[குடோப்பி தெரு]
ஆர்தர் சி கிளார்க் ‘சின்னம்’ [The Sentinel] என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அறிவியல்புனைவு. ஆனால் மிக எளிமையானது. இதை நான் எம்.எஸ். அவர்களைக்கொண்டு மொழியாக்கம் செய்யச்செய்து 2001ல் சொல்புதிது இதழில் வெளியிட்டேன். நிலவுக்குச் செல்பவர்கள் அங்கே ஒரு பொருளைப் பார்க்கிறார்கள். மிகச்சரியான முக்கோண முப்பட்டை வடிவமானது. ஆகவே அது எவராலோ செய்யப்பட்டதுதான் என தெரிகிறது. ஆனால் உள்ளே நுழைய வாயில்கள் இல்லை. திறக்க முடியவில்லை. படிகம்போன்ற எதனாலோ ஆனது. உடைக்கவும் முடியவில்லை. அது ஒரு சின்னம், அதை எவரோ எப்போதோ அங்குவிட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அது என்ன என சொல்லாமல் ஊகிக்கவிட்டு அக்கதை முடியும்.
அந்தக்கதை பற்றிய விவாதத்தின்போது ஆர்தர் சி கிளார்க் சொன்னார். புவியின்மேல் நூற்றுக்கணக்கான பெருங்கற்கள், கற்காலப் பண்பாட்டுச்சின்னங்கள் உள்ளன. அவையும் நமக்கு இவ்வாறான சின்னங்கள்தான். எவரோ எதனாலோ நமக்காக விட்டுச்சென்றவை அவை. அவற்றைப்பற்றி நாம் ஊகங்களைத்தான் நிகழ்த்தமுடியும். அறுதியாக ஒன்றுமே சொல்லிவிடமுடியாது. அவை உருவாக்கும் பிரமிப்பும் அவற்றை அர்த்தப்படுத்திக்கொள்ள நம் உள்ளம் முட்டிமுட்டி ஓய்வதுமே அவை அளிக்கும் அனுபவங்கள்.
சென்ற பத்தாண்டுகளாக நாங்கள் தொடர்ச்சியாகப் பயணம் செய்து தொல்யுகத்து சின்னங்களைப் பார்த்துக்கொண்டே வருகிறோம். நமக்குக் கிடைக்கும் தொல்சின்னங்களை இரண்டாகப்பிரிக்கலாம். நாமறியும் வரலாற்றுடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்புடையவை ஒருவகை. ஆதிச்சநல்லூர் கீழடி முதல் ஹரப்பா காலிபங்கன் வரையிலானவை நமது இன்றைய நாகரீகத்தின் நாற்றங்கால்கள். அவற்றை விளக்கிக்கொள்வதில் பல குறைபாடுகள் இன்றுள்ளன என்றாலும் அவை நமது இன்றைய நாகரீகத்தைக்கொண்டு விளங்கிக்கொள்ளத்தக்கவையே.
ஆனால் அதற்கும் தொல்காலத்தைச்சேர்ந்தவை பெருங்கற்கால, கற்கால சின்னங்கள். அவற்றை நாம் வாழும் இன்றைய நாகரீகத்தைக்கொண்டு முழுமையாக விளக்கிவிட முடியாது. பலகோணங்களில் விளக்கங்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும்கூட ஆனால் இவை இரண்டு வகைகளில் ஆய்வாளர்களுக்கு கொந்தளிப்பை அளிக்கின்றன. ஒன்று, இவை இன்றைய பிரிந்துகிடக்கும் பண்பாட்டுக்கு அடியில் ஓர் ஒற்றைப்பண்பாடு உண்டு என்று காட்டுகின்றன. இரண்டு, இவை நம் பண்பாடு இரண்டாவதாக மானுடன் உருவாக்கிக்கொண்டதே என்றும் இன்னொன்று அடியிலுள்ளது என்றும் அதுவே அடித்தளம் என்றும் காட்டுகின்றன.
