தகவலறியும் உரிமைச்சட்டம், பொதுச்செயல்பாட்டாளர்கள்

அண்ணா ஹசாரேயின் துரோகம்!

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு;

 

நான் இந்தக்கடிதத்தை ஒரு அரசியல் வாதியாக எழுதவில்லை. மாறாக தகவல் அறியும் உரிமை ஆர்வலனாகவே எழுதினேன்.. இன்றைக்கும் நான் வசிக்கும் சிறு இடத்தில் நான் இந்த அரசமைப்புடன் நிகழ்த்திய மோதலின் சாட்சியாக சில ஆயிரம் பக்கங்களில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் பெற்ற கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் சூழ்ந்து சைனடிஸ் தொந்தரவால் துன்புறும் எனது உடல்நிலையை மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்றன. அவை பெரும்பாலும் அன்றைக்கு மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் நடந்த தி.மு.க அரசிற்கும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசிற்கும் கேட்ட கேள்விகளும் அவற்றிடம் கோரிய தகவல்களுமே.. எனது அரசியல் சார்பு ஒரு அரசியல் பணியாளனாக எனது வேலைகளை பாதித்ததேயில்லை

 

ஒர் அரசியல்வாதியாக எனக்கு எதிர்பார்ப்போ கோபமோ இல்லை.. ஆனால் இந்த சமூகத்தின் ஒரு கூறாக இருந்து இதன் வருங்காலம் பற்றி சிந்திக்கையில் எனக்கு கொந்தளிப்பு இருக்கவே செய்கிறது..

 

தகவல் அறியும் உரிமைச்சட்டம் காங்கிரஸின் சாதனை அல்ல.. அது காங்கிரஸிடம் இருந்து வென்றெடுக்கப்பட்டது என்கிறீர்கள். நானும் கூட அது முழுக்க காங்கிரஸின் சாதனை என்று சொல்லவுமில்லை.. ஆனால் அதன் மூலவிசைகளில் ஒருவரான அருணாராய் அவர்களுக்கு அன்றைய அரசின் நெறிப்படுத்தும் குழுவான தேசிய ஆலோசனைக்குழுவில் இடமளித்து அதை அரசின் செயல்திட்டத்தில் இணைத்தது அதன் தலைவராகவும் இருந்த அன்றைய காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியாகாந்தி என்பதை மட்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

 

நான் எப்போதும் அன்னாஹசாரே குறித்து பெருமதிப்பு கொண்டிருக்கவில்லை. எனவே அவரின் வீழ்ச்சியோ எழுச்சியோ அது பற்றி எனக்கு வருத்தமும் இல்லை..

 

நான் இதன் வழியே எழுப்ப விழைந்த கேள்விகள் மிக எளிமையானவை..

 

1.தகவல் அறியும் உரிமைச்சட்டம் கிட்டத்தட்ட காலாவதியாகும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கும்சூழலில் சமூகத்தின் மனசாட்சிகளானவர்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறார்கள்?

 

2.காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு இந்த ஐந்தாண்டுகளில் எத்தனை ஊழல் ஒழிப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான சட்டங்கள் அல்லது அமைப்புகள் வந்துள்ளன?

 

3.இல்லையெனில் ஏன் அது குறித்து முனகல்கூட இல்லாமல் ஒருவித கள்ள மௌனம் நிலவுகிறது..?

அவ்வளவுதான்.. ஆனால் அதுகுறித்து ஒரு வார்த்தை கூட இல்லாமல் நீங்கள் பதிலளித்திருக்கிறீர்கள்..

 

இப்போதும் அந்தரத்தில் தொங்கும் இந்த கேள்விகளுக்கான பதில் நோக்கியே இதை எழுதுகிறேனே தவிர உங்களுடன் எல்லா காலங்களிலும் மரியாதையான வகையில் முரண்படும் இயல்பை நான் இழக்கவில்லை என்பதையும் அழுத்தமாகவே குறிப்பிட விரும்புகிறேன். நன்றி..!

 

அன்புடன்,
இரா.முருகானந்தம்.

அன்புள்ள முருகானந்தம்,

 

முந்தைய கடிதத்தில் நீங்கள் எழுதியது அண்ணா ஹசாரே பற்றி. பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சியில் அவர்களுக்கு எதிராக அவர் என்ன செய்தார் என்று கேட்டிருந்தீர்கள். அவர் என்ன செய்ய முயன்றார், ஏன்  எதையும் செய்ய முடியவில்லை என நான் எழுதியிருந்தேன். இது வேறு கடிதம். இன்று பொதுச்செயல்பாட்டாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்டிருக்கிறீர்கள்.

 

பொதுச்செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். தனித்தனியாக கட்டுரைகள் எழுதுகிறார்கள்.சில போராட்டங்களும் நிகழ்கின்றன. ஆனால் எதுவும் பெரிதாக இல்லை. ஏன்? இச்சட்டத்தை கொண்டுவரக் காரணமான அருணா ராய் கூட பெரிதாக ஏதும் செய்யமுடியவில்லையே, ஏன்?

