அபி கவிதைகள் 150
அபி கவிதைகள் அழியாசுடர்கள்
அன்புள்ள ஜெ
அபி கவிதைகளில் உள்ள பல முன்னோடிகளை கடிதங்களில் சுட்டியிருக்கிறார்கள். கலீல் கிப்ரான், ரூமி இருவரின் ஆன்மிகமான செல்வாக்கு அவருடைய கவிதைகளில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவருடைய கவிதைகளில் உள்ள முக்கியமான ஒற்றுமை மிர்ஸா காலிப்பின் கவிதைகளுடன். அவர் அக்கவிதைகளை வாசித்திருப்பாரா என்று தெரியவில்லை. அபி ஆங்கிலத்தில் வாசிப்பவர் என்பதனாலும் அவருடைய நண்பரான அப்துல் ரகுமான் உருது வழியாக மிர்ஸா காலிப் கவிதைகளை மொழியாக்கம் செய்திருப்பதனாலும் வாசித்திருக்கலாம்.
மிர்ஸா காலிப் கவிதைகளைப்பற்றி சொல்வதென்றால் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ரொம்பநாள் முன்னாடி பாரத் பவன் என்ற ஓர் அமைப்பு போபாலில் இருந்தது. அங்கே ஒரு முகாமுக்குச் சென்றிருந்தேன். அசோக் வாஜ்பாய் என்ற அறிஞர் அங்கே வகுப்பு நடத்தினார். அவர் கஸல் பாடல்கள் , மிர்ஸா காலிப் பற்றிப் பேசினார். அப்போது ஓர் உவமை சொன்னார். முகலாய மன்னர்களின் படங்களில் அவர்கள் ரோஜாவை முகர்ந்துகொண்டிருப்பதுபோல படம் இருக்கும். அந்த ரோஜாதான் கஸல். மிர்ஸா காலிப் கவிதைகள் அந்த மணம்தான்
ரோஜா கூட இல்லை அதன் மணம்தான் கஸல். ரோஜாவுக்கு கடுமையான மணம் இல்லை. மூக்கிலேயே வைத்து முகர்ந்தால்தான் மணம் தெரியும். ரோஜாவின் அழகில் இருந்து அந்த மணம் எழுகிறது. மிகமிக மென்மையானது அது. இந்தப்பிரபஞ்சத்தில் இறை அருள் ரோஜாவில் மணம் போல உறைகிறது என்பது சூஃபி தத்துவம். அதைத்தான் அந்த ஓவியங்கள் காட்டுகின்றன
மிர்ஸா காலிப்பின் கவிதைகள் மிகவும் நுட்பமான அகவயமான அலைபாய்தல்களைப் பற்றியும் ஆன்மிக அனுபவங்களைப்பற்றியும் பேசுகின்றன. அவற்றுடன் நெருக்கமாக உள்ளன அபியின் கவிதைகள்.
மாலை – காத்திருத்தல்
விஷப்புகை மேவிய வானம்
மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது
அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு
மின்னி இடித்து
வெறியோடு வருகின்றன
அல்ல அல்ல அல்ல என்று
பொழிந்து பிரவகிக்க
அழித்துத் துடைத்து எக்களிக்க
வருவது தெரிகிறது
அடர்வனங்களின்
குறுக்கும் நெடுக்குமாக
ஆவேசக் காட்டாறுகள்
பதறி ஓடி
வாழ்வைப் பயிலும்
உண்டு-இல்லை என்பவற்றின் மீது
மோதிச் சிதறி
அகண்டம்
ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது
அபியின் இக்கவிதையில் ஒரு மிர்ஸா காலிப் கவிதையின் கனத்த அமைதியான துக்கம் உள்ளது. மிர்ஸா காலிப் எல்லா கவிதையையும் ஒரு தனித்த பயணி தனக்குத்தானே பாடிக்கொண்டு செல்லும் பாவனையில் எழுதியிருக்கிறார். உண்மையில் மிர்ஸா காலிப் அப்படித்தான் வாழ்ந்தார். அபி பயணி அல்ல. அவர் ஓர் இடத்தில் அமர்ந்து தனக்குத்தானே பேசிக்கொள்வதுபோல் ஒலிக்கிறது கவிதை. மிர்ஸா காலிப் கவிதைகளையும் அபி கவிதைகளையும் எவராவது ஒப்பிட்டு எழுதினால் நன்றாக இருக்கும்
டி.எஸ்.சோமசுந்தரம்
மிர்ஸா காலிப் கவிதைகள் பனுவல்
மிர்ஸா காலிப்பை மொழியாக்கம் செய்தல் – லதா ராமகிருஷ்ணன்
மிர்ஸா காலிப் கஸல், மெஹ்தி ஹஸன்
அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்
அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3
கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்
கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2
அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்
கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது