நீர்மடி- தாமரைக்கண்ணன்

நிலை பெயர்தல் வாழ்வின் மாறாமைகளுள் ஒன்று, தேடலும் அச்சமும் இடப்பெயர்வுக்கான முதற்காரணிகள். பயணமே நிலத்துக்கும் உயிர்க்குவைகளுக்குமான ஓயாத ஊசலாட்டம் தான். இம்முறை மழைப்பயணம் பற்றி அறிவிப்பு வந்தவுடன்  பயணிக்கலாம் என்று தோன்றியது, இடமும் கிடைத்தது.

நான் தமிழக எல்லை தாண்டி அலுவல் நிமித்தம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் ஓரிடத்திலும் நின்று அதன் அழகை நுகர்ந்ததில்லை. பயணக்குழுவில் நான்தான் புதுமுகம், ஏனையோர் அவரவர் இடத்தில் பொருந்திவிட்டிருந்தனர்.

அதிகாலை ஷிமோகா ரவி அவர்கள் இல்லத்திலிருந்து நம் பயணம் துவங்கியது. தும்கூரில் தட்டு இட்லி உண்டபின், நமது முதல் இலக்கான பகாலி செல்வதற்கு முன்னே வழியில் உச்சங்கிதுர்கா எனும் கோட்டைக்குச்சென்றோம், எவ்வகையிலும் அறிந்திராத இடத்தில் ஆரம்பித்தல் ஒரு நல்ல துவக்கம். உச்சங்கி துர்க கோட்டை இரு மடிப்புள்ள பாறைக்குன்றின்மேல் விரவியுள்ளது. மூன்று வாயில்கள், உருளைவடிவ காவல் மாடங்கள், நீள்மதில்கள். கோட்டைக்குள்ளேயே நீர்நிலைகள். எனக்கு திண்டுக்கல் மலைக்கோட்டை நினைவுக்கு வந்தது, அதன் அமைவிடம்தான் அதன் அழகியலுக்கு எதிரி.

உச்சியில், உச்சங்கம்மா என்னும் உச்சங்கி எல்லம்மா கோவில் கொண்டிருக்கிறாள். வெளியே பைரவர் நிற்கிறார். கோட்டையின் பழமைக்கும், தற்போதுள்ள கான்கிரீட் கோவிலுக்கும் தொடர்பொன்றுமில்லை. ஆனால் நாகர்களுக்கும் கோவிலுக்கும் தொடர்பிருப்பதை ஐம்பதுமுறை வளைத்து வளைத்து செல்லும் கம்பிப்பாதைமூலம் தெரிந்துகொண்டோம். விதவிதமான வேண்டுதல்கள், அதிகம்பேர் சிறுகுழந்தைகளுடன் வருகிறவர்கள், பெண்ணொருத்தி ஆலயத்தின் உள்ளமர்ந்து மடியில் அரிசி வாங்கிக்கட்டியதைப் பார்த்தேன். சுற்றுப்புறத்தின் எளிய மக்கள், தட்டில் படையலை துணியால் சுற்றிக்கொண்டு வருபவர்கள். அம்மனுக்கு பச்சைவளைகளை ,பச்சை துணிகளை விற்றுக்கொண்டிருந்தார்கள். பூசைப்பொருள் கடையின் படமொன்று எல்லம்மை, பரசுராமர்  ரேணுகையின் கதையோடு தொடர்புறுத்தப் பட்டிருப்பதை சொன்னது. அரசர்களுக்கான கோட்டையின் உள்ளே கற்குண்டுகளுக்கு இடையே சிவலிங்கமொன்றிருந்தது. வாடைக்காற்றோடு, வன்கண் கோவேறு கழுதைகள் உலாவும் இடம்.

அன்று அஷாட சுக்லபட்ச ஏகாதசி, வேளாண் மக்கள் ஆடிப்பட்டத்திற்கு உழுது விதைக்க நன்னாள் போலும்.  பகாலி செல்லும் வழியெங்கும் வயலில் உழவர் ஏரில் இரட்டைக்கொழு கட்டி நிலம் பதித்து உழுது கொண்டிருந்தனர். கி ரா நைனாவின் கோபல்ல கிராமத்தில் படித்ததை நேரில் பார்த்தேன். மதுரையில் மீனாட்சி கோவிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் நடக்கும், உழவர் அவள் காலடியில் நாற்றுகளை வைத்து வணங்குவர். விவசாயம் சார்ந்த சுவையான சடங்குகளோடு பேரூர் பட்டீஸ்வரத்தில் ஆனியில் விழா நடக்கிறது, சிவனே அங்கு நாற்று நாடுகிறார்.   ஏரில் ஒரு மாடு காலம் ,இன்னொன்று அதைக் கணக்கிடு ம் மனிதன்

