வணங்கான் மற்றும் கதைகள் -கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

எல்லோரும் எல்லாமே சொல்லியாகிவிட்டது. உங்கள் சிறுகதைகளைப்படித்து புதுசாக சொல்லிவிடப் என்னிடம் எதுவுமில்லை…..

அறம் முதல் வணங்கான் வரை உடம்பெங்கும் ஊடுருவி மனம் பூரா பரவி நிறைந்து கிடக்கிறது கனமாய்.

உறைந்து, நனைந்து, உருகி, நிமிர்ந்து எழ வலுவில்லாமல் என் வார்த்தைகள்.

கண்கள் மூடுகிறேன். கைகள் கூப்புகிறேன். அதுதான் இப்போது செய்ய முடிந்தது.

நன்றி.

த.ஜார்ஜ்

சுங்கான்கடை

அன்புள்ள ஜார்ஜ்

ரொம்ப பக்கத்தில் இருக்கிறீர்கள். இங்கே இருக்கிறீர்களா, இல்லை ஊர்ப்பாசத்தால் இப்படி போட்டுக்கொள்கிறீர்களா?

முடிந்தால் சந்திப்போம்

ஜெ

*

அன்புள்ள ஜெ

வணங்கான் கதையை வாசித்தேன். நுட்பமான ஒரு தகவலைச் சொல்லியிருக்கிறீர்கள். நாடார்களில் ஒருபக்கம் பண்ணையடிமைகள் மறுபக்கம் பண்ணையார்கள் இருசாராருமே இருந்தார்கள். பண்ணையடிமைகள் அதிகமும் மதம் மாறினார்கள். பண்ணையார்கள் பொதுவாக தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் அதிகம்

நேசமணி அடிமைகளாக வாழ்ந்து எழுச்சி பெற்ற மக்களின் தலைவர். ஆகவே கடைசிக்காலத்தில் உயர்குல நாடார்களிடமிருந்து அவருக்கு எதிர்ப்பு வந்தது. அப்படி அவரை எதிர்த்தவர்களில் முக்கியமானவர் தாணுலிங்க நாடார்.

இதெல்லாம் சரித்திரம். இன்று அந்த காவியத்தலைவனை எல்லாரும் மறந்துவிட்டார்கள். இலக்கியம் மூலம் தமிழ்பேசும் உலகுக்கே நீங்கள் அவரை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். உலகிலே எங்கெல்லாம் உங்களை வாசிக்கிறார்களோ அங்கெல்லாம் அவரை இன்று அறிந்திருபபர்கள் . சும்மா பேரை மட்டும் அல்லாது அவரது வாழ்க்கையை ும் personality யும் கூட அறிந்திருப்பார்கள். அய்யா அவ்ர்கள் எங்களுக்கு என்ன கொடுத்தார் என்று இதைவிட மேலாக ஒருவரும் சொல்லிவிட முடியாது

வணக்கம் . எப்போதாவது நேரில் சந்தித்தால் கையை பற்றிக்கொண்டு இன்னொரு முறை வணக்கம் சொல்கிறேன்

ஜஸ்டின் பிரபாகர்

கல்கத்தா

அன்புள்ள ஜஸ்டின்

எல்லாவகையிலும் உயர்சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுத்துவ எண்ணங்கள் கொண்ட என் பாட்டிக்கு நேசமணி மேலும் காமராஜ் மேலும் ஆழமான மதிப்பு இருந்தது. அவர் நேர்மைக்குறைவாக எதையும் செய்யமாட்டாரென்ற நம்பிக்கை அது. அதுதான் ஒருவகையில் ஜனநாயகத்தின் வெற்றி

‘அவரவர் எச்சத்தால் காணப்படும்’ – என்பதைப்போல நேசமணி உருவாக்கிய தலைவர்களின் ஆளுமையே அவர் யாரென காட்டும். குஞ்சன் நாடார், சிதம்பர நாடார், பொன்னப்பநாடார் போன்றவர்கள் அனைவருமே கடைசிவரை கேள்விக்கு அப்பார்ப்பட்ட நேர்மையுடன் இருந்தார்கள்.

