‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-44

துரியோதனனின் சிதையில் எரிந்த தீ தன் வெம்மையை தானே பெருக்கிக்கொண்டது. தழல்கள் ஒன்றன்மேல் ஒன்றென ஏறி வான் நோக்கித் தாவின. தீயின் இதழ்களுக்குள் துரியோதனனின் உடலை நோக்க விழைபவன்போல அஸ்வத்தாமன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். கிருதவர்மன் எழுந்து உடலை உதறியபடி வந்து அவன் அருகே அமர்ந்தான். கிருபர் பெருமூச்சுவிட்டு உடல் கலைந்து “இங்கு நம் கடன் முடிந்தது” என்றார். துரியோதனனின் முகம் எரிந்துகொண்டிருந்தது. தீயை காற்று அள்ளி சுழற்ற அருகே நின்ற ஒரு மரத்தின் இலைகள் சடசடவென்று சுருங்கி பொசுங்கின. அந்த மரம் அப்பாலிருந்து சரிந்து விழுந்திருந்திருந்தது என்று அஸ்வத்தாமன் கண்டான். கிருபர் “நாம் ஆற்றவேண்டிய பணிகள் நாளை காத்துக்கிடக்கின்றன. நாம் அரசருக்கு சொல்லளித்துவிட்டோம்” என்றார்.

எண்ணியிராதபடி கிருதவர்மன் சினம்கொண்டு உரக்க “ஏன் நாளைவரை? இதோ இந்த இரவு நீண்டு கிடக்கிறது நம் முன்… இப்போதே இங்கிருந்தே கிளம்புவோம். அரசரின் அனல்தொட்டுச் சூளுரைத்துவிட்டு எழுவோம்” என்றான். கிருபர் “என்ன சொல்கிறீர்கள்?” என்று நடுங்கும் குரலில் கேட்டார். “ஆம், உடனே. இப்போதே. அவர்கள் இந்நேரம் வெற்றித்திமிர்ப்பில் இருப்பார்கள். அவர்கள் அறியவேண்டும், நாம் எழுந்திருப்பதை. இன்றிரவே நாம் அவர்களைத் தாக்கவேண்டும். இன்றே பழிகொள்ளவேண்டும்” என்று கிருதவர்மன் சொன்னான். “அரசரின் சிதை அடங்குவதற்குள் நாம் பழிகொண்டுவிடவேண்டும். போர் ஒழியாது என அவர்களுக்கு அறிவித்துவிடவேண்டும்… அரசர் விண்ணேகும்போது அதை உணர்ந்து நிறைவுகொள்ளவேண்டும்.”

“ஆனால்… இரவுப்போர் எனில்?” என்று கிருபர் சோல்ல “எந்த நெறியையும் நாம் நோக்கவேண்டியதில்லை. அனைத்தையும் மீறி அவர்களே நமக்கு வழிகாட்டிவிட்டிருக்கிறார்கள்” என்று கிருதவர்மன் கூறினான். “அது உண்மை” என்று கிருபர் சொன்னார். “ஆனால் இந்தக் களத்தில் கௌரவர் எந்த நெறிமீறலையும் இயற்றவில்லை. அது அரசரின் பெரும்போக்கு. அவர் இறுதிக்கணம் வரை ஷத்ரிய நெறிகளின்படியே களம்நின்றார். இதுவரை அரசர் காத்த நெறிகளை நாம் மீறினால் அது அவருக்கே இழுக்கு.” கிருதவர்மன் “அவர் காத்த நெறிகளால் அவருக்குப் பெருமை. அவர் புகழ்கொள்ளட்டும். விண்ணில் தேவர்களால் எதிர்கொண்டு வரவேற்கப்படட்டும். நாம் மீறுவது அவருடைய ஆணைப்படி அல்ல. நாம் நெறிகளை மீறினால் அது நமக்கே இழிவு. அவ்விழிவை சூடிக்கொள்வோம்” என்றான்.

