‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-30

புதர்களை ஊடுருவியும் சரிந்த நிலத்தில் மரங்களைப் பற்றியபடி இறங்கியும் குறுங்காட்டின் வழியாக சென்றுகொண்டிருக்கையில் நெடுநேரம் எங்கு செல்கிறோம் என்பதை கிருபரும் கிருதவர்மனும் உணர்ந்திருக்கவில்லை. கால்கள் கொண்டுசென்ற வழியிலேயே அவர்கள் நடந்தார்கள். ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. பேசுவதற்கு உள்ளம் எழவில்லை. சூழ இருந்த காட்டையும் அவர்கள் நோக்கவில்லை. உள்ளே ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களையும் கூர்ந்தறியவில்லை. அவர்களின் உள்ளம் முற்றாக சிதறிக்கிடந்தது. பெருநதி நீர் வற்றி சிறுகுளங்கள் என ஆனதுபோல தொடர்பற்ற எண்ணங்களின் நிரை.

காலோய்ந்து அரசமரம் ஒன்றின் அடியில் சென்று அமர்ந்தபோதுதான் அவர்கள் நீள்மூச்சுடன் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். இன்னொருவர் உடன்வருவதை உணர்ந்தவர்கள்போல. முதல் எண்ணத்தை கிருபர் சொன்னார் “அரசர் மறையவில்லை என்றால் எங்கு சென்றிருப்பார்? அஸ்தினபுரிக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை. அரசர் என அங்கே அவர் செல்ல இயலாது. பாண்டவர்கள் அவரைத் தேடி அங்கே செல்லவும்கூடும்…” கிருதவர்மன் “அவர் ஒளிந்திருக்கக்கூடியவர் அல்ல. காட்டில் அவரை தேடவேண்டியதில்லை” என்றான்.

கிருபர் “அவர் களத்தில் உயிரிழந்திருக்கவேண்டும். உடன்பிறந்தாரும் சுற்றமும் மறைந்த பின்னரும் அவர் இவ்வண்ணம் உயிர்வாழ்வது எவ்வகையிலும் பெருமைக்குரியது அல்ல” என்றார். கிருதவர்மன் “அவர் உயிருடனிருக்கிறார் என்றால் அதன் பொருள் போரிலிருக்கிறார் என்பதே. அதற்குரிய வழியொன்றை தேடுகிறார். எங்கோ ஒரு வழி எஞ்சியிருக்கிறது… அங்குதான் சென்றுள்ளார்” என்றான். கிருபர் தனக்குள் மீண்டும் ஆழ்ந்தார். கிருதவர்மன் எண்ணங்களை ஒழுங்குபடுத்த முயன்றான். சற்றுநேரம் கழித்து மீண்டு வந்த கிருபர் “அஸ்வத்தாமன் எங்கிருப்பான்?” என்றார்.

“அவர் ஒருவேளை உத்தரபாஞ்சாலத்திற்கு சென்றிருக்கக் கூடும்” என்றபின் கிருதவர்மன் மேலும் எண்ணம் கூட்டி “இல்லை, அங்கே சென்றிருக்க வாய்ப்பில்லை. அவர் தன் நாட்டை இழந்துவிட்டார். அங்கே இருப்பவர் அவர் அன்னை மட்டுமே. அங்கே ஒருபோதும் அவர் செல்லமாட்டார்” என்றான். பின்னர் “அவர் இருக்கிறார் என்றால் சரத்வானின் குருநிலைக்கே செல்வார். துறவு பூண்டு அங்கே விற்தொழில் ஆசிரியராக அமர்வார். அவரே அடுத்த சரத்வான் ஆக திகழவும்கூடும்” என்றான். கிருபர் “மிக அருகே எங்கோ அவன் இருப்பதாக ஓர் உள்ளுணர்வு… நான் இப்போதெல்லாம் உள்ளுணர்வுகளை மிக நம்புகிறேன். ஏனென்றால் இதேபோன்று அரசமரத்தின்கீழ் அமர்ந்திருப்பதை நான் முன்னரே கனவில் கண்டிருக்கிறேன்” என்றார்.

அவர்கள் வெற்றுச்சொற்களால் மேலும் பேசிக்கொள்ள விழைந்தனர். ஆனால் மிக எளிதிலேயே சொற்களில் சலிப்பும் உற்றனர். பசியை உணர்ந்தபோது கிருபர் கீழிருந்து கழிகளை வீசி கனிகளை வீழ்த்தினார். கிழங்குகளை அகழ்ந்தெடுத்து கொண்டுவந்தார். கிருதவர்மன் பறவைகளை வீழ்த்தினான். கற்களை உரசி அனலெழுப்பி அவற்றைச் சுட்டு உண்டனர். ஓரிரு வாய் உண்பதற்குள் தெவிட்டியது. சற்று பொழுது துயில்கொண்டபோது அவர்களின் உள்ளங்கள் தெளிந்திருந்தன. மீண்டும் பயணம் மேற்கொண்டனர். முதல்முறையாக அப்போதுதான் எங்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்னும் ஐயத்தை அடைந்தனர்.

