தகவலறியும் உரிமைச் சட்டம் -கடிதங்கள்

Aruna Roy (2019)

தகவலறியும் உரிமைச்சட்டம், பொதுச்செயல்பாட்டாளர்கள்

அண்ணா ஹசாரேயின் துரோகம்!

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா

 

ஆசிரியருக்கு

 

முருகானந்தம் மற்றும் உங்களின் கடிதப் போக்குவரத்தும் அதை பிரசுரித்திருந்த விதத்தையும் நான் பார்த்தேன். இருவரும் சுற்றிச் சுற்றி அடித்து கொண்டிருந்தீர்கள் கோழி தான் அகப்படவில்லை.

 

நான் பார்த்தவரை பிற சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு என்பது அது நேரடியாக பிரச்சனையின் மையப் பொருளை சுட்டி நின்று  கேள்விகளுக்கு  பதிலை அளிப்பது. கவனக்குறைவால் ஏற்பட்ட விதிவிலக்கான தருணங்களைத் தவிர நீங்கள் பிரச்சினையை கடந்து செல்வதோ அல்லது நேரடியாக பதில் கூறாமல் வேண்டுமென்றே தவிர்த்ததோ அனேகமாக இல்லை.

 

கீழே தகவல் உரிமைச்சட்டத்தின் திருத்தத்தை கொடுத்துள்ளேன். தகவல் அறியும் உரிமை சட்டம் இந்தியாவின் ஜனநாயக சாதனைதான். இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றிய சாதனையை நிகழ்த்திய புகழ் காங்கிரசுக்கு சேரும்.

 

கொண்டுவரப்பட்ட புதிய திருத்தம் மத்திய மாநில அளவில்  தலைமை தகவல்  ஆணையர்களின்  சம்பளம் சலுகைகள் மற்றும்  பதவிக் காலத்தின்  அளவு தொடர்பானது.  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் தற்போதைய விதிகளால் நாம் பெற்றுக்கொண்டிருக்கும் உரிமை என்ன என்பது குறித்தோ, இந்த திருத்தத்தால் எந்த உரிமை நமக்கு பாதிக்கப்படும் என்பது குறித்தோ  முருகானந்தம் சுட்டிக் காட்டவில்லை. அது குறித்தெல்லாம் நீங்களும் கவலை கொள்ளவில்லை.

 

இது ஒரு மொட்டை கேள்வி ஒரு மொட்டை பதில். ஜெயமோகன் டாட் இன் தளத்தில் இதை நான் எதிர்பார்க்கவில்லை.

 

கிருஷ்ணன்

 

http://www.prsindia.org/theprsblog/explainer-right-information-amendment-bill-2019

அன்புள்ள ஜெமோ,

முருகானந்தம் அவர்களின் “அண்ணா ஹசாரேயின் துரோகம்!” கடிதத்தை படித்தேன்.  எனக்கு ஒரு செல்லக் கோட்ப்பாடு உண்டு.  எந்த தேசிய கட்சியையும் இந்தியாவில்  “எந்த ஒரு மாநில மக்களும்” தமது மாநில ஆட்சிக்கு ஆதரிக்க கூடாது என்பதுதான் அது.  பல்வேறுபடட கலாசார இனக்குழுக்களான மக்கள் ஒன்றினைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில் பிராந்தியம் சார்ந்த வாதங்கள் மற்றும்அடையாளங்கள் அதன் தனித்த பெருமிதங்களாக மாறும் போது தேசியம் எனும் ஃபெடரல்சிஸ்டமுக்குள் இந்த வேறுபட்ட கலாசார மக்களை  ஒருங்கிணைக்க முடியாதோ என்ற பயத்தில், அந்த அடையாளங்களை துறக்க வலியுறுத்தும் செயல்களை மத்தியம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது,

 

