இந்தப்பயணம் மழையில் செல்வதையும் இலக்காகக் கொண்டது. நாங்கள் மழைப்பயணம் செல்லத் தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. முன்பெல்லாம் மழைப்பயணம் என்றால் கேரளத்தின் தேவிகுளம் பீர்மேடு வாகைமண் பகுதிகளுக்குச் செல்வோம். கவி, பரம்பிக்குளம் என பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம். இம்முறை மேற்குதொடர்ச்சிமலையின் வடக்கு எல்லைக்குச் சென்றோம். மழையும் கற்கோயில்களும் கற்காலச் சின்னங்களும் என ஒரு கலவையான கரு கொண்டது இந்த பயணம்
பதிமூன்றாம் தேதி முழுக்க காட்டுக்குள் பயணம். பெல்காமிலிருந்து கொங்கணி கடற்கரை நோக்கிச் செல்வதற்கு நடுவே மேற்குத்தொடர்ச்சி மலை வடபகுதி உள்ளது. அது விந்திய மலை வரைச் செல்கிறது. தக்காண பீடபூமியின் விளிம்பாக ஆகிறது. அதை ஒட்டி அமைந்திருக்கும் பெருங்காடுக்கு அம்போலிக் காட்டுப்பகுதி என்று பெயர். இங்கே அமைந்துள்ள அம்போலி அருவிகளை பார்த்துவிட்டு மலையைக் கடந்து அப்பால் செல்வது திட்டம்
அம்போலிக்காடு உலக வரைபடத்திலேயே பச்சையான தீற்றலாக தெரியும். பெல்காமிலிருந்து காலையில் கிளம்பி நாற்பது கிமீ தொலைவில் மகாராஷ்ட்ரா மாநிலத்திற்குள் தில்லாரியை சென்றடைந்தோம். கிளம்பும்போதே மழை. நேற்றுமுதலே மழைசாரல் இருந்துகொண்டிருந்தது என்றாலும் மழைச்சட்டைகளை வெளியே எடுக்கவேண்டிய தேவை இருக்கவில்லை. கிருஷ்ண கண்டடைந்த இடம் ஸ்வப்னவேல் என்னும் சுற்றுலா மையம். இது மலையுச்சியில் அமைந்த ஒரு தனியார் அருவிப்பகுதி.
எங்களால் எளிதாக வழிகண்டுபிடிக்க முடியவில்லை. அடர்ந்த காட்டுக்குள் மழையில் சென்றுகொண்டிருந்தோம். ஓர் இடத்தில் காட்டுக்குள் செல்ல அனுமதி தேவை என்று போட்டிருந்ததைக் கண்டு வண்டியை நிறுத்திவிட்டு ஒரு கிலோமீட்டர் நடந்தே சென்றோம். வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பக்கவாட்டில் ஓடை ஒன்று அருவிபோலவே ஓசையிட்டபடி ஒழுகிக்கொண்டிருந்தது. எங்களைப்போலவே ஒரு குழு காரில் தட்டழிந்துகொண்டிருந்தது. அவர்களிடம் வழிகேட்டோம். அவர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை.
அங்கே செல்பேசியில் அலைவரிசை இல்லை. வரைபடங்கள் பயனில்லை. ஆனால் மழையில் செல்வது உற்சாகமாக இருந்தது. காலையுணவுக்குப் பின் கிளம்பியிருந்தால் மேலும் உற்சாகம் இருந்திருக்கும். ஒரு சிறிய மலைப்பணியாளர்குழு சென்றுகொண்டிருந்தது. அத்தனைபேரும் பெண்கள். சிறிய செம்புநிற முகங்கள்கொண்டவர்கள். நெற்றியில் திலகத்தை பச்சைகுத்திகொண்டவர்கள். பாலிதீன் உறைகளை மடித்து தலையில் மழைக்கு அணிந்திருந்தார்கள். அவர்களிடம் வழிகேட்டோம்.