ஒருகாலத்தில், எழுபதுகளில், திருவட்டார் சட்டமன்றத்துக்கு இருவர் போட்டியிடுவார்கள்.ஸ்தாபன காங்கிரஸின் ஜேம்ஸ். இடது கம்யூனிஸ்டுக் கட்சியின் ஜெ.ஹேமச்சந்திரன். இருவருமே அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள்

அந்த பொற்காலம் இன்று குமரிமாவட்டத்தில் இல்லை. ஆனாலும் இன்றும் வேறெந்த மாவட்டத்தை விடவும் நேர்மையான அரசியல் வாதிகள் இங்கேதான். ஏ.வி பெல்லார்மின் பற்றி அல்லது லீமா ரோஸ் பற்றி ஒரு எதிர்மறைக்குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் சொல்லிக்கூட நான் கேட்டதில்லை

நமக்கு ஒரு மரபு இருக்கிறது. அதை இப்போது நினைத்துக்கொள்வோம்

ஜெ

*

ஜெ,

வாழ்கையில் நம் கவனத்திற்குள் வராத, விழிப்புணர்வு இல்லாமல் எளிதில் கடந்து செல்லும் வாய்ப்புகள் உள்ள ஆனால் மனித தன்மையின், மனித நுண்ணறிவின் அடிப்படை கூறுகளை மிக எளிதாக மனதின் மேல்பரப்பிற்கு கொண்டு வந்த சிறு கதைகள். நன்றிகள்!

-அகிலன்

http://change-within.blogspot.com

*

அன்புள்ள ஜே,

வணங்கான் வாசித்தேன். அது ஒரு சமூகத்தின் சித்திரிப்பாக கொள்ளமுடியாது. கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழகத்திலே என்ன நடந்தது என்பதற்கான ஆவணம் அது. அந்த மாதிரி நெருக்கடிகளை நானே மதுரைப்பக்கம் சந்தித்திருக்கிறேன். கடுமையாக போராடித்தான் ஆசிரியர் வாழ்க்கையிலே ஜெயித்து இன்றைக்கு பிள்ளைகளை நல்ல நிலைமைக்குக் கொண்டு சென்றேன் நான் வண்ணார் சாதியை சேர்ந்தவன். ஒரு உயர்சாதிப்பையனை அடித்ததனால் என்னை இழுத்த்க்கொண்டு சாதிப்பஞ்சாயத்திலே நிறுத்தினார்கள். என் கையிலே கத்தியை கொடுத்து பலபேர் மத்தியிலே நான் ஊர்த்தலைவருக்கு சவரம் செய்யவேண்டும் என்று தீர்ப்பு சொன்னார்கள். நான் முடியவே முடியாது என்று மறுத்துவிட்டேன். என்னை அடித்தார்கள். ஆனாலும் செய்யவில்லை. அதன்பிறகு மிரட்டி போலீஸிலே பொய்ப்புகாரும் கொடுத்து அடித்து விரட்டினார்கள். நல்லவேளையாக சங்கம் எனக்கு துணைக்கு இருந்தது. மாற்றம் வாங்கி தருகிறேன் என்றார்கள். முடியவே முடியாது என்று சொல்லிவிட்டேன். அதே ஊரிலே அஞ்சு வருஷம் வேலைபார்த்தபிற்பாடுதான் ஊரை விட்டு வெளியே வந்தேன். அங்கேயே நல்ல வாத்தியார் என்று பெயர் எடுத்தேன். அந்த ஊரில் என்னிடம் படித்த பலர் என்னை கண்டால் இப்போது வணக்கம் சொல்வார்கள். பெருமையாக இருக்கும். இந்த கண்ணீரை எல்லாம் நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள்.

அடிபட்டவனின் இடத்திலே இருந்துகொண்டு அந்த ஆவேசத்தை எழுதியிருக்கிறீர்கள். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு புதுமைப்பித்தனின் நாசகார கும்பல் பிடித்தமான கதை அந்தக்கதை ஞாபகம் வந்தது. வாழ்த்துக்கள்

கே. சித்தானந்தன்

அன்புள்ள சித்தானந்தன்,

அத்தனை கதைகளிலும் நான் உணரும் ஒன்றுண்டு

மானுடம் வெல்லும்

ஜெ

அன்புள்ள ஜெ,

இந்தக் கதைகள். மனித வாழ்வின் மகத்துவங்களையும் மேன்மையான வாழ்விற்கான

சாத்தியங்களையும் இந்த மனிதர்கள், உணர்ச்சிகரமான தருணங்கள் வழியே என்

போன்ற வாசகனுக்கு எப்போதும் குறிப்பால் உணர்த்தியபடியே

இருக்கிறீர்கள்…கெத்தேல் சாகிப் உணர்வுகளை வெளிக்காட்டாத ஒரு இறுகிய

மனிதன்..ஆனால் அவனைப் படிக்கும் என் கண்களைக் கண்ணீர்

திரையிடுகிறது..சாதி ரீதியாக நான் இழிவுகளைச் சந்திக்க நேர்ந்ததில்லை

எனினும் வணங்கான் என்னை பிரமிக்க வைத்தது..

