‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35

காட்டுக்குள் தங்கள் காலடி ஓசைகள் சீராக முழங்கி சூழ்ந்து வர நடந்துகொண்டிருந்த இளைய யாதவரும் பாண்டவர்களும் களைத்திருந்தனர். அரைத்துயில் அவர்கள் உள்ளங்களை மூடியிருந்தது. அகச்சொற்கள் தயங்கித் தயங்கி சென்றுகொண்டிருந்தன. அவர்களில் பீமனே பெரிதும் களைத்திருந்தான். அவனால் நடக்கமுடியவில்லை. அவ்வப்போது பெருமூச்சுடன் நின்று தன் எடைமிக்க கைகளை தொங்கவிட்டு தலைகுனிந்து நின்றான். முன்னால் சென்ற உடன்பிறந்தார் நின்று அவனை நோக்கியபடி ஓய்வெடுத்தனர். நின்றிருக்கையிலும் அவர்கள் நிலையழிந்த உடலசைவு கொண்டிருந்தனர். விரல்கள் பின்னிப்பின்னி விலகின. சொற்களோ என உதடுகள் அசைந்தன. முகங்கள் வெவ்வேறு மெய்ப்பாடுகளை காட்டின.

முதலில் விழிப்பு கொண்டு இளைய யாதவர் “செல்வோம்” என கிளம்பியதும் அவர்களும் உடனெழுந்தனர். பீமன் அவர்களை சலிப்புற்ற விழிகளால் நோக்கிக்கொண்டு அசையாமல் நின்றான். அவர்களை அவன் அறிந்ததே இல்லை என்பதுபோல் தோன்றினான். சகதேவன் பீமனை மெல்லிய குரலில் “மூத்தவரே” என அழைத்து “செல்வோம்” என்றான். பீமன் மீண்டும் ஒரு நீள்மூச்சுடன் தொடர்ந்தான். தன் உடலுக்குள் தன்னை உந்தி எழுப்புவதைப்போல் ஆயம்கூட்டி பின்னர் எடைகொண்ட காலை எடுத்து வைத்து நடந்தான். அவன் உடலின் அசைவைக் கண்டு திரும்பி நோக்கிய யுதிஷ்டிரன் பெருமூச்சுடன் தலைதிருப்பிக்கொண்டார்.

கிளம்பிய பின் அவர்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. காட்டின் நடுவே போர்ப்பொருட்களை கொண்டுவருவதற்காக அமைத்த மண்சாலையில் வானுடைந்து வீழ்வதுபோல் பொழிந்த மழையில் நீர்த்திரையை உற்றுநோக்கி அதன் வண்ணங்களில் இருந்து வழியை தீட்டிக்கொண்டு சென்றனர். இருமருங்கிலும் எழுந்த காடு மழையின் ஓலத்தால் நிறைந்திருந்தது. பேரிலைகள் நீர் விழுந்து அசைய நிலத்திலிருந்து எழுந்த ஒளியால் இலைகளின் அடிப்பகுதி மெருகு கொண்டிருந்தது. காட்டுக்குள் இருந்து எழுந்த மணத்தை அவர்கள் அதற்குமுன் அறிந்திருக்கவில்லை. அது மழைக்காலப் புதுச்சேற்றின் மணம். ஆனால் அது மட்டுமல்ல. அதில் புளித்த மதுவின் எரிமணம் இருந்தது. கந்தக வாடை கலந்திருந்தது.

வழியெங்கும் மானுட உடல்பகுதிகள் விண்ணிலிருந்து உதிர்ந்தவைபோல் கிடந்தன. நீர் அருந்த இறங்கியபோது கால்களில் மிதிபட்ட கைகளை அரவு என எண்ணி உடல் விதிர்க்க யுதிஷ்டிரன் துள்ளி அகன்றார். நீர் அள்ள ஓர் ஓடையில் குனிந்தபோது இறந்த மீன்கள் என ஒதுங்கியவை வெட்டுண்ட விரல்கள் எனக் கண்டார். புதர்களுக்குள் உதிர்ந்த காய்கள் என தலைகள் தெரிந்தன. “இளையோனே, இவை இங்கே எவ்வண்ணம் வந்தன?” என்றார். நகுலன் “அனைத்துக் காவல்களுக்கு அப்பாலும் நாய்நரிகளும் கழுகுகளும் தங்கள் வழிகளை கண்டறிந்துவிடுகின்றன” என்றான்.