 

அரசியல்செயல்பாட்டாளர் என்பதனால் உங்களுக்கே விடை தெரிந்திருக்கும். இரண்டு காரணங்கள், ஓர் அரசு மிகப்பெரும்பான்மை ஆதரவு பெற்று ஆட்சியில் இருக்கையில், மக்கள் முழுமையாக அவர்களுடன் இருக்கிறார்கள் என்ற பிரமை இருக்கையில், பொதுவாக அந்த அரசுக்கு எதிரான செயல்பாடுகள் சோர்வை அடையும். அச்சோர்வை நீக்கி அவ்வெதிர்ப்புக்களை ஒருங்கிணைக்கவேண்டிய பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது

 

பொதுச்செயல்பாட்டாளர்கள் இன்று சிதறிவிட்டிருக்கிறார்கள். அண்ணா ஹசாரேயின் போராட்டத்திற்குப்பின் அவர்களால் திரள முடியவில்லை.  இந்தியாவில் வேறெந்த போராட்டம் இன்றைக்கு வலுவுடன் நிகழ்கிறது? அனைவருமே சோர்வுற்றிருக்கிறார்கள். அவர்களைச் செவிகொள்ள எவருமில்லையோ என்னும் ஐயம் நிலவுகிறது. உண்மையில் அண்ணா ஹசாரேயோ அருணா ராயோ அல்ல, ராகுலோ பிரியங்காவோ அறைகூவினாலே செவிகொள்ளப்படாதுபோகவே வாய்ப்பு அதிகம்

 

செயல்பாட்டாளர்களைத் திரட்டவேண்டிய எதிர்க்கட்சிகள் அதைவிட மோசமாகச் சிதறியிருக்கின்றன. நம்பிக்கை இழந்திருக்கின்றன. தகவலறியும் உரிமைச்சட்டத்தைப்பற்றி  எதிர்க்கட்சிகளில் எவை எவை என்னென்ன பேசின என்பதை மட்டும் கவனியுங்கள், உங்களுக்கே புரியும்.

 

பொதுவாக இப்படி உருவாகும் கிளர்ச்சிகளைப் பார்த்தால் அவற்றுக்கு ஒரு தற்செயல்தன்மை இருப்பதைப் பார்க்கலாம். அவற்றை ‘சதி’ என்றெல்லாம் குறுக்கிக்கொள்வதற்கு ஓர் அரசியல் கண்ணாடி தேவை. ஆனால் நடைமுறையில் வெவ்வேறு சமூக- அரசியல் – பண்பாட்டுப்போக்குகளும் சில தனிமனிதர்களும் சந்திக்கும் புள்ளியில் இவை நிகழ்கின்றன. அண்ணா ஹசாரேயின் இயக்கம் உருவானமைக்கு அன்றைய சூழலில் என்னென்ன விசைகள் செயல்பட்டன, எவரெல்லாம் அவருடன் இணைந்தனர் என்பதை அரசியல்நிலைபாடுகளினூடாக அல்லாமல் ஆய்வுசெய்யும் அரசியலாய்வாளர் ஒருவரே சொல்லமுடியும்.

 

இத்தகைய கிளர்ச்சிகளின் நீடித்த மதிப்பு மிகக்குறைவு என்னும் எண்ணம் இப்போது எனக்கு உருவாகியிருக்கிறது எனக்கு. முன்பு ’பலியபாலின் பாடங்கள்’ என்ற நூலை மொழியாக்கம் செய்தேன். என் நண்பர் கே.சி.நாராயணன் எழுதியது. ஒரிஸாவில் பலியபால் என்னும் ஊரில் ராக்கெட் நிலையம் அமைப்பதற்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சி, போராட்டத்தின் கதை. காங்கிரஸ் அரசுக்கு எதிராக எழுந்த அப்போராட்டத்தை அன்றைய எதிர்க்கட்சிகள் ஆதரித்தன. குறிப்பாக சந்திரசேகர். அதை வழிநடத்திய ஒரியத் தலைவர்கள் அரசியலில் முகம்கொண்டனர். ஆனால் பின்னர் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோது அதே சந்திரசேகர் ஆட்சியில்தான் அத்திட்டம் முழுமைபெற்றது.

 

போராட்டம் நிகழ்ந்தபோது அது ஒரு பெரிய களியாட்டாக இருந்தது. குறிப்பாக நடுத்தரவர்க்கத்தினரின் கொண்டாட்டமாக திகழ்ந்தது அது. ஊடகங்களில் அது ஒரு செய்தித்திருவிழா. ஆனால் மிக விரைவிலேயே நுரையடங்கியது. அவ்வெழுச்சியை நீட்டிக்க முடியவில்லை என்பதே அரசுக்குச் சாதகமாக அமைந்தது. ஓர் எழுச்சி நுரையடங்கிவிட்டது என்றால் அது உருவாக்கும் உளச்சோர்வினால் அடுத்து நீண்டகாலத்திற்கு இன்னொரு எழுச்சியை உருவாக்க முடியாது. தலைவர்கள் சிதறிவிடுவார்கள். முன்னணிப்போராளிகள் நம்பிக்கை இழப்பார்கள். ஊடகங்களுக்கு அது பழையசெய்தியாகிவிடும். பலியபாலில் நடந்தது அதுவே. பலியபால் போராட்டம் தொடங்கியபோது எந்நிலையில் இருந்ததோ அதே நிலையைத்தான் அறுதியாக அங்கிருந்த விவசாயிகள் சென்றடைந்தனர். பல இந்தியப்போராட்டங்களின் நிலை இதுவே