வழிநெடுக அழகிய எருமைகள் சடைசெறிந்த கனைக்காத இளங்கன்றுகள். தமிழகக்கோவில்களை மட்டுமே பார்த்து வரூஉம்  என்போன்ற பலவீன நெஞ்சத்தவர்க்கு, எடுத்தவுடன் பார்ப்பதற்கு பகாலி நல்ல கோவில். ராஷ்ட்ரகூடர்கள் துவங்கி மேலைச்சளுக்யர்கள், அலுபா பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர  ராயர்கள் அனைவரும் பணிந்த பகாலி காலேஸ்வரா கோவில், சிறிய அழகிய கற்றளி. மூலக்கருவறை சதுரமானது, இடைநாழி, முகமண்டபம், சபாமண்டபம். அருகே கற்கள் செறிந்த சிறியகுளம், வண்ணச்செடிகளாலான அழகிய தோட்டம், உயர்ந்த தீபத்தம்பம், சுற்றுச்சுவருக்குள்ளே மேலும் பல சிறிய தளிகள். மூலவர் காலேஸ்வரருக்கு, நேரே நந்திக்குப் பின்னால் சூரியனுக்கான கோட்டம். பக்கவாட்டில் நரசிம்மர், உள்நுழைகையில் தனியாக வீரபத்ரர். சைவ வைணவ பேதங்களற்ற கோவிலாக உள்ளது, இன்னும் சொன்னால் ஷண்மதங்களும் கலந்த கோவிலாக இருக்கின்றது. மேலுமுள்ள கோட்டங்களின் தெய்வங்கள், சற்று தொலைவிலுள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றையும் இணைத்துக்கற்பனை செய்துபார்த்தால், அந்த இடம் மினியேச்சர்  சொர்க்கம் தான் .

கோவிலின் சிறப்பு தனித்துவமிக்க ஐம்பத்தி நான்கு தூண்கள், முக்கியமாக, சபாமண்டபத்தில் நடுவே உள்ள சிற்பம் செறிந்த நான்கு தூண்கள். அவற்றில் பக்கத்திற்கொன்றாக பதினாறு சிற்பங்கள். தூண்களில் ஆடலழகிகள், தெய்வங்கள். அமர்ந்த நிலையிலுள்ள சரஸ்வதிக்கு மேலிரு கைகளில் பாசாங்குசம், கீழ்க்கரத்தில் சுவடியும் சின்முத்திரைக்கையில் அக்ஷமாலையும், வெட்டிய தலையை கையில் வைத்திருக்கும் காளியை இவ்வளவு அழகாகவா வடிப்பது, ஆடும் சிவன், விநாயகர், நரசிம்மர், ரதி கருப்புச்சிலை ஐங்கணையோடு காமன்,. தூண்கள் இணையுமிடத்தில்  உட்குவிந்த அழகிய தாமரைக்கூடு. அதில் நடனமாதருக்குக்கீழே மனைவியரோடு எண்திசைத்தேவர், நரவாகனத்திலிருந்த குபேரனைக்கண்டேன், வெண்முரசு ஓசை காதில் கேட்டது.

ஆடல் மங்கையரின் சிற்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை, முகத்தில் பக்கத்திற்கொன்றாக பாவங்களை வெளிப்படுத்துபவை, ஆடையை இழுக்கும் கடுவன் குரங்குகளை விரட்டும் ஒருத்தி, ஆடிநோக்கி அணிசெய்யும் ஒருத்தி, கையில் சிலம்புகளேந்தி நடமிடுபவள் ஒருத்தி, ஆடையில் நுழைந்த தேளை உதறுபவளுக்கு நாணமும் நிம்மதியும் கலந்த முகம்.

