பயணக்கட்டுரைகள் ஒரு தொகுப்பு
பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பார்த்ததும் எங்கள் பயணம் உள்ளத்தில் நிறைவடைந்துவிட்டது. அதற்குமேல் ரத்தினகிரி செல்வதில் பொருளில்லை . பிறிதொரு முறை வெயில் எழுந்தபின்னர் ,அனேகமாக டிசம்பரில் இப்பகுதிக்கு வரலாம் என்று திட்டமிட்டோம். அன்று இத்தனை நீண்ட பயணமாக வராமல் புனா வரை ரயிலிலோ விமானத்திலோ வந்து அங்கிருந்து ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு இங்கே வந்தால் இன்னும் அணுக்கமாகவே இவற்றை பார்த்துவிடலாம்.
ரத்னகிரியிலும் மும்பை பகுதிகளிலும் கனமழை பெய்துகொண்டிருப்பதனால் பாறை செதுக்கு இருக்குமிடத்திற்கு செல்வது மிகக்கடினமானது என்றார்கள். இந்தப் பகுதிக்கு வருவதற்கே நாங்கள் நெடுந்தொலைவு நீருக்குள் கால் துழாவி நீந்தி வரவேண்டியிருந்தது பல இடங்களில் வழுக்கல். எவரும் விழுந்து கைகால்களை உடைத்துக்கொள்ளவில்லை என்பது ஒரு நல்லூழ்தான் [வழக்கமாக விழுவது கிருஷ்ணன்தான்]
[ராஜமாணிக்கத்தின் இரவு வகுப்புகள்]
அந்த சிற்றூர்காரர்கள் எங்களை அழைத்து சென்று அவர்கள் கிராமத்திற்கு நீர் வரும் வழியை காட்டினார்கள். குடோப்பி அமைந்திருக்கும் மலையடிவாரத்தில் அந்த மலையின் அடியிலிருந்த ஒரு பொந்தினூடாக உடைந்த பெருங்குழாயில் இருந்து எனன நீர் கொப்பளித்து வெளிவருகிறது. மலைக்குமேல் வெவ்வேறு இடங்களில் பெய்து இறங்கிய நீர் வெவ்வெறு வெடிப்புகள் வழியாக சென்று ஊற்றாக பீரிடுகிறது. அதைத்தான் அந்த ஊரார் அருந்துகிறார்கள். மழைக்காலத்தில் பெரிய நீரோடையாக வழிந்து அருவியாகக் கொட்டி அப்பால் செல்கிறது அந்நீரோடை வழியாக நடந்து தான் மேலே செல்ல வேண்டியிருந்தது.
நாங்கள் சென்ற போதுமழை சற்று ஓய்ந்திருந்ததனால் தான் பாறை செதுக்குகளை எங்களால் பார்க்க முடிந்தது. ஒருமணி நேரம் முன்னால் வந்திருந்தால் கூட பார்த்திருக்க முடியாது. முந்தைய நாள் வந்திருந்தால் மலையிலேறி இருக்கவே முடியாது என்றார்கள். அந்த ஊரே அந்த ஊற்றை நம்பித்தான் உருவாகியிருக்கிறது. அதை நம்பியே அங்கு நெல் விவசாயம் செய்கிறார்கள். இப்போது அவ்வப்போது அந்த பாறைவடிவங்களைப் பார்க்க மும்பையிலிருந்து சிலர் வருகிறார்கள் என்றார் முதியவர். நம் கல்லூரி மாணவர்கள் வராமலிருக்கவேண்டும். வந்தால் ஆறேழு வருடங்களுக்குள் அங்கே பீர்புட்டிகள் இருக்கும், ஓவியங்கள் இருக்காது.
குடோப்பியிலிருந்து கொங்கண் கடற்கரை வழியாக தெற்கே வந்தோம். கோவாவைக்கடந்து வழியில் இருக்கும் பட்டர்ஃப்ளை பீச் என்னும் இடத்தைப் பார்ப்பது திட்டம். அன்று பகல் முழுக்க பெரும்பாலும் வேனுக்குள்தான். வழியில் அவ்வப்போது மழை. கிடைப்பதைச் சாப்பிட்டோம். சற்றுக் கசப்பான எள்ளுருண்டை ஒன்றை சாப்பிட்ட நண்பர்கள் குமட்டலுடன் “நல்லாத்தான் இருக்கு” என்றார்கள்.
