அன்னா ஹசாரேயின் துரோகம்!

அண்ணா ஹசாரேவின் தோல்வி

அண்ணா ஹசாரே மீண்டும்

அண்ணா ஹசாரே,ராலேகான் சித்தியில்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.

வணக்கம்.

கடந்த 2013 ம் ஆண்டில் அன்னா ஹசாரே திடீரென இந்தியாவின் மீட்பராக முன் வைக்கப்ட்டு லோக்பால் மசோதா தான் முன் வைக்கும் வடிவில் நிறைவேற்ற வற்புறுத்தி போராட்டம் நடத்த நீங்கள் உட்பட பலரும் அவரின் வழக்குரைஞர்களாக அவதாரம் எடுத்தீர்கள். அன்றைய ஐ.மு.கூ அரசு நிகழ்வுகளின் பின்னணி பற்றி புரியாமல் திகைத்து நின்றது. ஆனால் இது நன்கு திட்டமிட்டு நிகழத்தபடும் அரசியல் நாடகம் என்று நாங்கள் நம்பினோம். அதன் பின்னால் ஆர்.எஸ். எஸ் ன் கரங்கள் இருந்தது என்பதுடன் ஒருநலவாழ்வு அரசை சகிக்க இயலாத ஒட்டுண்ணி முதலாளித்துவ சக்திகளும் அவற்றால் ஊட்டி வளர்க்கப்படும் அறம் வழுவிய ஊடகங்களும் இருந்தன. இதை நான் இங்கு வார்த்தைகளால் சொல்ல அவசியம் இல்லை. ஏனெனில் ஐ.மு.கூ அரசு வீழ்த்தப்பட்ட பின் எல்லா ஊழல் எதிர்ப்பு சன்னதங்களும் நின்று போராளிகள் படுகளம் வீழ்ந்து அவரவர் சோலியை பார்க்க சென்று விட்டனர். ஒரு புனித நாளில் மோடி பிரதமர் ஆன கணத்திலிருந்து இந்தியா ஊழலின் நாற்றத்திலிருந்து மீண்டு எங்கும் நேர்மையின் சுகந்தம் வீசும் தேசமாகி விட்டது .

அதனால்தான் சுதந்திர இந்தியா வின் குறிப்பிடத்தக்கதான வெகு மக்கள் சட்டமான தகவல் அறியும் உரிமைச் சட்டம் அத்தனை ஊழல் எதிர்ப்பு பூசாரிகளின் மோனநிலை நிலவும் நாளொன்றில் பல்பிடுங்கப்பட்ட பெட்டி பாம்பாக்கப்பட்டாயிற்று. பிரேமச்சந்திரனும் அபிஷேக் சிங்வியும் ஜெயராம் ரமேஷும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொண்டை வரள பேசிக்கொண்டு இருந்தத போது தேசத்தின் மனசாட்சி என வரிந்து கொண்டு அன்று நின்ற அன்னா ஹசாரே மற்றும் அவரது பஜனை குழுவும் இப்போது மௌனவிரதம் காக்கின்றனர்.

முன்னாள் இந்நாள் தகவல் ஆணையர் ஒரே குரலில் தெரிவிக்கும் எதிர்ப்புக்கு அவர்கள் பாகிஸ்தானால் இயக்கபபடுவது காரணமாக இருக்கும்.

அருள் கூர்ந்து நீங்கள் இது குறித்து அன்னாஹசாரே பஜனை குழு சார்பில் சில வார்த்தைகள் சொன்னால் இந்த ஆர்.டி.ஐ பாடியை எடுத்து விடலாம்.

நன்றி..

இப்படிக்கு,

இரா.முருகானந்தம்.

அன்புள்ள முருகானந்தம்,

ஓர் அரசியல்பணியாளனாக நான் உங்களை அறிந்தேன், அந்த மதிப்பு இப்போதும் உண்டு. இப்போது அரசியல்வாதியாக ஆகிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை உங்கள் கடிதம் காட்டுகிறது. ஆகவே அரசியலை மிகையுணர்ச்சிக்கொந்தளிப்புடன் அணுகிறீர்கள். மெல்லமெல்ல மேடையில் பற்றி எரியத்தொடங்குவீர்கள்.

