தரவுகள் என்னும் மூடுதிரை

பைரப்பாவின் திரை [ஆவரணா] வாங்க

அன்பின் ஜெ,

நான் பள்ளிக்கூடத்தில் படித்த (!!) வரலாறாகட்டும் அல்லது இப்போது ஊடகங்கள் கூறும் வரலாறாகட்டும், நிஜத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளவை என்பதை உணர்த்திய பல புத்தகங்கள் உண்டு. அவற்றில் நான் முதலில் படித்தது மதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள். ஒரு ஏழாம் வகுப்பு பள்ளி மாணவனுக்கும் (நான் அந்த புத்தகம் வெளிவந்தபோது ஏழாம் வகுப்பில் தான் இருந்தேன்) புரியும்படி எழுதியது மாபெரும் வெற்றி. பேசாமல் இதனை பள்ளி பாடநூலாக வைக்கலாம். டெல்லி சுல்தான்கள், கில்ஜிகள், லோடி பரம்பரை கடைசியாக மொகலாயர்கள் என மிகவும் சுவாரசியமான எழுத்தின் மூலம் இந்த புத்தகம் இருந்தது. ஆனால் இன்றைய விக்கிப்பீடியா யுகத்தில் இந்த புத்தகம் இளையோருக்கு எவ்வளவு பிடிக்கும் என சொல்வது கடினம்.

வளர்ந்த பிறகு வரலாற்றினை நமக்கு மீள் அறிமுகம் செய்திவைக்கும் எழுத்துக்களாக பல புனைவுகள் உள்ளன. ஜெயமோகனின் வெள்ளை யானை, இன்றைய காந்தி, ராய் மாக்ஸம் எழுதிய உப்புவேலி, முதலிய அவற்றில் சில (இந்த வாசிப்பனுபவங்களை இன்னும் எழுதவேண்டும்). இந்த வரிசையில் என்னுடைய வாசிப்பின் புதிய வாசலை திறந்தது ஆவரணா.

புத்தகத்தின் ஆசிரியரான எஸ் எல் பைரப்பாவிற்கு அறிமுகம் ஏதும் தேவை இல்லை. நான் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசித்தேன்.

முற்போக்குவாதியான கதையின் நாயகி ஒரு இந்துவாக பிறந்து காந்தியவாதியான தன் தந்தையின் எதிர்ப்பை மீறி மதம் மாறி திருமணம் செய்துகொள்கிறாள். அவளுடைய திருமண வாழ்வு அவள் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. இருவரும் நாடக, திரைப்பட துறையில் வேலை செய்பவர்கள். அவள் கணவன் வெளியில் முற்போக்குவாதியாகவும் வீட்டில் ஒரு மதநம்பிக்கையுள்ளவனாகவும் இருக்கிறான். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் தனிக்குடித்தனம் செல்ல அவர்கள் மகன் பெரும்பாலும் தாத்தா பாட்டியிடம் வளர்கிறான்.

இந்த நிலையில் சில வருடங்களுக்கு பிறகு கதாநாயகியின் அப்பா காலமாகிவிட, அவள் தன கிராமத்திற்கு செல்கிறாள். அங்கே அவளுடைய அப்பாவின் நூலகத்தை பார்க்கிறாள். அவர் படித்த புத்தகங்களையும் அவருடைய உழைப்பையும் பார்த்து தான் ஒன்றும் படிக்காமலே பல திரைக்கதைகளை எழுதியதை நினைத்து மனம் வெட்கி கூனி குறுகுகிறாள். அவற்றை தன் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி, அவற்றை படித்து ஒரு வரலாற்று நாவலை எழுதுகிறாள். மத உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த புதினம் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டு அவள் கைது செய்யப்படுவதுடன் கதையை முடிக்கிறார் எஸ் எல் பைரப்பா.