மழையில் கொங்கணக்கடற்கரை பசுமைபொலிந்திருக்கும். கப்பிக்கல் சுவர்களில் பசும்புற்கள். ஓட்டுக்கூரைமேலும் பசும்புற்கள். மரங்களின் தடிகளில்கூட பசுமையான பூசணங்கள். பச்சை வண்ணத்தாலேயே அமைந்த ஊர்கள். அங்கே பச்சோந்திதான் இயற்கையான உயிரினம் என்று தோன்றும்,
இந்தப் பயணங்களில் கிருஷ்ணன் சொல்லுவதுபோல “சரி ஒரு டீயப்போடுவோம்” என்பது ஒரு மந்திரம்போல. சம்பந்தமில்லாத ஊரில் அமர்ந்து டீ குடிப்பது. அந்தக்கடைக்காரர்கள் யார் இவர்கள் என வெறித்துப் பார்ப்பார்கள். இவ்வளவு சிரிப்பவர்கள், மது அருந்தவில்லை என்றால், பெரும்பாலும் மனநோயாளிகள்தானே? ‘அந்தரிகி மெண்டலு” என்று எங்களை கோதாவரியில் படகோட்டும் சமதானி சொன்ன வரி ஒரு அமரவாக்கியம்
பட்டர்ப்ளை பீச் செல்வதற்கு பிந்திவிடும் என்று தோன்றியது. அங்கே அந்தியைச் செலவழிப்பதை எண்ணமுடியாது என அறிந்தபின் அருகே இன்னொரு கடற்கரைக்குச் சென்று கதிரிறக்கத்தைப் பார்த்தோம். பயணங்களில் கதிரெழுகை கதிரிறக்கம் இரண்டையும் விட்டுவிடலாகாது என்பதில் கிருஷ்ணன் கடுமையானவர். ஆனால் இப்போதெல்லாம் பாதிநாள் எழுகதிரை தவறவிட்டுவிடுகிறோம். கடலுக்குள் பெரிய கப்பல்கள் சென்றுகொண்டிருந்தன.
பட்டர்ஃபிளை கடற்கரைக்கு நள்ளிரவில் வந்து சேர்ந்தோம். அக்கடற்கரை விந்தையான ஓர் இயற்கை நிகழ்வு கொண்டது என வாசித்திருந்தோம். அங்கு ஒளிரும் மீன்களும் ஒளிரும் ஒட்டுண்ணி தாவரங்களுமாக அரிதாக சிலஇரவுகளில் இளநீல ஒளி எழும் என்கிறார்கள். இணையத்தில் அதன் புகைப்படம் இருந்தது. ஆனால் அது மிக அரிதாகவே நிகழ்கிறது என்றும் அது சாதாரணமாக பார்க்க கூடிய இயற்கை நிகழ்வு அல்ல என்றும் விடுதி நடத்துனர் சொன்னார்.
நாங்கள் நிர்வாணா என்னும் இயற்கைவிடுதியில் தங்கினோம். அந்த விடுதி நடத்தியவர் சாமியார் போன்ற ஒருவர். பல ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் பணி புரிந்துவிட்டு அங்கிருந்து வந்து அந்த இடத்தை நடத்துகிறார். இணையத்திலேயே ”இங்கு எந்த வசதியும் கிடையாது .இயற்கை மட்டும் வேண்டுபவர்கள் வருக. மற்றவர்கள் தவிர்த்துவிடுக” என்று விளம்பரம் செய்திருந்தார். தலைக்கு ஐநூறு ரூபாய். ஓலை வேய்ந்த கொட்டகைகளில் வசதியான மெத்தைகள் ,கொசுவலைகள். தரை கடல்மணலால் ஆனது. பொதுக்கழிப்பிடம்.
நாங்கள் சென்ற போது எங்க்ளை தவிர இன்னொரு காரில் வந்த ஒரு குழு அன்றி வேறெவரும் அங்கே இல்லை. மழை கொட்டிக்கொண்டிருந்தது. வந்ததுமே இருளில் சென்று ஒளிரும் தாவரங்கள் உண்டா என்று பார்ப்போம் என்றார் கிருஷ்ணன். கூரிருள் திரண்ட பன்னிரண்டு மணிக்கு நடந்து சென்று, இருட்டிலேயே பெருகியோடிய ஒரு கடலோர ஓடையை இறங்கிக்கடந்து – சற்று அப்பால் பாலம் இருந்தது, இருட்டில் அது தெரியவில்லை– கடற்கரையை அடைந்தோம். ஒருவேளை கடல் ஒளி பெற்றிருந்தால் தவர விடவேண்டாமே என்று செல்பேசி உட்பட எந்த விளக்குகளையும் பயன்படுத்தவில்லை.
