குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டைச் சென்றடைந்தபோது அவர்கள் முற்றாகவே சொல்லடங்கி வெறும் காலடியோசைத் தொடராக இருளுக்குள் நிகழ்ந்துகொண்டிருந்தார்கள். தெற்குக்காடு சீவிடுகளின் ஒலிகூட இன்றி அமைதியாக இருட்குவைகளின் பரப்பாக சூழ்ந்திருந்தது. கிருபர் தொண்டையைச் செருமி, குரல்கொண்டு “அங்கே எந்த ஓசையுமில்லை” என்றார். அஸ்வத்தாமன் அதைக் கேட்டும் மறுமொழி உரைக்கவில்லை. கிருபர் தானாக தொடர்ந்தார். “நாய்நரிகளின் ஊளையால் களம் இப்போது நிறைந்திருக்கும் என எண்ணினேன். அங்கே வெறும் இருள்வெளியே எஞ்சியிருக்கிறதுபோலத் தோன்றுகிறது” என்றார். அஸ்வத்தாமன் மறுமொழி சொல்லவில்லை எனக் கண்டு “ஆம், களம் முழுமையாகவே சேறால் மூடப்பட்டிருக்கிறது. ஆயினும் நாய்கள் நான்கடி ஆழம்வரை தோண்டி எடுக்கக்கூடியவை அல்லவா?” என்றார். அவருடைய அச்சொற்கள் அவருக்கே ஒவ்வாமையை உருவாக்க “அறநிலம் என்கிறார்கள் அதை” என்றார்.
அவருடைய பேச்சு இருளில் ஒலித்து அமைந்தது. சேற்றுப்பாதையிலிருந்து நடைவழியினூடாகக் குறுங்காட்டுக்குள் சென்றனர். மழையில் அங்கே சிதைகள் அனைத்தும் முற்றாகவே அணைந்து, சாம்பலும் கரைந்தோடியிருக்க, வெற்றுக்குழிகளாக எஞ்சியிருந்தன. புரவி இருட்டுக்குள் நோக்கி மடுக்களை ஒழிந்து சேற்றுக்குழிகள் அருகே நின்று சினைப்பொலி எழுப்பி அவர்களை எச்சரித்து அப்பால் சென்றது. அஸ்வத்தாமன் கர்ணனின் சிதை இருந்த இடத்தை நோக்கி அதைச் செலுத்தினான். கிருபர் அப்போதுதான் அந்த இடத்தை அடையாளம் கண்டார். “இது அங்கன் எரிந்த சிதை” என்றார். “ஆம், அச்சிதையிலேயே அரசரையும் ஏற்றுவோம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். கிருபர் பெருமூச்சுடன் “அது உகந்ததே” என்றார். பின்னர் சிரித்து “விந்தையான உறவு அவர்களுக்குள். அனைத்தும் அளிக்கப்பட்டவர் அனைத்தும் மறுக்கப்பட்டவரிடம் கொண்ட நட்பு” என்றார். அதை ஏன் சொன்னோம் என உடனே உள்ளம் சலித்தது. ஏன் பேசிக்கொண்டே இருக்க விரும்புகிறோம்? பேசாமலிருக்கையில் இவ்விருளில் இல்லாமலே இருக்கிறோம் என்று தோன்றுகிறது.
அஸ்வத்தாமன் பேசவிரும்பவில்லை என தெரிந்தது. குதிரையிலிருந்து துரியோதனனின் உடலைக் கட்டியிருந்த முடிச்சுகளை அவிழ்க்கத்தொடங்கினான். அது களைப்புடன் நீள்மூச்செறிந்தது. துரியோதனன் துயிலில் இருந்து எழப்போகிறவன்போல உடல் அசைந்தது. கிருபர் “நான் பிடிக்கிறேன்” என்று ஓடிவந்தார். “இல்லை, அவருடைய எடை மிகவும் கூடியிருக்கிறது. நாமிருவரும் கூட அவரை பிடிக்கவோ தூக்கவோ முடியாது… நான் முடிச்சுகளை தொட்டு அவை இருக்குமிடத்தை மட்டும் பார்த்துக்கொள்கிறேன். அவற்றை எளிதில் அவிழ்க்கவேண்டும். ஆகவே நெகிழ்த்தி வைக்கிறேன்” என்றான். “என்ன செய்வது?” என்று கிருபர் கேட்டார். “சிதைகூட்டுவோம். சிதைக்குமேல் இப்புரவியையே கொண்டுசென்று அதிலிருந்து அவர் உடலை அங்கே நேரடியாக இறக்கி அமைப்போம்” என்றான் அஸ்வத்தாமன்.