பெங்களூர் கிருஷ்ணனுக்கு இந்தி தெரியும். ஆனால் அவர்களுக்கு மராட்டி மட்டுமே தெரியும். ஆனால் அவர்களில் ஒரு பெண்மணி புரிந்துகொண்டு வழி சொன்னார்கள். விரிவாக, எச்சரிக்கைகள் எல்லாம் அளித்து கைகளை ஆட்டி ஆட்டி அவர்கள் வழிசொன்னது காட்சியனுபவமாக இருந்தது . இரு பெண்கள் சிறுமிகள். அயலவரை கூரிய பார்வையால் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தனர்.
ஸ்வப்னவேல் பாயிண்ட் என அழைக்கப்படும் இந்த இடம் ஒரு மலைத்தங்குமிடம். உண்மையில் பெரிய அளவில் செலவுள்ளது அல்ல. இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை. கார்நிறுத்த வசதி உண்டு. நாங்கள் சென்றபோது எங்களை கடந்துசென்ற காரில் இருந்தவர்கள் வந்துவிட்டிருந்தனர். அவர்களும் நாங்களும் மட்டும்தான் அங்கே இருந்தோம்
இங்கே காட்டுக்குள் ஊறிப்பெருகி வரும் மலையாறு ஒன்று கீழிருக்கும் ஒரு கிலோமீட்டருக்குமேல் ஆழமுள்ள பள்ளத்தில் செங்குத்தாகச் சரிகிறது. அந்த ஆற்றை வெட்டித்திருப்பிக்கொண்டுவந்து மேலும் மூன்று அருவிகளாக விழச்செய்திருக்கிறார்கள். பள்ளத்தாக்கு பசுமைக்காட்டால் ஆனது. பசுங்காடு ஒரு சுனாமி அலைபோல வளைந்து எழுந்து வந்து அப்படியே உறைந்துவிட்டதுபோல. எக்கணமும் எழுந்து வந்து அறைந்துவிடும் என்பதுபோல.
அருவிக்குமேல் எந்த கைப்பிடித் தடுப்பும் இல்லை. செறிந்த மழைமுகில்களால் அப்பகுதியே மூடப்பட்டிருந்தது. கொஞ்சம் மிகையுற்சாகம் கொண்ட இளைஞர்கள் ஒரு கிலோமீட்டர் ஆழமுள்ள பள்ளத்திற்குள் பறந்து இறங்கிவிட வாய்ப்பு மிகுதி. அருவிக்குமேலே நின்று அருவியைப் பார்க்கவேண்டும். கீழே முகில்மூடியிருந்தது. நோக்கிக்கொண்டே இருந்தால் காற்று வந்து வெண்ணிறத் திரையை அள்ளி விலக்கும்.
உடைவாள்கள் கொக்கிறகுகள் நத்தைத்தீற்றல்கள் யானைத் தந்தங்கள் போல அருவிகள் தெரியும். அங்கே மழைக்காலத்தில் எப்படியும் பத்துப்பதினைந்து அருவிகளைப் பார்க்கமுடியும். எண்ணிக்கொண்டிருக்கையில் அடுத்த முகில் வந்து மூடி “ஷோ அம்புட்டுதான்” என்று சொல்லிவிடும். மீண்டும் அடுத்த காட்சி தொடங்க வெண்புகைப்படலத்தைப் பார்த்தபடி காத்து நிற்கவேண்டும்.
மலையுச்சி முழுக்க பல்லாயிரம் பல்லாயிரம் செடிகள் இடைவெளியே இல்லாமல் முளைத்து அரை இஞ்ச் உயரமான மழைக்காடுபோல செறிந்திருந்தன. அதற்குள் காட்டுவிலங்குகள் போல சிறு வண்டுகள். பசுமை கண்களை ஒளிகொண்டதாக ஆக்குகிறது. பத்து பாலைவனத்தை தொடர்ந்து பார்த்தால்கூட அதைக் கலைக்க முடியாது என்று தோன்றியது.
