இருபது நிமிட நிலம்

நாகர்கோயிலில் இருந்து சென்னைக்கு மாலை கிளம்புவன பொதுவாக இரண்டு ரயில்கள், சிலநாட்களில் மூன்று. அனந்தபுரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் ஓய்வெடுத்துக்கொண்டு மறுநாள் காலை எட்டுமணிக்குத்தான் சென்னை சென்றடையும். நாகர்கோயில் எக்ஸ்பிரஸ் மேலும் ஒருமணிநேரம் பிந்தும். மிக வசதியான ரயில் கன்யாகுமரி எக்ஸ்பிரஸ்தான். மாலை ஐந்தேமுக்காலுக்குக் கிளம்பும். மறுநாள் காலை ஆறரைக்குள் சென்னை.

காலையில் தூங்கி எழுந்தபின் ரயிலில் நெடும்பொழுது இருக்க நான் விரும்புவதில்லை. எழுந்ததுமே மானசீகமாக சென்று சேர்ந்திருப்போம். அதன்பின் எப்போது ஊர் வரும் என்று காத்து காத்து அமர்ந்திருப்பது பயணத்தின் இனிமையயே இல்லாமலாக்கிவிடுகிறது. அத்துடன் ரயில் கழிப்பறைகள் எனக்கு ஒத்துக்கொள்வதில்லை. ரயிலில் இருக்கும் குமரிமாவட்ட ஆசாமிகளில் சிலர் அதிகாலையில் முங்கிக்குளிக்கும் வழக்கம் கொண்டவர்கள். கழிப்பறையை திறந்துவிட்டு உள்ளேயே குளித்துவிட்டு விபூதி போட்டுக்கொண்டு  “ஓம் நமச்சிவாயா !முருகா! என்னப்பனே!” என்று காட்சியளிப்பார்கள். பின்னர் செல்பவர்களுக்கு கழிப்பறையில் நீர் இருக்காது. பக்தியின் பின்விளைவு கொடுநாற்றம்.

பொதுவாக குளிர்வசதிப் பெட்டிகள்தான் எனக்கு வசதி. கூடுமானவரை முதல்வகுப்பை தவிர்ப்பேன். குடிகாரப் பணக்காரர்கள் உடன் வந்துவிட்டார்கள் என்றால் சித்திரவதை ஆகிவிடும். பெரிய மனிதர்கள் புகைபிடிப்பதும் உண்டு. முதல்வகுப்பு ‘கூபே’யைச் சுற்றி பணியாளர்கள் பீயில் ஈ என ரீங்கரிப்பார்கள். ஏறியதுமேபெரியமனிதர்கள் ஆளுக்கு இருநூறு ரூபாய் கொடுத்துவிடுவார்கள். எஞ்சிய சிவாஸ் ரீகல், பிளாக்லேபில், ரெமிமார்ட்டின். ஆகவே கிண் என அழைத்த குரலுக்கு நிற்பார்கள். மற்றபெட்டிகளில் குடிப்பவர்கள் குடித்தாலும் குடிக்காதவர்கள் போல இருப்பார்கள். குடிகாரர்களையாவது தாங்கிக்கொள்ளலாம். டாக்டர்களைக் கண்டாலே பீதிதான்.

ரயிலில் எப்போதும் ஒருமணிநேரமாவது வாசலில் நின்று வெளியே மெல்லத்திரும்பும் நிலத்தை பார்த்துக்கொண்டிருப்பது என் வழக்கம். தெரியாதவர்கள் நான் முதல்முறையாகப் பார்க்கிறேன் என நினைக்கக்கூடும். உண்மையில் நான் மாதம் மூன்றுமுறையாவது அந்த ரயிலில் சென்னை சென்று மீள்கிறேன். கிட்டத்தட்ட என் வீடு போல. ரயில்கட்டணத்தை வாடகையாகவும் கொள்ளலாம். இந்த ரயிலின் பெட்டிகள் எனக்கு நன்றாகப் பழகியவை. ரயில்பெட்டியின் அமைப்பே ஒருவகையான இதமான “வீட்டிலிருக்கும் உணர்வை” அளிக்கிறது.