தமிழகத்திலேயே ’வரலாறற்ற’ காலகட்டத்தைச் சேர்ந்த ஏராளமான சின்னங்கள் உள்ளன. கோவை கொடுமணல் பகுதியிலுள்ள பெருங்கற்கால நினைவுக்கற்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்வட்டங்கள் என நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். என் குடித்தெய்வமாகிய மேலாங்கோட்டு பகவதி கோயில் அருகிலெயே பெருங்கற்கள் உள்ளன. அவ்விடம் அறிந்த வரலாற்றில் நாநூறாண்டுகளாக இடுகாட்டுப்பகுதியாக இருந்தது. இந்தியாவெங்கும் நிலைக்கற்கள்[ menhir] கல்திட்டைகள் [ dolmen] கல்பெட்டிகள் [cist ] குடைக்கற்கள் அல்லது தொப்பிக்கற்கள் [ Umbrella Stone] கல்வளையங்கள் [round barrow] ஆகிய தொல்யுகத்துச் சின்னங்கள் உள்ளன
ஏறத்தாழ இதேகாலகட்டத்தைச் சேர்ந்தவை தொல்காலக் குகைஓவியங்கள். தமிழகத்தில் கீழ்வாலை, கருக்கியூர் பகுதிகளில் குகைஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. தொழில்நுட்பம் வளருந்தோறும் அவை தொடர்ச்சியாகக் கண்டடையப்படுகின்றன. இந்தியாவெங்கும் தொல்யுகத்துக் குகை ஓவியங்கள் உள்ளன என்றாலும் மத்தியப்பிரதேசத்தில் பிம்பேட்கா குகைகளில் உள்ள ஓவியங்கள் எண்ணிக்கையில், அளவில் பெரியவை. எங்கள் குகைப்பயணத்திலும் மத்தியப்பிரதேசப்பயணத்திலும் இவற்றைப் பார்த்துப் பதிவுசெய்திருக்கிறோம்.
[பாறை ஓவியம் பிம்பேட்கா]
கல்சின்னங்களுக்கும் குகை ஓவியங்களுக்கும் இடையே முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. கல்சின்னங்கள் ‘ஊமை’யானவை. குகை ஒவியங்கள் பேசுகின்றன. அவற்றை நம் கற்பனையால், நாம் வாழும் இன்றைய பண்பாட்டின் குறியீடுகளைக்கொண்டு விளக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. உதாரணமாக கற்காலம் முதல் ஈராயிரம் ஆண்டுகள் வரையிலான ஒரு தொடர்ச்சி பிம்பேட்கா குகை ஓவியங்களில் உள்ளது. இன்றைய கோண்ட் பழங்குடியினரிடையே வரையப்படும் வழிபாட்டு ஓவியங்களில் பிம்பேட்கா குகை ஓவியங்களின் தொடர்ச்சி காணப்படுகிறது
தொல்யுகத்துக் குகை ஓவியங்களில் இருவகை உண்டு. பாறைஓவியம் [pictograph] பாறைச்செதுக்கு ஓவியம் [petroglyph] பாறை ஓவியம் பாறைமேல் வரையப்படுவது. இன்றும் எஞ்சியிருக்கும் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் வண்ணப்பாறைகளைக்கொண்டு வரையப்பட்டவை. பெரும்பாலும் காவி அல்லது வெண்ணிறக் கற்களால் வரையப்பட்டிருக்கும். சில இடங்களில் நீலவண்ணமும் காணப்படுகிறது. தாவரங்கள், விலங்குகளின் உடற்பொருட்களைக்கொண்டு வரையப்பட்டவை காலத்தில் மறைந்திருக்கலாம். பாறைச்செதுக்கு ஓவியம் என்பது பாறைப்பரப்பின்மேல் கல்லாலோ பிற பொருட்களாலோ செதுக்கி வரையப்படுவது.
[பாறைச்செதுக்கு ஓவியம் இடக்கல்]
தென்னகத்தில் இருக்கும் முக்கியமான பாறைச்செதுக்கு ஓவியத்தொகை கேரளத்தில் உள்ள இடக்கல் குகையில் அமைந்துள்ளது. அது ஒரு பாறைவெடிப்பு. அதன் சுவரில் கல்லால் அடித்து உருவாக்கப்பட்ட பள்ளத்தையே கோடுகளாக்கி வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளன. சூரியன், விலங்குகள் ஆகியவற்றுடன் பொய்முடி சூடி நின்றிருக்கும் பூசகன் அல்லது அரசரின் வடிவம் முன்பிருந்தும் பின்பிருந்தும் நோக்கும் கோணத்தில் அமைந்துள்ளது. பெருமளவுக்கு இன்றைய தெய்யம் களியின் தெய்வத்தோற்றத்தில் உள்ளது.