“அவருக்காக இழிவடைவோம். அவருக்காக கீழ்நரகுலகில் உழல்வோம். வழிவழி வரும் குடியினர் சொல்லில் பழிக்கப்படுவோம். தெய்வங்களுக்கு உகக்காதவர்களாவோம்… இன்னும் என்னென்ன? சொல்க! இன்னும் என்னென்ன?” என்று கிருதவர்மன் மூச்சடைக்க கூவினான். “இன்னும் எதையெல்லாம் நாம் நமக்காகச் சேர்த்து வைத்துக்கொள்ளப்போகிறோம்? அரசரிடம் இது உங்களுக்கானது அல்ல என வணிகம் பேசப்போகிறோம்? சொல்க… ஆசிரியரே, உயிர்நீத்து விண்ணுலகில் நீங்கள் அடையப்போகும் பெருமைகள் என்னென்ன? சொல்லுங்கள்…” அவன் வெறிகொண்டவன்போல் எழுந்துவிட்டான். அவன் உடல் துள்ளியது. கைகள் அலைகொண்டன.

“ஒரு மானுடன் இன்னொருவருக்கு அளிப்பதில் உச்சமானது என்ன? செல்வமா? அரசா? குடியா? இல்லை, முழு வாழ்க்கையுமா? உயிரா? அனைத்தையும் அளித்துவிட்டனர் பல்லாயிரம் பல்லாயிரம்பேர். நாம் நமது ஆத்மாவை அளிப்போம். மூதாதையர் நமக்கு ஈட்டித்தந்த புண்ணியங்களை அவருக்கு அளிப்போம். பாஞ்சாலரே, ஆசிரியரே, நாம் நமது மீட்பையே அவருக்காக அளிப்போம். அவர் பொருட்டு நம் மூதாதையரை எள்ளும் நீருமின்றி மேலுலகில் வாடவிடுவோம். அதைவிட எவர் எதை அளித்துவிடமுடியும்?” அவன் வெறிகொண்டு அங்குமிங்கும் அலைமோதினான். “எனக்கு இங்கே ஏதுமில்லை. எந்தத் தெய்வத்திடமும் எனக்கு ஒப்பந்தமில்லை… நான் கொள்வதற்கு விண்ணுலகிலும் ஏதுமில்லை. என் அரசனுக்கு கொடுப்பதற்கே அனைத்துமுள்ளது.”

கிருபர் கையால் அவனுடய கொந்தளிப்பை தடுத்து “இரவுப்போர் என்றாலும்கூட அவர்கள் இப்போது போர்க்களத்தில் இல்லை” என்றார். “ஆம், போர்க்களத்தில் இல்லை. இனி அவர்களை நாம் போர்க்களத்தில் சந்திக்கவே முடியாது. நாம் வெறும் மூவர். நாம் என்ன செய்யப்போகிறோம்? மூவர் சென்று அவர்களிடம் போருக்கு நாள்குறிக்கச் சொல்லப்போகிறோமா? அன்றி நாங்கள் படைதிரட்டி வரும்வரை போருக்குக் காத்திருங்கள் என கூறவிருக்கிறோமா?” என்றான் கிருதவர்மன். “ஆம், நாம் வெறும் மூவர். அவர்கள் இப்போது முடிகொண்டவர்கள். ஆணையிட்டால் படையும் கொள்வார்கள். முடிகொண்ட அரசனை எதிர்க்கும் தனியர்களுக்கு ஏது போர்நெறிகள்? அவர்களும் நம்மிடம் எந்தப் போர்நெறியையும் கடைப்பிடிக்கப் போவதில்லை. கடைப்பிடித்தாக வேண்டும் என்று நெறிநூல்கள் சொல்லவுமில்லை. நம்மை படைகொண்டு சூழ்ந்து கைப்பற்றிக் கழுவிலேற்றுவதே அவர்களின் வழி.”