“நாம் முடிவுசெய்தாகவேண்டும்” என்று கிருபர் சொன்னார். “எங்கு சென்றுகொண்டிருக்கிறோம்? இலக்கில்லாமல் இப்படி சென்றுகொண்டிருப்பதில் பொருளே இல்லை.” கிருதவர்மன் “நாம் செய்யக்கூடுவது ஒன்றே. மீண்டு சென்று பாண்டவர்களிடம் போரிட்டு மடிவது… ஆனால் அதை எண்ணும்போதெல்லாம் இங்ஙனம் உயிர்பிழைக்க வைத்த ஊழ் நமக்கென்று ஓர் இலக்கையும் அமைத்திருக்கும் என்று தோன்றுகிறது” என்றான். “என்ன இலக்கு?” என்று கிருபர் கேட்டார். “வெளியேறும் வழி” என்று கிருதவர்மன் சொன்னான். “எவ்வுயிரும் தேடுவது அதையே.”

கிருபர் அவனை கூர்ந்து நோக்கி “எதில் நீர் சிக்கிக்கொண்டிருக்கிறீர்?” என்றார். “என் வஞ்சத்தில்” என்று கிருதவர்மன் சொன்னான். “நான் என் உள்ளத்தை புரட்டிப்புரட்டி தேடினேன். இவ்வஞ்சத்தை கடக்கலாகுமா என்று நோக்கினேன். இத்தனைக்கும் அப்பாலும் இக்கணம் விழுந்த குருதிபோல அத்தனை புதிதாக இருக்கிறது என் வஞ்சம். சற்றும் நஞ்சிழக்கவில்லை…” கிருபர் “அது உம்மை எங்கோ அழைத்துச்செல்கிறது” என்றார். “ஆம், அங்கிருக்கிறது என் வீடுபேறு” என்றான் கிருதவர்மன். அவனை நோக்கி புன்னகைத்து “மேலும் சிறையாக அது இருக்கலாகாதா என்ன?” என்றார் கிருபர்.

கிருதவர்மன் திகைப்புடன் “அது எங்ஙனம்?” என்றான். குரல் உரத்து எழ “அறுதியாக வீடுபேறு… அது அன்றி அறுதி என ஒன்றில்லை…” என்றான். கிருபர் “இருக்கலாம், இன்று எனக்கு இளமையிலிருந்தே சொல்லப்பட்ட எதிலும் முழு நம்பிக்கை உருவாகவில்லை” என்றார். கிருதவர்மன் “அது அவ்வாறே. மாற்று இருக்க வாய்ப்பே இல்லை… வெளியேற்றம் மட்டுமே அறுதி. இல்லையென்றால் இங்கு சிக்கிக்கொண்டிருப்பதற்கு எப்பொருளும் இல்லை” என்றான். கிருபர் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்லுங்கள், வேறெப்படி இருக்க முடியும் அது?” என்று கிருதவர்மன் கேட்டான்.

“நான் எதையும் தெளிவுற அறியேன்… நான் எதையும் சொல்ல விழையவில்லை” என்றார் கிருபர். “சொல்லுங்கள் ஆசிரியரே, வேறேது எஞ்சமுடியும்? சிறையிலிருந்து சிறைக்கு என்றால் இவற்றைப் படைத்தவன் அறிவிலியா என்ன? தெய்வங்கள் மானுடனை பித்தர்கள் என எண்ணுகின்றனவா?” கிருதவர்மனின் குரலில் நடுக்கம் இருந்தது. கிருபர் “இப்பேச்சை விடுவோம்” என்றார். “இல்லை, இதை தெளிவுபடுத்தியாகவேண்டும். நான் சிக்கிக்கொண்டிருப்பதிலிருந்து வெளியேறுதல். வேறென்ன ஊழ் எனக்கு இருக்கமுடியும்? வேறென்ன? சொல்லுங்கள்?” கிருபர் “இதென்ன பித்தெடுத்த பேச்சு? அதை முடிவுசெய்பவன் நானா என்ன?” என்றார்.

“என் முன் அமர்ந்திருப்பவர் நீங்கள் மட்டுமே. ஆகவே நீங்களே இக்குமுகம். நீங்களே முன்னோர். நீங்களே தேவரும் தெய்வங்களும். நீங்கள் சொல்லவேண்டும். சொல்லியாக வேண்டும். வேறென்ன வழி? நான் செல்லும் வழி வேறென்ன?” கிருதவர்மனின் கண்கள் வெறித்திருந்தன. உடல் முன்னால் வளைந்து நடுக்கம் கொண்டிருந்தது. கரியாலான விரல்களை நீட்டி “சொல் அந்தணனே, சொல்லியாகவேண்டும். வெளியேறும் வழி என ஒன்று அங்கே இல்லை என்றாகுமா? இந்த நீண்ட குகைப்பாதையின் மறுஎல்லையில் மலைப்பாறை மூடியிருக்குமா?” என்றான். அவன் நெஞ்சில் அறைந்து “வெளியேற வழியே இல்லாத ஒன்றை படைக்குமளவுக்கு கொடுமையானவையாக தெய்வங்கள் இருக்கக்கூடுமா? எங்கும் செல்லாத ஒரு பாதையை அமைக்க தெய்வங்களாலும் இயலுமா?” என்றான்.

