மந்த்ரஸ்தாயி- அபியின் கவிதையின் தொனி– ராதன்

 

அன்புள்ள ஜெ,

 

அபி கவிதைகளைப்பற்றி எட்டு ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் சொல்லியிருந்தீர்கள். நமக்கிடையே தொடர்பு விட்டுப்போய்விட்டது. நான் சொந்தத்தொழில் தொடங்கி ஒரு சுற்று வந்துவிட்டேன். இப்போது அபி கவிதைகள் வழியாகவே ஒரு தொடர்பு உருவாகிவருவதில் மகிழ்ச்சி. நான் அன்று எழுதிக்கொண்டிருந்த கவிதைகள் அகவயமானவை என்றும் ஆகவே நான் அபியை வாசிக்கவேண்டும் என்றும் சொன்னீர்கள் என்பது ஞாபகம். அபி கவிதைகளை அன்று வாசித்தேன். அன்றே அவை எனக்கு பெரிய கிளர்ச்சியை அளிப்பவையாக இருந்தன. நான் எழுதாமல்போனதுகூட அபி கவிதைகளை அன்றைக்கு வாசித்ததனால்தான் என்று இப்போது சொல்லலாம்

 

அபியின் கவிதைகளில் மாஸ்ரர்பீஸ் என்பது அந்தி, மாலை என்ற பொதுத் தலைப்பில் அவர் எழுதிய கவிதைகள்தான் என்று அன்று சொன்னீர்கள். இன்று எனக்கும் அதே எண்ணம்தான். தமிழ்க்கவிதைகளிலேயே அந்தக் கவிதைகளை மாஸ்டர்பீஸ் என்றுதான் சொல்வேன். அவை பரவலாக படிக்கப்படவில்லை என்றாலும் அவற்றின் இடம் முக்கியமானது. உதிரி உதிரியாகக் கவிஞர்கள் அந்த வரிகளை நோக்கி வந்துகொண்டேதான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

 

அந்தக் கவிதைகளை தமிழ் மரபிலுள்ளவை என்று சொல்லமுடியாது. நம் மரபிலிருந்து நமக்கு இரண்டு வகையான கவிதைகளே வந்துசேர்ந்திருக்கின்றன. காட்சிகளைச் சுருக்கமாக எழுதும் கவிதை மரபு நமக்கு உண்டு. சங்ககாலம் முதலே அது உள்ளது. அகவயமாக எழுதினால் வெளியே உள்ள படிமங்களை எடுப்போம். அதுவும் மரபுதான். படிமங்கள் பெரிதாக இல்லாமல் வாழ்க்கைச்சித்தரிப்பும் இல்லாமல் ஒருவகையான அகவயமான கவிதைகள் இங்கே எழுதப்படவில்லை.. நான் சென்ற சில ஆண்டுகளாக ஹிந்துஸ்தானி சங்கீதத்தில்தான் வாழ்கிறேன். அதில் மந்த்ரஸ்தாயி மிக முக்கியமானது. உஸ்தாத் படேகுலாம் அலி கானின் மந்த்ரஸ்தாயிக்காகவே அவர் பாடல்களைக் கேட்பார்கள். இந்தக்கவிதைகளையும் மந்த்ரஸ்த்தாயியில் அமைந்தவை என்று சொல்லலாம். தம்புராவைச் சுண்டி ஒரு முனகலோடையை எழுப்புவதுபோல. ராகபாவம் எல்லாம் திரள்வது கிடையாது. ஆனால் நமக்குள் ராகங்கள் உருவாக்கும் வேதனையையும் தனிமையையும் இவை கடத்திவிட்டுவிடுகின்றன.

 

எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்தமான கவிதை இது. என் சொந்த அனுபவமும் கூட. நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது தனுஷ்கோடி போயிருந்தேன். குடும்பச்சுற்றுலா. அந்த வெறிச்சிட்ட ஆளில்லாத ஊர் என்னை என்னவோ செய்தது. இறந்துபோனவர்களால் சூழப்பட்ட ஊர் என்று பிறகு நினைத்தேன். காற்றுகளின் நகரம் என்று ஒரு கவிதைகூட பின்னாடி எழுதினேன்,

 

மாலைஆறுவயதில்

 

நடுவில் நான் நீங்கள் சுற்றிலும்

பதற்றம் இல்லைபோலப்
பாவனை செய்தோம்

சந்திப்பின் தாங்கொணாத வதை.