“இங்கே எரியும் விறகென ஏதுமில்லை… மழையில் ஊறியிருக்கின்றன அனைத்தும்” என்றார் கிருபர். “தேவதாருப் பசுமரம் அனலுறைவது. நேற்று சுழல்காற்று அடித்திருக்கிறது. மரங்கள் கடைபுழங்கி விழுந்துள்ளன. விழுந்துகிடக்கும் தேவதாருக்களை கண்டுபிடிப்போம். அவற்றிலிருந்து உருகிச்சொட்டிய அரக்கு அடியில் மண்ணில் சிறு குவைகளாக அமைந்திருக்கும். அவை நெய்க்கு மேலாகவே நின்று எரிபவை. நறுமணம் கொண்டவையும்கூட” என்று அஸ்வத்தாமன் சொன்னான். அவர்கள் தங்கள் உடைவாட்களை கைகளில் எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சென்றனர். இலைகளிலிருந்து ஈரம் சொட்டிக்கொண்டிருந்த ஓசை மட்டும் காட்டில் நிறைந்திருந்தது. நீரில் ஊறிய சருகுகள் சேறு என, செத்த விலங்கின் உடல் என மிதிபட்டன. ஆனால் காடு உயிரற்றிருந்தது. “சீவிடுகளின் ஒலிகள் கூட இல்லை” என்றார் கிருபர். அஸ்வத்தாமன் மறுமொழி கூறாமையை உணர்ந்து “பதினெட்டு நாள் எரிந்த அனலில் உயிர்கள் அனைத்தும் அகன்றிருக்கும்” என்று சொல்லிக்கொண்டார்.
அஸ்வத்தாமன் முதலில் ஒரு தேவதாருவைக் கண்டான். அதன் முறிவுப்பகுதிக்கு கீழே குனிந்து நோக்கி “இங்குள்ளது அரக்கு” என்றான். அதற்குள் கிருபரும் முறிந்த தேவதாரு ஒன்றைக் கண்டுவிட்டார். “இங்குமுள்ளது…” என்று அவர் சொன்னார். அந்த அரக்குக் கூம்புகளை எடுத்து அகன்ற வாழையிலையை வெட்டிப்பரப்பி அதில் சேர்த்தனர். “கிளைமட்டும் முறிந்த தேவதாருக்களும் அரக்கு சூடியிருக்கும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆம், நான் மணத்தாலேயே அவற்றை கண்டடைகிறேன்” என்றார் கிருபர். அரக்குக்கூம்புகளை இலைகளில் அடுக்கியபின் தேவதாருவின் சிறுகிளைகளை தறித்து விலக்கினான். மலையிலிருந்து உருண்டு வந்து இலைகள் நடுவே புதைந்தன போலக்கிடந்த உருளைப்பாறைகளை உந்திப்புரட்டிக் கொண்டுவந்து அடிமரத்துக்கு அடியில் வைத்து அவற்றின்மேல் அதை ஏற்றி உருட்டி உந்தி கொண்டுசென்றான் அஸ்வத்தாமன்.
அடிமரத்தின் முகப்பு உருளைப்பாறைகளில் இருந்து வெளிவந்தபோது பின்னாலிருந்து உருளைப்பாறைகளைத் தூக்கி அடியிலிட்டு மீண்டும் உந்தினான். பன்னிரு முறை அவ்வாறு உந்தியபோது அடிமரம் சிதையருகே வந்தது. அதை கொண்டுசென்று சிதைமேடைமேல் அமைத்தான். கிருபரிடம் “நான் உதவிக்கு வரவா?” என்றான். “நீ செய்வதை நோக்கினேன்… நானும் கற்றுக்கொண்டேன்” என்று கிருபர் சொன்னார். அவரும் ஒரு அடிமரத்தை அங்கே உந்தியும் இழுத்தும் கொண்டுவந்தார். “ஓடையில் சில மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை சேற்றினூடாகவே எளிதில் இழுத்துக் கொண்டுவரமுடியும்” என்றார். மேலும் இரு மரங்களை கொண்டுவந்து மேல் மேலாக இழுத்து அடுக்கி சிதைகூட்டினார்கள். அடிமரங்கள் மேடைபோல அமைய இருபுறமும் பசுங்கிளைகள் நீட்டி நின்றிருக்க அச்சிதை இருளில் வடிவின்மைகொண்டு தெரிந்தது.