“நாம் வீணாக சொல்லடுக்கிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இதுவே தருணம். எவரும் எஞ்சவில்லை என அவர்கள் எண்ணியிருக்கிறார்கள். காவலின்றி இருப்பார்கள். மதுவருந்தி களித்திருப்பார்கள். மயங்கித் துயின்றிருப்பார்கள். அவர்களை தாக்குவோம். நம்மால் இயன்றவரைக் கொல்வோம். எரியூட்டுவோம். நஞ்சூட்டுவோம். அவர்களின் பெண்களைக் கொல்வோம். குழந்தைகளை துண்டாடுவோம். அவர்களின் விளைநிலங்களை, ஆநிரைகளை அழிப்போம். நாம் செய்யும் எதுவும் உகந்ததே. ஐவரில் ஒருவரைக் கொன்றாலும் நாம் வென்றோம். இத்தகைய பேரழிவுக்குப் பின்னரும் அவர்கள் ஐவரும் அவ்வண்ணமே எஞ்சுகிறார்கள் என்றால் அதைப்போல நமக்கு இழிவு பிறிதில்லை” என்று கிருதவர்மன் கூச்சலிட்டான்.

கிருபர் அதற்கு எதிராக உறுதிகொண்டார். “ஒளிந்து போரிடுவதும் துயில்பவரைக் கொல்வதும் பெரும்பிழை…” என்றார். “வேங்கை ஒளிந்தே போரிடுகிறது. ஓநாய் பதுங்கிவந்து தாக்குகிறது. நாகம் இல்லத்திற்குள் இருளில் புகுகிறது. நான் ஷத்ரியன் அல்ல. நான் மானுடனே அல்ல. நான் வெறும் விலங்கு… என்னை ஆள்பவை விலங்குகளின் தெய்வங்கள் மட்டுமே” என்று கிருதவர்மன் சொன்னான். “எக்கணம் என்னை மானுடன் அல்ல என்று உணர்ந்தேனோ அக்கணமே நான் விடுதலைகொண்டுவிட்டேன். எனக்கு நலம் செய்தவரை நான் தலைக்கொள்வேன். என்மேல் அன்பு காட்டியவருக்கு அன்பை மட்டுமே அளிப்பேன். ஊடே சொற்களில்லை. அறங்கள் இல்லை. விலங்குகள் தூய்மையானவை. அன்பை அறுத்துக்கொள்ள அவற்றால் இயலாது. மானுடக்கீழ்மை சொல்பெருக்கி அனைத்தையும் தனக்காக மாற்றிக்கொள்கிறது. மானுடர் அகல்க. நான் என் வஞ்சத்தை தனியாகவே இயற்றுகிறேன்” என்று கிருதவர்மன் சொன்னான்.

அவன் குரல் உடைந்தது. “எவரும் என்னுடன் வரவேண்டியதில்லை. உங்கள் வழியை நீங்கள் தெரிவுசெய்க. உங்கள் வீடுபேறும் புகழும் உங்களுக்கு நன்கு அமைக. நான் அனைத்து இழிவுகளையும் சூடிக்கொள்கிறேன். அனைத்துக் கீழ்மைகளிலும் உழல்கிறேன். தெய்வங்களே, ஒழிக என்னை! மூதாதையரே, துறந்தகல்க என்னை! கொடிவழியினரே, என்னை மறந்துவிடுக…” என்று அவன் கூவியபோது அழுகை உடன் வெடித்தது. “என் அரசன்! என் தாதன்! அவர் எனக்கு தன் பெருங்கைகளால் அள்ளி வைத்த உணவின்பொருட்டு நான் அனைத்தையும் இழந்தாகவேண்டும். அவர் கைகள்… குறைவாக அள்ளத்தெரியாத அவர் விரல்கள்… அவற்றுக்காக நான் நெஞ்சுபிளந்து விழுந்தாகவேண்டும். தெய்வங்களே, அதற்கப்பாலும் அடங்காது என் நெஞ்சு… அவருக்கு அளிக்க ஒன்றுமில்லையே என்று எண்ணி ஏங்கியபடி இங்கே உயிர்விடுவேன்.” அவன் நெஞ்சில் ஓங்கி அறைந்துகொண்டு விலங்குபோல் ஊளையிட்டு அழுதான்.