அது எந்த ஆட்சியாக இருந்தாலும், வித்தியாசங்கள் உண்டெனினும். ஒற்றைப்படையாக்கல் நிர்வாகத்திற்கு எளிது. எனவே இந்த அமைப்பில், ஒவ்வொரு தம் பண்பாட்டு கலாசாரகூறுகளை, அடையாளங்களை பாதுகாத்து, பொருளதார நலன்களை கேட்டுப் பெரும் வலிமையான மாநிலதலைமை மட்டுமே சரியானதாக இருக்கும். ஆனால் இந்த தேசிய கட்சிகள் எப்போதும் வலுவான மாநிலதலைமைக்கு எதிரானதாகத்தான் இருக்கிறது. அவர்கள் யாரும் தனிப்படட செல்வாக்கு இல்லாமல், எப்போதும் மத்திய தலைமையின் சொல்லுக்கு கட்டுப்படும், அடங்கிபோகும் ஒன்றாகவே மாநிலதலைமை இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். தனி ஆளுமையற்ற, மத்தியம் செய்வதை தற்காக்கும், அவர்கள் சொல்வதை இங்கு வந்து ஒப்புவிக்கும் ஒரு மெசஞ்சர்களை  மட்டுமே மாநில தலைமையாக்க விரும்புகிறார்கள். எனவேதான் எனது அந்த செல்லக் கோட்ப்பாடு.  ஆனால் இந்த வகையில் முருகானந்தம் மற்றும் ஜோதிமணி போன்ற இளம் தலைவர்கள் நம்பிக்கையூட்டுபவர்களாக இருக்கிறார்கள். கட்சிக்கு எதிரானதாக இருந்தாலும் தமது தனிக் கருத்துக்களை வெளிப்படுத்த, கட்சியுடன் முரண்பட தயங்குவதில்லை.   முருகானந்தத்தை ஒரு அரசியல் பணியாளனாக அறிவார்ந்த தன்மையுடன் செயல்படுபவராகத்தான் அவதானித்து வந்திருக்கிறேன்.

 

ஆனால் நீங்கள் அந்த கடிதத்தின் அவரது  மொழியை சுட்டிக் காட்டியது மிகவும் சரி. இன்றைய கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் ஒரு கருத்துருவாக்கச் செயல்பாட்டுக் களமாகவும் இருப்பது அரசியல்/சமூகம் சார்ந்த பொது மனிதர்களுக்கு கருத்துப்பரப்பலுக்கு நல்வாய்ப்பு. ஆனால் அப்படி பொதுவெளியில் இருப்பதாலேயே அடிப்படை புரிதலற்ற ஆனால் சார்புகளை மட்டுமே மனதில் சுமந்துகொண்டு விவாதத்திற்கு வரும் எளியவர்களுடன் அறிவார்ந்த நிலையிலேயே எப்போதும் விவாதித்துக் கொண்டிருக்க முடியாது. எள்ளல் அல்லது சீண்டல் என்பது அவர்களை விலக்க/கடக்க ஒரு உத்திதான். ஆனால் அதை அவர் சமூகவலைத்தளங்களில் “பிரத்யோகமானவர்களுக்கு” மட்டுமே என்று வைத்துக் கொள்ள வேண்டும்  என்று நினைக்கிறேன் (இல்லையெனில் அங்கு வாழமுடியாது), கடிதங்கள், கட்டுரைகளுக்கு அல்ல.

 

