அபி, விஷ்ணுபுரம் விருது – கடிதங்கள்

அபி கவிதைகள் 150

அபி கவிதைகள் அழியாசுடர்கள்

அன்புள்ள ஜெ,

 

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படும் செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். இவ்விருது வழியாகவே நான் அவரைக் கேள்விப்படுகிறேன். இவ்வளவுக்கும் ஏழாண்டுக்காலமாக தொடர்ச்சியாக நான் கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த நிலை வருத்தமானதுதான். ஆனால் ஆச்சரியப்படத்தக்கது அல்ல.இங்கே கவிதை என்பதே மிகச்சிறிய வட்டத்திற்குள்தான் பேசப்படுகிறது. அதிலும்கூட புகழ்பெற்ற கவிதைகளைத்தான் அதிகமும் பேசுகிறார்கள். அல்லது சமகாலக் கவிதைகளை. அபூர்வமாக எழுதும் ஒரு கவிஞரைப்பற்றிய பேச்சு மிகவும் குறைவு.

 

ஏனென்றால் இங்கே இன்றெல்லாம் டிரெண்டிங் தாண்டி எவரும் எதையும் பேசுவதில்லை. அந்தந்த தருணத்திற்கு ஒரு விஷயம் டிரெண்டிங் ஆகிறது. பொதுவான போக்கிலிருந்து விலகி நின்று தனக்கான விஷயங்களைப்பேசுவதுதான் சிந்தனாவாதிக்கு அழகு என்ற காலம் இன்றில்லை. பொதுவான விஷயங்களில் தானும் பேசி லைக் பெறுவதே இன்றைக்கு சிந்தனாவாதிகளும் செய்யும் விஷயமாக உள்ளது,

 

விஷ்ணுபுரம் போன்ற விருதுகள் ஒரு படைப்பாளியை கொஞ்சம் அறிமுகம் செய்கின்றன. அதை வெறுமே விருது கொடுப்பதாக மட்டுமாக நிறுத்தாமல் ஆறுமாதமாக அவரைப்பற்றி பேச்சு இருக்கும்படிச் செய்கிறீர்கள். இது மிகச்சிறந்த விஷயம். அபியின் கவிதைகளும் கவனிக்கப்படும் என நினைக்கிறேன். கவனிக்கப்படும்போதுதான் கவிதைகள் அர்த்தம் அளிக்கின்றன. ஒரு கவிதை எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும் கூர்ந்து வாசிக்காமல் அதைக் கடந்துசென்றால் அது எந்த விளைவையும் உருவாக்குவதில்லை. அந்தக்கவிதையுடன் அக்கவிஞரின் ஒட்டுமொத்தக் கவியுலகையும் சேர்த்து யோசித்தால் மட்டுமே நம்மால் முழுமையான சித்திரத்தை அடையமுடியும். அதற்கு கூட்டுவாசிப்பு அவசியம். அத்தகைய கூட்டுவாசிப்பை இந்த விருது நிகழ்த்தும் என நினைக்கிறேன்

 

கவிஞர் அபி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

ஆர்.மகேந்திரன்

 

அன்புள்ள ஜெ,

 

கவிஞர் அபி அவர்களுக்கு விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன். என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அபியின் கவிதைகளை நான் நான்காண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அப்போது நண்பர்கள் நடுவே ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்ததை நினைவுகூர்கிறேன். அபியின் கவிதைகளில் உள்ள ஆன்மீகம் பற்றியபேச்சு அது. அது எழுபதுகளில் மோஸ்தராக இருந்த ஒருதனிமனிதவாத ஆன்மீகம் என்று நண்பன் சொன்னான். அன்றைக்கு கலீல் கிப்ரான், ரூமி போன்றவர்கள் பிரபலமாக இருந்தார்கள். ஜென் ஆன்ட் மோட்டார் சைக்கிள் மெயிண்டெனென்ஸ் போன்ற புத்தகங்கள் வாசிக்கப்பட்டன. அந்த உலகைச்சேர்ந்தது என்று சொன்னான்.

 

நான் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அபி மட்டுமல்ல எந்தக்கவிஞனும் அவன் உருவான காலகட்டத்தின் உணர்ச்சிகள், சூழல்களில் இருந்துதான் தொடங்குகிறான். ஆனால் அதிலிருந்து அவன் எழுந்து மேலே சென்று எக்காலத்திற்கும் உரிய ஆன்மீகத்தை அடையவேண்டும். அப்படி அடைந்தால் அது இலக்கியம். நானும் ஜென் ஆண்ட் மோட்டார் சைக்கிள் மெயிண்டெனன்ஸ் போன்றவற்றை நிறையவாசித்தவன். குர்ஜீஃப் எனக்கு பிடித்தமானவர். ஓஷோவின் அமைப்புகளில் ஈடுபாடு இருந்தது. இன்றைக்கு வேறு ஒரு இடத்திற்கு வந்துவிட்டேன். ஆனால் இன்றைக்குக்கூட குர்ஜீஃப் வலுவான இடத்திலேதான் என் மனசிலே இருக்கிறார். அபியின் கவிதைகளும் அப்படித்தான் இருக்கின்றன.

 

அபியின் கவிதைகள் அந்த எண்பதுகளிலிருந்த ஆன்மீகத்தேடலைத்தான் சொல்கின்றன. இருத்தலியத்தின் உச்சியில் இருந்து தொடங்கி மேலே செல்லும் ஆன்மீகம் அது என நினைக்கிறேன். இருத்தலின் துயரிலிருந்து தொடங்கி இருத்தலில் ஒரு பிரபஞ்ச அர்த்தத்தைக் கண்டுகொள்ளும் இலக்கியம் அது. அந்த தேடல் மிக அடிப்படையானது. மிகவும் அந்தரங்கமானது. ஆகவே அது பெருவாரியானவர்களிடம் சென்றுசேராது. அதேசமயம் அது காலாவதியாகவும் செய்யாது. அபி அவர்களை மீண்டும் வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நன்றி

 

எஸ்.நடராஜன்

 

அன்புள்ள ஜெ

 

அபி அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்த செய்தி அறிந்தேன். மகிழ்ச்சி. அபியின் கவிதைகளை இப்பரிசு அறிவிக்கப்பட்ட பின் அவருடைய இணையதளம் வழியாக வாசிக்கிறேன். அவருடைய கவிதைகளை நீங்கள் சொன்னதுபோல பிரமிள், தேவதேவன் உலகுடன் ஒப்பிடலாம். ஆனால் பிரமிளின் கவிதைகள் கொந்தளிப்பானவை. ஆகவே அவற்றிலுள்ள spirituality கொஞ்சம் பலவீனமானதுதான் என்று தோன்றுகிறது. அபி கவிதைகளிலுள்ள ஆழமான அமைதி பிரமிள் கவிதைகளில் அமையவில்லை. நாம் அபி கவிதைகளை பொதுவாசிப்பு வழியாக இனிமேல்தான் மீட்டுக்கொள்ளவேண்டும்

 

சிராஜ்

 

அபி – கடிதங்கள்

கவிஞர் அபி பேட்டி- காணொளி

கவிஞர் அபி – இளங்கோ கிருஷ்ணன்

அபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்

அபிக்கு விஷ்ணுபுரம்- கடிதங்கள் -3

கவிஞர் அபி – ஆர்.சிவக்குமார்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது

 

 

 

முந்தைய கட்டுரைதகவலறியும் உரிமைச் சட்டம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிறப்பிடம்–யசுனாரி கவபத்தா