ஆற்றூர்-கடிதங்கள்

 

 

அன்புள்ள ஜெ,

 

ஒரு முறை யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் ஆற்றூர் ரவிவர்மா பற்றி அன்வர் அலி இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ரவிவர்மாவின் பெயரைக் கேட்டவுடன் உங்கள் தளத்தில் வெளியாகிய கட்டுரைகளும், மொழிபெயர்க்கப்பட்ட  அவரது கவிதைகளுமே நினைவுக்கு வந்தன;கூடவே பன்றிகள் பாதையைக் கடந்து சென்ற சம்பவமும். “என் ஆசிரியர்களில் முதன்மையானவர் ஆற்றூர் ரவிவர்மா” என்று பலதடவை நீங்கள் எழுதியது ஆழமாக நினைவில் உண்டு. சுந்தரராமசாமி அளவுக்கு அவரை அறிந்ததும் இல்லை. அதற்காகவே அந்த ஆவணப்படத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். யாழ் பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்திலிருந்தும் பல மாணவர்கள் ஆவணப்படத்தைப் பார்க்க வந்திருந்தனர். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது கவிதைகளை கவிஞர், விரிவுரையாளர் பா.அகிலன் வாசித்ததாக நினைவு. ஈழக் கவிதைகள் மீதும், ஈழப் போராட்டம் மீதும் அவருக்கு ஒரு பற்று இருந்தது. சேரனின் கவிதைகள் மீது அவருக்கு பெரும் மதிப்பு இருத்தையும் அந்த ஆவணப்படம் மூலம் அறிந்தேன்.

சுவரில் ஏறியமர்ந்து அருகே நாற்காலியில் அமர்ந்திருந்த ஆற்றூர் ரவிவர்மாவுடன் மலையாளத்தில் சுந்தரராமசாமி வீட்டில் சந்தித்தது சம்பந்தமான நினைவுகளையும் அப்போது அவர் செய்துவந்த மொழியாக்கங்கள் சம்பந்தமான நினைவுகளையும் மீட்டு நீங்கள் இருவரும் பேசுவதை அந்த ஆவணப்படத்தில் பதிவுசெய்திருந்தார்கள். சிறியக் காட்சித் துண்டுதான் ஆனாலும் நல்நினைவாக இப்போதும் நினைவுக்கு வருகிறது.

அவரைப் பற்றி எழுதிய கட்டுரையில் அவரது இயல்பான சிரிப்பான ‘ஹஹஹ..” என்று கொஞ்சம் இழுத்துச் சிரிக்கும் சிரிப்பு பற்றி எழுதி இருப்பீர்கள். ஆவணப்படத்தில் அந்தச் சிரிப்பைக் கண்டேன். இப்போதும் அந்தச் சிரிப்பே உள்ளத்தில் எழுந்து வடிகிறது.

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்\

 

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

ஆற்றூர் ரவி வரமா அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்

அவரும் நீங்களும் தொடர்புடைய ஒரு சின்ன விஷயத்தை  உங்களிடம் சொல்லும்படி என்னுடன் பணிபுரிந்து , இரண்டு வருடங்களுக்கு முன்பு பணிஓய்வுபெற்றிருக்கும் மூத்த ஆசிரியை ஒருவர் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பார்..  ஜெயஸ்ரீ என்னும் பிஸிக்ஸ் பேராசிரியையான இவரின் தமக்கை கோவையில் காவல் உயரதிகாரியின் மனைவி வெண்முரசு வாசகியும் கூட எனினும் எந்த கூடுகைகளுக்கும் வந்ததில்லை. ஆற்றூர் ரவி அவர்களின் மனைவி ஸ்ரீதேவி  இவர்களின் சித்தி.

நான் உங்களின் வாசகி, கூடுகைகளுக்கு வருகிறென்  அப்போது உங்களை சந்திக்கிறேன் அன்று அக்காவிடமிருந்து  தெரிந்துகொண்டவர் சில வருடங்கள்  முன்பு என்னை அழைத்து’ வா உன்கிட்டெ ஒரு விஷயம் சொல்லனும்’னு அழைத்து சொன்னார், பல வருடங்களுக்கு முன்பு உங்களின் திருமண விஷயமாக ஆற்றூர் ரவி வர்மா இவர்களிடம் ”இப்படி ஜெயமோகன்னு வேண்டிய பையன் அவனுக்கு ஒரு படிச்ச பெண்ணை பாரு, தமிழும் மலையாளமும் தெரிஞ்ச பெண்ணா இருக்கட்டும்”னு சொல்லி இருந்திருக்கார்