ஆனால் இந்த பற்றி எரிதல் உள்ளார்ந்ததாக இல்லாமல் ஒருவகை மேடைநடிப்பாக இருக்கும்போது மட்டுமே நீங்கள் தப்பித்துக்கொள்ள முடியும். அந்த உணர்ச்சிகளுக்கு அப்பால் ஆழத்தில் கவனமாக காய்நகர்த்திக்கொண்டிருக்கவேண்டும். இந்த உணர்ச்சிகள் உண்மையானவை என்றால் நீங்கள் மெல்ல மெல்ல ஏமாற்றத்துக்கும் சலிப்புக்கும் உளச்சோர்வுக்குமே சென்று சேர்வீர்கள்.

இப்போதைக்கு இந்த உணர்ச்சிகளை உண்மையானவையாக எடுத்துக்கொள்கிறேன். அதோடு முகநூல் வம்புகளில் புழங்கி உருவாக்கிக்கொண்ட மொழிநடையும் அதற்கான தேய்வழக்குகளும் சரியானபடி இணைந்துகொண்டிருக்கின்றன.

அண்ணா ஹசாரேவை ஊழல் எதிர்ப்புப் போராட்டம் வழியாக நான் அறியவில்லை – அதற்கும் இருபதாண்டுகளுக்கு முன்னரே சூழியல்போராளியாக, கிராம மறுஅமைப்புக்காகப் போராடியவராகவே அறிந்திருக்கிறேன். கேரளச் சூழியலாளர்களுடன் இணைந்து ராலேகான் ஸித்திக்குச் சென்றதும் உண்டு. அவர்மேல் என் மதிப்பும் நம்பிக்கையும் உருவானது அவர் செய்துகாட்டியவர் என்பதனால் மட்டுமே.

அண்ணா ஹசாரே அரசியலில் திடீர் என்று குதிக்கவில்லை. அவருடைய சேவைக்குத் தடையாக இருந்த அரசியல்வாதிகளை எதிர்த்து களமிறங்கியவர் அவர். மக்களுக்கு பல வெற்றிகளை பெற்றுத்தந்தவர். அவர் அரசியல் சார்ந்த தனிப்பட்ட இலக்குகள் எதையும் எப்போதும் கொண்டிருக்கவுமில்லை. அவருடைய களச்சாதனைகளை விமர்சிக்கும் தகுதி கொண்ட அரசியல்வாதிகள் எவரும் இங்கில்லை. வெறுமே மேடைக்கூச்சலிடும் அரசியல்வாதிகள், அவர்கள் எத்தனை பிரபலங்கள் என்றாலும், பயனற்றவர்கள் என்பதே என் மதிப்பீடு.

அக்களப்பணிகளில் அவர் ஊழலுக்கு எதிராக, மக்கள் உரிமைகளுக்காக அவர் மகாராஷ்டிரத்தின் காங்கிரஸ் அரசுடனும் பின்னர் பாரதிய ஜனதா கூட்டணி அரசுடன் ஓயாது போரிட்டிருக்கிறார். சட்டப்போராட்டம் களப்போராட்டம் என அவருடைய முழு வாழ்க்கையே போராட்டங்களால் ஆனது. அதில் அவர் அடைந்த வெற்றிகள் எந்த அரசியல்வாதியும் கூச்சலிட்டு மழுங்கடிக்கக்கூடியவை அல்ல.அவர் அதன்பின் ஒன்றுமே செய்யவில்லை என்றாலும் அவர் சமகாலக் காந்தியர்களில் தலையாயவர்தான்.

அண்ணா ஹசாரே தேசிய அளவில் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு வந்தமைக்கான காரணம் அன்று நாள் ஒன்று என வெளிவந்த ஊழல்செய்திகள். அது உருவாக்கிய மக்கள் எழுச்சி. அவர் தேசிய அளவில் ஊழலுக்கு எதிராக ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்கினார். அதில் அவருடன் இருந்தவர்கள் அர்விந்த் கேஜ்ரிவால் முதல் மேதாபட்கர் வரை அனைவருமேதான். இன்று அவரை பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவாளர் என்று சொன்னீர்கள் என்றால் பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட அனைவரையுமே அப்படிச் சொல்கிறீர்கள் என்றுதான் பொருள்.

அன்று உருவாகிவந்த எழுச்சி அண்ணா ஹசாரேயை தன் முகமாகக் கொண்டது. அவ்வியக்கம் வீழ்ச்சி அடைந்தது.. அண்ணா ஹசாரே இயக்கம் ஒரு அமைப்பாக, அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள்கண்காணிப்பு மையமாக, திரண்டிருக்கவேண்டும். ஆனால் அது எதிர்பார்ப்பு. அது நிகழாமல் போயிற்று. ஏன் என்றால் அண்ணா ஹசாரே காந்தி அல்ல என்பதனால்தான்

காந்திய இயக்கத்திற்கும் அண்ணா ஹசாரே இயக்கத்திற்குமான வேறுபாடுகள் இவை..

அ. அவ்வியக்கத்திற்கு அண்ணா ஹசாரே மறுக்கமுடியாத தலைவராக இருக்கவில்லை. பிறர் மேல் அண்ணா ஹசாரேவுக்கு கருத்தியல்செல்வாக்கு முழுமையானது அல்ல. அவருடைய பின்புலச் சாதனைகள், மக்களாதரவு காரணமாக அவர்களுக்கு அவர்மேல் ஒரு மதிப்பு மட்டுமே இருந்தது . அவர்கள் அவருக்கிருந்த மக்களாதரவைப்  பயன்படுத்திக்கொண்டார்கள்.

ஆ. அண்ணா ஹசாரே இயக்கம் ஓர் எதிர்வினை மட்டுமே. அவருக்குப்பின்னால் ஓர் உறுதியான அமைப்பு இல்லை. அதை உருவாக்க அவரால் இயலவில்லை. காந்தி உறுதியான அமைப்பை, நிதியை உருவாக்கியபின்னரே போராட்டத்தை ஆரம்பித்தார். அத்தோடு அண்ணா ஹசாரேவின் இயக்கம் பெரும்பாலும் வட இந்தியா சார்ந்தது

இ. அண்ணா ஹசாரேயின் இயக்கம் செய்தித்தாள் வாசிக்கும் நடுத்தரவர்க்கத்தால் ஆதரிக்கப்பட்டது. மகாராஷ்டிரத்திற்கு வெளியே அவர் அடித்தளமக்களால் அறியப்பட்டிருக்கவில்லை.

ஈ. காந்தி மிகச்சிறிய அளவில் தொடங்கி தொடர்ச்சியாக  பிழைகளைக் களைந்தபடி  செயல்பட்டு படிப்படியாக இயக்கத்தை வளர்த்திருப்பார். இப்படி ஓர் அலையென தொடங்கியிருக்க மாட்டார். எந்த அலையும் அதே விசையில் திரும்பச்செல்லும்.

ஆகவே அண்ணா ஹசாரே இயக்கம் ஓர் ஆரம்ப அலை என்பதுடன் ஓய்ந்தது. அவர் மீண்டும் மீண்டும் அப்போராட்டத்தை முன்னெடுக்க முயன்றார், பாரதிய ஜனதாவுக்கு எதிராகவும் நிகழ்த்த, முயன்றார்.  அதற்கு மக்களாதரவு ஏதுமில்லாமல் சோர்ந்து பின்வாங்க நேர்ந்தது என்பதுதான் வரலாறு. இன்று அவர் நம் சூழலால் தோற்கடிக்கப்பட்ட ஒரு குரல். ஆனால் அந்த தோல்வி அவருடைய மட்டும் தவறு அல்ல.நாம் அவர்மேல் அதை வசதியாக ஏற்றிக்கொண்டால் இழப்பு அவருக்கு அல்ல.

உங்களுக்கு ஆர்வமிருந்தால் பார்க்கலாம். நம் சமகாலத்தைய மக்களியக்கங்களில் மிகப்பெரும்பாலானவை அறுதியாகத் தோல்வியே அடைகின்றன. அதற்கான காரணங்கள் என்ன என்பதை அரசியல் ஆய்வாளர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் அதனால் அப்போராட்டங்களை நிகழ்த்தியவர்கள் எல்லாருமே வீணர்கள் என்று பொருள் இல்லை. அப்படிச் சொல்லும் காங்கிரஸ்காரராக நீங்கள் இன்னும் பரிணாமம் அடையவில்லை என நினைக்கிறேன்.

அண்ணா ஹசாரேவின் இயக்கத்தை பாரதிய ஜனதா பயன்படுத்திக்கொண்டதா? இருக்கலாம், ஆனால் அவர்களுக்கும் அண்ணா ஹசாரேவுக்குமான முரண்பாடுகளையும் அன்றே கண்டோம்.  தேசிய அளவில் அவரை பாரதிய ஜனதாக் கட்சியினர் அன்று வசைபாடியவற்றை இன்றும் சென்று எவரும் வாசிக்கலாம். அவர்கள் அவரை காங்கிரஸின் கையாள் என்றனர். அவர் பாரதிய ஜனதாக் கட்சியினரை தன் மேடையில் ஏற்றவில்லை என்பதனால் அவருடைய பின்னணியை கீழ்மையாகச் சித்தரித்தனர்

