மராட்டியப் பாறைச்செதுக்கு ஓவியங்கள் – பிபு தேவ் மிஸ்ரா

இந்தியாவில் கிடைத்த பன்னிரெண்டாயிரம் ஆண்டுகள் பழமையான பாறைச் செதுக்கோவியங்கள் அதன் உலகளாவிய இணைப்பைக் காட்டுகிறது. படங்கள் கீழே

அக், 1, 2018, சமீபத்தில் பி.பி.சி, மகாராஷ்டிராவிலுள்ள ரத்தினகிரி மற்றும் ராஜபுரா பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாறைச்செதுக்குகள் (Petroglyphs) குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தது. பாறைகளில், சமநில மலைமேடுகளில் பொறிக்கப்பட்ட இந்த பாறைச் செதுக்குகள் அங்கு மிகப்பெரிய அளவில் காணப்படுகின்றன.


எண் 1: ரத்தினகிரி, மகாராஷ்டிராவிலுள்ள கொங்கன் கடலோர பகுதியைச் சேர்ந்தது

மகாராஷ்டிரா மாநிலத் தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநர், தேஜாஸ் கார்ஜ், பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் ”பூர்வாங்க ஆய்வில் இவை பத்தாயிரம் வருடங்கள் பழமையானவை எனத் தெரிகிறது ” என்கிறார். இறுதி பனியுகத்தின் முடிவில் இளம் ட்ரையஸ் காலத் துவக்கத்தில் அதாவது  ஊழிக்கால அழிவிற்குப் பிறகு தோன்றிய மனிதக் குல நாகரிகத்தின் துவக்கத்தில் இத்தகைய செதுக்கோவியங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சில பாறைச் செதுக்கோவியங்கள் உள்ளூர் மக்களுக்கு நன்கு அறியப்பட்டதாக உள்ளன. அவர்களால் அவை புனிதமாகக் கருதப்படுகின்றன. இந்த இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகளில் பல ஓவியங்கள் புழுதியாலும் மண் அடுக்குக்களாலும் மூடப்பட்டுவிட்டன. கண்டுபிடிக்கப்பட்ட கற்பாறைச் செதுக்குகள் அனைத்தும் சுதிர் ரிஷ்பூட் மற்றும் மனோஜ் மராத்தே இருவரின் தலைமையிலான குழுவின் விடாமுயற்சியால் கண்டெடுக்கப்பட்டவ. அவர்கள் இப்பகுதியில் சில ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டபின் மேலும் ஊக்கத்துடன் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

நான் அந்தப் படங்களை முதன்முதலில் பார்த்தபோது உலக முக்கியத்துவம் வாய்ந்த சில புனிதச் சின்னங்களின் சித்தரிப்புகளை மூன்று ஓவியங்களில் காணமுடிந்தமையால் மிகுந்த ஆச்சர்யமடைந்தேன். அவைகள் அனைத்தும் அடுத்தடுத்து பின் தோன்றிய நாகரிகங்களின் கலைகளிலும் கலாச்சாரங்களிலும் காணப்படுகின்றன.

சிறகுள்ள வண்டு (The Winged Scarab):

எண் 2: பாறை சிற்பம், மகாராஷ்டிரா, இந்தியா, பறக்கும் வண்டு சித்திரம், மூலம்: http://bbc.com

எண் 3: துட்டன்கம்முன் கவசத்திலுள்ள பறக்கும் வண்டு, எகிப்து அருங்காட்சியகம்,கைரோ

இந்தப் பெரிய பாறைச்செதுக்கோவியம் ஒரு சிறகுள்ள வண்டு சித்திரம் போல தோன்றுகிறது, இது பழங்கால எகிப்தின் பிரசித்தி பெற்ற வண்டுச் சின்னத்தோடு ஒத்துப்போகிறது. இவை எகிப்து நாகரத்தில் பிறப்பு/இறப்பை குறிக்கும் குறியீடுகள். இவை அந்நாட்டின் கல்லறை வரைபடங்களிலும், சிற்பங்களிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் காணக் கிடைக்கின்றன.. இதன் குறுவடிவங்கள் அலங்கார மண்பாண்டங்களிலும் வார்ப்புகளிலும் தாயத்துகளிலும் நகைகளிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இது முத்திரையாகவும் பயன்பட்டிருக்கிறது.

