பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு
நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம்.
இந்த மாத தடம் இதழில் ‘பக்தி இலக்கியத்தின் இன்றைய வாசிப்பு’ கட்டுரை வாசித்தேன். தான் நம்பும் இலக்கியப் பார்வையிலிருந்து ஒரு சட்டக வரைவை உருவாக்கிக் கொண்டு எழுதப்பெற்ற தேர்ந்த வடிவம் கொண்ட கட்டுரை. இப்படியொரு கட்டுரையை எழுதுவதற்குத் தமிழில் இன்னொரு எழுத்தாளர் இல்லை. அதிலும் நவீன இலக்கியத்தோடு தொடர்புடைய ஒருவர் இதற்கு முன்பும் இருந்ததில்லை. இந்தக் கட்டுரையில் நீங்கள் உருவாக்கும் சட்டக வரைவு நீங்கள் நம்பும் இலக்கியக் கோட்பாட்டிற்கேற்ப உருவாக்கப்பட்ட வரைவுதான். அது எனக்கு முழுமையாக ஏற்புடையதல்ல. உங்கள் வாதத்திற்கேற்பத் தொடக்கத்தையும் தொடர்ச்சியையும் கட்டமைத்திருக்கிறீர்கள். அப்படித்தான் செய்ய முடியும். அதுதான் முறையியலும்கூட. பாராட்டுகள்.
அ.ராமசாமி
அன்புள்ள ஜெ,
பக்தி இலக்கியத்தை நவீன எழுத்தாளர்கள் ஏன் வாசிக்கவேண்டும் என்ற கேள்விக்கு விடையாக அமைந்த கட்டுரை சமீபத்தில் நீங்கள் எழுதிய முக்கியமான ஆக்கம். பக்தி இல்லாமல் பக்தி இலக்கியத்தை ஏன் வாசிக்கவேண்டும் எப்படி வாசிக்கவேண்டும் என்பதுதான் அதன் கேள்வி. அதற்கு மிகக்குறிப்பான அழுத்தமான ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறீர்கள்.
மொழியனுபவத்தை அடைவதற்கு என்று சுருக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் மொழியனுபவம் என்பது என்ன? மொழியை அறிவது என்றால் என்ன? ஒரு மொழியை அறிவது அந்தப் பண்பாட்டை அறிவதுதான். ஒர் அழகிய சொல்லாட்சி நமக்கு இன்பத்தை அளிக்கிறது என்றால் அது ஏன்? அது ஒரு பண்பாட்டுக் குறிப்பைக் கொண்டிருக்கிறது. அந்தப் பண்பாட்டுக்குறிப்பைத்தான் நாம் உண்மையிலே சுவைக்கிறோம். அதைத்தான் நாம் மொழியனுபவம் என்கிறோம்
மருவாய் மலராய் என்ற சொல்லாட்சி அந்த அளவுக்கு அழகாக இருக்கிறது. மரு என்றால் மருவுதல் என்றும் மணம் என்றும் அர்த்தம் உண்டு. மருவுவது மலர்கிறது. அதேபோல மலர்வதற்கு முன்பு மலர் மணமாக இருக்கிறது. மணம் பின்னர் மலர் ஆகிறது. இந்த வரியில் தெரிவது மொழியின் அழகு அல்ல. அந்தப்பண்பாட்டின் அழகுதான்.
‘தமிழ்ப்பண்பாடு ஏழாம் நூற்றாண்டு முதல் பதினேழாம்நூற்றாண்டு வரை பக்தி இலக்கியம் வழியாகவே வளர்ந்திருக்கிறது. பக்தி இலக்கியத்தை வாசிக்காத ஒருவர் தமிழின் ஆயிரம் ஆண்டுக்கால மலர்ச்சியையும் தமிழ்ப்பண்பாட்டின் ஆயிரம் ஆண்டுக்கால ஆழத்தையும் அறியாதவர்தான். அது பெரிய இழப்புதான்.
அந்த வாசிப்பை பக்திக்கு அப்பாற்பட்டு எப்படிச் செய்வது என்பதைக் கட்டுரையில் கூறியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
அன்புடன்
எஸ்.ஆனந்த்
அன்புள்ள ஜெ
பக்தி இலக்கியம் பற்றிய கட்டுரை அழகானது. அதில் இந்திய அளவிலும் தேசிய அளவிலும் பக்தி இயக்கத்தின் வரலாற்றுப்பின்னணியையும் அதன் உட்கூறுகளையும் மிகச்சுருக்கமாக ஒற்றைப்பார்வையில் தொகுத்துக் கூறியிருந்தீர்கள். நானறிந்து இப்படி ஒரு தொகுப்புக்கூற்றை எந்த நூலிலும் வாசித்ததில்லை. இதை நீங்கள் இன்னும் விரித்து ஒரு சிறுநூலாகவே எழுதலாம்
பக்தி இலக்கியம் என்றால் ஆழ்வார் நாயன்மார் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். அது மூன்று காலகட்டங்கள் அல்லது மூன்று வடிவங்களால் ஆனது என்பது மிகப்புதிய செய்தி. பக்திப்பாடல்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் ஆகிய மூன்றையுமே பக்தி இலக்கியமாகவே கருதவேண்டும் என்பது நம் கல்விநிலையங்களுக்கு வந்தாகவேண்டிய பார்வை
செல்வக்குமார்