மரக்கிளை ஒன்றின்மேல் பாதி உடல் எலும்புக்கூடாக மாறி அமர்ந்திருந்தது. அதன்மேல் வசித்த சிவிங்கிப்புலிகள் மேலும் ஏறி உச்சிக்கிளையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தன. யுதிஷ்டிரன் “இக்காடு முழுக்கவே இடுகாடென்று ஆகிவிட்டிருக்கிறது” என்றார். சகதேவன் ஒன்றும் சொல்லாமல் நடக்க யுதிஷ்டிரன் சுட்டிக்காட்டினார். அங்கே பிலத்தின் வாய் ஒன்று திறந்திருக்க அதிலிருந்து நீர் பீறிட்டு ஓடையாக வழிந்தது. அதற்குள் மானுட உடல்கள் செறிந்திருந்தன. பெருங்கூட்டம் பிதுங்கி முண்டியடித்து வெளிவரத் துடிப்பதுபோல. நகுலன் “கவந்தனின் வாய்க்குள் என உடல்கள்” என்றான். சகதேவன் வெறுமனே நோக்கிவிட்டு நடந்தான்.

காடு உணவுண்டு பசியடங்கி எச்சங்கள் சூழப் பரந்திருக்க இளைப்பாறும் அன்னைவேங்கை போலிருந்தது. “நாம் கண்ட குருக்ஷேத்ரம் மிகச் சிறிதுதான் போலும். நம்மைச் சூழ்ந்து அடுக்கடுக்காக அது விரிந்து பரந்திருக்கிறது” என்றார் யுதிஷ்டிரன். அவரே “பாரதவர்ஷம் முழுக்க இந்தப் போர் நிகழ்ந்திருக்கிறது போலும். இத்தொல்நிலத்தின் விரிவெங்கும் இக்குருதி பரந்திருக்கக்கூடும்” என்றார். அவர்கள் ஏதும் சொல்லாமல் நடக்க அவர் உடன் நடந்தபடி “இப்போது போர்முடிவின் செய்தி செல்லத் தொடங்கியிருக்கும்… பாரதவர்ஷம் முழுக்க இனி அது சென்றுகொண்டே இருக்கும். ஆண்டுக்கணக்கில், தலைமுறை தலைமுறையாக செல்லும். நூல்களில் ஏறி மொழியில் சென்று படியும். நினைவுகளில் நிலைக்கும்” என்றார்.

சொற்களை அவர் எதன்பொருட்டு அடுக்கிக்கொண்டிருந்தாரோ அந்த நோக்கம் முற்றாக நொறுங்க நெஞ்சுலைந்த குரலில் “தெய்வங்களே! மூதாதையரே! எங்களை வைத்து எதை ஆடினீர்கள் நீங்கள்!” என்று சொல்லி விம்மி அழுதார். அவர் அழுவதை நோக்கியபடி அவர்கள் நின்றனர். சகதேவன் அருகே வந்து “வருக, மூத்தவரே!” என தோள் தொட்டு அணைத்து அழைத்துச்சென்றான். விம்மல்களும் விசும்பல்களுமாக அழுதபடி கால்கள் பின்ன யுதிஷ்டிரன் உடன் நடந்தார்.

ஒருநாள் பயணத்தின் பின் ஓர் ஓடைக்கரையில் இறங்கி உணவு தேடி உண்டனர். மலைப்பாறை இடுக்கிலிருந்து ஊறி வந்த தூய நீரை குடுவைகளில் மொண்டு எடுத்துக்கொண்டு காட்டுப்பாதையில் நடக்கத் தொடங்கினர். எங்கு செல்கிறோம் என்னும் எண்ணமே அவர்களிடம் எழவில்லை. காலியல்பாகவே இளைய யாதவரை பின்தொடர்ந்தனர். குருக்ஷேத்ரத்திலிருந்து அகன்றுசெல்கிறோம் என்னும் உணர்வே அவர்களை மேலும் மேலுமெனச் செலுத்தியது.

வழக்கமாக பாதை தெளித்தபடி முன்னால் செல்லும் பீமன் தயங்கிய நடையுடன் பின்னால் தனித்து நடப்பதைக் கண்டு யுதிஷ்டிரன் நின்று “இளையோனே, உன் உடல்நிலை நன்றாக இல்லையா?” என்றார். பீமன் ஒன்றுமில்லை என தலையசைத்தான். “நீ நோயுற்றிருக்கிறாய். உன்னை இத்தனை வெளிறி நான் நோக்கியதே இல்லை” என்றார் யுதிஷ்டிரன். பீமன் அதற்கு மறுமொழி சொல்லவில்லை. யுதிஷ்டிரனின் விழிகளை நோக்கவுமில்லை.

