‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31

கிருபரின் சொல்மழை கிருதவர்மனை முதலில் நிலையழியச் செய்தது. அதை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. அந்தக் காட்டில் ஒலித்த ஒரே மானுடக் குரல். அதிலிருந்து அவனால் சித்தம் விலக்க முடியவில்லை. வேண்டுமென்றே முன்னால் விரைந்தால் அக்குரல் சற்று தெளிவின்மைகொண்டதுமே அவன் கால்கள் விரைவழிந்தன. அதன் ஒவ்வொரு சொல்லும் கூரிய முனைகளுடன் அவனை தைத்தது. அவர் ஒருவகை சித்தமயக்கில் சொல் பெருக்குகிறார் என தெரிந்தது. சித்தம் மயங்கும்போது சொற்கள் பொருளிழக்க வேண்டும். ஆனால் அவை மேலும் மேலும் பொருட்செறிவுகொண்டன. ஒருவேளை அவன் சித்தமும் பிறழ்ந்திருப்பதனால் அவ்வாறு அச்சொற்கள் பொருள்கொள்கின்றனவா?

அவர் ஒன்றையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது. மூச்சிரைக்க அவர் சொல்குவித்தார். உளம்கூர்ந்தபோது அச்சொற்களினூடாக அவர் எங்கோ சொல்லிக்கொண்டிருப்பது தெரிந்தது. ஒரு சொற்றொடரில் எஞ்சும் பொருளைக்கொண்டு அடுத்த சொற்றொடரை அமைத்தார். அச்சொற்றொடரிலிருந்து அடுத்த சொற்றொடர். சொற்றொடர்கள் தொடர்ச்சியாக சென்று சுழியாயின. சுழிமையத்தில் சொல்லிச் சொல்லித் தீராத ஒன்று குடிகொண்டது. அவன் அச்சொற்களை எண்ணி சலித்தான். அச்சொற்களை விலக்கி அம்மையத்தை அடைய எண்ணினான். ஆனால் அச்சொற்கள் நின்றுவிட்டால் அம்மையமும் இல்லை என அறிந்திருந்தான்.

பின்னர் ஏதோ ஒரு புள்ளியில் கிருபர் சொல்நின்று அமைதியடைந்தார். அதுவரை பேசிக்கொண்டிருந்ததையே அறியாதவர்போல தலைகுனிந்து நடந்துவந்தார். அவர் பேச்சை நிறுத்தி நெடுநேரமான பின்னரே அவன் அவர் பேசவில்லை என்பதை உணர்ந்தான். அதுவரை அவருடைய சொற்கள் அவனுள் ஒலித்துக்கொண்டிருந்தன. அவ்வாறென்றால் அச்சொற்களை நானும் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். அவை நானும் அவரும் சேர்ந்து பேசிய சொற்கள். அவர் ஒலியானார், நான் ஒலிக்கவில்லை. இல்லை, அவர் பேசவே இல்லையா? நான் மட்டும்தான் பேசிக்கொண்டிருந்தேனா? அல்லது உண்மையாக இருவருமே பேசிக்கொள்ளவில்லையா? அச்சொற்கள் வேறெங்கோ எவ்வண்ணமோ நிகழ்ந்தனவா?

பின்னர் நெடுநேரம் அமைதியில் சென்றனர். அதுவரை பேசிய சொற்கள் விசையழிந்து ஈசல்கள்போல் சிறகுதிர்ந்து விழுந்தன. அவற்றை நினைவுகூரவே இயலவில்லை. பேசிக்கொண்டிருந்தோம் என்பது மட்டுமே நினைவிலிருந்தது. மூச்சிரைக்க அவ்வப்போது நின்றபோது சூழ்ந்திருக்கும் காட்டிலிருந்து மழையின் வெம்மையான ஆவியும் பச்சைமணமும் வந்து சூழ்ந்தன. பறவைகள் குறுகிக்கொண்டிருந்தன. மழையில் பெருகிய ஓடைகள் வெவ்வேறு இடங்களில் ஓசையுடன் விழுந்துகொண்டிருந்தன. காட்டினூடாக காற்று செல்லும் ஒலி என்றுமே உள்ளத்தை ஆற்றுவது. அது மென்மையான வருடல். பெருங்காட்டையே குழல்கோதிச் சொல்ல வானிடம் ஒரு சொல் இருக்கிறது.