“பசுஞ்சிதை…” என்று கிருபர் பெருமூச்சுடன் சொன்னார். “எரியாச் சிதை மண்ணில் விழைவு அடங்காதவர்களுக்குரியது என்பார்கள்.” அஸ்வத்தாமன் “இவை நன்றாகவே எரியும்… சற்று பிந்தும், ஆனால் எரிந்தபின் எதையும் எஞ்சவிடாமல் நீறு பெருகிக் கிடக்கும்” என்றான். கிருபர் மேற்கொண்டு அதைப் பேச விழையாமல் இருளை நோக்கினார். “கிருதவர்மன் சென்று சேர்ந்திருப்பானா?” என்றார். “அவனால் முறையாக இச்செய்தியை அரசருக்கு அறிவிக்க முடியுமா? அவன் சொல்வலன் அல்ல. நேரடியாகச் சொன்னால் அரசர் கொந்தளித்து எழக்கூடும். அவருடைய கைவட்டத்திற்குள் நின்றிருந்தால் அள்ளிப்பற்றி நொறுக்கிக் கொல்லவும்கூடும்.” அஸ்வத்தாமன் “அவருடன் சஞ்சயன் இருக்கிறான். அவன் அறிவான்” என்றான். கிருபர் “ஆம், அவன் சொல்லறிந்தவன்” என்றார். “சொல்லறிந்தவன் மானுட உள்ளத்தையும் அறிவான் என்பார்கள்” என்று சொல்லிக்கொண்டார்.
அஸ்வத்தாமன் குதிரையைத் தட்டி செலுத்தி சிதையருகே கொண்டுசென்று நிறுத்தினான். அதை சரிந்திருந்த தேவதாருவின் மரநுனியில் ஏறச்செய்தான். அது பலமுறை காலெடுத்துவைத்துத் தயங்கியது. குதிரையின் மொழியில் கனைத்துப்பேசி அதை மேலேறச் செய்தான். இழுத்துக்கட்டப்பட்ட கம்பிமேல் நடப்பதுபோல அது நான்கு குளம்புகளையும் நீள்கோட்டு வரிசை என மெல்ல எடுத்துவைத்து நடந்தது. சிதைக்குமேல் சென்று நின்றதும் தலை சிலுப்பி செருக்கடித்தது. மரத்தில் தொற்றி ஏறிய அஸ்வத்தாமன் குதிரையின் தோளிலும் புட்டத்திலும் இருந்த கட்டுகளை அவிழ்த்தபோது துரியோதனன் உடல் நழுவியதுபோல பக்கவாட்டில் சரிந்து மெல்ல இறங்கி சிதைமேல் அமைந்தது. மரங்கள் மெல்ல முனகியபடி அதைப் பெற்றுக்கொண்டன.
“கற்சிலைபோல் எடைகொண்டிருக்கிறார்” என்று கிருபர் சொன்னார். உடல் தடிகளின் இடைவெளியில் பொருந்தியது. அஸ்வத்தாமன் அரக்குக் குவைகளைக் கொண்டுவந்து உடலைச் சுற்றியும் உடல்மேலும் அமைத்தான். சிறுசுள்ளிகளையும் மரத்துண்டுகளையும் கொண்டுவந்து ஊடே செருகினான். “இவையே எரியுமா என்ன?” என்று கிருபர் ஐயத்துடன் கேட்டார். அஸ்வத்தாமன் “ஆம்” என்று மட்டும் மறுமொழி சொன்னான். சிதையை நன்கு ஒருக்கியபின் அஸ்வத்தாமன் இறங்கி கைகளை தட்டிக்கொண்டு “மூதரசர் வந்ததும் எரியேற்றிவிட வேண்டியதுதான்” என்றான். “நம் கடன்” என்று கிருபர் சொன்னார். அவர்கள் விலகிச்சென்று நின்றிருந்த சாலமரம் ஒன்றின் அடிவேரில் அமர்ந்தனர். கிருபர் “இதைப்போன்ற களைப்பை நான் உணர்ந்ததே இல்லை” என்றார். அஸ்வத்தாமன் அதற்கும் மறுமொழி சொல்லவில்லை. தன் கைகளை மார்புடன் கட்டிக்கொண்டான். அவர்கள் இருளை நோக்கியபடி அமர்ந்திருந்தனர்.
சிதைக்கு அப்பால் ஓர் அசைவை அஸ்வத்தாமன் கண்டான். எவரோ நடந்து வந்துகொண்டிருந்தார்கள். “கிருதவர்மரே, நீங்களா?” என்று அஸ்வத்தாமன் கேட்டான். அவ்வுருவம் மறுமொழி சொல்லவில்லை. அஸ்வத்தாமன் எழுந்து நின்று கூர்ந்து நோக்கியபோது அவன் உடல் மெய்ப்புகொண்டது. சீரான அடிகளுடன் துரியோதனன் அணுகி வந்தான். அவன் முன் வந்து நின்று புன்னகை செய்தான். அவனுடைய உடலின் உயரத்தால் அப்புன்னகை வானிலிருந்து எனத் தோன்றியது. “அரசே!” என்று அஸ்வத்தாமன் அழைத்தான். கிருபர் திடுக்கிட்டு எழுந்து “யார்?” என்றார். அவரும் துரியோதனனைக் கண்டுவிட்டார். “அரசர்!” என்றபடி அவர் பின்னடைந்தார். அவருடைய கை நீண்டு வந்து அஸ்வத்தாமன் தோளைப் பற்றிக்கொண்டபோது அவன் திடுக்கிட்டான். கிருபரின் கை அவன் உடல்மேல் அமர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தது.