சற்று நேரத்திலேயே இருள் கண்ணுக்கு பழ்கி மணலின் வெண்மையைக் காணமுடிந்தது. கைகளை இருளுக்கு துழாவியபடி நடந்து சென்று கொட்டும் மழையில் மழைச்சட்டைக்கு மேல் நீர்த்தாரைகள் அறையும் ஓசை சூழ்ந்திருக்க உடல் நடுங்கியபடி தன்னைத்தானே தழுவிக்கொண்டு நின்று, கண்முன் எழுந்து ஓலமிட்டு கொண்டிருந்த கடலை பார்த்தோம். இரவில் கடலின் வெண்ணுரை தெரிந்தது. அது உண்மையிலேயே கடல் நீலநிறம் கொண்டு மின்னுகிறதோ என்ற மாயையை உருவாக்கியது. மழை அறைந்து அறைந்து உலுக்கியது.
பற்கள் கிட்டித்து குளிர் தாங்கமுடியாதபடி ஆகும் அளவிற்கு அங்கு நின்றுவிட்டு திரும்பி வந்தோம் இரவில் படுத்தபோது நெடுநேரமாயிற்று உடல் வெம்மையை அடைய. ஆனால் நடுவில் விழித்துக்கொண்டபோது சிறுநீர் கழிப்பதற்காக மீண்டும் மழைக்கோட்டை அணிந்துகொண்டு செல்பேசியில் வெளிச்சத்தை அடித்து துழாவி கழிப்பறையை நோக்கி செல்ல வேண்டியிருந்தது. அந்த இடம் ஒரு சாமியாரின் குருகுலம் போலவே தோன்றியது. குருகுலங்களில் நாம் வசதிக்குறைவை தனிச்சிறப்பாக அனுபவிக்கும் உளநிலையை அடைந்துவிடுகிறோம்.
அங்கே ஏகப்பட்ட நாய்கள் இருந்தன. அவை அங்கு விருந்தினர் வந்ததுமே தாங்கள் பொறுப்பேற்றுக்கொள்கின்றன. நட்புடன் வாலாட்டி தங்க்ள் இருப்பை தெரிவிக்கின்றன. ஆனால் மிகையாக அன்பை தெரிவிப்பதும் இல்லை. தன்னடக்கமும் கம்பீரமும் கொண்ட நாய்கள் .இரவில் நாங்கள் செல்லும்போது எங்களை கூட்டிச்சென்று கடற்கரையில் மழையில் நனைந்தபடி உடன் நின்று திரும்பி வந்து ஒப்படைத்த பின் அவை வெளியே சென்றன.செல்லும்போது “பத்திரமா இருந்துக்குங்க” என்று ஒரு வாலாட்டல். நாங்கள் அவற்றுக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை. கொடுக்க ஒரு பிஸ்கட் துண்டுகூட இல்லை.
மறுநாள் காலை நடை சென்றபோது மூன்று நாய்கள் எங்களுடன் வந்தன. வேறு கடற்கரை நாய்கள் வரும்போது முன்னால் பாய்ந்து சென்று குரைத்து துரத்தி எங்களை பாதுகாத்தன. நாங்கள் பாதுகாப்பான இடங்களில் நின்றுகொண்டிருக்கிறோமா என்று அவை அவ்வப்போது பார்த்துக்கொண்டன. நாங்கள் மழை ஓய்ந்து நீர்வடிவங்கள் படிந்திருந்த கடல்மணல் வழியாக நடந்து அருகிருக்கும் குன்றின்மேல் ஏறினோம். அதற்கப்பால் ஒரு ஆறு ஓடியது. ஆற்றுக்கு அப்பால் உள்ளதுதான் நிர்வாண கடற்கரை என்று அழைக்கப்படும் இடம் .பயணிகள் அங்கு அரிதாகவே செல்ல இயலும். மழைக்காலத்தில் செல்லவே இயலாது. படகுகள் ஓடுவதே இல்லை.