பாறைச்செதுக்கு ஓவியங்கள் பெரும்பாலும் கற்காலத்தைச் சேர்ந்தவை. ஆகவே கூரிய கற்களால் கல்லில் செதுக்கப்பட்டவை. பெரும்பாலும் வழிபாட்டுச் சடங்குகளுக்காக இவை வரையப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. வேட்டைச் செய்திகளை பரிமாறிக்கொள்ளவும் குடிக்குறிகளை நினைவில் நிலைநிறுத்தவும் வரையப்பட்டிருக்கலாம் என்று சொல்பவர்கள் உண்டு. அதிலிருந்து மேலும் மேலும் சென்று பலவகையான ஊகங்கள் உள்ளன. இக்குறியீடுகள் அன்றைய பண்பாட்டின் அடிப்படை அடையாளங்கள், அவற்றால் அன்றைய உலகம் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு ஒற்றைப் பண்பாட்டுப் படலமாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. இவை விண்ணிலிருந்து வந்திறங்கும் வேற்றுக்க்கோள் நண்பர்கள், அல்லது தலைவர்களுக்காக வரையப்பட்ட செய்தியள் என்று சொல்பவர்களும் உண்டு.
இத்தனை மர்மங்களுக்கும் ஆதாரமாக உள்ள சில கூறுகள் மறுக்கமுடியாதவை. பாறைஓவியங்கள், பாறைக்குடைவு ஓவியங்கள் உலகமெங்கும் இருந்தாலும் அவற்றுக்கிடையே திகைக்கவைக்கும் ஒற்றுமை உள்ளது. ஸ்பெயின் முதல் மஞ்சூரியாவரை ஆப்ரிக்கா முதல் சைபீரியா வரை பரந்துகிடக்கும் பாறைக்குடைவு ஓவியங்கள், பாறை ஓவியங்களில் எப்படி ஒற்றுமை வரமுடியும் என்பதே ஆய்வாளர் முன் உள்ள வினா. அவரவர் கோணத்தில் அதற்கான விளக்கங்களை அளிக்கிறார்கள்.
குடாப்பி பாறைச்செதுக்கு ஓவியங்களை நல்ல வெயில்காலத்திலேயே சென்று பார்க்கவேண்டும். மழையில் அவை நீரால் மூழ்கியிருந்தன. வெயிலின்போதுகூட சிறிய டிரோன்களைக்கொண்டு சென்று புகைப்படம் எடுத்தாலொழிய அவற்றின் முழுவடிவை பார்க்கமுடியாது. ஏனென்றால் அவற்றில் பல மிகப்பெரியவை. ஆனால் எங்களுக்கு அந்த சூழலின் உணர்வுநிலையே முக்கியமானது. எங்களில் ராஜமாணிக்கம் மட்டுமே இவற்றை ஆய்வுக்கோணத்தில் பார்ப்பவர். மற்றவர்களுக்கு வெவ்வேறுவகையில் கற்பனையையும் உள்ளுணர்வையும் தூண்டும் அனுபவம் மட்டுமே
குடோப்பி பாறைச்செதுக்கு ஓவியங்கள் ஆய்வாளரான சதீஷ் லலித் என்பவரால் தன் மாணவர்களின் உதவியுடன் 2002 ல் தான் முறையாக ஆவணப்படுத்தப்பட்டன. சதீஷ் மகாராஷ்டிரத்தின் மால்வன் மாவட்டத்தில் மேலும் பல பாறைச்செதுக்கு ஓவியங்களைக் கண்டடைந்திருக்கிறார். இவற்றில் சிந்துதுர்க் [ரத்னகிரி அருகே உள்ள ஹிவாலி சிற்றூர்] செதுக்கோவியங்கள் முக்கியமானவை. குடோப்பி ஓவியங்கள் பாண்டவர்களால் வரையப்பட்டவை என ஊரில் நம்பிக்கை இருந்தது. அதை அடிப்படையாகக்கொண்டே சதீஷ் இவற்றை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க இரண்டுவாரத்திற்குமேல் ஆகிவிட்டது என்கிறார்.