அவனுடைய பித்து முளைத்த கண்களை நோக்கியபோது கிருபரின் உள்ளத்தில் ஓர் எண்ணம் ஒரு நகைப்புபோல் எழுந்தது. அவர் கண்கள் வஞ்சம் கொண்டவைபோல் இடுங்கி ஒளிகொண்டன. பற்கள் தெரிய புன்னகைத்து “ஆம், அவ்வண்ணம் இருக்கக்கூடும்” என்றார். “ஏன்? ஏன்? ஏன்?” என்று கிருதவர்மன் தொண்டைத்தசைகள் இழுபட கூவினான். கிருபரின் புன்னகை மேலும் விரிந்தது. “நாம் விழைவதுபோல இப்புடவி இல்லை. அதை நாம் அனைவரும் அறிவோம். ஆகவே விரும்பிய புடவியை உருவாக்கிக் கொள்கிறோம். இங்கே எதற்கும் ஒழுங்கென்றும் விழுப்பொருள் என்றும் ஏதுமில்லை. அவை நமது விழைவுக்கற்பனைகள் மட்டுமே.”

கிருதவர்மன் பதைக்கும் விழிகளால் நோக்கியபடி நின்றான். அவன் உடலின் கூன் மேலும் கூனலாகியது. கிருபர் சொன்னார் “இதை அறியாத எவரேனும் இங்கே வாழ்கிறார்களா என்ன? நன்கறிந்த ஒன்றின்மேல் அள்ளி அள்ளி போட்டுக்கொள்ளும் பொய்களல்லவா வேதம் முதலான நூல்கள் அனைத்தும்?” கிருதவர்மன் “போதும்!” என்றான். அவன் உடல் கடும் வலிகொண்டதுபோல் குன்றியது. கிருபர் மேலும் உளவிசை கொண்டார். அவரும் அதே வலியை அடைந்தார். ஆனால் மேலும் மேலும் வலி வேண்டும் என்று கேட்டது உள்ளம். “அதோ அங்கே குருக்ஷேத்ரத்தில் நிகழ்ந்ததுபோல பொருளின்மையின் பேருருவத்தோற்றம் வேறுண்டா என்ன? அதை கண்ட பின்னரும் நீ இவற்றுக்கெல்லாம் ஒழுங்கையும் நோக்கத்தையும் எதிர்பார்க்கிறாய் என்றால் உன்னைப்போல் பேதை வேறுண்டா?” என்றார்.

கிருதவர்மன் “போதும்… போதும்” என்று உரக்க கூவினான். கிருபர் “பொருளின்மையை விரித்து விரித்து பல்லாயிரம் மடிப்புகளாக காட்டிக்கொண்டே இருந்தது அக்களம். கூச்சமே இல்லாமல் அதில் திளைத்து விளையாடிவிட்டு இங்கு வந்தமர்ந்து பொருள்தேடுகிறோம்” என்றார். அவர்களுக்கு அருகே ஈரமான மண்ணில் புதர்க்கிளைகள் காற்றில் உலைந்தும் சுழன்றும் கீறியும் வருடியும் வைத்திருந்த வடிவத்தை சுட்டிக்காட்டினார். “அதோ அதை ஓர் ஓவியம் என நீ எண்ணிக்கொள்வாய் என்றால் இவையனைத்திற்கும் பொருளுண்டு என்றும் நம்பலாம்… இது வெற்றுப்பொருள்வெளி. இதற்குப்பின் ஒன்றுமே இல்லை. இதில் முட்டிமுட்டி அழிவது நம் ஊழ். அதற்கப்பால் ஏதுமில்லை.”

கிருதவர்மன் ஒருகணத்தில் பற்றிக்கொண்டு எழுந்தான். கையை நீட்டி “வாயை மூடு!” என்று கூவினான். “இழிபிறவியே, வாயை மூடு… மூடு வாயை… இக்கணமே உன் சங்கைக் கடித்து குருதி துப்புவேன்.” பற்கள் தெரிய பசித்த செந்நாய் என இளித்து “நீ நஞ்சு… நீ வெறும் நஞ்சு” என்றான். அவனுடைய வெறியைக் கண்டு கிருபர் அகம் திடுக்கிட்டாலும் முகத்தில் அதே புன்னகையுடன் தலையை உலுக்கிக்கொண்டார். கிருதவர்மன் மூச்சிரைத்தான். “நீ அறமிலா அந்தணன்… படைக்கலம் எடுத்த அந்தணனைப்போல் கீழ்மகன் வேறில்லை.” கிருபர் ஏளனத்துடன் தலையை திருப்பிக்கொண்டார்.

