துரியோதனன் ஓர் அருகமைவை உணர்ந்தான். விழிகளை மூடி, மூக்கு உணர்விழக்க, செவிகள் ஒலிதுறக்க, உடலை உடல் மறக்க அமைந்திருக்கையிலும் தன்னுள் இருக்கும் தன்னை அவன் உணர்ந்துகொண்டிருந்தான். அருகமைவு அதைப்போல் ஓர் இருப்பாக அவனுள் தான் முதலில் அறியப்பட்டது. பின்னர் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் அவனை அவன் நோக்கிக்கொண்டிருந்தான். மறுகணம் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் அவனை நோக்கி அருகே நின்றிருப்பவனை அவன் நோக்கினான். பின்னர் இருவரையும் அப்பால் நின்று நோக்கிக்கொண்டிருந்தான்.
விழிகளைத் திறந்தபோது அவன்முன் ஸ்தூனகர்ணன் நின்றுகொண்டிருப்பதை கண்டான். அவனை விழியிமைக்காமல் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். உள்ளத்தில் எந்த உணர்வுமில்லை. ஒரு சொல்லும் திரளவில்லை. பின்னர் உணர்வடைந்தபோது அவனை எப்போதும் அங்கே அறிந்துகொண்டிருப்பதாகவே தன் உள்ளம் உணர்வதை அவன் அறிந்தான். அவ்வெண்ணங்களால் அவன் இருப்பு தொகுக்கப்பட்டது. அவற்றை எண்ணுபவனாக அது உருக்கொண்டது. அவன் புன்னகைத்து “வருக, தேவா!” என்றான். ஸ்தூனகர்ணன் புன்னகைத்து “உன்னை மீண்டும் காண்கிறேன்” என்றான். “ஆம்” என்றான் துரியோதனன்.
“நீ இப்போது விழைவது என்ன?” என்று ஸ்தூனகர்ணன் கேட்டான். “அந்த கதையை” என்று துரியோதனன் சொன்னான். “நான் அதை முற்றாக மறந்துவிட்டிருந்தேன். இங்கு வந்தபின்னரும்கூட அதை நினைவுறவில்லை. அது எனக்குள் உருத் தெரிந்தது சற்று முன்னர்தான். நீருக்கடியில் அது கிடப்பதை கண்டேன். நீர்ப்பாவை என அது அலையடித்தது. நான் அதை நோக்கி கைநீட்டியபோது என் கைகளும் அலைகொண்டன. அலைவு இக்கணம் இக்கணம் என நீடித்தது. தொடத்தொட முயன்று விலகி தொட்ட கணம் நான் உன்னை உணர்ந்தேன்.” ஸ்தூனகர்ணன் “நீ துறந்து சென்றது அது…” என்றான். “ஆம், அன்று அதன் மதிப்பை நான் அறிந்திருக்கவில்லை” என்றான் துரியோதனன்.
“ரௌப்யை உன் ஆணவத்திற்கேற்ப உருப்பெருகுபவள்” என்று ஸ்தூனகர்ணன் சொன்னான். “உனக்கு உறுதுணையாக இருப்பாள். நீ விழைவதை வென்று உனக்கு அளிப்பாள். ஆனால் நீ உருமாறியாகவேண்டும்.” அவன் “ஆம், அறிவேன்” என்றான். “நீ உருமாறினால் இதுவரை அடைந்தவை அனைத்தையும் இழப்பாய்” என்றான் ஸ்தூனகர்ணன். “இப்போது என்னிடம் எதுவுமில்லை” என்றான் துரியோதனன். “இழந்தவர்கள் அதற்கிணையான நினைவுகளை பெறுகிறார்கள். நினைவுகள் நாளும் வளர்பவை, செறிபவை, ஒளிகொள்பவை” என்று ஸ்தூனகர்ணன் சொன்னான்.
“நினைவுகள் அணுக்கத்தில் கசப்பும் துவர்ப்பும் கொண்டவை. அகலுந்தோறும் இனிப்பவை… இனிய நிகழ்வுகள் நினைவில் இனிப்பவை. துயர நினைவுகள் மேலும் இனிப்பவை. நீ இழப்பது ஒரு பெருஞ்செல்வத்தை.” துரியோதனன் “நான் அவற்றை துறக்கிறேன்” என்றான். “உன் இளையோர் முகங்களை மறப்பாய். உன் மைந்தர்கள் இல்லையென்றே ஆவார்கள். உன் தோழர்களும் பிதாமகர்களும் தந்தையும் தாயும் முற்றிலும் மறைந்துவிடுவார்கள். எண்ணுக, இக்காலப்பெருவெளியில் நீ தன்னந்தனியனாவாய்! முன்னும்பின்னும் வெறுமை மட்டுமே எஞ்சுபவனாக ஆவாய்.” துரியோதனன் “ஆகுக!” என்றான்.