அவர்கள் காட்டுக்குள் செல்லுந்தோறும் மெல்ல மெல்ல இறுக்கமிழந்து உள்ளம் மலர்ந்தனர். கிருதவர்மன் நின்று மேலும் தொலைவை கணிக்க கிருபர் புன்னகைத்தபடி “வீட்டுக்குத் திரும்பும் உணர்வு உருவாகிறது” என்றார். கிருதவர்மன் திரும்பாமல் நடக்க “உற்றவர் அனைவரும் அங்குதான் இருக்கிறார்கள் என்பதுபோல” என்றார். கிருதவர்மன் “வீண் பேச்சு வேண்டாம்” என்று திரும்பாமலேயே சொன்னான். “மெய்யாகவே என் உள்ளம் எளிதாகிறது. அங்கே திரும்பிச்செல்வதுதான் எளிதாக இருக்கிறது. அங்கிருந்து விலகிச்செல்கையில் எதையெல்லாமோ அறுத்துக்கொண்டு செல்வதைப்போல தோன்றுகிறது” என்றார்.

கிருதவர்மன் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் சற்றுநேரம் கழித்து ஒரு சுனைக்கரையில் நின்று குனிந்து நீர் அள்ளி குடிக்கும்போது கிருபரை நோக்காமல் “ஆம், நீங்கள் சொல்வது உண்மை. என் உள்ளம் சுமையிழந்திருக்கிறது” என்றான். கிருபரும் புன்னகைத்தார். கிருதவர்மன் முகம் மலர்ந்து இடையில் கைவைத்து வானை நோக்கினான். “என்னென்ன மாற்றுருக்களை போடுகிறோம்! எங்கெல்லாம் சென்று மீள்கிறோம்!” என்றான். கிருபர் “ஆனால் இந்த ஒப்பனைகளை எல்லாம் மிகமிக மேலோட்டமாகவே போட்டுக்கொள்கிறோம். ஒப்பனைக்குள் இருக்கும் நாம் மறைந்துவிடலாகாது என எப்போதும் கருதுகிறோம்” என்றார். “சின்னக் குழந்தைகள் முகமூடி அணிந்துகொண்டால் அவ்வப்போது எட்டிப்பார்த்து முகம் காட்டாமலிருக்காது. நாம் பார்க்காதபோது அவர்கள் முகமிலிகளாக உணர்கிறார்கள். பார்க்கப்படாமல் இருப்பதற்கு அவர்களால் இயலாது.”

கிருதவர்மன் உரக்க நகைத்தான். அந்த ஓசையில் சுனையைச்சூழ்ந்திருந்த மரங்களிலிருந்து பறவைகள் எழுந்து பறந்தன. இரு கைகளையும் விரித்து வெடிப்போசை எழுப்பி நகைத்து “ஏன் தெரியுமா? ஏன் என்று சொல்லவா? ஒரு மாற்றுரு முழுமை அடைந்தால் அதன்பின் அதிலேயே வாழவேண்டியதுதான். திரும்பி வரவே முடியாது” என்றான். கைகளை விரித்து “மாற்றுருவுக்குள் சிக்கிக்கொள்ளுதல்…” என்று கூவினான். இளிவரல்நடிகனைப்போல உடலை வளைத்து “அவையோரே, நான் என் மாற்றுருவுக்குள் சிக்கிக்கொண்டிருக்கிறேன். என் மெய்யுருவை சற்று மீட்டுத்தர முடியுமா?” என்றான். உடனே உடலையும் குரலையும் மாற்றி “மெய்யுருவா? அதுவே நாங்கள் உனக்கு அளித்த மாற்றுருதானே?” என்றான். “அப்படியென்றால் என்னுடைய மெய்யுருதான் என்ன?” என்று முதற்குரலில் கேட்டான். அதற்கு மறுமொழி என வாயருகே கையை வைத்து கைக்குழந்தைபோல ஓசையிட்டான்.

பின்னர் அவன் வெறிகொண்டு சிரிக்கத் தொடங்க கிருபரும் சேர்ந்துகொண்டார். அந்த நகைச்சுவையை முற்றாக மறந்து சிரிப்பினூடாகவே நெடுந்தொலைவு சென்று வெறுமனே சிரித்தனர். காடு எதிரொலித்துச் சூழ்ந்திருந்க்க இருவரும் கண்களில் நீர் வழியும்வரை சிரித்துக்கொண்டிருந்தனர். சிரிப்பை நிறுத்தமுயலுந்தோறும் ஊறிப் பெருகி வந்தது. சிரிப்பில்லாத நிலையின் ஒரு சுவர்போல ஆகி அவர்களை திருப்பி சிரிப்பு நோக்கி தள்ளியது. கிருபர் நிறுத்தி மூச்சுவிம்மியபோது கிருதவர்மன் “ள்ளே ள்ளே!” என குழவிக்குரல் எழுப்பி மீண்டும் சிரிக்க அவர் போதும் போதும் என தலையசைத்தபடி சேர்ந்துகொண்டார்.

