கிருபரும் அஸ்வத்தாமனும் கிருதவர்மனும் மலைப்பகுதியில் ஏறியதன் களைப்புடன் நின்றனர். கிருதவர்மன் “பாஞ்சாலரே, நீங்கள் வழியை அறிவீர்களா?” என்று கேட்டான். “இல்லை, இவ்வாறு ஓர் இடம் உண்டு என்பதல்லாமல் வேறெதையும் அறிந்ததில்லை. அது இங்கிருக்கும் என்பது என் உள்ளத்தில் தோன்றுவது மட்டுமே” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அந்தக் காட்டின் பெயர் காலகம். சாயாகிருகம் என்னும் இக்காட்டுக்கு அப்பால் உள்ளது. வேடர்கள் இந்தக் காட்டின் எல்லையைக் கடந்து அதற்குள் நுழைவதில்லை. அக்காட்டுக்குள் ஸ்தூனகர்ணன் என்னும் கந்தர்வன் வாழ்கிறான். அவன் அங்கு செல்பவர்களை வழிதிகைக்கச் செய்து பித்தாக்கிவிடுவான் என்கிறார்கள்” என்றான் அஸ்வத்தாமன்.
“அக்கதையை சூதர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்” என்று கிருதவர்மன் சொன்னான். “ஆனால் அது துரியோதன மன்னரைப் புகழ்ந்து அவர் ஆற்றலை மக்களின் உள்ளத்தில் நிலைநிறுத்தும்பொருட்டு சூதர்கள் உருவாக்கிய கதை என்றே நான் எண்ணியிருக்கிறேன். அரசர்கள் தேவர்களின் ஆற்றலைப் பெற்று மீள்வது சூதர்களின் வழக்கமான கதைதானே.” கிருபர் “கதைகளை அப்படி உருவாக்கிக்கொள்ள முடியாது” என்றார். அஸ்வத்தாமன் “அது கதை என்றால் அக்கதைக்குள் நுழைவோம்… நமக்கு வேறுவழி இல்லை” என்றான். அவன் என்ன சொல்கிறான் என வியந்து கிருதவர்மன் திரும்பி நோக்கினான். “நாம் இன்றிருக்கும் நிலையில் உண்மை பொய் எதற்கும் எந்த வேறுபாடும் இல்லை” என்று அஸ்வத்தாமன் மேலும் சொன்னான்.
“எதையாவது சொல்லி அந்தப் போர் நிகழவில்லை என்றே ஆக்குங்கள், பாஞ்சாலரே” என்றான் கிருதவர்மன். அவன் இளிவரலையே இலக்காக்கினான். ஆனால் சொன்னபோது தொண்டை இடறிவிட்டது. அவன் குரலில் இருந்த மாற்றம் அஸ்வத்தாமனின் உள்ளத்தை உலுக்க அவன் திரும்பி நோக்கினான். அவன் ஒன்றும் சொல்லவில்லை. கிருபர் “ஏதேனும் தெய்வம் ஒன்று தோன்றி அவ்வண்ணம் ஆக்கிவிடலாகாதா என்று நானும் எண்ணிக்கொண்டே இருந்தேன், யாதவரே” என்றார். “உண்மையில் எண்ணி எண்ணி மாளவில்லை. இத்தனை எளிதாக அனைத்தும் அழிந்து இல்லையென்றே ஆகிவிடுமா? நானறிந்த வாழ்க்கை, மனிதர்கள், நிலம் அனைத்தையும் ஓவியத்திரைச்சீலையை இழுத்துச் சுருட்டி எடுத்துச்செல்வதுபோல கொண்டுசென்றுவிட்டன தெய்வங்கள்” என்றார்.
அஸ்வத்தாமன் தணிந்த எடைமிக்க குரலில் “நாம் இதைப்பற்றி பேசவேண்டாமே?” என்றான். “இதைப்பற்றியே எண்ணிக்கொண்டிருக்கிறோம். பேசாமலிருந்தால் என்ன பயன்?” என்று கிருபர் கேட்டார். “நாம் சொல்லச்சொல்ல அது பெருகுகிறது… மலையே ஆனாலும் இல்லை என எண்ணினால் அதை புகையென ஆக்கிவிடலாம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “இல்லை… அது ஒருபோதும் அவ்வாறு ஆவதில்லை…” என்று கிருதவர்மன் ஊடாகப் புகுந்து ஓங்கிய குரலில் சொன்னான். “நாம் இழந்துவிட்டோம். நாம் வாழ்ந்த உலகை ஒட்டுமொத்தமாகவே உடைத்து துண்டுகளாக வீசிவிட்டு வெறுமையில் நின்றிருக்கிறோம். இதுவே உண்மை. இது எத்தனை பேசினாலும் இல்லை என ஆவதில்லை.”