துரியோதனன் “உத்தரபாஞ்சாலரே, இப்போர் முடியவில்லை” என்று சொன்னான். மயக்குற்றவனைப்போல அவனை நோக்கியபடி “ஆம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இதில் நாம் கொண்டிருந்த நம்பிக்கை மெய் என்றால் இது தொடர்ந்தாகவேண்டும். இறுதிக் கணம் வரை, இறுதி வீரன் எஞ்சுவது வரை நிகழவேண்டும்” என்று துரியோதனன் சொன்னான். “நமது படைகள் எழுக! நாளைப் புலரியில் நம்முடைய போர்ச்சங்கம் முழங்கியாக வேண்டும்.” அஸ்வத்தாமன் உணர்வெழுச்சியுடன் “முழங்கும், அரசே. நான் களம்செல்கிறேன். நான் உள்ளவரை இப்போர் முடிவடையாது…” என்றான். “உங்களுடன் ஆசிரியர் இருக்கிறார். அந்தணர் உடனிருக்கும் ஷத்ரியன் முழு அரசுக்கும் நிகரானவன் என்கின்றன மரபுகள்… கௌரவ அரசு இனி நீங்களே. பொருதுக, வெல்க” என்று துரியோதனன் சொன்னான். அஸ்வத்தாமன் “நான் என் கடமையைச் செய்து வெல்வேன். அரசே, என் குருதியால் இச்சொல்லை அளிக்கிறேன்” என்றான்.
துரியோதனன் கிருபரிடம் “ஆசிரியரே, என் இளவலும் வணக்கத்திற்குரிய ஆசிரியரின் மைந்தருமான அஸ்வத்தாமனை கௌரவ குடியின் முதன்மைப் படைத்தலைவராக நான் அறிவிக்கிறேன். என் சார்பில் நீர்முழுக்காட்டி அவரை அவ்வண்ணம் நிலைநிறுத்துக” என்றான். அஸ்வத்தாமன் நடுக்கத்துடன் நிற்க துரியோதனன் உரத்த குரலில் “இவரே என் படைத்தலைவர், என் கொடியை ஏந்தவேண்டியவர். தெய்வங்கள் அறிக! மூதாதையர் அறிக! பாரதவர்ஷம் அறிக!” என்றான். கிருபர் கைகூப்பினார். பின்னர் அங்குமிங்கும் நோக்கி தடுமாறியபின் நேராகச் சென்று அங்கே மண்ணில் திறந்துகிடந்த குவளை ஒன்றை எடுத்தார். அது ஒரு மண்டை ஓடு என எடுத்த பின்னரே அறிந்தார். ஓடிச்சென்று அப்பால் சரிந்தோடிய ஓடையில் இருந்து அதில் நீரை அள்ளிக் கொண்டுவந்தார். வரும் வழியிலேயே இரண்டு தளிரிலைகளைக் கிள்ளிக்கொண்டார்.
இலைகளை அவர் துரியோதனன் கைகளில் அளித்தார். நீர்மண்டையை தன் கையில் வைத்துக்கொண்டார். அஸ்வத்தாமன் கைகூப்பி மண்டியிட்டு அமர கிருபர் வேதச் சொல் ஓதி நீரை அஸ்வத்தாமன் தலைமேல் ஊற்றினார். துரியோதனன் அவ்விலைகளை அஸ்வத்தாமனின் தலையில் சூட்டினான். “இதோ பரத்வாஜகுலத்தவரும் துரோணரின் மைந்தரும் உத்தரபாஞ்சாலத்தின் அரசருமாகிய அஸ்வத்தாமனை என் படைத்தலைவராக நிறுத்துகிறேன். வான்கீழ் இது நிகழ்க! மண்மேல் இது நிகழ்க! விண்ணவரும் மண்ணவரும் இதை அறிக! அஸ்தினபுரியின் சார்பில் அஸ்வத்தாமனின் வாளும் சொல்லும் செயல்படுக! யயாதியின் குருதிமரபில் ஹஸ்தியின் அரசமரபில் குருவின் மணிமுடி அளிக்கும் அனைத்து தொல்லுரிமைகளும் அவரிடம் அமைக! ஆம், அவ்வாறே ஆகுக!” என்று துரியோதனன் சொன்னான். அஸ்வத்தாமன் மும்முறை தலைவணங்கினான்.