ஜெயஸ்ரீ அவர்களின் மாணவி ஒருத்தி வேலூரில் அப்படியான தகுதிகளுடன் இருந்ததால் இவங்களும் அங்கே ஒருநாள் போயிருக்கிறார்கள். அன்று ஜெயஸ்ரீ மேடத்திற்கு ஏராளமான சிற்றுண்டிகளை உணவு மேசை முழுக்க நிரப்பி வைத்து மிக மரியாதையாக கவனித்து திருமணத்திற்கு  அவர்கள் பக்கமிருந்து சம்மதம்னு சொல்லி விட்டுருக்காங்க. மிக்க மகிழ்வுடன் வேலூர் பேருந்து நிலையம் வந்து ஆற்றூர் ரவி வர்மாவுக்கு  தொலைபேசி இதை சொன்ன போதுதான் அவர் ‘’ நீ ஒண்ணும் பார்க்கவாண்டாம் ஜெயமோகன் ஒரு பொண்ணை காதலிக்கறானாம்’’ என்றிருக்கிறார்

இவங்களுக்கு அந்த மாணவியின் வீட்டில் போய் இதை சொல்ல அத்தனை வெட்கமாக இருந்திருக்கு. அத்தனை வகை வகையா சாப்பிட்டுட்டு எப்படி போய் சொல்லறதுன்னு  ரொம்ப யோசிச்சுட்டு  இதை ஒத்திப்போடவேண்டாம்னு அப்போவே திரும்ப போய்  இதை சொல்லிட்டு மன்னிப்பும் கேட்டுகிட்டாங்களாம்

‘காதலிக்கறேன்னு முன்னாடியே சொல்ல வேண்டியதுதானே? ஜெயமோகன் கருப்பா சிவப்பான்னு கூட தெரியாது நான் போய் இப்படி மன்னிப்பு கேட்டுக்கிட்டேன்னு அவரால’ன்னு நீ போய் சொல்லுன்னு” அப்போ பிடிச்சு சொல்லிட்டே இருப்பாங்க.

என்னை எங்கே பார்த்தாலும் ”சொன்னியா ஜெயமோகன்ட்ட” என்ற கேள்வி வரும்

”இங்கே பாரு  போஸ்ட் ஆஃபீஸீல் வேலை பாக்குதாமே ஜெயமோகன் சம்சாரம், அந்த வேலூரு பொண்ணு துபாய்காரனை கட்டிகிட்டா தெரியுமோ, இப்போ வேலூரில் காலேஜ் பிரின்சிபாலா இருக்கா இதையும் ஜெயமோகன்ட்டெ சொல்லு” என்றும் சொல்லுவார்

நான் விஷ்ணுபுரம் விழாவிற்கு வந்துவிட்டு திரும்பினால் என்னைபிடித்துக்கொள்வார்கள் ஒரே கேள்விதான் எப்போதும் ’’ஜெயமோகன்ட்டெ சொன்னியா’’

நான் விதம் விதமாக பொய் சொல்லுவேன் ’”சார் வரவேயில்லை, சார சுத்தி பயங்கர கூட்டம் அவர் பக்கத்திலேயே போக முடியலை, சார் என்னமோ அன்னிக்கு ஒரே கோபமா இருந்தார்  அதான் நான் போய் சொல்லலை, இப்படி வகை வகையாக சொல்லி தப்பிப்பேன்

சில தினங்களாக ஆற்றூராருக்கு நிமோனியா நிலைமை கஷ்டம்தான் என்று போனில் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள்

இன்று அவரது மறைவுச்செய்திக்கப்புறம் அவர்களை அழைத்து என் இரங்கலை தெரிவித்தேன்

ஞாயிறு இரவோ திங்களோதான் எல்லாக்காரியமும் அவரது மகன் வந்த பின்னர் நடக்கும் என்றவர். ’’கைக்காரியமா இருக்கேன், பின்னே கூப்பிடரேன்னு போனை வச்சுட்டாங்க.   டிசம்பர் விஷ்ணூபுரம் விழாவிற்கு ஜெயஸ்ரீ அவர்களை அழைத்து வருகிறேன் அவர்களே உங்களிடம்  நேரில் பேசட்டும்

மிகச்சிறிய இந்த விஷயத்தை புன்னைகையுடன் உங்ககிட்டெயோ அருணா மேம்கிட்டெயோ சொல்லனும்னு நினச்சும் முடியலை. அவர் மறைவுக்கு பின்னர்  தான் சொல்லனும்னு இருந்திருக்கு.

ஆற்றூரார் மறைவுக்கு என் அஞ்சலி

லோகமாதேவி

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-30
அடுத்த கட்டுரைஜப்பான், பிழைகள்- கடிதம்