கிருதவர்மன் “நீ உன் கீழ்மையிலேயே திளைத்துக்கொண்டிருப்பாய். அங்கு மட்டுமே உனக்கு இன்பமிருக்கிறது. வேளாப்பார்ப்பான் ஊருக்கு வெளியே வாழவேண்டியவன் என்று மூதாதையர் சொன்னது வீண் அல்ல. வேள்வியே பார்ப்பனனின் உள்ளூறிய தீங்கை நிகர்செய்கிறது. அவியிட்டு அவியிட்டு அவன் தன்னை புவிக்குரியவனாக ஆக்கிக்கொள்கிறான். நீ அத்தனை நச்சையும் தேக்கி மணியாக்கி சூடிக்கொண்ட நாகம்… உன் கீழ்மைக்குரிய உலகை நீ கற்பனை செய்துகொள்கிறாய். இருளை வணங்குகிறாய்… உனக்கு இருளையே ஒரு தாலத்தில் வைத்து அளிக்கும் தெய்வங்கள். செல்க!” என்றான். அவன் சொல்திணறி கைகளை விரித்து “இனி நம்மிடையே சொல் இல்லை. இவ்வளவுதான்…” என்றபின் திரும்பி நடந்து சென்றான்.

அவரிடமிருந்து தப்பி ஓடுபவன்போல அவன் விரைந்து செல்வதை அவர் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அவன் உடலில் உரசிய முட்செடிகள் உலைந்தன. அவனை விழுங்கியபின் காடு உதடுகளை மூடிக்கொண்டது. அவன் செல்லும் வழியின் பறவையோசை கேட்டது. பின் அவனை அறியாததுபோல் ஈரப்பசும்வெளியாக இருள்கொண்டு நின்றது காடு. அவன் அகவிழியிலிருந்தும் அகல்வது வரை அவர் உடல் இறுகியிருந்தது. பின்னர் மெல்ல தளர்ந்து சாய்ந்து அமர்ந்துகொண்டார். உடலில் இருந்து அத்தனை ஆற்றலும் ஒழுகி அகல்வதுபோலத் தோன்றியது. இனிய துயில் வந்து தசைகளை உருகிப் படியச்செய்தது. நினைவுகள் மயங்க அவர் எங்கெங்கோ சென்றுகொண்டிருந்தார்.

தன் குறட்டையோசையை தானே கேட்டு கிருபர் விழித்துக்கொண்டார். ஒளி சற்று திசை மாறியிருந்தது. காற்றின் திசையும் தண்மையும் மாறுபட்டிருந்தன. ஆகவே நீர்மணம் மாறுபட்டது. கறைகொண்ட செடிகளின் மணம். அவற்றில் வெயில் பட்டதன் வீச்சம். அவர் வாயைத் துடைத்தபடி எழுந்து அமர்ந்தார். கைகளை நீட்டி சோம்பல் முறித்தார். உள்ளம் புத்துணர்வு கொண்டிருந்தது. மிகக் குறைவான பொழுதே துயின்றிருக்கவேண்டும். ஆனால் மீண்டும் பிறந்தெழுந்ததுபோலத் தோன்றியது. எழுந்து கொண்டபோது இயல்பாக காடெங்கும் ஈரமண்ணில் முட்புதர்கள் வரைந்திருந்த வடிவங்களை நோக்கி அவர் விழிகள் சென்றன. அவற்றை நோக்கத் தொடங்கிய பின்னரே முந்தைய உரையாடலின் எச்சத்தை உள்ளம் தொட்டெடுத்தது.

வெவ்வேறு வடிவங்கள். அரைவட்டங்களும் முழுவட்டங்களும் ஒன்றையொன்று வெட்டிக்குழம்பின. அவற்றுக்குமேல் கீறல்கள். வெள்ளி நூல் என ஒரு நத்தை ஊர்ந்துசென்ற தடம். பறவைக்காலடிகள். ஒரு கீரியின் கால்தடம். அவை இணைந்து உருவாக்கிய ஓவியம் ஓர் ஒத்திசைவை கொண்டிருந்தது. பொருளறியாத ஒத்திசைவைப்போல் அச்சமூட்டும் பிறிதொன்றில்லை. அவர் திரும்பி நோக்காமல் விரைந்தார். அந்தக் காட்டில் தனியாக நடக்க இயலாது என்று தோன்றியது. அறியாத வடிவங்களை வரைந்து வரைந்து அழித்தபடி சூழ்ந்திருக்கும் அந்தக் காட்டை எப்படி நம்ப முடியும்? எவ்வண்ணம் அதை உண்பது? எவ்வாறு அதில் துயில்வது?

கிருபர் நடக்க நடக்க விரைவுகொண்டபடியே சென்றார். அவருக்குப் பின்னால் காடு உருவங்களென மாறி, கைகளும் கால்களும் பற்களும் உகிர்களும் எழுந்து, விழிகளும் மூக்கும் கொண்டு தொடர்ந்து வருவதுபோலத் தோன்றியது. அப்பால் கிருதவர்மன் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அவர் நின்றார். நடைதளர மெல்ல அவனை அணுகினார். அவரை அவன் மங்கிய கூழாங்கற்களைப் போன்ற விழிகளால் நோக்கினான். அவர் அருகே சென்று பேசாமல் நின்றார். அவன் நெடுநேரம் அழுதிருக்கவேண்டும் என்று தோன்றியது.