அந்த புதினத்தின் கதைக்களம் ஒளரங்கசீப் காலத்தில் நடந்த மதங்கள், மதமாற்றங்கள் பற்றியது. ராஜஸ்தானிய இந்து அரசகுடும்பத்தினர்களும், அவர்களின் அரசகுல பெண்மணிகளும் போருக்கு பிறகு எவ்வாறு நடத்தப்படுகிறார்கள், கப்பம் எவ்வாறு வசூலிக்கப்படுகிறது, படைகளும் அதன் தலைவர்களும் (ஆயிரத்தவர்கள், பத்தாயிரத்தவர்கள், முதலியர்) எவ்வாறு நடந்துகொள்கிறார்கள், திப்புசுல்தானின் அரசியல், என கதாநாயகியின் புதினம் விரிகிறது. காசி விஸ்வநாதர் ஆலயம் எவ்வாறு இடிக்கப்பட்டது என்பதை கதாநாயகியின் புதினத்தில் வாயிலாக, ஆசிரியர் விவரணை செயகிறார். இந்திய வரலாற்றில் மராத்தாக்கள் இல்லாமல் மொகலாயர்களிடமிருந்து ஆங்கிலேயருக்கும் பிறகு சுதந்திர இந்தியாவிற்கும் வாரணாசி வந்திருந்தால், இன்றைய வாரணாசியை நாம் கண்டிருக்க முடியாது. இந்த ஒரே ஒரு வரியை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.

இவற்றினிடையே கதாநாயகிக்கும் பேராசிரியர் சாஸ்திரிக்குமான உறவு, அவருடைய குடும்பம், கதாநாயகியின் கணவனின் இரண்டாம் திருமணம் என பல்வேறு பாத்திரங்களின் உள்நிலையை விவரிக்கிறது இந்த புத்தகம்.

நான் என்னுடைய நண்பர்களிடையே இந்த புத்தகத்தில் கூறியவற்றை பேச எத்தனித்தேன். ஒரு சாரார் இந்த புத்தகம் மிகவும் சரியான தகவல்களை கொண்டிருக்கிறது என்றனர். மற்றொரு சாரார், இது சரி கிடையாது. எங்கள் மதம் குறித்து தவறான தகவல்களை தருகிறது என்கின்றனர். நான் மதுராவுக்கும் காசிக்கும் சென்றுள்ளேன். அங்கு உள்ள நிலைமையை பார்த்தால், புத்தகம் உண்மை என்பது தெரியும். அதற்காக இப்போதுள்ள தலைமுறையினரை குற்றவாளிகள் என கூறுவது சற்றும் பொருந்தாது.

என்னுடைய பார்வையில் மொகலாயர்களுடனான இந்து சிற்றரசர்களின் போர் விளைவுகளை வீழ்ந்தவர்களின் கோணத்தில் இந்த புத்தகம் கூறுகிறது.

இந்த புத்தகம் மத உணர்வுகளை புண்படுத்துமா என்றால், விஸ்வரூபம் கமல் பாணியில் ‘ஆமாம்’ மற்றும் ‘இல்லை’ என்பேன். நமக்கு முன்னாள் வைக்கப்படும் வரலாறு உண்மையா பொய்யா என உணர இந்த புத்தகத்தை படிக்கலாம். இந்த புரிதல் இல்லாமல் படித்தால் கண்டிப்பாக மதஉணர்வுகள் பாதிக்கப்படும்.

ஆனால் இந்த புத்தகத்தை ஒரு அரசியல் கட்சியினர் தூக்கிப்பிடித்து மற்றவரை தாக்குவது முற்றிலும் தவறான நடவடிக்கை. நீங்கள் இந்த புத்தகம் இலக்கியம் அல்ல என (ஆர்வீ அவர்களின் தளத்தில் என நினைவு) கூறியிருந்தீர்கள். இது பருவம், ஒரு குடும்பம் சிதைகிறது (இந்த வாசிப்பனுபவங்களையும் எழுதவேண்டும்) போல இலக்கியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பைரப்பா அவர்கள் கூறியது போல இதுவரை எந்த ஒரு விமர்சகரும் இந்த புத்தகத்தில் வரும் தகவல்களை தவறு என கூறவில்லை.