எகிப்தியர்களின் புனித வண்டைக் கெப்ரி (இங்கே இருப்பதற்காக வந்தவன்) என்றழைத்தனர், அதனை விடியல் சூரியனாக வழிபட்டனர் . எகிப்தியத் தொன்மங்களின்படி பெண் கடவுளான ஐசிஸ், சூரியக் கடவுளான கெப்ரியை (விடியல் சூரியன்), தந்திரமாக அதன் பிற பெயர்களான ரா (மதிய சூரியன்) மற்றும் அட்டும் (மாலை சூரியன்) என்பனவற்றை வெளிப்படுத்தவைத்த கதை ஒன்றுள்ளது.வண்டு சாணி உருண்டையை மண்ணில் ஊர்ந்து உருட்டிச் செல்வது போல் கெப்ரி சூரியனை ஒவ்வொரு நாளும் ஆகாயத்தில் உருட்டிசென்று மாலையில் அதை அடிவானில் தள்ளி இரவைல் புதுப்பித்து மீண்டும் மறு நாள் உதய வானிற்கு கொண்டு வருவதாக நம்பினர். இதுவே புனித வண்டை ஜனன, மரண மறுபிறப்போடு இணைக்கிறது.

இந்தியாவில் கிடைத்த பாறைச்செதுக்கு உருவத்திற்கும் எகிப்து கெப்ரிக்கும் இடையேயான ஒப்புமை ஆச்சரியமூட்டுகிறது. இந்தியாவில் கிடைத்த இந்த உருவம் தெளிவாக இல்லை என்றாலும் பறவைக் கோணத்தில் பார்த்தால் இதை எளிதில் அடையாளம் காணலாம் . கீழ அதன் படம்

.

எண் 4: ரத்தினகிரி பாறை சிற்பம் புனித வண்டை சித்தரிப்பது, மூலம்: http://bbc.com

இந்தச் சிறகுள்ள புனித வண்டு நம்மை வியக்கவைக்கின்றது.. பனியுகச் சகாப்தம் முதல் இருந்துவரும் பண்டைய எகிப்தியக் கலாச்சாரத்தின் புகழ்மிக்க இந்தக் குறியீட்டின் தொடக்கம் பண்டைய இந்தியாவிலிருந்ததா? அல்லது , இளம் ட்ரையஸ் (younger dryas) (கி.மு.10900 – கி.மு.9700) காலத்தில் ஒரு மாபெரும் வால்மீனின் சிதறல்கள் பூமிமீது தாக்கியதால் அழிந்துப்போனதாக கருதப்படும் ஒரு பொற்கால நாகரிகத்தின் மறைஞான எச்சங்களா ?

நாம் முன்பே அறிந்தது போல் இளம் ட்ரையஸ் வால்மீனின் தாக்கம் புவியில் கொடும் பனி அலையைத் தொடங்கி வைத்து அதன் பின், ஒன்றன்பின் ஒன்றாக நெருப்பு, வெள்ளம், கருப்பு மழை எனக் கொண்டு வந்து வட அமெரிக்காவின் பெரிய உயிரினங்கள் அழிவதற்கும், வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் அழிவதற்கும் காரணமாக அமைந்தது. கி.மு.9703 ல் இந்தப் பனிஉறைவுயுகம் எத்தனை விரைவாகத் தொடங்கியதோ அத்தனை விரைவாகவே முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்கான காரணங்களை தெளிவாக உய்த்தறிய இயலவில்லை. பனிக்காலத்திலிருந்து சற்று வெம்மையான உறைப்பனிக்காலத்திற்கான திடீர் மாறுதல் தொல் கலாச்சாரங்களில் ஊழி வெள்ளம் குறித்த பல தொன்மங்களுக்கு வழிகோலியது.

எண் 5: பன்னிரெண்டு ஆண்டுகள் பழமையான இந்தியப் பாறைச் சிற்பம் [குடாப்பி] எகிப்த் புனித வண்டு சித்தரிப்பு

மிருகங்களின் எஜமான்:

மற்றுமொரு அழகிய பாறைச் செதுக்கோவியம் இந்தியப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு மனிதன் இரண்டு மிருகங்களை அதன் பின்னங்காலைப் பிடித்துக் கொண்டு நிற்பது போன்றது இது. இது பண்டையக் கலையில் ஒரு முக்கியமான கருவாக இருந்துள்ளது. அறிஞர்கள் இதனை மிருகங்களின் எஜமான் (அ) மிருகங்களின் கடவுள் எனக் குறிப்பிடுகின்றனர்.

மிருகங்களின் எஜமான் என்பது ஒரு தெய்வ உருவாகவும், வீரவடிவாகவும், காட்டிற்கு அரசனாகவும், எல்லா மிருகங்களின் எஜமானனாகவும் கருதப்பட்டது. அத்தகைய உருவம் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம் (பெண் என்றால் மிருகங்களின் எஜமானி). இந்தச் சின்னம் பொதுவாக இரண்டு மிருகங்களை இரண்டு கைகளாலும் பிடித்தது போல் இருக்கும். இந்த குறியீடு நமக்கு உணர்த்துவது யாதெனில் அந்த மனிதன் (கடவுள்/வீரன்) மிக வலியவனாகவும் , எத்தகைய காட்டு மிருகங்களையும் அடக்கியாளும் வல்லமை கொண்டவனாகவும் இருந்தான் என்பதுதான்.

ஒரு மனிதன் இரண்டு மிருகங்களை அதன் பின்னங்காலையோ/வாலையோ பிடித்திருப்பது போன்ற குறியீட்டு உருவமைப்பு கிழக்கிலும், எகிப்திலும் பரவலாகிய ஒன்று. அதன் ஆதி உருவமைப்புக் கெபல் எல்-அராக் (Gebel el-Arak)ல் கிடைத்த பழமையான கத்தியில் காணக்கிடைக்கிறது. அது கி.மு.3450ல் எகிப்தில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், வாழ்ந்த இரண்டாம் நகுயடா (NaqadaII) மன்னனின் காலமாகும். மிருகங்களின் எஜமானியின் (பெண்) முக்கிய உருவகம் பழம்பெரும் கிரேக்க உலோகம், தந்தம், மட்பாண்டம்,நகைகள் மற்றும் எட்ரஸ்கான் (Etruscan) கலை வேலைப்பாடுகளிலும் கி.மு எட்டாம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எண் 6: பாறை ஓவியம், மகாராஷ்டிரா, மிருகங்களின் எஜமான் சித்தரிப்பு [குடாப்பி]

எண் 7: மேசபட்டோமியாவிலிருந்த மிருகங்களின் எஜமான் தோற்றம். கி.மு. 9-8ம் நூற்றாண்டு. மெட்ரோபோலிட்டன் மியூசியம் ஆப் ஆர்ட், நியூ யார்க். மூலம்: http://www.my-favourite-planet.de/

எண் 8: மிருகங்களின் எஜமானி சிங்கத்தின் வாலைப்பிடித்துக் கொண்டு நிற்கும் சித்திரம். தங்கத் தகடு பதக்கம். கமிரோஸ், ரோட்ஸ். கி.மு. 720-650. அஷ்மோலியன் அருங்காட்சியகம், ஆக்ஸ்போர்டு. மூலம்: http://www.my-favourite-planet.de/

இரண்டு பெரிய மிருகங்களை (புலியாக இருக்கலாம்) பற்றிக் கொண்டவாறு உள்ள மிருகங்களின் எஜமானனான மற்றுமொரு பாறைச் செதுக்கோவியம் ரத்தினகிரியில் கிடைத்துள்ளது. இவை சிந்து சமவெளி முத்திரை படங்களிலுள்ள சித்தரிப்பை நினைவூட்டுவதாக உள்ளது. கி.மு.2600.

எண் 9: ரத்தினகிரி பாறை ஓவியம், ஓர் புலி ஜோடியைத் தூக்கி நிற்கும் உருவம். மூலம்: http://bbc.com

எண் 10: மோகஞ்சதாரோ முத்திரை. மனிதன் இரண்டு புலிகளைத் தூக்கி நிற்கும் சித்தரிப்பு. மூலம்: https://www.harappa.com/

இந்த வகையான குறியீட்டுத் தன்மை கொண்ட பன்னிரெண்டாயிரம் ஆண்டுகள் பழமையான இந்தியப் பாறைச் செதுக்கோவியங்கள் தொல் பழங்காலத்திலிருந்தே இந்த குறியீடு இங்கு இருந்து வருகிறது என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது.