அவரை நோக்கியபின் அவன் விழிதாழ்த்தி நிலத்தை நோக்கினான். காட்டின் ஓசை சூழ்ந்திருந்தது. நீண்ட நேரத்திற்குப் பின் “நான் தற்கொலைக்கு முயன்றேன்” என்று அவன் சொன்னான். அவர் ஒன்றும் சொல்லவில்லை. “வாழ்க்கையின் சிறப்பில் இருப்பவர்களே தற்கொலை செய்துகொள்ள முடியும் என உணர்ந்தேன். தன்னை தானே ஒரு பொருட்டாக எண்ணுபவர்களுக்குரியது அவ்வழி. நிலையிழிந்து அடிநிலத்தை அடைந்தவர்களால் அது எவ்வகையிலும் இயலாது.” கிருபர் அவன் அருகே பெருமூச்சுடன் அமர்ந்தார். மடியில் கைகளைக் கோத்தபின் அவனை நோக்கினார்.

“அங்கே வந்து நோக்கினேன். துயின்றுகொண்டிருந்தீர்கள். என் கையில் அம்பு இருந்தது. உங்கள் சங்கை அறுப்பதற்காகவே வந்தேன். அதுவும் என்னால் இயலாதென்று கண்டேன்” என்று கிருதவர்மன் சொன்னான். “ஏனென்றால் நீங்கள் சொன்னதே மெய். இங்கே மெய்ப்பொருளென ஏதுமில்லை. இப்புடவிக்கு அப்பால் ஏதுமில்லை. எடைகொண்டது எடையற்றதை உடைக்கும் என்பதைப் போன்ற பருநெறிகளுக்கு அப்பால் இப்புடவி சென்றடைவதென ஏதுமில்லை.” கிருபர் ஏதோ சொல்ல முயன்றார். ஆனால் தொண்டை அடைத்திருந்தது.

“ஆகவே நாம் எதிர்பார்ப்பதற்கு ஏதுமில்லை” என்று கிருதவர்மன் சொன்னான். “அந்த எண்ணம் ஆழத்திற்குச் சென்றடைந்ததும் உருவான விடுதலையை கண்டு வியந்தேன். மிகப் பெரிய எடை ஒன்று என் மேலிருந்து அகன்றதுபோல. நான் செய்யவேண்டியவை என ஏதுமில்லை. இங்கே எனக்கு கடனில்லை. இங்கிருந்து கொண்டுசெல்வன என்றும் ஏதுமில்லை. ஒரு கணத்தில் என்னைக் கட்டிய அனைத்திலுமிருந்து விடுதலைகொண்டுவிட்டேன்…”

கிருபர் “அதுவும் ஒரு கற்பனைதான்” என்றார். ஆனால் கிருதவர்மன் மிகையூக்கத்துடன் கைகளை விரித்து “நான் எதையுமே செய்தாகவேண்டும் என்பது இல்லை. நான் செய்வதெல்லாமே நான் செய்யக்கூடியவையும் செய்யவேண்டியவையும்தான். நான் செய்வன எதற்குமே நான் பொறுப்பேற்க வேண்டியதில்லை. விலங்குகளைப்போல. விலங்குகளுக்கு இருக்கும் விடுதலை ஏன் மானுடருக்கு இல்லை? நமது சிறைகள் அனைத்துமே நாம் கற்பனைசெய்துகொண்டு உருவாக்கியவை. எந்த விலங்கும் அது உருவாக்கிய மெய்ப்பொருளுலகில் வாழவில்லை. பிறப்பும் இறப்பும் தானறிந்த பொருள் கொண்டதாக அமையவேண்டும் என நினைக்கவில்லை. அவ்வாறு அது அறிந்துகொள்ளும் பொருள் என ஏதுமில்லை” என்றான்.

“மானுடர் மட்டுமே புடவிக்கு பொருள் கண்டடைகிறார்கள். அதன் ஒரு பகுதியென தனக்குரிய மெய்ப்பொருளை உருவாக்கிக் கொள்கிறார்கள். தனக்குரிய மெய்ப்பொருளைக் கேட்டால் புடவியை நோக்கி திரும்புகிறார்கள். புடவிப்பொருள் கோரினால் தன் வாழ்க்கையைக்கொண்டு வகுத்துரைக்க முற்படுகிறார்கள். சொல்லச்சொல்ல குழம்புவதும், வகுக்க வகுக்க மீறிச்செல்வதும், ஏற்கும்தோறும் நம்பிக்கை குறைவதுமான இந்த மெய்ப்பொருளைப்போல மானுடனை சிறைப்படுத்தும் பிறிதொன்றில்லை. கிருபரே, நான் உணர்கிறேன், ஐயமில்லாது அறிகிறேன். மெய்யென ஏதுமில்லை. சாரமென்றும் முழுமையென்றும் அப்பாலென்றும் ஏதுமில்லை. வெறுமனே இருத்தலன்றி ஏதுமில்லை.”