இதில் “அரசியலை மிகையுணர்ச்சிக்கொந்தளிப்புடன் அணுகுதல்”  என்பதை பற்றி சொன்னீர்கள். இதை புரிந்து கொள்வது எனக்கு சிறுது சிரமமாக இருக்கிறது. எனது நண்பர் ஒருவர் அரசியலை ஒரு அறிவுத்துறை என்ற மதிப்புடன் அணுகுபவர், அரசியல், அரசு, திட்ட்ங்கள் மற்றும் நிர்வாகம் என்று நீண்டகால அவதானிப்பு உண்டு.  அரசின் ஒரு செயல்பாட்டை  சுதந்திரத்திற்கு பின்னான எல்லா அரசுகளின் கால பின்புலத்தில் வைத்து அவரால் விளக்க முடியுகிறது. ஆனால் அப்படி  அரசியல் தளத்தில் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பதாலேயே, ஒரு அரசின் பல்வேறு முறைகேடான செயல்பாடுகள், நியாயமற்ற தன்மைகள், ஜனநாயக அமைப்புகளை குலைத்தல் போன்றவை அவரை சீண்டுகிறது, கோபமூட்டுகிறது. உண்மையில் பாதிக்கப்படுகிறார். ஆனால் இதே இன்னொரு நண்பருக்கு அரசியல் என்பது சர்சை ஆகும் செய்திகள் மட்டும்தான், அப்போதுமட்டும்தான் அதை தெரிந்து கொள்வார், இல்லையெனில் பேப்பரின் தலைப்பு செய்திகளில் மூன்றாம் பக்கத்தை தாண்டமாடடார். ஆனால் பின்னவருக்கு முன்னவர் சமநிலையற்றவராகத் தெரிகிறார். ஆனால் எனக்கு இந்த அரசியல் சூழ்நிலையில் முன்னவர்தான் இயல்பானவராகத் தெரிகிறார். உண்மையான அரசியல் ஆர்வமுள்ள, களச்செயல்பாடுள்ள ஒருவர் அப்படித்தானே இருக்க முடியும்?

 

அரசியல் செய்திகளின் தலைப்பை மட்டும் படித்து கடந்து போகிறவர் “சமநிலையுடன்” இருப்பதில் எனக்கு ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. அவர் இன்னும் மிகச்சமநிலையுடன் இருக்க ஆசிர்வதிக்கத்தான் முடியும். இன்னொன்றும் உண்டு, “இது எல்லாம்  அரசியலில் சகஜம், இவையெல்லாம் ஒரு மாபெரும் சக்கரத்தின் சிறு அசைவுகள்” என்று தன்மனச்சாய்வுள்ள கட்சி ஆடசியில் இருக்கும்போது எளிதாக கடந்து போவதும், தாம் எதிர்க்கடசி வரிசையில் அமரும்போது அறச்சீற்றம் கொள்வதும்.    முருகானந்தத்தை பொறுத்தவரையில் ஒருவேளை அவரது ஐம்பதாவது வயதில்  அரசியலை சமநிலையுடன் அணுகலாம் என்று நினைக்கிறேன். ஆனால் தாம் சார்ந்த கடசியின் முடிவுகளுக்கு எதிராகவும் இன்று அவர் எழுப்பும் குரல் அரசியலில் “முடிவுகள் எடுக்கும் இடத்துக்கு” செல்லும் அவரது வளர்ச்சியை பாதிக்கும் என்றே நினைக்கிறேன்.

 

தகவலறியும் சடடத் திருத்தம் உண்மையில் மிகப்பெரும் மனவருத்தத்துக்குள் உள்ளாக்கிய ஒன்று. சட்டத்திருத்தம் சார்ந்த விவாதத்துக்குள் போய் அது  சரியா/தப்பா என்ற கேள்விக்குள் கூட போக மனம் விரும்பவில்லை.  சுதந்திர இந்தியாவின் அரசு அமைப்பை மக்கள் சார்ந்ததாக மாற்றுவதற்கான செயல்பாடுகளில் மிக முக்கியமான ஒன்று RTI. அதனால் விளைந்த நன்மைகள் என்பது அளப்பரியது, எத்தனை ஊழல்களை RTI மட்டுமே எவ்வளவு எளிதாக மக்கள் மன்றத்துக்கு கொண்டுவந்தது.  நமது அரசு அமைப்பின் அதிகாரிகளின் பொறுப்பேற்காத  தன்மை மற்றும்  வெளிப்படையற்ற தன்மைதான்  அதன் எல்லா இழிவுகளுக்கும் காரணமாக இருந்தது,  திரைமறைவில் ஒன்றை செய்து அதை எவருக்கும் தெரியாமல் மறைத்துவிடலாம் என்ற நம்பிக்கையை RTI குலைத்தது, கண்ணடிப்பெட்டிக்குள் இருந்து அனைத்தையும் செய்யவேண்டிய நிலைமை.  ஆதர்ஷ் என்ற பெரும் ஊழல்களில் இருந்து அரசு பள்ளி அட்மிஷன் வரை எவ்வ்வளவு ஆரோக்கியமான நிகழ்வுகள். மத்திய மந்திரி ஒருவர் ஐந்து நட்ச்சத்திர ஓட்டலில் இருந்து வெளிவருவதை பார்த்த ஒருவர் RTI போட்டு அவர் யார் பணத்தில் அங்கு தங்கி இருக்கிறார், அரசு செலவளிக்கிறதா என்று இரு கேள்விகள் கேட்க அடுத்த நாளே அவர் அந்த ஹோட்டலை காலி செய்துவிடடார். மக்களதிகாரம். எனது தனிப்படட வாழ்கை நிகழ்ச்சிகளிலேயே RTI ஊடுருவலை பார்த்திருக்கிறேன். அதன் வீச்சு மிக பெரியது.

