‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40

பீஷ்மரின் படுகள வளைப்புக்குள் நுழைந்தபோது இயல்பாகவே யுதிஷ்டிரன் நடைதளர்ந்து பின்னடைந்தார். இளைய யாதவர் நின்று அவரை நோக்க அவர் அருகே அர்ஜுனனும் நின்றான். பீமன் மட்டும் தலைநிமிர்ந்து முதலில் உள்ளே சென்றான். “மந்தா” என மெல்லிய குரலில் யுதிஷ்டிரன் அழைத்தார். “பொறு, எவ்வண்ணம் என்ன பேசுவதென்பதை முடிவுசெய்வோம்… இளைய யாதவன் சொல்லட்டும்” என்றார். “எனக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் கேட்டால் சொல்லக் கூடாதது என்றும் ஏதுமில்லை” என்று பீமன் சொன்னான். “மந்தா” என மீண்டும் யுதிஷ்டிரன் அழைக்க “அவர் செல்லட்டும்… அதுவே முறை… நீங்கள் தொடர்ந்து செல்க!” என்றார் இளைய யாதவர்.

பீமன் படுகளத்தின் வளைப்புக்குள் நுழைந்தான். அவனைத் தொடர்ந்து யுதிஷ்டிரன் சென்றார். நகுலனும் சகதேவனும் உடன்செல்ல இறுதியாக இளைய யாதவர் சென்றார். அவருக்கு இணையாக அர்ஜுனன் நடந்தான். பீமன் அம்புகள் நாட்டப்பட்டு உருவாக்கப்பட்ட அந்த வளைப்புக்குள் நுழைந்து அம்புப்படுக்கைமேல் மிதந்து கிடந்த பீஷ்மரைக் கண்டு ஒருகணம் நின்றான். அவர் அவன் காலடிகளைக் கேட்டு விழிப்புகொண்டிருந்தார். இமைகள் சுருங்கி அதிர வாய் இறுகப்பொருந்தி நெளிந்தது. இரு கைகளும் அம்புக்கூர்கள் மேல் கிடந்து தவித்தன. அவரிடமிருந்து மெல்லிய முனகலோசை எழுந்தது. பீமன் அவர் அருகே சென்று “வணங்குகிறேன், பிதாமகரே. நான் பாண்டவனாகிய பீமன்” என்றான். “ஆம், உன் காலடிகளை கேட்டேன்” என்று பீஷ்மர் சொன்னார். “விடாய் கொண்டிருக்கிறேன். நீர் கொடு” என முனகினார்.

பீமன் திரும்பி சகதேவனிடமிருந்து நீர்க்குடுவையை வாங்கி அதை அவர் அருகே கொண்டுசென்று முழந்தாளிட்டு அமர்ந்து அவருடைய உதடருகே சரித்தான். அவருடைய உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தமையால் வாய் திறக்க இயலவில்லை. பீமன் தன் விரலால் அவர் உதடுகளை மலரிதழ்களை எனப் பிரித்து வாய்க்குள் நீரை ஊற்றினான். அவர் தொண்டைமுழை அசைய அருந்தினார். அவர் உடலே நெய் விழையும் அனல் என எழுவதை காணமுடிந்தது. மேலும் மேலும் நீர் கோரியது அவருடைய அனல். பின்னர் மெல்ல நிறைந்து முனகலோசையுடன் விழிகளை மூடினார். “நலம் கொள்க!” என்றார். பெருமூச்சுடன் “துயர்கொள்ளாதொழிக!” என்றார்.