இருவரையும் நோக்கி புன்னகையுடன் கைகூப்பியபின் துரியோதனன் திரும்பிச் சென்றான். அவனுக்குரிய சீரான யானைநடை. எடைமிக்க அடிகள் ஓசையின்றி விழுந்தன. இருளுக்குள் கரைந்ததுபோல் அவன் மறைவதை அவர்கள் கூப்பிய கைகளுடன் நோக்கிக் கொண்டிருந்தனர். அவன் உருவம் மறைந்த பின்னர் அஸ்வத்தாமன் திரும்பி கிருபரிடம் “அவர் அரசர் என்றால்…” என்றபின் திடுக்கிட்டு எழுந்துகொண்டான். அருகே கிருபரும் எழுந்துகொண்டார். “ஒரு கனவு!” என்று அவர் சொன்னார். பின்னர் அச்சத்துடன் “உன் தலையில்… அது தளிரிலை அல்லவா?” என்றார். அஸ்வத்தாமன் தொட்டு நோக்கி “ஆம்” என்றான். “என் கனவில் அதை நான் உனக்குச் சூட்டினேன். அரசரின் ஆணைப்படி அஸ்தினபுரியின் முதன்மைப் படைத்தலைவராக உன்னை அமைத்தேன்” என்றார் கிருபர்.
திகைப்புடன் மீண்டும் தன் தலையிலிருந்த தளிரிலைகளைத் தொட்டுநோக்கிவிட்டு “அதே கனவை நானும் கண்டேன்…” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆனால் இதோ என் அருகே நின்றிருக்கும் செடியின் இலைகள்தான் இவை. நானே எடுத்துச் சூட்டிக்கொண்டேனா என்ன?” இருளை நோக்கியபின் “அது கனவென்றால்…” என்று கிருபர் தொடங்க “அது எவ்வண்ணமேனும் அமைக… நாம் அதை சொல்லால் சிதைக்கவேண்டியதில்லை” என்று அஸ்வத்தாமன் தடுத்தான். “ஆம், அரசரின் ஆணை. பாஞ்சாலனே, நீ இனி கௌரவப் படைத்தலைவன். இப்போரை நாம் முன்னெடுத்தாக வேண்டும். ஒருவர் எஞ்சினாலும்கூட போர் நிகழவேண்டும்…” என்றார் கிருபர். “ஆம், அது அவருடைய ஆணை” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.
அவர்கள் இருளை நோக்கிக்கொண்டு மீண்டும் அமர்ந்தனர். சில கணங்களில் கிருபரின் குறட்டையோசையை அஸ்வத்தாமன் கேட்டான். தானும் மெல்ல துயிலில் ஆழ்ந்தான். ஓர் அசைவுகூட இல்லாமல் வெட்டவெளியாக அரையிருள் பரவி விரிந்த குருக்ஷேத்ர நிலத்தை கண்டான். அதில் நிலையழிந்து அலைந்துகொண்டிருந்த ஓர் உருவம் சேய்மையிலேயே துரியோதனன் எனத் தெரிந்தது. “அரசே” என்று கூவியபடி அவன் அருகே ஓடிச்சென்றான். துரியோதனன் களத்தில் தன்னந்தனியாக நின்றிருந்தான். கைகளால் தலையில் அறைந்தபடியும் விண்ணோக்கி விரித்தபடியும் அவன் ஓசையில்லாமல் அழுதுகொண்டிருந்தான். “அரசே, அரசே!” என்று அஸ்வத்தாமன் அழைத்தான். “அரசே, என்னைப் பாருங்கள். அரசே, நான் உங்கள் ஆணையை கொண்டவன். உங்கள் படைத்தலைவன்! உங்கள் பொருட்டு களம்நின்று வெல்லவிருப்பவன்!”
ஆனால் துரியோதனன் அவனை அறியவில்லை. அந்தக் களத்தில் தன்னந்தனியாக நின்று அவன் நெஞ்சிலும் தோள்களிலும் மாறி மாறி அறைந்துகொண்டான். அந்தப் பெருந்துயரை கையசைவுகள் வழியாகவே அறியமுடிவதை எண்ணி அஸ்வத்தாமன் வியந்தான். அப்போதுதான் தான் அக்களத்தில் இல்லை என்பதை அவன் உணர்ந்தான். களத்தில் எஞ்சியிருந்தது துரியோதனன் மட்டுமே. அவன் இன்னொருவருக்காக தேடித் தவித்துக்கொண்டிருந்தான். தன் குரலை எவரேனும் கேட்கவேண்டும் என்று தவிப்பு கொண்டிருந்தான். அவன் உடல் அலைக்கழிவது அதனால்தான். சொல்லின்றி அந்த அலைபாயும் கைகளையும் தள்ளாடும் நடையையும் அஸ்வத்தாமன் நோக்கிக்கொண்டிருந்தான்.