அவர்கள் மீண்டும் பேசவில்லை. நெடுநேரம் நடந்துகொண்டிருந்தார்கள். பின்னர் கிருபர் “இவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதை உள்ளத்திலிருந்து ஒழிய இயலவில்லை. இது இல்லையென்றாகாதா என்ற ஏக்கத்தையும் அகற்ற இயலவில்லை. ஆனால் அவையிரண்டும் துயராகவும் ஏக்கமாகவும் ஒன்றாகி பெருகிப்பெருகிச் சென்று சுவர்முட்டி நின்றிருக்கும் இடத்திலிருந்து நாம் காலத்தில் பின்னால் திரும்பிச் செல்கிறோம். இழந்தவற்றில் வாழத் தொடங்குகிறோம். மறைந்தவர்கள் முன்பெனவே எழுந்து வருகிறார்கள். நிகழ்ந்தவை மீண்டும் நிகழ்கின்றன. அந்தத் திளைப்புக்காகவே இத்துயரை பெருக்கிக்கொள்ளலாம்” என்றார். பின்னர் கசப்புடன் சிரித்து “உடைத்து வீசுவதில் என்னென்ன பெருமிதங்கள்! வீரம், வெற்றி, அறம், மெய்மை… மானுடனைப்போல் கீழ்மைகொண்ட உயிர் பிறிதில்லை” என்றார்.
கைகளை வீசி நாடகக் கூத்தன்போல சுழன்று மேலும் உரக்க நகைத்து கிருபர் சொன்னார் “தெய்வங்களே, பாருங்கள். எவ்வளவு பெரியவர்கள் நாங்கள். எங்கள் கைகளை வெட்டி வீசுவோம். எங்கள் நெஞ்சக்குலையைப் பிடுங்கி நிலத்திலிட்டு மிதிப்போம். எங்கள் குழந்தைகளை துண்டுதுண்டுகளாக நறுக்கி வீசி வீசி விளையாடுவோம்… எங்கள் திறன் பெருகிக்கொண்டே இருப்பது. நாங்கள் செல்லும் தொலைவுக்கு எல்லையே இல்லை.” வெறிகொண்டவராக அவர் சிரிக்க காடு அவ்வோசையை எதிரொலித்தது.
ஆனால் அவருடைய சிரிப்பு கிருதவர்மனை முகம் மலரச்செய்தது. அவருடைய சொற்களை அவன் கேட்கவில்லை. அவன் சிரிப்புடன் “உண்மையில் எத்தனை இனிய பொழுதுகளினூடாக வாழ்ந்து வந்திருக்கிறோம் இல்லையா?” என்றான். “எத்தனை ஒளிமிக்க காலைகள். இனிய மாலைகள். எத்தனை பசுங்காடுகளிலும் மலர்ச்சோலைகளிலும் விளையாடியிருக்கிறோம். கங்கையின் பெருக்கில் இத்தனைமுறை திளைத்திருக்கிறேனா என எண்ணியபோது எனக்கே திகைப்பாக இருந்தது. எத்தனை இனிய புரவிகள், எத்தனை ஓங்கிய யானைகள்… தேன்குடங்களையே உண்டிருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டேன்.” அஸ்வத்தாமன் “வாழ்வது இனிது” என்றான். கிருதவர்மன் “ஆம்” என்றதுமே சிரிப்பின் ஒளிமங்க “ஆம், மிகமிக இனிது. இனிதாகையால் மிக அரிது” என்றான்.
அவன் விழிகள் அலைபாயத் தொடங்கின. தலையை மறுப்பதுபோல் ஆட்டியபடி “ஆனால் வாழ்ந்த கணங்களில் இப்போது தெரியுமளவுக்கு அவற்றின் அழகும் இனிமையும் தெரியவில்லையா? அவற்றின் அருமதிப்பு தெரியாமல் இருந்துவிட்டோமா?” என்றான். “அல்லது மீளாது இழந்துவிட்ட பின் அவை மேலும் ஒளியும் இனிமையும் கொள்கின்றனவா?” கிருபர் சிரிப்பை நிறுத்திவிட்டு அவனை சினத்துடன் பார்ப்பதுபோல தோன்ற அவன் நிறுத்திக்கொண்டான். ஆனால் அவர் அவனை ஊடுருவி நோக்கிக்கொண்டிருந்தார். அவன் நோக்கை விலக்கி தலைகுனிந்து நடக்க “அறிவிலி” என கிருபர் உறுமினார். அவன் உடல் மெய்ப்பு கொண்டது. “அறிவிலி! அறிவிலிகள்!” என்றார் கிருபர். அவன் திரும்பி நோக்கினான்.
