அபியின் கவியுலகு- ஆர் ராகவேந்திரன்

அபியின் கவியுலகு ஒரு வித புலன் கடந்த மயக்க நிலையில் கொண்டுவிடுகிறது.  . தொடர்ந்து உருவிலிருந்து அருவிற்கும் எதிராகவும்  தாவிக் கொண்டிருக்கிறது.

மாலை, பாதை, வாசனை  போன்ற மறைபொருள் படிமங்களை மீள மீள கையாளுகிறது. “நான்”  என்னும் உணர்வு என்னிலிருந்து வேறுபட்டு நிற்கும் அனுபவம் ஒரு புறமும் நான் பிறருடன் பிரிதலின்றி இணைந்திருக்கும் அனுபவம் ஒரு புறமுமாக விரித்து வைக்கிறது.  புலன்கடந்த அனுபவங்களை சுட்டி உணர்த்துகிறது. இருப்புக்கும் இருப்பின்மைக்கும் ஊசலாடுகிறது.

பருப்பொருள் விவரணம் குறைவாக உள்ள கவிதைப் பரப்பு பாரம்பரியமான வேதாந்த – சித்தர் மரபு – சூஃபித் தேடல்களின் கலைச்சொற்களையும் புற அடுக்குகளையும் பயன்படுத்தாமல் அவை சுட்டும் உள்மனத்திற்கு மட்டுமே  புலப்படும் குறியீடுகளை தெளிவிக்கிறது.

“பிரதேசம் எதுவுமின்றி நான் சூழ்ந்து நான் “  “இருப்பு, இருக்கிறேன் என்றில்லாமல் இருக்கவில்லை என்பது இருக்கும் “ –  இது போன்ற தர்க்கம்  முறிந்துபோன மெய்த்தருணங்கள் படர்ந்துள்ளன.  காலமும் இடமும் வேறுபாடு மறைந்துவிடும்போது இலக்கணமும் மறைந்து விடுகிறது.

அபியின் கவிதைகளில் “பாதை”  வந்து கொண்டே இருக்கிறது.

ஒற்றையடிப்பாதை புரண்டு கொண்டு சலிக்கிறது

ஒரு பாதை வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்கிறது

ஒன்று புல்வெளிக்குள் சென்று மறைகிறது

இவரது கவிதையில் வரும் பிள்ளைக்கு ஆறு வயது. அப்போது  காற்றின் ஓரமாக யாருக்கும் காட்டப்படாத பாதைகள் விரைந்தோடின.

ஒரு பாதை இரவைப்பார்க்க திரும்பி வரவே இல்லை

விரல்களில் இருந்து இறங்கும் பாதை தயக்கமின்றி தோப்புகள் வழியே சென்று,  மலை ஏறிக் காட்டில் மறைகிறது, விரல்களைத் தவிக்கவிட்டு

கவிஞர்கள் பிரிதலின் துயரை பொதுவாக குறிப்பதற்காக கையாளும் நீண்டு கிடக்கும், தொலைதூரத்தில் சுருங்கும் பாதை உருவாக்கும் பெருமூச்சினை நாம் அறிவோம். ஆனால் அதே அகப் பொருளின் உணர்வெழுச்சியை புறப்பொருளில் கையாண்டு உருவாக்குவது ஒரு மெய்யியல் கவிஞனுக்கு சாத்தியமாகியுள்ளது; பாதைக்கு பதில் மார்க்கம் என்ற சொல்லைப் போட்டால்  திறந்து கொள்வது போல உள்ளது.  பல்வேறு கொள்கைகள், கோட்பாடுகள், மதங்கள் , இவற்றால் வரும் தொடர் விவாதங்கள் (வார்த்தைகளின் பயனிலை பற்றி நிரம்பப் பேசி இருக்கிறார்)  முன்முடிவுகள் – இவற்றால் சலித்து ஓடி ஒளிந்து புரண்டு தப்பித்து விடும் பாதையாகக் கொண்டால்  , நாம் திடீரென சித்தர்கள், தாயுமானவர், ராமலிங்க சுவாமிகளின் அருகாமையில் இருக்கிறோம்.

திரும்புதல் கவிதையில் ,

ஊர் (சராசரித்தனம் மற்றும் இனிய அறியாமை என்னும்) விளக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறது.

(தேடலுடைய) நான், பிரபஞ்ச சோகத்தைத் தாங்கிப் பிடிக்கிறேன்.

ஏதேதோ மூலைகளைப் போய் விழுங்கி வெடித்து வேறாகி வருவது திரும்புதலா?

