வைகுண்டம் அவர்களுக்கு பதில்

இன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி– வைகுண்டம்

அன்பின் ஜெ..

வைகுண்டம் அவர்களின் கடிதம் மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது.

காந்தியப் பொருளியல், உலகில் மனிதர்களின் அடிப்படைத் தேவைக்கான அனைத்துச் செல்வங்களும் உள்ளன. ஆனால், மனிதனின் பேராசையை பூர்த்தி செய்ய அவை போதாது என்னும் புள்ளியில் இருந்து துவங்குகிறது. மேலும் அது, சமூகத்தின் கடைக்கோடி மனிதனின் அடிப்படைத் தேவையை எப்படிப் பூர்த்தி செய்வது என்பதிலிருந்து தொடங்குகிறது.

ஆனால், மரபான பொருளாதாரக் கொள்கைக்கு இந்த அறச்சிக்கல் இல்லை.

எடுத்துக்காட்டாக, வைகுண்டம் அவர்கள் எடுத்தாண்டிருக்கும் உருளைக் கிழங்கையே எடுத்துக் கொள்வோம். இந்தியாவில், 5 கோடி டன் உருளைக்கிழங்கு உற்பத்தியாகிறது.  இதில் 4.6 கோடி டன் உணவுக்காகப் பயன் படுத்தப்படுகிறது. கோடிக்கணக்கான வட இந்திய ஏழை மக்களின் வாழ்வும் பொருளாதாரமும் இதுதான். அதை சிப்ஸ் உற்பத்தி செய்யும், உண்ணும் நுகர்வோர் பார்வைகளிலிருந்து மட்டுமே அவதானித்தல், மிக மேலோட்டமான, மேல்தட்டுப் பார்வையாகும். அது சமூகத்தின் 10% மக்களின் பார்வை மட்டுமேயாகும். அந்தப்பார்வையால், உணவு கிடைப்பதே பெரும்பாடு என்னும் மனிதர்களின் desperation ஐக் கொஞ்சம் கூட உணரமுடியாது.  அந்தப் பார்வை கொண்டவர்கள் தான் பெரும்பாலும் அதிகாரிகளாகவும், திட்ட வல்லுநர்களாகவும், ஊடக அறிவு ஜீவிகளாகவும் இருக்கிறார்கள். அதனால்தான், சத்துணவுத் திட்டத்தை எம்,ஜீ.ஆர் கொண்டு வந்த போது, சோ போன்றவர்கள் “மீன் கொடுக்காதே: மீன் பிடிக்கக் கற்றுக் கொடு”, என்னும் வகையான அறிவுஜீவி பஞ்ச் டயலாக்குகளை எழுத முடிந்தது. அதைப்படித்த என் போன்ற பல்லாயிரம் பேர் அதை உண்மையென நம்பினர். (சமீபத்தில், அத்திட்டம் பற்றிய ஒரு புத்தக வெளியீட்டில், ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கலந்து கொண்டார். அதில் அத்திட்டத்தைப் பற்றிய அதிகாரிகளின் கருத்துக்களைக் எம்,ஜி.ஆர் கேட்ட்தாகவும், அதில், தான், “ஆத்தில கொட்டினாலும், அளந்து கொட்டுங்கோ’, என்னும் அருங்கருத்தைச் சொன்னதாகவும் பீற்றிக் கொண்டார்)

வைகுண்டம் தன் கடிதத்தில், “மதிப்பு ஏற்றப்பட்ட பொருள்” என்னும் ஒரு கருதுகோளை அவர் உபயோகித்திருக்கிறார். இது, லாப நோக்கத்தை உட்செரித்த சந்தைப் பொருளாதார மையம் கொண்ட ஒரு பார்வை தானே தவிர, அறிவியற் பார்வையல்ல.