பீமன் “நான் தங்கள் வாழ்த்துக்களை பெறும்பொருட்டு வந்திருக்கிறேன். களப்போரில் நான் கௌரவர்கள் அனைவரையும் வீழ்த்திவிட்டேன்” என்றான். பீஷ்மர் அவன் சொன்னதை புரிந்துகொண்டார். ஆனால் முகம் எந்த உணர்வும் இன்றி இருந்தது. பின்னர் “எப்போது?” என்றார். “இன்று காலையில்” என்று பீமன் சொன்னான். “எங்கு?” என அவர் கேட்டார். “வடமேற்கே காலகம் என்னும் காட்டில் ஸ்தூனகர்ணனின் சுனைக்கரையில்” என்றான் பீமன். அவர் மீண்டும் எதுவும் கேட்கவில்லை. இமைகள் மூடியிருந்தன. அவர் துயில்கொண்டுவிட்டார் என்று தோன்றியது. பின்னர் விழிகளை திறக்காமலேயே “வெற்றி ஷத்ரியனுக்கு நன்று… எவ்வெற்றியாயினும்” என்றார்.

யுதிஷ்டிரன் முகம் மலர்ந்து பீமனின் அருகே வந்து நின்றார். “வெற்றிபெறுவதில் பிழைகள் இயற்ற நேர்ந்திருந்தால் வெற்றிக்குப் பின் ஆட்சியைத் தவமென ஆற்றி அதை ஈடுசெய்க! உரிய பொழுதில் அரசைத் துறந்து கான்தவம் இயற்றி வீடுபேறு கொள்க!” யுதிஷ்டிரன் “அவ்வண்ணமே, பிதாமகரே” என்றார். பீஷ்மர் விழி திறந்து யுதிஷ்டிரனை நோக்கியபின் பீமனிடம் “அரசியல் முறைமைகளின்படி அரசனையும் அவன் குடியினரையும் வென்றவன் நீ. அஸ்தினபுரியின் மணிமுடி இயல்பாகவே உனக்குரியது. அதை நீ கொள்ளலாம். எவ்வகையிலும் அது பிழையல்ல. எந்தப் புகழ்க்குறையும் உருவாகாது. உன் குடி செழிக்கட்டும்” என்றார். “பிதாமகரே, நான் எதை நாடியும் இப்போரை செய்யவில்லை. எனக்கு மணிமுடி பொருட்டெனத் தோன்றவுமில்லை” என்றான் பீமன்.

பீஷ்மர் “நீ ஈட்டியது அது” என்றார். “ஆகவே அதை அளிக்கும் உரிமை உனக்குண்டு.” பீமன் “எனில் அதை என் தமையனுக்கு அடிகாணிக்கை என அளிக்கிறேன்” என்றான். “மண்ணையும் பெண்ணையும் அளிப்பதென்றால் எச்சமின்றி அளிக்கவேண்டும். உன்னில் ஒரு துளி விழைவோ ஏக்கமோ எஞ்சலாகாது. அளித்தேன் என்னும் எண்ணமும் மிஞ்சியிருக்கலாகாது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அது உருவாகவும்கூடாது. அது எளிதல்ல. ஷத்ரியர்களுக்கு இயல்வதே அல்ல என்றுதான் கூறுவேன்” என்றார் பீஷ்மர். “முழுமையாக துறக்கப்படாத உலகியல் நொதித்து நஞ்செனச் சேர்ந்து துயரமாகிறது. இத்தருணத்தில் நின்று நீ இம்முடிவை எடுக்கவேண்டியதில்லை. நூறாண்டுகள் நின்றுவாழ்வாய் என உன்னை எண்ணி முடிவு எடு… எடுத்த முடிவு தெய்வங்களிடம் அளிக்கப்பட்டுவிட்டது என்று உணர்க!”

பீமன் “ஒரு துளியும் எஞ்சாது, ஐயமே இல்லை” என்றான். “ஏனென்றால் நான் ஷத்ரியன் அல்ல. என் இடம் காடு மட்டுமே.” பீஷ்மர் “என் இடமும் காடுதான் என்று எண்ணினேன். ஆனால் காடு என்னை திரும்பத்திரும்ப வெளியே தள்ளிக்கொண்டிருந்தது. அஸ்தினபுரியின்மேல் பெரும்பற்று கொண்டவன் முதன்மையாக நானே, அடுத்தே துரியோதனன்” என்றார். மீண்டும் அவர் விழிகள் மூடின. மூச்சு சீராக ஒலிக்க அவர் துயில்கொண்டதுபோல் தோன்றியது. ஏதோ பேசப்போகிறவர்போல யுதிஷ்டிரன் அசைவுகொண்டார். ஆனால் குரல் எழவில்லை. பீஷ்மர் கண்களைத் திறந்து “அஸ்தினபுரி செழிக்கவேண்டும். அம்மக்களின் இழப்பு இன்று மிகப் பெரியது. அவர்களின் விழிநீர் மறையவேண்டும். இன்று அழுவதற்கு ஈடாக அவர்கள் ஏழு தலைமுறைக்காலம் மகிழவேண்டும்… அது ஒன்றே நான் விழைவது” என்றார்.

