ஈரோடு புத்தகக் கண்காட்சியில் ‘தன்னறம்’

விதைவழிச்செல்க

நம்மாழ்வார், பேச்சினூடேயே உடைந்தழுது கண்ணீரோடு விக்கிநின்ற தருணங்கள் சிலவுண்டு. அப்படியானதொரு தருணம்தான் இப்போது ஞாபகமடைகிறது. நீராதரங்களைக் காப்பதற்கான விழிப்புணர்வுப் பயணம் சில ஆண்டுகள் முன்பு ஈரோட்டில் நிகழ்ந்தது. காலிங்கராயன் கால்வாய் கரையோரத்துக் குழந்தைகள், மாதண்ணனின் கலைத்தாய் அறக்கட்டளைக் குழந்தைகள், கருங்கல்பாளையத்துக் குழந்தைகள் மற்றும் இளையோர்கள், பெரியோர்கள், கிராமத்தார்கள் என எல்லோரும் கலந்திருந்த நிகழ்வாக அதுவமைந்தது.

 

அந்நிகழ்வில் தான் நம்மாழ்வார் அய்யா காலிங்கராயன் கால்வாய் குறித்துப் பேசினார். “காலிங்கராயன் கால்வாய் – ஈரோட்டில் துவங்கி கொடுமுடி தாண்டி சென்று கலக்கும் மிக நீளமான கால்வாய். பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இங்கு வந்திருந்து இக்கால்வாயின் கட்டமைப்பு குறித்தும் நீர் மேலாண்மை குறித்தும் ஆய்வுசெய்து ஆவணப்படுத்தியுள்ளனர்”

 

“காலிங்கராயன் ஒரு படைக்காவலனாக இருந்து அரசமந்திரி ஆனவர். அவரும், அவர்தம் குடும்பமும், மக்களும் ஒன்றிணைந்து அக்கால்வாய் கட்டும்பணியை செயல்படுத்துகிறார்கள். ஆனால் அந்த காலிங்கராயன் மீது சிறு சந்தேகத்தை அவ்வூர் மக்கள் அடைந்தபொழுது, தன்னுடைய சொந்தங்களை எல்லாம் அழைத்து ஒரு மரத்தடியில் வைத்து அவர்களிடம் ஒரு சத்தியம் கேட்கிறான் அவன்.

 

“இந்த தண்ணீரையும், இதிலிருந்து உருவாகக்கூடிய விளைபொருட்களையும் நம் சந்ததிகள் யாருமே உரிமைகோரக் கூடாது. நமக்கும் இக்கால்வாய்க்கும் இனி எந்த தொடர்பும் இருக்கக் கூடாது. இது நம்மைத் தவிர மற்றெல்லா உயிர்களுக்கும் பொதுவானது என்று சொல்கிறான். எல்லோரும் அச்சொல்லை ஏற்று சத்தியம் செய்கிறார்கள். அவ்வளவு பெரிய கால்வாயை ஆண்டுக்கணக்கில் கட்டிய உழைக்கும் மக்கள் எல்லோரும் இரவோடு இரவாக ஊரைவிட்டு கிளம்பிப் போய்விடுகிறார்கள்”

 

“இப்படிப்பட்ட தியாகத்தின் நீர்க்குறியீடு அக்கால்வாய். இப்பவரைக்கும் அக்கால்வாயையோ அதன் தண்ணீரையோ அதன்வழி விளையும் பொருட்களையோ அச்சந்ததி மக்கள் அனுபவிப்பதில்லை. காலச்சத்தியம் மீறப்படாமல் காக்கப்படுகிறது. ஆனால், இன்று அதே கால்வாய்… தோல்தொழிற்சாலைகள் மற்றும் சாயத்தொழிற்சாலைகளின் விஷக்கழிவுகள் கலக்கிற சாக்கடையாக மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு மன்னர்கால பெருந்தியாகம்… இன்று நோய்மையை உருவாக்கும் அவலக்குறியீடாக ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலத்தையும் துயரையும் இன்றைய குழந்தைகளால் தான் மாற்ற முடியும். தீர்வு நம் மனசுக்குள்தான் உள்ளது” என்று ஆழ்வார் பேசிமுடித்து அழுது நின்றார் அன்று.

 

ஏதோவொருவகையில், தமிழ்நாட்டிலேயே அதிக புற்றுநோயுள்ள மனிதர்களையும், செயற்கை கருத்தரிப்பு மையங்களையும், மனப்பிறழ்வு சிசுக்களையும் உருவாக்கம் சீரழிந்த ஊராக ஈரோடு இன்று அவலமடைந்துள்ளது. உயிரை உருவாக்காத மண்தான் உண்மையில் ஆபத்தானது. இவையெல்லாம் மாறுவதற்கு ஒரே ஒரு கண விழிப்பு தேவை. அது எல்லா மட்டத்திலும் நிகழ வேண்டும். ஒரு எழுத்தோ, ஒரு சொல்லோ, ஒரு குரலோ எதுவாயினும் அத்திறப்பை நிகழ்த்தலாம்.

 

அத்தகைய திறப்புக்கான பிரார்த்தனையை ஏந்தி, ஈரோடு புத்தகத்திருவிழா அரங்கில் தும்பியும் தன்னறம் நூல்வெளியும் முதன்முதலாக இருப்படைகிறது. அறிவின் தளத்தில் நின்று ஒரு அநீதிக்கெதிராக அறைகூவலை உள்ளத்திலும் புறத்திலும் நிகழ்த்த இந்நூல்கள் நிச்சயம் துணைநிற்கும்.

 

நம்மாழ்வாரின் ‘இனி விதைகளே பேராயுதம், விதைவழி செல்க’ மற்றும் மசானபு புகோகாவின் ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’, ஜே.சி.குமரப்பாவினை அறிமுகப்படுத்தும் ‘டிராக்டர் சாணி போடுமா?’, வினோபா பாவேயின் ‘கல்வியில் வேண்டும் புரட்சி, கல்வியில் மலர்தல்’, அனுபம் மிஸ்ராவின் ‘குளக்கரையில் இளைப்பாறும் வரலாறு – The ponds are still relevant’, ஜெயமோகனின் ‘உரையாடும் காந்தி, தன்மீட்சி’, இதுதவிர மண்ணின் மரங்கள், நவகாளி யாத்திரை, ஜான் சுந்தரின் பிஸ்கட் நிலாக்கள், தியாக சேகரின் ஓரிகாமி காகித மடிப்புக்கலை பயிற்சிநூல்கள்… இன்னும் பல வாழ்வுசார் நூல்கள் அரங்கில் காத்திருக்கின்றன.

 

தோழமையுறவுகள் அனைவரும் வாருங்கள், ஈரோட்டில் நிகழும் இருதயப்பூர்வமான இக்கூடுகைக்கு.

இடம் : வ.உ.சி பூங்கா,ஈரோடு.
நாள் : 2 ஆகஸ்ட் – 11ஆகஸ்ட்
அரங்கு எண் : 187A
தொடர்புக்கு:
தும்பி – தன்னறம் நூல்வெளி
9843870059
முந்தைய கட்டுரைகவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைஅன்றைய கூண்டுகள் அன்றைய சிறுவெளிகள்.