அவருடைய தலை நடுங்கியது. இருமுறை கைகளைத் தூக்கியபின் தொண்டையின் அடைப்பை கனைத்து அகற்றிவிட்டு “நாம் கீழ்மக்கள்… இதோ இந்தப் பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றுக்கு இருக்கும் மாண்புகூட இல்லாத சிற்றுயிர்கள்… அவை வாழ்க்கையின் மதிப்பை உணர்ந்தவை. இதோ நெளியும் இந்தச் சிறுபுழுவுக்கு தெரியும் இக்கணமும் இந்த இடமும் மீளமுடியாதவை, ஆகவே ஒருதுளியும் இழக்கக்கூடாதபடி அருமதிப்பு கொண்டவை என… நாம் அதை அறிவதே இல்லை. ஆகவேதான் எதையெல்லாமோ எண்ணிக்கொண்டிருக்கிறோம். கீழ்மை… வெறும் கீழ்மை. அதற்கு எந்த நெறியும் இல்லை. எவ்வண்ணமும் அதை விளக்கமுடியாது” என்றார்.
கிருதவர்மன் பெருமூச்சுவிட்டான். அஸ்வத்தாமன் ஒன்றும் பேசாமல் அச்சொற்களைக் கேளாதவன்போல் நடந்தான். அவர்கள் ஓர் ஓடையை அடைந்தனர். கிருபரும் கிருதவர்மனும் விரைந்து சென்று அதன் நீரை அள்ளி அருந்தினர். அவர்கள் உணர்வெழுச்சியினால் தளர்ந்திருந்தனர். அஸ்வத்தாமன் அந்த நீரை கையில் அள்ளியதும் “இந்த மணம்…” என்றான். “என்ன?” என்றார் கிருபர். “இந்த நீரின் மணம்…” என்று அஸ்வத்தாமன் சொன்னான். கிருபர் அள்ளி முகர்ந்துவிட்டு “ஆம், விந்தையான மணம்…” என்றார். கிருதவர்மன் அதை மணம்நோக்கி “ஆம், அறிந்த மணம். ஆனால் என்னவென்று தெரியவில்லை” என்றான். “இது புனுகு மணம்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அதை நீருடனும் உணவுடனும் நாம் இணைத்துக்கொள்வதில்லை.”
கிருபர் “ஆம்” என்றார். “ஓடைநீருக்கு எப்படி அந்த மணம் வர முடியும்?” என்றான் கிருதவர்மன். “இதுதான் சதவாஹி என்னும் அந்த ஓடை… ஸ்தூனகர்ணனின் சுனைக்குச் செல்வதற்கான வழி இதுவே” என்றான் அஸ்வத்தாமன். “அது புனுகு மணம் வீசும் ஓடை என்று சூதர்பாடல் சொல்கிறது.” கிருதவர்மன் “இதுதானா?” என்றான். “இதனூடாக மலையேறிச் செல்லவேண்டும்… அங்கே ஒருகணமும் மழை ஓயாத செறிகாடு ஒன்று உள்ளது. இருள்விலகாத காடு. ஆகவே அதை காலகம் என்றனர். அதற்குள் உள்ளது அச்சுனை. அது புனுகுப்பூனைகளின் காடு என்றும் சொல்வார்கள்.” கிருபர் “அரசர் அங்கிருக்கிறாரா என்ன?” என்றார். “அவர் அஸ்தினபுரியில் இல்லை என்றால், உயிருடன் இருக்கிறார் என்றால் அங்குதான் இருப்பார்” என்றான் அஸ்வத்தாமன்.
அவர்கள் அனைவரும் மறுவினாவின்றி அதை உணர்ந்தனர். அவர்களின் காலடியோசைகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. காடு எதிரொலித்தது. அது ஓர் உரையாடல் போலிருந்தது. அவர்கள் மிகவும் களைத்திருந்தனர். அத்தகைய களைப்பை முன்பெப்போதும் அவர்கள் உணர்ந்ததில்லை. அகவை மூத்துவிட்டதுபோல, எடைகொண்ட எதுவோ தோளில் அமர்ந்திருப்பதுபோல. நின்று நின்று மூச்சுவாங்கினர். தன் விழிநோக்கே கூரிழந்திருப்பதாக அஸ்வத்தாமன் உணர்ந்தான். வாய் உலர்ந்திருந்தது. அவ்வப்போது அந்த ஓடைநீரை அள்ளிக்குடித்தான். அது உடலெங்கும் கஸ்தூரி மணத்தை நிறைத்தது. மூச்சிலும் வியர்வையிலும் அந்த மணம் எழுந்தது.
விலங்குகளின் மணம் அது. காமம்கொண்ட விலங்கின் மணத்தையே மானுடர் மிகுதியாக நறுமணப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். கஸ்தூரி, புனுகு… காமம்கொண்ட விலங்கு கட்டற்றதாக ஆகிவிடுகிறது. அது மதம் என்றே அழைக்கப்படுகிறது. உயிர்கள் சூழ்வின் எல்லைகளைக் கடந்து உயிரின் எல்லைகளை நாடுகின்றன. அவற்றுக்குள் இருந்து மேலும் பெரிய ஒன்று பிதுங்கி ததும்பி வெளிவருகிறது. அவை ஆற்றல் மிகுகின்றன. சூழ்ந்திருக்கும் பருப்பொருட்களால் கட்டுண்டிருக்கிறோம் என உணர்கின்றன. அவற்றின்மேல் மோதுகின்றன. யானைகள் பாறைகளில் முட்டி மரங்களைப் பிழுதெறிந்து மண்ணைக் கிளறிக்குவித்து சின்னம் விளிக்கின்றன. கரடிகள் தரையை கீறிப்புரட்டுகின்றன. ஓநாய்கள் வானை நோக்கி ஊளையிட்டு அறைகூவுகின்றன. புனுகுப்பூனை கூண்டுக்குள் சுற்றிச்சுற்றி வருகிறது. முடிவிலியை வட்டங்களாக அறிகிறது. அது முடிவின்மையில் தன்னை எய்துகொள்வதன் மணம்போலும் இது.
அஸ்வத்தாமன் “ஸ்தூனகர்ணனைப் பற்றி ஒரு கதை உண்டு” என்றான். அதன்பின்னரே அதை ஏன் சொன்னோம் என வியந்தான். இருவரும் அப்படி ஏதேனும் சொல் செவியில் படுவதை விழைந்திருந்தனர் போலும். அவர்களின் விழிகள் ஆவல்கொண்டன. அவன் தயங்கி பேசாமல் நடந்தான். அந்தக் கதை உண்மையில் அப்போது நினைவில் திரளவில்லை. ஆகவே எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. அந்தத் தருணத்தில் சொல்லின்மை பொருளின்மையாக உருக்கொண்டது. அதை கடக்கும்பொருட்டே அவன் பேசலுற்றான். காலடியோசைகள் எழ அவர்கள் நடந்தார்கள். அவர்கள் இருவரும் கேட்கவில்லை என்றாலும் சொல்லின்மையாக அவர்களின் உசாவல் அவனைச் சூழ்ந்து வந்தது.
“இந்தக் கதையை எங்கே கேட்டேன் என நினைவில்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “என் அவையில் ஏதோ சூதன் பாடினான் என்று படுகிறது… நெடுங்காலம் முன்பு.” அவ்வரிகளினூடாக அவன் அக்கதையை திரட்டிக்கொண்டான். மெல்லிய விளிம்புகளே தட்டுப்பட்டன. “இங்கு வாழும் கந்தர்வனின் முதற்பெயர் ஸ்தூனகர்ணன். இங்குள்ள கந்தர்வர்குலத்தில் பிறந்தவன். காட்டில் வாழும் அஜபாலர் என்னும் தொல்குடியினர் தங்களை கந்தர்வர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.” அவன் அதைச் சொன்னதுமே கதை திரண்டு வந்தது. அது அவன் கேட்டறிந்ததா அப்போது உள்ளத்தில் தோன்றியதா என அவனே வியந்துகொண்டான். ஆனால் அவன் ஒருபோதும் கதைகளை கற்பனை செய்துகொண்டதில்லை. அத்தருணத்தில் அக்கதையை அவனுள் நின்று எவரோ உருவாக்கிக்கொண்டார்கள்.
“நெடுங்காலம் முன்பு அவர்களின் மூதன்னை ஒருத்தி தேன் தேடி இக்காட்டுக்கு வந்தாள். இங்கே உள்ள சுனை ஒன்றில் அவள் நீராடுகையில் அவளைக் கண்ட ஸ்தூனன் என்னும் கந்தர்வன் ஒருவன் வண்டு வடிவில் வந்து அவள் காதருகே இசைபாடி அவளை மயங்கச்செய்தான். ஒரு புனுகுப்பூனையாக வந்து தன் காமத்தின் மதத்தை நீரில் கலந்து அவள் உடல்மேல் படியச் செய்தான். அவள் காமம் கொண்டபோது பெரிய காதுகள் கொண்ட முட்டன் ஆடாக வந்து அவளை புணர்ந்தான். அவள் பெற்ற மைந்தன் ஆடுபோல நீண்ட காதுகள் கொண்டிருந்தான். அவள் ஸ்தூனனிடம் பன்னிரண்டு மகன்களை பெற்றாள். அவர்கள் பிற குடியின் பெண்டிரைக் கவர்ந்து வந்து இங்கே காட்டுக்குள் ஒரு குலமாக பெருகினார்கள். அஜபாலர்கள் காட்டு ஆடுகளைப் பழக்கி அவற்றை மேய்க்கக் கற்றவர்கள். அவர்களின் குலம் பெருகியது.”