ஸ்தூனகர்ணன் “அத்தனை கொடியதா உன் வஞ்சம்?” என்றான். துரியோதனன் “இங்கு அமர்ந்து ஊழ்கம் செய்கையில் உணர்ந்தேன், என்னிடம் ஒரு துளியும் வஞ்சம் இல்லை என. எவர்மேலும் சினமும் கசப்பும் எனக்கில்லை. அவை நான் அக்களத்தில் நின்று பொருதும்பொருட்டு உருவாக்கிக்கொண்ட உணர்ச்சிகள் மட்டுமே. அவை நான் ஏந்திய படைக்கலங்களும் கவசங்களும் அன்றி வேறல்ல” என்றான் துரியோதனன். “என்னிடம் வஞ்சம் இருந்திருந்தால் நான் பீமன் படைக்கலமின்றி என் காலடியில் கிடக்கையிலேயே தலையுடைத்துக் கொன்றிருப்பேன்.” ஸ்தூனகர்ணன் “பிறகென்ன?” என்றான். “நான் விசை செலுத்தப்பட்டுவிட்ட அம்பு. அதை நான் மாற்ற இயலாது. குருக்ஷேத்ரம் என் வேள்விநிலம். போர் என் அனற்கடன். கொண்டவையும் உரியவையுமாகிய அனைத்தும் என் அவிக்கொடை. அச்செயலே நான். அன்றேல் நான் இல்லை” என்று துரியோதனன் சொன்னான்.
“என் பிறவிக்கடன் இது என்பதனால் நான் மண்விழைகிறேன். என் மாறா இயல்பு இது என்பதனால் நான் அதன்பொருட்டு போரிடுகிறேன். எனையாளும் அறம் இது என்பதனால் களம்நின்று கொன்றேன். இறுதி உறவையும் பொருளையும் அங்கே படைத்தேன். நான் என் வடிவிலெழுந்த பேராற்றல் ஒன்றின் திசையெழுச்சி மட்டுமே என்பதனால் என் இறுதியெச்சம் வரை சென்றுகொண்டே இருக்கவேண்டியவன். பிறிதொரு வழியில்லை” என்றான் துரியோதனன். “என்னிடம் இன்று எஞ்சுவது ஆழத்து விசை மட்டுமே. அதை தொகுத்துக் குவித்து இயல்வதாகும் இறுதிப் பாதையினூடாக செல்ல விழைகிறேன். அதன்பொருட்டே இங்கு ஊழ்கமியற்றுகிறேன்.”
ஸ்தூனகர்ணன் அவனை அளிநிறைந்த விழிகளால் நோக்கினான். “யோகத்தின் முதல்படி நீ சென்றடைந்தது, அதை எஞ்சியறிதல் என்பார்கள். கேவலஞானம் அடைந்தவன் தன்னை ஒரு கருவி என்றும் துளி என்றும் உணர்கிறான். யோகத்தின் முதற்படியே எய்தக் கடினமானது” என்றான். “நீ உன்னை அறிந்தாய். இனி எப்போதும் உனக்கு துயரில்லை.” துரியோதனன் அவனை வணங்கினான். புன்னகையுடன் அவன் அருகே வந்து தோளை தொட்டபோது துரியோதனன் அத்தொடுகையை முன்னரே உணர்ந்திருப்பதாக அறிந்தான். அருகணைந்த அவ்விழிகளின் கனிவை பலமுறை கண்டிருக்கிறான்.
