந்துகொண்டிருப்பேன். என்னைப்பற்றி விசாரித்து நீங்கள் என்னைத் தேடிவரமுடியாது.
அதேசமயம் நம்மை சூழலுக்காக மாற்றிக் கொள்வதும் சரியல்ல. நம் மகிழ்ச்சியே நம்மை வழி நடத்தவேண்டும். கலை இலக்கியம் என்னை நிறைவு கொள்ளச்செய்கிறது. அது என் முழுமைக்கான பாதை என்பதற்கான முக்கிய அடையாளம் என் வாழ்வில் இன்றுவரை நான் அலுப்பு என்றால் என்ன என்று உணர்ந்ததே இல்லை என்பதுதான். பிறர் வாழ்க்கை முழுக்க அலுப்பையே சுமந்தலைகிறார்கள். நான் ஒவ்வொரு துளியாக வாழ்க்கையை அனுபவிக்கிறேன். என் சூழலில் அழகிய மலையடிவாரத்தை மழையை வெயிலை காற்றை ரசிக்கும் கண்களை எனக்களித்தது கலையும் இலக்கியமும்தான். மணிக்கணக்காக என்னால் குழந்தைகளுடன் விளையாடமுடிவதும் அதனால்தான். அதுவே எனக்கு முக்கியம். ஆகவே சூழலுடன் நான் மோதுவது இல்லை, அதை வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களுக்கும் அதுவே சொல்வேன். சூழல் ஆணுக்கானாலும் பெண்ணுக்கானாலும் அப்படித்தான். உங்களை இலக்கியம் மகிழ்ச்சியாக நிறைவாக வைத்திருக்கிறதென்றால் அதுவே உங்கள் பாதை. பிறர் அவர்கள் பாதையில் செல்லட்டும்.