காலகத்தை அணுகுந்தோறும் கிருபர் நடைதளர்ந்தார். அஸ்வத்தாமன் வேறெங்கோ உளம் அமைய நடந்துகொண்டிருக்க கிருதவர்மன் நின்று திரும்பி நோக்கி மூச்சிரைக்க “விசைகொள்க, ஆசிரியரே. இருட்டி வருகிறது. அங்கே ஒளியில்லையென்றால் சென்றும் பயனில்லை” என்றான். “இந்த இரவு இருண்டது. மழையும் பெய்யக்கூடும். அரசரின் உடல் அங்கே தனித்துக்கிடக்கிறது…” கிருபர் “இத்தனை களைப்பை நான் உணர்ந்ததே இல்லை” என்று முனகிக்கொண்டு மேலும் நடந்தார். காட்டுக்குள் புகுந்து ஓடையினூடாக மேலேறத் தொடங்கியபோது அவ்வப்போது நின்று நீர் அள்ளிக்குடித்தார். பாறைகளில் இருமுறை தளர்ந்து அமர்ந்தார். கிருதவர்மன் விரைந்து மேலேறி பின்னர் இறங்கி வந்து அவர் ஏறிவருவதற்காக நின்றான்.
அவர்கள் நெடும்பொழுதாகப் பேசவில்லை. கிருபரின் சொற்கள் கிருதவர்மனை பேச வைத்தன. அவன் “நான் விரைந்து அகன்றிருப்பேன். ஆனால் செல்லும்போது இதைப்போல பெருங்களைப்பை உணர்ந்தேன். வழியிலேயே இரண்டுமுறை அமர்ந்து துயின்றுவிட்டேன்” என்றான். கிருபர் “நான் துயிலவில்லை. சரத்வானின் குருநிலைக்கு செல்லலாம் என்று எண்ணி நடந்து அதை ஒழிந்து பாஞ்சாலம் செல்லலாம் என திரும்பினேன். பின்னர் அஸ்தினபுரிக்கே செல்லலாம் என சற்று நடந்தேன். இந்தப் பகல் முழுக்க நான் அலைந்துகொண்டுதான் இருந்தேன்” என்றார். கிருதவர்மன் “நானும் குழம்பியிருந்தேன். எங்கு செல்வதென்று தெரியவில்லை. துயிலில் என் உள்ளத்திற்குள் அலைந்துகொண்டிருந்தேன் போலும்” என்றான்.
அஸ்வத்தாமன் அவர்கள் உடன் வருவதையே அறியாதவனாகச் சென்றுகொண்டிருந்தான். அவன் முன்னால் சென்றுவிட்டதை கண்டு கிருதவர்மன் செல்வோம் என்று கைகாட்டிவிட்டு மேலே சென்றான். காலகம் இருள்கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது. வானில் முகில்கள் திரண்டு மூடியிருந்தன. மிகத் தொலைவில் இடியோசை கேட்டது. கிருபர் “இந்த இடியோசை வழக்கமாகக் கேட்பது போலில்லை. இது மாபெரும் சிம்மம் ஒன்றின் உறுமல் போலிருக்கிறது” என்றார். “அங்கே குருக்ஷேத்ரத்தில் மீண்டும் மழை தொடங்கியிருக்கக் கூடும்” என்று கிருதவர்மன் சொன்னான். கிருபர் “அங்கே பிதாமகர் பீஷ்மர் எஞ்சியிருக்கிறார்… ஊழின் வேடிக்கைதான் என்ன? இத்தனை பெரிய தண்டனையை அவருக்கு அளித்துள்ளது” என்றார்.
கிருதவர்மன் “அவ்வேடன் அவர்கள் சென்ற வழியைப்பற்றிச் சொன்னதைக் கொண்டு நோக்கினால் அவர்கள் பிதாமகர் பீஷ்மரிடம் வாழ்த்து பெறவே சென்றிருக்கிறார்கள்” என்றான். கிருபர் திகைத்து நின்று “அவரிடமா? அவர்களா?” என்றார். “அவர்கள் சென்றாகவேண்டும். குடிமூத்தார் என எஞ்சியிருப்பவர் அவரே. அவர் வாழ்த்தாவிட்டால் அவர்களால் முடிசூட முடியாது…” என்றான் கிருதவர்மன். கிருபர் “அவர் வாழ்த்துவாரா என்ன?” என்றார். “வாழ்த்துவார்… ஆசிரியரே, பிதாமகர் பீஷ்மர் இதுவரை பேணியதும் இயற்றியதும் என்ன? குடிநெறியை மட்டும்தானே? குடிநெறிப்படி மூத்த கௌரவரே அரசர் என்று அவர் எண்ணினார். ஆகவே அவரை அரசராக்கும் பொருட்டு களம்நின்றார். அதே குடிநெறி சொல்வதென்ன? வென்று எழுபவனே அரசன் என்று அல்லவா? அனைத்துக் குடிநெறிகளுக்கும் அடியிலிருப்பது கான்நெறி மட்டும்தானே?” என்றான் கிருதவர்மன்.