அஸ்வத்தாமன் எழுந்து சென்று சிதையிலிருந்து ஒரு எரியும் தேவதாருக் கழியை உருவிக்கொண்டான். அவர்களை திரும்பி நோக்காமல் நடந்தான். “பாஞ்சாலரே, நானும் உடன் வருகிறேன்…” என்று கூவியபடி கிருதவர்மன் உடன் செல்ல கிருபர் தானும் எழுந்து “நானும் வருகிறேன்” என்று தொடர்ந்தார்.

குருக்ஷேத்ரத்தைச் சூழ்ந்திருந்த காட்டினூடாக நடந்தபோது ஒவ்வொரு அடிக்கும் அஸ்வத்தாமன் மேலும் விசைகொண்டான். அவனுக்குப் பின்னால் கிருதவர்மன் ஓடவேண்டியிருந்தது. கிருபர் பின்தங்கி நின்று மூச்சிரைத்தும் மீண்டும் ஓடியும் அவர்களுடன் சென்றார். சற்றுநேரத்தில் அவர் நின்றுவிட்டார். குனிந்து முழங்கால்களில் கையூன்றி நின்று வாயால் மூச்சுவிட்டார். பின்னர் இருட்டில் தடுமாறியபடி நடந்தபோது சற்றுத்தொலைவில் கிருதவர்மன் நின்று மூச்சிளைப்பதைக் கண்டார். அவர் அருகே சென்று “பாஞ்சாலன் எங்கே?” என்றார். “அங்கே” என்று கிருதவர்மன் கைகாட்டினான். “அவருள் ஏதோ தெய்வம் குடிகொண்டதுபோலத் தோன்றுகிறது. அவ்விசையை நம்மால் தொடர முடியாது.”

கிருபர் தொலைவில் ஒரு செந்நிற தீப்பொறிபோல அசைந்து சுழன்று சென்றுகொண்டிருந்த எரிசுள்ளியை நோக்கினார். அவருக்கு அச்சம் எழுந்து உடலை அழுத்தியது. அஸ்வத்தாமனுக்குள் புகுந்திருப்பது எந்த தெய்வம்? இதோ அருகே நின்றிருக்கும் இவனுக்குள்ளும் ஏதோ தெய்வம் குடியேறியிருக்கிறது. எனது தெய்வம் இவ்விருளுக்குள் என்னைக் காத்து நின்றிருக்கிறதா? அவர் இருளுக்குள் இருந்து அதன் நோக்கை உடலால் உணர்ந்தவர்போல தோள்களைச் சுருக்கிக் கொண்டார். அச்சம் முழுத்து உடலை நிறைத்து நடுக்கென நிகழ்ந்தபின் மிக மெல்லிய ஒரு சொல் என உவகை எழுந்தது. தெய்வம் என்னை ஆட்கொள்க. தெய்வம் என்மேல் பொலிக. அதற்குப்பின் எனக்கு இந்த நிலைகொள்ளாமை இல்லை. என்னுள் ஓடும் இந்த பொருளிலாச் சொற்பெருக்கு ஓய்ந்துவிடும். தீட்டப்பட்ட படைக்கலம்போல் நான் கூர் கொண்டுவிடுவேன்.

அத்தனை படைக்கலங்களையும் தீட்டிக் கூராக்கிக்கொண்டு படைக்கலச்சாலையில் அமைந்திருக்கிறது கருங்கல். மென்மையான ஒளியுடன். என் தெய்வம் அங்கே இருளுக்குள் ஒளிகொண்டிருக்கிறது. எருமைவிழிகள்போல் இருளின் ஒளி அது. அவர் மெய்ப்புகொண்டார். அது அச்சமா உள்ளெழுச்சியா என பிரித்தறிய முடியவில்லை.