மீண்டும் நடக்கத் தொடங்கியபோது யுதிஷ்டிரன் அவனை நோக்கி திகைப்புடன் “நீ கையில் வைத்திருப்பது என்ன? அதைக் கண்டால் கதை எனத் தோன்றவில்லை” என்றார். அப்போதுதான் மற்றவர்களும் நோக்கினார்கள். பீமனே அப்போதுதான் குனிந்து அதை நோக்கினான். “அது ஒரு இரும்புத்தண்டு… எங்கிருந்து எடுத்தாய் அதை?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். பீமன் அதை தூக்கிச் சுழற்றி நோக்கிவிட்டு “என் கதை உடைந்துவிட்டது. கையில் சிக்கிய கதைகளை எடுத்து அவனிடம் போரிட்டேன். இறுதியாக எடுத்தது இது” என்றான். அவன் அதை நோக்கி “இதை எடுத்துவிட்டு அவனை நோக்கி நான் சென்றேன். அவன் மறைந்துவிட்டிருந்தான்” என்றான்.

“அது பிதாமகரின் கையிலிருந்த அந்த பெருங்கதையின் தண்டு” என்று சகதேவன் சொன்னான். “அதன் முழை உடைந்து களத்தில் கிடப்பதை நான் கண்டேன்.” பீமன் அதை நோக்கிவிட்டு “ஆம், ஆனால் பெரிய கதையைவிட எடை கொண்டிருக்கிறது இது” என்றான். “வேறு கதை ஏதும் கிடைக்குமா என்று பார்” என்றார் யுதிஷ்டிரன். “நமக்குப் பொழுதில்லை” என்று இளைய யாதவர் சொன்னார். அவர் கிளம்ப அனைவரும் உடன் நடந்தனர். நின்றபோது இருந்த புரிந்துகொள்ள முடியாத பதற்றம் காலடிகள் ஒலிக்கத் தொடங்கியதும் அணைந்துவிடுவதை உணர்ந்தனர்.

நெடுந்தொலைவுக்குப் பின்னர்தான் யுதிஷ்டிரன் முதல்முறையாக செல்திசையை எண்ணினார். இளைய யாதவரை அணுகி “நாம் எங்கு செல்கிறோம்?” என்று கேட்டபடி தொடர்ந்தார். “நான் அந்த இடத்தை சொற்களாகவே அறிந்திருக்கிறேன். சொல்லில் இருந்து அந்நிலத்தை மீட்டெடுத்துக்கொள்கிறேன்…” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் “இவ்வண்ணம் நடந்து சென்று அந்நிலம் அமைந்த சொல்வெளிக்குள் நுழைந்துவிட்டால் நன்று” என்றார். “சொற்கள் பொருள்கொண்டவை. எல்லா சொல்லும் பொருள்குறித்தனவே என்று சொன்ன மூதாதை மானுடனுக்கு அளித்த ஆறுதலையும் நம்பிக்கையையும் தெய்வங்களும் அருளியதில்லை.”

அவருடைய சொற்கள் அவர்களை எவ்வகையிலோ அகம் குலையச் செய்தன. அகத்தே செறிந்த அமைதியை அவர்கள் எடை என உணர்ந்தனர். அது கலைகையில் எரிச்சல் கொண்டனர். அவருடைய சொற்களை செவிகள் விரும்பவும் செய்தன. பீமன் அந்த கதைத்தண்டை தோளில் வைத்தபடி நடந்தான். யுதிஷ்டிரன் திரும்பி நோக்கி “ஒருவகையில் நன்று. அது அஞ்சனைமைந்தரின் கதை. பிதாமகரின் படைக்கலம்” என்றார்.

 

அதன்பின் காட்டுக்குள் ஊடுருவிச்சென்ற வழியெங்கும் அவர்கள் சொல்லெடுக்கவில்லை. உள்ளும் சொல் ஒழிந்துகிடந்தது. சொல்லின்மையால் அவர்களின் உடல்கள் இயல்பாக தாளம் கொண்டன. அந்தச் சீரான ஓசைகளுக்கு அப்பால் பிழைதாளமென எழுந்து ஒலித்த பிறிதொரு காலடி ஓசையைக் கேட்டு நின்றனர். அஞ்சிய விலங்கொன்று புதர்களை ஊடுருவி மரங்களில் முட்டி விழுந்து எழுந்து மூச்சொலிக்க அணுகிவருவதைக் கண்டு நகுலன் வில்லில் அம்பு கோத்து கை தூக்கினான். அவனை இளைய யாதவர் கையசைத்து தடுத்தார்.

இலைத்தழைப்புக்குள் இருந்து வெளிவந்து அவர்கள் முன் விழுந்து கையூன்றி எழுந்து நின்ற வேடன் வாய் திறந்து விழிகள் துறித்து உடலெங்கும் வியர்வை வழிய மூச்சுக்கு தவித்தான். பீமன் அவனருகே சென்று அவன் தோளைப்பற்றி மெல்ல உலுக்கி அவன் உளம் கொண்டிருந்த விசையிலிருந்து மெல்ல விடுவித்து “அஞ்சாதே… அஞ்சாதே” என்றான். “எங்கிருந்து வருகிறாய்? சொல்க!” என்றான். அவன் குரலின்றி தொண்டைமுழை உலைய நெஞ்சு விம்மித்தணிய தவித்தான். “அஞ்ச வேண்டாம். இங்கு எவரும் உன்னை எதுவும் செய்துவிட இயலாது. சொல், எங்கிருந்து வருகிறாய்? எதைக் கண்டு அஞ்சுகிறாய்?” என்று பீமன் கேட்டான்.

