தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கதை -கடிதங்கள்

Aruna Roy (2019)

அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா

அன்புள்ள ஜெ

 

தகவலறியும் உரிமைச்சட்டம் நீர்த்துப்போக வைக்கப்படும் சூழலில் இன்று அருணா ராய் பற்றி உங்கள் தளத்தில் பாலா எழுதிய கட்டுரை அந்தச் சட்டம் உருவான பின்னணியை மிக விரிவாக அறிமுகம் செய்கிறது. அது எளிமையான ஒரு சட்டம் அல்ல. யானைமேல் ஒரு மனிதன் பயணம் செய்கிறான். அதைப்பார்க்கும்போது முதல்முதலாக காட்டு யானையிடம் ஒரு வார்த்தையைச் சொல்ல முடிந்தது எப்படி என்ற ஆச்சரியம்தான் உருவாகும்.

அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் ஒரு சட்டத்தை அரசாங்கத்தை வைத்தே செய்யவைப்பது என்பது எளிமையான விஷயம் அல்ல. அச்சட்டம் காங்கிரஸால் கொண்டுவரப்பட்டது என்று மாற்றிக்காட்ட இன்றைக்கு சிலர் முயல்கிறார்கள். அது காங்கிரஸால் கொண்டுவரப்படவில்லை. தொடர்போராட்டங்களுக்குப்பின்னர்தான் காங்கிரஸ் அந்தச் சட்டத்தைக் கொண்டுவர ஒப்புக்கொண்டது. அது ஒரு சாதனை. அருணா ராய் அந்தச் சாதனையாளர். அல்லது இந்திய ஜனநாயகத்தின் சாதனை அது. அதைத்தான் அழிக்கிறார்கள். இன்றைக்கு அதைப்பற்றி பேசும் ஒவ்வொருவரும் இந்தக்கட்டுரையை ஒருதடவை வாசிப்பது நல்லது

டி.எஸ்.குமரவேல்

அன்புள்ள ஜெ

தகவலறியும் சட்டத்தைப்பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் அதைப்பற்றிய கட்டுரையை உங்கள் தளத்திலே வாசித்தேன். பாலா சிறப்பாக எழுதியிருக்கிறார். முன்னர் அக்கட்டுரையைப் பார்த்தேன். அப்போது வாசிக்கவில்லை. இப்போதுதான் வாசிக்கிறேன். முக்கியமான கட்டுரை. சுருக்கமாக அனைத்தையும் சொல்லியிருக்கிறது. கண்ணீர்விட்டா வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கருகத்திருவுளமோ என்றுதான் சொல்லத்தோன்றுகிறது

தகவல் அறியும் சட்டத்தை இந்த அளவுக்கு ஆபத்தானது என்று தெரியாமலேயே கொண்டுவந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அது இன்றைக்கு இந்தியா முழுக்க ஊழல் பாரபட்சம் ஆகியவற்றுக்கு எதிரான மக்களின் அதிகாரமாக மாறியிருக்கிறது. இதை இந்திய ஆட்சியாளர்கள் மட்டும் அல்ல உலகிலுள்ள எந்த ஆட்சியாளர்களும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இதற்கு எதிராக போராடி நிலைநிறுத்தாவிட்டால் இனி இப்படி ஒரு உரிமை மக்களுக்குக் கிடைக்கவே போவதில்லை

சாம்பமூர்த்தி மகாலிங்கம்.

 

அருணா ராய்,பங்கர் ராய் – கடிதங்கள்

பங்கர் ராய்- கடிதங்கள்

பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27
அடுத்த கட்டுரைநடந்தே தீரணும் வழி…