 

அஸ்வத்தாமன் தன்னெதிரே திரண்டு மறித்த இருட்டை கிழித்து அகற்றி ஊருடுவிச் சென்றுகொண்டிருந்தான். இருட்டின் விளிம்புகள் அவனுக்குப் பின்னால் கூடி அவனை உள்ளே அமைத்துக்கொண்டன. அந்த எரிதுளியே அவன் என்று தோன்றியது. உடல் அவ்விருளில் கரைந்துவிட்டிருந்தது. உள்ளமும் இருளென்றே ஆகிவிட்டிருந்தது. அவன் என எஞ்சியது அந்த சுள்ளியின் முனையில் சீறியும் தழைந்தும் நாவெழுந்து அலைகொண்டும் எரிந்துகொண்டிருந்த தழல்தான். அது என்னை ஏந்திக்கொண்டுசெல்லும் தெய்வமொன்றின் விழி. அதன் பசித்த நாக்கு. அவன் அதைச் சுழற்றியபோது செந்நிற வட்டங்கள் எழுந்தன. அவனுடைய நடையின் அசைவிலும் உலைவிலும் அவை குறிச்சொற்களாயின. அவன் அவற்றை அறியவில்லை. ஏதோ ஒரு கணத்தில் விழிதிரும்ப அரைக்கணம் முன் காற்றில் வரையப்பட்டு அணைந்த சொல்லை அவன் கண்டான். திடுக்கிட்டு நின்றான்.

அவனுக்கு முன்னால் இருள் உருவெனத் திரண்டது. நீள்குழல் அலையடிக்கும் பெண்வடிவம். தோள்களில், இடைவளைவில் என அதன் வடிவக்கோடு தெளிந்தது. விழிகள் ஒளிகொண்டன. நாக்கு நிறம்காட்டியது. பின்னர் அவன் அவளை அருகே தெளிந்து கண்டான். கரிய பேரழகுத் தோற்றம். துர்க்கையா? சாரதையா? அவன் கைகளைக் கூப்பி அவளை நோக்கிநின்றான். இனிய நறுமணம் எழுந்தது. தாமரை மலருக்குரிய மென்மையான மணம் காற்று சுழன்றபோது செண்பகத்தின் எரிமணம் எனக் காட்டி மீண்டது. அவள் தன் இரு கைகளையும் அவனை நோக்கி நீட்டினாள். அவளுடைய விழிகள் அருள்மிக்க நகைப்பை அணிந்தன. முகம் அப்புன்னகையில் எழில் கொண்டது. யாழின் கார்வைகொண்ட குரலில் “மைந்தா” என்று அவள் அழைத்தாள். “உன்பொருட்டே இங்கு நின்றேன்… நீ என் அருள்பெற்று முன்னெழ வேண்டும்…”

அஸ்வத்தாமன் “அன்னையே, பணிகிறேன்” என்றான். “மூத்தவளாகிய என்னை பணிபவர் விழைவதை எய்துவர்” என்று அவள் இனிய குரலில் சொன்னாள். “எந்தத் தெய்வமும் பலிகோருவது என்று அறிக.” அஸ்வத்தாமன் “நான் உன் அடிகளில் என் தலையை வைக்கிறேன். நான் அளிப்பதற்கு எவை என்னிடமிருந்தாலும் உனக்கு அவை படையலாகுக” என்று சொன்னான். மூத்தவள் அவனை நோக்கி “என் தங்கையை முற்றாகத் துறந்தாகவேண்டும் நீ. அவள் உருவங்கள் என இப்புவியில் திகழ்வன எதையும் இனி நீ தொடலாகாது. அனைத்து அழகுகளும், அனைத்து இனிமைகளும், அனைத்து மங்கலங்களும், அனைத்து நலன்களும்” என்றாள். அஸ்வத்தாமன் “ஆம், தேவி. அவ்வாறே ஆகுக!” என்றான். அவளுடைய புன்னகை விரிந்தது. “பெருந்துறவியர்கூட அஞ்சும் இடம் இது. என் விழிகளை நேருக்குநேர் நோக்கியவர்களே அரிது. நீ எனக்கு இனியவன்” என்றாள். “எனினும் எண்ணி நோக்குக. மைந்தா, நீ அழிவின்மை என்னும் பேறுகொண்டோன். முடிவிலிவரை நீ என் இளையோளின் ஒரு கீற்றைக்கூட அறிய முடியாது.”