 

காங்கிரஸ் ஆடசியின் சாதனைகளாக ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால் எப்போதும் RTI யே மனதில் உதிக்கும். ”தகவலறியும் உரிமைச்சட்டம் காங்கிரஸ் ‘அளித்தது’ அல்ல. காங்கிரஸிடமிருந்து வென்றெடுக்கப்பட்டது” என்று சொல்லி இருந்திர்கள்.  இதில் காங்கிரசின் கடப்பாடுக்கான பெயரை அதற்க்கு கொடுப்பதற்கு தயங்கவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஆம், லோகபால் அமைப்பதற்கு மிகப்பெரும் போராட்ட்ங்கள், பரப்புரைகள் செய்து மக்கள் ஆதரவை பெறவேண்டி இருந்தது. அது சார்ந்த பெரும் எழுச்சியை நாடே பார்க்க வேண்டி இருந்தது, அப்படி இருந்தும் அது வெற்றி பெறவேயில்லை. ஆனால் RTI க்கு அப்படி எந்த போராடடங்களும் நடைபெறவில்லை. அது சிவில் சொசைட்டியின் முன்னெடுப்புகளாக மட்டுமே இருந்தது. எவ்வளவோ சட்டங்கள் களப்பணியாளர்கள் அல்லது அரசு சாரா அமைப்புகளின் வரைவுதிடடத்தில் இருந்துதான் அரசால் அது ஏற்கப்பட்டிருக்கிறது. ஏன், ஒருநபர் மசோதாக்கள் கூட சட்ட்ங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசின் கடப்பாடு இல்லையெனில் அது எதுவுமே எப்போதும் சாத்தியம் இல்லை.  2004 பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே RTI கொண்டுவரப்படும் என்ற உறுதி மொழியை காங்கிரஸ் அறிவித்திருந்தது,

 

அதன் குறைந்த பட்ஷ செயல்திட்டிடத்திலும் அது வலியுறுத்தப்பட்டிருந்தது. தேர்தலில் வென்று ஆடசிக்கு வந்த உடனேயே  அமைக்கப்படட தேசிய ஆலோசனைக் குழுவில் (NAC)  அருணா ராய்க்கு இடம் அளித்து, அவர்கள் அரசில் முதலில் அமுல்படுத்தப்படட சடடம் RTI. இந்த சடடம் வந்த போது மக்களுக்கு அதன் உண்மையான வீச்சுகூட தெரியவில்லை, அதற்குப்பின் காங்கிரசின் ஊழல்களையும் இந்த சடடமே வெளிக்கொண்டுவந்தது. இன்று ஒவ்வொருநாளும் 5000 மனுக்களை பெரும் அமைப்பு அது. இதன் வீச்சு எல்லோருக்கும் புரியும்போது அது வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும், ஊழலை குறைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.  MKSS, NCPRI, அருணாராயோடு சேர்ந்து காங்கிரசுக்கும் இந்த பெருமை சேரவேண்டும் என்றே நினைக்கிறேன். அதுவும் முந்தைய அரசின் ஊழலுக்கு எதிரான போராட்ட்ங்களை பயன்படுத்தி, அதற்க்கு மாற்றாக, ஊழலுக்கு எதிராக தன்னை முன்னிறுத்தி ஆடசிக்கு  வந்து, அந்த அரசின் ஊழலுக்கு எதிரான சட்ட்ங்களையே நீர்த்துப்போக செய்யும் ஒரு அரசுக்கு எதிராக இதை சொல்வது இன்னும் முக்கியம் என்றே கருதுகின்றேன்.