குடோப்பி பாறைச்செதுக்குகளின் காலம் என்ன? மிக நீண்டகாலம் இவை பயன்பாட்டில் இருந்திருக்கலாம். இத்தகைய பாறைச்செதுக்குகளின் பாணியைக்கொண்டு இவை பதினைந்தாயிரம் ஆண்டுகள் தொன்மையானவை என கணிக்கப்படுகிறது. Rock Art Society of India வின் பொதுவான கணிப்பின்படி இவற்றில் மிகப்பழைய செதுக்கு பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. கல்லால் அறைந்து உருவாக்கப்பட்ட கோடுகளால் ஆன மிகத்தொன்மையான வடிவங்கள் இங்குள்ளன. கருங்கல் துண்டால் உடைத்து வரையப்படும் வசதிக்காகவே இந்த மென்மையான செங்கப்பிக்கல் பாறை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. பிற்காலத்தில் உலோகங்களால் செதுக்கப்பட்ட இரட்டைத் தலைக்கழுகு படம் உள்ளது. அது ஏழாயிரம் ஆண்டுகள் தொன்மை கொண்டதாக இருக்கலாம். ஓவியங்களின் அமைப்பிலும் வரையப்பட்ட பொருட்களிலும் தொடர்ச்சியான வளர்ச்சி காணப்படுகிறது.
மழையில் அந்த ஓவியங்களை தேடித்தேடிப் பார்த்தது ஒரு காலப்பயணம். நீர் காலமென மாறி திரையிட்டிருந்தது. நாங்கள் அத்திரையை அள்ளி அள்ளி விலக்கினோம். ராஜமாணிக்கம் அந்த தளத்தில் ஏற்கனவே ஈடுபட்டிருப்பவர் என்பதனால் அவருடைய கண்களுக்குத்தான் பெரும்பாலான வடிவங்கள் முதலில் தென்பட்டன. அவற்றில் மிகத்தொன்மையானது, ஆகவே முக்கியமானது சுருள்வட்டவடிவம். தொல்ஓவியங்களில் மிக எளிமையான, உலகம் முழுக்க உள்ள மூன்று வடிவங்கள் அ. வட்டச்சுருள், ஆ. வட்டம், இ.கையை ஒற்றி உருவாக்கப்படும் வடிவம் ஆகியவை.
இவற்றின் பொருளை வெறுமே பயன்பாட்டு நோக்கில் புரிந்துகொள்ள முடியாது. கற்காலத்திற்கும் முன் மனிதன் ஹோமோ எரக்டஸ் ஆக இருந்தபோதே இவற்றை வரையத் தொடங்கிவிட்டனர். இந்த வடிவத்தில் உள்ள ஒழுங்கு வெளியே இயற்கையில் இல்லாதது. ஆகவே இதை கண்டுபிடித்ததுமே அன்றைய மனிதர்களின் கற்பனையை தூண்டிவிட்டிருக்கலாம். திட்டவட்டமாகவே மானுட உருவாக்கமான வடிவம் என்பது தெளிவான அடையாளம். மெல்லமெல்ல அது குறியீடாக ஆகியிருக்கலாம். அது ஏதோ ஒருவகையில் அன்றைய உள்ளம் ‘முடிவிலி’ ‘மையம்’ ஆகியவற்றை உள்வாங்கிக்கொண்டதன் அடையாளம் என்பவர்கள் உண்டு. வட்டம் சூரியனாக காட்டப்பட்டிருப்பதை இடக்கல் குகையில் தெளிவாகவே காணமுடிகிறது.
இங்குள்ள இன்னொரு முக்கியமான ஓவியம் ‘மிருங்களின் அரசன்’ என்று ஆய்வாளர்களால் பொதுவாகச் சொல்லப்படும் ஒரு வடிவம்.[Master of animal] ராஜமாணிக்கம் அவ்வடிவைப் பார்த்ததுமே ராமகிருஷ்ண பரமஹம்சர் போல மெய்ஞானநிலைக்கே சென்றுவிட்டார். உலகளாவிய தொல்வடிவம் இது. இன்றுள்ள பல தெய்வ வடிவங்களின் முன்னுருவம். நல்லிடையனாகிய பிதா, பசுபதியாகிய சிவன் போன்ற பல தெய்வங்களுக்கு இதுதான் தோற்றுவாய்., இந்த அடையாளம் மெசபடோமிய, எகிப்திய, கெல்டிக் தொன்மங்களில் எல்லாம் உள்ளது. [விக்கிப்பீடியா]
இதை இருவகைகளில் சொல்லலாம். கீழ்நிலையில் நின்று சொல்வதாக இருந்தால் இது அன்றைய இனக்குழுவினரின் வெற்றிகரமான வேட்டைக்காரன். ஆகவே குலக்குழுக்களின் தலைவன். இறந்துபோன அந்த மூதாதையை இப்படி சிறந்த வேட்டைக்காரன் என்றும் தன் குலத்திற்கு இறந்தபின்னரும் வந்து உணவூட்டுபவன் என்றும் உருவகித்திருக்கிறார்கள். அதாவது நம் மொழியில் ’அன்னதாதா’. பஞ்சம் பசி வராமலிருக்க அவனை வழிபட்டிருக்கிறார்கள்.