நான் இந்த ரயிலில் துயில்வதுபோல எங்கேயும் ஆழ்ந்து செல்வதில்லை. எட்டு மணி வாக்கில் கம்பிளியை விரித்து வெண்ணிறப் படுக்கையை விரித்து போர்த்திக்கொண்டு பாட்டுகேட்டுக்கொண்டு படுத்தால் ரயில் இசைக்குள் என்னை கொண்டுசெல்வதுபோல தோன்றும். எனக்கு செவியொலிக் கருவிகள் ஒத்துக்கொள்வதில்லை, தரமான கருவிகளும் கைவசமில்லை. ஆகவே காதருகே மிகமிக மெல்லிய ஒலியில் பாடலை ஒலிக்க விடுவேன். அது பெரும்பாலும் கடந்தகாலத்தை எனக்குச் சொல்லிக்கொண்டிருக்கும். நவீன இசைக்கருவிகள் வந்தபின், குறிப்பாக ஸிந்தஸைஸர்களுக்குப் பின், வந்த இசையை நான் கேட்பதில்லை.

ஆனால் இருபது நிமிடங்கள் ஒவ்வொரு பயணத்திலும் முக்கியமானவை. நாகர்கோயிலில் இருந்து கிளமபினால் ஆரல்வாய்மொழி கடப்பது வரை. நாகர்கோயிலுக்குச் செல்வதென்றால் ஆரல்வாய்மொழி கடந்து நாகர்கோயில் வரை. பெரும்பாலும் இருபது நிமிடங்கள். திரும்பிச் செல்லும்போது அரைமணிநேரம். ரயில் ஒரு நீண்ட ‘பான்ஷாட்’ ஐ அளிக்கும். சினிமா மொழியில் டிராலி ஷாட்.

விசித்திரமான காமிராக் கோணங்களுக்குப் புகழ்பெற்ற தமிழ் ஒளிப்பதிவாளரான கர்ணன் அக்காலத்தில் ரயில் தண்டவாளத்தையே டிராலியாக ஆக்கி ஏழுநிமிடம் நீண்ட ஒற்றை ஷாட்டில் ஒரு குதிரைச்சவாரியை படமாக்கியதாகச் சொல்வார்கள். அவரை ரயிலுடன் சேர்த்துக் கட்டியிருந்தார்களாம். ஒளிப்பதிவாளர்கள் இருபத்துநான்கு மணிநேரமும் காமிராவுடன் சேர்த்துக் கட்டப்பட்டவர்கள்தான். ஆனால் தமிழ் சினிமாவில் இயற்கைக்காட்சியை அரைநிமிடத்திற்குமேல் காட்டமுடியாது – காட்டும் துணிவு கொண்டவர் மணிரத்னம் மட்டும்தான். அரங்கில் நம்மவர் ஊளைபோடுவார்கள்.

இருபுறங்களிலும் ஓடும் இந்த நிலத்தை முப்பதாண்டுகளாக திரும்பத்திரும்ப பார்த்துக்கொண்டிருக்கிறேன். பார்க்கத் தொடங்கிய நான் அல்ல இன்று உள்ளவன். என் கண்கள் இன்று உலகின் மிக மிக அழகிய பல இடங்களைப் பார்த்துவிட்டன. ஆனால் அந்தப்பித்து ஏறி ஏறித்தான் வருகிறது. இனிய எதுவும் நிறைவளிப்பதில்லை, மேலும் மேலும் என உளம் எழவே செய்கின்றன. இறைவனையே தெவிட்டாத தேன் என்றுதானே பாடுகிறார்கள்.

எத்தனையொ மாற்றங்கள். முப்பதாண்டுகளுக்கு முன் பெரும்பகுதி வயல்களும் குளங்களும்தான். நீலப்பரப்பும் பச்சைப்பரப்பும் என மாறி மாறி எழுந்து வரும் ஓவியப்பக்கங்கள். ஒரு மாபெரும் நூலை புரட்டிப் புரட்டி நோக்குவதுபோல. ஒவ்வொன்றையும் பார்க்க ஒருசில நிமிடங்கள்தான். நோக்கும்போதே ரயில் வளைந்து காட்சிக்கோணம் மாறிவிடும். அரைநிமிடத்தில் நாம் நோக்கிக்கொண்டிருக்கும் காட்சி முற்றிலும் பிறிதொன்றாக ஆகும் விந்தை.

பின்னர் மலைகள் தெரியத்தொடங்கும். இடப்பக்கம் தெரியும் மலை மேற்குதொடர்ச்சி மலையின் கீழ்நுனி. தென்கேரளத்தின் முகில்திரள் சூடி இளநீல நிறமாக இருக்கும். முகில்களில் அந்தியொளி எழுவதன் பல்லாயிரம் பளிங்கு அடுக்குகள். நோக்கிக்கொண்டிருக்கையிலேயே ஒளி மாறுபடும். நீரின் வண்ணம உடன் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.