“கான்நெறி என்பது குருதிவழியாலானது. இப்புவியில் அனைத்தும் மாறுபடும். மாறாதது குருதி ஒன்றே. ஆகவேதான் நிலைக்கோளை முதன்மையெனக் கருதிய முன்னோர் குருதியை நெறியெனக் கொண்டனர்” என்று கிருதவர்மன் தொடர்ந்தான். “யுதிஷ்டிரனை அவர் வாழ்த்தாவிட்டால் என்ன ஆகும்? வேறெவரோ அஸ்தினபுரியை ஆட்சி செய்வார்கள். அவருடைய குருதி அங்கே முடிசூடாமலாகும். அதை அவர் விழைவாரா என்ன? இத்தனை நீண்ட வாழ்நாளில் அவர் செய்த தவம் என்ன? தன் குருதியின்பொருட்டு நிலைகொள்வது… பிதாமகர், ஆம் பிதாமகர். ஆனால் பிதாமகர் அன்றி வேறெவரும் அல்ல” என்று கிருதவர்மன் இகழ்ச்சியுடன் சொன்னான். “என்றேனும் அவரிடம் கேட்கவேண்டுமென எண்ணினேன். அஸ்தினபுரியின் மக்களுக்கு சந்தனுவின் குருதியை விட பிறிதொரு குருதிவழியின் அரசன் நல்லாட்சி கொடுப்பான் என்றால் அவர் ஏற்பாரா என்று… அக்கணமே என்னை கொன்றிடுவார் என்பதில் ஐயமில்லை.” கிருபர் அதை அவரே உணர்ந்திருந்தார் என்பதை அச்சொற்களைச் செவிகொண்டதும் உணர்ந்தார். களைப்பு தாளாமல் மரக்கிளை ஒன்றைப் பற்றியபடி நின்றார். அவர் உடல் எடைதாளாததுபோல் தள்ளாடியது. கிருதவர்மன் “அணுகிவிட்டோம்” என்றான்.
அவர்கள் புதர்களுக்குள் இருந்து வெளிவந்தபோது சுனையின் ஒளி முதலில் கண்களுக்குப்பட்டது. கரை அங்கே மானுடர் எவருமில்லாததுபோலக் காட்டியது. அங்கே தலைக்குமேல் குரங்குகள் நிறைந்திருந்தன. அவை தாவியும் சுழன்றும் கூச்சலிட்டன. “இத்தனை குரங்குகள் எப்படி வந்தன? அவை நீர் அருந்தும் சுனையா இது?” என்று கிருபர் கேட்டார். “அங்கே காட்டுக்குள் ஏராளமான நீர்ச்சுனைகள் உள்ளன” என்றான் கிருதவர்மன். “இவை இங்கே என்ன செய்கின்றன?” என்று கிருபர் வியந்தார். அவர்கள் சுனை நோக்கிச் சென்றபோது கிருதவர்மன் “எங்கே அரசர்?” என்றான். “வேடன் பிழையாக ஏதேனும் கூறியிருக்கக்கூடும்… என்ன இருந்தாலும் அவன் காட்டாளன்” என்று கிருபர் சொன்னார். அஸ்வத்தாமன் சுட்டிக்காட்ட அங்கே துரியோதனன் உடலை கண்டு அவர் சொல்லடங்கினார்.
துரியோதனன் உடல் புல் நடுவே புல்லால் பாதி மூடப்பட்டதுபோல கிடந்தது. “அதற்குள் இத்தனை புல் ஏறிவிட்டிருக்கிறது” என்று கிருபர் சொன்னார். “இங்கே புல் இருப்பதை சென்றமுறை நோக்கவே இல்லை.” கிருதவர்மன் பற்களால் உதட்டை மடித்துக் கடித்தபடி இடையில் கையூன்றி துரியோதனனை நோக்கி நின்றான். கிருபர் விழிசுருக்கி கூர்ந்து நோக்க கிருதவர்மன் செருமலோசை எழுப்பி “அவர்தான்” என்றான். அவர்களைக் கண்டதும் மேலே குரங்குகள் கூச்சலிட்டன. ஓசையுடன் ஒரு பெரிய குரங்கு மண்ணில் குதித்து நான்கு கால்களில் வந்து அவர்களை மறித்தது. மேலும் மேலும் குரங்குகள் வந்து அவர்களை மறித்தன. குரங்குகள் பெருகிக்கொண்டே இருந்தன. “அவை காவலிருக்கின்றன” என்று கிருபர் சொன்னார். “அவை அரசருக்கு பணிவிடை செய்கின்றன.” குரங்குகளின் வால்கள் செங்குத்தாக எழுந்து நாணல்முனைகள் என அசைந்தன. அவற்றின் சிறுமணிக்கண்கள் அவர்களை சிமிட்டல்களால் நோக்கின.