ஆடுகள் மலையிறங்கித் தலைதாழ்த்தி வருகின்றன.

என்கிறார். ஆண்டவரிடமே கேட்பது போல இருக்கிறது.   ஆடுகள் கிறித்துவத்துடன் தொடர்புடையன. . திரும்பும்போது வாசனைகள் வடிவம் பெறுகின்றன . திருப்பத்தில் தயக்கம் நிறைந்து விடுகிறது . திரும்பி விட்ட போதிலும் ஊரின் மாலை விளக்குப் புள்ளிகளுடனும்  கவிஞரின் மாலை பிரபஞ்ச சோகம் திளைத்தும் தான் உள்ளன. புடவியின் ஆதி துக்கத்தை தன்னுள் சுமக்கிறார் அபி. இங்கு வாசனைகள் ஆலய விஞ்ஞானம் மற்றும் வேதாந்தம் குறிக்கும் கர்மப் பதிவுகளாக்க் கொண்டால், ஒரே கவிதையில்  மூன்று மார்க்கங்களின் சாதகனின் மனத்துயரைக் காண்கிறோம்.

ஆதி துக்கம் , அச்சத்தால் அல்ல; தனிமையால் அல்ல வெறும் அச்சமான அச்சம் என்று வெண்முரசில் (சகுனி) காட்டப்படுவது போல, பெருவெடிப்பின் புடவிப் பின்புல அலையின் துளிகளைப் போல, கவிஞர் இடமில்லா இடத்தில் காலமில்லாக் காலத்தில் நின்று கொண்டு மொத்தத் துயரையும் தன் மேலேற்றிக் கொள்கிறார்.

ஒரு கவியில்  (அறிவு )சூரியனின் கதிர்கள் (மனதின்) அடியில் அடைய முடியாமல் திரும்பி விடுகின்றன. “ நினைவுகள் பதுங்கி உள்ளே ஒடுங்கி காடுகளிடையே ஊர்ந்து பரவின  :” என்கிறார்.ஆழத்தில் நினைவுகளின் சாரம் செல்ல, எண்ணங்களில் மனம் ஊர்ந்து பரவுகிறது. சவுக்கு என்று மேல் மனசலன்ங்களைக் கொண்டால்,   காடு என்னும் ஆழ்மனம்  தர்க்க அறிவு எட்டா ஆழத்திலிருந்து எட்டிப்பார்க்கிறது.

“அது தான் சரி” (கவிதையில் )  என்று திண்ணையில் நம்மை உட்கார வைத்து நிதனமாகப் பேசுபவர் அறியாதிருத்தலின் இன்பத்தைக் காட்டி, இருந்தால் அறிவு வரும் என்பதால் இல்லாதிருத்தலே சரி என்கிறார். அதன் வசதி என்னவென்றால் தெருப்பக்கம் போகவேண்டியதில்லை.

அபியின் கவிதை உருவாக்கம்    சொற்களை உதைத்து எம்பி எண்ணங்களைப் பிடித்து, எண்ணங்களின் பின்னால் நிற்கும் ப்ரொட்டோ எண்ணங்களைப் பிடித்து மனதின் ஆழம் சென்று மனதின் பின்னால் இருக்கும் ஆத்மாவை தொட்டு கிழிக்கும் முயற்சி., அன்றாடத்தில் முரண்படுபவை இக்கவியுலகில் இயைபு கொண்டிருக்கின்றன. பிரலயக் காட்சிகளும்  மோன லயக்காட்சிகளும் மாறி மாறி விரிகின்றன.

இந்த வரிகளில் தர்க்கத்தின் இலக்கணங்கள் காணாமல் போய்விடுகின்றன –  ஒரு பறவை தொலைவிலிருந்து தொலைவுக்குப் பறந்து கொண்டிருந்த்து;   இருள் இருண்டு காட்டிய வெளிச்சம்

“மாலை “ கவிதைகளின் வரிசை, மெய்யியலை புதிய பார்வையில் காட்டுகிறது:

மாலை- தணிவு கவிதையில் –

“அறைபட்டுத் திரும்பும் விவாதங்கள்; முடிவுகள் அரைகுறையாய்  உளறி மறைந்தன”

நிகழும்போதே நின்றுவிடும் காலத்தின் கணத்தால் விவாதம் மேலும் போகாமல் தத்தளிக்கிறது. “

“சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள்; சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்” என்று பாரதி நம் நினைவில் வந்து போகிறார்.