“அங்கே! அங்கே!” என்று சொல்லிவிட்டு கால் தளர்ந்து நிலத்தில் அமர்ந்து இரு கைகளையும் பின்னால் ஊன்றி முகத்தை அண்ணாந்து வாய் திறந்து காற்றை விழுங்கி உடல் தவித்தான் வேடன். பாண்டவர்கள் அவனைச் சூழ்ந்து நின்றனர். பீமன் முழந்தாளிட்டு அவனருகே அமர்ந்து சகதேவனிடம் “இளையோனே, இவனுக்கு சற்று விடாய்நீர் தேவைப்படுகிறது” என்றான். சகதேவனின் இடையிலிருந்த சுரைக்குடுவையை வாங்கிய யுதிஷ்டிரன் அருகணைந்து “இதை கொடு” என்றார். பீமன் அதை வாங்கி நீர்க்குடுவையிலிருந்து நீரை வேடனின் வாயில் சற்றே ஊற்றினான். மூன்று மிடறு நீர் அருந்தியதும் அவன் மெல்ல தளர்ந்து உடலை ஒருக்களித்து மண்ணில் படுத்து கண்களை மூடினான்.

அவன் இடக்கால் துடித்துக்கொண்டிருந்தது. தரை வந்த மீன்போல வாய் திறந்து மூடியது. மெல்ல அசைவடங்கி சீரான மூச்சொலியுடன் அவன் துயிலத்தொடங்கினான். “எதைக் கண்டு அஞ்சியிருப்பான்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “வேடர்கள் விலங்குகளைக் கண்டு அஞ்சுவதில்லை. அவர்களுக்கு விலகத் தெரியும். விலங்குகளுக்கு இரையாவதெனிலும் கூட அதுவும் காட்டு வாழ்க்கையின் ஒரு பகுதி என்றே எண்ணுவார்கள்” என்றார். இளைய யாதவர் “அவன் தெய்வங்களைக் கண்டு அஞ்சியிருக்கிறான்” என்றார். “காட்டுதெய்வங்களையும் அவர்கள் அறிந்திருப்பார்கள் அல்லவா?” என்றார் யுதிஷ்டிரன். சகதேவன் “அவன் இப்போது விழித்தெழுவான், உடலின் அனல் அணைந்ததும் உள்ளம் விழித்துக்கொள்ளும்” என்றான்.

அவன் முனகினான். பீமன் அவனை உலுக்கியபோது விழிதிறந்து அப்போது அவர்களை பார்ப்பதுபோல் வெறித்து நோக்கி, பின் நடுங்கி பின்னடையத் தொடங்கினான். பீமன் அவன் இரு கைகளையும் பற்றி உலுக்கி “நீ பாதுகாப்பாக இருக்கிறாய். அஞ்ச வேண்டியதில்லை” என்றான். “கூறுக, எங்கிருந்து வருகிறாய்?” என்றான். அவன் அவர்களை மாறி மாறி நோக்கிய பின் “நீங்கள் யார்?” என்றான். “நாங்கள் அரசகுடியினர். இக்காட்டுக்குள் ஒருவனைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறோம்” என்று பீமன் சொன்னான். “நீ எவரையோ கண்டு அஞ்சியிருக்கிறாய்… என்ன என்று சொல்.”

வேடன் கால்களை மடித்து உடல் குறுக்கி அமர்ந்து “அங்கே ஒரு சுனை இருக்கிறது. ஆழ்சுனை. நான் இதுவரை அதனருகே சென்றதில்லை. இம்முறை அங்கு சென்றபோது அங்கே ஒருவனை கண்டேன்” என்றபின் பீமனைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்துகொண்டு “தாங்களேதான் அது” என்றான். பீமன் அவனைப் பார்த்து “என்னைப் போன்றவனா?” என்றான். வேடன் அவனை மேலும் கீழும் நோக்கிய பின் “ஆம், தங்களைப் போன்றே அவரும் தோன்றினார். அல்லது தாங்களேதான்…” என்றான். விழிகள் வெண்சிப்பிகள்போலத் தெரிய “தங்கள் உடன்பிறந்தான் போலும்” என்றான்.

