கலிங்கம் -கடிதங்கள்

 

ஒரிசாவின் லகுலீசர்

லகுலீச பாசுபதம் – கடலூர் சீனு உரை

தமிழகத்தில் லகுலீச பாசுபதம் – கடிதம்

 

இனிய ஜெயம்

 

ஒரிசாவின் லகுலீசர் பதிவு கண்டேன். பிரசுரம் காணும் என நினைக்கவில்லை :) உங்களிடம் தெரிவித்துக் கொள்வது போதும் என்ற உணர்வில் குறிப்புகள் மட்டுமே அமைந்த மடல்.  சற்றே விரிவாக எழுதி இருந்தால் அப் பதிவுகளைத் தொடர்ந்து பயணம் மேற்கொள்ளும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன்.

 

குறிப்பாக வைப்பு முறை வகையில் பயணத்தின் இறுதியாக தொல்பொருள் அருங்காட்சியங்களை அவதானிப்பதை நீங்கள்  வைத்திருப்பது முக்கியமான அம்சம். அது எந்த அளவு நம்மை தொகுத்துக் கொள்ள உதவும் என எங்கள் பயணங்கள் வழியே உணர்ந்திருக்கிறோம்.

 

அதே போல பயணத்தில் ஒரே பாணியிலான கலைவெளியை தரிசிப்பது எனில் நாங்கள் கைக் கொள்ளும் வழிமுறை, அந்த பாணியில் முதலில் எந்த கோவில் கட்டப்பட்டதோ அங்கிருந்து துவங்கி, அந்தக் கலையின் சிகரம் எதுவோ அதில் வந்து முடிப்பது. இந்த வழிமுறையை எங்கள் கஜூராகோ பயணத்தில் கண்டடைந்தோம். முதலில் அந்த பாணியில் அமைந்த கோவிலில் துவங்கி இறுதியாக காந்தார மாகாதேவர் ஆலயத்தில் முடித்தோம். அப்படி பயணித்துப் பார்க்கும் போது,கோவில் எனும் பொது வடிவமும்,அதற்குள் அமைந்த சிற்ப வடிவமும், காலந்தோறும் எவ்வாறு வளர்ந்து அதன் வெளிப்பாட்டில் உச்சம் கொள்கிறது என்பதை,ஒரே பார்வையில் காலப்பயணம் போன்ற ஒன்றை நிகழ்த்திவிட்டோம் எனும் கற்பனை வழியே நம்மால் அடைய இயலும். பலநூறு ஆண்டு அந்த மண்ணிலேயே உழன்ற உணர்வை உவகையை அது அளிக்கும்.

 

அந்த வைப்பு முறை வழியேதான் புவனேஷ்வரில் ஆறாம் நூற்றாண்டு பரதேஷ்வரா  கோவில் துவங்கி, பதிமூன்றாம் நூற்றாண்டு கொனார்க் கோவிலில் பயணத்தை முடித்தோம். இப்படிப் பயணம் செய்வதன் வழியே ஒவ்வொரு கோவில் வடிவமும் ஒரே வடிவம் எனும் தோற்றத்துக்குள் கைரேகை போல ஒவ்வொரு கோவிலும் அந்த வடிவுக்குள் பொதிந்து வைத்திருக்கும் நுண்கலையில் அமைந்த வண்ண பேதங்களை கண்டு மகிழ்ந்தோம்.

 

கலிங்க கோவில்களின் விமான அமைப்பை அங்கே ரேகா [பாணி] என்கிறார்கள். அதன் முன்னால் அமையும் மண்டபம் பீடா. விமானம் அதன் வடிவ அழகு காரணமாகவே [எத்தனை சிறிய கோவில் எனினும்] அருகே நின்று அண்ணாது பார்த்தால் ஒரு மலையின் கீழ் நிற்கிறோம் எனும் உணர்வை, நமது இருப்பை சிறிதாக்கும் மாயத்தை அந்த வடிவம் செய்யும்.

 

கொனார்க் கோவில் அதற்க்கு முன்பாக பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் ஒன்றை மாதிரியாகாக் கொண்டு அமைந்த கோவில். இப்போது கொனார்கில் நாம் காணும் பிரும்மாண்ட மண்டபம் பீடா எனும் அமைப்பு மட்டுமே அதற்குப் பின்னால் ரேகா [விமானம்] என்ன அளவு ஆகிருதி கொண்டு நின்றிருக்கும் என ஊகித்து அந்த ப்ரும்மாண்டத்தின் திகைப்பில் செயலற்று  நின்றுவிட்டோம்.

 

சென்ற ஆண்டு ஓடிஸா பயணம் வழியே துவங்கிய சில கல்வி பல புதிய வாசல்களை திறந்து விட்டது உதாரணமாக அந்தப் பதிவில் சுட்டி இருந்த விட்லா டியுல் கோவிலின் விமானம் வழியே நான் கற்றவை புதிய பல வெளிச்சங்களை அளித்தது. அந்தக் கோவில் கொற்றவை கோவில். சாக்தம் தனி சன்னதி கொண்ட கோவில் எதிலும் அந்த விமானமே முதன்மை பெரும். அந்த விமானத்தின் பெயர் காகார பாணி. பார்க்க திராவிட பாணி கோபுரம் போல இருப்பதால் பல கட்டுரைகள் அந்த விமான அமைப்பை திராவிட பாணி என்றே விளிக்கின்றன.