சிற்பங்கள் நிறைந்த பக்கவாட்டிலுள்ள வாயில், கனவின் நுழைவுவாயில் போலத்தான் இருந்தது. சீரான செவ்வக வாயில், நான்கு வரிகளாக சிற்பங்கள் அவை முடியுமிடத்தில் அரம்பையர். உயரே நாயகமாக கிடைமட்ட நிலைவரியில் ஆடல்வல்லான், அவர் இருபுறமும் துடியினர், குழலினர், ஏவலர், தொழுகையர். ஓரங்களில் ஆனைமுகனும் ,லிங்கமும். எல்லைகளில் பாயும் சிம்மங்கள். கூத்தபிரானின் நேர் கீழே அனந்தசயனர், அவர் மனதில் நீங்காமல் இறைவன் நடனமிடுவதாகக் கதைகள் உண்டு, அதற்கும் கீழ் கஜ லட்சுமி. நால்வரிச்சிற்பங்களில் வெளிவரி மிருகங்களாலானது, சீரும் யாளிகள், போரிடும் அசுவங்கள், எருதுகள், சிம்மங்கள். அடுத்தவரி இசைக்கருவிகள் இசைப்பவருக்கும், விறலியருக்குமானது. உயரே கிடைமட்ட வரியில் கூத்திடுபவர், சரிந்து கீழிறங்குகையில் அரைவட்ட வளையங்களாயுள்ள கொடிச்செதுக்குகளில் இடைநின்றாடுகின்றனர். அடுத்தவரி தேவர்கள், கந்தர்வர்கள் ஜோடிகள் ஆடவும் பாடவும் வல்லோர், இறுதிவரி நாகங்கள், நாகர்கள், நாகக்கன்னிகள் இடைக்குமேல் நாகஉடல்கள் ஒன்றோடொன்று பிணைந்திருக்கிறது.

முன்மண்டப வாயிலைச்சுற்றி செதுக்கப்பட்டுள்ள வேலைப்பாடுகள், மேலே தேவர்கள் நிறை, ஒவ்வொரு கடவுளையும் அமர்ந்து துதிக்கும் இருவர் கீழ் நிறையில். மலர்கள் நிறைந்த கல் தோரணங்கள், வெவ்வேறு பூ வரைவுகள், மெல்லிய கீறல்களாய் அலங்கார அணிவாயில். இருபுறமும் துவாரபாலகர், ரதிமன்மதன். மையக்கருவறை வாயிலில் இதேபோல் வெளிப்பாடுகள் இன்னும் நுண்ணியதாய், துல்லியமாய் பல்கியிருந்தது.  மகரதோரணத்தில் ஐந்து மூர்த்தங்கள், மையமாய் நின்றாடும் மூன்றும் சிவவடிவங்களே. யானையை உரித்தாடுவர் நடுவில் நிற்க பிற இருவர் பக்கத்துக்கொருவராய் ஆடுகின்றனர். தொழுத கையினராக அயனும் அரியும் பத்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றனர். அடுத்தவரியில் மும்மூர்த்திகள் நின்றிருக்கின்றனர். பக்கவாட்டில் கற்பலகணி.

கோவிலின் சிறப்புகளில் தலையாயது இங்குள்ள கருவறையின் வெளிப்புறத்தில் செதுக்கப்பட்டுள்ள  பாலுறவுச்சிற்பங்கள். காதல் கொள்ளும், காமமாடும், விரகத்தில் காயும், சிற்றின்பத்தின் சாத்தியங்களனைத்தையும் முயலும் கற்கள். தமிழின் கொக்கோக நூலுக்கு சொல்லப்படும் முன்கதையை இங்கு சிலையாகக்காணலாம். இந்தியாவின் பிற புகழ்பெற்ற சிற்பங்களுக்கு இவை மூத்தவையாக இருக்கலாம். தாந்த்ரீக் திருமா, இவற்றின் நயம் சொல்லும் கட்டுரை ஒன்று வரைவார் என உள்ளுகிறேன்.

பத்தாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இந்தக்கோவிலில் கிடைத்த பல கல்வெட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. போரில், வேட்டையில் இறந்த வீரர்களுக்கான மூவரி நடுகற்கள், சதிக்கற்கள் காணக்கிடைக்கின்றன. மூத்த கல்வெட்டுகளின் படி இத்தலத்து இறைவர் பெயர் கலிதேவர், ஊருக்குப்பெயர் பல்குலி, பின் மெல்ல சுயம்பு காலேஸ்வரர் ஆகிறார். அருங்காட்சியகத்தில் ஏழு அன்னையர், சரஸ்வதி, அனந்தசயனர், உமா மகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி  சிலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் விலைமதிப்பற்றவை.

