கதைகள், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம். உங்களின் எழுத்தை சார்ந்து இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். ஒரு புத்தகம் சம்பந்தமாக தொலைபேசியிலும் மின்னஞ்சல் வழியாகவும் உங்களை ஒருமுறை தொடர்பு கொண்டேன். விகடனின் அவதூறு (தொப்பி, திலகம்) வழியாக உங்களை வந்தடைந்து, உங்கள் தீவிர வாசகனாக ஆகிப்போன பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன். விகடனுக்கு நன்றி.

தாங்கள் சமீபத்தில் எழுதிய அறம், சோற்றுக்கணக்கு, மத்துறு தயிர், வணங்கான் சிறுகதைகளை படித்தேன். வாழ்வில் நான் வாசித்த மிகச்சிறந்த சிறுகதைளில் இந்நான்கும் அடங்கும். இலக்கியம் என்பது ஒரு மனிதனுக்கு உணவு போன்றது. உணவின் ருசியை விட அவ்வுணவு நம் உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் ஏற்படுத்தும் ஊட்டசத்தே முதன்மையானது. அதேபோல் ஒவ்வொரு சிறுகதையிலும் தங்களின் எழுத்து நடையும், கதையை இட்டு செல்லும் சுவாரஸ்யமும் சுவையாக இருந்தாலும், கதையின் அடி ஆழத்தில் வரிசையாக தாங்கள் உரைக்கும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பன தான் கதையின் உச்சக்கட்ட வெற்றி என கருதுகிறேன். கீழ் காண்பான எனது புரிதல்கள்.

அறம் சிறுகதை நேரடிடையாக ஒரே திரியில் உரைப்பது அறம்.
சோற்றுகணக்கு சிறுகதையில் ஒரு திரியில் நேரிடையாகவும் மறு திரியில் மறைமுகமாகவும் உரைப்பது பொருள்.

மத்துறு தயிர் சிறுகதை உரைப்பது இன்பம். கதையில் உள்ள மூன்று திரிகளில் இரண்டு திரியில் வருவது குரு – சீட உறவும் பக்தியும். பக்தியும் உறவும் ஒருவகை காதலே. மூன்றாவது திரி நேரிடையாக ராஜத்தின் காதலை கூறுகிறது. So கதையின் அடிநாதம் காதல், அதாவது இன்பம்.
வணங்கான் சிறுகதை உரைப்பது வீடுபேறு or விடுதலை. கதையில் வரும் இரு திரிகளான நேசமணி மற்றும் கறுத்தான் அளிப்பது or அடைவது வீடுபேறு. நேசமணி தன் சாதிக்கு வீடுபேறு (நீதிமன்றத்தில் சாதிக் கொடுமையை ஒழித்தல்) அளிக்கிறார். கறுத்தான் தன் வம்சத்துக்கே வீடுபேறு அளிக்கிறான். So, கதையின் அடிநாதம் வீடுபேறு.

இதில் வணங்கான் ஒரு அருமையான புனைவும் , அபுனைவும் (non – fiction or fact) சேர்ந்த சிறுகதை. இக்கதையில் கறுத்தான் தன்னை ஜமீன்தார் பெரியகருப்பதேவரிடமிருந்து காக்க பயன்படுத்தும் பிரித்தானிய சர்க்கார் என்னும் ஆயுதம் மிகவும் விவாதத்துக்குரியவை. இந்தியாவில் நடந்த இருநூறு ஆண்டுகால பிரித்தானிய காலனி ஆட்சியியை பற்றிய உங்கள் கட்டுரைகளில் பெரும்பாலும் பஞ்சம் மற்றும் சுரண்டல் பற்றியே அதிகம் விவாதித்துள்ளீர்கள். அதன் மறுபக்கமாக நாம் அடைந்த சமத்துவம், நவீனத்துவம் போன்றவற்றின் உங்கள் கருத்தை அறிய முற்படுகிறேன். பலநூறு வருடமாக நம் சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருந்த பண்டிதனும் பாமரனும் இன்று ஒர் சமநிலையில் (ஓரளவுக்காது) இருப்பதற்கு அவர்களின் பங்கும் உண்டல்லவா? உங்கள் கருத்து என்ன?