அங்கிருந்த சிறு உணவகத்தில் டீயும் மசாலாப் பொரியும் இன்னபிறவும் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். ஒருவேளை அடுத்த பத்தாண்டுகளில் ஸ்வப்னவேல் ஒரு மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாறிவிட்டிருக்கலாம். அப்போது “அப்பல்லாம் ஆளோஞ்சுபோய் கிடக்கும் தெரியுமா?” என்று சொல்லலாம்போலும்
செல்லும் வழி முழுக்க பசுமை. இது தக்காணப்பீடபூமியின் உச்சி. ஆகவே தொன்மையான செங்கப்பிக்கல்லால் ஆனது தரை. வடக்குக் கேரளம் முதலே இந்தக் கல்தரை தொடங்கிவிடுகிறது. மங்களூர் உடுப்பி பகுதியில் கண்டிருக்கலாம். வீடுகட்டுவதே இந்தக் கற்களை வெட்டி எடுத்துத்தான்.
இக்கற்பாறைமேல் பெரிய மரங்கள் வளர்வதில்லை. இடுக்குகளில் வேரோடும் சிறிய புதர்மரங்கள்தான். ஆகவே புல்வெளிதான் ஒளிகொண்டு கண்நிறைத்து சூழ்ந்திருக்கிறது. சிறிய மலர்கள் பூக்கும் மிகச்சிறிய செடிகள். மழைக்காலத்துக் காட்சி இது. மழைநின்றதும் ஒரேவாரத்தில் காய்ந்து எருமைமாட்டின் மேல் முடிப்பரப்புபோல ஆகிவிடும்
மலையுச்சிப்புல்வெளியில் இறங்கி நடந்தோம். மழைக்கு பாலிதீன் முக்காடு போட்டுக்கொண்டு ஒருவர் எருமை மேய்த்தார். எருமைக்கும் மழைக்கும் நல்ல இசைவுண்டு. எருமையின் உடலும் மழைச்சட்டை போட்டிருப்பதுபோலவே தோன்றியது. சில எருமைகள் எங்களை ஆவலாகப் பார்த்தன.
மழை எங்கள் மழைச்சட்டைமேல் வீசி அறைந்தது. செண்டால் அடிப்பதுபோல. தரையெங்கும் நீர் ஊறி வழிந்துகொண்டிருந்தது. பாறைநீர் ஆதலால் நன்றாகத் தெளிந்த நீர். புல்லை மிதித்தபோது அழுந்தி ஊறி காலை எடுத்ததும் நிரம்பியது. புல்வெளியில் நிறைந்திருக்கும் ஒளிக்கும் பச்சை நிறம்தான்.
வானம் சாம்பல்நிறமாக மெல்லிய உறுமலுடன் இருந்தது. மழை நின்றதும் காற்று வீசியடித்து துளிகளை அள்ளிக்கொண்டுசெல்ல மழையின் சாயலே இல்லை. மீண்டும் ஒரு காற்று. அடுத்த காற்றில் முகில் வந்து மூடியது. அதில் ஒரு சிறு வெம்மை இருந்ததா? அடுத்த காற்றில் மீண்டும் மழை.
அம்போலி அருவிகள் கொஞ்சம் புகழ்பெற்றவை எனத் தோன்றுகிறது. அருகிலிருக்கும் நகரங்களிலிருந்து ஏராளமான பேர் வந்து குவிந்திருந்தனர். ஏராளமான வண்டிகள். ஜீன்ஸ் அணிந்த பெண்கள். குழந்தைகளுடன் மம்மிகள். பொறுப்பான டாடிகள். நூற்றுக்கணக்கான தற்காலிக கடைகளில் சோளக்கொண்டை விற்றுக்கொண்டிருந்தார்கள். மற்றபடி சொல்லும்படியானஉணவு ஏதும் அங்கு கிடைப்பதில்லை
கர்நாடகத்திலிருந்து வந்த இளைஞர்கும்பல் குடித்து நிலையழிந்து வெற்றுக் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தது. போதையில் அவர்களுக்கு களியாட்டு என தோன்றியது அப்படி விலங்குகளைப்போல ஆர்ப்பாட்டம் செய்வது மட்டுமே. எவருக்குமே அங்கிருந்த அருவிகளை நின்று பார்ப்பதற்கு கூட உளமிருக்கவில்லை. காவலர் வந்து அதட்டினார். ஆனால் பெரும்பாலானவர்கள் படித்த, பணமுள்ள இளைஞர்கள். இல்லையேல் கைநீட்டியிருப்பார்கள். அங்கிருந்த இயற்கையின் அழகையும் அமைதியையும் முழுமையாகவே கெடுத்தார்கள்.