கடைசியில் தணிந்து விடுகிறது   “கவிதை. (அறிவுப் ) பசியும் (ஞான ) நிறைவும் இரண்டும் ஒன்றாகி விட்ட என் தணிவு”

அபியின் கவிதைகளைப் புரிந்து கொள்ள முனையும் போது அது தரும் சொல் கடந்த ஆழ்மன கிளர்ச்சியை இழக்கக் கூடும். ஆயினும் அநிர்வசனீயத்தை சொல்லி சொல்லித்தான் சொல்லில் இருந்து எழும்ப முடியும் போல.

ஒரு கவியில் வானம் விஷ மூச்சால் தத்தளிக்கிறது. அறிந்தவைகளின் மறுபக்கங்கள் (போதாமைகள், கலைத்துப்போடும் புதிய அறிதல்கள் மற்றூம் ஆதி அவித்யை) வானத்தை மூச்சு முட்டச் செய்கின்றன.  அறிவு புழுக்கமாகிறது. அறியாமை மழையாக அதை விரட்டுகிறது.  தூய்மையான அறியாமை !

தேடல் தேடிக்கொண்டே இருக்கிறது. வாழ்வைப் பயிலும் காட்டாறுகள் உண்டு  / இல்லை என்பவற்றின் மீது மோதிச்சிதறுதலால், அண்டம் புதிய வரவுக்குத் தயாராகிறது.  உள்நுழைய அறியாமல், முதலும் முடிவும் மூச்சொன்றில் கூம்பிச்சேர்ந்த அம்புநுனியில் தேம்பி அடங்குகிறது தேடல். பின்னணியில் பாரதி தெரிகிறார் “ அட, மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படலாகாதோ “ என்ற தேம்பல் தேடலுடன்.

நிரந்தர காத்திருத்தல் ரூமியையும் கிப்ரானையும் புலப்படுத்துகின்ற்ன.  “ வெற்றி – தோல்வி இன்றித்திரும்பும் என்வருகை” ஒரு  வேதாந்தப் பார்வையில் உள்ளது

மாலை- செய்முறைகள் கவிதையில் ‘விடை’ என்ற ஒன்றின் இன்மையைக் காட்டுகிறார்.

“மனசின் அனந்த கோடிச் செய்முறைகள் கிளர்ந்து கொள்கின்றன- விடை என ஒன்றில்லை என்பதைச் சுட்டிய வண்ணம் “

அடைமொழிகள்  ஊற்றுத் துளைகளை அடைத்துள்ளன”

விடைகள் மிகவும் மெலிந்தவை –

இங்கே கேள்வியே கவனிக்கவேண்டியவை. . கட உபநிடதத்தில் நசிகேதசின் வினாக்களையும் மரணக்கடவுளின் விடைகளையும்  பார்க்கையில் மரணத்திற்குப் பின் என்ன என்ற கேள்விக்கு மழுப்பலான அல்லது தொலைதூர சுட்டலே விடையாகக் கிகடைக்கிறது. யமனின் விடை  – ஒன்று கேள்வி கேட்டவனைப் புகழ்கிறது. அல்லது இதற்கு பதில் தெரிந்து கொள்வதன் அவசியத்தை சிலாகிக்கிறது.  ஓம் எனும் சொல்லின் மேன்மையையும் ஆன்மாவின் நுண்மையையும் பேசிவிட்டு புலனடக்கத்தின் தேவையையும் சொல்கிறது. பின்னர் எழுந்திரு, விழித்துக்கொள் என்ற அறைகூவலை விடுக்கிறது  விடையை சொற்களாகப் பார்ப்பதால் ஒரு பயனுமில்லை  அபியின் கவிதைகளில் வரும் பிள்ளை சொற்கள் விவாதங்களாக மாறி தரப்புகளாக மாறும்போது நசுங்கிப்போகிறான். அவனுக்கென்று ஒரு மாலை இருக்கிறது.  யாருமறியாமல் நீண்டு போகிற பாதை இருக்கிறது. அது போதும் அவனுக்கு.

அவன் சொல்கிறான் – ‘முந்தாநாள் பார்த்த விடை – அசட்டு மணம் பரப்பி நேர்கொண்டது . நெளியும் விடையின் கவலை  – வீசிய காற்றில் (விடையின்) சாகசங்கள் சாம்ந்திப்பூ இதழ்போல பிய்ந்து கிடந்த்து.

பிள்ளை விடையைக் கொஞ்சம் பகடியுடனும் அக்கறையுடனும் பார்த்துக் கொள்ளும் இடமிது.

