கவிஞர் அபி விஷ்ணுபுரம் விருது பெறுகிறார் என்ற தித்திப்பான செய்தியை இன்று காலை அறிந்ததும் எத்தனையோ நினைவுகள் காட்சிகளாக விரிகின்றன. சேலம் அரசு கல்லூரியில் 1970-71, 1971-72 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் எனக்கு பி.ஏ. (ஆங்கில இலக்கிய) வகுப்பின் தமிழ் மொழிப்பாட ஆசிரியராக அவர் அறிமுகமானார். கொஞ்சம் இடதுசாரி மனோபாவம், கொஞ்சம் ஜெயகாந்தன், கொஞ்சம் சிறுபத்திரிகை அறிமுகம் என்ற பின்புலம் தமிழ்ப் பேராசிரியர்கள் மீதான வெறுப்பை மனதில் விதைத்திருந்தது. ஆனால் இவர் வித்தியாசமாகப் போதிக்கிறார் என்பதை உணர்ந்த நாங்கள் (பிரம்மராஜன், நான்) அவரிடம் நெருக்கம் காட்டினோம். அவரும் எங்கள் மீது அன்பாக இருந்தார். சங்கக் கவிதைகள் சிலவற்றையும் சிலப்பதிகாரத்தையும் (புறஞ்சேரி இறுத்த காதை, கொலைக்களக் காதை) அவரிடம் கற்றோம். தமிழ் உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கம், கவிதையைத் தானே அனுபவித்து நுணுக்கங்களைச் சொல்லும் ஈடுபாடு என்று அவரிடமிருந்த பலவும் எங்களை ஈர்த்தன. குறிப்பாக, தமிழாசிரியர்களுக்கேயுரிய கூச்சல் அவரிடம் சிறிதும் இருக்காது. சில நாள்கள் கழித்துதான் அவர் கவிதைகள் எழுதுவார் என்பது தெரிந்தது. அவை வழக்காமானவை அல்ல என்பதால் இன்னும் மரியாதை கூடியது. ஆங்கிலப் பாடங்கள் சிலவற்றை அவரோடு பகிர்ந்துகொண்டதும் உண்டு. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில்தான் Charles Lamb எழுதிய கட்டுரையான Dream Children: A Reverie ஐத் தன் பி.ஏ. வகுப்பில் ஆங்கிலப் பேராசிரியர் உப்பிலி போதித்ததைச் சொல்லி சில சொற்றொடர்களையும் நினைவுகூர்ந்தார். தான் காதலித்த பெண் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்ட சூழலில் தனக்கும் அந்தப் பெண்ணுக்கும் பிறந்த கற்பனையான குழந்தைகள் குறித்த ஒரு பகற் கனவாக அந்தக் கட்டுரையை லேம்ப் எழுதியிருப்பார். லேம்பின் உன்னதக் கட்டுரைகளில் ஒன்று. ஒரு நாள் நூலகத்துக்குப் போய் கலீல் ஜிப்ரான் நூலைக் கேட்டபோது நூலகர், ‘அபி பரிந்துரைத்தாரா?’ என்று கேட்டார். இப்போதெல்லாம் இப்படியான ஆசிரியரும் இல்லை, நூலகரும் இல்லை.