“தார்த்தராஷ்டிரனே, நீ செல்ல இயலும் வழிகள் இரண்டு. இக்குகைக்குள் செல்க! காலத்தைக் கடந்து பின்சென்று உருக்கொள்வாய். அங்குள்ளன மறைந்த யுகங்கள். முன்சென்று அந்தச் சுனைக்குள் செல்க! காலத்தை முன்னெழுந்து ஊடுருவுவாய். அங்குள்ளன எழும் யுகங்கள்” என்று ஸ்தூனகர்ணன் சொன்னான். “ஒன்று இழந்து ஒடுங்குதலின் வழி. பிறிதொன்று எய்தி விரிந்து கரைதலின் பாதை. ஒறுத்தலும் ஒடுங்குதலும் யோகியின் வழிகள். எய்தி எழுதல் வீரனின் வழி. நீ வீரனும் யோகியுமாய் இங்கு நின்றிருக்கிறாய்.” துரியோதனன் “எனக்கு மாற்று எண்ணமேதுமில்லை” என்றான். “அம்முடிவு அறுதியானது எனில் என்னிடமும் இனி ஒரு சொல்லில்லை” என்றான் ஸ்தூனகர்ணன்.
மீண்டும் ஸ்தூனகர்ணன் புன்னகைத்தபோது அது திருதராஷ்டிரரின் புன்னகை என்பதை துரியோதனன் உணர்ந்தான். அதை உணர்ந்து ஸ்தூனகர்ணன் “என்னை அவரவர் உள்ளத்தில் வாழும் மிக உகந்த முகமாகவே மானுடர் அறிகிறார்கள்” என்றான். “ரௌப்யை உன்னை அறிவாள். உன்பொருட்டு இங்கே அவள் காத்திருக்கிறாள்” என்றான். “உன் ஊழ்கம் பொலிக!” என வாழ்த்தினான். அவன் விலகிச்செல்ல துரியோதனன் உடன் சென்றான். செல்லச்செல்ல அவன் மறைந்து காலடியோசை மட்டுமாக எஞ்சினான். மேலும் சென்றபோது அக்காலடியோசை தனக்குப் பின்னால் என ஆனதை துரியோதனன் உணர்ந்தான். குகைக்குள் நீர்சொட்டும் ஒலியுடன் அது கலந்தது. குகை ஒரு முழக்கமாக மாறியது. வண்டுமுரலல் என மெலிந்தது. ஒற்றை விழி என மாறி அவனுக்குப் பின்னால் சென்றது.
அவன் அச்சுனையருகே சென்று நின்றான். குனிந்து சுனையை நோக்கியபோது நீருக்கு அடியில் கிடந்த கதையை கண்டான். அவன் முகம் நீரில் அலைபாய்ந்தது. அது இணைவதற்காக அவன் காத்திருந்தான். அது குகையிலிருந்து விழுந்துகொண்டிருந்த நீர்த்துளிகளால் தீராத அலைகள் கொண்டிருந்தது. அவன் தன் உள்ளத்தில் அவ்வலைகளை ஒன்றுடனொன்று விளிம்புகோத்து இணைத்தான். ஒன்றெனச் சுருட்டினான். ஒருதுளியாக்கினான். ஆடிபோல் உறைந்து அசைவிழந்த அப்பரப்பில் தெரிந்த முகத்தை நோக்கிக்கொண்டிருந்தான். அவ்வுருவை அடைந்து நீருள் இறங்கினான். கூந்தல் பறந்து உலைய கைகால்கள் நெளிவுற நீந்தி மூழ்கி ஆழத்திற்கு இறங்கிச் சென்றான்.
வெளியே நின்று நோக்கியபோது வெள்ளி நிற கதை எனத் தெரிந்தது. நீருள் அது பொன்னிறம் கொண்டது. அருகணையும்தோறும் பெண்ணுடல் என ஆகியது. அவன் அதை தொட்டதும் உயிர்கொண்ட பெண்ணாக எழுந்தது. விழிகள் மலர்ந்து அவனை நோக்கியது. அவன் அவளிடம் “உன்னை நான் என்றும் அறிந்திருந்தேன்” என்றான். “ஆம், நான் உங்கள் கதைகள் அனைத்திலும் ஒருகணம் தோன்றி மறைந்திருக்கிறேன்” என்று அவள் சொன்னாள். “உங்கள் கதையில் நான் எழுந்ததுமே அந்த கதை முற்றிலும் எடையில்லாமல் ஆனதை உணர்ந்திருப்பீர்கள்.” துரியோதனன் வியப்புடன் “ஆம். பேரெடை கொண்ட கதைகள் கூட சுழல்விசையில் அரிதாக எடையின்மை கொள்வதுண்டு” என்றான். “அப்போது நீங்கள் படைக்கலம். நான் உங்களை ஏந்தியிருப்பேன்” என்றாள் ரௌப்யை.