“உங்கள் சொற்களினூடாக அதைச் சென்று கண்டடைந்தேன். நீங்கள் சொன்னதுமே அதை உணர்ந்துவிட்டேன். ஆகவேதான் சினம்கொண்டேன். அச்சினம் அடங்கியதும் அனைத்தும் துலங்கி நின்றன. காலூன்றிய மண் என திட்டவட்டமாக தெளிவுபட்டன. நான் வெளியேறும் வழி என ஒன்றை கற்பனைசெய்துகொண்டேன். ஏன் என்றால் நானிருப்பது சுற்றும் மூடிய இருண்ட குகைப்பாதை என எண்ணிக்கொண்டிருந்தேன். நான் நின்றிருப்பது எண்புறமும் திறந்த வெளியில்… அதை உணர்ந்ததுமே விடுதலைகொண்டேன்.”

கிருபர் கிருதவர்மனை நோக்கிக்கொண்டிருந்தார். “ஆம், இனி துயரமே இல்லை” என்று அவன் சொன்னான். “ஆனால் உன் குரலில் துயரின்மை இல்லை” என்று கிருபர் சொன்னார். “உன் உள்ளம் மலர்ந்திருக்கவுமில்லை. நான் உன்னைக் காணும்போது அழுதுகொண்டிருந்தாய்.” கிருதவர்மன் “நான் அழவில்லை” என்றான். “அக்கண்டடைதல் என்னை வெறுமை நோக்கி கொண்டுசென்றது. அதை என்னால் சற்றுநேரம் தாளமுடியவில்லை.” கிருபர் “ஏன் வெறுமைக்குக் கொண்டுசெல்கிறது அது?” என்றார். “ஏனென்றால் நான் இதுவரை நம்பி வந்த வாழ்க்கையை அது மறுக்கிறது. மீண்டுமொன்றை கண்டடையச் சொல்கிறது” என்றான் கிருதவர்மன். “ஆனால் உங்களிடம் பேசியபோது அதை நான் கண்டுகொண்டேன்.”

கிருபர் “அதை சொல்லிச் சொல்லி உருவாக்கிக்கொண்டாய்” என்றார். “ஆம், அதிலென்ன பிழை?” என்றான் கிருதவர்மன். “மெய்ப்பொருளென எதையேனும் பற்றிக்கொண்டவர்களும் இப்படித்தான் வெறுமையை அடைந்தபின் அதை சொல்லிச்சொல்லி நிறுவிக்கொள்கிறார்கள். மெய்ப்பொருள் பற்றித்தான் இப்புவியில் மிகுதியான சொற்கள் எழுப்பப்பட்டுள்ளன.” கிருதவர்மன் திகைத்து சொல்லிழந்தான். “நீ கண்டடைந்தது இன்னொரு மெய்ப்பொருள். அதை நீயும் சொல்லிக்கொண்டே இருக்கலாம்” என்றார் கிருபர். கிருதவர்மன் பெருமூச்சுவிட்டான். கிருபர் “வருக, இங்கிருப்பதில் பொருளே இல்லை!” என்றார்.

அவர்கள் மீண்டும் நடந்தனர். நெடுநேரம் கிருதவர்மன் ஒன்றும் சொல்லவில்லை. காலோய்ந்து நின்றபோது “எங்கே செல்கிறோம்?” என்று அவன் கேட்டான். “எதாவது நிகழுமென எண்ணுவோம்” என்று கிருபர் சொன்னார். “விந்தைகளை நம்பவேண்டும். தெய்வங்களை மீண்டும் நம்பவேண்டும்” என்றான் கிருதவர்மன். “ஊழை நம்புவோம், நமக்கு வேறுவழியில்லை” என்று கிருபர் சொன்னார். கிருதவர்மன் “அங்கே குருக்ஷேத்ரக் களத்தில் நாய்நரிகள் புகுந்துவிட்டிருக்கும்” என்றான். கிருபர் அச்சொற்களால் திடுக்கிட்டார். அத்தனை பேச்சுக்கு அடியிலும் அதைத்தான் அவர்கள் எண்ணிக்கொண்டிருந்தார்கள் என உணர்ந்தார்.

“அவர்கள் தரப்பிலும் ஓரிருவரே எஞ்சியிருக்க வாய்ப்பு” என்றான் கிருதவர்மன். “ஆகவே எரியூட்டக்கூட அவர்கள் தரப்பில் எவருமிருக்க மாட்டார்கள். உடல்களை அவ்வண்ணம் அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதே அவர்களால் செய்யக்கூடுவது.” கிருபர் “சகுனியையும் சல்யரையுமாவது நாம் எரியூட்டவேண்டும். அவர்களை நாய்நரிகளுக்கு விட்டுவிடலாகாது” என்றார். “இனிமேலா? இப்போது ஒரு நாள் கடந்துவிட்டிருக்கிறது” என்று கிருதவர்மன் சொன்னான். “அங்கே கரிய சேறு மூடியிருக்கிறது. உடல்களிலிருந்து அழுகல்வாடை எழுவதுவரை விலங்குகள் வரப்போவதில்லை” என்றார் கிருபர்.