“அவனைத்தான் நாங்கள் தேடி வருகிறோம். எங்குள்ளது அச்சுனை?” என்று பீமன் கேட்டான். அவன் “அங்கே” என்றான். “வருக, வழிகாட்டுக!” என்று யுதிஷ்டிரன் சொன்னார். “தேவையில்லை. இவன் வந்த வழியே காட்டுத்தழைப்பில் தடமென பதிந்திருக்கும். அதனூடாக எளிதில் சென்றுவிடமுடியும்” என்று பீமன் சொன்னான். அவன் உயிர்கொண்டுவிட்டதுபோலத் தோன்றியது. இளைய யாதவர் வேடனிடம் “நீ அங்கு என்ன கண்டாய்?” என்றார். “ஒருவன் நீருக்குள் மூழ்கிக்கிடப்பதை கண்டேன். மேலிருந்து நோக்கியபோது அவனுடன் ஒரு பெண் இணைந்திருப்பதாக தோன்றியது. அவர்கள் புணர்ச்சியின் அசைவிலிருப்பதாக எண்ணி அம்பு தொடுத்தேன்.”

யுதிஷ்டிரன் “புணரும்போதா?” என்றார். வேடன் “அது பெரும்பழி என தெரியும். வேடர்களுக்கு ஏழு தலைமுறை அழிவு. ஆயினும் என்னால் அதை செய்யாமலிருக்க இயலவில்லை. ஏன் என்று நானே அறியேன்” என்றான். “அந்த நீர்ப்பாவையில் அம்பு தைத்தது. அவன் மேலெழுந்து வந்தபோது நீருக்குள் அவன் மட்டுமே இருப்பதை அறிந்தேன். என் அம்பு அவன் உடலில் பட்டிருக்கவும் இல்லை. அவன் என்னை நோக்கி புன்னகைத்து செல்க என்றான்.” குழப்பத்துடன் “நீ வேறெதைக் கண்டாய்?” என்று யுதிஷ்டிரன் கேட்டார். “அஞ்சும்படி எதையோ கண்டிருக்கிறாய்.” வேடன் “ஆம்” என்று விழிதாழ்த்திச் சொன்னான்.

யுதிஷ்டிரன் அவன் சொல்லுக்காக காத்திருந்தார். அவன் “என்னிடம் செல்க என்று அவன் கூறியபோது அந்த முகம் கந்தர்வர்களுக்குரிய அழகும் மென்னகையும் கொண்டிருந்தது” என்றான். மேலும் குரல் தழைய “ஆனால் அவனுடைய நீர்ப்பாவை அருகே அலையடித்தது. விழிதாழ்ந்தபோது நான் அதை பார்த்தேன். அது ஒரு பெண்ணுரு” என்றான். யுதிஷ்டிரன் பெருமூச்சுவிட்டார். “அவள் உடலில் நான் தொடுத்த அம்பு பாய்ந்திருந்தது. வெறிநகை கொண்ட கண்களால் அவள் என்னை பார்த்தாள்” என்றான் வேடன். “கொடுந்தெய்வம், அரசே. கன்னங்கரிய உடல். கிளை விரித்தெழுந்த எட்டு கைகள். அவற்றில் படைக்கலங்கள்.”

சகதேவன் “என்ன சொல்கிறான்?” என்றான். நகுலன் “மிகவும் அஞ்சிவிட்டான்” என்று முணுமுணுத்தான். இளைய யாதவர் “அப்பெண்ணுருவின் வலது மேற்கையில் எதை பார்த்தாய்?” என்றார். “எங்கள் குடித்தெய்வச் சிலைகளில் கண்டிருக்கிறேன். வலது மேற்கையில் மின்படை…” என்று அவன் சொன்னான். “இடது மேல் கையில்?” என்று இளைய யாதவர் மீண்டும் கேட்டார். “அங்கே ஒரு தாமரை மலர்… செந்தாமரை” என்றான் வேடன். பின்னர் “அவள் சிரிப்புபோல் அளியிலாத ஒன்றை நான் கண்டதில்லை” என்றான். “ஒருகணம்தான். நான் அஞ்சி மெய்ப்புகொண்டுவிட்டேன். எலிபோல் அப்படியே உறைந்து நின்றபின் பாய்ந்து ஓடத் தொடங்கினேன்.”

இளைய யாதவர் “செல்க!” என்று அவனிடம் சொன்னார். “அவன் அவ்வுரு என்னை நோக்கி எழுவதுபோல் ஒருகணம் தோன்றியது… என் பின்னால் அது நிழல் என உருப்பெருக்கி அணுகிக்கொண்டிருப்பதாக எண்ணி ஓடினேன்” என்றான். “இனி அஞ்சவேண்டாம், செல்க!” என்று இளைய யாதவர் அவனிடம் சொன்ன பின் “இவ்வழிதான். செல்வோம்” என்று பீமனிடம் கூறினார். அவர்கள் நடக்கத்தொடங்கியதும் வேடன் “அது பேயுரு… அரசர்களே, இக்காட்டில் நாம் காணும் எந்தக் கொடிய குருதிவிலங்குகளும் அத்தகைய விழிகள் கொண்டிருப்பதில்லை” என்றான். பின்னர் எழுந்து நின்று “அங்கு செல்ல வேண்டாம்… அது மாயச்சுனை. அங்கு செல்வது ஒழிக!” என்றான்.