கிருபர் எழுந்து ஏதோ சொல்வதைக் கேட்டு அஸ்வத்தாமன் கண்விழித்தான். அக்கனவின் உணர்வலைகள் நீடிக்க அவன் நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. கண்களிலிருந்து நீர் வழிந்து காதுகளை அடைந்திருந்தது. “என்ன?” என்றான். “கிருதவர்மன் வந்துகொண்டிருக்கிறான்” என்று கிருபர் சொன்னார். “எங்கே?” என்றபடி அஸ்வத்தாமன் எழுந்து நின்றான். பின்னர் சித்தம் தெளிவடைந்து “மூதரசரும் வருகிறாரா? தேரின் ஒலி கேட்கவில்லையே” என்றான். “அவன் மட்டும்தான் வருகிறான்” என்றார் கிருபர். அதற்குள் அஸ்வத்தாமன் கிருதவர்மனின் காலடிகளைக் கேட்கத்தொடங்கினான். “என்ன நடந்தது?” என்றான். அக்கேள்வியின் பொருளின்மையை உணர்ந்தும்கூட “அவர் ஏன் வரவில்லை?” என்றான்.
கிருதவர்மன் புதர்களுக்குள் இருந்து தோன்றினான். வலக்கையில் ஒரு கலத்தை ஏந்தியிருந்தான். அது மூடப்பட்டிருந்தது. இடைவெளியினூடாக புகை எழுந்தது. அருகணைந்து “பாஞ்சாலரே, ஆசிரியரே, கௌரவ மூதரசர் வரவில்லை. அவர் தொட்டு அளித்த அனலைக் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான். மூச்சிரைக்க நின்று “நான் மலையேறிச் சென்று அரசரின் குடிலை அடைந்தேன். அங்கே எவருமில்லை என்று கண்டேன். மென்மழை பொழிந்துகொண்டிருந்தது. வேறெந்த ஓசையுமில்லை. என்ன நிகழ்ந்தது என்று புரியாமல் நின்றேன். அரசரும் சஞ்சயனும் அரண்மனைக்கு மீண்டிருப்பார்கள் என தோன்றியதுமே அரசர் உயிர்நீத்திருக்கக்கூடுமோ என்றும் தோன்றியது. நெஞ்சு அதிர இருளில் நின்று விம்மினேன். பின்னர் அவ்வண்ணம் நிகழாது என உறுதிகொண்டேன். சஞ்சயன் உடனிருக்கிறான். அவன் சொல்லின் மானுட வடிவம். சொல்லைப்போல் துணை வேறில்லை. வழிகாட்டியும் ஆற்றுப்படுத்தியும் மாயம்காட்டியும் சொல் மானுடரை ஆட்கொள்கிறது… ஆனால் அவர்கள் எங்கே? எவரிடம் உசாவுவது என்று தெரியவில்லை” என்று கிருதவர்மன் தொடர்ந்தான்.
அங்கிருந்து திரும்புவதற்கு முன் காட்சிமாடத்திற்குச் சென்று நோக்கலாம் என்று முடிவுசெய்தேன். அங்கே அரசரும் சஞ்சயனும் இருந்தார்கள். நான் தொலைவிலேயே அங்கே ஒளியிருப்பதைக் கண்டேன். அருகே அணுகியபோது சஞ்சயனின் பேச்சுக்குரலைக் கேட்டேன். மேலும் அருகணைந்தபோது அவன் பேசுவதென்ன என்று புரிந்துகொண்டேன். அவன் அப்போதும் போர்நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டிருந்தான். நான் அருகே சென்று நின்றபோதுதான் என்னைக் கண்டான். திகைத்து என்னை நோக்கினான். நான் அவனிடம் பேசவிழைவதாகக் கைகாட்டினேன். அவன் அரசரிடம் சற்றுப் பொறுக்கும்படிச் சொல்லிவிட்டு என்னிடம் கையசைவால் உரையாடினான்.
அவனிடம் “குருக்ஷேத்ரத்தில் போர் முடிந்துவிட்டது, அரசர் வீழ்ந்துவிட்டார்” என விரல்மொழியால் சொன்னேன். சஞ்சயன் திகைப்புடன் “இல்லையே, அரசர் களம்நின்று பொருதிக்கொண்டிருக்கிறார். அதைத்தான் பேரரசரிடம் இதுவரை சொல்லிக்கொண்டிருந்தேன்!” என்றான். அவன் சித்தம் பிறழ்ந்துவிட்டது என்று நினைத்தேன். “நோக்குக” என அவன் ஆடியைச் சுட்டிக்காட்டினான். நான் அந்த விந்தையான பீதநிலத்து ஆடி வழியாக நோக்கினேன். ஆடிகளை பொருத்திக் காட்சியைக் குவித்து நோக்கியபோது இருண்ட களத்தை நோக்கமுடிந்தது. வானின் மெல்லொளியில் அது அசைவிலாத அலைகளாக விரிந்துகிடந்தது. அதில் சிறு நிழலுருவாக அரசர் அலைந்துகொண்டிருந்தார். அந்தச் சிற்றுருவிலேயே அவருடைய வெறியையும் துடிப்பையும் கண்டு நான் மெய்ப்பு கொண்டு உறைந்து நின்றுவிட்டேன்.
