தமிழாக்கம் டி..ஏ.பாரி
கனவின் மொழியில்…மொழியாக்கப் பக்கம்
அந்த எழுத்தர் வாடகைக்கு வீடு தேடி வந்தபோது பனிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் கதவினருகே நின்றிருப்பதைக் கண்டு அவரால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
”ரொம்பவும் சாமர்த்தியமாக நடந்து கொள்வதாக எண்ணாதே. உன் அம்மாவுக்கு கடிதமெழுதி அவளிடம் இதுபற்றி கேள்.”
”என் அம்மாவிடம் கேட்டால், அவள் இல்லையென்றே சொல்வாள். நீங்கள் என்னிடமிருந்துதான் வாடகைக்கு எடுக்க வேண்டும்.”
”சரி, வாடகை எவ்வளவு?”
”ஐந்து யென்.”
”ஹ்ம்ம. எனக்கு சந்தை நிலவரம் தெரியும்,” எழுத்தர் கறாராக மறுப்பதான தொனியில் பேசினார். “ஐந்து யென் என்பது ரொம்ப அதிகம். மூன்று யென்னாக வைத்துக் கொள்.”
”அவ்வாறெனில் மறந்து விடுங்கள்.” பையனைப் பார்க்கையில் வீட்டின் பின்னால் இருக்கும் வயல்வெளிக்கு ஓடத் தயாராக இருப்பவன்போல தெரிந்தது. இந்த குழந்தைத்தனமான பேரம்பேசும் பாணி எழுத்தரை திணறடித்தது. மாவட்ட அலுவலக கட்டிடத்தின் எதிரே உள்ள இவ்வீடு அவருக்கு கண்டிப்பாக வேண்டும்.
”இந்த மாதம் மட்டும் நீங்கள் வாடகையை முன்பணமாக கொடுக்க வேண்டும்.”
“நான் உன்னிடமே கொடுப்பதா?”
”ஆம், என்னிடம்தான்.” அந்தப் பையன் ஒரு வீட்டு உரிமையாளனுக்குரிய தன்னம்பிக்கையுடன் தலையசைத்தான். எனினும் அவனுள் சிறுவர்களுக்குரிய அசட்டுச் சிரிப்பு ஒன்று வெளிவந்தது, இறுதியில் உதடுகளை இறுக்கமாக மூடிக் கொண்டு ஒருவழியாக சமாளித்தான். அவன் புதிதாகக் கற்றுக்கொண்டு மேற்கொண்டு வரும் இந்தப் பண பரிவர்த்தனைகள் பெரும் கேளிக்கையாக இருந்ததால் அவனால் மகிழ்ச்சியை தாங்க முடியவில்லை. வெற்றிகரமாக ஒரு உடன்படிக்கைக்கு வந்து பணம் பெறுவது என்பது அவனுக்கு இது இரண்டாவது முறை.
அவனுடைய அம்மா, விரைவில் குழந்தை பெற்றெடுக்கப் போகும் தன் மூத்த மகளை கவனித்துக் கொள்வதற்காக டோக்கியோ சென்றிருக்கிறாள். மார்ச் மாதம் முழுக்க அவள் திரும்பி வரவில்லை. அவள் தன் பையனிடம் டோக்கியா வருமாறு தகவல் தெரிவித்தாள், ஆனால் பணமேதும் அனுப்பவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் அண்டை வீட்டுக்காரர்களே அவனை பார்த்துக் கொண்டனர். பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஒருவன் அண்டை வீடுகளுக்கு வந்திருந்தபோது, அந்தப் பையன் அவரை தன் வீட்டுக்கே இழுத்து வந்து அவரிடம் பழைய பத்திரிக்கைகளையும் கந்தல் துணிகளையும் விற்றான். பையனுக்கு சீக்கிரமே புரிந்துவிட்டது.