இருந்தாலும் கேட்டுப்பார்க்கலாம் என்று பேரிப்பார்த்தோம்.உறுதியாகவே மறுத்துவிட்டார்கள் அந்த பகுதியில் முன்னர் வெள்ளையர்கள் வந்து நிர்வாண நீராடுவதுண்டு இப்போது பிற சுற்றுலாபயணிகள் அங்கு செல்வதை அங்குள்ள படகோட்டிகளே அனுமதிப்பதில்லை. இன்று அது தாந்திரீக செயல்பாடுகள் சார்ந்த ஒரு பிரமையை அடைந்துவிட்டிருக்கிறது. அங்கு செல்ல பலர் முட்டி மோதுகிறார்கள்.
நாய்கள் கடலில் பாய்ந்து குப்பையாக மிதக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கவ்வி கொண்டுவந்து கரையில் ஓர் இடத்தில் போடுவதைக் கண்டேன். அவை விளையாடுகின்றன என்னும் எண்ணம் ஏற்பட்டது. பின்னர் தெரிந்தது, அவை விளையாடவில்லை. மெய்யாகவே குப்பை பொறுக்குகின்றன. பின்னர் விடுதிக்காரர் சொன்னார், ஒவ்வொருநாளும் அவர் வந்து கடற்கரையை தூய்மைசெய்வதுண்டு. நாய்களையும் பழக்கியிருக்கிறார்
காலை பத்துமணி அளவில் கிளம்பி நேராக பெங்களூர். வரும்வழியில் அப்சரகொண்டா என்னும் கடலோர அருவிக்கு. அங்கே ஹொன்னோவருக்கு அருகிலிருக்கிறது இந்த இடம். அப்சரஸ்களால் வழிபடப்பட்ட மகாகணபதி உக்ரநரசிம்மர் ஆலயங்கள் உள்ளன. கீழிறங்கிச் சென்றால் கடற்கரையை அடையலாம். கடற்கரை ஓரமாக ஒரு சிறிய குளம். அது அப்சரஸ்கள் நீராடுவது என்பது தொன்மம். அங்கே நாககன்னிகளின் சிலைகள் செய்யப்பட்டிருக்கின்றன
படிகளினூடாகச் சென்று கடற்கரையைப் பார்த்துவிட்டு படியேறி அருவியை அடைந்தோம். அருவி நீர் பெருகிக்கொட்டிக்கொண்டிருந்தது. குளிக்கவேண்டாம் என்பதே எண்ணமாக இருந்தது . ஆனால் அருவியைக் கண்டதும் எண்ணம் மாறியது.கடலோரம் ஆகையால் உடலில் வெக்கையும் இருந்தது. அருவி நேராக ஆழமான கயத்தில் விழுகிறது. ஆகவே அதில் தலைகொடுக்க முடியாது. பக்கவாட்டில் பாறையைப் பற்றியபடிச் சென்று அருவிப்பெருக்கில் நின்றால் அறைந்து தூக்கி கரைமணல் வட்டத்தில் வீசிவிடும்.
அன்று மாலை ஆகும்பே. நான் ஆகும்பேக்கு மூன்றாம் முறையாக வருகிறேன். இளமையில் காசர்கோட்டிலிருந்து அவ்வழியாக சென்றிருக்கிறேன். – 2012 ல் நண்பர்களுடன் ஓர் ஆகும்பே பயணம். அதன்பின் கிருஷ்ணனும் நண்பர்களும் ஆகும்பேக்கு வந்திருக்கிறார்கள்.தென்னகத்திலேயே மிகுதியாக மழைபெறும் இடம் ஆகும்பே..அங்கேதான் ராஜநாகத்திற்கான சரணாலயமும் உள்ளது.
ஆகும்பேயில் வழக்கமான விடுதியில் தங்கினோம். அங்கே வேறு விடுதி இல்லை என்பதனால் வழக்கமாக ஆக்காமல் வேறுவழியில்லை. மழை சற்று குறைந்திருந்தது. மழைச்சட்டைகளைப் போட்டுக்கொண்டு இருட்டுக்குள் ஒரு நடை சென்றோம். நான் சென்றமுறை ஆகும்பே வந்தபோது உக்கிரமான சில பேய்க்கதைகளைச் சொன்னேன். இம்முறையும் ஒன்றைச் சொன்னேன். யானை என்னும் பேய். உளமயக்கமும் குறியீடும் ஆக மாறும் கதை. நான் எழுதவேண்டும் என நினைத்திருந்த கதை. சொல்லிவிட்டேன், இனி எழுதுவேனா என்று தெரியவில்லை.