எண் 11: 12,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம், இந்தியா. சித்தரிப்பு – மிருகங்களின் எஜமான்

ஆனால் இத்தகைய ஆச்சரியத்திற்குண்டான சிக்கலான உருவகங்களும், குறியீடுகளும் அந்த ஆதிக்காலத்தில் தோன்றியனவா? இதில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஊகிப்பது போல் இவை பழங்கால வேட்டைக்காரர்கள் ஒன்றிணைந்து செய்த வேலையல்ல என நமக்கு தெரியவருகிறது. இந்த வகையான குறிப்பிடத்தக்கப் பாறை ஓவியங்களை யார் வரைந்திருப்பாரென்பதும் நமக்கு தெளிவாகத் தெரியாமல் இன்னும் ஆச்சரியத்திற்குள்ளான விஷயமாகவே உள்ளது.

மீனராசி சின்னம்:

தொடர்ந்து புதிரான வேறொரு பாறைச் செதுக்கோவியம் ரத்தினகிரியில் கிடைக்கிறது, வாரால் இணைக்கப்பட்ட இரண்டு மீன்கள் எதிர்த்திசையில் பார்த்துக் கொண்டிருக்கும் சித்திரம். இந்த அடையாளம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாம் மீனராசிக்கான விண்மீனைக் குறிக்க பயன்படுத்தும் சித்திரம். மீனராசியின் ஜோதிடச் சின்னம், நாணால் கோர்க்கப்பட்ட இரண்டு மீன்கள் எதிரெதிர் திசையில் நீந்திச் செல்வது.

நம்மிடமிருக்கும் தற்போதைய அறிதலின் படி, மீனராசியின் அடையாளம் முதன்முதலாக எகிப்திய சவப்பெட்டியின் மூடியில் கி.மு.2300 வருடம் கிடைத்தது. மேலும் முதன்முதலில் ராசி அறிகுறிகள், ஜோதிடக் கணிப்புகள் குறித்த அறிதல்கள் வெண்கலக் காலத்தில் மெசபடோமியாவில் ஆரம்பித்ததாக நம்பப்படுகிறது.

எண் 12: ரத்தினகிரி பாறை ஓவியம், மீனராசி விண்மீன் சித்திரம். மூலம்: https://www.bbc.com/ எண் 13:

ரோமானிய சகாப்தத்தில் மீனராசி சின்னத்தின் செதுக்குத் தோற்றம். மதிப்பு: கேலியான்3 சி.சி பி.ஒய்-எஸ்.ஏ 4.0

ஆனால் இந்தப் பாறைச் செதுக்கோவியங்களின் கண்டெடுப்புகள் அந்தப்புரிதல்கள் அனைத்தையும் மாற்றியமைக்கின்றன. தற்போது ஜோதிடக் கணிப்புகள் குறித்த அறிதல்களின் தொடக்கக் காலத்தை மேலும் பின்னோக்கிச் செல்லவைக்கிறது இது. இந்த ஓவியங்களின் காலம் கி.மு.10000 அல்லது அதற்கும் முன்பாகவும் இருக்கலாம். பனிக் காலத்தில் தழைத்தோங்கிய மறைந்த நாகரிகத்தின் மரபில் ஜோதிட ஞானங்களும் இருந்ததற்கான மெய்யான சாத்தியங்களையும் இவை எழுப்புகின்றன. மேலும் மேற்கு மகாராஷ்டிராவிலுள்ள பல பாறைச் செதுக்கோவியங்களை ஆராயும் போது மேலும் பிற பல ராசி சின்னங்களின் சித்தரிப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

எண் 14: ரத்தினகிரி பாறை ஓவியம், மீனராசியின் ஜோதிட அடையாளச் சித்தரிப்பு.

தொலைந்த நாகரிகம்:

நம்மால் கண்டெடுக்கப்பட்ட இந்தப் பாறைச்செதுக்கோவியங்கள் எல்லாம் கி.மு.10000 வருடத்தைச் சார்ந்தவை. அதாவது மனிதக் குலம் கொடுமையான இளம் ட்ரையஸ் சகாப்தத்தின் பேரழிவிலிருந்து மீண்டு மீண்டும் தழைக்கத் தொடங்கிய காலகட்டத்தில் இந்தப் பாறைச் செதுக்கோவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது நமக்கு அறிவுறுத்துவது யாதெனில் இவை இதனைச் செதுக்கியவர்களால் இந்த அடையாளங்களையெல்லாம் இறுதிப்படுத்தவேண்டும் என எழுதிவைத்தவை அல்ல. மாறாக அவர்கள் பனிக்காலத்தில் செழித்தோங்கிய பொற்கால ஞானத்தை தாங்களும் அடைந்துள்ளனர். ஆனால் அவை இளம் ட்ரையஸ் பிரளயத்தில் அழிவைச் சந்தித்ததுள்ளன. மீண்டும் அவை மீட்டெடுக்கப்பட்டன..

இந்தத் தொலைந்த நாகரிகத்திலிருந்து பிழைத்து வந்தவர்கள் உலகின் பல்வேறு இடங்களில் குடியேறியுள்ளனர். அதில் ஒன்றாகத்தான் இந்தியாவிலுள்ள கொங்கன் கடலோரப் பகுதி உள்ளது. தங்கள் முன்னாள் நாகரிகம் சிறு துண்டுகளாகச் சிதறியதை உணர்ந்த போது அவர்கள் பெரிய நினைவுச்சின்னங்கள் கட்டுவதைத் தவிர்த்தனர். மாறாக அவர்கள் இந்த வகையான புனிதச் சின்னங்களை இந்தக் கடினப் பாறை நிலப்பரப்புகளில் பொறிக்கத்தொடங்கினர். அவை பின்னாளில் திறந்த வெளி வழிபாட்டு பீடங்களாக மாறியுள்ளன.

ஆனால் ரத்தினகிரி பாறைச் செதுக்கோவியத்திலுள்ள புதிரான ஒரு விஷயம் என்னவென்றால் அதில் மிருகங்களின் ஓவியங்களைச் சித்தரித்த இடத்தில் நீர்யானை போன்ற மிருகங்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. இவை ஆப்ரிக்காவின் உள்நாட்டு விலங்குகள் , நம் நாட்டு விலங்குகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நான் கவனித்தவரையில் அங்கே இரண்டு கங்காரு படங்கள் உள்ளன. நாம் முன்னமே அறிந்தது போல் கங்காரு ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு உயிரினம், அது வேறெங்கும் காணப்படுவதல்ல.


எண் 15: ரத்தினகிரி பாறை ஓவியம், கங்காரு சித்தரிப்பு. மூலம்: http://bbc.com எண் 16:

ரத்தினகிரி நிலப்பரப்பு ஓவியம், கங்காரு சித்தரிப்பு. மூலம்: http://bbc.com

இந்தியநிலத்தில் இல்லாத விலங்கினங்கள் குறித்த சித்தரிப்பை இந்த ஓவியங்களில் இவர்கள் எவ்வாறு வரைந்தனர் என்ற கேள்வி எழுகிறது. அவர்களுக்குக் கடல் தாண்டி ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுடன் தொடர்பிருந்ததா? அல்லது இந்தியாவில் நீர்யானையும், கங்காருவும் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தனவா? அல்லது இந்த ஒழுங்கின்மைக்கு வேறு எதுவும் விளக்கங்கள் இருக்கின்றனவா?

இத்தகைய தருணங்களில் தான் நாம் நம் முன்னோர்களின் புனைவுகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. தமிழக மரபு நமக்கு மிகப் பழமையான ஒரு தீவு கண்டம் (குமரி கண்டம்) இந்தியப் பெருங்கடலில் இருந்தததை பற்றிச் சொல்கிறது. இந்தக் குமரிக்கண்டம்  முழுவதுமாகக் கடலால் விழுங்கப்பட்டுவிட்டது. இந்தத் தீவு-கண்டத்தின் பெரும் தடங்கள் அனைத்தும் கடலில் மூழ்கிவிட்டன. , சர்வதேச தமிழ் ஆய்வு சங்கத்தின் தலைவர் நா. மகாலிங்கம் , இந்த மூழ்கியழித்தல் நிகழ்ந்த காலத்தைக் கி.மு.9564 எனக் குறிப்பிடுகிறார். இவை இளம் ட்ரையஸ் பிரளயம் புவியை (கி.மு.10900 – கி.மு.9600) சூறையாடிய காலத்தோடு மிகவும் நெருங்கிப்போகிறது.