“இந்தச் சுனைநீர் எட்டு அடுக்குகள் கொண்ட வாயில். முதல் வாயில் வானால் ஆனது” என்று ரௌப்யை சொன்னாள். “அடுத்த வாயில் காற்றுக்குமிழிப்பரப்பால் ஆனது. தொடர்வது நீராலானது. அடுத்த வாயில் சேறால். பின்னர் எழுவது எரித்திரை. அதைக் கடந்தால் பழுத்த இரும்பும் உருகும் வெள்ளியும் அனலென்றே ஆன பொன்னும். அதற்கப்பால் உள்ளது நீங்கள் செல்லவேண்டிய வெளி.” எண்ணமேதும் இன்றி துரியோதனன் “ஆகுக!” என்றான். “இவ்வுருவில் நீங்கள் அங்கே செல்லவியலாது. செல்லுந்தோறும் உங்கள் உரு மாறவேண்டும். தன்னுள் இல்லாத உருவங்களை எவரும் சூடிக்கொள்ள இயலாது. விதை வடிவில், நுண்கரு வடிவில், எண்ணத்துளி வடிவில், இயல்கை வடிவில், இயல்கைக்கு அப்பாலிருக்கும் இறையாணை வடிவில் உங்களுள் அவை இருந்தாகவேண்டும்.”
“நான் என் பாதையை இனிமேல் எண்ணி கைக்கொள்ளப்போவதில்லை. என்னை ஏந்தும் விசைகள் என்னை இட்டுச்செல்க!” என்று துரியோதனன் சொன்னான். “நன்று” என புன்னகைத்து அவள் அவன் கைகளை பற்றிக்கொண்டாள். அவள் நீருள் அமிழ்ந்திறங்க அவன் உடன் ஆழ்ந்து சென்றான். அவன் தலைக்குமேல் முகில்கள் பரவிய நீலவான்வெளி தெரிந்தது. புலரி என அதில் ஒளி நிறைந்திருந்தது. அதை நோக்கி பறந்தெழுந்து சென்று அதில் அறைவதுபோல் முட்டிக்கொண்டான். வானம் எடைமிக்க சுவர் என அப்போது அறிந்தான். விழுந்த விசையில் அவன் தலை முட்டி அது அதிர்ந்தது. கிழிபடும் ஒசையுடன் அவன் அதைக் கடந்து தலைகீழாக அப்பால் எழுந்தான். சிறு குழவி என உணர்ந்தான். கைகால்களை ஊன்றி மூச்சுத்திணறி கூவியபடி புரண்டு உடல் வளர்ந்து எழுந்தமர்ந்தான். தள்ளாடியபடி எழுந்து நின்றான்.
அப்பால் நின்றிருந்தவளை அவன் முன்னரே அறிந்திருந்தான். அவள் புன்னகைத்து “வருக, அரசே!” என்றாள். அசோகசுந்தரி அவனை அழைத்துச் சென்றாள். அவன் “நான் உன்னை மீண்டும் காண்பேன் என எண்ணவில்லை” என்றான். “அரசே, காலத்தில் மீண்டும் மீண்டும் நாம் சந்தித்துக்கொண்டேதான் இருப்போம்” என்றாள். “அவ்வண்ணமே மீண்டும் நிகழக்கூடுமா என்ன?” என்று அவன் கேட்டான். அவள் “அதை நம்மால் உணர முடியாது” என்றாள். அந்த ஒளிநிறைந்த பாதையில் அவர்கள் நடந்தனர். “எத்தனை வீண்நடிப்புகள், எவ்வளவு பொருளிலா உணர்ச்சிகள்!” என்று அவன் சொன்னான். அவள் “ஆம்” என்றாள். “அறியாது அவற்றை நடித்தோம். அறிந்தபின் அவற்றில் மூழ்க இயலுமா என்ன?” என்றான்.