அஸ்வத்தாமன் “நான் என் அரசருக்கு என்னை அளித்துள்ளேன். எதுவரை என்று என்னைக் கேட்டுக்கொண்டேன். ஒன்றும் எஞ்சாதது வரை. முடிவிலிவரை என எனக்கே சொல்லிக்கொண்டேன்” என்று சொன்னான். “தேவி, இந்நோன்பால் நான் எண்ணற்கரியதை இயற்றவேண்டும். எல்லைகள் அனைத்தையும் கடக்கவேண்டும். இயற்றிய எதன்பொருட்டும் துயருறாதமைய வேண்டும்.” கரிய தேவி அவனை மேலும் அணுகினாள். அப்பாலிருந்தபோது அவளிலிருந்து எழுந்த நறுமணம் கெடுமணமாக ஆகியது. அவள் முகம் சிதைந்து பரவி அருவருப்பூட்டும் தோற்றம் கொண்டது. கரிய பற்களின் நடுவே இருந்து நாக்கு நாகமென நெளிந்திறங்கியது. அவளுடைய சிரிப்பு கழுதைப்புலிகளின் சிரிப்புபோல் ஒலித்தது.

அவள் தன் இடமுலையை தொட்டு அதைத் திருகி ஒரு குவளை என எடுத்து அவனிடம் நீட்டினாள். அது வெண்ணுரை கொண்ட பாலால் நிறைந்திருந்தது. “அருந்துக, இது என் அருள்” என்றாள். நாட்பட்ட சீழின் கெடுமணம் எழுந்தது. அவன் அதை வாங்கி ஒருகணம் குனிந்து நோக்கியபின் உடலை இறுக்கி கண்களை மூடிக்கொண்டு அருந்தினான். நாவில் படர்ந்து உடலை நிறைத்த கசப்பு கொண்டிருந்தது அது. அவன் அவளிடம் அக்கோப்பையை திரும்ப அளித்து “அருள்க, தேவி” என்றான். “ஆற்றலுற்றாய்… வெல்லற்கரியவனானாய்…” என்று அவள் சொன்னாள். அவன் அவளை குனிந்து வணங்கி எழுந்தபோது மறைந்துவிட்டிருந்தாள்.

மீண்டும் நடந்தபோது அஸ்வத்தாமன் தன் களைப்பனைத்தும் மறைந்துவிட்டிருப்பதை உணர்ந்தான். உடல் காற்றிலென மிதந்து சென்றது. அவன் விழிகள் பாதை மறிக்கும் தெய்வங்களுக்காகத் துழாவிக்கொண்டே சென்றன. அவன் நாவில் எஞ்சிய கசப்பு மெல்ல மெல்ல இனிப்பாகியது. மூச்சும் விழிகளும் கூட இனித்தன. உள்ளங்கால் இனிப்பில் துழாவியது. அவன் நாவால் துழாவி சப்புகொட்டிக்கொண்டு நடந்தான். எதிரில் இருளலை திரள்வதைக் கண்டு நின்றான். அது உருக்கொள்வதற்காகக் காத்து நின்றான். காகங்கள் இருளில் அதைச் சூழ்ந்து பறப்பதைக் கண்டான். வடிவம் தெளிந்தபோது அவன் அருகே சென்று வணங்கினான். எட்டு கைகள் கொண்ட கரிய பேருரு திமிறி எழுந்த மரம்போல் அங்கே நின்றது.

“என் மைந்தனுக்கு இனியவன் நீ” என்று கலிதேவன் அவனிடம் சொன்னான். “என் மைந்தனின் வடிவாக நீ கலியுகத்தைக் கடந்துசெல்வாய்… வெல்க!” அவன் “என்னை ஆற்றல்கொண்டவன் ஆக்குக, இறைவா” என்றான். “எழுயுகத்தில் மானுடரை ஆற்றல்கொண்டவர்களாக்குவன ஏழு. செல்வம், குடிப்பிறப்பு, வீரம், சூழ்ச்சி, அச்சம், காமம், வஞ்சம். இவற்றில் ஒன்றை தெரிவுசெய்க. அதை உனக்கு முடிவிலாது பெருகச்செய்கிறேன். அது உன் படைக்கலமாகவும் ஊர்தியாகவும் காவல்தெய்வமாகவும் உடனிருக்கும்.” அஸ்வத்தாமன் “தேவா, எனக்கு தீராப் பெருவஞ்சத்தை அருள்க” என்றான். “அறிக, செல்வம் கொண்டவன் தனிமையை அடைவான். குடிப்பிறப்பு கொண்டவன் இணையான எதிரியை அடைவான். வீரம் ஆணவத்தை அளிக்கும். சூழ்ச்சி ஐயத்தையும், அச்சம் சினத்தையும், காமம் சலிப்பையும் அளிக்கும். வஞ்சம் துயிலின்மையை. அதைத் தெரிவுசெய்தபின் நீ ஒருகணமும் உளமுறங்க இயலாது” என்று கலிதேவன் சொன்னான்.