“‘லே,நானாக்கும் சொல்லுகது. ஏறு ஆனை மேலே’?” என்று

நேசமணி சொல்லும்போது நான் அருகிலிருந்து உடல் சிலிர்க்க இருவரையும்

பார்த்துகொண்டு இருந்தேன்..

“மண் அவரில் இருந்து கீழே இறங்கிச்சென்றது. அலுவலகம் அதன்

ஓட்டுக்கூரையுடன் கீழிறங்கியது…ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி

வந்தது. அவரைச்சுற்றி பிரகாசம் நிறைந்திருந்தது. வானத்தின் ஒளி.”.

நான் அண்ணாந்து வணங்கானையே இமைக்காமல் பார்த்தபடியே இருந்தேன்…….

ஆனால் ஜெ, என்னை அரிக்கும் ஒரு கேள்வி..இதையெல்லாம் உணர சாத்தியமில்லாத

வாழ்க்கை வாழும் ஒருவன் என்ன செய்ய வேண்டும்? விரும்பாதவர்களை நாம்

ஒன்றும் செய்ய இயலாது..ஆனால் அன்றாட வாழ்வில் அதை உணர சாத்தியமில்லாத

மேல் மத்திய தர, பணக்கார வர்க்கத்தின் நாளைய தலைமுறை. “என் கனவெல்லாம்

சோறு. ” என்ற வரி எனக்குப் புரிகிறது..ஆனால் என் 5 வயது மகள் வளர்ந்து

வரும்போது இது எப்படி அவளுக்கு புரியும்..?? இது புரியாவிட்டால் மகத்தான

அன்பு,வாழ்வு, கருணை இதையெல்லாம் எப்படி அவர்களிடம் சேர்ப்பது?

ராம் ஸ்ரீனி

அன்புள்ள சீனி

மானுட அகம் சகமனிதனின் துயரத்தை காணும் கண் கொண்டது. ஏனென்றால் உயிரியல் ரீதியாக இது ஒரு பெரும் மந்தை.

முடியாதாவர்களும் உண்டு. போகங்களால், அதிகார விருப்பால் கண்மறைக்கப்பட்டவர்கள். அவர்களை ஒன்றும் செய்யமுடியாது

பிறருக்கு எப்போதும் இத்தகைய விஷயங்கள் எப்படியோ சென்று சேரும்

ஜெ

அன்புள்ள ஜே

வணங்கான் வாசித்து கண்ணீர்மல்கியவர்களில் நானும் ஒருவன். நேசமணி அய்யாவைப்பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. நானும் அவரது சாதியைச் சேர்ந்தவன்தான். ஆனால் எங்கள் ஊர்ப்பக்கம் அவரை ஒரு ரவுடி போலத்தான் என் குடும்பத்திலே சொல்வார்கள். உங்கள் கதையை வாசித்த பிறகுதான் எனக்கு இன்னொரு பக்கம் தெரிந்தது

நன்றி

கணேசலிங்கன்

அன்புள்ள கணேசன்,

நேசமணி ஒரு வகையில் அய்யன்காளியை போல. அவருக்கென ஒரு அடியாள்கூட்டம் இருந்தது என்று சொல்கிறார்கள். பல இடங்களில் அவர் வன்முறையை கையாண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். கதையிலும் அவரது சித்திரம் அப்படித்தான் உள்ளது. ஆனால் அவர் அந்த வன்முறையை சொந்தநலனுக்காக பயன்படுத்தியதாக சரித்திரம் இல்லை. அவரது வாரிசுகள் யாரும் கோடீஸ்வரர்கள் ஆகவில்லை.

அவர் உயிர்வாழ்ந்தது வரை குமரிமாவட்டத்தில் காங்கிரஸ் என்றால் அவர்தான். அந்த செல்வாக்கு வெறும் வன்முறைக்கு வருமா?

ஜெ

முந்தைய கட்டுரைவணங்கான் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதாயார் பாதம் [சிறுகதை]