கோவிலைப்பற்றியும் அதன் சிற்ப அழகுகளைப்பற்றியும் எடுத்துரைத்த பூசகர் அர்ஜெய். சிறுவயது முதலே கோவிலில் இருப்பவர், கர்நாடக போக்குவரத்துத்துறையில் நடத்துனராக பணிபுரிந்தவர், இப்போது கோவிலிலேயே பணிபுரிகிறார். எல்லாச்சிற்பங்களுக்கும் பெயர் சொல்லி தனித்தன்மையை விளக்கினார். பொறுமையும் ஒழுங்கும் இருந்தது, தொலைவிலிருந்து வருபவர்களுக்கு விளக்கும் அக்கறையும் இருந்தது. இங்கு நாம் அவர்களை எதேச்சதிகாரத்தால் மட்டுமே வரவேற்போம். சிற்ப வேலைப்பாடுகளை கலைச்சொற்களோடு விளக்கும் ஒரு பூசகரையும் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை.

பிறகு அங்கிருந்து கடக் திரிகூடேஸ்வரர் கோவிலுக்குப்போனோம். பகாலியுடன் ஒப்பிட்டால் பன்மடங்கு சிற்பங்கள் செறிந்த  கோவில் ஆனால் பெரும்பாலும் அவை சிதைக்கப்பட்டிருந்தன, ஆலயத்தின் வெளியமைப்பைத் தவிர வேறு எதைக்கண்டாலும் வருத்தம்தான் மிஞ்சியது.  சரஸ்வதிக்கென அமைந்த கோவிலில் தூண் முழுக்க பாசிபோல் சிற்பங்கள் படர்ந்திருந்ததை மட்டும் ரசிக்கமுடிந்தது. கோவிலின் கருவறை விமானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன், அதில் ஓரிடத்தில் குடக்கூத்து சிற்பம் இருந்தது.

அன்றைய நாள் இப்படியாகக்கழிந்தது. தலைமாலை அணிந்து அமர்ந்திருக்கும் பைரவர், சவ்யசாசியாக இரு தோளிலும் ஆவநாழி கட்டி அம்பெடுத்தபடி ஒருகாலை எருமையின்மேல் வைத்த கொற்றவை, கஜலட்சுமியோ என மயங்கும் வீணையில்லா கலைமகள், எண்கையோடு அணிகள் நிறைந்து ஆடும் சிவன், பத்மாசனத்திலிருக்கும் தென்திசை யோக சிவன், நிலம்  நீளும்போது வடிவங்கள் மாறுகிறது. அதன் பின்னுள்ள தத்துவங்களும் ஆசாரங்களும் வேறாகின்றன. ஒவ்வொன்றும் அதற்குண்டான தனித்த பழமையின் மீது ஏதோ ஒன்று  நின்று  நமைநோக்கி புன்னகைக்கிறது.

பயணம் பாடல்களுக்கானது, சில ஒற்றைப்பாடல்கள் சர்வாதிகாரம் மிக்கவை, வேறு எத்திசையிலும் மனம் செல்ல ஒப்பாதவை. நீங்கள் ஓராயிரம் பார்வையிலே ஆரம்பித்தபோதே அப்படித்தான் கெதக் கென்றிருந்தது. பெல்ஹாமில் இரவு உணவுக்காக காத்திருக்கையில் பழைய ஹிந்திப்பாடல்கள் உலகுக்குள் புகுந்துவிட நேர்ந்தது. பயணத்தில் விதவிதமான பாடல்கள், ராகங்கள், வெவ்வேறு இசைவடிவங்கள், சுரமற்ற இசை என தொடர்ந்து விளக்கிக்க்கொண்டே வந்தீர்கள். எஸ் ஜானகியின் பரம விசிறியான சென்னை செந்தில் ஓரளவுக்கு உங்கள் இசைமொழியைப் பிடித்துக்கொண்டார் என்றுதான் தோன்றுகிறது.