சிரிப்பில் அவர்களின் வாய் அகன்றே இருந்து காதருகே வலி எழுந்தது. மூச்சின் திணறலில் விலாவெலும்புகள் வலிகொண்டன. கிருபர் இருமத்தொடங்கினார். கிருதவர்மன் “மூலத்தான நகரியில் கதிரவன் ஆலய விழாவின்போது அத்தனைபேரும் வெவ்வேறு முகமூடிகள் அணிந்துகொண்டு காமம் கொண்டாடுவார்கள். ஆண்களும் பெண்களும். கரடி புலியுடன் புணர்வதை அங்கே காணமுடியும்!” என்றான். கிருபர் “வேண்டாம்!” என்று கைகாட்டிக்கொண்டே சிரித்தார். “முன்பு என் தோழன் ஒருவன் அந்த முகமூடியை திரும்ப கொண்டுவந்துவிட்டான். மனைவியுடன் காமத்திலாடும்போதுகூட அதை அணிந்திருந்தான். பிறந்த மைந்தன் முகமூடியை முகமாகக் கொண்டிருந்தான் என எங்கள் சூதன் ஓர் இளிவரல்பாடலை எழுதிப்பாடினான்.”

கைகளைத் தட்டியபடி அவன் அந்தப் பாடலை பாடினான். “பிறிது முகம் கொண்டு புணர்ந்த பெண்ணே நான் பிறிதல்ல அவனே என்று எப்படி அறிந்தாய்!?” சிரிப்பில் திணறி “எப்படி அறிந்தாள்? ஆஹாஹாஹா!” என்று மீண்டும் சிரிக்கலானான். “அவள் எச்சரிக்கையானவள். ஆகவேதான் முகமூடியை பெற்றாள். இல்லையேல் அதை எடுத்து அணிந்துகொண்டிருந்த ஏவலனை பெற்றிருப்பாள் என்றான் சூதன்!” கிருதவர்மன் நகைத்து நகைத்து தளர்ந்தான். “எத்தனை பொருளற்றவை இச்சொற்கள்… ஆனால் சிரிப்பதற்கு பொருள் தேவையா என்ன?” என்றார் கிருபர்.

கிருதவர்மன் “போதும்…” என்றான். “சிரித்த சிரிப்பில் என் உடலில் பொருக்கோடிய எல்லா புண்களும் திறந்துகொண்டுவிட்டன. குருதி வழிகிறது.” அதை கேட்காமல் கிருபர் எழுந்து சுனையருகே குனிந்து நீர் அருந்தினார். “சிரிக்கத் தொடங்கினால் எல்லாமே சிரிப்பாகிவிடுகிறது” என்றபடி கிருதவர்மன் புற்பரப்பில் அமர்ந்தான். கிருபர் எழுந்தபோது சுனைக்கு அப்பால் புல்செறிவுக்குள் அஸ்வத்தாமனை பார்த்தார். “புலியா?” என்று கிருதவர்மன் கேட்டான். “இல்லை, அஸ்வத்தாமன்” என்றார் கிருபர். கிருதவர்மன் “அவரா? இங்கே என்ன செய்கிறார்?” என்றான். எழுந்து புதரை நோக்கி “உத்தரபாஞ்சாலரே, என்ன செய்கிறீர்கள்?” என்றான்.

அஸ்வத்தாமன் அங்கிருந்து எழுந்து வந்தபடி “நீங்கள் சிரித்துக்கொண்டிருப்பதை கண்டேன்” என்றான். கிருதவர்மன் “ஆம், என் வாழ்நாளில் இப்படி சிரித்ததில்லை…” என்றான். அஸ்வத்தாமன் “நானும் ஒரு முழு நாழிகை இப்படி இருவர் விடாமல் சிரிப்பதை கண்டதில்லை” என்றான். “பித்தர்களும் யோகியர்களும் இப்படி சிரிப்பதுண்டு என்று நான் கேட்டிருக்கிறேன்.” கிருதவர்மன் “அது மாபெரும் யோகவெளி… அங்கிருந்து வந்தபின் சிரிப்பதற்குரியவை மட்டுமே எஞ்சியிருக்கின்றன” என்றான். அஸ்வத்தாமன் அருகணைந்து “தொலைவில் இருந்து கேட்டபோது வெடித்து வெடித்து எழும் அழுகையோசைபோல் ஒலித்தது. அருகே வந்தபோதுகூட நீங்கள் இருவரும் துயர்தாளாமல் மண்ணில் உருண்டுபுரண்டு அழுவதாகவே எண்ணினேன். நெடுநேரம் நோக்கிய பின்னரே சிரிப்பு எனத் தெரிந்தது. கூர்ந்து நோக்கி விழிநீர் இல்லை என்பதை கண்டபின்னர்தான் தெளிந்தேன்” என்றான்.