தமிழில் முடிந்தவரை என் கருத்தை எழுத முயன்றுள்ளேன். கடிதத்தில் எழுத்துப்பிழையும் கருத்துப்பிழையும் இருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்,
கேசவ பிரசாத்

அன்புள்ள கேசவபிரசாத்

உங்கள் வாசிப்புக்கு நன்றி

எல்லா வாசிப்புகளும் கதைகளை புதிய தளங்களுக்கு விரிக்கின்றன. இவையெல்லாம் என் மனதில் ஒரு பொதுப்புள்ளியில் இணைந்திருந்த கருக்கள். பல கருக்களுக்கு இருபதாண்டுக்கால வரலாறுண்டு

இன்று இந்த வேகம் இவற்றை வெளிவரச்செய்கிறது. எல்லா கதைகளிலும் அபுனைவு [அல்லது உண்மை நிகழ்வு] பெரும் அளவுக்கு உண்டு

ஜெ

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

நீண்ட இடைவேளைக்கு பிறகு தங்கள் தளத்தில் உள்ள சமீபகாலத்தில் வெளிவந்த சிறுகதைகளை படித்தேன். நெகிழ்ந்தேன். நன்றிகள் பல.

உங்கள் வாசகர்கள் எழுதும் கடிதங்களும் உணர்வின் உருகொண்டவையாகவே அமைந்துள்ளன. ஒரு கடிதத்திற்கு பதில் அளிக்கையில் “என்னைப்பொறுத்தவரை ஒரு கதை என் வழியாக நிகழ்கிறது- அதை நான் கட்டமைப்பதில்லை.” என்று எழுதியிருந்தீர்கள். A New Earth மற்றும் The Power of Now என்ற புத்தகங்களின் ஆசிரியர் Echart Tolleவும் அவருடைய எழுத்துக்கள் உண்டாவதைப்பற்றி அவ்வாரே கூறிகிறார். அதுதான் நீங்கள் வேறு பதிலில் குறியீட்டு காட்டிய அரவிந்தரின் supreme poetic utterance என்பதின் அர்த்தமோ?

அதென்ன வரிசையாக கட்டுரைகளும் விவாதங்களும் வந்துகொண்டிருந்த தருணத்தில் திடீர்ரென்று கதைகளின் களஞ்சியமாக மாறிவிட்டது. அறிவின் வேட்கையான தர்கங்களுக்கு நடுவில் கனபோழுதில் கூடிவிட்ட வின்மேகம்போல் சிறுகதை தளத்திற்கு பியர்ந்து உணர்ச்சி மழையாக இனிக்கிறது தங்கள் தளம் இப்போது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

எனக்கு இங்கு ஒரு கேள்வி, அதுவும் ஒரு ஆர்வகோளாறுதான். சமீப காலமாக அதிக அளவிலான சிறுகதைகளை தங்கள் தளத்தில் பார்க்கமுடிகிறது. எழுத்தாளர்களுக்கு ஒரு பருவ காலம் உண்டா என்ன? Shakespeareக்கு கூட கற்பனை வற்றிப்போன காலம் உண்டு என சொல்வார்கள்; அப்படியெனில் கற்பனை பெருக்கெடுத்த காலமும் இருந்திருக்கவேண்டுமே. பிறப்பின் காலம் கருதி ஜாதகம் அமைப்பதைப்போல இந்த காலக்கட்டத்தில் உதித்த கதைகள் அனைத்துமே அருமை. (ஜாதகம் அப்படியோ)

அன்புடன்

வே. விஜயகிருஷ்ணன்

அன்புள்ள விஜயகிருஷ்ணன்

படைப்பூக்கத்திற்கு கண்டிப்பாக ஒரு பருவகாலம் உண்டு. அந்த காலகட்டத்துக்கும் புறச்சூழலுக்கும் தொடர்பில்லை. ஏதோ ஒரு அறியமுடியாத புள்ளியில் மனம் விம்மி மேலெழுகிறது. அதன் பின் எழுதுவதல்ல எழுதாமலிருபப்தே கடினம். வந்துகொண்டே இருக்கும், எழுதிக்கொண்டே இருப்பதுதான் வேலை.

சட்டென்று சொல்லாமல் அது நின்றும் போகும். அப்போது சிலசமயம் ஒரு கதை முடியாமல் பாதியிலேயே நின்றுவிடும். அவ்வளவுதான் ஒன்றுமே செய்யமுடியாது. நாவல்களே அப்படி கையில் இருக்கின்றன

ஜெ

முந்தைய கட்டுரைநூறுநாற்காலிகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிராவிடவேதம் இன்னொருகடிதம்