அவள் “இவ்வழி” என்று சுட்டிக்காட்டினாள். நீர்க்குமிழிப்பரப்பென மின்னியது அக்கதவு. அதில் அவர்களின் உருவங்கள் தெரிந்தன. “செல்க!” என்று அவள் சொன்னாள். “நீ…” என்று அவன் கேட்டான். அவள் துயருடன் புன்னகை செய்தாள். “நீ வரவில்லையா?” என அவன் மீண்டும் கேட்டான். அவள் அதே புன்னகையுடன் நின்றாள். “நாம் மீண்டும் சந்திப்போமா? இது ஒரு மாயத்தோற்றம் மட்டும்தானா?” அவள் “செல்க!” என்றாள். அவன் அந்தக் குமிழிப் பரப்பை அணுகினான். அதில் அவன் உருவம் தெரிந்தது. அணுகும்தோறும் அது பெருகி வளைந்தது. அவன் அதை நோக்கியபடி சற்றுநேரம் நின்றபின் அதிலிருந்து பின்னடி எடுத்துவைத்து நடந்தான். அகலுந்தோறும் சிறுத்து துளி என்றானான். கரிய புள்ளியென்று மாறினான்.
அப்புள்ளியிலிருந்து அவன் விரிந்து விரிந்து எழுந்து உருக்கொண்டான். அப்பால் நின்றிருந்தவளை நோக்கி சென்றான். தேவயானி அவனை அணுகி “வருக!” என்றாள். அவள் திரும்பியதும் பின்புறம் சர்மிஷ்டையாக தெரிந்தாள். அவன் “இன்றும் அதே மாயம்” என்றான். அவள் திரும்பி “என்ன?” என்றாள். “இது ஒருபோதும் முடிவுறுவதில்லை” என்றான். அவள் “என்ன சொல்கிறீர்கள்?” என்றாள். “இதை புரிந்துகொள்ள இயலாது. அதற்கு முயல்வதைப்போல் பொருளின்மை வேறில்லை” என அவன் நடந்தான். அவளை நோக்கலாகாது என்று எண்ணியும் விழிகள் அவளிலேயே இருந்தன. இருபுறமும் முகங்களின் அலைகளை அவன் கண்டான். அறிந்த முகங்கள் சற்றே திரும்பி அறியாத பிறிதொரு தோற்றம் காட்டின.
“அதோ” என எரியாலான திரையை அவள் சுட்டிக் காட்டினாள். அவன் அதை நோக்கியபடி நின்றான். “எரிந்து அப்பால் எழவேண்டும்… அதன்பின் நீங்கள் இங்கு மீள இயலாது.” அவளை நோக்கியபடி அவன் நின்றான். அவள் “நீங்கள் பின்னடி வைத்து மீள்வதே உகந்தது” என்றாள். “அப்பாலிருப்பது என்ன என்று நீங்கள் இன்னமும் அறிந்திருக்கவில்லை. எழுவன இன்னமும் உருவாகவே இல்லை.” அவன் தயங்கி நின்றான். அவனை கூர்ந்து நோக்கியபடி “மீளமுடியாத பாதைகள்” என்று அவள் சொன்னாள். அவன் அவள் உதடுகள் இரு சிவந்த சிறகுகள் என குவிந்து நீள்வதை நோக்கிக்கொண்டு நின்றான். பின்னர் நோக்கை விலக்கி அவளை உள்ளத்திலிருந்து ஒதுக்கி அந்த அனல்வாயில் நோக்கி சென்றான்.
வேடனாகிய ஜல்பன் தன் வில்லையும் அம்பையும் அருகிலிருந்த மரத்தில் கட்டிவிட்டு அச்சுனையை நோக்கியபடி நின்றான். அத்தகைய சுனையை அவன் அதற்கு முன் பார்த்திருக்கவில்லை. அது மலைப்பாறையில் எவரோ உளியால் வெட்டியதுபோன்ற கூரிய விளிம்பு கொண்டிருந்தது. அதற்குள் நீல நீர் மெல்ல சுழித்துக்கொண்டிருந்தது. பேருருவ மீன் ஒன்றின் விழி என அது தோன்றியது. அதற்கு அப்பால் ஒரு நீர்க்களி படிந்த சிறிய சிலை தெரிந்தது. சிலைக்கும் அப்பால் பாறையின் பிளவு இருண்ட விழிபோன்று அவனை நோக்கிக்கொண்டிருந்தது. அது ஒரு மலைக்குகைபோலும் என எண்ணிக்கொண்டான். அதற்குள் செல்லவேண்டும் என்னும் விழைவை அவன் கடந்தான். அதன் விளிம்பில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. உள்ளே தேன்கூடுகள் இருக்க வாய்ப்பில்லை.