பீமன் “என் தமையனின் கோல்கீழ் அது நிகழும்” என்றான். “ஆம், இனி அஸ்தினபுரியை எவரும் எதிர்க்கப்போவதில்லை” என்றார். “போர் என்பது நிலத்தை உழுவதுபோல என்கின்றது பராசர ஸ்மிருதி. சிற்றுயிர்கள் மாயலாம். செடிகள் மண்ணில் புதையலாம். அனைத்தும் புரட்டப்படலாம். அது வன்செயல் என்பதில் ஐயமில்லை. இறுதி விளைச்சல்தான் அவ்வன்செயலை உகந்ததாக்குகிறது. அவ்வண்ணம் ஆகுக!” பீமன் “தங்கள் ஆணை” என்றான். பீஷ்மர் “ம்” என ஓர் ஓசை எழுப்ப பீமன் சென்று அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடினான். பீஷ்மர் “நீ விடுதலை பெறுவாய். நிறைவுறுவாய்” என்றார். பீமன் “உங்கள் நற்சொல் உடன் அமைக!” என்றான்.

யுதிஷ்டிரன் தயங்கி நிற்க இளைய யாதவர் கண்களை காட்டினார். யுதிஷ்டிரன் முன்னால் சென்று வணங்கி “பிதாமகரே, நான் யுதிஷ்டிரன். தங்கள் வாழ்த்து பெறும்பொருட்டு வந்துள்ளேன்” என்றார். பீஷ்மர் ஒன்றும் சொல்லாமல் விழிகளை மூடிக்கொண்டார். யுதிஷ்டிரன் சுற்றிச்சென்று அவர் கால்களைத் தொட்டு வணங்க “அஸ்தினபுரியை பேணுக!” என்றார். “அவ்வண்ணமே. அது என் கடன்…” என்று யுதிஷ்டிரன் சொன்னார். பீஷ்மர் மேலும் ஏதேனும் சொல்வார் என எதிர்பார்த்தவராக அப்படியே நின்றார். பீஷ்மர் விழிமூடி அசைவிழந்திருந்தார். மீண்டும் ஒருமுறை வணங்கிவிட்டு யுதிஷ்டிரன் அகன்றார். அவர் முகம் சுருங்கியிருந்தது. அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் வணங்கியபோது பீஷ்மர் வெறுமனே முனகலோசையில் “வாழ்க!” என்று மட்டும் சொன்னார்.

இளைய யாதவர் திரும்புவோம் என கைகாட்டினார். யுதிஷ்டிரன் மீண்டும் ஒருமுறை பீஷ்மரை வணங்கிவிட்டு திரும்பிச்செல்ல பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் அவரைத் தொடர்ந்து சென்றார்கள். இளைய யாதவர் திரும்பும்போது பீஷ்மர் “யாதவனே” என்றார். இளைய யாதவர் நின்று நோக்க “அவர்கள் செல்லட்டும். நீ இங்கே நில்” என்றார் பீஷ்மர். யுதிஷ்டிரன் ஐயத்துடன் இளைய யாதவரை நோக்கிவிட்டு பிறரிடம் செல்வோம் என்று கை காட்டிவிட்டு வெளியே சென்றார். பீமன் வெளியே வந்து பெருமூச்சுவிட்டு கைகளை நெஞ்சில் கட்டியபடி அசைவில்லாமல் நின்றான். தொடுவான் அந்தியொளி கொள்ளத் தொடங்கியிருந்தது. வானம் மங்கலாகவே இருந்தது. மீண்டும் மழை எழும் எனத் தோன்றியது. யுதிஷ்டிரன் “மழை விழலாம்… பிதாமகர் வெட்டவெளியில் கிடக்கிறார்” என்றார். “அவர் அதையே விரும்புவார். மழை அவருக்கு பொருட்டல்ல. அது அவருக்கு உகந்ததாகவும் இருக்கக்கூடும்” என்றான் சகதேவன். அடிக்கடி படுகளத்தின் வாயிலையே யுதிஷ்டிரன் நோக்கிக்கொண்டிருந்தார். உள்ளே நிகழ்வது வெளியே தெரியவில்லை.