“இல்லை. நேற்றிரவு தொடர்ச்சியாக மழை பொழிந்தது… இடைவெளியே இல்லாத மழை… அங்கே குருக்ஷேத்ரத்தில் மேலும் பலமடங்கு விசையுடன் மழை அறைந்திருக்கவேண்டும்” என்று கிருதவர்மன் சொன்னான். “நேற்றா? நேற்று மழையா?” என்றபின் கிருபர் “இருக்கலாம்… நான் நீருக்குள்ளேயே இருந்தேன். ஆகவே மழையை உணரவில்லை” என்றார். கிருதவர்மன் அவர் சொல்வதை உணராமல் “நேற்று ஆடிப் பதினெட்டு… பெருமழை பொழிந்து அனைத்தையும் கழுவியாகவேண்டும். ஆறுகளில் புதிய நீர்ப்பெருக்கு எழுந்திருக்கும்…” என்றான். கிருபர் அவன் சொன்னதை செவிகொள்ளவில்லை. கிருதவர்மன் “அங்கே உடல்கள் அவ்வண்ணமே கிடக்கும். பெருமழை பொழிந்தாலும் குருதிமணமும் கெடுமணமும் எழுவதில்லை” என்றான். “நாம் சென்று அவர்களை முறைப்படி சிதையேற்றவேண்டும்…”

கிருபர் “அதனால் பொருளிருக்குமென தோன்றவில்லை” என்றார். கிருதவர்மன் “நாம் அதை எண்ணியபின் அவ்வண்ணமே விட்டுவிட இயலாது. நாம் மீண்டும் குருக்ஷேத்ரத்திற்கு சென்றேயாகவேண்டும்” என்றான். கிருபர் “நம்மால் அதை விட்டுவிட்டுச் செல்லமுடியவில்லையா என்ன?” என்றார். கிருதவர்மன் திடுக்கிட்டு திரும்பி நோக்கினான். “நாம் உள்ளத்தால் விட்டுவிட்டு வரவில்லை. ஆகவே மீண்டும் அங்கே செல்ல விழைகிறோம்” என்றார் கிருபர் மீண்டும். கிருதவர்மன் “அவ்வாறல்ல…” என்றான். “நாம் அந்த களத்திலிருந்து விலகமாட்டோம். அதைச் சூழ்ந்தே அலைவோம். அதிலேயே இறந்துவிழவும்கூடும்.”

கிருதவர்மன் சீற்றத்துடன் “எவ்வாறாயினும் அக்களத்தில் என்ன ஆயிற்று என்று அறியாமல் என்னால் இனி ஓர் அடிகூட முன்னால் வைக்கமுடியாது. அங்கே சல்யரையும் சகுனியையும் விட்டுவிட்டுச் சென்றால் என்னை நான் வெறுப்பேன்” என்றான். “அங்கே திரும்பக்கூடாது என நான் சொல்லவில்லை. ஏன் திரும்புகிறோம் என எண்ணிக்கொண்டேன்” என்றார். “எண்ணி எண்ணி பொருள்தேடுவதன் கீழ்மை பற்றித்தான் பேசிக்கொண்டோம்” என்றான் கிருதவர்மன். “எவரேனும் எண்ணித்துணிந்து எண்ணுவதை விட்டுவிட முடியுமா என்ன?” என்றார் கிருபர்.

கிருதவர்மன் ஒன்றும் சொல்லாமல் திரும்பி நடக்க அவர் அவனைத் தொடர்ந்து சென்றார். “நாம் திரும்பி நடப்பதும் எந்த வகையான வேறுபாட்டையும் உருவாக்கவில்லை. எட்டு திசையில் எங்கு சென்றாலும் ஒன்றுதான்” என்றார் கிருபர். கிருதவர்மன் திரும்பி நோக்கவில்லை. “அங்கே நம்மைக் காத்து போருக்கு முந்தைய குருக்ஷேத்ரம் வெளித்திருந்தாலும் வியப்படைய மாட்டேன். இங்கே அனைத்தும் இயலக்கூடியதே” என்று கிருபர் சொன்னார். கிருதவர்மன் “வேண்டாம்… சொற்கள் என்னை சலிப்புறச் செய்கின்றன” என்றான். “அமைதி மேலும் சலிப்புற வைக்கும்… சொற்களன்றி இங்கே நமக்கு வேறு துணை இல்லை” என்றார் கிருபர். “இன்றுபோல நான் எப்போதுமே பேச விழைந்ததில்லை.”