நம்மைப் பிணித்தது ஒரு விதி
மாலைக் காற்றைக் கொண்டு

காற்றின் ஓரமாக
யாருக்கும் காட்டப்படாத
பாதைகள்
விரைந்தோடின;
என் விரல் ரேகைகளில் வந்து முடிந்தன

ஆள் புழக்கமற்ற என்
பாதைகளைக்
கிழித்துக் குதற
வேட்டைவெறி கொண்டிருந்தீர்கள்

பாறைகளை
ஊதி உருட்டித் தள்ளும்
என் மலைகளின் மீது
என் கனல் சுற்றிவந்தது

கனல் மீதேறவும்
கைகால் வீசினீர்கள்

என்ன தெரியும் எனக்கு
அந்த ஆறு வயதில்?

எனது தூரத்தைத் தாண்டிய பார்வையைத்
தொடராது விட்டுவிட,
சூழும் கிறுக்கல்களிலிருந்து விடுபட்டு
மையம் என ஒன்று இன்றி
இருக்க

என்ன தெரியும்?

கனல்   மீதேறக்
கைகால் வீசிச்
சுற்றிலும் நீங்கள்
நடுவில் நான்

 

இந்தக்கவிதையிலுள்ள அந்த ஆன்மிகமான முதல்தனிமை மந்த்ரஸ்தாயியில் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக கவிதை வாசிப்பவர்கள் சங்கீதம் கேட்பவர்கள் எல்லாருமே நினைவுகூரக்கூடிய ஒரு வயதில் இதேபோல ஒரு மயக்கமான, எங்கோ போய் வரக்கூடிய உணர்வை அடைந்திருப்பார்கள். பெரும்பாலும் ஆறு வயதுதான். நானே முதல்முறையாக ரேடியோவில் லால்குடியின் வயலினைக் கேட்டு இதைப்போன்ற ஒரு திகைப்பை அடைந்தேன். ஆறுவயதுதான். உடலே உருகுவதுபோல. அல்லது மயிர்க்கூச்செறிவதுபோல. எங்கே இருந்தேன் என்றே தெரியவில்லை. எவரோ வந்து சூழ்ந்துகொண்டார்கள். இதுவரை வாழ்ந்த எல்லா இசைமேதைகளும் வந்து என்னைச் சூழ்ந்துகொண்டதுபோல இருந்தது

 

இதே போன்ற ஓர் இடம் ரப்பர் நாவலில்கூட வரும். ஆறுவயதான பொன்னுமணி ஒரு வண்டியில் ஆற்றைக் கடந்துசெல்லும்போது நக்ஷத்திரங்களையும் மின்மினிகளையும் பார்த்து ஒரு பரவசமான நிலையை அடைவார். அது அவரிடமிருந்து விலகிச்செல்லாமல் கடைசிவரை கூடவே இருக்கும். அவரை அன்றைக்கு நக்ஷத்திரங்கள் சூழ்ந்துகொண்டன.

 

நிறைய அற்புதமான வரிகள் கொண்ட கவிதை இது. இதில் சொல்லப்படும் அந்த ‘நீங்கள்’ என்பது எவராகவேண்டுமென்றாலும் இருக்கலாம். அல்லது எதுவாகவும் இருக்கலாம். ஆனால் சூழ்ந்துகொள்ளும் அனுபவம் அபூர்வமான ஒன்று. சந்திப்பின் தாங்கமுடியாத வலி. காற்றில் ஓடும் பாதைகள் என் கைரேகைகளில் வந்து முடிதல். சூழும் கிறுக்கல்கள். பாறைகளை உருட்டித்தள்ளும் அனல் … இப்படி அந்தச் சூழ்ந்துகொள்ளும் அனுபவத்தை அருவமாகவே சொல்லியிருக்கிறார்அபி.

 

இந்த கவிதை தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த ஐந்து கவிதைகளில் ஒன்று என்பது என் அபிப்பிராயம்

 

எம். ராதாகிருஷ்ணன் [ராதன்]

 

 

முந்தைய கட்டுரைமறைந்த உலகங்கள் -கடிதம்
அடுத்த கட்டுரைநடனம்