“ஆம், உறங்காத வஞ்சத்தை அளியுங்கள். அது ஒன்றே நான் விழைவது. அது என்னை பெருகச் செய்க. அதன் வழியாக நான் தெய்வமாகிறேன். இப்புவி உள்ளளவும் வாழும் அழிவிலியாகிறேன்” என்று அஸ்வத்தாமன் கூவினான். கலிதேவன் புன்னகைத்து அவனருகே வந்து அவன் நெஞ்சில் கையை வைத்தான். அக்கணம் தன்னுள் அனல் ஒன்று பற்றிக்கொண்டதைப்போல் அஸ்வத்தாமன் உணர்ந்தான். உடல் கொதிக்கத் தொடங்கியது. கைவிரல்நுனிகள் சிவந்து பழுத்தன. செவிமுனைகள், மூக்குவளைவுகள் அனலாயின. “வரும் யுகத்தில் நீ எங்குமிருப்பாய். பெருவஞ்சம் கொண்ட எவரும் உன்னை அருகே என உணர்வார்கள். பழிக்கு அஞ்சாமலிருக்க, பிழையுணர்வு கொள்ளாமலிருக்க, இறுதிக்கணத் தயக்கத்தை வெல்ல, இயற்றியவற்றை அக்கணமே மறந்து மேலும் செல்ல உன்னை வழுத்துவர். இந்த ஐந்து நலன்களையும் அளிப்பதனால் நீ பஞ்சவன் என அழைக்கப்படுவாய்” என்றான் கலி. அஸ்வத்தாமன் அவனை வணங்க “ஓம்!” என்னும் ஒலியாக மாறி மறைந்தான்.

மேலும் நடந்தபோது அஸ்வத்தாமன் தன் உடல் எரிவடிவு கொண்டுவிட்டதாக உணர்ந்தான். தன்னுள் எரிந்த அனலை உள்ளோடிய ஒவ்வொரு சொல்லிலும் அறிந்தான். சொற்கள் பற்றி எரிந்தன. அனல்பறக்க ஒன்றுடன் ஒன்று உரசிக்கொண்டன. அவன் அங்கே நின்ற பசுமரம் ஒன்றை நோக்கினான். அது இலைபொசுங்கி பற்றி எரிந்து கொழுந்தாடியது. அப்பாலிருந்த கரும்பாறை ஒன்றை கையால் அறைந்து பொடிப்பொடியாக்கினான். அனல் அவனை மேலும் அனல்கொண்டவனாக ஆக்கியது. அவன் கால்பட்ட இடங்களில் புல்பொசுங்கி புகைந்தது. சேறு கொதித்து நீராவி எழுந்தது. அவன் தன் முன் இனி எழுவது எந்த தெய்வம் என்று எண்ணிக்கொண்டிருந்தான். மலைப்பாறை மேலிருந்து உதிர்வதுபோல் காலடியோசைகளைக் கேட்டான். நெஞ்சு நிமிர கைவீசி முன்னால் சென்றான். அங்கே வெற்புருவாக எழுந்து நின்றிருந்த பூதத்தைக் கண்டான்.

