வெண்முரசு -இரு கடிதங்கள்

ஓவியம்: ஷண்முகவேல்

 

அன்புள்ள ஜெ

 

நந்தினி சேவியர் என்ற பெயரில் எழுதும் ஓர் இலங்கைக்காரர் முகநூலில் இப்படி எழுதியிருந்தார். உங்களுக்காக…

 

 

மௌனம்…அங்கீகாரமல்ல…!

அல்லது

வாசகர்கள் முடாள்களல்ல..

*****************************

எழுத உங்களுக்கு உரிமை இருக்குமாக இருந்தால்…வாசிக்கும் எங்களுக்கும்

கருத்துச்சொல்ல உரிமை இருக்கிறது.

 

கிறிஸ்துவின் சரிதம் மத்தேயு,

மாற்கு,லூக்காஸ், யோவானால் எழுதப்பட்டது.

 

அது பலமொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது.

 

தமிழிலும் எளிமையாக அது மொழிபெயர்க்கப்பட்டு கிடைக்கிறது.

 

அதனை ‘இயேசு காவியம் ‘ என கண்ணதாசன் மீளஎழுதினார்.

 

எனக்கு அது உடன்பாடற்றிருந்தது.

 

ஏலவே இருந்த தெரிந்த ஒரு விசயத்தை

எம்மீது திணிப்பதன் அவசியம் என்ன.?

 

நாவல், எழுதுகிறேன் என்ற பெயரில் மகாபாரதத்தை ஜெயமோகன் திரும்ப எழுதுவது அவரது வித்துவச் செருக்கு.!

 

இதனால் வாசகன் அடைவது என்ன.?

 

மேகலையை எழுதுகிறேன் என்றும், ராமகாதையை கவியமாக்குகிறேன் என்று

கிளம்பி இருப்பவர்களிடம் ஒரு வாசகனான

என் கேள்வி…!

 

இதனால் என்ன பிரயோசனம்.?

 

உங்களது வித்துவச் செருக்கா..?

 

உங்களுக்கு அது தொழில்…

எங்களுக்கு …?

 

உங்களிடம் பணம் இருக்கிறது… வேறு .தொழிலேதும் உங்களுக்கு தெரியாது.

 

எனவே புத்தகம் பண்ணுகிறீர்கள்.!

 

அன்பர்களே… தயவு செய்து பயனுள்ள

காரியங்களை செய்யுங்கள்..தேடுங்கள்…!

 

தயவு செய்து வாசகர்களான எங்கள் தலையில் மிளகாய் அரைக்காதீர்கள்…!

 

உங்கள் நாவல்களையும், காப்பியங்களையும் வாசித்த பல இலக்கியவாசகர்களின் ஆதங்கம் இது.!

 

பொய்யல்ல இது உண்மை…!

 

நட்புக்காக மௌனம் சாதிப்போரினால்..

நீங்கள் உத்வேகம் பெற்றுள்ளீர்கள்.

 

அவர்களின் மௌனம் பொய்யானது.

 

நம்புங்கள்….!

 

உங்கள் நூல்களை நிராகரிக்கவென ஒரு நல்ல வாசகர் கூட்டம் உள்ளது.

 

கொஞ்சம் சிந்தியுங்கள்.

 

*

 

ஆகவே நேரமிருந்தால் கொஞ்சம் சிந்தியுங்கள்

 

மகாலிங்கம்

 

அன்புள்ள மகாலிங்கம்

 

அனேகமாக தமிழில் எந்த ஒரு படைப்பை பற்றியும் இப்படி ஒரு உருக்கமான மன்றாட்டு எழுந்திருக்காது என நினைக்கிறேன். இரண்டு தரப்பிலிருந்தும் இது நாள்தோறும் கிளம்பி வருகிறது.. வழக்கமான மரபுசார் வாசகர்களின் குழப்பமும் கோபமும் எழுந்துகொண்டே இருக்கிறது.  இவர்களின் முற்போக்கு அறைகூவல் இன்னொருபக்கம்

 

மரபுசார் வாசகர்கள் வாசிக்கிறார்கள், கடைசிவரை என்ன ஏது என பிடிகிடைப்பதில்லை என்றாலும். இப்போது முடியவும்போகிறது.  இன்னொருபக்கம் இவரைப்போன்றவர்கள். ஆனால் இவர்கள் ஒருபடி மேல். அவர்களைப்போல இவர் வாசிக்க மெனக்கெடவில்லை. அவருக்கு பயனற்ற விஷயத்திற்கு பொழுதையும் உழைப்பையும் செலவிடவில்லை.நல்லதுதான். அவர் பைபிளையே வாசிக்கலாம்.புதிய ஏற்பாடு திருத்தப்பட்டது. ஆகவே பழைய பைபிளுக்குச் செல்லலாம். அதுவும் திருத்தப்பட்டதாகையால் அப்படியே அராமிக் பைபிளுக்கும் யூத பைபிளுக்கும்கூடச் செல்லலாம்.

 

ஜெயமோகன்

 

அன்புள்ள ஜெ

 

யார் இந்த சக்திவேல்? வெண்முரசை நன்றாக வாசித்திருக்கிறாரே?

ஜெகன் மோகன் ரெட்டி… தடம் மாறும் தவப்புதல்வன்!

 

அரங்கா

 

அன்புள்ள அரங்கா

 

அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மகாபாரதத்தின் புராணக்கதைகள் பாகவதத்திலும் பின்னர் தேவிபாகவதத்திலும் மாற்றமடைந்தன, பக்தி அடிப்படையில் மறு ஆக்கம் செய்யப்பட்டன.  அதன்பின் மகாபாரதத்தை ஒட்டி எழுதப்பட்ட காவியங்களில் மேலும் மாறுதல்களுடன் மறுஆக்கம் செய்யப்பட்டன.  கடைசியாக உரைநடை இலக்கியம் வந்தபோது நாவல்களில் மறு ஆக்கம் செய்யப்பட்டன. கேரளத்தில் புகழ்பெற்றிருக்கும் புராணக்கதைகள் பல தேவிபாகவதத்திலிருந்து எழுந்தவை. தமிழகத்தில் பேசப்படும் மகாபாரதக்கதைகளில் பெரும்பகுதி நாட்டார் அரங்கவடிவங்களில் உருவானவை. வியாசபாரதம் என அறியப்படும் மபாபாரதத்திலேயே பல பகுதிகள் பின்னாளில் நிகழ்த்துகலைகளிலிருந்து உள்ளே கொண்டுசெல்லப்பட்டவை.மறு ஆக்கம் என்பது மகாபாரதத்தை நாம் வாழும் முற்றிலும் புதிய வாழ்க்கைச்சூழலில் மீண்டும் கண்டடைவதுதான்

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-26
அடுத்த கட்டுரைமூங்கில்,செர்ரிபிளாஸம்,ஜப்பான்