அவர்கள் அவன் வந்த புதர் விலகிய தடத்தினூடாகச் சென்று காட்டுக்குள் புதைந்தனர். பசுமைக்கு அப்பால் வேடனின் குரல் உரக்க ஒலித்தது. “செல்ல வேண்டாம், அரசே! அது எல்லையற்ற வஞ்சம் கொண்ட தெய்வம். அதன் விழிகள் இப்புவியின் குருதியனைத்தையும் குடித்தாலும் விடாய் அடங்காதவை.” அக்குரல் காடே எழுந்து கூறுவதுபோல் ஒலிக்க நகுலன் மெய்ப்பு கொண்டான். சகதேவனிடம் “இது காடுதானா, அன்றி தெய்வமாயையா என்றே ஐயமாக உள்ளது. இக்காட்டுக்குள் நுழைந்த பின்னர் நான் இடைவிடாத நோக்குணர்வை அறிகிறேன்” என்றான். சகதேவன் ஒன்றும் சொல்லவில்லை.

காட்டிற்குள் சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் அக்குரல் மீண்டும் மீண்டும் ஒலிப்பதைப்போல் உணர்ந்தனர். யுதிஷ்டிரன் “அவன் எதை கண்டான்?” என்றார். இளைய யாதவர் “அவளை வஜ்ரயோகினி என்கின்றனர்” என்றார். “ராஜயோகம் புரிபவர்கள் நோக்குணர்வு என அவளை முதலில் அறிவார்கள். அவள் குரலை கேட்பார்கள். விழிகளை பின்னர் காண்பார்கள். அவளை இனிய காதலியென தன் மடியிலமர்த்தி கொஞ்சி மகிழ்வார்கள். உடலிணை என விடாய் வளர வளர புணர்ந்து புணர்ந்து களிகொள்வார்கள். எல்லையற்ற காமநுகர்வென யோகத்தின் முதல்நிலையை வகுக்கின்றன நூல்கள்” என்றார்.

“அவர்களுள் உறையும் காமத்தை வஞ்சமென்றும் விழைவென்றும் சினமென்றும் பெருக்கி அவள் தான் பெற்றுக்கொள்கிறாள். பெருகி கரிய பேருடல் கொள்கிறாள். அவர்களை தான் எடுத்துக்கொள்கிறாள். பின்னர் அவள் மடியில் குழவியென அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவளுடைய முலைகளிலிருந்து அமுதை உண்டு விழிமயங்கி காலமழிந்து அமைகிறார்கள். வஜ்ரயோகினி அணுகுபவர்களை உண்டு தன் முடிவிலா இருளுக்குள் அமிழ்த்திக்கொள்ளும் பேராற்றல் கொண்டவள். இருளை ஒளியென்றும் நஞ்சை அமுதென்றும் இன்மையை பேரிருப்பென்றும் காட்டுபவள். மெய்மையை காவல்காத்து நின்றிருக்கும் பொய்மை அவள். மெய்மைக்கான வாயிலும் வழியும் துணையும் அவளே.”

“ஒவ்வொருவரும் தங்களுக்குள் கொண்டிருக்கும் கனவுகளை அவள் ஆள்கிறாள்” என்று இளைய யாதவர் சொன்னார். “நூறு நூறாயிரம் வாயில்களைத் திறந்து வழிசுழற்றுகிறாள். விழைவனவற்றை அருகே நிறுத்தி கைநீட்டுகையில் அணுக முடியாது விலக்கி விளையாடுகிறாள். பொருளென்றும் வெறுமை என்றும் மாறிமாறிக் காட்டி உளமயக்குகிறாள். அவளை அணுகுபவர்களில் பல்லாயிரம் கோடியினரில் ஒருவரே அவர்கள் அருளை கொள்கிறார்கள். அவர்களையே ராஜயோகி என்கிறோம். மூன்று மாயைகளை அவர் வெல்கிறார். இரண்டாகப் பிளந்த இருப்பு இன்மை என்னும் மாயை. மூன்றாகப் பிளந்த காலம் என்னும் மாயை. அறம்பொருளின்பவீடு என்று நான்காகப் பிளந்த உலகியல் என்னும் மாயை. அவர் ஒருமையின் பீடத்தில் அமர்ந்தவர்.”