கிராமப்புற பால் உற்பத்திக் கூட்டுறவுச் சாலையில், பால் கொள்முதல் செய்யும் நபர், காலையில் இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணிநேரம் மட்டும் பணிபுரிகிறார். அதனால், அவருக்கு வழங்கப்படும் ஊதியம், குறைவே. அதேபோல், அமுல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு (தொழிலாளர்கள் தவிர்த்த), தனியார் துறையை ஒப்பு நோக்குகையில், மிகக் குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. அமுலின் மேலாண்மை இயக்குநரின் ஊதியம், இந்துஸ்தான் லீவரின் பொதுமேலாளரை விட மிகக் குறைவானது. அமுலின் உரிமையாளர்கள் சிறு விவசாயிகளே – எனவே அவர்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்குக், குறைவான ஊதியமே அளிக்கப்படுகிறது. கூட்டுறவு நிறுவனங்கள், வருட இறுதியில், தங்கள் செலவு போக, அதிகம் இருக்கும் வருமானத்தை உற்பத்தியாளர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து விடுவதால்,  அங்கே லாபம் என்னும் கருத்தும், வருமான வரி என்னும் ஒரு செலவினமும் கிடையாது.  உழவரின் பால், மடியில் இருந்து கிளம்பி, நுகர்வோரை அடையும் வரையான மொத்தத் தொடர்புச் சங்கிலியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் செலவினங்கள் குறைவு. லாப நோக்கம் கொண்ட தனியார் துறை, இந்தக் குறைந்த செலவுத் தொடர்புச் சங்கிலியை நகலெடுக்கவே முடியாது.

எனவேதான், அமுல் தனது பால் விலையைவிட 20% மட்டுமே பதப்படுத்துதல், தொடர்புச் சங்கிலிச் செலவினங்களுக்காக  அதிகம் வைத்து விற்க முடிகிறது.

அமுலின் மொத்த விற்பனையில் பெரும்பான்மை, பால் விற்பனையே. வெண்ணை, பாலாடை மூலம் வரும் லாபமே பாலை, குறைவாக விலை வைத்து விற்க உதவுகிறது என்பது உண்மையல்ல. வெண்ணைக்கும், பாலாடைக்கும் சந்தை இல்லாமல் போனால் கூட, அமுல் மாதிரி லாபம் ஈட்டும் – ஏனெனில், அது உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும்  இடையில் லாப நோக்கம் கொண்ட எவருமே இல்லாத ஒரு தொழில்மாதிரி.

அரவிந்த் கண் மருத்துவமனை உதாரணத்தை எடுத்துக் கொண்டால் இன்னுமொரு உளமயக்கம் விலகும். உலகில், சந்தைப் பொருளாதாரமே மிகச் செயல் திறன் மிக்கது என்னும் ஒரு எண்ணம் உள்ளது. துவக்கத்தில் 100 டாலருக்கு, செயற்கை விழித்திரையை இறக்குமதி செய்து வந்த, அரவிந்த், தான் சொந்தமாக, செயற்கை விழித்திரையை உற்பத்தி செய்த போது, வெறும் 2 மட்டுமே ஆனது.

“மதிப்பு ஏற்றுதல்’ என்னும் வார்த்தையின் உண்மையான பொருள் என்ன என்பதை நாம் சிந்திக்கலாம்.

திறந்த பொருளாதாரத்தில், போட்டி அதிகமானால், பொருட்களின் விலை குறையும் என்பது எவ்வளவு தூரம் உண்மை?

இங்கேதான், ஒரு கட்டுரையில் எடுத்துக்காட்டிய, மேலாண் சிந்தனையாளர் பீட்டர் ட்ரக்கரின் வார்த்தைகளை மீண்டும் சுட்ட விரும்புகிறேன். “ஒரு நிறுவனத்தின் நோக்கம், நுகர்வோரின் தேவையை அறிந்து, அதை மிகச் செயல்திறன் மிகுந்த வழியில், குறைந்த செலவில் நிறைவேற்றுவது’, என்பதே. லாபம் என்பது, அது, மிகத் திறைமையாக மேலாண்மை செய்யப்படுவதின் அடையாளம் மட்டுமே” என்கிறார் அவர். ஏழை மக்களுக்காக, 60% அறுவை சிகிச்சைகளை இலவசமாகவும், மிகக் குறைந்த செலவிலும் செய்யும் அரவிந்த் கண் மருத்துவக் குழுமம், இந்தியாவின் தலைசிறந்த தனியார் மருத்துவக் குழுமத்தை விட மூன்று மடங்கு அதிகம் லாபமீட்டுவது முடிவது எதனால் என யோசித்தால், பீட்டர் ட்ரக்கர் சொல்வது புரியும். தனியார் துறை நிறுவனங்கள், தொழிலில் லாபமீட்டுவதை முதன்மையாக வைத்துச் செயல்படுகின்றன. காந்திய நிறுவனங்கள், நுகர்வோர் நலனை முன்வைத்துச் செயல்படுகின்றன.  பொருளாதாரத் தட்டின் மிகக் கீழ்நிலையில் இருக்கும் நுகர்வோருக்குக் கட்டுபடியாகும் விலையில் பொருட்களை உற்பத்தி செய்து, அதில் லாபமீட்டும் தொழில் நிறுவனங்களே உண்மையில் செயல் திறன் மிக்க நிறுவனங்கள்.