“வேண்டாம்… நான் கேட்க விழையவில்லை” என்று கிருதவர்மன் கூவினான். “கேட்க விழையவில்லை எனில் நீ விலகிச்செல். நான் பேசியே ஆகவேண்டும்” என்றார் கிருபர். “நீ என்னை வசைபாடியபோது நான் உள்ளூர மகிழ்ந்தேன். அதைப்பற்றித்தான் எண்ணிக்கொள்கிறேன். என்னை எவரேனும் சிறுமைசெய்யவேண்டும் என்றும் என் தலையை மிதித்து பாதாளம் நோக்கி தள்ளவேண்டும் என்றும் விழைகிறேன். இந்த உலகு முழுக்க பழிக்கும் ஒருவனாக நின்றிருக்கவேண்டும் என்றும் மூதாதையரும் தெய்வங்களும் என்னை எண்ணி கூசி விதிர்ப்பு கொள்ளவேண்டும் என்றும் விரும்புகிறேன்.”

“ஏன்?” என்று அறியாமலேயே கிருதவர்மன் கேட்டான். கிருபர் “ஆ! நீயும் அவ்வண்ணமே விழைகிறாய்” என்று கூவினார். “நீயும் அவ்வண்ணமே என நான் அறிவேன். இல்லையேல் உன்னிடம் பேசும்போது எனக்கு கூச்சம் எழுந்திருக்கும். நீ என்னைப்போல ஒருவன்…” அவர் பேசிக்கொண்டே தொடர்ந்து வந்தார். “நான் எண்ணிக்கொள்கிறேன். முன்பொருமுறை படைநிலையில் ஒரு திருட்டைச் செய்தபோது ஒருவனை பிடித்தனர். அவனுடைய பத்து விரல்களையும் வெட்டினர். அவன் பதினெட்டு நாட்களுக்குப் பின் தற்கொலை செய்துகொண்டான். வாளை நட்டு அதன்மேல் விழுந்தான். ஆனால் அதற்குமுன் அவன் ஓர் ஆலயத்திற்குள் நுழைந்து கருவறைக்கு முன் மலம்கழித்து வைத்திருந்தான்.”

“வேண்டாம்!” என்று கிருதவர்மன் சொன்னான். “பேசாமல் வாருங்கள்… இல்லையேல்…” கிருபர் சிரித்து “நீ என்னை கொல்வாய், இல்லையா? கொல். என்னைக் கொல்ல எவரேனும் எழுவதைப்போல இப்போது இனியதாக எதையும் நான் உணரவில்லை. என்னை நீ வெறுத்தால் மகிழ்ச்சியில் திளைப்பேன்” என்றார். அவர் பற்களைக் காட்டி நகைத்து “ஏனென்று எனக்குத் தெரியவில்லை. இது எந்த வகையான உளச்சிக்கல் என தெய்வங்களே அறியும். ஆனால் இந்த உலகனைத்தும் என்னை எண்ணி அருவருத்து மெய்ப்பு கொள்ளும்படி எதையாவது செய்ய விழைகிறேன்…” என்றார்.

அவர் கைகளை விரித்து “ஒன்றை எண்ணியிருக்கிறாயா? எதன்பொருட்டேனும் நீ தண்டிக்கப்பட்டிருக்கிறாயா? தண்டிக்கப்படுபவன் தன்னை உலகமே திரண்டு தண்டிப்பதாகவே எண்ணுவான். அவனுடைய சினம் உலகை முழுக்க எதிர்நிலையில் நிறுத்தி வெறுக்கவே தூண்டும்” என்றார். அவரிடமிருந்து தப்புவதற்காக கிருதவர்மன் வேகமாக முன்னால் சென்றான். அவர் அவனை விரைந்து தொடர்ந்தபடி “ஆனால் உலகை ஒருவன் எப்படி பழிவாங்க முடியும்? உலகு அத்தனை பெரியது. அவன் இருப்பும் இன்மையும் அதற்கு ஒரு பொருட்டே அல்ல. அவன் என்னதான் செய்யமுடியும்?” என்றார்.

“அவன் ஒன்று செய்யலாம். அவன் தன்னைத்தானே சிறுமைசெய்துகொள்ளலாம். அவன் சிறுமையின் அடியாழத்திற்குச் செல்லலாம். கீழ்மையை அள்ளி அள்ளி சூடிக்கொள்ளலாம். ஒரு மானுடனுக்கு இருக்கும் உச்சகட்ட உரிமை என்பது அவன்மீதுதானே? அவன் எப்படி வேண்டுமென்றாலும் ஆகலாம். அதனூடாக அவன் இவ்வுலகையே சிறுமைசெய்யலாம்… உலகம் அதை அறியாமல் போகக்கூடும். அதனாலென்ன? அவனுக்கு அது தெரிந்துவிடுகிறதே? அவன் அச்சிறுமையினூடாக வென்றுவிடுகிறானே? ஒருகணமாவது நின்று தருக்கிக்கொள்கிறானே? அதுவே அவன் வெற்றி அல்லவா?” அவர் நிலைக்காத சொற்களால் பேசிக்கொண்டே அவனைத் தொடர்ந்து சென்றார்.

முந்தைய கட்டுரைகற்காலத்து மழை-4
அடுத்த கட்டுரைஆற்றூர்-கடிதங்கள்