“அஜபாலர்கள் அந்த மூதன்னை முதுமையுற்று மறைந்தபோது அவளை அச்சுனை அருகே இருந்த குகைக்குள் கொண்டுசென்று அங்குள்ள சுவர்ப்பொந்தில் வைத்தனர். அவள் அங்கே சுவரோவியமாக படிந்தாள்” என்று அஸ்வத்தாமன் தொடர்ந்தான். “அக்குடியில் பிறந்த ஸ்தூனகர்ணன் பிற அனைவரையும்விட பெரிய காதுகள் கொண்டிருந்தான். ஆகவே அவனிடம் கந்தர்வனின் கூறு மிகுந்திருப்பதாக குலமூத்தார் கூறினர். இளமையிலேயே அவன் மிகையாற்றல் கொண்டவனாகவும் ஆகவே எதையும் மதிக்காதவனாகவும் பிற அனைவரையும் தனக்குரியவர்களாக எண்ணுபவனாகவும் இருந்தான். அவன் குடித்தலைவரின் மைந்தனாகப் பிறந்தமையால் அவர்களால் அவனை கட்டுப்படுத்தவும் இயலவில்லை.”
தன் ஆறாவது அகவையில் கந்தர்வபூசையின்போது குலமூதாதைக்கு வழங்கப்பட்ட முதல்வணக்கச் சடங்கை தனக்கு அளிக்கவேண்டும் என்று கோரி பூசகரின் தட்டை தன் காலால் தட்டி வீழ்த்தினான். தன்னைவிட மூத்த இளைஞர்களை அடிப்பதும் அவர்கள் பிடிக்கவந்தால் மரங்களில் ஏறி தப்பிவிடுவதும் நீர்நிலைகளுக்குள் மூழ்கி மூச்சடக்கம் செய்து நாள்முழுக்க பதுங்கியிருப்பதும் அவன் வழக்கம். தனக்குத் தேவையானதை அவன் எடுத்துக்கொண்டான். எதிர்த்தவர்களை தாக்கினான். முதியோர், தலைவர் என்றுகூட பார்க்கவில்லை. அவனை குடிநீக்கம் செய்யவேண்டுமென்று கோரினர் குடிகள். ஆனால் அவனுடைய ஆற்றலை குடித்தலைவர்கள் உள்ளூர விரும்பினர். ஒருநாள் அந்த மீறல் அடங்குமென்றும் அன்று குடிக்கு ஆற்றல்மிக்க தலைவனாக அவன் எழுவான் என்றும் நம்பினர். ஆகவே அவனை பொறுத்துக்கொண்டனர்.
அந்நாளில் ஒருமுறை ஸ்தூனகர்ணன் சுனையில் நீராடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்தான். அவள் அவனுக்கு அன்னைமுறை கொண்டவள். ஆனால் அவன் நீரில் பாய்ந்து அவளை இழுத்துக்கொண்டுசென்று அருகிலிருந்த புதரில் காமம் நுகர்ந்தான். அவள் கதறி அழுதபடி திரும்பிச்சென்று தன் குடியினரிடம் செய்தியை தெரிவித்தாள். குடியினர் திரண்டு அவனை பிடிக்க முயன்றனர். பிடிபட்டால் தன்னை கொன்றுவிடுவார்கள் என ஸ்தூனகர்ணன் உணர்ந்தான். அதைப்போல ஊரே திரண்டு வந்து அவனை வேட்டையாடியதுமில்லை. ஆகவே அவன் உள்காட்டுக்குள் தப்பி ஓடினான். அவர்களிடமிருந்து ஒளிந்து ஒளிந்து சென்றுகொண்டே இருந்தான். சாயாகிருகத்தைக் கடந்து காலகத்துள் நுழைந்தான். அவனை துரத்திவந்தவர்கள் நின்றுவிட்டனர்.