”இது அவ்வளவு விலை போகுமா?” கரி அடுப்பிலிருந்து எடுத்த இரும்பாலான தேனீர் கெண்டியை வியாபாரியிடம் தூக்கிக் காண்பித்தான். போகப்போக அவனுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடித்துவிட்டது: எதை வேண்டுமானாலும் விற்கலாம். அலங்கோலமான அவ்வீடு முழுக்க பொருட்களுக்காக துழாவினான், அவனுடைய மறைந்த தந்தையின் சிறப்பான உடைகள்கூட விற்கப்பட்டன. இன்னும் ஐந்து யென் மட்டும் கிடைத்தால், அவன் டோக்கியோ சென்று திரும்புவதற்கான தொகை சேர்ந்துவிடும். இந்த வினோதமான வாழ்வின் பகுதியாக தன் தினசரி தேவைகளை தானே ஈட்டிக் கொள்ள வழிசெய்யும் இந்தப் பரிவர்த்தனைகள் பையனை ஒரு முதிர்ந்தவனாக உணரச் செய்தது. ஆனால் பழைய பொருட்கள் வியாபாரியிடமிருந்தும் எழுத்தரிடமிருந்தும் பணம் பெற்றுக் கொண்டபோது, அவர்கள் வாழ்வின் பரிதாபகரத்தையும் சோர்வையும் அவனால் தெளிவாக உணர முடிந்தது. இருப்பினும் துணிச்சலான இந்த ஆரம்பநிலை முயற்சிகள் அவனை ஒரு வெற்றியாளனாக உணரச் செய்தது. பிழைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அவன் அடைந்தான்.
பச்சை வாசமடிக்கும் ஆமோரி ஆப்பிள்களை முதுகில் சுமந்துகொண்டு டோக்கியோவில் உள்ள வெனோ நிலையத்தில் பையன் வந்திறங்கினான். அவனைக் கண்ட திகைப்பில் அவனுடைய அம்மாவால் திட்டக் கூட முடியவில்லை. இனி வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாது என்ற உண்மை அவளது நெஞ்சில் பரவியது. அவளுடைய மூத்த மகனும் டோக்கியோவில்தான் வசிக்கிறான். தன் தொழிலுக்குத் தேவையான முதலீட்டை பெறுவதற்காக ஊரில் உள்ள பழைய வீட்டை விற்றுவிடுமாறு அவன் பல வருடங்களாக அவளைத் திட்டி வந்தாலும், ஒருபோதும் அவ்வீடு கைவிட்டுப் போவதை அவள் அனுமதிக்கவில்லை. தற்போது இந்தப் பையனோ அவள் கணவனின் சிறந்த ஆடைகளை கந்தல் துணிகளை விற்பதுபோல விற்றுள்ளான். சாப்பாட்டுக்காக தன் கிமோனோ உடைகளை அவள் விற்றபோது கூட கணவனின் ஆடைகளை பாதுகாத்தே வந்திருந்தாள்.
”நான் மூன்று நாட்களுக்கு தூங்கப் போகிறேன்.” தன் அக்கா வீட்டிற்கு வந்தவுடன் அவன் களைப்பில் விரைவாக தூங்கிவிட்டான்.
.அக்காவின் வீடு புறநகர் பகுதியில் உள்ள ஒரு பெரிய குளத்தின் அருகில் இருந்தது. அடுத்தநாள் அந்தப் பையன் அவனாகவே மீன்பிடிக்கச் சென்றான். திரும்பி வருகையில் ஐந்து அல்லது ஆறு குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வந்தவன், கதவருகே நின்று பதினான்கு கெண்டை மீன்களை அவர்களுக்கு பகிர்ந்தளித்தான்.
வீட்டினுள்ளே அம்மாவும் மகளும் அழுது கொண்டிருக்கும் குரல் கேட்டது. மகளின் கணவன் வேலையிடத்தில் தனக்குத் தெரிந்த ஒரு கொத்தனாரிடம் பையனை உதவியாளனாக வேலைக்கு அனுப்ப முடிவு செய்திருந்தான்; அவன் மாலையில் பையனை வரச் சொல்லியிருந்தான். அம்மாவோ ஒரு உதவியாளனாக அனுப்புவதை விட அவனை மீண்டும் நாட்டுக்கே கூட்டிச் சென்று விடுவதாக எதிர்ப்பு தெரிவித்தாள். இதற்கிடையே பையன் வேகமாக உள்ளே வந்து, பதற்றத்தில் இருப்பவனாக பேசினான்.
”நீ இதுகுறித்து வாதிட்டு அழுது கூச்சலிடுவதாக இருந்தால், நான் எங்கு வேண்டுமானாலும் மகிழ்ச்சியுடன் உதவியாளனாகப் போவேன்.”
அம்மா அமைதியாக பையனின் காலுறைகளை தைக்கத் துவங்கினாள். அவன் தன் அம்மாவின் கிமோனோக்களையும் மற்றும் தன் சொந்த உடைமைகளையும் கொண்டு வந்திருந்தான், மேலும், கோடை காலம் நெருங்கிவிட்ட நிலையில் அவனுடைய குளிர்கால காலுறைகளும் பிரம்பு பெட்டியில் திணித்து எடுத்து வரப்பட்டிருந்தது.
***
மூலம்: Birthplace (Collection: The Dancing girl of Izu and other Stories)