இளைய யாதவர் புன்னகையுடன் வெளியே வந்தார். செல்வோம் என கைகாட்ட அவர்கள் நடந்தனர். யுதிஷ்டிரன் இளைய யாதவர் ஏதேனும் சொல்வார் என எதிர்பார்த்தார். ஓரவிழியால் இளைய யாதவரை மீளமீள நோக்கினார். இளைய யாதவர் ஒரு சொல்லும் கூறவில்லை எனக் கண்டு சற்றே அமைதியிழந்து “பிதாமகர் நம்மை வாழ்த்துவார் என்று நான் எண்ணவில்லை… அவர் துரியோதனன் மீது அன்புள்ளவர் என்று எண்ணியிருந்தேன்” என்றார். இளைய யாதவர் “அவர் அஸ்தினபுரியின்மேல் அன்புள்ளவர். அரசர்கள் அவ்வாறுதான். மண்மேல்கொண்ட பெரும்பற்றால் அவர்கள் இயக்கப்படுகிறார்கள்” என்றார். “அவர் அரசாளவில்லையே?” என்று யுதிஷ்டிரன் சொன்னார். இளைய யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. யுதிஷ்டிரன் “அவர் என்னை வாழ்த்தியதும் நிறைவடைந்தேன். எங்கள் வெற்றியை அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார். இனி எவரும் அதை மறுக்கவியலாது” என்றார்.

“பிழைகள் செய்திருக்கிறோம். அதை எவ்வண்ணம் நிகர்செய்வதென்றும் அவரே சொன்னார். பிதாமகரான அவரே அப்பிழைகளைப்பற்றி கசப்படைய வேண்டும். அவரே அது போரில் இயல்வதே என்று கூறிவிட்டார்” என்று யுதிஷ்டிரன் தொடர்ந்து பேசினார். நகுலன் யுதிஷ்டிரனின் அப்பேச்சை விரும்பாமல் முகம்சுளித்து பின்னடைய சகதேவனும் விரைவழிந்தான். அவர்கள் பின்னடைவதை திரும்பி நோக்கியபின் யுதிஷ்டிரன் “அவர் உன்னிடம் எங்களைப் பற்றி ஏதும் கூறினாரா, யாதவனே?” என்றார். “இல்லை” என்று மட்டும் இளைய யாதவர் சொன்னார். மேலும் ஏதேனும் அவர் சொல்வார் என எதிர்பார்த்துக் காத்தபின் யுதிஷ்டிரன் சலிப்புடன் தலையை அசைத்தார். அவர்கள் சேற்றில் கால்கள் அளையும் ஒலியுடன் நடந்தனர்.

யுதிஷ்டிரன் “அனைவரும் அவரவருக்கு ஆணையிடப்பட்டதைச் செய்க!” என்றார். பீமன் “நான் சென்று அரசியைப் பார்க்கவேண்டும். கிளம்புகிறேன்” என்றான். “மந்தா, அவர்களை அழைத்துச்செல்ல யுயுத்ஸுவை அனுப்பலாமென்று எண்ணினேன்” என்றார் யுதிஷ்டிரன். “நான் அவளை பார்க்கவேண்டும்” என்றான் பீமன். “ஏன்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். பீமன் இயல்பான குரலில் “அவள் கூந்தலில் இன்னொரு குருதியும் பூசப்படவேண்டும்” என்றான். எரிச்சலுடன் யுதிஷ்டிரன் “மந்தா, அதை உள்ளத்திலிருந்து விலக்கு. அனைத்தும் முடிந்துவிட்டது. பிதாமகரின் வாழ்த்து பெற்றதுடன் நாம் பிறிதொரு கட்டத்தை அடைந்துவிட்டோம்” என்றார். “நான் முடிக்கவில்லை. எடுத்தது நிறைவடைந்தாலொழிய என்னால் அமையமுடியாது” என்று பீமன் சொன்னான்.