“விலகுக!” என்று அவன் சொன்னான். பூதம் “என்னை விலக்கிவிட்டுச் செல்… நீ முடிவிலா ஆற்றல்கொண்டவன் என தருக்குகிறாய் அல்லவா?” என்றது. அஸ்வத்தாமன் சீறியபடி குனிந்து தரையில் இருந்து புல் ஒன்றை பறித்து ஊதி வீசினான். எரியெழுந்து இடியோசையுடன் சென்று அந்த அம்பு பூதத்தை தாக்கியது. அதன் உடலில் மின்மினி என அந்த அனல் சென்று ஒட்டிக்கொண்டது. வெறிகொண்டு மேலும் மேலும் புல்லம்புகளை அந்தப் பூதத்தின்மேல் தொடுத்தான். விளக்கேற்றிய மலைக்குவை என அவன் அம்புகளைச் சூடிப் பொலிந்து நின்றது கரிய பூதம். செயலிழந்து நோக்கி நின்ற அஸ்வத்தாமன் ஒருகணத்தில் அதன் நெற்றியில் எரிந்தணைந்த எரிமீன் போன்ற செவ்விழியைக் கண்டான்.

“என் இறையே! என்னை ஆட்கொள்க!” என்று கூவியபடி அவன் அப்பூதத்தின் காலடிகளை நோக்கிச் சென்று மண்ணில் முகம் பதிய விழுந்தான். “என் ஆற்றல்களையும் இலக்குகளையும் உன் காலடியில் படைக்கிறேன். என்னை வெல்க!” என்றான். பூதத்தின் குரல் இடியோசைபோல் வானில் எழுந்தது. “நான் விழையும் படையல் உன் ஆணவம் மட்டுமே” என்றது அது. “அழிவிலாதவன் ஆற்றல்குன்றாதவன் என ஒருகணமும் உன்னை எண்ணமாட்டாய் என்னும் சொல்லை எனக்கு பலியென கொடு”. அஸ்வத்தாமன் தன் விழிநீரை சுட்டுவிரலால் தொட்டு “அளித்தேன்! அளித்தேன்! அளித்தேன்!” என்று மும்முறை சொன்னான். “நீ விழைவதைக் கோருக” என்று பூதம் சொன்னது.

“மூவிழித்தெய்வம் எழுந்து என் முன் வந்து நின்றிருக்கையில் நான் என்னைப்பற்றிய மெய்யறிதலை அன்றி பிறிது எதையும் கோரமாட்டேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “கூறுக, இறைவா. நான் இயற்றவிருப்பதை ஏன் இயற்றுகிறேன்? அச்செயலால் எவருக்கு என்ன பயன்? இக்கொடுஞ்செயலை இயற்றும் நான் எவ்வண்ணம் இங்கே நிலைகொள்வேன்?” பூதம் மறைந்து உடலிலி ஒலித்தது. “நீ மானுடனில் நிகழும் தெய்வம் என்பதனால் அச்செயலைச் செய்கிறாய். மைந்தா, தெய்வங்கள் இப்புடவிப்பெருக்கெனும் முடிவிலியின் துளிகள். பிரம்மத்தின் பல்லாயிரம்கோடி வடிவங்கள் அவை. பிரம்மத்தின் நோக்கத்தையே அவை ஆற்றுகின்றன. அவற்றை அத்தெய்வங்கள் அறியவியலாது. பெருஞ்செயலைச் செய்வதனூடாக மானுடர் தெய்வமாகிறார்கள். நன்றென்றும் தீதென்றும் செயலைப் பகுப்பது மானுடச் சித்தம். பிரம்மவெளியில் எல்லாச் செயலும் ஒன்றே. செயலும் செயலின்மையும் ஒன்றே.”

அஸ்வத்தாமன் தன் விழி ஒருகணம் திரும்பிய அசைவில் இருளில் அத்தோற்றம் மறைந்து தான் கையில் எரிசுள்ளியுடன் நின்றிருப்பதை உணர்ந்தான். அவனுக்குப் பின்னால் கிருதவர்மன் “பாஞ்சாலரே, நில்லுங்கள்… நாங்கள் வந்துகொண்டிருக்கிறோம்” என்று கூவினான். கிருபரும் கிருதவர்மனும் மூச்சிரைக்க ஓடி அவனை நோக்கி ஓடினர்

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைசீமானும் கிராமப்பொருளாதாரமும்
அடுத்த கட்டுரைதீர்வு- கடிதங்கள்