அஸ்வத்தாமன் தன் தோளிலிருந்த சிறிய மூங்கில் வில்லை எடுத்து நிலத்தில் வைத்துவிட்டு முழங்காலிட்டு வணங்கினான். கையசைவால் அக்குரங்குகளுடன் பேசினான். தாட்டான் குரங்கு கண்களைச் சிமிட்டியபடியும் தலைசரித்தும் அவன் சொல்வதை உற்றறிந்தது. கைகளால் தானும் பேசியது. வாலசைவாலும் காதசைவாலும் தன் குடியுடன் பேசிக்கொண்டது. அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் விசைகொண்டு மெல்ல அமைந்தது. பின்னர் மெல்லிய உறுமலுடன் தாட்டான் திரும்பிச்செல்ல மற்ற குரங்குகள் அதைத் தொடர்ந்துசென்றன. கிருதவர்மன் எழுந்து துரியோதனனின் உடலை அணுகினான். அருகணையும்தோறும் அரசவைக்குள் நுழைபவனின் சீர்நடைகொண்டான். துரியோதனன் உடல் மண்ணை கைவிரித்து அள்ளி அணைத்துப் புதைந்து கிடந்தது. அஸ்வத்தாமன் அதன் அருகே சென்று அதன் கால்களைத் தொட்டுச் சென்னி சூடினான். கிருதவர்மன் அருகணைந்து தானும் வணங்கினான். கிருபர் கைகளை கோத்து அருகே நின்றார்.
துரியோதனனின் உடல் அருகே மண்டியிட்டமர்ந்து அவ்வுடலை அஸ்வத்தாமன் மெல்லப் புரட்டினான். அவனால் அந்த பேருடலின் எடையை புரட்ட முடியவில்லை. கிருதவர்மன் அமர்ந்து அவனுக்கு உதவினான். துரியோதனனின் உடல் குளிர்ந்துவிட்டிருந்தது. உடல் மல்லாந்து படுத்தபோது மண்ணை தழுவியதுபோல் விரிந்திருந்த கைகள் அனைத்தையும் விட்டவைபோல் மல்லாந்தன. விண்ணோக்கிய முகத்தில் உதடுகள் ஒரு சொல்லில் என நிலைத்திருந்தன. விழிகள் மூடியிருந்தபோதிலும் முகத்தில் புன்னகை இருப்பதுபோலத் தோன்றியது. விரிந்த நெஞ்சும் திரண்ட பெருந்தோள்களுமாக அவன் உடல் கல்லில் வடித்த சிலை போன்றிருந்தது. கிருபர் அவன் முகத்தையும் நெஞ்சையும் மாறிமாறி நோக்கினார். “எவரெவரையோ அழகன் என்கிறார்களே என என்றும் நான் எண்ணியதுண்டு. மூத்த கௌரவர் அரியணையில் அமர்ந்திருக்கும்போது விண்ணமைந்த இந்திரனும் வந்து பணியும் பேரழகு கொண்டிருப்பார்” என்றார்.
அவர் முகம் மலர்ந்தது. பற்கள் அந்திக்கருக்கில் வெளித்தெரிந்தன. சிறுவர்களுக்குரிய பரபரக்கும் குரலில் “அவர் தலையில் அமைந்ததுபோல் மணிமுடி வேறெங்கும் சுடர்ந்ததில்லை. சற்றேனும் நிகராக மணிமுடி ஒளிகொண்ட தலை என்று நான் கண்டது இந்திரப்பிரஸ்தத்தின் அரசி அரியணை அமர்ந்தபோது மட்டுமே. அரசருக்குரிய அணிகளும் செங்கோலும் அவரிடம் திகழ்ந்ததுபோல் எங்கும் சிறந்ததில்லை. ஒவ்வொன்றும் அவர் உடலுக்கென்றே வடிக்கப்பட்டவைபோல் தோன்றும். ஆகவே அவர் மணிமுடியும் செங்கோலுமின்றி தோன்றுகையில் அவை குறைந்ததுபோலவே என் உள்ளம் எண்ணிக்கொள்ளும்” என்றார். சுற்றி வந்து துரியோதனன் உடலை நோக்கி “இப்போது மணிமுடி இல்லை. செங்கோல் இல்லை. அரசணிகள் ஏதுமில்லை. ஆனால் மும்முடிசூடி வெண்குடைக்குக் கீழே அமர்ந்திருப்பதுபோலவே தோன்றுகிறார்” என்றார்.
கிருதவர்மன் “நீங்கள் கண்ட அரசர் பிறிதொருவர், ஆசிரியரே” என்றான். “நான் கண்ட அரசர் அரியணை அமர்ந்தவர் அல்ல. அரியணையில் அமர்ந்திருக்கையில் அவர் என்னிடமிருந்து அகன்று ஆலயக் கருவறையில் அமர்ந்த தெய்வமெனத் தோன்றுவார். அவர் குரு, அவரே ஹஸ்தி, அவர் யயாதியின் உருவம். நான் எளிய குடியினன். தொழுது அவை நின்றாக வேண்டியவன். நான் அணுக்கமெனக் கண்ட அரசர் நான் அவரை சந்தித்த நாளில் அனைத்தும் பேசி முடித்தபின் எழுந்து கூட்டமாக விருந்தறைக்குச் செல்லும்போது அங்கரிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கையில் இயல்பாக என் கைகளைப் பற்றிக்கொண்டவர். அத்தருணத்தில் அரசர்கள் அமைந்த அந்த அவையில் நாடற்ற யாதவனாகிய என் இடம் என்ன, விருந்தமர்வில் என்னை எங்கே அமரச்செய்வார்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன்… ஒரு தொடுகை. நான் அவருடைய இளையோன் என அக்கணம் உறுதி அடைந்தேன். உணவறைக்குள் புகுந்தபோது அதை கௌரவர் நூற்றுவரும் அறிந்திருந்தனர். கிருபரே, அன்று அந்த ஊட்டறையில் நான் விருந்தளிப்போனாக அனைவரையும் உபசரித்துக் கொண்டிருந்தேன்.”