செத்து மீள்வதுபோல மெல்லமெல்லச் சித்தம் கொண்டேன். என் கண்களுக்கு முன் குருக்ஷேத்ரம் தெரிந்தது. உறைந்த சேற்றுக்கடல். அவ்வப்போது எழுந்த மின்னல்துடிப்புகளின் ஒளியில் தெளிவாகவே கண்டேன், அது அரசரின் உருவம்தான். கைகளை விரித்து எவரிடமோ அறைகூவுவதுபோல சுழன்றது… அதன்பின் தெளிந்தேன், அது அரசரின் பாவை என. அதை சஞ்சயனிடம் சொன்னேன். அவனால் நம்ப இயலவில்லை. மீளமீள நோக்கிக்கொண்டே இருந்தான். அரசரின் உடலை நாங்கள் கொண்டுவந்திருப்பதை சொன்னேன். பேரரசர் வந்து சிதையேற்றவேண்டும் என்று கோரினேன். அவன் குழம்பினான். அரசரிடம் அதை அப்போது கூற இயலாது என்றான். அவர் சொல்வதைக் கேளுங்கள் என சுட்டினான்.
பேரரசர் கைகளை அசைத்தபடி பேசிக்கொண்டிருந்தார். “சஞ்சயா, என்ன செய்கிறாய்? சொல். என்ன செய்கிறாய்? விரிவாகச் சொல். என் மைந்தனை எதிர்க்க எவரேனும் வந்தனரா? அவனை வெல்லும் ஆற்றல் எவருக்காவது இருப்பதாகத் தோன்றுகிறதா?” என்றார். அவருடைய குரல் அடைத்திருந்தது. சஞ்சயனிடம் பேசிப்பேசி அவர் குரல் தனக்குள் பேசுவதாகவே மாறிவிட்டிருந்தது. “அவனை வெல்ல தெய்வங்களாலும் இயலாது. இளைய யாதவனாலோ பீமனாலோ இயலாது…” என்று நகைத்தார். கைகளை தூக்கி ஆட்டி “அவன் வென்று நின்றிருக்கிறான். அக்களத்தில் அவன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். பிறர் அனைவரும் வீழ்ந்துவிட்டனர். வீழாதோர் ஓடிவிட்டனர். அக்களம் என் மைந்தனுக்குரியது! ஆம், அவனே வென்றான்!” என்றார். இருளில் அவர் பற்களின் வெண்மையை கண்டேன்.
நான் சஞ்சயனிடம் “அவரிடம் சொல்லியே ஆகவேண்டும்” என்றேன். “அவரை அக்கனவிலிருந்து நாம் எழுப்ப இயலாது. அதை தெய்வங்கள்தான் செய்யவேண்டும்” என்றான் சஞ்சயன். “ஆனால் எரிகடன் இயற்றுவது அவருடைய பொறுப்பு… அவருடைய உரிமை அது” என்று நான் சொன்னேன். “ஆம், ஆனால் அவர் சொற்கள் உருவாக்கும் கனவில் இருக்கிறார். அதிலிருந்து எளிதில் மீள இயலாது. அவராகவே மீளட்டும்…” என்று சஞ்சயன் சொன்னான். “அவர் அனலிடவேண்டும், அவ்வளவுதானே? அவர் கையால் அனல்தொட்டு அளிக்கச் சொல்கிறேன்” என்றான். அரசரின் வலப்பக்கம் இருந்த விளக்கை ஊதி அணைத்துவிட்டு மூதரசரிடம் “அரசே, இரு கைகளாலும் ஆடியைப் பற்றியிருக்கிறேன். வலப்பக்க விளக்கு அணைந்துவிட்டது. எரியூட்டுக” என்றான்.
அரசர் “விரைந்து நோக்கு… என் மைந்தனை நோக்கிக் கூறு!” என்றபடி இடப்பக்க விளக்கிலிருந்து ஒரு திரியை கொளுத்தி வலப்பக்கம் இருந்த விளக்கை கொளுத்தினார். அதை எடுத்துக்கொள்க என சஞ்சயன் என்னிடம் கைகளால் சொன்னான். நான் அதை எடுத்துக்கொண்டேன். “இங்கே எவர் வந்தது?” என்று அவர் கேட்டார். “இங்கே எவருமில்லை. ஆனால் போர்க்கதைகளைச் சொல்லுமிடத்தில் கந்தர்வர்கள் நடமாடுவதுண்டு” என்று சொன்ன சஞ்சயன் “அரசர் தன் கைகளால் அறைகூவியபடி களத்தைச் சுற்றி வருகிறார். மின்னலின் ஒளியில் அவருடைய முகத்தை காண்கிறேன். அதில் இவ்வுலகை இன்னும் நூறுமுறை அழிக்கும் வஞ்சினம் நிறைந்துள்ளது” என்று சொல்லத் தொடங்கினான். நான் பின்னடி எடுத்து வைத்து இருளுக்குள் நகர்ந்தேன்.