அவன் காலகத்தின் உள்ளே சென்றான். அங்கிருந்த சுனையை சென்றடைந்தான். மலையின்மேலிருந்து கீழே சரிந்து அங்கே பரவியிருந்த பாறையில் விழுந்த அருவியால் சீரான நீள்வட்டமாக வெட்டப்பட்டிருந்த சுனையின் விளிம்பில் நின்றபோதுதான் அது எத்தனை ஆழமானதென்று உணர்ந்தான். அடித்தட்டில் பிளந்து மேலும் ஆழத்துக்குச் சென்ற மலைப்பாறையை மிக அருகே எனக் காணமுடியுமளவுக்கு நீர் தெளிந்திருந்தது. அதில் நீராலானவை போன்ற இறகுகளுடன் நீண்ட மீசைகளுடன் எட்டு பொய்விழிகளுடன் நீந்தும் தீட்டப்பட்ட இரும்பு நிறமுள்ள மீன்களைப் பார்த்து அது குடிநீர் என்பதை உறுதிசெய்தபின் கால்மடித்து அமர்ந்து அள்ளிக்குடித்தான். நீர் சற்று எடைகொண்டதாகவும் குளிராகவும் இருந்தது. இரும்பை நக்கிப்பார்த்ததுபோல நாவில் அதன் சுவை தெரிந்தது.
சுனைக்கு அப்பாலிருந்த குகையிலிருந்து நிழல் ஒன்று நீரின்மேல் விழுந்ததுபோல் தோன்றியது. ஆனால் நீர்ப்பரப்பில் அலையெழவில்லை. அவன் எழுந்தபோது நீருக்குள் இருந்து ஒருவன் எழுந்தான். அவன் எழுந்தபோதும் அலைச்சுழல் உருவாகவில்லை. அவன் நீரின் மேலேயே நின்றான். “நான் உன் மூதாதையான ஸ்தூனன்…” என்று அவன் சொன்னான். “இங்கு வருபவர்களை நான் சுழற்றி திசை மறக்கவைத்து அக்குகைக்குள் உள்ள முடிவிலா பிலத்திற்குள் கொண்டுசென்று சேர்ப்பேன். அவர்கள் அங்கே விழியில்லாத வண்டுகளாக மாறி வாழ்வார்கள்.”
ஸ்தூனகர்ணன் அஞ்சாமல் அவனை நோக்கி “என்னை ஏன் அவ்வண்ணம் செய்யவில்லை?” என்றான். “நீ என் வடிவில் இருக்கிறாய்” என்று ஸ்தூனன் சொன்னான். அப்போதுதான் அவன் தன் நீர்ப்பாவை எனத் தோன்றுவதை ஸ்தூனகர்ணன் கண்டான். “என் நீர்ப்பாவை எழுந்து வந்து பேசுவதுபோல் உள்ளது” என்றான். “ஆம், ஆகவே உனக்கு அருள்கிறேன். நீ விழைவதென்ன?” என்றான். “அந்தப் பழியிலிருந்து நான் தப்பவேண்டும்” என்றான் ஸ்தூனகர்ணன். “அவர்களிடமிருந்தா, அப்பழியிலிருந்தா?” என்று ஸ்தூனன் கேட்டான். “அப்பழி என்னை தொடாமலாகவேண்டும்” என்றான் ஸ்தூனகர்ணன். “எனில் அந்தச் சுனைநீரில் மூழ்குக…” என்று ஸ்தூனன் சொன்னான்.
நீரை குனிந்து நோக்கிய ஸ்தூனகர்ணன் அங்கே ஒரு புரவியின் முகம் தெரிவதை கண்டான். “யார் அது?” என்றான். “அந்த உருவை நீ அடையலாம்… உன்னை அது பழியிலிருந்து காக்கும்” என்றான் ஸ்தூனன். “இந்தச் சுனை வரவிருக்கும் கலியுகத்திற்குள் செல்வதற்கான கரவுப்பாதை. நீராலான வாயில்கதவுகள் கொண்டது. அறிக, கலியுகத்தில் உருமாற்றமே பொதுநெறி! ஒவ்வொருவரும் அந்தந்த தருணத்திற்கு ஏற்ப உருமாறிக்கொண்டே இருப்பார்கள். ஏனென்றால் கலியுகத்தில் நெறிகள் எழுதப்பட்டுவிடும். ஆகவே மாற்றமில்லாதவையாகும். எனவே மானுடர் மாறிக்கொண்டே இருப்பார்கள். பாறைகளினூடாகவும் மலைச்சரிவினூடாகவும் நிகர்நிலத்திலும் ஓடும் ஆறு உருமாறிக்கொண்டிருப்பதுபோல. காற்றில் சுடர் நடனமிடுவதுபோல. கலியுகத்தில் மானுடருக்கு ஆளுமை என ஒன்றில்லை. வாயில்களுக்கும் வழிகளுக்கும் ஏற்ப உருமாறி கடந்துசென்றுகொண்டே இருப்பார்கள் அவர்கள்” என்றான் ஸ்தூனன்.