கிளர்ச்சியுற்ற குரலில் கிருதவர்மன் சொன்னான். “அவருடைய அன்பு அவரால் வெளிப்படுத்தப்படுவது அல்ல. அவராகவே திகழ்வது அது. அவர் அரசர் அல்ல, அவர் பெருந்தந்தை. கௌரவ நூற்றுவருக்கும் அவர் மைந்தருக்கும் எனக்கும் என்னைப்போல் பல்லாயிரவருக்கும் அவர் தந்தை மட்டுமே. பாண்டவ மைந்தருக்கும் அவரே முதற்தந்தை. விருந்தமர்வில் பேசிச்சிரித்து உண்டுகொண்டிருக்கையில் மிக இயல்பாக பெரிய ஊன்துண்டு ஒன்றை எடுத்து என் தாலத்தில் வைப்பார். அவ்வாறு அவருடைய கை செய்வதை அவரே அறிந்திருக்க மாட்டார். ஓரவிழியால் அவர் முகத்தை நோக்குவேன். அப்போது…” கிருதவர்மன் குரல் உடைந்து உதடுகளை இறுக்கிக்கொண்டான். மூச்சுத்திணற “அவர் முகத்தின் அழகு!” என்றான். பின் இரு கைகளையும் விரித்து வெடித்தெழும் குரலில் “என் அரசே! என் தெய்வமே, எத்தனை வீண்சொற்களால் இத்துயரை நான் அப்பால் விலக்கினேன். என் தந்தையே, இப்புவியில் இனியொருவரை என்னவர் என்று சொல்வேனா?” என்று கூவி கதறி அழுதான். தலையில் அறைந்தபடி கால் தளர்ந்து அமர்ந்து “இப்பழிக்கு இப்புவியை ஏழுமுறை எரித்தாலும் கலி தீர்வேனா? இதன்பொருட்டு மூன்று தெய்வங்கள் மீது காறி உமிழ்ந்தாலும் அடங்குவேனா?” என்று கூவினான்.
கிருபர் கண்ணீருடன் சென்று சரிந்த மரத்தின்மேல் அமர்ந்தார். அவர் உடல் உலுக்கி உலுக்கி அதிர்ந்தது. அஸ்வத்தாமன் வறண்ட விழிகளுடன் இறுகிய முகத்துடன் துரியோதனனின் உடலை நோக்கிக்கொண்டு நின்றான். அவர்களின் அழுகையோசை அவனைச் சூழ்ந்து ஒலித்தது. குரங்குகள் மரக்கிளைகளில் செறிந்து அமர்ந்து அவர்களை நோக்கிக்கொண்டிருந்தன. விசும்பல்களும் விம்மல்களுமாக கிருதவர்மன் மீண்டான். கிருபர் கண்களை அழுந்தத் துடைத்து தலைகுனிந்து அமர்ந்திருந்தார். காற்று அவர்களின் ஆடைகளை அலையச்செய்தபடி சுழன்று வீசியது. சுனைநீரில் ஒளி அடங்கிக்கொண்டிருந்தது. கிருதவர்மன் நீளொலியில் மூச்சிழுத்து எழுந்து நின்றான். பற்களைக் கடித்து சிரிப்பு போன்ற முகநடிப்புடன் “ஒரு கணக்கில் நன்று. இங்கே அனைத்தும் முடிந்தது. இனி அவரை விண்ணில் சந்திப்போம்” என்றான்.
“இங்கே இவ்வண்ணம் அரசரின் உடல் மண்ணுறலாகாது…” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “நம் கடன் அரசனுக்குரிய முறையில் ஈமச்சடங்குகள் செய்வதே… அரசர் குருக்ஷேத்ரத்தில் அவருடைய உடன்பிறந்தார் எரிந்த இடுகாட்டிலேயே விண்ணுக்கு எழவேண்டும்…” அச்சொற்களால் அவர்கள் உணர்வெழுச்சிகளிலிருந்து மீண்டனர். கிருதவர்மன் துரியோதனனின் உடலை நோக்கிவிட்டு “ஆனால்” என்று தயங்க “கீழே சென்றால் ஏதேனும் வழிதவறிய புரவிகளைக் கண்டடைய முடியும்… அதுவரை அரசரின் உடலை நாம் காவடிகட்டிச் சுமந்துகொண்டு செல்வோம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “நாம் அத்தனை தொலைவு…” என்று கிருதவர்மன் தயங்க கிருபர் “செல்ல முடியும்… வழி இறக்கம்தான். செல்வோம்” என்றார்.