 

இந்த காகார பாணி விமானம் எங்கெங்கே கண்டேன் என யோசித்தால் கடலூர் மாவட்டத்தில் செல்லியம்மன் கோவில் [சப்தமாதா] கோவிலில் கண்டிருக்கிறேன். சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலின் சப்த மாதர் சன்னதி விமானம் காகார பாணிதான். திருச்சி அருகே ஆலம்பாக்கம் சப்த மாதா கோவிலின் விமானமும் அதேதான்.  இதே போல இன்னொரு சாக்த விமான பாணி ஸாபாகரம் என்று பெயர். சேர நிலத்தின் கொற்றவை கோவில் எல்லாம் இந்த விமானமே. நீள் செவ்வக அமைப்பில் கருவறையை மூடும் கூம்பு கூரை அமைப்பு. பல்லவர் கால, மாமல்லையில் திரௌபதி ரதம் என அழைக்கப்படும் கொற்றவை கோவிலும் [சதுர வடிவில்] இதே ஸாபாகர விமானம் கொண்டதுதான்.

 

ஆக கலிங்க நிலத்தில் கண்ட அந்த கோவிலின் விமானம் வழியே, கொற்றவை,சப்தமாதா போன்ற சாக்த  கோவில்களுக்கு மட்டுமான தனித்த விமான வகை உண்டு என்பதை அறிந்தேன். இந்த விமான வகைக்கு கீழே அமைந்த சைவ வைணவ கௌமார விநாயக கோவில்கள் [விதி விலக்காக ஒன்றிரண்டு இருக்கலாம்] ஏதும் இல்லை. இவற்றுக்கு வெளியே தமிழ் நிலத்தில் கண்ட தனித்துவம் சிதம்பரம் துவங்கி தமிழ் நிலம் முழுக்க அத்தனை ஆடல் வல்லானும் இந்த ஸாபாகர விமானம் கொண்ட கருவரைக்குள்தான் பிரபஞ்ச  நடனமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்

 

https://en.wikipedia.org/wiki/Deula#Khakhara_Deula

 

கடலூர் சீனு

 

அன்புள்ள ஜெ

 

கடலூர் சீனு எழுதிய ஒரிசாவின் லகுலீசர் என்ற கட்டுரைக்கு வந்த  ஓர் எதிர்வினையை அனுப்பியிருக்கிறேன். இதைப்பற்றிய உங்கள், அல்லது அவருடைய பதிலை எதிர்பார்க்கிறேன்

 

கார்த்திக்.டி.எஸ்

 

அன்புள்ள கார்த்திம்

 

நீங்கள் குறிப்பிட்டுள்ள குறிப்புக்கு ஒரு முகநூல் வாந்தி என்பதற்கு அப்பால் எப்பொருளும் இல்லை. சம்பந்தப்பட்டவருக்கு செய்திகள் ஏதும் தெரியவில்லை. மூர்க்கமான சாதிமத நம்பிக்கையும், ஓய்வுபெற்றபின் செலவழிக்க நேரமும் ,எங்கோ எவர்மேலோ கசப்பும், நான் நான் என்னும் அசட்டுத் தருக்கும் மட்டுமே உள்ளது. இவர்கள் இங்கே பொதுவிவாதங்களை பொதுக்கழிப்பறைகளாக மாற்றிக்கொண்டிருக்கும் சிறு கூட்டம்.

 

லகுலீசர் தெற்கே வந்தபோது இங்குள்ள சண்டேஸ்வரருடன் கலந்திருக்கலாம் என்பது சீனுவின் கருத்து அல்ல. அது அத்துறையில் ஆய்வுசெய்பவர்கள் ஆய்வுநூலாக எழுதிவெளியிட்ட கருத்து. அது மறுக்கவும் படலாம். ஆனால் அதற்கு ஒரு மொழியும் அதற்குரிய தரவுகளும் தர்க்கமுறையும் தேவை. ஆய்வாளர்கள் எவரும் எதிர்த்தர்ப்பை நோக்கி வெவ்வெவ்வே  காட்டமாட்டார்கள். நான் நான் என்று கூச்சலிடமாட்டார்கள்.

 

ஜெ

கதிரவனின் தேர்-9

கதிரவனின் தேர்-8

கதிரவனின் தேர்-7

கதிரவனின் தேர்- 6

கதிரவனின் தேர்- 5

கதிரவனின் தேர்- 4

கதிரவனின் தேர்- 3

கதிரவனின் தேர்- 2

கதிரவனின் தேர்- 1

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-46
அடுத்த கட்டுரைமறைந்த உலகங்கள் -கடிதம்