அவரது அடுத்த கேள்விக்கு வருவோம். அமுல், அரவிந்த – இவையிரண்டும், வெற்றிகரமான  “scaling up’ க்கு உதாரணங்கள் எனில் ஏன் எல்லா காந்திய முனைப்புகளும் இப்படி ஸ்கேல் அப் ஆகவில்லை?

இதில், இன்னுமொரு சாய்வு உள்ளது. வெற்றிகரமான எல்லாமே பெரிய அளவில் ஸ்கேல் அப் ஆகவேண்டும் என்பது.  அதற்கான பதில் – தேவையில்லை என்பதே. தன்னளவில், சிறு அலகாக வெற்றிகரமாக இயங்கினாலே போதும் என்றே காந்தியம் சொல்கிறது.  பெரிதாகும் வாய்ப்புகள் இருந்து, அவை அனைத்து மக்களையும் சென்றடைந்தால் நல்லது, ஆனால், அது கட்டாயமல்ல.

லடாக் பகுதியில் வெற்றிகரமாகச் செயல்படும் பனி ஸ்தூபி மூலமான நீர் சேகரிப்பு, இந்தியா முழுவதும் சாத்தியப்படாது என்பதைக் குழந்தை கூடச் சொல்லிவிடும். அந்த வெற்றியின் ரகசியம் என்னவெனில், கிடைக்கும் குறைந்த பட்ச வளங்களை, எப்படி சமூகத்தில் அனைவருக்கும் சமமான வகையில் பயன்படுமாறு, அறிவியற்பூர்வமாக மேலாண்மை செய்வது என்பதுதான்.  அதன் இன்னொரு வடிவம் தான், ராஜேந்திர சிங் உருவாக்கியுள்ள ஆர்வரி நீர்ப் பாராளுமன்றம். கிடைக்கும் 600 மில்லி மீட்டர் மழையில் கிடைக்கும் நீரைச் சேமித்து, அனைவருக்கும் சமமான வகையில் பங்கிடுகையில், 72 கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மக்களும் வேளாண்மைக்கும், குடிப்பதற்குமான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது. ஆனால், 950-1000 மில்லிமீட்டர் மழைபெறும் சென்னை, வெறும் குடிநீருக்காக அலைகிறது. லடாக் மக்கள் பெரும்பாலும் பள்ளியிறுதியைத் தாண்டாதவர்கள்,, ஆர்வரிப் பகுதி மக்கள் தில்லியின் சேரிகளில் கூலி வேலை செய்தவர்கள்.. சென்னை மக்களின் கல்வித் தகுதியை உலகமே அறியும்.

லடாக் நீர் மேலாண்மைத் திட்டத்தை ஸ்கேல் அப் செய்ய முடியாது. ஆனால், அடிப்படை உத்திகளை உலகெங்கும் எடுத்துச் செல்லமுடியும். எனவே, ‘மாதிரியை’ அப்படியே நகலெடுப்பதை விட, அதன் சூட்சுமங்களை உனர்ந்து, சூழலுக்கேற்ப வெற்றிகரமாக மாற்றியமைத்தல் (adapt),  சாத்தியமே.