அஸ்வத்தாமன் “காட்டிலிருந்து கொடிகளை திரட்டி வருக, யாதவரே” என்றான். கிருபரும் கிருதவர்மனும் காட்டுக்குள் சென்று வலுவான கொடிகளை இடையிலிருந்த கத்தியால் வெட்டிக் கொண்டுவந்தார்கள். அச்செயலால் அவர்கள் முற்றிலும் இயல்புநிலை அடைந்தனர். அஸ்வத்தாமன் மரக்கிளைகளை வெட்டி இடைக்கிளை தறித்து நீண்ட இணைக்கழிகளாக ஆக்கினான். கொடிகளை கொண்டுவந்ததும் அவற்றை சேர்த்துக்கட்டி தூளிபோல செய்தான். தூளியின் இரு முனைகளையும் இரு கழிகளில் கட்டியபின் அதை நிலத்தில் விரித்து “அரசரை தூக்குங்கள், ஆசிரியரே” என்றான். கிருபர் ஒருகணம் தயங்கியபின் வந்து துரியோதனனின் கால்களைப் பற்றினார். கிருதவர்மனும் அஸ்வத்தாமனும் அவன் இரு தோள்களையும் பிடித்தனர். மெல்லத் தூக்கி அவ்வுடலை கொடிப்பின்னல் பரப்பின்மேல் படுக்கச் செய்தனர். அதற்குள் அவர்கள் மூச்சிரைக்கத் தொடங்கிவிட்டிருந்தனர்.
“அரசர் எடைகொண்டவர், மேலும் எடை மிகுந்திருக்கிறார்” என்று கிருதவர்மன் சொன்னான். “பாரதவர்ஷத்திலேயே உயரமானவர் அங்கர் என்றும் எடைமிக்கவர் அரசர் என்றும் சொல்லப்படுவதுண்டு.” “அவருடைய எடை ஊன்கொழுப்பால் அல்ல, எலும்புகளால் ஆனது என்பார்கள். மானுட உடலில் இருநூற்றாறு எலும்புகள் உள்ளன என்பது மருத்துவநூலின் கூற்று. அரசரின் உடலில் ஒன்பது எலும்புகள் கூடுதலாக உள்ளன என்பார்கள். அவருடைய எலும்புகள் இரும்புபோல் எடைமிக்கவையும்கூட.” கிருபர் “அவர் பிறந்தபோதே வாய்நிறைய பற்கள் கொண்டிருந்தார். அது அசுர இலக்கணம் என்று சூதர்கள் அன்று பாடிப்பரப்பியிருக்கிறார்கள்” என்றார். கிருதவர்மன் “நான் மெய்யாகவே ஐயுறுகிறேன் ஆசிரியரே, அசுரக்குருதி இல்லாத பேரரசர்கள் உண்டா?” என்றான். கிருபர் “இல்லை என்றே நம் குலக்கதைகள் சொல்கின்றன” என்றார். அஸ்வத்தாமன் இணைக்கிளைகளின் முன்பக்கம் சென்று நின்று “தூக்குங்கள்” என்றான். கிருபர் பின்பக்கம் இரு கிளைகளையும் பற்றிக்கொண்டு “உம்” என்றார். இருவரும் ஒரே மூச்சொலியுடன் கிளைமுனைகளை தூக்கி தோளில் வைத்துக்கொண்டார்கள்.
காட்டினூடாக அவர்கள் பேசாமல் நடந்தனர். மலையிறங்கிச் செல்லும்போது அவர்கள் களைத்து வியர்வை வழிய நடைதளர்ந்திருந்தனர். “சாலையில் ஏதேனும் புரவியை கண்டடைந்தே தீரவேண்டும். இல்லையேல் நம்மால் குருக்ஷேத்ரம் வரை செல்லமுடியாமலாகும்” என்று கிருதவர்மன் சொன்னான். “வழியில் அவர்களின் ஒற்றர்கள் இருப்பார்கள். எந்தப் போரிலும் களம்விட்டு ஓடிப்போன கோழைகள் அப்பகுதியில் மறைந்திருப்பார்கள். அரசரிடம் நகையோ செல்வமோ இருக்குமென எண்ணி அவர்கள் நம்மைத் தாக்கவும்கூடும்.” அஸ்வத்தாமன் “நான் வரும்போதே சில உதிரிக்குதிரைகளை பார்த்தேன். அவை களத்திலிருந்து புண்பட்டு தப்பிவந்தவை. காட்டில் மேய்ந்தும் துயின்றும் உடல்நிலை மீண்டவை. அவற்றை நம்மால் பிடிக்கமுடியும்” என்றான்.
அவர்கள் இரண்டு இடங்களில் அமர்ந்து ஓய்வெடுத்து ஆள்மாற்றி மீண்டும் கிளம்பிச் சென்றனர். காட்டுக்குள் செல்லும்போதே இருட்டாகிவிட்டது. இருண்ட காட்டில் சீவிடுகளின் ஓசை நிறைந்திருந்தது. காட்டின் ஆழத்திலிருந்து நீராவி வெம்மை எழுந்தது. “ஊன்விலங்கின் வாயில் இருந்து எழுவதுபோன்ற வெக்கையும் நாற்றமும்” என்று கிருபர் சொன்னார். “இன்று மழை எழக்கூடும்… வானம் பொருமிக்கொண்டே இருக்கிறது” என்றான் கிருதவர்மன். துரியோதனனின் உடல் எடை மிகுந்தபடியே வருவதுபோலிருந்தது. “மெய்யாகவே எடை கூடிவருகிறதா?” என்றான் கிருதவர்மன். “அவர் உடல்மேல் உடன்பிறந்தார் வந்தமையக்கூடும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். கிருதவர்மன் அதைக் கேட்டு திடுக்கிட்டான். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. துரியோதனன் வெறும் எடையாகவே இருப்புணர்த்தினான்.