இந்த புத்தகத்தில் பிரச்சார நெடி உள்ளதா எனில் சற்று தூக்கலாகவே உள்ளது. ஆனால், அதையும் மீறி நம் வரலாற்றினை நாம் உணர இது ஒரு முக்கியமான புத்தகம்.

அன்புடன்,

கோ வீரராகவன்

அன்புள்ள வீரராகவன்,

ஆவரணாவில் வரும் தரவுகள் எதுவுமே தவறானவை அல்ல. பைரப்பாவுக்கு கன்னட இலக்கியத்தில் ஒரு நீண்டகால நற்பெயர் உண்டு, அது அவருடைய ஆராய்ச்சி மற்றும் தகவல்துல்லியம் சார்ந்தது. அவர் ஒரு பண்பாட்டு வரலாற்றாசிரியரும்கூட அவர் இலக்கியத்தை மெய்யான தரவுகளைக் கொண்டு எழுதப்படவேண்டிய ஒருவகை வரலாறாகவே நினைக்கிறார். அவர் யதார்த்தவாத – இயல்புவாத யுகத்தைச் சேர்ந்த படைப்பாளி. அவர்களின் நம்பிக்கை அது. பைரப்பாவின் புகழ்பெற்ற நாவல்களான கிருஹபங்கா [தமிழில் ஒருகுடும்பம் சிதைகிறது] வம்சவிருக்ஷா ஆகியவை, உண்மையான நிகழ்வுகளை ஒட்டியே எழுதப்பட்டவை என அவர் ஒரு பேட்டியில் சொல்கிறார்.

பிறருடைய நூல்களைப் பற்றி பைரப்பா எழுதிய நீண்ட விமர்சனக்கட்டுரைகளிலும் அவற்றிலுள்ள தரவுகளை வரலாற்றுப் பின்புலத்தில் வைத்து சரியா என்று ஆராய்வதையே முதன்மையாகக் கருதுகிறார். குறிப்பாக கிரீஷ் கர்நாட் எழுதிய திப்புசுல்தான், துக்ளக் என்னும் இரு நாடகங்களைப் பற்றி அவர் எழுதிய விரிவான விமர்சனங்கள் வரலாற்றாய்வுகளாகவே திகழ்கின்றன. அவை அந்நாடகங்கள் எப்படி மெய்யான வரலாற்றுத் தரவுகளில் இருந்து மிக விலகி, இட்டுகட்டிய தகவல்களால் அமைந்துள்ளன என்றுதான் நிறுவ முயல்கிறார். விரிவான ஆய்வுத்தகவல்களுடன் கட்டுரைகளை எழுதினார். அவை தகவல்ரீதியாக மறுக்கப்படவில்லை – ஒரு வரி கூட பிழை என நிறுவப்படவில்லை. பைரப்பாவுடன் அத்தகைய விவாதங்களில் ஈடுபட பொதுவாக இலக்கியவாதிகளால் முடியாது.

ஆகவே அந்த தரவுகளை ஆதாரபூர்வமானவை என்று நிறுவ கிரீஷ் கர்நாட் முயலவில்லை. மாறாக அந்நாடகங்கள் தன்னுடைய கற்பனைகள் மட்டுமே என்றும் பைரப்பா அவருடைய துக்ளக்கையும் திப்புசுல்தானையும் அவரே உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் பதில்சொல்லி விலகிக்கொண்டார். ஆனால் பின்னர் திப்புசுல்தான் பற்றிய விவாதம் எழுந்தபோது தன் நாடகத்திலுள்ளவை  ‘வரலாற்றுரீதியான உண்மைகள்’ என்றுதான் கிரீஷ் கர்நாட் சொன்னார். பைரப்பா முன்வைத்த ஏராளமான ஆதாரங்களை பொருட்படுத்தியதாகக் காட்டிக்கொள்லவில்லை. பைரப்பாவை இந்து தேசியர் என்றும் அடிப்படைவாதி என்றும் குற்றம்சாட்டினார். பைரப்பா இந்துமதத்தின் அடிப்படைவாதக் கூறுகளையும் மடங்களின் சுரண்டலையும் கடுமையாக எதிர்த்து எழுதியவர், அதன்பொருட்டு வாழ்நாளெல்லாம் வேட்டையாடப்பட்டவர் என்பது இக்குற்றச்சாட்டுகளால் மறைக்கப்பட்டது.