“அவள் இதை விரும்புவாள் என நினைக்கிறாயா?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அவளுள் உறையும் இன்னொருத்தி இது இன்றி நிறைவுகொள்ளப்போவதில்லை” என்றபின் பீமன் திரும்பி நடந்தான். யுதிஷ்டிரன் அவனை நோக்கியபின் இளைய யாதவரிடம் “இவன் இனிமேலாவது வஞ்சம் அடங்கவேண்டும், யாதவனே” என்றார். “இல்லாவிடில் இவனுக்கு அமைதி இல்லை… நான் அவனுடைய முந்தைய முகத்தை நினைவுறுகிறேன். அதை ஒருநாளாவது அவன் மீளப் பெற்றாகவேண்டும்.” இளைய யாதவர் பேசாமல் நடக்க யுதிஷ்டிரன் அமைதியற்றவராக அப்பால் நடந்தகலும் பீமனை திரும்பித்திரும்பி நோக்கியபடி நடந்தார்.

 

பீமன் சேற்றுப்பரப்பில் கால்களை தூக்கி வைத்து நிமிர்ந்த தலையுடன் சென்றுகொண்டிருந்தான். சில காலடிகளுக்குள்ளாகவே அவன் நெடுந்தொலைவு சென்றுவிட்டிருந்தான். எல்லாப் பக்கமும் ஒன்றே என சேறுபடிந்து விரிந்துகிடந்த அந்நிலம் அவனுக்கு முற்றிலும் தெரியாத ஒன்றாக இருந்தது. விலங்கு நிகர்த்த உள்ளுணர்வால்தான் அவன் தன் திசையை தேர்ந்தான். களமெங்கும் விழுந்துபரவி சேற்றுப்படலத்தால் மூடப்பட்டு கருவறைச் சவ்வுக்குள் குழவிகள் என ஆழுறக்கத்திலிருந்தனர் மானுடரும் விலங்குகளும். அங்கே நிகழ்ந்த போரின் கொந்தளிப்பும் அலைச்சுழிப்பும் ஒரு மாயச்சொல்லால் அப்படியே மண்ணாகச் சமைந்துவிட்டதுபோல.

சேற்றில் ஒரு சிறிய மலர் விழுந்து கிடந்தது. அவன் அதை நின்று கூர்ந்து நோக்கினான். அது ஒரு கணையாழி. அதன்மேல் மண்படிந்தபோது அருமணிகளும் செதுக்குகளும் மலர் வடிவுக்கு மீண்டுவிட்டிருந்தன. அவன் அதை நோக்கியபடி நின்றான். அருகே ஒரு சிரிப்பு நிறைந்த முகம். அதற்கப்பால் ஒரு முகத்தில் ஒரு சொல். அவன் திடுக்கிட்டு பின் மீண்டும் கூர்ந்து நோக்கி அமர்ந்திருந்த துரியோதனனின் மண்ணுருவை கண்டான். அருகே சென்று அதன்முன் இடையில் கைவைத்தபடி நின்றான். அது துரியோதனன் உருவாக்கிப் போரிட்டுப் பயின்ற அந்த இரும்புப்பாவை. அது விழுந்த இடத்தில் விழுந்து ஒருக்களித்து மண்மூடி தென்பட்டது. மண்ணிலிருந்து எழுந்த சிறுமேடுபோலத் தோன்றியது. ஒரு சேற்றுத்திட்டு விழிமயக்கால் முகமெனக் காட்டுவதுபோல.