கிருதவர்மன் “இறுதியில் விழிநீரும் வழிந்தது” என்றபின் “அழுகையையும் சிரிப்பையும் தேவர்களால் பிரித்தறிய முடியாது என நினைக்கிறேன். அவர்கள் சற்று விலகிநின்றுதானே நம்மை பார்க்கிறார்கள்” என்றான். “உண்மையில் அழுகையும் சிரிப்பும் தொடக்கத்தில்தான் வேறு வேறு. இறுதியில் ஒன்றே” என்றான் அஸ்வத்தாமன். கிருதவர்மன் “எங்கிருந்தீர்கள்?” என்றான். “குருக்ஷேத்ரத்திலிருந்து வருகிறேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “நாங்கள் குருக்ஷேத்ரத்திலிருந்து அகல முயன்றோம். அகலுந்தோறும் விசை மிகுந்து இழுத்தது. செல்ல இயலவில்லை. ஆகவே திரும்பிச் செல்கிறோம்” என்றார் கிருபர்.

“நானும் களத்திலிருந்து அவ்வண்ணமே விலகிச் சென்றேன்” என்றான் அஸ்வத்தாமன். “சகுனி விழுந்தார் என்று அறிந்தேன். துரியோதனனை களத்தில் காணவில்லை. அக்களத்தில் தன்னந்தனியாக நின்றிருக்க இயலவில்லை. ஆகவே திரும்பி நடந்தேன்.” கிருதவர்மன் “நீங்கள் எதிர்கொண்டாகவேண்டிய எதிரிகள் அங்கேதான் இருந்தனர்” என்றான். “ஆம்” என்றான் அஸ்வத்தாமன். “என் எதிரி என நெடுநாட்கள் நான் எண்ணியிருந்தது அர்ஜுனனை. பின்னர் அவன் எவருடைய கருவி என கண்டுகொண்டேன்.” கிருதவர்மன் “எதிர்க்காமல் விலகிச்சென்றீர்களா? அஞ்சிவிட்டீர்களா?” என்றான். “என்ன சொன்னாய்?” என்று அஸ்வத்தாமன் சீற்றத்துடன் திரும்ப “அதற்கு வேறு பொருள் என்ன?” என்று கிருதவர்மன் விழிகளை நோக்கி கேட்டான்.

அஸ்வத்தாமன் அடங்கி “அச்சமில்லை… அதை நான் அறிவேன். அதை எவரிடமும் சொல்லவேண்டிய நிலையிலும் நான் இல்லை” என்றான். “பொருளின்மை… அங்கே அவர்களை நான் கொன்று அழித்திருக்க முடியும். அதற்கான அம்புகள் என்னிடமிருந்தன… ஒருவேளை அவனை கொன்றிருக்கமுடியாது. அந்த யாதவன் நான் அறியாத ஒருவன் என அகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது. எஞ்சிய அனைவரையும் அழித்திருப்பேன்… ஆனால் அதனால் என்ன பயன்? போர் முடிந்துவிட்டது. வென்றவர் என சிலரேனும் களம்விட்டு நீங்கட்டும். அந்த அளவுக்கேனும் பொருள் எஞ்சட்டும் இந்த பித்துவெளியில்.”

“ஏன் திரும்பிச்சென்றாய்?” என்றார் கிருபர். “என்னால் அகன்று செல்ல முடியவில்லை. காட்டுக்குள் சென்றுகொண்டிருக்கையில் மழைதிரண்டு உடைந்து பொழியத் தொடங்கியது. வானம் தன் சிறகால் ஓங்கி அறைந்ததுபோன்ற ஒற்றை மழை… குருக்ஷேத்ரத்திற்காக மட்டுமே அந்த மழை பெய்தது என நினைக்கிறேன். நான் அகலும்போது முகில்கள் செறிந்து குருக்ஷேத்ரம் இருட்டிக்கொண்டே வருவதை கண்டேன். அங்கிருந்து பறவைகள் அனைத்தும் பறந்து அகல்வதை காட்டுக்குள் பார்த்தேன். எலிகளும் கீரிகளும்கூட ஓடி அகன்றன.”