தீராநதி பேட்டியில் அபி கூறுவது போல இந்தப் பிள்ளை மலையைப் பார்த்துக் கொண்டே ஏகாந்தமாக இருக்கிறான். வீட்டின் வாசலில் அமர்ந்து கொண்டே தன்னுடன் தான்  மௌன உசாவலில் ஆழ்கிறான்.

கவிதை நம் முயற்சி இல்லாமல் நம்முள் நுழையவேண்டும் என்கிறார் அபி . ஆனால் அவர் கவிதைகளை உள் நுழைய வைக்க கதவைத் திறந்து வைத்துக்கொண்டிருக்கவேண்டும் நாம். அல்லது திறந்த கதவை யாராவது தெளிவுறுத்த வேண்டும், ரூமிக்கு நேர்ந்த்து போல

மாற்றல் கவிதையில்  “பின்னணியை மாற்றிக் கொள்வோம்; மாற்றிக் கொண்ட இடைப்பொழுது – பின்னணி இல்லாதது – இடைப்பொழுதுகளையும் மாற்றிக்கொள்வோம் – பின்னணிக்கு தளங்கள் இருப்பதால் தளங்களையும் தளங்களில் உள்ள நடமாட்டங்களையும் அவற்றின் சூழல்களையும் சாயைகளையும் மாற்றிக் கொண்டு, கடைசியில் ஏதாவதுகளையும்  மாற்றிவிட்டு மாற்றங்களையும் மாற்றிக் கொள்வோம் ‘ என்கிறார்.

நவீன இயற்பியல் கூறும் ‘Frame of Reference” நினைவுக்கு வருகிறது. பின்னணி அல்லது தளத்தை வைத்தே உறுதியான விதிகளை உருவாக்க முடியும். அது அசையும் போது நிலைத்த உண்மைகள் இலைத்துளிப் பனியாய் நடுங்கிவிடுகின்றன.

அபியின் நாயகனான பிள்ளை சொற்களை அஞ்சுகிறான்.  (கூட்டித் தள்ளிய குப்பைகளிடையே உப்பு ஊறிக்கிடக்கும் வார்த்தைகள்). அவன் உணர்ந்திருக்கிறான் அடையவேண்டிய இலக்கு என்ற ஒன்று இல்லை என்று (இங்கிருந்து இங்கு போய்த் திரும்புதல்). அவனது நோக்கம் மாலையிடம் ஒன்றாவது தான், : ஒரு சிறு சைகைக்கும்  எண்ணத்துக்கும் கூட இடையிடுவதற்கின்றி” .   கவிதையில் சைகை என்பதைக் கடந்து கவிதையே ஒரு சைகையாக வேண்டும் என்று பேட்டியில் அபி சொல்கிறார்.  சைகையையும் கடந்த ஒன்றுமில்லாததை நோக்கி இங்கு கவி எழுகிறது

அபி கூறும் மாலை என்பது காலத்தின் குறியீடல்ல; அது எண்ணங்களும் சிந்தனைகளும் சென்று விழுந்து விடும் பாழ் என்று கருதுகிறோம். அது அருவத்தின் விளிம்பு,  வெட்டவெளியில் எடையின்றி தொடர்ந்து தலைகீழாக விழுந்து கொண்டிருப்பதன் துவக்கப் புள்ளி. பிறப்பு – இறப்பின் சந்தி. நியுட்டன் விதிகளுக்கும் க்வான்டம் குழப்பத்திற்கும் இடைப்பட்ட புள்ள்யில்லாப் புள்ளி, மையமில்லா மையம் ; இங்கு  -அங்கு என்பது இல்லாமலாகி விட்ட எலக்ட்ரான் மேகம்.

அந்தப் பிள்ளையின் நோக்கம் பருவுலகு கடந்து ஒன்றுமில்லை ஆவது. (மாலையைப்பயில, அரவமற்ற என் மூலைகளில் உறிஞ்சப்படுவேன்)

அபூர்வமாக பற்றுக் கோட்டைத் தேடுவதுமுண்டு (அடிவார உராய்வில் முகம் பதியக் கிடப்பது)