கிருதவர்மன் கையில் காட்டுக்கொடியில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்த கலத்திற்குள் எரிந்த சிற்றகலை எடுத்தான். அதன் சுடர் செம்மணி என ஒளிர்ந்து அப்பகுதியெங்கும் நிழல்களை எழுப்பியது. அவன் கையசைவுக்கு ஏற்ப நிழல்கள் சுழன்றன. “ஆம், சஞ்சயன் சொல்வதும் சரிதான். அவருடைய உள்ளத்தில் நிகழும் போரை நாம் ஒரு சொல்லால் மாற்றிவிடமுடியாது” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அரசரின் கைதொட்ட எரி. இதுவே சடங்குக்குப் போதும்” என்றபின் “வருக” என்றான். சிதை நோக்கிச் செல்லும்போது “ஒரு விழிபோலத் தோன்றுகிறது அச்சுடர்” என்றார் கிருபர். சிதையை அணுகியதும் கிருபர் “எவர் நெருப்பிடவேண்டும் என்று அரசரே வந்து கூறிவிட்டார். பாஞ்சாலனே, உன் பணி அது” என்றார். அஸ்வத்தாமன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.
“தன்னந்தனிமையில் எரிகிறான் அரசன்…” என்று கிருபர் சொன்னார். “நூறு உடன்பிறந்தாரும் ஆயிரம் மைந்தரும் பல்லாயிரம் உற்றவரும் கொண்டவன்.” கிருதவர்மன் “ஆம், ஆனால் எதிரிகளால் அவர் எரியூட்டப்படவில்லை” என்றான். சுடரை சிதையின் காலடியில் கொண்டு வைத்த அஸ்வத்தாமன் சிதையின் கால்தொட்டு வணங்கினான். கிருபர் செடிகளிலிருந்து பறித்துவந்து இலைகளில் பரப்பி தன்முன் வைத்த இலைத்தளிர்களை எடுத்து துரியோதனனின் காலடியில் இட்டு விழிமூடி வழிபட்டான். காடு ஓசையின்றி கன்னங்கரிய பாறைபோல் சூழ்ந்திருந்தது. சென்று அதில் முட்டிக்கொள்ளமுடியும் என்பதுபோல. “ஓர் உயிரசைவுகூட இல்லை” என்றார் கிருபர். “தெய்வங்களே, ஒரு சிறு உயிரோசையேனும் கேட்டால் நன்று.”
கிருதவர்மன் நெஞ்சில் கைவைத்து விம்மி அழுதுகொண்டிருந்தான். கிருபர் அமைதியில்லாமல் உடலை அசைத்துக்கொண்டிருந்தார். விழிதிறந்த அஸ்வத்தாமன் அகல்விளக்குடன் மும்முறை சுற்றிவந்து சிதைமேல் ஏறி அரக்குக்குவையில் நெருப்பைப் பொருத்தினான். இளநீலமாக அரக்கு பற்றிக்கொண்டது. உருகும் வாடையுடன் அனல் பரவி சுள்ளிகளை கவ்வியது. “எந்தையே! எந்தையே!” என்று கிருதவர்மன் நெஞ்சிலறைந்து வீறிட்டலறினான். “என் அரசே! என் இறையே!” கிருபர் அங்கு நிற்க முடியாமல் திரும்பி மரத்தடிக்குச் சென்றார். கிருதவர்மன் கால்மடித்து அமர்ந்து கைகளை விரித்து “விண்புகுக, தேவா! பெருந்தந்தையர் சென்றமையும் உலகில் வாழ்க! பிரஜாபதிகளுடன் அமர்க!” என்று கூவினான்.
எரி ஏறத்தொடங்கியதும் அஸ்வத்தாமன் சிதையிலிருந்து இறங்கி வணங்கிவிட்டு விலகினான். கிருபர் மீண்டும் சிதையருகே வந்து நின்றார். இருவரும் சென்று மீண்டும் மரத்தடியில் அமர்ந்தனர். எரி பெருகி எழுந்து கொழுந்தாடியது. அடிமரம் பற்றிக்கொண்டபோது அரக்கு உருகும் பச்சைவாடை எழுந்தது. மரம் உறுமியபடி வெடித்தது. அதன் பச்சைப்பட்டையில் நீலநிறமாக எழுந்த சுடர் கரி உமிழ்ந்தபடி தன்னை வானில் உதறிக்கொண்டது. அவர்களின் முகங்கள் எரியாலானவைபோலத் தெரிந்தன. கிருதவர்மன் கூவி அழுதபடி சிதையை நோக்கி நின்றான். பின்னர் தளர்ந்து ஒருக்களித்து சேற்றுப்பரப்பில் படுத்தான்.