மேலும் ஸ்தூனன் சொன்னான் “கிருதயுகத்தில் மானுடர் நெறிகளை அறியவில்லை. அவர்களிடம் இயல்பாகவே நெறிகள் திகழ்ந்தன. திரேதாயுகத்தில் நெறிகளை வாழ்ந்துநிறைந்தோர் அறிந்து இளையோருக்கு சொன்னார்கள். துவாபர யுகத்தில் நெறிகளும் நெறிமீறல்களும் மோதின. கலியுகத்தில் நெறியும் நெறியின்மையும் மயங்கி ஒன்று பிறிதென்றாகும். நெறியை நெறிமீறலாக மருவவும் நெறிமீறலே நெறியென்று நிறுவவும்படும். கிருதயுகத்தில் மானுடர் பாறைகள் போலிருந்தனர். பூம்பொடி படர்ந்திருந்தாலும் மென்சேறு பூசப்பட்டிருந்தாலும் அது அசையாப் பாறை, திரேதாயுகத்தில் அவர்கள் மரங்களைப் போலானார்கள். கிளை விரித்தாலும் வேர்கொண்டிருந்தனர். துவாபர யுகத்தில் அவர்கள் விலங்குகள் போலானார்கள். காட்டுநெறிகளால் ஆட்டுவிக்கப்பட்டார்கள். கலியுகத்தில் அவர்கள் முகில்களாக மாறிவிடுவார்கள். உருவின்மையே அவர்களின் உருவம் எனக் கொள்வார்கள்.”
“ஒன்று பிறிதொன்றென மயங்குவது பருப்பொருள்வெளியில் இயல்வதல்ல. ஆனால் பருப்பொருள்வெளியை நுண்பொருள்வெளியென ஆக்கும் மொழியால் அது இயல்வதே. ஆகவே கலியுகத்தில் மொழி வளர்ந்து வளர்ந்து பேருருக்கொள்ளும். ஒன்றுக்குமேல் ஒன்றென பல அடுக்குகளாகும். பரா என்றும் பஸ்யந்தி என்றும் மத்யமா என்றும் வைகரி என்றும் பிரிந்தும் பின் இணைந்தும் விளையாடும். மொழி மண்போல தானும் ஒரு மண் எனக் காட்டும். மானுடரின் கால்கள் அதன்மேல் ஊன்றி நின்றிருக்கும். அன்று மரங்களின் வேர்கள்கூட அதில் பரவி உயிர் கொள்ளும். ஒவ்வொன்றையும் அந்த நதியில் நீராட்டி எடுத்தால் உருமாறியிருக்கும்.”
“அந்நதியை வாணி என்பார்கள். அதன் நீர் ஊறியெழும் இச்சுனையை ஃபாஸிதம் என்கிறார்கள். இது அனைத்தையும் உருமாற்றிக்கொள்ளும். இந்த இடரை நீ கடப்பதற்குரிய உருமாற்றத்தை இதிலிருந்து நீ அடைவாய் என்று ஸ்தூனன் சொன்னான். ஸ்தூனகர்ணன் அந்தப் புரவியுருவை நோக்கியபடி தயங்கி அமர்ந்திருந்தான். “அது உன்னுள் இல்லாத எதையும் காட்டுவதில்லை” என்று ஸ்தூனன் சொன்னான். “ஆம்” என்றபின் ஸ்தூனகர்ணன் நீரிலிறங்கி மும்முறை மூழ்கி மேலே எழுந்தான். எந்த மாறுதலையும் உணரவில்லை. ஆனால் சேற்றில் நடந்தபோது அவன் காலடிகள் குளம்புத்தடங்களாக பதிந்தன. அவன் குனிந்து நோக்கியபோது உடலின் கீழ்ப்பாதி புரவியுடையதாக மாறிவிட்டிருப்பதை கண்டான்.
குளம்படிகள் முழங்க அவன் தன் குடியினரிடம் திரும்பி வந்துசேர்ந்தான். அவனை சூழ்ந்துகொண்ட குடியின் வீரர்களை பொருட்படுத்தாமல் நடந்துசென்று மன்றின் நடுவே நின்றான். “சொல்லுங்கள் குடித்தலைவர்களே, புரவிக்குரிய நெறியல்லவா என்னை கட்டுப்படுத்தும்? என் இடை புரவிக்குரியது” என்று அவன் சொன்னான். அவன் குடித்தலைவர்கள் திகைத்து அமர்ந்திருந்தார்கள். “புரவி காமம் பயில்வது அன்னையரிடம் என்று அறியாதவர்களா நீங்கள்?” என்று அவன் மீண்டும் கூவினான். அவர்களில் முதியவர் “ஆம், மானுடநெறிகளுக்கு கட்டுப்பட்டவை அல்ல புரவிகள்” என்றார். “விலங்குகளால் புணரப்பட்டால் பெண் கொள்ளும் ஒழிநோன்புகள் என்னென்ன என்று நோக்குக! அவற்றை அந்த அன்னை மேற்கொள்ளட்டும். இப்புரவியுடலன் நம் நெறிகளுக்கு அப்பாற்பட்டவன்” என்றார்.