 

சிலவருடங்களாகவே இந்த சட்டம் சரியாக செயல்படுவது உறுதி செய்யப்படவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து RTI செயல்பாட்டாளர்களால் சொல்லப்பட்டுக்கொண்டிருந்தது. RTI செயல்பாட்டாளர்கள் தாக்கப்படுவதும் வழமையாகி கொண்டிருந்தது, RTI போட்டததாலேயே தாக்கப்படடு  வழக்கு பதியபடட சம்பவங்கள் முந்நூறுக்கும் மேல்,  60 க்கும் மேல் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவிலேயே முதல்முதலில் மாநில RTI சடடத்தை அமலுக்கு கொண்டுவந்தது

 

தமிழ்நாடு. 1997 ம் வருடமே  Tamil Nadu Right to Information Act 1997  னை  திமுக அரசு அமலுக்கு கொண்டுவந்துவிடட்து. அப்போது எந்த சிவில் சொசைட்டி அழுத்தங்களும் இல்லாமல் தமிழக அரசின் வரைவு மூலம் அமல்படுத்தப்பட்ட்து. ஆம், இப்போது நீர்த்துபோகவைக்கப்படட சட்டம் போல் தனி அமைப்பாக இல்லாமல் நிறைய குறைகளோடுதான் அப்போது அது இருந்தது. அதன் பின் அதேவருடம் கோவா காங்கிரஸ் அரசு, அதன்பின் 1998  ல் ராஜஸ்தான் காங்கிரஸ் என்று தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட்து. இப்படி ஒரு மத்திய சடடம் இந்தியாவில் நிறைவேறியது இப்பவும் ஒரு அதிசயம்தான்.

 

நாட்டுநலனை விரும்பும் அல்லது ஊழலை நினைத்து கவலை கொள்ளும் எந்த ஒரு குடிமகனையும் RTI யை நீர்த்து போக செய்யும் இந்த செயல்பாடு துன்புறுத்தவே வேண்டும். இந்திய அமைப்பின் சீர்திருத்தத்திற்கான முன்னெடுப்பை குலைத்து இருபது வருடங்கள் பின்னோக்கி நகர்த்துகிறது இந்த நீர்த்துப்போக செய்தல். இது ஒருவரை உண்மையிலேயே  பாதிக்கவில்லை எனில், அமைதியாக கடந்து போகிறார் எனில் அவரிடம் நாட்டுநலனை முன்வைத்து வேறு எந்த நம்பிக்கையில் உரையாடுவது என்றே எனக்கு தெரியவில்லை. நாளை அவர் ஊழலை எண்ணி அங்கலாய்க்கும்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக கடந்துபோகவே என்னால் முடியும் என்று தோன்றுகிறது.

 

இந்த RTI என்று அல்ல, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்று எந்த அரசியல்சாசன அமைப்புகளின் அதிகாரம் குறைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் நம்மை துன்புறுத்தவே வேண்டும், ஏனெனில் அது மக்களின் நம்பிக்கைமேல் கட்டெழுப்பப்பட்டுள்ளது, under the article of faith. அதன் புனிதத்தன்மை எப்போதும் காக்கப்படவேண்டும். ஒரு நாடு என்பதே இந்த அரசியல்சாசன அமைப்பு மற்றும் அதன் மீதான மக்களின் நம்பிக்கைதான் என்றே நினைக்கிறேன், இந்த அமைப்புகளின் மீதான மக்களின் நம்பிக்கை குலைப்பு அந்த நாட்டின் மீதான நம்பிக்கை குலைப்பு, இதையெல்லாம் குலைத்துவிட்டு பின் எந்த நம்பிக்கையில் நாட்டுபற்றை மக்களிடம் கோரமுடியும்?

 

அன்புடன்

சரவணன் விவேகானந்தன்

 

 

 

அருணா ராய்,பங்கர் ராய் – கடிதங்கள்

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா

பங்கர் ராய்- கடிதங்கள்