ஆகவே ஆவரணாவில் ஒரு வரியேனும் பிழையோ பொய்யோ இருக்கும் என நான் நம்பவில்லை. வேண்டுமென்றால் மறுபக்கம் சொல்லப்படவில்லை என்று வாதிட்டுப்பார்க்கலாம், அதற்கும் பெரிய ஆய்வுகள் தேவைப்படும். பைரப்பாவின் அழகியல் என்பதே குறைத்துச் சொல்வதுதான். அதுவே யதார்த்தவாதத்தின் ஆற்றல்..கிருஹபங்காவில் அது மிகச்சிறந்த அழகியல் அனுபவமாக அமைகிறது. அவருடைய புகழ்பெற்ற நாவலான பர்வாவும் அதே பாணியிலானது. அதில் தொன்மங்களை வெளிறச்செய்து வெறும் யதார்த்தமாக ஆக்கிவிடுகிறது இந்தப் பாணி. ஆகவே ஆவரணா உணர்வுபூர்வமாக மிகைப்படுத்தப்பட்டது என்றும் நான் நினைக்கவில்லை.

அப்படியென்றால் அந்நாவலில் நான் காணும் குறை என்ன? அதிலுள்ள தரவுகள் கலையாக மாறவில்லை என்பதுதான். அவை மெய்யா என்பதல்ல என் கேள்வி. அவை கலையாக்கத்திற்கு எவ்வகையில் உதவுகின்றன என்பதே. இச்செய்திகளை நாம் வெளியேசென்றும் பெற்றுக்கொள்ள முடியும் என்றால் இது கலைப்படைப்பாக நமக்கு அளிப்பது என்ன? ஆவரணாவில் வரலாற்றுச் செய்திகள் சில கதைச்சந்தர்ப்பங்கள் வழியாக ஆசிரியரால் சீராக முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவை அந்தச் சூழலைக் கட்டமைப்பதிலோ அக்கதைமாந்தரின் ஆளுமையை கட்டமைப்பதிலோ பங்காற்றவில்லை. அல்லது தேவைக்கு மிக அதிகமாக கூறப்படுகின்றன.

ஒரு புனைகதை ஏன் எழுதப்படுகிறது? செய்திகளைச் சொல்வதற்கு அல்ல. அறிவுறுத்துவதற்கு அல்ல. அதன் அவை வேறுவகை கூறுமுறைகள். இலக்கியம் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு வகை கூறுமுறை. இதன் செயல்பாட்டுமுறைகள் நான்கு

அ ஒரு நிகர்வாழ்க்கையை வாசகனுக்கு அளித்து அதில் அவன் கற்பனையால் வாழச்செய்தல். அவ்வாறு வாழும் அனுபவத்தையும் அறிதலையும் அளித்தல்

ஆ பொதுவாக அறியப்படும் வாழ்க்கைக்கு அடியிலுள்ள நுண்ணிய உளஒழுக்குகளையும் உணர்ச்சிகளையும் புனைவு உச்சங்கள் வழியாகவும் புனைவின் இடைவெளிகள் வழியாகவும் வாசகனுக்கு உணர்த்துதல்

இ. தொன்மங்கள் குறியீடுகள் படிமங்கள் ஆழ்படிமங்கள் ஆகியவற்றினூடாக வாசகனின் ஆழுள்ளத்தில் கனவுகளை எழுப்பி வாழ்க்கையின் உண்மைகளையும் மெய்யியலையும் விரியச்செய்தல்.