இன்று அதைப்போல ஒரு போராட்டம் உருவானால் அதை காங்கிரஸ் ஆதரித்து பயன்படுத்திக்கொள்ளாதா என்ன? அப்படி நிகழ்ந்தால் அப்போராட்டத்தை காங்கிரஸின் ரகசிய ஏஜெண்டுகளின் போராட்டம் என்றுதான் பாரதிய ஜனதாக் கட்சியினர் சொல்வார்கள். அப்போதும் என்னைப்போன்ற சிலரே அப்படிப் போராடுபவர்களின் தகுதியையும், பின்னணியையும் பார்ப்போம்

தகவலறியும் உரிமைச்சட்டம் காங்கிரஸ் ‘அளித்தது’ அல்ல. காங்கிரஸிடமிருந்து வென்றெடுக்கப்பட்டது. அதை நிகழ்த்திய அருணா ராய் போன்றவர்கள் அன்று அண்ணா ஹசாரேவுக்கு அணுக்கமானவர்களாகவே இருந்தனர். லோக்பால் கோரிக்கை தகவலறியும் உரிமைச்சட்டத்தின் இன்னொரு படியே. அக்கோரிக்கையை முன்வைத்து அண்ணா ஹசாரே நிகழ்த்திய போர் ஒரு முன்னெடுப்பு. அது அதன் மெய்யான அளவை விட பெரிய போராட்டமாக ஆனதும், அரசியல் காய்நீக்கத்தால் கையாளப்பட்டதும், அறுதியாக அதன் ஆதரவாளர்களால் கைவிடப்பட்டதும் ஒரு தேசிய அவலம். ஆனால் இப்போதுகூட அது முற்றாகத் தோல்வியடைந்த ஓர் இயக்கம் என நான் நினைக்கவில்லை. புதுவடிவில் அதை எவரேனும் முன்னெடுக்கலாம். மீண்டும் அது புத்தெழுச்சி கொண்டு வரலாம்

போராட்டக்காரர்களை ஏதேனும் வகையில் அதிகாரத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இழிவுசெய்வது இங்கே சாதாரணம். அதிகாரமோ அமைப்போ கையிலிருக்கையில் அவர்களால் ஆற்றலுடன் அவ்விழிவுபடுத்தலைச் செய்யமுடியும். ஆனால் எப்போதுமே போராடுபவர்கள் தனிப்பட்டமுறையில் எதையாவது அடைகிறார்களா என்பதுதான் முதல்கேள்வி. அவர்களின் தியாகப்புலம் என்ன என்று பார்ப்பதே என் அணுகுமுறை, மாத்ரிசதன் சார்பில் கங்கைக்கான போர் நிகழ்ந்தபோது அன்றைய காங்கிரஸ் அரசு அவர்களை இந்துத்துவர்களால் இயக்கப்படுபவர்களாகச் சித்தரித்தது. இன்றும் அப்போர் தொடர்கிறது. இன்று அவர்களை காங்கிரஸின் ஐந்தாம்படை என்கிறார்கள் இந்துத்துவர்கள். அவர்களுக்காக நிலைகொள்ள எங்களைப்போல ஒருசிலராவது இருக்கட்டுமே.

உங்களுக்கு எதிரானவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் ஆக இருக்கவேண்டியதில்லை. உங்களுக்கு எதிரானவர்கள் என்பதற்காக அவர்களின் தகுதிகளைப் பார்க்காமல்  கொச்சைப்படுத்த தொடங்கினால் நீங்கள் இன்னொரு வகைஅரசியலுக்குள் நுழைகிறீர்கள். அண்ணா ஹசாரேயை திமுகவின் கூட்டம் வசைபாடியது, சிறுமைப்படுத்தியது. அன்றும் இன்றும் அண்ணா ஹசாரே போன்ற ஒருவரின் பின்னணிச் சாதனைகளை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் காந்தி பெயரைச் சொல்கிறீர்கள். ஆகவேதான் இதை எழுதுகிறேன்

ஜெ

***

அண்ணா ஹசாரேவுக்கு வணக்கம்

சோ-அண்ணா ஹசாரே-ஒரு கடிதம்

அண்ணா ஹசாரே – கடிதங்கள்

அண்ணா ஹசாரே, தாலிபானியம்?

அண்ணா ஹசாரே- அவதூறுகள்

============================================================

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்

நீர் நெருப்பு – ஒரு பயணம்

நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு

முந்தைய கட்டுரைஅபி, விஷ்ணுபுரம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசிறுகதை அரங்கு- ஈரோடு அறிவிப்பு