ஆகும்பேயில் இரவில் பேய்க்கதைகள் சொல்வதில் உள்ள சிறப்பு வெளியே மழையின் ஓலம் “ஆமாம் உண்மைதான்” என்று சொல்லிக்கொண்டே இருக்கும் என்பது. ராஜமாணிக்கம் சிலபல கொடூரமான கதைகளைச் சொன்னார் என்று கேள்விப்பட்டேன். உண்மையில் இந்தமாதிரி ஒரு சூழலில் யதார்த்தமாக வாழ்வதைப்போல் அபத்தமானதாக ஏதுமில்லை.
ஆகும்பேயில் வழக்கமான கோப்ரா ஓட்டலுக்குச் செல்லவில்லை. நாங்கள் செல்லும்போது பூட்டிவிட்டார். கிளம்பும்வரை திறக்கவில்லை. வயதாகிவிட்டிருக்கும்போல. அந்த மழைக்கு கஞ்சி கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். சூடான கஞ்சிதான் மழைக்கு உகந்த உணவு. தேங்காயும் கருவாடும் சேர்த்து அரைத்த ‘சம்மந்தி’ தொட்டுக்கொள்ள இருக்கவேண்டும். கர்நாடகப் பண்பாண்டு இன்னும் அந்த அளவுக்கு முதிர்ச்சி அடையவில்லை
மறுநாள் காலை முதல் இரவு வரை வெறும் பயணம். வழியில் ஓர் ஏரிக்கரை அருகே நின்று கொஞ்சம் ’இயற்கை’ அழகைப் பார்த்தோம். வரைபடத்தில் குறுக்குவழி தேடியதன் விளைவு. நடுவே இருப்பது மேற்குத்தொடர்ச்சிமலை என்பதை கருத்தில்கொள்ளவில்லை. வழி ஒரு ரங்கராட்டினம் போல சுழன்றது. கீழிறங்க நான்குமணிநேரம் ஆகிவிட்டது. கீழே வந்தபோது செந்தில் அரைமயக்கநிலையில் இருந்தார்.
பெங்களூரை வந்தடைந்தபோது இரவு ஒன்பது மணி. ஒவ்வொருவரையாக இறக்கிவிட்டுவிட்டு நான் நவீனின் இல்லத்திற்குச் சென்றபோது பதினொரு மணி. மழையின் குளிர் பெங்களூரிலும் இருந்தது. படுக்கையில் படுத்தபின்னரும் வண்டியின் சுழற்சி உடற்திரவங்களில் எஞ்சியிருந்தது.
நிலவியலில் ஒரு தொல்மழையைப் பற்றிச் சொல்வார்கள். Triassic காலகட்டத்தில், அதாவது தோராயமாக இருநூற்று முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பூமிமேல் இருபதுலட்சம் ஆண்டுகள் தொடர்ச்சியாக மழைபொழிந்தது. அந்த மழையில் மண்ணில் இருந்து நீர் மேலே சென்று விசும்பின் குளிரை பெற்று திரும்பி வந்து மீண்டும் ஆவியாகி மேலே சென்றது. அந்த இடைவிடாத மழையே பூமியைக் குளிரச் செய்தது.
நான் எப்போதுமே அந்த தீராத மழையைப் பற்றி ஒரு பரவசத்துடன் எண்ணிக்கொள்வதுண்டு. கரிய பாறைகளைப் பார்க்கையில் எல்லாம் அந்த மழையை இவை அறிந்திருக்கும் என்று நினைத்துக்கொள்வேன். பாறைச்செதுக்கு ஓவியங்கள் அமைந்த செங்கப்பிப் பாறை அந்த மழையில் சேறுபடிந்து உருவானது. அந்தப் பாறையில் எழுதப்பட்டவை அந்த வடிவங்கள். அவற்றின்மேல் பெய்தமழையை அந்த தொல்கால மழை என நினைத்துக்கொண்டேன்.
எப்போதும் ஒரு பயணத்திற்குப்பின் சிந்தனைகளை அடுக்கி சீரமைத்துக்கொள்வதை விட படிமங்களாகக் கலைத்துக் குழப்பிக்கொள்வதையே நான் விரும்புவேன். அவை அறிவாக வேண்டியதில்லை, கனவாகவேண்டும். அக்கனவில் அந்த மழை பெய்யவேண்டும்.
[நிறைவு]