ஜல்பன் அக்காட்டிற்கு புதியவன். அவனுடைய குலம் அப்பாலிருந்த பிருஹத்காரம் என்னும் காட்டுக்குள் இருந்தது. அவன் அக்குடியின் கை திகைந்த வில்லவனாகவும் நுண்விழி கொண்ட தேன்தேர்வோனாகவும் அறியப்பட்டான். இளமையிலேயே தன் ஆற்றலை அவன் அறிந்துகொண்டான். பிறரைவிட ஒரு படி மேலாக திகழவேண்டும் என்னும் விசை அவனுள் என்றும் இருந்தது. பிறரை கடந்துசெல்லுந்தோறும் தான் தனிமைகொள்வதை, அத்தனிமையே மேலும் ஆற்றலை அளிப்பதை, ஆற்றல் மதிப்பாக ஆவதை உணர்ந்தான். அந்த மதிப்பை உலகியலில் எதுவாகவும் ஆக்கிக்கொள்ள முடியும் எனக் கற்றான். விழைந்த பெண்களை அடைந்தான். உயரிய பொருட்களை கவர்ந்துகொண்டான்.
வெற்றிகளினூடாகச் சென்று அவன் தன் அறுதி எல்லையை அடைந்துவிட்டிருந்தான். ஆனால் அதை அவன் அறிந்திருக்கவில்லை. இறுதிப் பிழையை ஆற்றிய கணமே அவன் உள்ளுணர்வால் அதை அறிந்தான். அதன்பின்னர் அதை இயற்றுவதற்கு முன்னரே தன் ஆழம் அதை அறிந்திருந்தது என்றும் பின்விளி எழுப்பி தன்னை அது தடுத்தது என்றும் தெளிந்தான். ஆனால் அந்தப் பின்விளியே அச்செயலை மேலும் ஈர்ப்பு கொண்டதாக ஆக்கியது. பிழைகளில் இன்பத்தை வைத்த தெய்வம் அவனை அப்போது ஆட்கொண்டது. அச்செயலில் அவன் அந்த இன்பத்தை மட்டுமே பெற்றுக்கொண்டான். தீமையின் இன்பத்திற்காக செய்யப்படும் செயல் மிகத் தூயது என்றும் தெய்வங்களுக்கு உரியது என்றும் அதைச் செய்தவன் அதன்பின் மானுடன் என வாழ இயலாது என்றும் அவன் உணர்ந்தான்.
அன்று அவன் தேன் எடுக்கும்பொருட்டு மலைப்பாறையில் ஏறியபோது அப்பால் காமம் கொண்டு புணர முற்பட்ட இரு வேங்கைகளை கண்டான். அவற்றின் உடலில் எழுந்த வெறியை திகைப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். ஆண்வேங்கை நிலத்தில் அறைந்து உறுமியது. தன் உடலுக்குள் எழுந்த விசையால் சகடம்போல் தன்னைத்தானே சுற்றிக்கொண்டது. பெண்வேங்கையை எதிரி என எண்ணியதுபோல் பாய்ந்து அறைந்தது. கவ்வி தூக்கி வீசி அதன் கழுத்தைக் கவ்வி உலுக்கியது. பெண்வேங்கை அவ்வெறியை அறிந்திராததுபோல் பிறிதொரு மயக்கிலிருந்தது. முலையருந்தும் மைந்தனுடன் என ஆணுடன் விளையாடியது. அவற்றின் வால்கள் இரு நாகங்கள் என காற்றில் எழுந்தும் நெளிந்தும் களியாட்டமிட்டன.
ஒரு கணத்தில் எழுந்த எண்ணத்தை தானே உணர்வதற்கு முன் ஜல்பன் தன் வில்லில் அம்புதொடுத்து ஆண்வேங்கையின் காமநீட்சியின்மேல் எய்தான். அதன் வாயகன்ற கூர் அத்தசையை வெட்டி அப்பாலிட வேங்கை திகைத்து அசைவிழந்து பின்னால் நகர்ந்து குருதி வழிய அமர்ந்துகொண்டது. அதன் உடலில் தோல் அதிர்ந்தது. மீசை விடைக்க வாய் திறந்து மெல்லிய முனகலை எழுப்பியது. பெண்வேங்கை புரண்டு எழுந்து ஆணின் அருகே செல்ல அது நிலத்தை ஓங்கி அறைந்து பேரோசை எழுப்பியது. பெண்வேங்கை கால் தளர்ந்து நின்றது. இரண்டு விலங்குகளுக்கும் என்ன நிகழ்ந்தது என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அவை நடுங்கிக்கொண்டிருந்தன. ஆண் ஒருக்களித்து மண்ணில் விழ பெண் அதை சுற்றிச்சுற்றி வந்து முனகியது.