அவன் புரவியின் உடலுடன் அதன்பின் காடுகளில் அலைந்தான். விழைந்த பெண்ணை புணர்ந்தான். அதில் எந்த குருதிக்கணக்கையும் அவன் கொள்ளவில்லை. அவனிடமிருந்து தப்பும்பொருட்டு பெண்கள் எப்போதும் படைக்கலங்களை ஏந்திய துணைவருடனேயே வெளியே சென்றனர். இரவும் பகலும் குடிக்கு காவலிடப்பட்டது. அவனை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் குடிமூத்தோர் திகைத்தனர். ஒருநாள் அவனுக்கும் குடித்தலைவர்களுக்கும் போர் நிகழ்ந்தது. அவன் மூத்த குடித்தலைவர் ஒருவரை கொன்றான். அப்பழியிலிருந்து தப்பும்பொருட்டு பாய்ந்தோடி வந்து அச்சுனைக்குள் இறங்கி வேங்கை என மீண்டான். மூத்தோரைக் கொன்று எழுவதே வேங்கையுலகத்து நெறி என்பதனால் அவன் குடியினர் அவனை தண்டிக்க இயலவில்லை.
அவன் தருணங்களுக்கேற்ப உருமாறிக்கொண்டே இருந்தமையால் அவனை அவர்கள் ஒன்றும் செய்ய முடியாமலாயிற்று. அவனுடைய அச்சுனையினூடாக அவன் கலியுகத்திற்குச் சென்று மீண்டான். அவன் கலியுகத்தினனாக வாழ அவர்கள் துவாபர யுகத்தவர்களாக அவனை புரிந்துகொள்ளமுடியாமல் தவித்தனர். பின்னர் எளியோர் எப்போதும் கண்டடையும் வழியை கண்டடைந்தார்கள். அவனை தெய்வமாக்கி அடிபணிந்தனர். அவர்களின் வேண்டுதலுக்கு அவன் இரங்கினான். “எங்கள் குடிகாக்கும் தெய்வமாக இச்சுனைக்கரையில் அமைக, எங்கள் குடிகள் தலைமுறை தலைமுறையாக அளிக்கும் பலிகளையும் கொடைகளையும் பெற்றுக்கொள்க!” என்றனர். பலிகளினூடாக அவன் தெய்வமானான். அந்தச் சுனையின் கரையில் அவனுக்கு கற்சிலை வடிவை அளித்து வழிபட்டனர்.
“ஸ்தூனகர்ணன் அச்சுனைக்கரையில் இன்று தெய்வமாக நிலைகொள்கிறான்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அவன் கந்தர்வனாகிய ஸ்தூனனின் மாற்றுரு. அச்சுனையும் காடும் உருமாற்றத்திற்குரியவை எனப்படுகின்றன. அக்காட்டிற்குள் நுழைபவர்களை அவன் வழிசுழற்றி கொண்டுசெல்கிறான். அவர்களுக்கு அச்சுனையை காட்டுகிறான். அதில் அவர்கள் மிக விழையும் முகம் தெரியும். அதை பார்த்தபின் அதுவாக மாறாமலிருக்க இயலாது.” கிருதவர்மன் புன்னகைத்து “சூதர்கள் அக்கதைகளைக் கொண்டு விளையாடுவார்கள். அவ்வாறு தெரியும் உருவம் நாம் மிக வெறுப்பதாகவும் இருக்கும் என்பார்கள்” என்றான்.
கிருபர் “ஒவ்வொரு பரப்பிலும் இத்தகைய பிலங்கள் உள்ளன. இவை காலத்தில் அமைந்த பிலங்கள். இங்கிருந்து எந்த யுகத்திற்கும் நம்மால் சென்றுவிடமுடியும்” என்றார். அஸ்வத்தாமன் “கலிகாலம் ஒரு நச்சுக்கடல், அது அப்பெருக்கின் ஒரு துளி” என்றான். கிருதவர்மன் “அரசர் அங்கிருக்கிறாரா?” என்றான். அஸ்வத்தாமன் “அங்குதான் இருக்கவேண்டும்” என்றான். கிருபர் “ஆம், ஐயமில்லை. அங்குதான் சென்றிருக்கவேண்டும்” என்றார்.