பாழ் எனும் தூய்மையையும் வாழ்வில் பொருள் தேடும் பேதைமையையும் ஒப்பிடும் அபி, “த்வனியிடத்தில் அர்த்தம் எதுவும் சிந்தி விடவும் விடமாட்டேன்” என்கிறார்.  ஆதி ஒலி என்னும் அனாகதம் அதாவது பிரம்மத்தின் மூச்சினை நினைவுறுத்துகிறார். அந்த மூச்சைப் பற்றிய பேச்சு வளர்ந்து கொண்டே போய் பொங்கல் வடை வினியோகத்தில் முடிந்து விடுவது தான் சித்தர்களைப் பித்தர்களாக்கி இருக்கிறது

தேடலின் வலியே எளிய பிரமைகளின் வழி செலுத்துவது தான் என்னும் அபி, விவாதங்களின் பயனின்மையைக் குறிக்கப் பயன்படுத்தும் சொற்கள் அழகானவை – உண்மை தன் பழைய இட்த்திற்குத் திரும்பி வந்து விட்டது – காலியிடம்

நண்பன் என்னும் படிமம் தொடர்ந்து வருகிறது. பகவான்  ராமகிருஷ்ணர் தியான நிலையில் தன்னுள் இருந்து வெளிவந்து தன்னுடன் கூடிக்குலாவி தன்னையே சேரும் ஒரு அழகிய இளைஞனைக் காண்கிறார் –இந்த ஆன்மத் தோழன் அல்லது ‘நான்’ இன் பிம்பம்  அபியின் “மாலை – குழப்பம் “ கவிதையில் உறுதிப்பாட்டுடன் உலகச் சந்தையில் வாழ்க்கை வியாபாரம் செய்பவர்களைப் பார்த்து குழம்புகிறான்.

பார்க்கக் கண் தேவையில்லை ; பார்ப்பதற்கும் இல்லை என்றிருக்கும் ஒன்றை, மாலைச் சலன்ங்களிடையே சிறு ஒலி எழுப்பித்திரியப் பார்த்த்தாக இமைகளைக் கவித்துக் கொண்டு பரவசத்துடன் சொல்கிறார்கள்

இங்கே, போலி ஆன்மீக வாதிகளை எள்ளுவதுடன் நின்று விட்டால் சராசரிக் கவிஞன். ஆனால் அபி உபநிடதத்தை எழுப்பிப் பொலியச்செய்கிறார் (எதைக் கண்ணால் பார்க்க முடியாதோ, எதன்றிக் கண் பார்க்காதோ அது – கேன உபநிட்தம்)

முன்முடிவுகளும் கற்பிதங்களும் நான் இல்லாத நேரம் புத்தக அலமாரியில் வந்து குடைந்து செல்பவை என்பது அழகிய உருவகம்.

மாலை – பாழ்  ;-      பாழின் இயல்பு மையத்தில் வந்து படிந்து கொள்வது. இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லைத் திணைக்கானது. அபி காட்டும் பிள்ளை  “தெருவும் நானும் என இருத்தலே இருத்தல் நிமித்தம் என்கிறான்.   சுயத்தை அடைய, காலம் கடந்த காத்திருப்புக்கு , பாழும் வீட்டில்  நுழைந்து முடங்கிக் கொண்ட பாழும் தெரு சாட்சியாகிறது

ராமகிருஷ்ணரின் அமுதமொழிகளில் ஒரு பிள்ளை வருகிறான். அம்மாவிடம் ‘ நான் மலம் கழிக்கும் நேரம் வரும்போது எழுப்பி விடு” என்கிறான். சிரித்துக் கொண்டே தாய் சொல்கிறாள் “குழந்தாய், அவ்வுணர்வு வந்தால் நீயாகவே எழுந்துவிடுவாய் “என்று.  இது மெய்மைவிழிப்பு அல்லது தேவ அழைப்பு வரும் நேரத்தையும் காத்திருத்தலையும் காட்டுவதற்காக குருதேவர் சொன்னது.  அபியின் பிள்ளையும் இது போன்ற குழப்பங்கள் நிறைந்தவன். துறுதுறுப்பான அகத்தேடல் கொண்டவன். அதை மொழிகளில் வெளிப்படுத்தாமல் நினைவுகளின் மூலம் பேசுபவன். தர்க்கக் குப்பைகளுக்கு அஞ்சுபவன்.