எங்களுடைய மொழிப்பாட வகுப்பு ஆங்கில இலக்கிய மாணவர்களும் கணித மாணவர்களும் இணைந்த கூட்டு. நாங்கள் 30 பேர், அவர்கள் 90 பேர். மற்ற தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் படாத பாடு படுவார்கள். அப்போதெல்லாம் குறும்புத் தனம் இருக்கும், ரௌடித்தனம் இருக்காது. வகுப்பறையில் அபி சார் கண்டிப்பானவர். அவருடைய சிறந்த கற்பித்தலில் குறும்புக்கார மாணவர்களும் பெட்டிப் பாம்பாக மயங்கிக் கிடப்பார்கள். தாமதமாக வந்து அவர் வகுப்பறைக்குள் நுழையமுடியாது. அனுமதிக்க மாட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் வாரம் ஒரு முறை காலை ஒன்பது மணி முதல் வகுப்பு அவருடையது. நாங்கள் ஆறு கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி வருவோம். ஒரு நாள் பத்து நிமிடங்கள் போலத் தாமதம் நேர்ந்தது. வகுப்புக்குப் போகவில்லை. வகுப்பை இழந்தது வருத்தம்தான். உணவு இடைவேளையில் கூப்பிட்டனுப்பி வகுப்புக்கு வராததைப் பற்றிக் கேட்டார். காரணத்தைச் சொன்னோம். ‘அந்தச் சட்டம் உங்களுக்குப் பொருந்தாது,’ என்றார். வகுப்பில் தேடியிருப்பார் போல. பிடித்தமான மாணவர்கள் வகுப்புக்கு வரவில்லையென்றால் நேரும் ஏமாற்றத்தை நானும் ஆசிரியராகப் பின்னாளில் அனுபவித்திருக்கிறேன். இரண்டாமாண்டு தொடக்கத்தில் அவருக்குப் பதிலாக வேறொரு ஆசிரியர் வந்தார். நாங்கள் தமிழ்த் துறைத் தலைவரிடம் போய் எங்களுக்கு அபி சார்தான் வேண்டும் என்று கோரி வெற்றியும் பெற்றோம். வேறு பாடம் படிக்கும் மாணவர்கள்கூட, அவர்களுக்கு வகுப்பு இல்லாதபோது, அனுமதியுடன் அவர் வகுப்பில் உட்கார்ந்து சிலப்பதிகாரப் பாடம் கேட்டதும் உண்டு. இவர் போன்ற ஆசிரியர்கள் சிலரால் கிடைத்த ஆதர்சமே எனக்கு வழிகாட்டி. சாரோடு சேர்ந்துபோய் அஃக் பரந்தாமனைச் சந்தித்திருக்கிறோம். அப்போது ஆங்கிலத் துறையில் இருந்த ழ ஆர். ராஜகோபாலன் எங்களோடு சார் வீட்டுக்கு வந்திருக்கிறார். இயல்பாக இப்படி நடந்த சில நிகழ்வுகளே, அதுவும் அந்த வயதிலேயே, பின்னாளைய வாழ்க்கையை நல்லவிதமாக நிர்ணயித்தன.
’சங்க இலக்கியத்தில் சங்குப்பூக்கள்,’ ‘புறநானூற்றில் புதர்கள்’ என்ற ரீதியில் தமிழ்த் துறைகளில் ஆய்வுகள் நடைபெற்றபோது அபி ‘லா.ச.ரா. நாவல்களில் உத்திகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்தார். ஆய்வு நெறியாளரோடு அவருக்கு உண்டான உரசல் தனிக் கதை. மேலூர் அய்யனார் அவருடைய மாணவர் என்றே நினைத்தேன். கல்லூரிக்கு வெளியே உண்டான பழக்கம்தானாம். அய்யனார் அபி சாரின் அத்யந்த இலக்கியச் சீடர்.
கவிஞர் அபி இலக்கிய உலகில் அந்தப் பெயராலேயே அறியப்படுபவர். முழுப் பெயர் முஹமது ஹபிபுல்லா. தமிழ்ப் பேராசிரியராக சேலம், மேலூர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு கல்லூரிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மதுரையில் வசிக்கிறார். தியாகராசர் கல்லூரியின் வார்ப்பு. உடன் அல்லது முன் பின் தமிழ் படித்த, ஊரறிந்த அப்துல் ரகுமான், நா. காமராசன், மேத்தா, மீரா போன்றோரிலிருந்து விலகி தனித்துவமான கவிதைப் போக்கைப் பின்பற்றியவர். அவர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். தமிழ்க் கவிதையுலகில் அதிகமும் பேசப்படாதவர். மௌனத்தின் நாவுகள் தொடங்கி 1980களுக்குள்ளாக இரண்டு, மூன்று தொகுப்புகள் வந்தும் உரிய கவனத்தை அவர் பெறவில்லை. ஜெயமோகன் முதன்முதலாக அபியின் கவிதைகள் குறித்து விரிவாக எழுதிய பிறகு ஆங்காங்கே கொஞ்சம் பேச்சு எழுந்தது. வெளியான நான்கு தொகுப்புகள் ஒன்று சேர்ந்த திரட்டை அபி கவிதைகள் என்ற தலைப்பில் அடையாளம் வெளியிட்டுள்ளது. சூஃபி மரபில் வருபவர். கவிதையில் எண்ணமும் சொல்லும் இணைந்து உருவாக்கும் விளைவு குறித்த மொழியியல் நுட்பமே இவருடைய அக்கறை. மிகச் சிறந்த எடிட்டர்.
அபி சாருக்குக் கிடைக்கும் இரண்டாவது விருது இது என்று நினைக்கிறேன். விஷ்ணுபுரம் அமைப்பு நம் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியது.
ஆர் சிவக்குமார்
முகநூலில் இருந்து