 

ஒரு போராட்டம் பின்னடைவைச் சந்தித்தபின் அதன் தலைவர்களை குறைசொல்வது, அவர்களை அனைத்திற்கும் பொறுப்பாக்குவது, பிறகு நிகழும் அனைத்திலும் அவர்கள் குரலெழுப்பினால்கூட ‘அவர்கள் இப்போது எங்கே போனார்கள்? ஏன் போராட்டம் வெடிக்கவில்லை’ என கேள்வி எழுப்புவது எல்லாமே நடுத்தரவர்க்க வம்புப்பேச்சு. அதை அரசியல்வாதிகள் ஊடக விவாதங்களில் எடுத்தாள்வார்கள். அரசியல் ஆய்வாளர்களின் வழி மெய்யான ஆய்வாகவே இருக்கமுடியும்.

 

இத்தகைய மக்கள் எழுச்சிகளின் உணர்வுகள் தற்காலிகமானவை, மிக எளிதில் பின்னோக்கிச் சென்றுவிடவும்கூடியவை .ஒரு விளைவு தொடர்ச்செயல்பாடுகள் வழியாக முற்றிலும் கனிந்தபின் அறுதியாக வெல்ல இத்தகைய களப்புரட்சிகள் உதவலாம். ஒரு குறிப்பிட்ட கருத்தை வலுவாக பலகோடிப்பேருக்குக் கொண்டுசெல்ல உதவலாம். ஒர் உளநிலை சமூகத்தில் வலுவாக திகழ்வதை ஆட்சியாளருக்கும் பிறருக்கும் வெளிப்படுத்த உதவலாம். அவ்வளவுதான், இவை எதையும் உருவாக்கி முழுமைசெய்வதில்லை.அதற்குச் சீராக நிகழும் தொடர்ச்சியான களச்செயல்பாடுகள் தேவை.

 

ஆனால் இப்போராட்டங்களின் பொதுவான நன்மை என்பது ஒரு செய்தியை அது சமூக ஆழுள்ளத்தில் ஆழமாகப் பதியச்செய்கிறது, ஒரு ‘கல்ட்’ ஆக மாற்றுகிறது என்பதே. ஊழலுக்கு எதிரான இந்திய உளவியலை தொகுப்பதில் அதை ஒரு நிலைபாடாக ஆக்குவதில் அண்ணா ஹசாரேயின் இயக்கம் பெரும்பங்காற்றியிருக்கிறது. பாரதிய ஜனதா அரசு ஊழல் செய்கிறது என்றால் அதை உரியமுறையில் முன்வைத்து அந்த மக்கள் நிலைபாட்டை பயன்படுத்திக்கொள்ளவேண்டியது எதிர்க்கட்சிகளின் பணி. அவர்கள் அதை எவ்வண்ணம் செய்தார்கள் என்பதுதான் கேள்வி.

 

இன்றைய சூழல் எதிர்த்தரப்பே இல்லாமல் அரசியல்நிகழ்வது. ஆட்சியின் மிகப்பெரிய குறைகளைச் சுட்டிக்காட்டக்கூட உதிரித்தனிக்குரல்கள் மட்டுமே ஒலிக்கின்றன. இச்சோர்வுக்கு வசதியாக அண்ணா ஹசாரேவையோ அருணா ராயையோ சுட்டிக்காட்டுவதுதான் தப்பித்தல் என்பது. இந்த சோர்வுநிலையிலிருந்து தேசிய அளவில் ஆற்றல்வாய்ந்த ஜனநாயகத் தலைமை எழுந்து வரவேண்டும். அது அனைவருடைய எதிர்பார்ப்பு.

 

நான் அண்ணா ஹசாரே போன்ற ஒருவரையே நம்புகிறேன். செய்துகாட்டிய களப்பணியாளரை. அவரையே மதிப்பேன். இன்று அவரைப்போன்ற ஒருவர் தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக, மதவெறுப்புப் பரப்புதலுக்கு எதிராக, வரிக்கெடுபிடிகளால் உருவாகும் பொருளியல் வீழ்ச்சிக்கு எதிராகக் குரல்கொடுப்பார் என்றால் அவருடனேயே நான் நிற்பேன். அண்ணா ஹசாரேயை ஏன் ஆதரித்தேனோ அதே காரணம்தான்

 

ஜெ

முந்தைய கட்டுரைஆச்சரியம் என்னும் கிரகம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-37