தீர்வுகள் – போகன்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
போகர் அல்லவா அப்படித்தான் சொல்லமுடியும். மலினமல்லாத இடத்தில் தீர்வுகளுக்கு வழி இல்லை, சுத்தமாக துளி கூட மலினமே இல்லாவிட்டால் பிரச்சனைகளே இல்லை.
கவிஞர்களின் தீர்வு
கதை எழுதுபவர்களின் தீர்வு
மொழிபெயர்ப்பாளர்களின் தீர்வு
என்றவர் ”வாசகர்களின் தீர்வு” என்பதை திட்டமிட்டு மறைத்துவிட்டதற்கு என் கண்டனத்தை பதிவு செய்யவிரும்புகிறேன். உலக இலக்கியங்களை வாசிக்க ஒரளவினுக்கேனும் முயன்று கொண்டிருக்கவில்லையா? பத்து ருபாய்க்கு இல்லாவிட்டாலும் இரண்டு ருபாய் மதிபிற்க்கேனும் தரமுடியாமலா போய்விடும்?
அன்புடன்
விக்ரம்
கோவை
அன்புள்ள ஜெ
போகனின் கவிதை உற்சாகமாக இருந்தது. எப்போதுமே நம்மூரில் அரட்டைகளில் எல்லாம் தெரிந்ததுபோல் எல்லாரும் பேசுவது சகஜம்தான். கிரிக்கெட் முதல் சர்வதேச விவகாரம் வரை கருத்துக்களுக்குப் பஞ்சமே இல்லை. “ஒருவார்த்தை என்கிட்ட கேட்டிருக்கலாமில்ல?” என்ற பாவனையிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் முகநூலில் எழுத ஆரம்பித்துவிட்டபின்னாடி பிரச்சினையை பேசவே முடியாத நிலை
காஷ்மீர் நிபுணர்கள் ‘காஷ்மீர் பிரச்சினை என்னான்னா…’ என்று எடுத்துவிடுவதையெல்லாம் வாசித்து நரம்பு இறுகி பல்லெல்லாம் கிட்டித்துப்போயிருந்தபோதுதான் போகனின் கவிதை வாசித்தேன். சிரித்துவிட்டேன். அழகான கவிதை.
இந்தவகையான நேரங்களில் கவிஞர்கள் தங்களை தினசரிகளாகப் பாவித்து தலையங்கங்கள் எழுதி அதை உடைத்து மடித்து கவிதையாக ஆக்கிக்கொள்ளும் வழக்கம் வந்திருக்கிறது. மு.க எழுதிக்கொண்டிருந்தார். அவர் எழுதியவை மேல் என்ற நிலையை மனுஷ்யபுத்திரன் உருவாக்கிவிட்டார். மு.க கவிதை மேடைப்பேச்சு. இந்தக்கவிதைகளில் உள்ள செயற்கை நெகிழ்ச்சி செயற்கைக்கோபம் எல்லாம் இருக்காது
போகன் கவிதைபோல இயல்பாக எழும் ஒரு கவிதைதான் இலக்கியத்தின் எதிர்வினை என நினைக்கிறேன்
ஆர்.ராகவ்