அவதூறு, கடிதம்

அன்புள்ள ஜெ.மோ,

வணக்கம்.

அவதூறுகள் ஏன்? என்ற தலைப்பிலான உங்கள் பதிலுரை கண்டேன். உயிர்மை இம்மாத இதழில் யமுனா ராஜேந்திரன் எழுதிய கட்டுரையைப் படித்த போதே அது குறித்து உங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் தனது கட்டுரையின் இறுதியில், ஜெயமோகன் ஒரு இயக்கமாகச் செயல்படுகிறார் என்று (அது ஒன்று மட்டுமே சரியான கணிப்பு) கணித்திருந்தார். காழ்ப்புணர்வின் அடிப்படையிலான யமுனாவின் வாதங்கள் பல சொத்தையாகவே பல்லிளித்தன. இறுதியில், நல்ல படைப்பூக்கத்துடன் இயங்கும் உங்கள் கவனத்தை திசைதிருப்ப வேண்டாம் என்று அதை அப்படியே விட்டுவிட்டேன். உண்மையில், அவரது அவதூறுக்கு தோற்றுவாய் மனுஷ்யபுத்திரனாகவே இருக்க வேண்டும். அவரே இன்னொரு கட்டுரையில் தனக்கு துரோகம் செய்த அருந்ததிராய் குறித்து பிரஸ்தாபித்தும் இருக்கிறார். மற்றொரு கட்டுரையில், அருந்ததியை முன்வைத்து ஜெயமோகனைத் தாக்கவும் உத்தேசிக்கிறார். பதிப்புலக நாடகத்தின் இருவேறு பக்கங்களாக உயிர்மையின் வேடம் தொடர்கிறது.

இவர்களுக்கான சரியான பதில், புறக்கணிப்பு மட்டுமே என்பதைத்தான் உங்கள் பதிலுரை காட்டுகிறது. தவிர, கோட்பாடு அடிப்படையில் ஒருவரை விமர்சிக்கத் துடிப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு சித்தாந்த முகமூடி அணிந்துகொண்டுதான் பின்னாலிருந்து தாக்குகிறார்கள். தமிழின் ஆய்வுலகம் திசைமாறிச் சென்றுகொண்டுள்ள சூழலில், ரா.பி.சேதுப்பிள்ளை, உ.வே.சா, கி.வா.ஜ, போன்ற தமிழின் பெருமகன்களே இப்போது இருந்தாலும் வசையே பதிலாகக் கிடைக்கும்.

வசைபாடிகளுக்கு உங்கள் பதில் தெளிவானது. ஆயினும், நீங்கள் உங்களை வெகுஜன பத்திரிகைகளிருந்து விலக்கிக் கொள்ளாமல் அதிலும் உட்புகுந்து வெளிவர வேண்டும். ஏனெனில், பிரசார மகிமையினால் உங்களைப் படிக்காமலே வெறுக்கும் (செல்வராஜ் போன்ற) வாசகர்களும் உங்களை அறிய அது மட்டுமே வாய்ப்பாக அமையும். திரைப்படத் துறையுடன் சமரசம் செய்ததன் மூலமாக அதிலும் உங்களால் சாதனை படைக்க முடிந்தது. அதுபோல, வெகுஜன இதழ்களுடன் நீங்கள் சமரசம் செய்து கொள்வது உங்கள் தனித்தன்மையை எந்த விதத்திலும் பாதிக்காது. அதன்மூலமாக, புரளி பேசுபவர்களின் வாய்களை அடைக்கவும் முடியும். இது எனது வேண்டுகோள்.

-வ.மு.முரளி.

அன்புள்ள முரளி,

திரைப்படத்துறையில் என்னை விரும்பி மதித்து அழைக்கும் வாசகர்களும் நண்பர்களுமான திரைப்படக்காரர்களால்தான் நான் உள்ளே செயல்பட முடிகிறது.

இதழ்களில் அப்படி என் மேல் மதிப்பு கொண்ட, என் படைப்புகளை வாசிக்கக்கூடிய எவரும் இல்லை.

திரைப்படத்துறை உத்வேகம் கொண்ட புதிய இளைஞர்களால் நிறைந்திருக்கிறது இன்று. இதழியல் நசிந்துகொண்டிருக்கிறது. எரிய ஆர்வமேதும் எவருக்கும் இல்லை. அங்கிருப்பவர்கள் சினிமாவில் நுழைய தருணம் நோக்கி நொந்துபோய் இருப்பவர்கள் மட்டும்தான்

ஜெ

முந்தைய கட்டுரைவணங்கான் , கதைகள் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகதைகள், அச்சிதழ்கள்-கடிதங்கள்