நாம் மழையின் ஊடே சொப்னவேல் போகையில் அந்தப்பள்ளத்தாக்கை பனிமூடியிருந்தது, கால்வாய்வழி நீரை எடுத்து அருவியாக்கியிருந்தார்கள். நீரோடைகளைத்தாண்டி மலைமுகட்டுக்கு நீண்ட பாதை முடிவிலிக்குச் செல்வது போல் இருந்தது. அங்குதான் நான் அட்டைப்பூச்சிகளோடு அறிமுகம் செய்துகொண்டேன். பனி விலகி முழுப்பள்ளத்தாக்கும் தெரிந்தகணம் படுகவர்ச்சியானது. பைனாகுலரில் பார்க்கும் இடமெல்லாம் ஒரு நீர்வீழ்ச்சியிருந்தது, அவைசேர்ந்து பள்ளத்தாக்கில் ஓடும் நதியில் சேர்ந்து ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருந்தது. . அங்கிருந்து கவலேசாத் செல்லும் வழியில் இறங்கி பெரும் பசிய புல்வெளியில் நடந்தோம். மாட்டிடையரின் தனிமை பற்றிப்பேசிக்கொண்டிருந்தீர்கள், நீர் புல்லில் இருந்து கசிந்து ஓர் நீரொழுக்காவதை, பின் அவை பிணைந்து ஓடையாவதை பார்த்துக்கொண்டிருந்தோம்.

கவலேசாத் சென்று இறங்குகையில் எதிர்ப்படும் முகங்களெல்லாம் போதைததும்பிய முகமாயிருந்தது, ஒரு பெரும் பள்ளத்தாக்கின் முன் நிற்பது பிடிபடவே இல்லை, நீண்ட பாதையின் முடிவில் ஒரு அருவி, மதிலை ஒட்டிய பள்ளத்தாக்கு, அரியறியா அடிபோல கீழிருந்து மேகம் புகையாக வந்துகொண்டிருந்தது, மேற்குத்தொடர்ச்சிமலை தென்னகத்தின் தாய்மடியென தோன்றிய கணம். மலைமுகடுகளெல்லாம் நீரணிந்திருந்தன, மேகங்களுக்கு நடுவே எதிர்மலையின் முகட்டிலிருந்து அருவி வழிந்தது விண்ணிலிருந்தே பொழிவது போலிருந்தது, மழைப்பாடலில் கண்ட காட்சிகளெல்லாம் கண்முன் விரிந்துகொண்டிருந்தது. அருவிநீரை காற்று முகர்ந்தெறிந்தது, அருவியின் மழை. மழையின் கடுமையை தூரத்தில் விண்ணுக்கும் மண்ணுக்கும் கொட்டும் வீழ்ச்சியின் சீற்றத்திலும் பிரவாகத்திலும் கணிக்க முடிந்தது. உண்மையில் நிலப்பரப்பையும் இயற்கையின் விநோதங்களை முழுதும் கண்டால் போதும், பித்துற வேறு போதைகளேதும் வேண்டாம்.

ஈஸ்வரமூர்த்தி கணக்குப்பார்க்கையில் அப்ப மிச்சம் இருநூறு ரூபாய் எங்க என்கிற போதெல்லாம் முகத்தில் ஒரு குழந்தையின் கண்டிப்பு வருகிறது, அவர் உயரத்திற்கு அது இன்னும் கச்சிதமாகப் பொருந்தியமையால் மீள மீள தப்புக்கணக்குச்சொல்லி மகிழ்ந்தோம். கிருஷ்ணன் ஓரிடத்தில் மீன்கள் பற்றி மேலும் மேலும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்தார், ஏன் என்றுதான் தெரியவில்லை.

அடுத்த காலை கடோபியில் பெட்ரோக்ளிப் தேடிச்சென்றோம், மிகச்சிறிய ஊர், பலா நிலத்தில் விழுந்தால் எடுத்து உண்ணவும் ஆளில்லாத ஊர். பசுமை செறிந்த ஒற்றையடிப்பாதை உயரே சென்றது, வழிகாட்டுவோர் இல்லையேல் கண்டடைவது கடினம். திடீரென பாறைகளின் வெளி கண்முன் விரிந்தது, வித்தியாசமான பாறைகள். எரிமலைக்குழம்பு குமிழிகளோடே இறுகிப்போனது போல துளைகள் நிறைந்த பாறைகள்.  கந்தகம் புகைந்து எங்கிருந்தாவது வெந்நீர் ஊற்று வரும் என எதிர்பார்த்தேன். ஒரு பாறைப்படுகையைத்தாண்டி அடுத்த வெளிக்குச்செல்கையில் நாம் ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பெட்ரோக்ளிப்ஸ் இருந்தது, ஆதிமனிதனின் தடயங்கள், எப்படிப் புரிந்துகொள்வது அவற்றை. இரட்டைத்தலைகழுகு, ராட்சத வண்டு, இரட்டை மீன்கள், இரட்டை விலங்குகளை சுமந்த வேட்டையாடி, சுழல் வட்டம். எதையெல்லாம் செதுக்கியிருக்கிறார்கள், மனிதனின் மரபணுவில் எங்கோ ஒளிந்திருக்கும் ஆதிஉருவங்கள் அவையே மீண்டும் மீண்டும் வெளிவருகின்றன. நமது பயணத்தின் உச்சத்தருணம், கிருஷ்ணன் உட்பட எல்லோரும் பரவச நிலையிலிருந்தார்கள்.