ஜல்பன் பாறைமேல் அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அவன் உடலில் எழுந்த மயிர்ப்பில் கண்கள் கசிந்தன. பற்கள் கூசி கிட்டித்துக்கொள்ள நரம்புகள் இழுபட்டு கூசின. அவன் உடல்முனை காமத்திற்கென எழுச்சி கொண்டு நின்றது. பின்னர் மிக மெல்ல அவன் கீழிறங்கி வியர்வையும் செவிகளில் மூளலோசையும் கண்களில் அனலாட்டமுமாக மீண்டு வந்தான். மூச்சுவாங்கியபடி கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தான். உடலெங்கும் களைப்பு எழுந்து அடியிலியில் விழுந்துகொண்டே இருப்பதுபோல் உணர்ந்தான். மீண்டும் கண்களைத் திறந்தபோது அவன் ஏனென்றில்லாமல் பேரச்சத்தை அடைந்தான். வேங்கைகளை திரும்பி நோக்காமல் பாறையின் மேலிருந்து சரிந்திறங்கி காட்டுக்குள் ஓடி அங்கிருந்து அகன்றான். தன்னை யாரோ வெறியுடன் தொடர்ந்து வருவதாக உணர்ந்து மேலும் மேலும் விரைந்து ஓடினான்.
மூச்சிரைக்க தன் குடிக்கு வந்து குடிலுக்குள் இருளுக்குள் உடல்சுருட்டிக்கொண்டான். அவன் மனைவியர் வந்து நோக்கினர். அவர்கள் உசாவியபோது சீற்றதுடன் அருகே கிடந்த பொருட்களை எடுத்து அவர்களை அடித்தான். வசைச்சொற்களை கூவினான். அன்று முழுக்க உணவு உண்ணவில்லை. அட்டைபோல தன்னை மேலும் மேலும் சுருட்டிக்கொள்ள முயன்றான். சுவர்முனையில் ஒண்டிக்கொண்டான். அவன் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தது. எதை அஞ்சுகிறேன் என அவன் தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அவனுள்ளத்தில் விடை தெளியவில்லை. ஆனால் அவன் அஞ்சுவது மிக அண்மையில் நின்றிருந்தது. அவன் சற்றே அசைந்தால்கூட அதன்மேல் முட்டிக்கொள்வான் என்று தோன்றியது
இரண்டு நாட்கள் அவன் அவ்வண்ணம் அங்கே கிடந்தான். மூன்றாம் நாள் அந்நிலையை அவனே எண்ணி சீற்றம் கொண்டான். “ஆம், அவ்வண்ணம்தான் நான்!” என்று அறைகூவிக்கொண்டான். “அதுதான் நான். என் ஆற்றல் அதுதான்… அறிக தெய்வங்கள்!” என்று தனக்குத்தானே கூவிக்கொண்டான். மனைவியை அழைத்து உணவு அளிக்கச் சொன்னான். அவள் கொண்டு இட்ட உணவை வெறிகொண்டு அள்ளி அள்ளி உண்டான். “மேலும் மேலும்” என்று நிலத்தை அறைந்து கூவினான். குவை குவையாக உண்பவன் அவன் என்று அவர்கள் அறிந்திருந்தாலும் அவ்வண்ணம் அவன் உண்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவனுள் மலைத்தெய்வம் கூடி இல்புகுந்ததுபோலும் என அஞ்சினார்கள்.
உண்டு எழுந்து அவன் தன் மனைவியரில் ஒருத்தியை கைபற்றி இழுத்து புணர முற்பட்டபோது அறிந்தான், தன்னுள் நிகழ்ந்தது என்ன என்று. அவன் உடல் கல்லென்று அமைந்திருந்தது. தன் எட்டு மனைவியரையும் அவன் புணர முயன்றான். இனி தன்னால் அதற்கு இயலாது என்று ஐயமற உணர்ந்தான். எட்டாவது மனைவி மிக இளையவள். அவனால் தந்தையின் இல்லத்திலிருந்து கவர்ந்து வரப்பட்டவள். அவள் அவனை தெளிந்த இளம் விழிகளால் நோக்கி புன்னகை செய்தாள். அவன் அவளை கொல்லும் வெறியுடன் அம்பை கையிலெடுத்தான். அவள் விழிகள் அச்சமற்று அவனை நோக்கின. அவன் அம்பு தழைந்தது. பின்னர் அதை வீசிவிட்டு அவன் இருண்ட முற்றத்தில் இறங்கி காட்டுக்குள் புகுந்தான்.
