எழுத்தாளன்,சாமானியன் -ஆர்.அபிலாஷ்

A Writer’s Suicide

எழுத்தாளனும் சாமானியனும்

எழுத்தாளனும் சாமானியனும் என்னும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாக ஆர்.அபிலாஷ் இக்குறிப்புகளை எழுதியிருக்கிறார்

எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (1)

எழுத்தாளனை நம் சமூகம் அங்கீகரிக்க தவறுகிறதா? (2)

இவை அபிலாஷின் தரப்புகள். என் அவதானிப்பு என சில சொல்வதற்குண்டு. அபிலாஷ் கல்லூரிப் பேராசிரியர். ஓர் அரசியல்வாதிக்கு, அதிகாரிக்கு இலக்கியவாதி என்பது மேலதிகப்பெருமை. தமிழகத்தில் எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத மதிப்பு ரவிக்குமாருக்கும் சு.வெங்கடேசனுக்கும் தமிழச்சி தங்கபாண்டியனுக்கும் உருவாவது அப்படித்தான். [ஆனால் அந்த அரசியல்களமும் முக்கியமானது  திமுக, விசிக,கம்யூனிஸ்ட் கட்சிகளின் பின்புலம். பாரதிய ஜனதாவில் இருந்திருந்தால் அதுவே எதிர்மறை அம்சமாக ஆகியிருக்கும்] நாட்டில் எத்தனையோ போலீஸ் அதிகாரிகள் இருக்க திலகவதிக்கு மேலதிக மணிமுடி இருப்பது இலக்கியத்தால்

ஆனால் சிறியவேலைகளில் இருப்பவர்களுக்கும் வேலையில்லாதவர்களுக்கும் தொழில்செய்பவர்களுக்கும் அப்படி அல்ல. நான் குமாஸ்தாவாக இருந்தேன். நான் எழுத்தாளன் என எங்குமே காட்டிக்கொள்ள மாட்டேன். எனக்கு தமிழ் வாசிக்கத்தெரியும் என்பதே என் அலுவலகத்தில் பலருக்குத்தெரியாது. என்னைக் காத்துக்கொள்ள ‘மலையாலியான தொழிற்சங்கவாதி’ என்ற பிம்பத்தையே வைத்திருந்தேன். அதைமீறியும் அவ்வப்போது சில அதிகாரிகள் ‘இந்த கதை எளுதுத வேலையெல்லாம் இங்கிண வச்சுக்கப்பிடாது” என்று அதட்டியதுண்டு

எழுத்தாளர் என்பதனால் நான் இழிவுசெய்யபப்ட்ட தருணங்களே தமிழகத்தில் மிகுதி. மதிப்பு கிடைப்பது சினிமாவில் மட்டுமே. இது சினிமாவுடன் தொடர்புள்ள எழுத்தாளர்களுக்குத் தெரியும். சங்கரும் மணிரத்னமும் பாலாவும் ஒவ்வொருமுறையும் என்னை வாசல் வந்து வரவேற்பதும் வழியனுப்புவதும் நான் எழுத்தாளன் என்பதனால்தானே ஒழிய சினிமாக்காரன் என்பதனால் அல்ல. மற்றபடி தமிழகத்தில் சாமானியர்களுக்கு எழுத்தாளன் என்றால் ஒருவகை கிறுக்கன், பணமில்லாதவன்.

அபிலாஷ் சொல்வது ஒன்று மிகச்சரியானது. ரசனையில்லாமல் புரிதலும் இல்லாமல் படித்துத் தள்ளி ஆணவத்தை மட்டுமே பெருக்கிக்கொண்டவர்களை இலக்கியச் சூழலில் அடிக்கடிக் காணலாம். “நான் ஒரு ஆளுதான்” என்ற பாவனையையே வெவ்வேறு சொற்களில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். எழுத்தாளன் உச்சகட்ட வெறுப்பையும் அவமதிப்பையும் இவர்களிடமிருந்தே பெறுவான். அடுத்தபடியாக எழுதி எழுதிப்பார்த்து ஒன்றும் பேராத சோட்டாக்களிடமிருந்து

ஜெ

***

முந்தைய கட்டுரைபாரியின் மொழியாக்கக் கதைகள் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅபிக்கு வாழ்த்து- பாவண்ணன்