ஏதோ அரியது நிகழவிருக்கிறது அங்கே என்று எண்ணிக்கொண்டிருந்தேன். இடியோ மின்னலோ இல்லை. வானம் அப்படியே கல்லென்றாகி விட்டதுபோல. நான் ஒரு மரத்தடியில் நின்று காத்துக்கொண்டிருந்தேன். இதோ பெய்யும் இதோ என கணங்கள் சென்றுகொண்டிருந்தன. ஏன் அந்த மழையை காத்திருக்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை. அந்த மழை பெய்தபின் நான் அங்கிருந்து சென்றுவிடலாம் என்று எண்ணினேன். அந்த மழையில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும் என்பதுபோல ஓர் உணர்வு. மழை மழை மழை என என் உள்ளம் அரற்றியது.

அப்போது ஒன்றை உணர்ந்தேன். மழைக்குமுன் எழும் தவளைக்கூச்சல் ஏதும் எழவில்லை. காடு மிகமிக அமைதியாக இருந்தது. அத்தனை இலைகளும் அசைவிழந்து ஈரத்தில் பளபளத்துக்கொண்டிருந்தன. சீவிடுகளின் ஓசைகூட நின்றுவிட்டிருந்தது. பின்னர் நீராவி அலை ஒன்று வந்து என்னை தழுவிக் கடந்துசென்றது. காதுமடல்களில் வெப்பத்தையும் பின்னர் குளிர்ச்சியையும் உணர்ந்தேன். பின்னர் குளிர்ந்த காற்று. பேரருவி ஒன்று சற்று அப்பாலிருப்பதுபோன்ற உணர்வு.

என்ன நிகழ்கிறது? காட்டுக்குள் பல்லாயிரம் நாகங்கள் ஓடிவருவதைப்போன்ற புதரொலி. நான் ஒரு மரத்தின்மேல் ஏறிக்கொண்டு கீழே நோக்கியபோது அத்தனை புதர்களுக்குள் இருந்தும் செந்நிறமான நீர் சுழித்தோடி வருவதை கண்டேன். செம்மண் கரைந்த நீர். குருக்ஷேத்ரத்திலிருந்து வருகிறது என்று தெரிந்துகொண்டேன். அங்கே ஓர் ஏரி உடைப்பெடுத்ததுபோல. மரத்தின்மேல் ஏறினேன். அங்கே கருங்குரங்குகள் அமர்ந்து நோக்கிக்கொண்டிருந்தன. நான் அவற்றருகே சென்று நோக்கினேன். குருக்ஷேத்ரத்தின்மேல் கன்னங்கரிய வானம் உடைந்து இறங்கி ஆலமரம்போல் வேரூன்றி விழுதூன்றி நின்றிருப்பதை கண்டேன். வானம் தன் உகிர்க்கால்களால் மண்ணை கவ்விப்பற்றி நின்றிருப்பதுபோல.

அது மழை என்றே தோன்றவில்லை. முற்றான அசைவின்மை. மின்னல்கள் இல்லை. இடியோசையில்லை. வானிலிருந்த முகில்கள் கூட அசையவில்லை. ஓசையே கூட தெரியவில்லை. விண்ணிலிருந்து ஒரு நதி குருக்ஷேத்ரம் மீது பொழிந்ததுபோல. முன்பு விரிசடை அண்ணலின் தலைமேல் கங்கை அப்படித்தான் இறங்கியிருக்கவேண்டும். குருக்ஷேத்ரத்தின் அத்தனை பிலங்களும் அரைநாழிகையில் முற்றாக நிறைந்திருக்கவேண்டும். நெடுநேரம் அந்த மழையை விழியசைக்காமல் நோக்கிக்கொண்டே இருந்தபின் சலித்து கிளையில் கால்களை நீட்டிக்கொண்டு அமர்ந்தேன். என் காலடியில் சென்றுகொண்டிருந்த நீரில் குருதிமணம் இருக்கிறதா என்று பார்த்தேன். மண்கலங்கிச் செல்வதுபோலத்தான் இருந்தது.

பின்னர் மரங்களுக்குமேல் மழை பெருகி வரத்தொடங்கியது. ஓலம் என்னை அணுகுவதற்குள் நீர்ப்பரப்பு என்னை கடந்துசென்றிருந்தது. கண்களை முற்றாக மறைக்கும் மழை. நம் உடலையே நாம் மறந்துவிடச் செய்யும் பெருமழை. வெறும் தன்னிலை மட்டுமாக அங்கே அமர்ந்திருந்தேன். உள்ளம்கூட இல்லை. அத்தனை அறுபடாப் பொழிவாக மழை பெருகிப்பொழியும்போது அந்த ஒழுக்காகவே உள்ளமும் ஆகிவிடுகிறது. உள்ளமென்பது மொழியால் ஆனது. மொழி சொற்களாக துண்டுபட்டது. அப்போது மழையோசைபோல் ஓர் ஒற்றைச்சொல்லே உள்ளமென்றிருக்க முடியும்.