அச்சிலையைப்பற்றி அவன் கேள்விப்பட்டிருந்தான். அதை போர்க்களத்திற்கே துரியோதனன் கொண்டுவந்திருப்பான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. களத்தில் அச்சிலையால் சகுனி இயற்றிய பல்வேறு சூழ்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டான். சகுனி அச்சிலையையும் துரியோதனன் என தேரிலேற்றி களத்திற்குக் கொண்டுவந்தார். அதைச் சூழ்ந்திருந்த வீரர்கள்கூட அது துரியோதனன் அல்ல என்று அறிந்திருக்கவில்லை. அவர்கள் அதைச் சூழ்ந்து மெய்யாகவே போர்க்குரல் எழுப்பி கூடினர். அதைக் காக்க குறுக்கே விழுந்து அம்புகளை ஏற்றுக்கொண்டனர். அவன் அதை துரியோதனன் என எண்ணி போர்க்குரலுடன் சென்று எதிர்கொண்ட பின்னரும்கூட சற்றுப்பொழுது கடந்துதான் அதை சிலை என அடையாளம் கண்டான். அப்போது பிறிதொரு இடத்தில் துரியோதனன் தோன்றி போரிட்டுக்கொண்டிருந்தான். துரியோதனனிடம் போரிட்டு விலகி மீண்டும் அவனை எதிர்கொண்டபோது சிலை என எண்ணி அவன் ஒழிய அது மெய்யான துரியோதனன் என அடிவாங்கி விழுந்த பின்னரே உணர்ந்தான்.

அந்தப் போரே சிலையும் துரியோதனனும் இணைந்து நிகழ்த்தியதாக இருந்தது. துரியோதனன் சிலையாகவும் சிலை துரியோதனனாகவும் மாறிமாறித் தோன்றினர். சிலை துரியோதனனின் இயல்புகளை கொள்ளத் தொடங்கியது. துரியோதனன் சிலையின் இயல்புகளை அடைந்தான். இரு சிலைகளுடன் போரிட்டுக்கொண்டிருக்கும் உணர்வு எழுந்தது. இரு துரியோதனன்களுடன் போரிடும் உளமயக்கு அமைந்தது. அச்சிலை அவ்வாறு களத்திலிருந்ததை இறுதிவரை திருஷ்டத்யும்னன் அறியவில்லை. துரியோதனன் பீமனுடன் போரிட்டபடியே களத்திலிருந்து விலகி காட்டுக்குள் சென்றதும் துரியோதனன் களம்பட்டான் என்னும் செய்தியை முரசறைவிக்க திருஷ்டத்யும்னன் ஆணையிட்டான். அந்த ஆணை ஒலித்துக்கொண்டிருக்கையிலேயே களத்தில் துரியோதனனின் சிலை அவன் வடிவில் தேரிலெழ அந்த முரசொலி அக்கணமே அணைந்தது.

தேரிலமர்ந்து போரிட்ட துரியோதனனின் சிலையைக் கண்டதும் பீமனை கொன்றுவிட்டு துரியோதனன் களம் மீண்டுவிட்டான் என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். பீமனின் களவீழ்ச்சியை அறிவிக்க முரசுகள் எழவேண்டுமா என்று அவன் ஐயுற்றுக்கொண்டிருக்கையிலேயே அச்செய்தியை அறிவித்து கௌரவர்களின் முரசுகள் இயம்பலாயின. பீமன் திரும்பி வரும்போது அவன் மறைந்துவிட்டான் என்னும் செய்தியுடன் தனி முரசு அப்போதும் விம்மிக்கொண்டிருந்தது. அவனைக் கண்டதும்தான் முரசொலி அவிந்தது. ஆனால் அக்களத்தில் எந்த முரசொலியும் பெரிய விளைவுகள் எதையும் உருவாக்கவில்லை. துரியோதனனின் சிலை சிகண்டியின் அம்புபட்டு தேருடன் சரிந்தது. அது விழுந்ததுமே துரியோதனன் களம்பட்டான் என்னும் செய்தி எழுந்து எஞ்சிய கௌரவப் படைவீரர்கள் உளம்தளர்ந்தனர். எஞ்சியோர் வெட்டுண்டு விழ போர் முற்றவிந்தது.