“ராஜயோகி மூன்று முழுமுதல் தெய்வங்களாலும் வெல்லற்கரியவர் என்கின்றன தெய்வநூல்கள்” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் “அவன் அச்சுனையில் ராஜயோகம் பயில்கிறான் என்கிறாயா?” என்றார். இளைய யாதவர் “இருக்கலாம்” என்றார். பீமன் “அவன் அதில் நெடுந்தொலைவு சென்றுவிட்டான், எக்கணமும் எய்திவிடுவான்” என்றான். யுதிஷ்டிரன் “என்ன சொல்கிறாய்?” என்றார். “நீரிலிருந்து எழுந்தபோது அவன் முகம் ஒளி கொண்டிருந்தது என்று அவ்வேடன் சொன்னான். அது அவன் தன் எல்லைகளைக் கடந்து நெடுந்தொலைவு சென்றுவிட்டான் என்பதற்கான சான்று” என்றான் பீமன்.

அவர்கள் அச்சுனையை அடைந்தபோது மூச்சிரைத்து தளர்ந்திருந்தார்கள். சதவாஹியின் ஓசை அங்கே நிறைந்திருந்தது. அதன் கிளையோடை வழியாக உடல் நனைந்து சொட்ட அவர்கள் மேலேறி நின்றனர். சாய்பகலின் ஒளியில் அச்சுனை சூழ்ந்திருந்த பசும்புல்வெளிக்கு நடுவே படிகம்போல் ஒளிகொண்டு கிடந்தது. அதற்கு அப்பால் கரிய பெரும்பாறை ஒளியை உள்ளிழுத்துக்கொண்டதுபோல் எழுந்து நின்றது. அங்கே பறவைகளின் ஓசையோ சீவிடுநாதமோ எழவில்லை. முகில்கணங்கள் சுடர்கொண்டிருந்த வானம் பெருங்குடை என கவிந்திருந்தது.

பீமன் அந்தச் சுனையை நோக்கியபடி நின்றான். பெருமூச்சுடன் “இங்கு வந்ததுபோல் உணர்கிறேன்” என்றான். யுதிஷ்டிரன் “ஆம், நானும் இங்கு வந்ததாக உளம் மயங்குகிறேன்” என்றார். “புவியில் இதைப்போல பல இடங்கள் உள்ளன. அனைத்துமே இந்தக் காலப்படலத்தில் விழுந்துள்ள துளைகள். பிற காலங்களுக்குச் செல்வதற்குரிய பாதைகள்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் பிற காலங்களுக்கு சென்றிருக்கக் கூடுமா? அது அவனை ஆற்றல்மிக்கவனாக்குமா?” என்றார் யுதிஷ்டிரன். “எந்தக் காலமும் அதைவிட்டு அகலுந்தோறும் சிறுத்து துளியாகிவிடும்…” என்று இளைய யாதவர் சொன்னார். “ஒவ்வொன்றும் நாம் ஏற்றும் உணர்வாலும் பொருளாலும்தான் உருப்பெருக்கிக்கொண்டிருக்கின்றன…”

அவர்கள் அச்சுனையை அணுக அஞ்சியவர்கள்போல தயங்கி நின்றனர். கதைத்தண்டை இறுகப்பற்றியபடி மெல்ல நடந்து சென்ற பீமன் அந்தச் சுனையருகே சென்று அதன் பாறை விளிம்பில் அமர்ந்து குனிந்து நீரை பார்த்தான். அவன் உடலில் தசைகள் தளர்ந்தன. குழப்பத்துடன் பலமுறை நோக்கியபின் திரும்பி “யாதவரே, இதற்குள் எதுவும் தெரியவில்லை. வெண்மணல் தெளிந்த அடித்தட்டே தெரிகிறது” என்றான். “அவன் நீர்நிலைப்பு பயின்றவன்… அடித்தட்டில் மணலுக்குள் புதைந்திருக்கலாம்” என்றார் யுதிஷ்டிரன். “இல்லை, இங்கே எவருமில்லை” என்று பீமன் சொன்னான்.

நகுலனும் சகதேவனும் சென்று குனிந்து பார்த்தனர். சகதேவன் “ஆம், தெளிந்த சுனை. இதற்குள் எவருமில்லை” என்றான். யுதிஷ்டிரன் அருகே வந்து தானும் நோக்கி “எண்ணுவதை விட பலமடங்கு ஆழம் கொண்டது. ஆனால் இச்சுனைநீரின் தெளிவு அடிமணலை அருகென காட்டுகிறது. உள்ளிருக்கும் ஒவ்வொரு மணற்பருவையும் நோக்க இயல்கிறது” என்றார். திரும்பி இளைய யாதவரிடம் “இல்லை யாதவரே, இதற்குள் அவன் இல்லை” என்றார்.

