கற்காலத்து மழை-3

பழுதுபட்டு கைவிடப்பட்ட ஆலயம் ஒன்றைச்சுற்றி இருக்கும் சிற்றூர் என்ற உருவகம் எழுபது எண்பதுகளில் நாவல்கள் சினிமாக்களில் நிறையவே வந்திருக்கிறது. குறிப்பாக கேரளம், கர்நாடகம் பகுதிகளின் படைப்புகளில். தமிழகத்தில் , குறிப்பாக தஞ்சையில், அத்தகைய ஆலயங்கள் ஏராளமாகவே உண்டு என்றாலும் அத்தகைய படைப்புக்கள் குறைவு. லா.ச.ராமாமிருதத்தின் அபிதாவையும் பூமணியின் நைவேத்யம் நாவலையும் ஓரளவு சொல்லலாம். சினிமாக்கள் என எவையுமில்லை. அவற்றில் ஆலயம் மையமாகச் சொல்லப்படவில்லை.

மலையாளத்தில் அவ்வகையில் கிளாஸிக் என சொல்லத்தக்க படங்கள் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதி இயக்கிய ‘நிர்மால்யம்’ மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுத பி.என்.மேனன் இயக்கிய காயத்ரி போன்ற படங்கள். கன்னடத்தில் அனந்தமூர்த்தி, ஃபைரப்பா போன்றவர்களின் பல கதைகள் இப்பின்னணியில் அமைந்தவை. என் உள்ளத்தில் எழும் பழைய படம் புட்டண்ண கனகல் இயக்கிய கஜ்ஜெ பூஜே[ சலங்கைபூசை].தேவதாசி முறையை பற்றிய சினிமா. ஆனால் மிக மங்கலாகவே நினைவில் எழுகிறது.

 

கோயிலைச்சுற்றி வாழ்பவர்கள் அங்கிருந்து பிடுங்க்கொண்டு தப்பி ஓடாமல் வாழமுடியாது என்று அக்கால நம்பிக்கை. குறிப்பாக இளைஞர்களின் நடுவே. ஒருவகையில் அது உண்மையும்கூட. கோயிலைச்சூழ்ந்திருக்கும் அமைதியான, மந்தமான என்றும் சொல்லலாம், வாழ்க்கை எதையும் பொருட்படுத்தாமல் ஓய்ந்திருக்கச் செய்கிறது. புதியன எதிலும் நம்பிக்கை இல்லாமலாக்குகிறது. விளைவாக வம்புகளில் மூழ்கடிக்கிறது. மூழ்கும் கப்பலுடன் சேர்ந்து மூழ்கிய எத்தனையோ எலிகளை எனக்குத்தெரியும்.

 

கர்நாடகத்தில் ஹொய்ச்சால பயணங்களின்போது அப்படி மூழ்கிக்கொண்டிருப்பவையாகத் தோன்றும் பல ஆலய ஊர்களைப் பார்த்தேன். ஆலயம் கைவிடப்பட்டிருக்கும். சுற்றிலும் உள்ள கட்டிடங்களும் பழையவையும் இடிந்தவையுமாக இருக்கும். ஊர் பொருளியல்வளர்ச்சி கொள்ளத் தொடங்கும்போதுகூட அந்த ஆலயம் ஒரு புண் போல அதன் நெஞ்சில் அமைந்திருக்கும். சில ஊர்களில் அதை வெள்ளையடித்துச் சீர்மைக்க முயல்வார்கள். அது இன்னமும் மோசமான விளைவையே உருவாக்கும்

ஜூலை பன்னிரண்டாம் தேதி இறுதியாகப் பார்த்தது திரிகூடர் ஆலயம். கதக் அருகே புறநகரில் உள்ளது. பிற ஆல்யங்களைப்போலன்றி இது ஊருக்குள்ளேயே இருந்தது. பெரிதும் சிதைவுற்றிருந்தது. ஆலயத்தின் ஒரு வாயிலிலிருந்து இன்னொரு வாயிலினூடாக குறுக்குப் பாதைகளில் ஊர்மக்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே செருப்பணிந்த கால்கள் உள்ளிருந்து வெளியே வந்துகொண்டிருந்ததை பார்த்தோம். உள்ளே பையன்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்

 

திரிகுடாச்சலம் என்பது கர்நாடகத்தின் ஆலயங்களில் பொதுவான சிற்ப அமைப்பு. மும்முடிமலை என தமிழாக்கம் செய்யலாம். மையக்கருவறை, நேர் முன்னால் மண்டபம், அதிலிருந்து வலமும் இடமுமாக வேறு இரு கருவறைகள் என்பது இதன் அமைப்பு. வெளியே நின்று நோக்கினால் கருவறைகளுக்குமேல் அமைந்த மூன்று கோபுரங்கள் தெரியும். இங்கே சிவனே மும்முடியுடன் இருக்கிறார். ஒரு கல்லில் மூன்றுமுக சிவலிங்கம் செதுக்கப்பட்டு மையவழிபாட்டில் உள்ளது. ஆகவே திரிகுடாச்சலம்