ஒரு வேளை முதன் முதலாக இயற்கையின் அழகு அல்லது பிரம்மாண்டத்தின் மூலம் மெய்யியல் அனுபவம் பெற்றவன் தத்துவம் என்ற சொல்லாடல் கண்டறியப்படும்முன் அடைந்த அனுபவங்கள் அபியின் கவிமொழிபோல இருந்திருக்கலாம்.  மீண்டும் ராமகிருஷ்ணரின் சொற்களை எடுத்துக் கொண்டால் “ அகக் காட்சியை ப் பற்றிப்பேசும்போது ஒரு நிலைக்குமேலே யாரோ பேசவிடாமல் தொண்டையை அழுத்துகிறார்” என்றும் “ ஒரு பெரும் சுவரின்  மீது சிரமத்துடன் ஏறும் வெகுசிலர் மறுபக்கம் உள்ள காட்சியைக் கண்டதும் ஆ என்று வியந்து அங்கே குதித்து விடுகிறார்கள். “ இது போன்ற விளக்கமுடியாத தேடல்களையும்  அடைந்தபின் எய்தும் வாதம் புரியா நிலையையும் விளக்கச் சொற்களாகப் பிதுக்கும்போது வருபவை போன்றவை அபியின் கவிதைகள்

தானே கண்டுவிட்ட உண்மை மதம் கொள்கைகளைக் கடந்ததாக உள்ளதால்  தனது சொந்த சோதனைச்சாலைக்குச் சென்றுவிடுகிறார். “ இருள் வெளி இரண்டிற்கும் ஒன்றிடம் என்ன” என்ற ஔவையாரும்  “பகல் இரவுகள் தஙகள் வேஷத்தைக் களைந்து விட்டு உறங்கிக் கொண்டிருக்கும் இட்த்தில்” வாழ விரும்பும் அபியின் பாடல் தலைவனும் ஒரே கோட்டின் வெவ்வேறு புள்ளிகள்

கால் பந்து கவிதையில் உள்ளிருக்கும் காற்றுக்கும் வெளியே உள்ள காற்றுக்கும் ஆன உறவு, கடாகாசம் – குடாகாசம் விளக்கத்திற்கு புதிய உவமை.

கவிதைகள் சுவர் வழியே பயணிப்பவை; சுவர் விலகலாம் , கதவு விலகுவதில்லை      என்கிறார்.  “மொத்த சுவரே மாயை எனும்போது கதவைத்திறக்க ஏன் போராடுகிறாய் “ என்ற ரூமியின் சொற்களை வேறு வடிவில் பார்க்கிறோம்.

தோல்வி,  வாசனை இல்லா நிலையைத் தருகிறது. இவ்வுணர்வை fatalism அல்லது nihilism என்று மேற்கு அறிஞர்களும் திண்ணை வேதாந்தமாக இந்தியர்களும் புரிந்து கொண்டது தான் காலத்துயர்

சாம்பல் நிறத்தை வலியுறுத்துவது புத்தரின் பொன்னான மையப்பாதை என்று எடுத்துக் கொள்ள வாசகப் பிள்ளைகளுக்கு உரிமையுண்டு.

பார்ப்பவன் – பார்த்தல்- பார்க்கப்படுபொருள் இடையே உள்ள உறவு (ஒருமை) திருக் – திருச்ய  விவேகம். அபியின் புதிய கொள்கை “ பார்ப்பவைகளுடன் பார்க்கமுடியாதவை பிரித்துணர முடியாதவை ஆகிவிட்டன” என்கிறது

என் விதி கவிதை எண்ணத்தின் ஆதியை ஆராய்கிறது.

நினைக்க நினைக்க முன் அவை உருவாகி விடுகின்றன. நினைவின்  தொடுதல் அறியாதவை அவை “

எண்ணத்தை active ஆக எண்ணுவதற்கும் எண்ணம் நமக்கு நிகழ்வதற்கும் உள்ள வேறுபாடு சிலிர்ப்பூட்டுவது. நினைவு தொடா எண்ணம் என்றால் சித்தக் குளத்திலிருந்து வராத அல்லது மனம் உருவாக்காத எண்ணங்கள். வேதம் ‘அறிவிக்கப் பட்ட’ முறை, தீர்க்க தரிசனம், அல்லது ராமானுஜனுக்கு கணக்குகள் தோன்றியது போன்ற நிகழ்வை புதிய சொற்கூட்டில் வெளிப்படுத்தியது அழகு

ஒன்றும் செய்யாதது போலிருந்து எல்லாம் செய்து கொண்டிருப்பேன் – என்னும்போது  ‘ ஒன்றுமே வேண்டாது உலகனைத்தும் ஆளுவர் காண்’ என்னும் பாரதியின் தெரிகிறார்.

கனவு அன்று கனவு கவியில் பின்புலமற்ற தூய நிலவிரிவைக் காட்டும் அபி முடிவில் ‘கனவு போன்று இருந்தாலும் கனவு அன்று அது “ என்கிறார் “தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்  “ என்னும் பத்திரகிரியாரின் நிலத்தில் நிற்கிறோம்.