ஒருவேளை குமரி கண்டத்தின் வாழ்வியல் சூழல் நீர்யானையும், கங்காருவையும் உள்ளடக்கியதாக இருந்து, குமரி கண்டம் நீரில் மூழ்கும் போது இந்த உயிரினங்கள் இந்தியாவின் மேற்குக் கடற்பகுதியில் குடியேறியிருந்தால் அதன் முன்னாள் வாழ்விடங்களின் நினைவுகளை இந்தச் சமநிலங்களிலும், பாறைகளிலும் செதுக்கியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஒட்டுமொத்தமாக சொல்வதென்றால் இந்தப் பாறைச் செதுக்கோவியங்கள் நாகரிகத்தின் தொடக்கம் குறித்த தற்போதைய நம்பிக்கையை முற்றிலுமாக தலைகீழாக மாற்றும் தன்மை கொண்டதாக உள்ளன. ரத்தினகிரி பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மனித, மிருக உருவகங்களின் சித்தரிப்புகளும் அவைகள் அருகே உள்ளச் சிக்கலான கணித வடிவங்களும், நம் கடந்தகால மர்மமான மனிதக்குல காலத்தினை அறிந்து கொள்ள உதவுகின்றன.

முன்னர் 2012ல், கிட்டத்தட்ட அறுபது பாறைச்செதுக்கோவியங்கள் கொங்கன் பகுதியிலுள்ள மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டன. அவை ஏறக்குறைய கி.மு.7000-கி.மு.4000 ஆண்டுகள் என வரையறுக்கப்படுகின்றன. அதில் ஒரு வரைபடம் ”ஏகாதிபத்திய கழுகு” (Imperial Eagle – பேரரசின் சின்னம்) சின்னத்தோடு ஒத்துப்போகிறது. அவை வரலாற்றில் பல நாடுகளின் மரபு சின்னங்களில் நாம் காணலாம்.

எண் 17: சிந்துதுர்க் பாறை ஓவியம் பேரரசிற்குரிய கழுகு சின்னம் அடையாளம்.

இதன் மூலம் இந்த கொங்கன் கடற்பகுதியிலுள்ள பாறைச் செதுக்கோவியங்கள் உலகத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த முந்தைய நாகரிகத்தின் கலாச்சாரத்திலுள்ள புனிதச் சின்னங்களின் சித்தரிப்புகளைக் கொண்டிருக்கின்றன என்பது நமக்குக் தெளிவாகப் புலப்படுகிறது. காலமென்னும் மூடுபனியில் மறைந்துபோன நம் நாகரிகத்தின் ஆதி வேரைக் கண்டடைய இத்தகைய தொல்லோவியங்களின் மீது மேற்கொள்ளப்படும் முறையான ஆய்வு மிக இன்றியமையாதது.

மூலம் : பிபுதேவ் மிஸ்ரா

தமிழாக்கம் :ஜி.எஸ்.எஸ்.வி நவீன்

***

கட்டுரைக்கு உதவியவை:

  1. தொலைந்த நாகரீகத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலை தடயங்கள், அக்டோபர் 1, 2018, https://www.bbc.com/news/world-asia-india-45559300
  2. கிரஹாம் ஹான்காக், ”பாதாள உலகம் – மர்மமான நாகரீகத்தின் தொடக்கம்”, Three Rivers Press 2002
  3. “கற்கால பாறை கலை பகுதி, மகாராஷ்டிரா”, Vrushali Lad, 2012, http://www.themetrognome.in/places/neolithic-rock-art-sites-found-in-maharashtra.

மூலம்: பிபு தேவ் மிஸ்ரா, ஆங்கிலம், ஆசிரியரின் தனிப்பட்ட வலைப்பதிவு https://www.bibhudevmisra.com/

முந்தைய கட்டுரைஅபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3
அடுத்த கட்டுரைகற்காலத்து மழை-7