குற்றாலநாதருக்கு திரிகூடலிங்கம் என்று பெயர் உண்டு. ஏறத்தாழ இதேபொருளில்தான். குற்றாலமலை மும்முடி கொண்டது என்பதனால் சிவன் இப்பெயர் பெற்றார். குற்றாலக் குறவஞ்சி எழுதியவர் திரிகூடராசப்ப கவிராயர். அந்த குறவஞ்சிப்பாட்டில் குறத்தி வசந்தவல்லியிடம் அவளை தேடி திரிகூடலிங்கேஸ்வரர் வரப்போவதாக குறிசொல்கையில் திரிகூடர் என்ற பெயரை ஸ்த்ரியை கூடும் திறன் கொண்டவர் என்று சொல்கிறாள்.

 

உன்னைப்போல எனக்கவனும் அறிமுகமோ அம்மே
ஊரும் பேரும் சொல்லுவதும் குறிமுகமோ?
பின்னையுந்தான் உனக்காகச் சொல்லுவேன் அம்மே அவன்
பெண்ணைச்சேர வல்லவன்காண் பெண்களுக்கரசே

என்ன சொல்கிறாள் என்று தெரிந்தும் வசந்தவல்லி பொய்யாகக் கோபம் கொள்கிறாள்.

 

வண்மையோ வாய்மதமோ வித்தை மதமோ என்முன்
மதியாமல் பெண்ணைச்செர வல்லவன் என்றாய்
கண்மயக்கால் மயக்காமல் உண்மைசொல்லடி பெருங்
கானமலை குறவஞ்சி கள்ளிமயிலி

 

என்று சீறிய பின் குறத்தி விளக்குகிறாள்

 

பெண்ணரசே பெண்ணென்றால் திரியும் ஒக்கும் ஒரு
பெண்ணுடனே சேரவென்றால் கூடவும் ஒக்கும்
திண்ணமாக வல்லவனும் நாதனும் ஒக்கும் பேரை
திரிகூட நாதனென்றும் செப்பலாம் அம்மே

ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து செல்லும் இத்தகைய நினைவுகள் இத்தகைய பயணங்களின் அனுபவங்களில் முக்கியமானது. இவை நம்மை ஒரு பழைய செவ்வியல் காலத்திலேயே நிறுத்திவைக்கின்றன. ஒரு கனவுநடை. நாம் எதையுமே கவனிக்காதவர்கள் போல தோன்றும் .ஆனால் நாம் சாதாரணமாக கவனிக்காத அளவுக்கு விரிவாகவும் கூர்மையாகவும் கவனித்துக்கொண்டிருப்போம். உதாரணமாக, மூன்றுநாட்களாக நான் எழுதிவரும் இக்கட்டுரைகள் ஒருநாளைப்ப்பற்றியவை. அன்றாடமென நிகழும் ஒருநாளில் என்றாவது இவ்வளவு கூர்ந்து வாழ்க்கையை பார்த்திருப்போமா என்ன?

 

இத்தகைய பயணங்களிலன்றி இந்த உளநிலையை உருவாக்கி நீடித்துக்கொள்வது மிகக் கடினம். பயணங்கள் நம்மை தற்காலிகமாக வெவ்வேறு இடங்களில் வாழச்செய்வதுதான். அப்போது நம்முள் இருந்து வேறு ஆளுமை வெளிவருவதைக் காண்கிறோம். இத்தகைய காலப்பயணங்கள் எழுத்தாளர்களுக்கு மிக முக்கியமானவை. ஆனால் பிறருக்கும் அவை மிகப்பெரிய விடுதலை. நாம் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையிலிருந்து வெளியேறிவிடுகிறோம். மீண்டும் அதற்குள்தான் செல்லப்போகிறோம். ஆனால் வெளியேறியதுமே அதற்குள் நாம் கண்ட அத்தனை சிக்கல்களும் சிறிதாகிவிட்டிருப்பதை உணர்வோம்