தத்துவார்த்தமாக இதை இப்படி விரித்துக்கொள்வது உச்ச நிலை. உலகிலுள்ள அத்தனை விலங்குகளும் ஆத்மா கொண்டவை. அத்தனை ஆத்மாக்களையும் சேர்த்து ஒற்றை மனித ஆத்மாவாகக் கருதினால் அதுதான் இவ்வடிவம். ஒரு மனித உருவம் இரு விலங்குகளை தன் இரு கைகளிலும் பற்றியபடி இருக்கும் வடிவம் இது. சில இடங்களில் விலங்குகள் தலைகீழாகப் பிடிக்கப்பட்டிருக்கும். இந்த தெய்வ உருவகமே இரைவிலங்கென்று ஆகி வந்து மக்களுக்கு உணவூட்டும் இயற்கையின் சாரம்.
இந்த வடிவத்தின் பல்வேறு மருவுருக்கள் ஐரோப்பிய, ஈரானியப் பண்பாட்டில் உள்ளன என்று ராஜமாணிக்கம் சொன்னார். எகிப்தின் பொன்முத்திரையில் இரு வாத்துக்ளை அல்லது அன்னங்களைப் பிடித்துக்கொண்டிருப்பது போலவும், நார்டிக் தொன்மத்தில் இரண்டு கரடிகளை பிடித்திருப்பது போலவும், கெல்டிக் தொன்மத்தில் ஒரு கையில் பாம்பும், மறுகையில் வளையலும் வைத்திருக்கும் குண்டேஸ்ட்ரப் உருவகமாகவும் இது உள்ளது
கிமு எட்டாம் நூற்றாண்டுக்கு முந்தைய அக்கிமேனியன் வெண்கலக் காப்பான் சிற்பத்தில் இரண்டு குதிரைகளை கையில் பிடித்துக்கொண்டிருப்பது போன்று உள்ளது. சிந்து சமவெளி முத்திரைகளில் இரண்டு புலிகளை பிடித்திருக்கும் கொம்பு கீரிடம் சுமந்திருக்கும் காப்பான் முத்திரை உள்ளது என்றார் ராஜமாணிக்கம்
குடோப்பியில் உள்ள செதுக்கோவியம் விலங்குகளின் அரசனின் ஒருவகை ஜியோமிதி வடிவம் என்றுதான் தோன்றியது. பழங்கால ஓவியங்களில் இந்தக் கூறு குறிப்பிடத்தக்கது. இதை பிம்பேட்கா குகைகளிலும் காணமுடிந்தது. நேரில் காணும் காட்சிகளிலிருந்து நேராக அதன் ஜியோமிதி வடிவங்களை நோக்கியே அக்காலத்து ஓவியனின் கண்செல்கிறது. பின்னர் அந்த ஜியோமிதி வடிவங்களிலிருந்து காட்சிகளை உருவாக்குகிறான். பருப்ப்பொருட்களையும் அசைவுகளையும் ஜியோமிதிவடிவங்களாகக் குறுக்கிப் புரிந்துகொள்ள முடிந்தது மானுடசிந்தனையின் மிகப்பெரிய பாய்ச்சல் என தோன்றுகிறது. சட்டென்று சூழ்ந்திருக்கும் பொருள்வய உலகின்மேல் ஒரு வசமான பிடி கிடைத்துவிட்டது
விலங்குகளின் அரசன் படமும் சற்றுப் பிற்காலத்தையது. ஆகவே பிற பகுதி பள்ளமாக்கப்பட்டு அது மட்டும் புடைத்திருப்பதுபோல் உள்ளது. இங்குள்ள இரட்டைக்கழுச்சின்னமும் அவ்வாறே செதுக்கப்பட்டுள்ளது.செங்கப்பிக்கல்லில் ஒரு பள்ளம். அதில் நீர் தேங்கியிருக்க இரட்டைக்கழுகின் ஜியோமிதி வடிவம் புடைத்து நின்றிருந்தது. மிகத்தெளிவான வடிவம். இரண்டு தலைகளையும் இரண்டு பக்கமாகத் திருப்பியிருக்கும் பருந்து அல்லது கழுகு [கழுத்து நீளமாக உள்ளது] அந்த வடிவம் சற்றுமுன் எவரோ செய்து விட்டுவிட்டுப் போனதுபோல வானின் ஒளி பளபளக்க கிடந்தது. ஏதோ அறிவியல்புனைகதையில் நிகழ்வதுபோல!