அர்ஜுனன் கைகட்டி ஆர்வமில்லாதவனாக எங்கோ நோக்கி அப்பால் நிற்க அவன் அருகே தானும் நின்றபடி இளைய யாதவர் “நோக்குக, அவன் இதற்குள்தான் இருக்கிறான்!” என்றார். நகுலன் “இவ்விடம் தானா? நாம் பிறிதொரு இடத்திற்கு வந்துவிட்டிருக்கக் கூடுமா?” என்றான். சகதேவன் அப்பால் தெரிந்த ஸ்தூனகர்ணனின் சிலையை நோக்கி “இது ஸ்தூனகர்ணனின் சிலை. எனில் இந்த இடம்தான்” என்றான்.

அவர்கள் அச்சிலையை நோக்கினர். நகுலன் “இங்குதான் அவர் தன்னை பெண்கூறற்ற முழுதுடல் கொண்டவராக ஆக்கிக்கொண்டார்” என்றான். யுதிஷ்டிரன் “அது சூதர்களின் கதை” என்றார். நகுலன் “அப்பால் ஒரு குகை இருக்கிறது. ஒருவேளை அவர் அதற்குள் இருக்கலாம்” என்றான். இளைய யாதவர் “இல்லை, இந்நீருக்குள்தான் இருக்கிறான்” என்றார். “அவன் முகம் பற்றி வேடன் சொன்னதிலிருந்து தெரிவது அவன் குகையிலிருந்து எழுந்துவிட்டான் என்றே.” பீமன் “இந்த நீருக்குள்ளா? எவ்வடிவில்?” என தனக்குள் முனகியபடி சுனையின் விளிம்பினூடாக நடந்தபடி உள்ளே நோக்கினான்.

“பாண்டவரே, இது உங்களுடைய போர்” என்றார் இளைய யாதவர். “பிறர் விலகி பின்னடையுங்கள்… இளைய பாண்டவர் நிகழ்த்தட்டும் இதை.” யுதிஷ்டிரன் “இதற்குள் அவன் இல்லை, யாதவனே. நாம் பிறிதொரு இடத்தில் அவனை தேடவேண்டியிருக்கிறது” என்றார். “தாங்கள் பின்னடைக! இது தங்கள் போர் அல்ல. அவன் விழிப்பிலும் துயிலிலும் குடியிருந்த இடம் பீமசேனனின் உள்ளம்” என்று இளைய யாதவர் சொன்னார். “இனி அதைப்பற்றி பேச்சு என்ன? அஞ்சி அஞ்சி அனைத்தையும் அழித்துக்கொண்டுவிட்டோம்” என்று யுதிஷ்டிரன் சலிப்புடன் சொன்னார்.

குரலில் சீற்றம் எழ, முகம் புன்னகை கொண்டதுபோல் திகழ “எனில் திரும்புவோம்… எழுக!” என்றார் இளைய யாதவர். யுதிஷ்டிரன் வெறுமனே நின்றார். “உங்களால் இயலாது. அறம் பேசும் எவரும் இவ்வுலகை ஒழுங்கமைக்க எண்ணுபவர்களே. அது இவ்வுலகுமேல் அவர்கள் கொண்டுள்ள பெரும்பற்றின் சான்று. யுதிஷ்டிரரே, இன்று பாரதவர்ஷத்தில் முதன்மை உலகியலாளர் நீங்கள்தான்…” என்றார் இளைய யாதவர். சகதேவனும் நகுலனும் திகைப்புடன் அவரை நோக்க உளம் புண்பட்டு தலைகுனிந்து யுதிஷ்டிரன் பின்னடைந்தார். நகுலனும் சகதேவனும் வந்து அவருடன் நின்றுகொண்டனர்.

இளைய யாதவர் பீமனிடம் “பாண்டவரே, குனிந்து அந்நீர்ப்பரப்பை நோக்குக! அதில் இளகும் அலைகளை கடந்துசென்று உங்கள் பாவையை ஒருங்கிணைத்து அசைவிலா வடிவம் என்றாக்குக!” என்றார். “அப்பாவையில் எழும் உங்கள் விழி கூர்கொள்ள வேண்டும். உங்கள் உதடுகள் தெளிவுற வேண்டும். விழி உணர்த்துவதை, உதடுகள் கூறுவதை கேளுங்கள். உங்கள் சொற்களை அந்த நீர்ப்பாவை கேட்கட்டும். அதனிடம் கூறுக, எழுக எழுக என்று! அப்பாவையில் இருந்து அவன் நீருக்குள்ளிருந்து எழுவான்.”

பீமன் இளைய யாதவரை நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் “ஆம்” என்றான். கதைத்தண்டை கீழே வைத்துவிட்டு சுனையை நோக்கி சென்றான். அவனை நோக்கியபடி அவர்கள் அப்பால் நின்றனர்.

முந்தைய கட்டுரைசிறுகதை அரங்கு- ஈரோடு அறிவிப்பு
அடுத்த கட்டுரைதொல்விந்தைகள்- கடிதங்கள்