களம் வந்ததுமே பீமன் விழிகளால் தேடி சரிந்த தேரிலிருந்து விழுந்து களத்தில் கிடந்த துரியோதனனின் சிலையைத்தான் பார்த்தான். அது கரிய சேற்றில் பாதியுடல் மூழ்கி ஒருக்களித்துக் கிடந்தது. தொலைவிலேயே அது துரியோதனனின் சாயலைக் காட்டியது. பீமன் அதன் முகத்தை கூர்ந்து நோக்கினான். சிலைகள் நோக்கில் உயிர்கொள்பவை. நோக்கினூடாக நோக்குபவனின் உயிரை அவை பெற்றுக்கொள்கின்றன. அவனை சிலையும் கூர்ந்து நோக்கியது. மண்ணுக்குள் அது உயிர்கொள்வதுபோல. நோக்கு தெளிந்தபடியே வந்தது. அதன் உதடுகளில் ஒரு புன்னகை இருப்பதுபோலத் தோன்ற அவன் மெல்ல கைநீட்டி அதன் முகத்தை தொடப்போனான். அது தலையை பின்னிழுத்துக்கொண்டது.

அவ்வசைவு பீமனை துணுக்குற்று கைவிலக்கச் செய்தது. சற்றுநேரம் அவன் அதை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். மண்ணுக்குள் அது விம்மிக்கொண்டிருப்பதுபோலத் தோன்ற அவன் விரல் முறுக்கி முட்டியாக்கி முழு விசையையும் அதில் தேக்கினான். அதன் கண்களை நோக்கியபடி மெல்ல கையை பின்னிழுத்து ஓங்கி அதன் முகத்தில் குத்தினான். அடிபட்டதும் அது பின்னடைந்து அதே அசைவின் மறுநிகர் என மண்ணுக்குள் இருந்து பாய்ந்து எழுந்தது. அதன் உடலில் இருந்து செந்நிறச் சேறு வழிந்து உதிர்ந்தது. இரு கைகளையும் விரித்து தலையை தாழ்த்தி அது அவனை அறைகூவியது. பீமனும் தன் கைகளை விரித்தபடி அதை எதிர்கொண்டான். கால்களை மெல்லமெல்ல எடுத்துவைத்து சுற்றிவந்தான்.

அவன் பாய்ந்த அதே கணத்தில் அதுவும் பாய்ந்தது. இருவரும் ஓசையுடன் மோதிக்கொண்டு அடியின் விசையில் பின்னடைந்தனர். மீண்டும் அறைந்தனர். பீமனின் அனைத்து மற்போர் முறைகளையும் அது அறிந்திருந்தது. அவன் அதையும் நன்கறிந்திருந்தான். அதன் நிலைத்த விழிகள் அவனை குழப்பின. மல்லன் எதிர்மல்லனின் விழிகளை கூர்ந்து நோக்கியாகவேண்டும். அதிலிருக்கும் அவன் உள்ளத்துடன்தான் அவன் போரிடவேண்டும். எதிரிலிருக்கும் அப்பொறியின் விழிகள் வெறும் பளிங்குருண்டைகள். ஆனால் அவற்றில் உள்ளம் இருந்தது. எவருடைய உள்ளம்? அதன் அடிகள் பழகியறிந்தவை போலிருந்தன. அதை அவன் அள்ளி உடலுடன் சேர்த்து இறுக்கியபோது உடலின் மென்மையையும் உயிர்வெம்மையையும் கொண்டிருந்தது எனத் தோன்றியது.