“நிறைவேறாத விழைவுகளுடன் இறந்தவர்களின் உடல் எடையேறிக்கொண்டே செல்லும் என்பார்கள்” என்று கிருதவர்மன் எவரிடம் என்றில்லாமல் சொன்னான். “அவர்கள் இறந்ததுமே அந்த விழைவு பருப்பொருளாக மாறத்தொடங்குகிறது. அதன் எடையும் அவர்களின் உடலில் கூடுகிறது. அவ்விழைவு எத்தனை ஆழமானதோ அந்த அளவுக்கு அது எடைகொள்கிறது என்று என் மூதன்னை சொல்வதுண்டு.” அவன் மேலும் பேசவிழைந்தான். “யாதவனால் கொல்லப்பட்ட என் தோழன் சததன்வாவின் உடல் இவ்வண்ணம் எடை ஏறிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் அதை நால்வரால் சுமக்க முடியாமலாயிற்று. அதை எண்மர் சுமந்தனர். சிதையேற்றியபோது இருமடங்கு அரக்கும் விறகும் தேவை என்றனர் சுடலையர். ஆயினும் மறுநாள் சென்று நோக்கியபோது நெஞ்சு எரியாமல் எஞ்சியிருந்தது. அச்சிதையின் அருகே நின்று எழுவர் அவன் உள்ளத்தின் விழைவுக்குப் பொறுப்பேற்போம் என வஞ்சினம் உரைத்த பின்னர் மீண்டும் தனியாகச் சிதைகூட்டி அந்நெஞ்சை எரியூட்டியபோதே அவன் சாம்பலானான்.”
அவர்கள் இருவரும் அதைக் கேட்டதாக தெரியவில்லை. இருளுக்குள் அவர்கள் செல்லும் காலடியோசைகள் மட்டும் கேட்டன. புதர்களுக்குள் மின்மினிகள் ஒளிவிட்டன. நோக்காதபோது நீலமென்றும் நோக்கியபோது செந்நிறம் என்றும் அவ்வப்போது இளம்பச்சை என்றும் அவை ஒளிமாறின. கிருதவர்மன் பேசவிரும்பினான். “சததன்வா இறந்த அன்றும் காடு மின்மினிகளால் நிறைந்திருந்தது… அவை உடலில் இருந்து எஞ்சும் உயிர் என்பார்கள்” என்று அவன் சொன்னான். “அவை இங்கே மேலும் வாழ விழைகின்றன. இறந்தவர்கள் இருப்பவர்களின் விழிகளுக்குள் ஒளியாகக் குடியேறினார்கள் என்றால் அவை அணைந்துவிடுகின்றன.” கிருபர் சலிப்புடன் “போதும்” என்றார். “நாம் ஏன் அவர் நிறைவுறாது மாண்டார் என எண்ணிக்கொள்ளவேண்டும்? அவர் இங்கே அரசர் என வாழ்ந்தார். அரசருக்குரியவற்றைச் செய்தார். அவ்வகையில் நிறைவுற்றார்” என்றார்.
“அவர் அரசருக்குரியமுறையில் கொல்லப்படவில்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான். அதுவரை அவன் பேசாமல் வந்தமையால் அவன் குரல் அவர்களை திடுக்கிடச்செய்தது. அங்கே மூன்றாவதாக ஒருவர் எழுந்து ஏதோ சொன்னதைப்போல. “அவர் தொடையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். நெறிமீறல் மட்டுமல்ல, அது கீழ்மக்களுக்குரிய இறப்பு.” கிருபர் “ஆம்” என்றார். “தலை உடைந்து இறப்பது உத்தமம். நெஞ்சும் தோளும் உடைந்து இறப்பது மத்திமம். இடைக்குக் கீழே உடைந்து இறப்பது அதமம் என்று கொள்ளப்படும்.” அஸ்வத்தாமன் “அங்கே நிகழ்ந்தது என்ன என்று வேடனின் சொற்களிலிருந்தே என்னால் உய்த்தறிய முடிகிறது. அவர்கள் அரசரை அறைகூவினார்கள். அவர்களில் எவரையேனும் அவர் வென்றால் முழு நாட்டையும் திருப்பி அளிப்பதாக யுதிஷ்டிரன் சொன்னார். ஆனால் அரசர் பீமனையே தெரிவுசெய்தார். பீமன் அவரை எந்நிலையிலும் வெல்லமுடியாது. இளைய யாதவர் கைகாட்ட அவன் நெறிகளை மீறி அவரைக் கொன்றான்” என்றான்.