எண்ணிப்பார்க்கிறேன், நான் சென்ற எந்த நாட்டிலாவது இத்தகைய கும்பலைக் கண்டிருக்கிறேனா? ஓர் உதாரணம்கூட நினைவுக்கு வரவில்லை. ஏன் நாம் இப்படி இருக்கிறோம்? கேட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான். நம் சினிமாக்கள் நம் அரசியல் நமது ஜனநாயக முறைமைகள் நமது சட்டநடவடிக்கைகள் எல்லாமே ரவுடித்தனத்தைத்தான் ஆதரிக்கின்றன. நம் பொது உளவியலும் ரவுடித்தனத்திற்கு ஆதரவானது.
இவர்கள் ரவுடிகள் அல்ல. தற்காலிகமாக ரவுடிகளாக நடித்துப்பார்க்கிறார்கள். இவர்களுக்கு எந்தப் பண்பாட்டுப் பயிற்சியும் இல்லை. கொஞ்சம் தொழில்நுட்பப் படிப்பு இருக்கும். வருமானம் இருக்கும். ஆனால் வாழ்க்கையை சுவைக்க பண்பாட்டுப்பழக்கம் தேவை. எல்லா கேளிக்கைகளுக்கும் அதற்குரிய பண்பாட்டுப்புலம் உண்டு. பயணத்திற்கு மட்டுமல்ல சரியானபடி குடிப்பதற்குக்கூட. இவர்களுக்கு ‘என்ஜாய் பண்ணத்’ தெரிந்தது இதைத்தான். குடி, கூச்சல், கலாய்ப்பு. சிலர் மிகையாக அபாயத்தைச் சீண்டி அந்த போலி சாகச உணர்வை ரசிப்பார்கள். ஒருவகையில் பரிதாபத்திற்குரியவர்கள்
மலைவிளிம்பில் கட்டப்பட்டிருந்த கைப்பிடிச் சுவருக்கு அப்பால் இரு பெரிய அருவிகள் கீழிருந்த பசுமை நிறைந்த பள்ளத்தாக்கை நோக்கிச் சரிந்தன. அப்பள்ளத்தாக்கு விழிதொடும் வரை நீண்டு சென்று மறு எல்லையில் மழைமுகில் பளிங்குபோலச் செரிந்து மூடியிருந்த ஒளிகொண்ட வானத்தில் புதைந்து மறைந்தது. பலகோடி ஆண்டுகளாக மழை விழுந்து ஆறுகளாக ஓடி அரித்து உருவான பள்ளத்தாக்கு. பசுமையின் ஒரு பெருங்குவை.
மறுபுறம் எழுந்த மலையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட அருவிகள் பொழிந்துகொண்டிருந்தன. மலைவிளிம்பில் நின்று பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். முதலில் நாங்கள் சென்றபோது அருவியின் ஓசையும் நீர்த்துளி பொழிவும் மட்டுமே இருந்தது. நோக்குமிடமெங்கும் வெண்ணிற முகில்திரை முழுமையாக மூடியிருந்தது.
முகில்திரையை கடந்து மலைகளைப் பார்ப்பது ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு வகை. வடக்கே முகில்மேலும் அடர்த்தியாகவும் வெண்மையாகவும் இருக்கும். இமையமலைகள் மேல் தூயவெண்பட்டு போலவே மூடும். இங்கு எண்ணைக்கறைபடிந்த காகிதம்போலத் தோன்றுகிறது. அதை மலைகள் வரையப்பட்ட ஓவியம் மீது வைத்ததுபோல மலைகளின் கோட்டுவடிவம் எப்போதும் தெரிந்துகொண்டே இருக்கிறது. முகில்திரைக்குள் ஒலிகள் எப்படி மழுங்குகின்றன என்று தெரியவில்லை.
ஆனால் எந்தக்காற்று முகில்களை தள்ளி கொண்டு வருகிறதோ அதே காற்று மேலும் சற்று விசை கொண்டு அவற்றை தாக்கிச் செங்குத்தாக மேலே தூக்குகிறது. மலை விளிம்பினூடாகச் சென்று சற்று வளைந்து நின்று பார்த்தால் என்ன நிகழ்கிறது என்பதை கண்ணால் பார்த்துவிடலாம். காற்றில் அடித்துவரப்படும் முகில்கள் வெண்சுருள்களாக கிளம்பி வந்து மலையின் U வடிவ வளைவில் முட்டி சுருண்டு மேலெழுந்து மறுபக்கம் சென்று வானிலெழுந்து குளிர்ந்து மீண்டும் மழையாக பொழிகிறது
ஆகவே இந்த மலைகளிலிருந்து பொழியும் இரண்டு அருவிகளுமே எதிர்த்திசையில் நீர்த்துளிகள் தெறிக்கும் தன்மை கொண்டவை. நாம் நின்றிருப்பது அருவிக்கு நேர் மேலே. ஆனால் அருவிச்சாரல் நம்மேல் பொழிந்துகொண்டே இருக்கும் .நமது காலடியில் அருவி ஆயிரம் அடி பள்ளத்தை நோக்கி பொழிந்துகொண்டிருக்கிறது. யானை துதிக்கையை வளைத்து மத்தகத்தின்மேல் அமர்ந்திருப்பவரை தொடுவதுபோல அருவி மேலே வருகிறது.
மலைச்சரிவில் நின்று முகில்திரை விலகி அருவிகள் தெளியும் பொழுதிற்காக காத்திருப்பதென்பது ஒரு இனிமையான தவம். முகில் விலகத்தொடங்கும்போது கூடி நின்றவர்களிடமிருந்து அதோ அதோ என்று கூச்சல்கள் கேட்க தொடங்கும். முகில்படலம் பிளந்து விலகி அருவிகள் ஒவ்வொன்றாக தெளியத்தொடங்கும். சில அருவிகள் ஒளிபட்டு கண்கூசும். திருப்பப்பட்ட வாள் போல சில அருவிகள். துள்ளும் மீன்போல சில
சில அருவிகள் வெல்வெட் மேல் வைக்கப்பட்ட வெண்படிகம்போல பச்சைப் பரப்பில் அசைவிலாது நின்றிருந்தன. சில அருவிகள் கீழிருந்து ஊற்று கிளம்பியது போல தோன்றின. மேலிருந்து முகில் உடைந்து மலைச்சரிவில் விழுந்து வழிந்தது போல சில. ஒவ்வொன்றாக தொட்டு எத்தனை என்று நோக்குவதற்குள் ஒன்று மறைந்து ஒன்று தோன்றும். ஓர் அருவியையாவது உற்று நோக்குவோம் என்று எண்ணுவதற்குள் மீண்டும் முகில்பட்டு வந்து மூடும்
முகில் ஆடும் இந்த விளையாட்டை முன்பு இதே ஜுலை மாதம் சென்ற ஆண்டு சிரபுஞ்சி சென்ற போதும் பார்த்தேன். என் நல்லூழாக ஏறத்தாழ ஒருமணி நேரத்திற்கு மேலாக முகில்கள் இடைவெளி விட்டன. சிரபுஞ்சியின் மேலிருந்து இதே போன்று பள்ளத்தை நோக்கி சரியும் பதினைந்துக்கும் மேற்பட்ட அருவிகளை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனால் அன்று முகில்சரிவுகு நிகராகவே மழைப்பொழிவும்இருந்தது இங்கு மழை இல்லை.
நாங்கள் திரும்பி வரும்போது அருவிச் சாரல் அடித்து நனைந்திருந்தோம் . மழைத்தூறல் விழத்தொடங்கியிருந்தது. ஈரத்திற்குள் ஈரப்பொருட்களால் வைத்துக்கட்டப்பட்டிருந்த சிறிய குடிசை ஒன்றுக்குள் புகுந்து ஈர பெஞ்சில் அமர்ந்து டீயும் போண்டா கச்சோடி என அவர்கள் கொடுத்த அனைத்தையும் தின்று தீர்த்தோம். மதிய உணவு அதுதான். ஆனால் அப்போதே சாயங்காலம் ஆகியிருந்தது.
[மேலும்]