அபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்

அபி கவிதைகள் 150

அபி கவிதைகள் அழியாசுடர்கள்

 

அன்புள்ள ஜெ,

 

அபி கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நாலைந்து மாதம் முன்னதாகவே இப்படி விருதுபெறும் படைப்பாளிகளை அறிமுகம் செய்வது மிகவும் நல்லது என நினைக்கிறேன். பெரும்பாலும் கடந்த தலைமுறைப் படைப்பாளிகளுக்கே விருதுகள் அளிக்கிறீர்கள். அவர்களில் பலர் நம்மால் அறியப்படுபவர்கள் அல்ல. பொதுவாக இன்றைக்கு ஏதேனும் வகையில் முகநூலில் பேசப்படும் படைப்பாளிகள்தான் அறியப்படுகிறார்கள். அவர்களே வந்து வசைபாடவேண்டும். அல்லது வேறு எவரேனும் அவர்களை வசைபாடவேண்டும். அதற்கு அரசியல்தேவை. தூய இலக்கியவாதிகளை எவரும் கவனிப்பதில்லை.

 

ஆகவே நீங்கள் விருது அளிக்கும்போதே நாங்கள் அவர்களைக் கேள்விப்படுகிறோம். அவர்களை வாசிப்பதற்கு பொழுது தேவை. அவர்களை அவ்வளவு எளிதாக வாசித்துவிடவும் முடிவதில்லை. அவர்களைப் பற்றிய கடிதங்கள் குறிப்புகள் வழியாகவே அவர்களை புரிந்து வாசிக்க முடிகிறது. ஆகவே இந்தக் காலகட்டத்தை அதற்காகப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

 

அபியின் கவிதைகள் எனக்கு ஒரு வகையான கிரியேட்டிவான மனக்குழப்பத்தைத்தான் உண்டுபண்ணுகின்றன.

யோசிப்பும் நின்றுபோன
மௌனம்
என் வடிவில் இருந்த மௌனம்.

 

என்பதுபோன்ற உதிரிவரிகளாகவே இன்றைக்கு அவருடைய கவிதைகள் எனக்குப் பிடிபடுகின்றன. ஆனால் இவையெல்லாமே ஒருவகை தியான அனுபவத்தின் விளிம்பிலிருக்கின்றன என்று தெரிகிறது. குர்ஜீஃப் தியானம் என்பது முற்றாகத் தனித்து இருத்தல் என்கிறார். அந்தத்தனிமையை உணர முடிகிறது இந்தக்கவிதைகளில்.

 

ஆர். ராஜசேகர்

 

அன்புள்ள ஜெ,

 

அபிக்கு விஷ்ணுபுரம் விருது மகிழ்ச்சி அளிக்கிறது. அபியைப் புரிந்துகொள்ளும்படி எழுதப்படும் நீண்ட கட்டுரைகள் வெளிவரும் என நினைக்கிறேன். அவருடைய கவிதைகளின் பிரச்சினை என நான் நினைப்பது அவை நாம் இங்கே உணரும் எந்த வாழ்க்கைச்சூழலுடனும் இணைந்திருக்கவில்லை என்பதுதான்.

 

நாம் இன்றைக்கு கவிதையை நம்முடைய mundane உலகத்துடன் சம்பந்தப்படுத்தி வாசிக்கவே பழகியிருக்கிறோம். எல்லாக் கவிதைகளிலும் ’வாழ்க்கையை’ எதிர்பார்க்கிறோம். வாழ்க்கை என்றால் அன்றாடவாழ்க்கை மட்டும் அல்லதானே? ஆழ்ந்த தனிமையும் கனவும் எல்லாம்கூட வாழ்க்கைதானே? அந்தச்சித்திரத்தை இந்தக்கவிதைகளிலிருந்து நான் அறிகிறேன். அந்த நிலையுடன் ஒவ்வொரு கவிதையையும் பொருத்திப்பொருத்தி வாசிக்கவேண்டியிருக்கிறது. அபி கவிதைகளின் காண்டெக்ஸ்ட் ஒன்றுதான். மௌனி கதைகளிலும் இதேபோல காண்டெக்ஸ்ட் மாறுவதே இல்லை. அதப்புரிந்துகொண்டால் அவரை எளிதில் அணுகமுடியும்

 

எம்.ராஜேந்திரன்

 

அன்புள்ள ஜெ

 

அபி அவர்களுக்கு விருது வழங்கியிருப்பது சிறப்பு. ஆனால் ஒரு பேச்சு உலவுகிறது. விஷ்ணுபுரம் விருது பெரும்பாலும் அகவயமாக எழுதுபவர்களுக்கு மட்டுமே செல்கிறது என்று. விஷ்ணுபுரம் விருதுக்கான அளவுகோலாக இந்த subjective writing சம்பந்தமான ஒரு இலக்கணம் உள்ளதா என அறிய விரும்புகிறேன்.

 

அல்லது அங்கீகாரம் இல்லை என வருந்தும் மூத்த படைப்பாளிகள் என்பதை அளவுகோலாகக் கொண்டிருக்கிறீர்களா?

 

எஸ்.டி.கண்ணன்

 

அன்புள்ள கண்ணன்

அ. விஷ்ணுபுரம் விருதை பெற்ற ஆ.மாதவன், பூமணி, சீ.முத்துசாமி, தெளிவத்தை ஜோசப், வண்ணதாசன் ஆகியோர் அகவயமாக எழுதுபவர்கள் அல்ல

ஆ. விஷ்ணுபுரம் விருது எவரையும் ‘கண்டுபிடிக்கவில்லை’. விருதுபெற்றவர்கள் அனைவருமே ஏற்கனவே விமர்சனங்கள் வழியாக தெளிவாக நிறுவப்பட்ட முன்னோடிகள்.

இ. விஷ்ணுபுரம் விருது அவர்களின் முதியவயதில்தான் கொடுக்கப்படுகிறது. விருதுகள் பற்றிய மகிழ்ச்சிகளை எல்லாம் அவர்கள் கடந்துவிட்டிருப்பார்கள் அப்போது. எங்கள் மீதான நல்லெண்ணத்தால், இலக்கிய என்னும் இயக்கம் நிகழவேண்டும் என்பதனால் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஈ. அபி அவர்களுக்கே அவருடைய துணைவி இருக்கும்போது இவ்விருது அளிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இப்போதைக்கு இது அவரைப் பொறுத்தவரை எங்களுக்காக ஏற்றுக்கொள்வது மட்டுமே

ஜெ.

 

அபி – கடிதங்கள்

கவிஞர் அபி பேட்டி- காணொளி

கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்

அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

 

 

முந்தைய கட்டுரைமோடி,முதலை -கடிதம்
அடுத்த கட்டுரைஒரு வேண்டுதல்