“குருக்ஷேத்ரத்தில் அவர்களின் வெற்றிகள் அனைத்துமே நெறிமீறி அடைந்தவையே” என்று உரத்த குரலில் கிருதவர்மன் சொன்னான். “பீஷ்மரை, துரோணரை, கர்ணனை… அனைவரையும் அவர்கள் அவ்வண்ணமே வீழ்த்தினர். ஆகவே அரசரை அவர்கள் அவ்வாறு வீழ்த்தியதில் வியப்பில்லை.” அஸ்வத்தாமன் “அவர்கள் தங்களை மேன்மக்கள் என எண்ணிக்கொள்கிறார்கள். கீழ்மக்கள் என தங்களை கருதுவோர் சற்றேனும் மேம்படுத்திக்கொள்ள முயல்கையில் மேன்மக்கள் என ஆணவம் கொண்டவர்கள் இவ்வண்ணம் கீழிறங்குகிறார்கள்” என்றான். காறி உமிழ்ந்து “வீணர்கள்” என்றான். கிருதவர்மன் “அரசரின் இறுதி எண்ணம் எதுவாக இருக்கும்? நெறிமீறி தொடையில் அறைந்து அவரை வீழ்த்தியபோது ஒரு சிறு ஒலிகூட இல்லாமல் அவர் வீழ்ந்து மறைந்தார் என்று வேடன் சொன்னான். அவர் எண்ணியது என்னவாக இருந்திருக்கும்?” என்றான். கிருபர் “அவர் அஸ்தினபுரி என்னும் சொல்லாக தன் அகம் நிலைக்க உயிர் துறந்திருப்பார். அவரைப் புரட்டிப்போட்டபோது உதடுகளை நோக்கினேன். அவை அஸ்தினபுரி என்று சொல்வதுபோலத் தோன்றியது” என்றார்.
அச்சொற்கள் அவர்களை மீண்டும் சொல்லழியச் செய்தன. அவர்கள் மலையிறங்கும்தோறும் காடெங்கும் மின்மினிகளைக் கண்டார்கள். இருள் செறிவடையுந்தோறும் அவை பெருகிப்பெருகி வந்தன. மலையிலிருந்து நோக்கியபோது கீழே காட்டுக்குள் செந்நிறத்தில் எரி எழுந்ததுபோலவே தோன்றியது. சற்றே நிறம்மாறி அது இளநீலமும் மென்பச்சையும் ஆகியது. “மின்மினிகளா?” என்று கிருபர் கேட்டார். கிருதவர்மன் “ஆம், அவை கோடிக்கணக்கில் இருக்குமென தோன்றுகிறது” என்று சொன்னான். “யுகங்கள் தோறும் குருக்ஷேத்ரத்தில் போர் நிகழ்ந்துகொண்டே இருந்திருக்கிறது.” அவர்கள் மின்மினிகளின் படலத்திற்குள் நுழைந்தனர். அனைத்து இலைகளும் அகலில் சுடர் என மின்மினிகளை ஏந்தியிருந்தன. அவை இருளில் கோடுகளாக வளையங்களாகச் சுழிகளாக பறந்தன.
“அவை ஏதோ சொல்கின்றன” என்று கிருதவர்மன் சொன்னான். “அவை காட்டும் ஒளிச்செய்கை என்ன என்று நாம் அறிந்திருக்கவில்லை.” கிருபர் “சில சுழற்சிகள் நம் செய்கைமொழியில் பொருள்கொள்வனபோலத் தெரிகின்றன” என்றார். “இதோ, திரள்க என்னும் சொல்.” அவர் மேலும் அச்செய்கைகளை படித்தார். “நிலைகொள்க. ஒன்றுகூடுக. வடக்கே செல்க!” கிருதவர்மன் “இவை நாம் அளிக்கும் பொருள்கள், ஆசிரியரே. இவற்றுக்கு அவற்றின் மொழியில் என்ன பொருள்…” என்றான். ஆனால் கிருபர் அக்காட்சியால் சற்றே பித்தெழுந்தவர் போலிருந்தார். “இங்கிருக்கிறோம்… இங்கே திரண்டிருக்கிறோம்” என்று அவர் அச்செய்கைகளை நோக்கியபடிக் கூவினார். பின்னர் “அது கார்த்தவீரியனின் அடையாளம்! மெய்யாகவே அதுதான்… கார்த்தவீரியனின் அடையாளம்” என்றார். “அப்பால் ராவணமகாப்பிரபு… அவருடன் கும்பகர்ணனும் இந்திரஜித்தும்… அதோ கிழக்கே கிழக்கே நோக்குக, அது ஹிரணியகசிபு… அருகே ஹிரண்யாக்ஷர், தெற்கே விருத்திரர், சூரபதுமர்… அனைவரும் இங்குதான் இருக்கிறார்கள். நரகாசுரர், மகிஷாசுரர்…”
“எங்கே?” என்று பதற்றத்துடன் கிருதவர்மன் கேட்டான். “இங்கே இதோ இந்த ஒளிச்சுழலல்களை சொற்களாக படித்தறியுங்கள். அதோ தாரகர், ரக்தபீஜர்…” என்று கிருபர் கூவினார். அஸ்வத்தாமன் “எடை மிகுந்துவிட்டது. என் எலும்புகள் உடைவது போலுள்ளன…” என்றான். கிருபர் “நான் தூக்கிக்கொள்கிறேன்” என்று காவடியை வாங்கிக்கொண்டார். அஸ்வத்தாமன் சென்று அருகில் ஓடிய ஓடையில் நீர் அள்ளிக் குடித்தான். அப்பால் இரு மின்மினிகள் ஒளிகொண்டன. கனைப்பொலி எழுந்தது. அஸ்வத்தாமன் தானும் கனைப்பொலி எழுப்பினான். அந்தப் புரவி ஓடையை கடந்து அவன் அருகே வந்து செருக்கடித்தது. “சற்று புண்பட்டிருக்கிறது. ஆயினும் எடைதூக்க அதனால் இயலும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.