விஞ்ஞானத்திலும், தொழில்நுட்பத்திலும், எதை ஒதுக்குவது? எதைத் தேர்ந்தெடுப்பது என இன்னொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். மிக நிச்சயமாக, சூழலை மாசுபடுத்தாத,  முன்னேறிய தொழில்நுட்பத்தைத் தான் காந்தியம் தேர்ந்தெடுக்கும்.  நம் தலைமீது விழும் சூரிய ஒளி, கத்தார் நாட்டில் இருந்து கலன்களில் அடைக்கப்பட்டு, கப்பல்களில் வரும் எரிவாயுவை விட மிகச்  சரியானது என்பதனால் தான் பங்கர் ராய் சூரிய ஒளி மம்மாக்களை உலகெங்கும் உருவாக்கிவருகிறார்.

இறுதியாக, வரி வசூல்.  இந்திய அரசின் வரவு செலவுக் கணக்கை ஆராயும் எவரும் கவனிக்கும் ஒரு விஷயம் – இந்திய அரசின் வரவில், 85%, அன்றாடச் செலவுகள் – அரசு அதிகாரிகளுக்கான சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி, ராணுவச் செலவுகள் போக. 15% சதம் வரி வசூல் மட்டுமே, இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் கட்டமைப்புகளுக்காகச் செலவிடப் படுகிறது.

இந்தச் சமநிலையின்மையை எதிர்த்த முதல் குரல் ஜே.சி.குமரப்பாவினுடையது.  1929 ஆம் ஆண்டு, மட்டார் தாலூக்கா பொருளியல் ஆய்வை (An Economic Survey of Matar Taluka, Gujarat, 1929, Gujarat Vidhyapith) மேற்கொண்ட அவர் சில முக்கியக் கேள்விகளை முன்வைக்கிறார். அன்று நிலவரி அரசுக்கு மிக முக்கியமான வருவாய். (இன்று விற்பனை வரி, கலால், சேவை, வருமான வரிகள்)

  1. வரி வசூல் செய்யும் அதிகாரியின் (கலெக்டர்) ஊதியம், கிராமத்தின் மிகப் பெரும் உழவரை விட 400 மடங்கு அதிகமாக இருக்கிறது. உற்பத்தி செய்யும் உழவர் பெரும் நேர்மறைப் பங்களிப்பை நிகழ்த்துகிறார். அவரிடம் இருந்து அரசு வரியை வசூல் செய்யும் குமாஸ்தாவுக்கு எதற்கு இவ்வளவு மடங்கு ஊதியம்? (ஜே.சி.குமரப்பாவை, அதிகார வர்க்கம், திட்ட உருவாக்கங்களில் ஏன் உள்ளே விடவில்லை என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்)
  2. வறட்சி காலத்தில், பஞ்சம் போக்க செய்யப்பட்ட நீர்க்க்கட்டமைப்பு நடவடிக்கைகள் எல்லாமே, மழை நீரைச் சேமித்து, கிராம மக்களுக்கு பாசன வசதிகள் ஏற்படுத்தும் நோக்கில் அல்ல – மழை நீரை வெளியேற்றும் நோக்கில் நிறைவேற்றப்பட்டவையே என்னும் குற்றச்ச்சாட்டை முன்வைக்கிறார். எனவே பஞ்ச காலத்தில் செய்யப்பட்ட இந்த நிவாரண நடவடிக்கைகளினால், உள்ளூர் வேளாண்மை மேலும் பாதிப்புக்குள்ளானதே தவிர, மேம்படவில்லை. இந்த வேலையைச் செய்த ஒப்பந்த்தாரர்கள், உள்ளூர் பொதுச் சொத்துக்களை மேலாண்மை செய்யும் அமைப்புகளுடன் தொடர்பே இல்லாதவர்கள். அவர்களுக்கு, இந்தப் பொதுச் சொத்துக்கள் உள்ளூர் மக்களுக்கு நிலைத்து நிற்கும் வகையில் பராமரிக்கப்பட வேண்டும் என்னும் அடிப்படை அறிதலே இருக்கவில்லை.

எனவே, வரி வசூலும், அதைச் செலவிடும் அதிகாரமும், கிராமம் என்னும் அடிப்படை அலகில் நடக்கும்போது, அவை அந்தக் கிராமத்துக்குப் பயன்படும் வகையில் அமையும் என்பதே அவர் வாதம்

மிக முக்கியமாக, ஒரு நிறுவனத்தை நடத்துகையில், ஊதியமும் வட்டியுமே 85% வருமானத்தைச் சாப்பிட்டால், வளர்ச்சி எப்படி நிகழும்?