ஈ. தூயமொழியனுபவம் வழியாக வாசகனின் நுண்ணுணர்வைத் தூண்டி உணர்வுகளையும் மெய்யறிதலையும் கடத்துதல்.

ஒரு புனைவில் வரும் தரவுகள் இந்நான்கில் எவற்றை ஆற்றுகின்றன என்பதை மட்டும்கொண்டே அவற்றுக்கு மதிப்பு. எவற்றையும் ஆற்றாமல் செய்தி மதிப்புக்காகவே நிலைகொள்ளும் தரவுகளுக்கு  எந்த இலக்கிய மதிப்பும் இல்லை. அவை எந்த வகையில் உண்மையாக இருந்தாலும். இந்நான்கில் எதையேனும் நிகழ்த்துவதற்காக செய்திகள் கொள்ளும் திரிபும், வளர்ச்சியும் இலக்கியத்தில் இயல்பாக எப்போதும் நிகழ்வது. சொல்லப்போனால் தரவுகளின் திரிபும் வளர்ச்சியுமே இலக்கியச்சிறப்பாக செவ்விலக்கியங்களில் கருதப்படுகிறது.

ஆவரணாவில் தரவுகள் எவ்வகையிலும் திரிபோ வளர்ச்சியோ அடையவில்லை. சூழலை சித்தரிக்கவோ ,சொல்லப்படாத நுண்மைகளை உணர்த்தவோ, படிமங்களாக வளரவோ, மொழியனுபவமாக மலரவோ அவை முற்படவில்லை. அவை செய்திகளாகவே நிலைகொள்கின்றன. ஆகவே அது கலையாகவில்லை. ஆனால் ஏறத்தாழ இந்நாவலுடன் ஒப்பிடத்தக்க குறுநாவலான பைரப்பாவின்  ‘தபலியு நீனாட மகனே’ ஒரு கலைப்படைப்பு. கர்நாடகச் சிற்றூருக்கு வரும் அமெரிக்கப் பெண் காணும் கோணத்தில் கர்நாடகப் பண்பாடு ‘ஆவணப்படுத்தப்’ படுகிறது அதில். ஆனால் அச்செய்திகள் சூழலாக விரிந்து வாழும் அனுபவமாகின்றன. கர்நாடகப் பண்பாட்டின் படிமவெளியாகவும் நிலைகொள்கின்றன

இந்நாவலுக்கு நேர் எதிரான நிலைபாடுகள் கொண்ட சாந்திநாத தேசாயின் ‘ஓம்’ போன்ற நாவல்களும் இதேவகையான செய்தித்தொகைகளாக நின்றுவிடுபவைதான். பெரும்பாலான முற்போக்கு இலக்கியம் மீது அழகியல் விமர்சகர்கள் முன்வைப்பது இதே குற்றச்சாட்டைத்தான். பைரப்பாவுக்கும் அவர்களுக்கும் நிலைபாடுதான் வேறுபாடு. எந்த ஐயமும் இல்லாமல் சொல்லமுடியும், கர்நாடகம் உருவாக்கிய இரண்டு முதன்மை இலக்கியமேதைகள் காரந்தும் பைரப்பாவும். ஆனால் இந்நாவல் கலை அல்ல

ஜெ

***

https://www.prekshaa.in/dr-s-l-bhyrappa-distorting-indian-history

http://rand-rambler.blogspot.com/2006/10/girish-karnad-sl-bhyrappa-tipu-sultan.html

https://dharmadispatch.in/in-memoriam-the-dreams-of-tughlaq-tipu-girish-karnad/

முந்தைய கட்டுரைநாதவனத்தை நிர்மாணிக்கும் அபியின் படிமங்கள் – ரவிசுப்ரமணியன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-45