என்னுள் மண்ணில் என்னும் சொல் திகழ்ந்தது. அதன்பொருளை நான் அறியவில்லை. அச்சொல்லாக நான் இருந்தேன். அச்சொல்லை நான் உணர்ந்தபோது மழை நின்று காட்டில் இலைமழை முழங்கிக்கொண்டிருந்தது. மண்ணில் மண்ணில் மண்ணில் என நான் என்னை கேட்டுக்கொண்டிருந்தேன். நெடும்பொழுதாகிவிட்டிருந்தது. என் உடலில் இருந்த குருதியும் கரியும் சேறும் முழுமையாகவே அகன்றுவிட்டிருந்தன. கைகளைத் தூக்கிப் பார்த்தேன். இளமையில் கங்கைநீராடுகையில் கை வெளுத்ததும் கரையேறிவிடவேண்டும் என்பது அன்னையின் ஆணை. கை வெளுத்துவிட்டது அன்னையே என்று சொன்னேன். கை வெளுத்துவிட்டது, கரையேறிவிடுகிறேன்…

இலைத்தழைப்புக்கு மேல் வானில் முகிலிலா வெளி ஒன்று உருவாகியிருந்தது. அதன் ஒளி இலைகளில், நிலத்தில் தேங்கிய நீர்ப்பரப்புகளில் பட்டுப் பெருகி காட்டுக்குள் அக ஒளியாகத் துலங்கியது. தரையில் இறங்கி நின்றபோது மண் ஆற்றுப்பெருக்குக்குப் பின் புதுமணலும் வண்டலும் கலந்து படிந்திருப்பதுபோலத் தோன்றியது. புதிய சேறு அளிக்கும் மகிழ்ச்சியை அறியாமலேயே அடையத்தொடங்கினேன். இளமைக்கால ஆடிப்பெருக்குகளின் நினைவுகள் எழுந்ததும் சிறு துள்ளலுடன் கூச்சலுடன் காட்டுக்குள் சென்றேன்.

ஆடிப்பெருக்கு கங்கை இளமைக்குத் திரும்பி மீளும் நாள். அத்தனை ஆறுகளிலும் புதுப்புனல் பெருகும். கங்கை செங்குழம்பாகப் பெருகி எழும். ஓடைகள் ஆறுகளாகும். தெருக்கள்கூட சிற்றாறுகளாகிவிட்டிருக்கும். தந்தை ஆற்றுக்குச் செல்வதற்கு ஒருபோதும் மறுப்பு சொன்னதில்லை. மழை உறுமத்தொடங்கும்போது நண்பர்களுடன் இல்லத்திலிருந்து கிளம்பினால் பல நாட்களுக்குப் பின்னரே திரும்பி வருவேன். கிடைக்குமிடங்களில் உணவு. நனையாத இடங்களில் துயில். விழித்திருக்கும் பொழுதெல்லாம் மழையில் அல்லது நதிப்பெருக்கில். சேறாடிச் சேறாடி உடல் மீனுடல்போல் ஒளிகொண்டிருக்கும். செவுள்கள் முளைக்கப்போகின்றன உனக்கு என அன்னை கடிந்துகொள்வாள்.

கங்கையின் அடையாளங்கள் அனைத்தும் மாறிவிட்டிருக்கும். ஊருக்குள் இல்லங்களின் வாயிற்படிதொட்டு கங்கை ஒழுகும். இல்லங்களின் கொல்லைகளில் படகுபோன்ற முதலைகள் வந்து ஒதுங்கும். இரவில் சரசரவென கங்கை நீர் மேலேறி இல்லத்தூண்கள் ஈரத்தில் ஊறும் ஒலி கேட்கும். இல்லங்களுக்குள் மடைகளினூடாக பெருகி அங்கணங்களை நிறைக்கும். கரைமீறிப் பெருகும் கங்கை மீனவர்களுக்கே அச்சமூட்டுவது. ஆனால் எங்களுக்கு கைகால்களே மறந்துபோய்விட்டிருக்கும். மீன்களென நீரிலேயே வாழ்பவர்கள் போலிருப்போம். இமையா விழி கொண்டுவிட்டாய், வீட்டுக்கு வா என அன்னை கங்கைக்கரைக்கு வந்து எங்களை கடிந்து அழைப்பாள். ஆடியிலேயே கங்கைநீராட்டில் பெரும்பகுதியை முடித்துவிட்டிருப்போம்.

ஆடி ஒழுகி அடங்கிய பின்னர் கங்கைக்கரையெங்கும் சேறு படிந்திருக்கும். ஆறுகள் பருவமடையும் பொழுது அது என்பார்கள். மென்சந்தனவிழுது போன்ற சேறு. இறகுப்பீலிகள் போன்று படிந்த மென்மணல். அவற்றில் நத்தைகள் பல்லாயிரமெனப் பெருகும். ஒளிரும் வரிகளால் அவை கங்கைக்கரை எங்கும் கோலமிடும். மீன்கள் பெருகும் காலம். கங்கைக்கு கோடிக்கண்கள் திறக்கும் பருவம் என்பார்கள் சூதர். கங்கை தெளிந்து பளிங்கென்று ஆக மேலும் முப்பது நாட்களாகும். அழுதபடி பிறந்தகம் நீங்கும் பெண்போல கங்கை மெலிந்து அழகுகொண்டு செல்வாள் என்று மூதன்னையர் பாடுவர். முந்தானையை இழுத்து எடுப்பதுபோல கரையோரக் காடுகளிலிருந்து அவள் எல்லை மீறிய நீரை எடுத்துக்கொள்வாள்.

அஸ்வத்தாமன் சொல்லிழந்து கைகளைக் கட்டியபடி தலைகுனிந்து சுனைநீரை நோக்கியபடி அமர்ந்திருந்தான். கிருபர் எதுவும் கேட்கவில்லை. கிருதவர்மன் கிருபரை நோக்கினான். அஸ்வத்தாமன் தானாகவே மீண்டு “குருக்ஷேத்ரத்திற்குச் சென்றபோது நான் முற்றிலும் மீண்டுவிட்டிருந்தேன். குறுங்காடு வழியாக அங்கே நுழைந்தேன். அங்கு குருக்ஷேத்ரப் போர்க்களம் இருக்கவில்லை” என்றான். “நான் கண்டது மிகப் பெரிய ஏரி ஒன்றின் அடித்தளம்போன்ற சேற்றுப்படுகையை. அலையலையாக சேறு படிந்து முற்றாகவே குருக்ஷேத்ரத் தவநிலத்தை மூடியிருந்தது.”

“வானில் ஒளி மீண்டும் அடங்கிக்கொண்டிருந்தது. தென்மேற்கிலிருந்து மேலும் மேலுமென முகில்கணங்கள் வந்துகொண்டிருந்தன. விரைவிலேயே மீண்டும் பெருமழை வந்தறையும் என்று தோன்றியது. அச்சேற்றுவெளி குருக்ஷேத்ரம்தானா என்ற ஐயம் எழுந்தது. கைவிடப்பட்ட காவல்மாடங்கள்தான் அதுதான் அந்நிலம் என காட்டின. அங்கே விழுந்துகிடந்த அத்தனை உடல்களின்மீதும் சேறு மென்மையான பட்டுத்துணிபோல் மூடியிருந்தது. சற்றே விழிக்குப் பழகியபோது மனித உடல்களை, புரவிகளை, யானைகளை, தேர்முகடுகளை அடையாளம் காணமுடிந்தது. மேலும் கூர்ந்தால் முகங்களைக்கூட காணமுடியும் என்று தோன்றியது” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

“உண்மையாகவே முகங்களை காணலானேன். சிற்பக் குயவன் வனைந்து முடிக்காத மண்சிலைகள் போன்ற முகங்கள். அங்கே விழிதிகைத்து நின்றிருந்தேன். முற்றிலும் அசைவிழந்து கிடந்தது அக்களம். ஒற்றை அசைவில்லை. ஒரு சிறுபறவையின் அசைவாவது நிகழவேண்டும் என என் உள்ளம் ஏங்கியது. அந்த வெளியை முழுக்க அதன்பொருட்டு ஒற்றை நோக்கில் நிறுத்தியிருந்தது. அதே தருணம் அவ்வாறு ஓர் அசைவெழுந்தால் என்னுள் கூர்கொண்டிருந்த அமைதியொன்று குலைந்துவிடும் என்றும் தோன்றியது. மூச்சுமின்றி இமைப்புமின்றி அதையே நோக்கிக்கொண்டிருந்தேன்.”

“சல்யரின் உடலை…” என கிருதவர்மன் தொடங்க “நான் களத்திற்குள் இறங்கவில்லை. அவர் உடலை கண்டடைந்திருக்க முடியும். மெல்லிய சேற்றுக்குள் அவர்கள் ஒருவேளை மேலும் தெளிவாகவே தெரிவார்கள். ஆனால் அதற்கு நான் அச்சேற்றில் இறங்கவேண்டியிருக்கும். பிற நூறு உடல்களின் தவத்தை கலைக்கவேண்டியிருக்கும். மானுடர் செய்யவேண்டிய நீத்தார் மறைவுச்சடங்கை குருக்ஷேத்ரமே செய்துவிட்டிருக்கிறது. அவ்வாறே ஆகுக என எண்ணிக்கொண்டேன்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “அங்கே வேறெவரேனும் இருக்கிறார்களா என்று நோக்கினேன். நோக்குமாடம் சரிந்து கிடந்தது. அங்கே பார்பாரிகன் இல்லை. அனைவருமே சென்றுவிட்டிருந்தார்கள்.”

கிருதவர்மன் “ஒருவர்கூட உயிருடன் இல்லாத களம்… எண்ணவே விந்தையானது” என்றான். “ஒருவர் உயிருடனிருக்கிறார்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். கிருதவர்மன் திடுக்கிட்டான். கிருபர் “ஆம், அவர் மட்டும்” என்றார். “தன்னந்தனிமையில் விண்நோக்கி கிடக்கிறார்” என்று அஸ்வத்தாமன் சொன்னான். “நான் அருகே சென்று நோக்கினேன். வேலிக்குள் அம்புப்படுக்கையில் விழிதிறந்து படுத்திருந்தார். மருத்துவ ஏவலர்கள் மறைந்து மண்ணுக்குள் கிடந்தனர்.” “அவர் உன்னை பார்த்தாரா?” என்று கிருபர் கேட்டார். “உணர்ந்திருக்கலாம். அவர் விண்ணிலிருந்து நோக்கை விலக்கவில்லை” என்று அஸ்வத்தாமன் சொன்னான்.

அஸ்வத்தாமனின் முகத்திலும் சொற்களிலும் துயரமோ கசப்போ இல்லை என்பதை கிருபர் நோக்கினார். ஆடிப்பெருக்கு விழவைப்பற்றி நினைவுகூரும் தோற்றம்தான் இருந்தது. அந்த மழை அவன்மேல் பெய்து அகத்தையும் முற்றாகக் கழுவிவிட்டதுபோலும் என எண்ணிக்கொண்டார். அவனுடைய கைநகங்களில் குருதி எஞ்சியிருக்கக்கூடும் என்னும் எண்ணம் ஊடாக எழ தலையை அசைத்து அதை தவிர்த்தார். அஸ்வத்தாமன் “மீண்டும் மழை எழுகிறது” என்று சொன்னான். “ஆடிமழை பெரிதாக முழக்கமிடுவதில்லை. ஆயினும்கூட இந்த அமைதி விந்தையானதாகவே இருக்கிறது.” கிருதவர்மன் “நேற்று நானும் மழையில் நனைந்தேன். மரத்தடிகளில் ஒண்டிக்கொள்ள இயலவில்லை. நல்லவேளையாக ஒரு பொந்தை கண்டடைந்தேன்” என்றான்.

கிருபர் “பாண்டவர்கள் எங்கு சென்றார்கள்?” என்றார். “அவர்களின் மைந்தர்கள் புண்பட்டிருக்கிறார்கள். மைந்தருடன் அருகிலுள்ள சிற்றூர்களுக்கு சென்றிருக்கலாம்” என்றான் அஸ்வத்தாமன். மேலும் பேச ஏதுமில்லாமல் அவர்கள் நெடுநேரம் அவ்வாறே அமர்ந்திருந்தனர். கிருபர் “நாங்கள் மீண்டும் குருக்ஷேத்ரத்திற்கே செல்லலாம் என எண்ணினோம்” என்றார். “அங்கு சென்று ஆற்றுவதற்கு ஒன்றுமில்லை” என்றான் அஸ்வத்தாமன். கிருதவர்மன் “எங்கு செல்வது? செய்வதற்கு ஏதேனும் வேண்டுமே” என்றான். “நான் அரசரை பார்க்கச் செல்கிறேன்” என்றான் அஸ்வத்தாமன். “அரசர் எங்கிருக்கிறார்?” என்று கேட்டபடி கிருபர் எழுந்தார். “அவரை சந்திக்க நானும் வருகிறேன்.” அஸ்வத்தாமன் “அவர் எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியும்…” என்று சொன்னான்.

முந்தைய கட்டுரைகற்காலத்து மழை-5
அடுத்த கட்டுரைகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2