அல்லது ஒன்று செய்யலாம் , ரயிலின் வாசலில் கண்களை நேராக நிறுத்தி நின்றிருக்கலாம். காட்சிகள் செல்லும் விசையில் அவையே மழுங்கி இம்ப்ரஷனிஸ ஓவியமாக ஆகிவிடும். ஆனால் தனித்தனி படச்சட்டங்கள் கிடைக்காது. நாம் இயற்கையை ரசிக்கவேண்டும் என்றால் அவை படச்சட்டங்களாக ஆகவேண்டும். இந்நூற்றாண்டில் ஓவியக்கலை மனிதன் உலகை நோக்கும் கோணத்தையே மாற்றிவிட்டிருக்கிறது. கபிலனும் கம்பனும் கண்ட குறிஞ்சிநிலம் அல்ல நான் பார்ப்பது. நான் உலகப்புகழ்பெற்ற ஓவியர்கள், புகைப்பட நிபுணர்கள் வழியாக அதைப் பார்க்கிறேன்.

இழப்பு உண்டா? ஆம், உள்ளிருக்கும் அனுபவத்தை இழந்துவிடுவோம். ஆகவேதான் நான் காடுகளுக்குள் செல்லும்போது புகைப்படம் எடுப்பதில்லை. வேறு ஒரு நண்பர்தான் புகைப்படம் எடுப்பார். புகைப்படம் எடுக்கத் தொடங்கும்போதே அனைத்தும் படச்சட்டங்களாக  ஆகிவிடுகின்றன. ரயிலிலேயே சன்னல் வழியாக நோக்கும் காட்சி படச்சட்டம் மட்டுமேயானது. வாசலில் நிற்பது உள்ளிருக்கும் அனுபவத்தை அளிக்கிறது. ஜென் ஆண்ட் மோட்டார்சைக்கிள் மெயிண்டெனன்ஸ் என்னும் நூலில் ராபர்ட் பிரிஸிக் கார்ப்பயணத்திற்கும் மோட்டார்சைக்கிள் பயணத்திற்குமான வேறுபாடாக இதைச் சொல்கிறார்

நெடுங்காலம் முன்பு இம்ப்ரஷனிஸ ஓவியங்களைப் பார்க்கையில் அவை ஒருவகை அழகியல்நுட்பங்களாகவே தோன்றின. பின்னர் ஓவிய நகல்களையும் ஓவியநூல்களையும் சேர்க்கத் தொடங்கினேன். அவற்றுக்கு அகம் பழகியபோது ஒன்று நிகழ்ந்தது. என் கண்கள் நேர்காட்சியாக எழும் இயற்கையிலேயே இம்ப்ரஷனிசச் சித்திரங்களை உருவாக்கத் தொடங்கின. சற்று கண்களை சுருக்கிக்கொண்டால், ஒளிக்கு நேர்முன்னால் நின்றால் காட்சிகள் சற்றே மங்கலும் கலங்கலும் அடைந்து பிறிதொரு அழகு கொள்ளத் தொடங்கின.

ஒளி மிகுந்தாலும் குறைந்தாலும் இம்ப்ரஷனிஸக் காட்சிகளே விரிகின்றன. நீர்நிலைகள் மேல் ஒளி மிகையாக விழுந்தால் நீர்வெளி மறைந்துபோய் அலைகளின் ஒளிச்சிதறல்களால் ஆன ஒரு பரப்பு உருவாகிவிடுகிறது. ஒளி குறைந்தால் இருண்டு நீரலைகளின் வளைவுகளின் மெருகுகள் மட்டுமேயான பரப்பு. ஆம்பல் இலைகளில் ஒளித்துளிகள் உருவாக்கும் ஒளிச்சிதறல். தென்னையோலையின் எண்ணைமெருகுகளில் ஒளியின் வழிவு. எதுவும் சற்று மங்கலடைந்தால் இம்ப்ரஷனிசம் என ஆகிவிடுகிறது.

இம்ப்ரஷனிசமே இதுவரை உலகில் தோன்றிய ஓவியமுறைகளில் தலையாயது என்பது என் எண்ணம். இயற்கையில் இரண்டு கூறுகள் உள்ளன. நம் நடைமுறை அறிவு தொட்டு எடுக்கும் செய்திகள் ஒரு படலம். அவற்றின் அழகு பிறிதொரு படலம். இம்ப்ரஷனிஸம் பொருட்களில் இருந்து பொருள்தன்மையை அகற்றிவிடுகிறது. சிலசமயம் முப்பரிமாணத்தை . சிலசமயம் கால இட பொருண்மை அடையாளங்களை. சிலசமயம் வண்ணங்களைக்கூட. அழகை மட்டுமே பிரித்துக்காட்டுகிறது. வெறும் அழகின் பரப்பென இயற்கையைச் சமைத்து பரப்புகிறது.