வரிவசூல் செய்யும் குமாஸ்தாவுக்கு, உழவரை விட அதிக ஊதியம் எதற்கு என குமரப்பா முன்வைத்த ஆதாரக் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

இறுதியாக, நவீன மயமாக்கல், ஒப்பீட்டளவில், தலித்துகளின் வாழ்க்கையை மேம்படுத்தியிருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை. கிராமம் என்னும் அலகு மிகவும் பிற்போக்குத்தனமானது என்பதில் அம்பேட்கரும் நேருவும் கிட்டத்தட்ட ஒத்த கருத்துக்கள் கொண்டிருந்தார்கள். சமூகப் பார்வையில் அது உண்மையும் கூட.

இதை என் சொந்த அனுபவத்தைக் கொண்டு முன்வைக்கிறேன்.

எங்கள் தோட்டத்துக்கு அருகில், பவானி ஆறு ஓடிக்கொண்டிருந்தது.  எருமைகளைக் குளிப்பாட்டி, நாங்களும் குளித்து, துணிகளைத் துவைத்து, எங்களுக்குத் தேவையான குடிநீரை, ஒரு அண்டாவில் சுமந்து வருவோம். குளிப்பதற்கு, துவைப்பதற்கு, கால்நடைகளைச் சுத்தம் செய்வதற்கு நீர் செலவாவதில்லை. அண்டாவில் அள்ளப்படும் நீர் மட்டுமே, ஆற்றிலிருந்து வெளியேறும் நீர்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள், நாங்கள் குளிக்கும் இடத்தில் இருந்து 100-150 அடிகள் தாண்டி, குளிப்பார்கள். அவர்களும் அந்தப் பொதுச் சொத்தை உபயோகித்தார்கள். அதற்கு சில மைல் தள்ளி, அடுத்த ஊரின் மேற்சாதியினர் குளிப்பார்கள். தீண்டாமை இருந்தது, கண் மறைவாக. ஆனால், பொதுச் சொத்தான ஆறு, எல்லோர் அடிப்படைத் தேவைகளுக்கும் பயன்பட்டது. ஆற்று வளம் களவாடப்படாமல்.

50 ஆண்டுகளுக்குப் பின்னால், இன்று பவானி ஆற்றின் கரையில் கிணறுகள் வெட்டப்பட்டு, சுரக்கும் நீர், 5-6 கிலோமீட்டர்கள் வரை மின்சார இயந்திரங்கள் மூலம் பாசனத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. கிராமங்களுக்கும், நீர் பைப் மூலம் விநியோகிக்கப்படுகிறது. ஆற்றில், கிராமத்தின் கழிவு கொட்டப்படுகிறது.

தாழ்த்தப்பட்டோர் காலனியில் பலர் படித்து, அரசு வேலைகளில் இருக்கிறார்கள். ஒட்டு மொத்த தாழ்த்தப்பட்ட மக்களும் முன்னேறிவிடவில்லை. ஆனால், தனி மனித முன்னேற்றங்கள் நிக்ழ்ந்துள்ளன. அவர்களிடையே, தங்கள் உரிமை பற்றிய அறிதல் பெருகியிருக்கிறது. தீண்டாமை இன்னும் கொஞ்ச தூரம் விலகியிருக்கிறது.

எனது அனுபவத்தில், சமூக மாற்றம், மிக மெதுவாக நிகழ்கிறது. கலப்புத் திருமணங்களுக்கு, அதிலும் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருந்தால் மட்டுமே அனுமதி தருவேன் எனக் காந்தி முன்னெடுத்த திருமணங்கள், அவர் மறைவுக்குப் பின் நின்றுவிட்டன. காந்திக்குப் பின்னான காந்தியம் பெரும் முன்னெடுப்பை நடத்தவில்லை.

கலப்புத் திருமணத் தம்பதிகளுக்கு, பிள்ளைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு என்னும் அரசின் திட்டங்கள் சில நூறு பேருக்குப் பயனளித்திருக்கிறதே தவிர சமூகத்தை மாற்றியமைக்கவில்லை.

அன்புடன்

பாலா

***

முந்தைய கட்டுரைநவீன்- எதிர்முகம்
அடுத்த கட்டுரைஅபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா