தொல்விந்தைகள்- கடிதங்கள்

Understanding ancient geometric earthworks in southwestern Amazonia

Hundreds of ancient earthworks built in the Amazon

https://news.nationalgeographic.com/news/2010/01/100104-amazon-lost-civilization-circles/

அன்புள்ள ஜெயமோகன்

 

வணக்கம்.

 

கற்காலத்து மழை தொடர்ந்து மனக்கிளர்ச்சி ஊட்டுகிறது.

 

15 ஆண்டுகட்கு முன் தமிழில் வெளிவரும் “கலைக்கதிர்” எனும் அறிவியல் இதழில் உலகின் மிக பிரமாண்டமான கற்செதுக்கு ஓவியம் பிரேசில் மலைப்பகுதியில் காணப்பட்டது என்றும் அதன் அளவு ஏறத்தாழ 250 கிலோமீட்டர் நீளம் எனவும் ஒரு கட்டுரை படித்தேன். மேலும் அதனை புகைப்படம் எடுப்பதற்காக நிறைய ஆட்களை தொடர்ச்சியாக அந்த செதுக்கலுக்குள் நிற்க வைத்து இரவில் தீப்பந்தம் பிடிக்கச்செய்து வானிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அந்த இதழ் வெளியிட்டு இருந்து. அது பற்றியும் ஆயாய்ச்சியாளர் எரிக்வான் டேனக்கின் கருத்து கூறுகையில் இதுவும் ஏலியன்கள் செய்த ஒன்று என்றும் அவர்களுக்கு சில தகவல்களை சமிக்ஞை மூலம் தெரிவிக்கவும் அவர்களின் விண்கலன்கள் தரையிறங்கவுமான ஏற்பாடு என்பதாக கூறி இருந்தார். அந்த புகைப்படம் இன்னமும் என் நினைவில் உள்ளது ஒரு சிறு மனிதன் கையில் எதையோ உயர்த்திய படி அந்த தீப்பந்த வெளிச்சங்களை தொகுத்து பார்க்கும்போது தெரிந்தது.

 

நட்புடன்

நேசராஜ் செல்வம்

கிருஷ்ணகிரி

 

Amar Chitra Katha Gandhaberunda Excerpt

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நேற்று வந்த கற்காலத்து மழை 6 இல் நீங்கள் குறிப்பிட்டிருந்த இரு தலை பறவையை கன்னடத்தில்
Gandaberunda என்று அழைக்கிறார்கள். இது மைசூரில் மட்டுமில்லாமல் கர்நாடகத்தில் எங்கும் பரவலாக காணமுடியும். ஏனென்றால் கர்நாடக அரசின் முத்திரையின்  (coat of arms) மையப் பகுதியில் இருப்பதும் இது தான்.இதனோடு இணைந்த தொன்மத்தை அமர் சித்ர கதா வில் படித்திருக்கிறேன்.
இரணியனை கொன்ற நரசிம்மர் உக்கிரம் குறையாமல் மூவுலகையும்ஆட்டிப்படைக்கிறார். தேவர்கள் ஈசனிடம் வேண்டி நிற்கிறார்கள்.அவதரிக்கிறார் சரபர். நரசிம்ம மூர்த்தியாக சரபருடன் எதிர்த்து நிற்க முடியாமல் தள்ளாடுகிறார் விஷ்ணு. மேலும் கண்டப்பேருண்டமாய் (இரட்டை த் தலைப்பு பருந்தாய்) அவரே மாறி சரபத்துடன் போர் புரிகிறார்.இப்போர் பாரதப்போர் போலவே 18 நாட்கள் நடக்கிறது. சர்வ நாசம்.இவர்கள் இருவரையும் அடக்க தேவி ப்ரத்யங்கராவாக எழுகிறாள்.சமநிலை பிறக்கிறது.
நன்றி,
லோகேஷ் ரகுராமன்.
அன்புள்ள ஜெயமோகன்
பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பற்றிய பயணக்குறிப்பை வாசித்தேன். நீங்கள் சொல்வதுபோல இவை நாம் அறியாத ஒரு காலகட்டத்தின் சின்னங்கள். அவற்றைப்பற்றி நாம் அறுதியாக ஒன்றையுமே சொல்லிவிடமுடியாது. நம்முடைய ஆச்சரியத்தை மட்டும்  பாதுகாத்து வைத்துக்கொள்ளலாம். ஆனால் எதிர்காலத்தில் இந்த மர்மங்கள் வெளிப்படக்கூடும். இரண்டு சாத்தியங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் வழியாக இந்த வகையான எல்லா சின்னங்களையும் பொதுவாக தொகுத்து அவற்றின் பரிணாமத்தை நம்மால் வரைந்து பார்த்துவிடமுடியும். அந்தப்பரிணாமத்தின் வெவ்வேறு பாதைகளை அடையாளப்படுதினால் ஒரு சித்திரம் வரலாம். அதோடு நீங்கள் சொன்னதுபோல எதிர்காலத்தில் இவ்வாறு உலகில் உள்ள எல்லா அடையாளங்களும் ஓரிடத்தில் தொகுக்கப்படலாம். அப்போது பல தெளிவுகள் வரும். இன்று இவை அற்புதங்கள் மட்டுமே. ஏற்கனவே இருக்கும் அற்புதங்களுடன் தொடர்பு படுத்தி கற்பனையை ஓட்டவேண்டியதுதான்.
சக்திவேல்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-35
அடுத்த கட்டுரைகவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்