அதன் மேல் துரியோதனன் உடலை நீட்டுவாக்கில் வைத்து கொடிகளால் கட்டினார்கள். அஸ்வத்தாமன் புரவியைத் தட்டியதும் அது பெருநடையில் செல்லத் தொடங்கியது. கிருபர் “காடெங்கும் மூதாதையர்… தெய்வங்களே” என்றார். திரும்பி நின்று “நான் வரவில்லை. நீங்கள் செல்லலாம்… நான் இக்காடுவிட்டு எங்கும் வரப்போவதில்லை” என்றார். “ஆசிரியரே, இது நம் கடமை. நாம் அரசரை உரியமுறையில் எரியூட்ட வேண்டியவர்கள்” என்றான் கிருதவர்மன். “இங்கிருக்கிறார்கள் அனைவரும். துரோணர் இங்கிருக்கிறார். ஐயமே இல்லை, இங்குதான் இருப்பார். நான் அவரை பார்த்தாகவேண்டும்… அங்கனும் அரசரும் தம்பியரும்கூட இங்குதான் இருப்பார்கள்… நான் இங்கிருந்து எங்கும் வரப்போவதில்லை” என்றார் கிருபர். “ஆசிரியரே, உளமயக்கு தேவையில்லை. வருக” என்று உரத்த குரலில் அஸ்வத்தாமன் சொன்னான்.
கிருபர் திகைத்து அவனைப் பார்த்தார். “இங்கே அசுரர்கள் இருக்கிறார்கள் எனில் அரசரும் இளையோரும் அங்கே சிதையேறுமிடத்தில்தான் இருப்பார்கள்… நாம் இவ்வுடலை அங்கே கொண்டுசெல்வோம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆம், அரசர் அங்கே வருவார்” என்று கிருதவர்மன் சொன்னான். கிருபர் விழிகள் திகைக்க இருவரையும் மாறிமாறி நோக்கியபின் “ஆம்” என்றார். அவர்கள் நடக்கத் தொடங்கினர். காட்டின் எல்லைவரை இருந்த நீர்வெக்கை அகன்று சாலையில் குளிர்காற்று ஓடிக்கொண்டிருந்தது. சேற்றுவாடை நிறைந்திருந்த காற்று புதுப்புனல் ஓடும் ஆற்றில் மூழ்கி நீந்திச் செல்லும் உணர்வை அளித்தது. எடையேற்றிய குதிரையின் காலடிகள் மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தன.
“நாம் சென்று திருதராஷ்டிர மாமன்னரை அழைத்துவரவேண்டும்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அவர்தான் அரசருக்கு அனலிட வேண்டும்.” கிருபர் “அவர் அங்கே மலைமேல் காட்சிமாடத்தில் இருக்கக் கூடும். ஒருவேளை அவரை மீண்டும் அஸ்தினபுரிக்கே கொண்டு சென்றிருக்கலுமாகும்” என்றார். “சிதையொருங்கும் இடத்திலிருந்து அருகேதான் காட்சிமாடம்… அங்கிருந்து அவரை அழைத்துவர குறுக்குவழி உண்டு… கிருதவர்மன் அதை அறிவார்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “ஆம், நான் சென்று அழைத்து வருகிறேன்” என்று கிருதவர்மன் சொன்னான். “அவர் வந்தாகவேண்டுமா? அவரிடம் மைந்தனின் இறப்பை எவர் சொல்வது?” என்று கிருபர் சொன்னார்.
“ஆசிரியரே, குருக்ஷேத்ரக் களத்தில் ஒவ்வொரு நாளும் அந்தியில் போர் முடிந்தபின்னர் அரசரிடமிருந்து சுடலைக்காப்பாளர் அனல் வாங்கிச்செல்வார்கள். அந்த அனலில் இருந்து பெருகிப்பெருகி பல்லாயிரம் பேர் அனல்கொள்வார்கள். அவர் அனலேற்றியவர்களே இக்காடெங்கும் காற்றாகச் சூழ்ந்திருக்கிறார்கள். அவர் உரிய முறையில் அனல்கொள்ளாமல் விண்ணேகலாகாது” என்றான் அஸ்வத்தாமன். “நான் அழைத்துவருகிறேன்” என்று கிருதவர்மன் சொன்னான். “இப்போது அவருக்கே நிகழ்வதென்ன என்று புரிந்திருக்கும். அவர் அரசர், அரசருக்குரிய வகையிலேயே நடந்துகொள்வார்.” கிருபர் பெருமூச்சுவிட்டார். கிருதவர்மன் அவர்களிடமிருந்து விலகி காட்டுக்குள் புகுந்து மறைந்தான். அஸ்வத்தாமனும் கிருபரும் புரவியின் ஓசையை கேட்டுக்கொண்டு இருளில் நடந்தனர்.