இரட்டைக் கழுகுச்சின்னத்தைப் பார்த்தது எனக்கு ஒருவகையான மெய்ப்புகொள்ளலை அளித்தது. ஏனென்றால் அதை ஓர் இந்திய அடையாளம் என்றே நான் எண்ணியிருக்கவில்லை. வெவ்வேறு ஐரோப்பியப் பண்பாட்டு நூல்களில் அதைப்பார்த்திருக்கிறேன். கண்ணெதிரே நம் பண்பாட்டின் அடிக்கட்டுமானமாக அதைக் காணும்போது நம்மைப்பற்றி நாம் என்ன அறிந்திருக்கிறோம் என்ற பதைப்பே உருவாகிறது. என் புரிதலில் அது தொன்மையான கிரேக்கப் போர்ச்சின்னம். பின்னர் ரோமாபுரியாலும் அதன்பின் ரோமை முன்னுதாரணமாகக் கொண்ட ஜெர்மானிய, ருஷ்ய ,அமெரிக்கப்பேரரசுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
பின்னர் நினைத்தபோது மைசூர் செல்லும்போதெல்லாம் அதைப் பார்த்திருப்பது நினைவுக்கு வந்தது. மைசூர் அந்த இலச்சினையை ஐரோப்பியரிடமிருந்து பெற்றுக்கொண்டது என்றுதான் அறிமுக நூல்களில் இருக்கிறது. இப்படி ஒரு வேர் அதற்கு இருப்பது வியப்புக்குரியதுதான்
இரட்டைத்தலைப் பறவை கர்நாடகப் பண்பாட்டில் பல்வேறு இடங்களில் காணப்படுகிறது. கிபி நான்காம் நூற்றாண்டு முதல் பன்வாஸியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த கடம்பர்களின் சின்னங்களில் ஒன்று அது. கதம்ப மன்னர் காகுஸ்த வர்மனின் நாணயத்தில் இச்சின்னம் காணப்படுகிறது கதம்பர்களுக்கு அது எங்கிருந்து வந்தது என ஆராயப்படவேண்டும்
[கதம்பர்களின் சின்னம்]
மைசூர் அரசின் இரட்டைத்தலைக் கழுகுச் சின்னம் கண்டேபருந்தா என அழைக்கப்படுகிறது. இரட்டைத்தலைக் கழுகு சிறகு விரித்து கைகளையும் விரித்து நின்றிருக்கும் அமைப்பு கொண்டது. மைசூர் இந்த இலச்சினையை எப்படி தெரிவுசெய்திருக்கக்கூடும்? அவர்கள் கதமப்ர்களின் குருதிநீட்சியாக தன்னை உருவகித்துக்கொண்டார்களா? மைசூரை ஒட்டியிருக்கும் கதம்ப மன்னர்களின் ஆலயங்களில் இந்தச் சின்னம் இருக்கிறது. அதிலிருந்து பெற்றுக்கொண்டார்களா?
ஒரு கன்னட நண்பரிடம் நான் விசாரித்தபோது இது குடகர்கள் வழிபாட்டில் வைத்திருந்த இலச்சினை என்றனர். மந்திரவாதச் சடங்குகளுடன் சம்பந்தப்பட்டது. வெற்றிக்கு அடையாளம். ஆகவே மைசூர் சம்ஸ்தானத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தொன்மையான அரச அடையாளமாகவும் , பல்வேறு ரகசிய வழிபாடுகளுக்குரிய அடையாளமாகவும் இது நீடித்திருக்கிறது
[மைசூரின் இலச்சினை]
நாங்கள்திரும்பி வரும்போது பெங்களூரில் பாலத்திற்கு அடியில் வரையப்பட்டிருந்த ஓவியங்களில் சட்டென்று கிருஷ்ணன் இரட்டைத்தலை ஓவியம் இருப்பதை கண்டார் திகைப்புடன் கூச்சலிட்டு “சார் அங்கு பாருங்கள் அதே இரட்டை தலை ஓவியம்!” என்றார் அங்கு பார்த்தபோது இரட்டை தலை பருந்தின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது அது அங்கு வெறும் அலங்காரத்திற்காகவே வரையப்பட்டிருந்தாலும் கூட அந்த தொடர்ச்சி திகைப்பூட்டுவதாக இருந்தது ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்குப்பின் நேற்று கட்டி எழுப்ப்பபட்ட பாலமொன்றின் ஓவியத்தில் அதே இரட்டைப்பருந்து அமைந்திருக்கிறது
ஆனால் இன்னொரு விந்தை உள்ளது. இந்த வடிவத்தை ஆராய்ந்த மராட்டிய ஆய்வாளர்களுக்கு இப்படி கர்நாடகப்பண்பாட்டில் ஆழமாக வேரூன்றிருக்கும் வடிவம்தான் இது என தெரிந்திருக்கவில்லை. அவர்கல் கெல்டிக் தொன்மத்தையெல்லாம் அறிந்திருக்கிறார்கள். இது இந்திய ஆய்வாளர்களின் சிக்கல்களில் ஒன்று. ஆவணப்படுத்தப்பட்டது என்பதனாலேயே அவர்கள் ஐரோப்பாவை மிகையாக ஆராய்கிறார்கள். ஐரோப்பாவை மையமாகக் கொண்டு உருவகங்களைச் செய்கிறார்கள்.
இரட்டைத்தலைப் பருந்து ரோமப்பேரசரின் போர் இலச்சினை. அவர்களின் கேடயங்களில் இருந்தது. அதன் ஊற்றுக்கண் மெஸபடோமியாவை மையமாகக் கொண்ட பண்பாடுகளிலும், கிபி 1600 வாக்கில் இருந்த ஹிட்டைட் [Hittite] பேரரசிலும் உள்ளது. அவர்களின் போர் இலச்சினையாகவும் அரசமுத்திரையாகவும் இருந்திருக்கிறது. பின்னர் பைசாண்டைன் பேரரசு [கீழை ரோமப்பேரரசு] உள்ளிட்ட பல அரசுகளின் முத்திரையாகத் திகழ்ந்திருக்கிறது. பின்னர் துருக்கியப் பேரரசும் போப்பாண்டவரின் புனித ரோமப்பேரரசும் இந்த அடையாளத்தைப் பயன்படுத்தியிருக்கின்றன.
நவீன யுகத்தில் ஹிட்லர் இந்த அடையாளத்தைப் பயன்படுத்தினார். தற்போது அமெரிக்க வான்படையின் அடையாளமாக உள்ளது. ரஷ்ய ராணுவத்திலும் இந்த அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சின்னத்திற்கும் சரபேஸ்வரரின் சிற்பத்திற்கும் ஒற்றுமை இருப்பதாக ராஜமாணிக்கம் கருதுகிறார். சாதாரணமாகத் தேடினாலே உலகமெங்கும் போர்க்குழுக்கள், ராணுவங்கள், தொல்லரசுகளின் குறியீடாக இரட்டைத்தலைக் கழுகு, பருந்து காணப்படுகிறது. ஆம், மேஸன்களின் குறியீடாகவும் உள்ளது.
இந்த இடத்தில் இதை எதன்பொருட்டு பொறித்தார்கள் என்று தெரியவில்லை. அது ஒரு திறந்தவெளி வழிபாட்டிடம் என்றுதான் தோன்றியது. மக்கள் கூட்டமாக வந்து நின்று இறைச்சடங்குகளைச் செய்திருக்கலாம். அப்படியென்றால் அவ்விடத்தின் ‘கருவறை’ அந்த இரட்டைத்தலைப் பறவைதான். ஆனால் அத்தகைய முக்கியத்துவம் இருந்த ஓர் அடையாளம் இங்கிருந்து எப்படி மறைந்துபோயிற்று?
அது சூரியவம்சத்தின் அடையாளம் என்றும் மகாபாரதக் காலத்திலேயே சந்திரவம்சம் இந்தியாவெங்கும் ஆதிக்கம் செலுத்திவிட்டது என்றும் ராஜமாணிக்கம் சொன்னார். அப்படியென்றாலும்கூட அவை முற்றாக எப்படி மறைந்தன? பழங்குடிகளிடமாவது நீடிக்கவேண்டும் அல்லவா?மெய்யாகவே ராஜமாணிக்கம் சொல்வதுபோல சரபேஸ்வரர் வடிவில் அது நீடிக்கிறதா? தொன்மையான சரபேஸ்வரர் சிலைகளிலும் மத்திய இந்தியாவின் ஓவியங்களிலும் சரபர் இரட்டைத்தலைப் பறவையாகவே தென்படுகிறார்.
இந்தியத் தெய்வங்களின் தொடக்கம் எங்கிருந்து? இன்று இதை ஆராய்ந்தால் ஆற்றல்பெற்று வசைநாக்குகளுடன் நம்மைச்சூழ்ந்திருக்கும் இந்துத்துவ –நவீனவைதிகக் கும்பல் பிய்த்துப்பிடுங்க வந்துவிடும். ஆனால் அந்த ஆய்வுகள் ஏதோ ஒருவகையில் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். இறையுருவகங்கள் இறைச்சக்தியால் அவ்வண்ணமே மானுடனுக்குக் காட்டப்பட்டவை என எண்ணுதல் பக்தர்களின் நம்பிக்கை. அவை வெவ்வேறு தொல்குறியீடுகள் பல வகைகளில் தொகுக்கப்பட்டு, திரிபும் வளர்ச்சியும் அடைந்து , பண்பாட்டால் திரட்டி எடுக்கப்பட்டவை என்பது நவீன ஆய்வாளர்களின் ஆய்வுமுறை.
நான் ஆன்மிகவாதிதான். ஆனால் மதத்தையும் தெய்வங்களையும் புறவயமாக ஆராய உளத்தடை எனக்கு இல்லை, ஏனென்றால் வெறும்பக்தி அல்ல என் வழி. தெய்வங்கள் மிகமிகத் தொன்மையான காலகட்டத்தில், சொல்லப்போனால் நாம் வாழும் இந்த யுகத்திற்கு அடியிலுள்ள முந்தைய யுகத்தில், மக்களிடம் தோன்றியவை. இங்கே நாமறியமுடியாத ஏதோ ஒருவகையில் வெளிப்பாடு கொள்ளும் ஒன்று இவ்வகையில் குறியீடுகளாக அன்று அறியப்பட்டது, இவ்வடிவங்களில் தொடர்புறுத்தப்பட்டது. அந்தத் தொடர்புறுத்தலினூடாக அது பலவகைகளில் பரிணாமம் கொண்டு இன்றிருக்கும் தெய்வவடிவங்களாகியது. இது ஒரு காலகட்டத்தின் தோற்றம் மட்டுமே. நாளை இன்றைய இறைவடிவங்கள் இன்னமும் மாறுபடக்கூடும். நம்மைக் கடந்தது, மாறாமெய்மை என நிலைகொள்வது இவ்வாறு தன்னை வெளிப்படுத்திய அந்த மூலம்தானே ஒழிய இந்த வெளிப்பாட்டுருவங்கள் அல்ல.
இது பருந்தா கழுகா? பின்னாளில் பருந்து என்றே சொல்லப்படுகிறது. [கண்டபருந்து, பிளவுண்ட பருந்து] செம்பருந்து நேரடியாகவே சூரியனுடன் தொடர்புடையது. அதன் பொன்னிற இறகுகள் சூரியனின் கதிர்கள் போன்றவை என்னும் வர்ணனை தொல்பாடல்கள் அனைத்திலும் காணப்படுகிறது. செம்பருந்து சூரியனின் பறவைவடிவமாக கருதப்பட்டது. இந்து தொன்மங்களில்தான் அது கருடனாக சூரியனுடன் தொடர்பின்றி விஷ்ணுவுடன் இணைந்துள்ளது. என்றேனும் அது சூரியனுடன் இணைந்திருந்ததா என்பதை ஆய்வாளர்களே சொல்லவேண்டும். உலகமெங்கும் பருந்து, கழுகு ஆகியவை சூரியகுல மன்னர்களின் அடையாளங்கள்.பருந்தின் இறகை மணிமுடியில் சூடிக்கொள்ளும் வழக்கம் திருவிதாங்கூர் அரசர்களிடம் இருந்தது. இந்த அடையாளம் எங்கிருந்து வந்து எங்கெல்லாம் இன்று உள்ளது?
அந்த இடத்தில் ஊமையான அரக்கன் ஒருவன் முன் நின்றிருக்கும் பிரமிப்பு ஏற்பட்டது. அவன் இடிமுழக்கம் போன்ற குரலால் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கிறான். நம்மால் அவனைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை
[மேலும்]
குகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்
http://www.themetrognome.in/places/neolithic-rock-art-sites-found-in-maharashtra
https://en.wikipedia.org/wiki/Double-headed_eagle