ரயிலுக்கு வலப்பக்கம் விரிவது கிழக்குதொடர்ச்சி மலையின் கீழ்நுனி. தமிழகத்து மலைகளின் இயல்பு அவற்றுக்குண்டு. மழைகுறைவானதனால் நீர்ப்பசுமை கொண்ட மரங்கள் இல்லை. பனைகள், கருவேலக்குடைகள். உருண்டு திரண்டு நின்றிருக்கும் மாபெரும் உருளைப்பாறைகள். மேலே எழுந்து அமைந்த உச்சிப்பாறை. அடிவாரங்களில் விரிந்திருக்கும் வெறிச்சிட்ட தனிமை.

அந்தியில் அந்த மலைப்பாறைகள்மேல் எதிர்வெயில் பொழிந்திருக்கும். பாறைவளைவுகள் ஒளிகொண்டு மிளிர அவற்றின் நிழல் நீண்டு காலடியில் விழுந்திருக்கும். மஞ்சள் வெளிச்சம் மலைப்பாறைகளை கருமையிழந்து செம்பென்று மாற்றுகிறது. அவை உருகிக்கொண்டிருப்பதுபோல் தோன்றச் செய்கிறது. ஜ்வாலாமுகி என முகில்களை காளிதாசன் சொல்கிறான். இப்பாறைகளும் தழல்முகம் கொண்டவைகளே.

இருவேறு உலகங்கள் இருபக்கமும். இடப்பக்கம் தாமரை மலர்ந்த குளங்களுக்கு நடுவே பசுமையலை நிறைந்த வயல்கள். வெண்கொக்குகளும் நாரைகளும் கூழைக்கடாக்களும் கொம்புமூக்கன்களும் சிறகு விரித்து எழுந்து தங்கள் நிழலுடன் இணைந்து அமையும் காட்சி. வரப்புகளில் மண்வெட்டிகளுடன் நிற்பவர்கள்.மடைநிறைந்து பாயும் நீரின் பளிங்கு வளைவுகள். ஓடையின் ஒளிநெளிவுகள். சடை ஊன்றி நின்றிருக்கும் ஆலமரத்தின் அடியில் கரிய தார்ச்சாலையில் ரயில் செல்லக் காத்து நின்றிருக்கும் இருசக்கர வண்டிகள்.

மறுபக்கம் உடைமுள் செடிகளினூடாகச் செல்லும் செம்மண் கப்பிப் பாதைகள் வளைந்து சென்று மலைப்பாறையின் காலடியில் மறையும். எருமைகளுடன் தனி மேய்ப்பர்கள் ஓய்வாகக் கடந்துசெல்வார்கள். காற்றில் பனைமர மண்டைகள் சிலுப்பிக்கொள்ளும்.  காகங்கள் எழுந்தமையும். அரிதாக நரிகளைக் காணமுடியும். திகைத்து செவிகோட்டி ரயிலை நோக்கி நின்றிருக்கும்.

ஆரல்வாய்மொழியில் இரு மலைகளும் இணைகின்றன. அக்கைகோர்ப்பின் இடைவெளியினூடாக ரயில் மறுபக்கம் செல்கிறது. தமிழக நிலம் எழத்தொடங்குகிறது. திரை மூடுவதுபோல இரண்டு மலைகளும் நீண்டு வந்து பொருந்திக்கொள்ள குமரி மறைந்துவிடுகிறது. இருபது நிமிடங்களில் உருமாறி உருமாறி ஒழுகி மறைந்த காட்சிப்பெருக்கு.

விடுதியறை. உலகமெங்கும் நட்சத்திர விடுதியறைகளுக்கு ஒரே அமைப்பு. ஆகவே நாம் புதிய அறைக்கு வந்திருப்பதாகத் தோன்றுவதில்லை. வீட்டுக்கு வந்துவிட்டதுபோல. சிலநாட்கள் அறைகளிலிருந்து அறைகளுக்கு மட்டுமே வாழ்க்கை. நான் சென்னையில் திறந்தவெளிக்குச் செல்வது அரிதினும் அரிது. என்னை அங்குள்ள புகை மூச்சடைக்க வைக்கிறது. ஓசை உள்ளூர அமைதியின்மையை உருவாக்குகிறது

ஆகவே இரவு துயில்கொள்வதற்கு முன் மீண்டும் இசை. இம்முறை அறையை நிறைத்து பொங்குமளவுக்கு. கண்மூடினால் அந்த இருபது நிமிடங்கள். இருபதே நிமிடங்கள்தான். . மிகச்சரியாக  ”எடிட்” செய்யப்பட்ட ஒரு திரைப்படம் போல.

முந்தைய கட்டுரைஅபி,மிர்ஸா காலிப்- கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-42