அதன்பின் அவன் மானுடரை சந்திப்பதை ஒழிந்தான். காட்டிலிருந்து காட்டுக்குச் சென்று காலகத்தை அடைந்தான். அங்கே வேட்டையாடி உண்டு தன்னந்தனிமையில் வாழ்ந்தான். தனக்குத்தானே பேசிப்பேசி சொல்லடங்கி மொழியிழந்தான். பிறரில்லாத வெளியில் தானும் இல்லாதவன் ஆனான். தன்னில் குவியாமையால் நினைவுகளையும் இழந்தான். அக்கணத்தில் மட்டுமே திகழ்பவனாக அவன் அங்கே வாழ்ந்தான். காலகத்திற்குள் பலவாறு அலைந்திருந்தாலும் அவன் அச்சுனை அருகே அதற்கு முன் வந்திருக்கவில்லை. அக்காட்டுக்குள் அதற்கு முன்னர் மானுடர் வந்திருக்கக்கூடும் என்ற எண்ணமே அவனுக்கு அலைக்கழிப்பை உருவாக்கியது.
அவன் நீருக்கு அடியில் ஓர் அசைவை கண்டான். குனிந்து நீருக்குள் விழி செலுத்தி நோக்கினான். அது நீர்நிழலாட்டம் என்று தோன்றியது. பின்னர் அவன் ஒரு மானுட உடல் என அதை கண்டான். மேலும் விழிகூர்ந்தபோது இரண்டு உடல்களை கண்டான். ஆணுடலும் பெண்ணுடலும் புணர்ச்சியில் அசைந்துகொண்டிருந்தன. அந்தத் தாளம் பிறகெப்போதும் கூடாதது. நடனங்களில் போர்களில் நடிக்கப்படுவது. அவன் தன் உடல் விசைகொண்டு துள்ளிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். பின்னகர்ந்து மரக்கிளையிலிருந்து வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டான். அம்பை நாணில் பூட்டியபோது அவன் முன்பு நிகழ்ந்தவை அனைத்தையும் நினைவுகூர்ந்தான். அந்த பின்விளிக்காக அகச்செவி கூர்ந்தான். கணம் கணம் என காத்திருந்தான்.
அது எழுந்ததும் அவன் அகம் களிப்புகொண்டு பொங்கி எழுந்தது. “ஆம்! ஆம்!” என அறைகூவியது. தன் உடல் கூசி நடுக்கு கொள்ள, பற்கள் உரசி தலைக்குள் ஓசையெழ, அவன் அம்பை தொடுத்தான். அது அங்கே புணர்ந்துகொண்டிருந்தவன் மேல் சென்று தைத்தது. அவன் நீர்ப்பாவை எனக் கலங்கி உருவழிந்து அலைகளென்று ஆனான். மீண்டும் உருக்கூடியபோது அது ஓர் ஆணின் உடல் மட்டுமே என ஜல்பன் உணர்ந்தான். அவன் நீரிலிருந்து மேலெழுந்து வந்தான். நீலப்பரப்பை பிளந்துகொண்டு மேலெழுந்தான். ஜல்பன் அவனை நோக்கி அடுத்த அம்பைத் தொடுத்து கூர்நோக்கியபடி இடக்கால் துள்ளிக்கொண்டிருக்க விழிகள் துறித்து நின்றான்.
எழுந்தவன் முகம் தேவர்களின் அழகு கொண்டிருந்தது. இனிய புன்னகையுடன் அவன் “செல்க!” என்றான். ஜல்பன் விலங்குபோல் உறுமினான். “செல்க!” என்று அவன் சொன்னான். ஜல்பன் தன் வில்லையும் அம்பையும் தரையில் வீசிவிட்டு திரும்பி காட்டுக்குள் புகுந்து இலைப்பரப்பை காட்டுப்பன்றிபோல் ஊடுருவி விரைந்தோடத் தொடங்கினான்.