ஆகும்பேயில் இரவு பேய்க்கதை கேட்பது என்பது நமது நண்பர்களுக்கு தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது, பின் பேய்களுடன் நடைபயில, விளக்குகள் இல்லாத, அட்டைகளும் ராஜநாகங்களும் சூழ்ந்திருக்கும் மலைப்பாதைபோல உகந்த இடம் ஏதிருக்கிறது.  மின்மினிப்பூச்சிகள் ஒளிசிந்துகையில் எல்லோரும் நகம்கடித்தபடி கதை கேட்டிருக்கும் சமயங்களில் வலிந்து சிரித்து சகஜப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது, நவீன் ஒருகட்டத்தில் அலறிவிட்டார்.

பயணம் முழுக்க நீரால் ஆனதுபோல இருந்தது மழையிலிருந்து மேலும்மேலும் அடர்ந்த மழைக்குள் சென்றுகொண்டிருந்தோம், அருவி, நீரோடை, கடல் என நீராலான உலகம் ஒன்று உருவாகிவந்தது.  பயணித்தவர்கள் எல்லாம் பயணம் செல்லச்செல்ல அமைதியாகவும் தனிமையாகவும் உள்நோக்கிச்செல்வது போல் தெரிந்தது.

எது என்னை முழுதாக விழுங்கக்கூடியதோ, அதைக்கண்டு சிறுவயதுமுதல் அஞ்சவும் பின் அதை வெறுத்து ஒதுக்கவும் அக்கணத்தை எப்படியாவது கண்மூடித்தாண்டிச் செல்லவும்தான் விழைவேன். விலக்கமும் வெறுப்பும் வழியும், மனதின் துலாத்தட்டு நிகர்செய்யமுடியாமல் துடிக்கும். எந்த ஒன்றிற்கும் என்னை முழுதும்  அளிப்பது என்பது அரிதாக நிகழ்வது, அதில் ஒரு துளி பிறழ்ந்தாலும் நான் அதைவிட்டு காததூரம் ஓடியிருப்பேன். முற்றிலும் தலைகீழாக கனவில் கனவாக நான் அதை காதலித்துக் கொண்டிருப்பேன். எதைச் செய்தாவது அதை அடையவேண்டும் என்று வெறியும் கொண்டிருப்பேன். பின் ஏன் என்னை ஒப்புக்கொடுக்க மறுக்கிறேன், எதை மிச்சம் பிடிக்கிறேன் என்று இன்றுவரை புரியவில்லை.

ஒவ்வொரு பயணமும் முடிவிலியை நோக்கிய ஒரு கண்ணியை நமக்கு வீசியெறியும், எனக்கு அது இம்முறை பகாலியின் ஒரு கல்வெட்டிலிருந்து கிடைத்தது. அலுபா வம்சத்தினர் தங்களை பாண்டியதேவா என்னும் பெயரில் அழைத்துக்கொள்வதை சொன்னது அது. இப்போது அலுபா வம்சம் பற்றித்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

உங்களிடம் பேசுவதற்கும் கேட்பதற்கும் நிறைய இருந்தது அது அப்படியேதான் இன்னமும் இருக்கிறது. நான் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தேன். இந்தப்பயணம் துவங்குவதற்கு சிலநாட்கள் முன்புதான் சீனு அண்ணனிடம் இரவல் வாங்கி புறப்பாடு படித்துக்கொண்டிருந்தேன். அங்கு துவங்கி இங்கு வந்து அமர்ந்திருக்கும் ஒருவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

தாமரைக்கண்ணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37
அடுத்த கட்டுரைஆயிரம் ஆண்டு சைக்கிள்