ராகம் கவிதையில் கவிதையின் மூச்சு ஒன்று கவிதையை மறுத்துக் கடல்வெளி முழுவதையும் கரைக்கத் தொடங்கி விட்டது. இது கவிதையிலிருந்து கவிதையின்மையை வெளியேற்றும் நிகழ்வு

“தெரிந்து கொள்வது “கவியில் வேற்றுமை உருபுகளின் கலங்கலைப் பார்க்கிறோம்.

“என்னுடையவை என்பவை என் உருவை எதிர்நோக்கி  எனக்கு முன்னரே இருந்ததால் அப்போது அவை யாருடையவை என்று தெரியவரும்போது நான் உரு ஆகினேனா என்று தெரிந்து கொள்வேன்” என்றும் “ நினைவின் அஸ்திவாரம் என்னுடையதல்லாத அடர் இருள்” என்றும் வாசிக்கும்போது  இங்கு நாம் ஜெ –யின் கோவை கட்டண உரையில் சொன்ன கருத்திற்குச் செல்கிறோம் .  கருத்து முதல்வாதத்தின் அடிப்படை, உருவாகும் உயிரின் பார்த்திவப் பரமாணுவின் பிறப்பின்  ஒரு கணம்  முன்னே அது குறித்த  கருத்து நிலை  இருந்தது என்பது  . அந்த நானற்ற நான் அபியிடம் அடர் இருளாக  உள்ளது.

காலம்  ஒரு தொடர் உருவகமாக வருகிறது. காலம் – சிறை கவிதையில் பிரக்ஞை விழிப்புற்றதால் காலம் சிறைப்பட்டு விடுகிறது.   காலம் – புழுதியில் நினைவுகளின் நெரிசலாக உள்ளது . “காலம் –நீச்சல் “ கவியில் காலநதியில் நீந்தலாம்; ஆழலாம்; அப்புறம் எப்போதாவது வெள்ளைவயிறு காட்டி மிதக்க்லாம், வேறென்ன செய்ய? “ என்ற அங்கலாய்ப்பு.

காலம் – எல்லாம் நான்,  சர்வ சமத்தைப் பேசுகிறது. படைப்பைப் பற்றிப் பேசுபவர்  “புதிதாய்க் கண் திறப்பவற்றில் தம்மை ஒற்றிக் கொடுத்து அனுப்புத”லைக் காட்டுகிறார். மரபணு பிரதியெடுத்தலைச் சொல்லும் அற்புதச் சொல்லாடல்

சித்திரகூடம் படைக்கும் கணத்தைப் பாடுகிறது.

“உருவங்கள் வேண்டி கணங்களிடம் இரக்கும் ஓவியங்கள் –வினாக்களை முதுகில் சுமந்து வாயோரம் சூனியம் நுரைக்கும் எல்லாம் – உள்ளின் உள்ளிருந்த அவன் தன் மௌன வெளியை விலக்கிப் பிரித்து ஒரு கணம் நோக்கினான்”

இந்த உக்கிர வரிகள் ஆன்ம தரிசனம் அல்லது     மீண்டும் சிருஷ்டிப் போட்டியில் காத்திருக்கும் பரமாணுவின் காத்திருப்பு எனலாம்

வெளிப்பாடு கவிதையில் ஒரு விதை நீரையும் மண்ணையும் உண்டு விதையாகவே வளர்ந்து கொண்டிருக்கிறது, உள்ளே அடர்த்தியாகப் பேச்சுக்குரலைக் கேட்கிறார். தங்க முட்டையாகிய ஹிரண்ய கர்ப்பனாகிறது இங்கு விதை

மாப்பிள்ளைகள் கவிதை வேறு ஒரு தளத்தில்.  வெளியேற்றத் திறந்த கதவிடுக்கின் வழியே முட்டி மோதிப்பீறிடும் கன்னிமனம் – சமூகவியல் கவலை என்று தோன்றுகிறது. அல்லது இங்கும் குறிப்புப் பொருள் உள்ளதா?