அடிக்கு மறு அடி என நிகர்நிலைகொண்டு அவர்கள் போரிட்டனர். சூழ்ந்திருந்த குருக்ஷேத்ரப் பெருநிலத்தின் வெற்றுவிரிவில் ஒரு விழியால்கூட நோக்கப்படாமல் அனைத்தையும் மறந்து அவர்கள் போரிட்டனர். அவன் முன் அந்த சிலையின் விசைகொண்ட கைகளும் கால்களும் மட்டுமே இருந்தன. அறைந்தும், பாய்ந்துப் பின்னடைந்து மீண்டும் பாய்ந்து அறைந்தும், தடுத்தும், பிடித்துச் சுழற்றியும், கவ்விச்சுழன்றும், பிரிந்து மீண்டும் பாய்ந்தும், அறைபட்டுத் தள்ளாடி வெறிதிரட்டி மீண்டும் எழுந்தும் அவன் போரிட்டான். அவர்களைச் சூழ்ந்து அந்தியின் குளிர்ந்த காற்று சுழன்றோடிக்கொண்டிருந்தது. மெல்லிய மின்னல்களும் உறுமல்களுமாக வானம் இருட்டிக்கொண்டிருந்தது. தொடுவான் கோடு வாள்கூர் என மின்ன சேற்றுப்பரப்பின் வளைவுகளில் மட்டும் ஒளி எஞ்சியது. நெடுநேரமாக அவ்வாறு போரிட்டுக்கொண்டிருப்பதாக அவன் உணர்ந்தான். அது கனவா என அகம் வியந்தான். இல்லை எனத் தெளிந்தான்.

பீமன் மூச்சுவாங்கினான். கைகால்களில் களைப்பை எடை என உணர்ந்தான். ஆனால் அது போரிடப்போரிட ஆற்றல் மிகுந்தபடியே சென்றது. அப்போரினூடாகவே மேலும் மேலும் அவனை கற்றுக்கொண்டது. அவனை கடந்துசென்று அவன்மேல் எழுந்ததுபோல் நின்றிருந்தது. அதன் அடிகளை உடலெங்கும் வாங்கி அவன் கால்கள் தளர விழிகள் மங்கலடைய தள்ளாடியபடி நின்றான். அவன் முன் இரு பெருங்கைகளையும் விரித்து அது நின்றிருந்தது. அதன் விழிகள் ஒளியணைந்துவிட்டிருந்தன. நோக்கு மறைந்ததும் அந்த முகம் துரியோதனனுடையதல்லாமல் ஆகியது. தலையை சற்றே பக்கவாட்டில் சரித்து கைகளை ஒன்றோடொன்று சேர்த்து அறைந்து வெடிப்பொலி எழுப்பியபடி அது அவனை கொல்ல வந்தது.

பீமன் பின்னடைவதற்குள் அது அவனை அள்ளிப்பற்றியது. அவன் அதன் நெஞ்சில் உதைத்து தன்னை விடுவித்துக்கொண்டு அவ்விசையில் பின்னால் தெறித்து விழுந்தான். அது கைகளால் தன் உடலையே ஓங்கி அறைந்தபடி அவனை தேடியது. நோக்கின்மையால் தன்னை அதனால் காணமுடியவில்லை என அவன் உணர்ந்தான். மெல்லமெல்ல கைகளால் பின்னடைந்து அப்பால் எழுந்து கால்களை தூக்கி வைத்து விலகிக்கொண்டான். இரு கைகளையும் விரித்து தலையைச் சுழற்றியபடி அது சுழன்று சுழன்று அவனை தேடியது. அவன் மேலும் பின்னடைந்து அதிலிருந்து விலகினான்.

குருக்ஷேத்ரத்தின் எல்லைக்கு வந்ததும் அவன் திரும்பி அதை பார்த்தான். அதன் கைகள் விரிந்து அசைந்தன. அசைவற்று இருளத் தொடங்கியிருந்த குருக்ஷேத்ரக் களத்தில் அச்சிலை கரிய நிழலுருவாக தன்னந்தனியாக நின்றிருந்தது. வெறிகொண்டதுபோல கைகளை அசைத்தது. அறைகூவுவதுபோல கைகளை வானோக்கி தூக்கியது.

முந்தைய கட்டுரைகண்டு நிறைவது
அடுத்த கட்டுரைதகவலறியும் உரிமைச் சட்டம் -கடிதங்கள்