கன்னடப் பண்பாட்டில் அமரசில்பி என்று புகழப்பெறும் ஜனகாச்சாரியால் வடிவமைக்கப்பட்டது இந்த ஆலயம். ஜனகாச்சாரியின் பெயர் கல்யாணிசாளுக்கியர்களின் பல கல்வெட்டுகலில் குறிப்பிடப்படுகிறது. தும்கூர் அருகே கைதாலா என்னும் ஊரில் கிபி பதினொன்றாம் நூற்றாண்டில் பிறந்தவர் ஜனகாச்சாரி. சிற்பியாக ஊர் ஊராக அலைந்து திரிந்தவர். அவரைப்பற்றிய செவிவழிக்கதைகள் குறுங்காவியங்களாக எழுதப்பட்டுள்ளன

 

ஜனகாச்சாரி தன் மனைவியை நெடுங்காலமாக பிரிந்து பேலூர் ஆலயத்தைக் கட்டிக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அவரைவிடவும் திறமைவாய்ந்த சிற்பியாக வளர்ந்தான். அவன் பெயர் டங்கனாச்சாரி. பேலூரில் அவனும் ஒரு சிற்பியாக பணியாற்றினான். தந்தை செய்த சிற்பத்தில் ஒரு குறையை அவன் சுட்டிக்காட்டினான். தந்தை அதை தனக்கெதிரான ஒரு குற்றச்சாட்டாகவே கொண்டார். அக்குறை உண்மை என்றால் தன் கையை வெட்டிக்கொள்வதாக அறைகூவினார். டங்கனாச்சாரி தந்தை செய்த சிற்பத்தில் உளியால் மெல்ல தட்டி உடைத்தார். உள்ளே இருந்து ஒரு சிறு தேரை வெளியே குதித்தது. நீரும் வழிந்தது. ஜனகாச்சாரி கையை வெட்டிக்கொண்டார்.

ஆனால் அத்தனை திறன் வாய்ந்தவன் தன் மகனே என தெரிந்ததும் மனநிறைவடைந்தார். பேலூர் சிற்பப்பணியை மகனிடம் ஒப்படைத்தார். தன் சொந்த ஊரிலுள்ள கோயிலை கைவிட்டுச் சென்றதனால் தன் கையை இழந்ததாக எண்ணி திரும்பிவந்த ஜனகாச்சாரி அங்கே சென்ன கேசவர் ஆலயத்தை கட்டினார். ஆலயப்பணி முடிந்ததும் வெட்டுண்ட கை திரும்ப வந்தது. ஆகவே அந்த ஊரின் கிருதபுரா என்ற பெயர் கைதாலா என்று மாறியது.

 

நாட்டார் தொன்மம் என்பதில் ஐயமில்லை. சிற்பத்திற்குள் தேரை வாழ்வதெல்லாம் அதில்தான் இயலும். ஆனால் இந்த கதை சினிமாவாக வந்திருக்கிறது. 1964ல் அமரசில்பி ஜனகாச்சாரி என்றபெயரில் கல்யாண்குமார் நடிக்க ஒரு கன்னடப்படம் வெளிவந்தது. அதே ஆண்டில் அது அதே பேரில் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது. ஏ.நாகேஸ்வர ராவ் கதாநாயகனாக நடித்தார்.

ஏறத்தாழ இதே கதை கேரளத்தில் பெருந்தச்சனைப்பற்றியும் சொல்லப்படுகிறது. அவருடைய இயற்பெயர் ராமன். பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தவர். கேரளத்தில் எர்ணாகுளம் அருகே உளியன்னூர் என்னும் ஊரில் பிறந்தவர். கேரளத்தின் புகழ்பெற்ற பல ஆலயங்களை அமைந்த்தவர். அவருடைய மகன் அவருக்கு அறைகூவல் விடுத்து வென்றார். பொறாமைகொண்ட பெருந்தச்சன் தன் மகனை உளியை கட்டிடத்தின் மேலிருந்து கீழே போட்டு கொன்றார். குற்றவுணர்வில் தானும் மறைந்தார். எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய பெருந்தச்சன் என்னும் படம் புகழ்பெற்றது. திலகன் பெருந்தச்சனாக நடித்திருந்தார்.

 

தமிழ் வரலாற்றில் நமக்கு கிடைக்கும் புகழ்பெற்ற சிற்பியின்பெயர் குஞ்சர மல்லன் ராஜராஜ ராமப் பெருந்தச்சன். அவருக்கு ராஜராஜ சோழன் வெற்றிலை மடித்துக்கொடுத்ததாக ஒரு நாட்டார் கதை உள்ளது. இத்தகைய தொன்மங்கள் திரைப்படம் போன்ற பொது ஊடகங்கள் வழியாகவே நவீன காலகட்டத்தில் நிலைநிறுத்தப்பட முடியும்.

வணிகசினிமா வணிக எழுத்து ஆகியவற்றுக்கு சிலவற்றை பொதுப்புத்தியில் ