அபி -கடிதங்கள்

அபி கவிதைகள் 150

அபி கவிதைகள் அழியாசுடர்கள்

அபி விக்கிப்பீடியா

 

அன்புள்ள ஜெ,

 

அபி கவிதைகளை வாசித்தேன்.இந்த விருதுக்குப்பின்னர்தான் அவருடைய கவிதைகளை வாசிக்க ஆரம்பிக்கிறேன் என்று சொல்வதில் வெட்கமில்லை.  ஆனால் பெரும்பாலானவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். யூட்டிலிட்டி சார்ந்த ஒருவிஷயத்திற்குத்தான் இயல்பாக உடனடியான வாசகர்கள் கிடைப்பார்கள். அன்றாட அரசியல் மட்டுமல்ல கேளிக்கையும்கூட யூட்டிலிட்டி சார்ந்ததுதான்.

 

அதைப்பற்றிய ஒரு பேச்சு சூழலில் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு நகரத்தில் நல்ல ஓட்டல் எது என்று எப்போதும் ஒரு விவாதம் இருக்கும். எவர் வேண்டுமென்றாலும் கலந்துகொள்ளலாம். எவர் வேண்டுமென்றாலும் அதிலிருந்து தகவல்பெறலாம். ஆனால் சூழலில் நல்ல தியானமையம் எது நல்ல ஆர்ட்கேலரி எது என்பதை அந்த தளத்திற்குள் உள்ள ஒருவர் மட்டுமே சொல்லமுடியும். அதற்கு தகுதியான சிபாரிசு தேவைப்படுகிறது. பொதுச்சூழலிலிருந்து அந்த அபிப்பிராயத்தை எடுத்துவிட முடியாது.

 

இது இலக்கியத்திலும் இப்படித்தான் இருக்கிறது. அபி கவிதைகள் தேவதச்சன் கவிதைகளைப்பற்றி பொதுச்சர்ச்சை உருவாகாது. பொது ரசனையும் உருவாகாது. இந்தவகையான விருதுகள் வழியாகவே அதை உருவாக்கி எடுக்க முடியும். விஷ்ணுபுரம் விருது அதைச்சாதிக்கிறது.

 

ஆனால் அந்த விவாதத்தையும் எளிதாக உருவாக்கமுடியாது. அபி கவிதைகளுக்குள் சென்றால் ஆங்காங்கே உதிரிவரிகள் ஆர்வமூட்டுகின்றனவே ஒழிய ஒட்டுமொத்த அனுபவம் அமைவதே இல்லை. ஏனென்றால் எனக்கு அவருடைய மன உலகம் இன்னும்கூட பிடிகிடைக்கவில்லை. அதைப்பற்றி பலர் பலகோணங்களில் எழுதினால் மட்டுமே உள்ளே செல்லமுடியும். விஷ்ணுபுரம் அமைப்பு அதற்கு முயற்சி எடுக்கவேண்டும் என கோருகிறேன்

 

டி.சிவக்குமார்

 

அன்புள்ள ஜெ

 

அபி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

அபி கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு முன்னர் அவர் ஆசிரியராக இருந்திருக்கிறார். அப்போதே கவிதைகளை வாசித்திருக்கிறேன். அன்று ஒன்றும் புரியவில்லை. இன்றைக்கு கொஞ்சம் ஆன்மிகநாட்டமெல்லாம் வந்தபின்னர் அவ்வப்போது பல வரிகள் பளிச்சிடுகின்றன. ஆனால் முழுசாக வாசித்தேன் என்று சொல்லிவிடமுடியாது. வாசித்துக்கொண்டே இருக்கிறேன். மீண்டும் ஒரு வாசிப்புக்கான மனநிலை இந்த விருதால் அமைந்துள்ளது. அதற்கு நன்றி சொல்கிறேன்

 

ஆர். முருகேசன்

 

அன்புள்ள ஜெ,

அபி கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்தக் கடிதங்களில் வரும் ஒற்றை வரிகள்தான் உள்ளே செல்ல உறுதுணையாக இருக்கின்றன. ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல படிமங்கள் எல்லாமே உதிரிகளாகவும் அரூபமானவையாகவும் உள்ளன. அவர் புறவயமாக பார்க்காமல் தன்னை தொகுத்துக்கொள்ள முயல்கிறார் என்று நினைக்கிறேன்.

மீண்டும் மீண்டும் வாய்ப்பது
இதே திசை
எட்டிலும் பத்திலும் அடங்காத திசை

விலகலுக்கென்று உள்ள திசை

என்ற வரி எனக்கு ஓர் உலுக்கலை அளித்தது. எட்டு திசையிலும் பத்து திசையிலும் இல்லாத விலகலுக்கென்றே உள்ள ஒரு திசை. இதை பருவடிவமாக கற்பனைசெய்ய முடியவில்லை. ஆனால் நம் உள்ளத்தில் ஒரு நகர்வு உருவாகிறது. மேலும் படிக்கவேண்டும்,

 

மகாதேவன்

அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா

அபி – கடிதங்கள்

அபி, விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்

அபி,மிர்ஸா காலிப்- கடிதம்

கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்

அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

 

முந்தைய கட்டுரைமிலன் குந்தேரா- தோற்றுப்போதலின் அழகியல்
அடுத்த கட்டுரைகிளைதாவுவதற்கு முன்பு…