இருத்தலில் நடத்தல்  கவிதை  “நான்” என்னும் வியக்தியைப் பாடுகிறது. கீழ்க்கல்லும் மேல் கல்லும் உரசிப் பொறிசெய்து  திரிகொள்ளுதல்  தைத்திரிய்  உபநிடதத்திற்கு அழைத்துச் செல்கிறது ( பூர்வ ரூபம் – உத்தர ரூபம் –சந்தி – சந்தானம்)

புள்ளி கவிதையில்  காலத்தின் இடைத்திட்டையில் காத்திருப்பு நிகழ்கிறது. ஒரு அணுத்துகள் புள்ளியுள் நுழைய,புள்ளி தூரிகையின் ஒரு நார் நுனி தேடிக் காத்திருக்கிறது. புருடன் – பிரகிருதி சேர்க்கை நிகழாத ஆதிப்புள்ளி இது.

மூலைகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருக்கிறது. பருவற்ற பருப்பொருள் இது.

நினைவின்மை – 2 இல் புதருக்கு நெருப்பு வைக்கிறார். நெருப்பைத் தன் வேரில் கட்டிப்போட்டுச் சிரிக்கிறது புதர். இந்த நெருப்பு பாரதியின் அக்கினிகுஞ்சல்ல, காட்டை வேக வைக்க.

பிரிவினை கவிதையில் காலத்தின் கடைசிச் சொட்டு சொட்டிவிடும்  கணம் உலரும் அக்கணத்தில் காலம் கடந்து விடுகிறது

வயது – அழகிய மாயாவினோதக் கதையைச் சொல்கிறது.  தரை காணாமல் போய் சூனியம் அப்பிக் கொள்ள, நீந்து வந்த வயதுகள் வினாடிகள் மொய்த்து விட்ட இடத்தில்  மிதக்கும், இங்கிருந்து பின்வாங்கவே முடியாது

கிலுகிலுப்பை கவிதை படைக்கும் விழைவையும் அணுவின் சலிப்பையும் பேசுகிறது.  சப்தம் வழுவழுத்து  நகர்ந்து நுழைந்தது  – உயிர் உருவாக்கம் எனலாம்.   . ஆதியில் சொல் இருந்தது அதுவே படைப்பின் மூலம்.

அணைத்துப் பின் ஒன்றையொன்று சுருக்கிக் கொண்ட இருமூச்சுகள் சுழன்று நீண்ட பாம்புகளை, குண்டலினி என்று கொண்டால் இரு மூச்சுகள் இடை  – பிங்கலை நாடிகள் ஆகலாம்.

நிசப்தமும் மௌனமும் கவியில் படைப்பு –ஒடுக்கம் என்று வரும் மாறாச் சுழற்சியைக் காண்கிறோம்

“ஊர் “இல் முக்காலம் முயங்குதல் பாடு பொருளாகிறது.  “ பொழுதின் நினைவும் நினைவின் பொழுதும் இடைச்சுவர் தகர்ந்து ஒன்றினுள் ஒன்றாகி ஊர் ஆகின்றன”

எதன் முடிவிலும் – இரு பறவைகளைக் காட்டுகிறது. இரண்டும் ஒன்றே. “ ஏறிய நானும் கீழே நின்ற நானும்” . முண்டக உபநிடதம் காட்டும் இரு பறவைகளில் ஒன்று இனிப்பு – கசப்பு என்னும் (வினைப்பயன் ) பழங்களை உண்ண, இன்னொன்று தன்னில் தான் தோய்ந்து தன்மயமாகி விளங்குகிறது. அபியின் இரண்டு பறவைகளுமே  கசப்பைச் சுவைத்து விட்டு, கீழே எறிந்து விட்டு மறுபடி நினைத்து நா ஊறுகிறார்கள்.

இணையத்தில் கிடைக்கும் 135 கவிதைகளைத்தவிர வேறு கிடைக்கவில்லை. எனினும் தியானம் செய்யவேண்டிய வரிகள் பழங்காலத்து ஞானக்கவிகள் திரண்டு வந்த ஒரு சொட்டு அபியின் கவிதைகள். “தன்னை மறந்து தலத்து நிலைமறந்து கன்மம் மறந்து கதிபெறுவதெக்காலம்” என்ற பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பலை புதுக்கவிதையில் புதிய உணர்வில் மீட்டெடுப்பது அந்தச் சொட்டு. அரிய கவிகளை அடையச்செய்ததற்கு நன்றி.

ஆர் ராகவேந்திரன்

***

அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா

அபி – கடிதங்கள்

அபி, விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்

அபி,மிர்ஸா காலிப்- கடிதம்

கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்

அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

முந்தைய கட்டுரைமோடியும் முதலையும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஆயிரம் மணிநேர வாசிப்பு -சாந்தமூர்த்தி ஏற்புரை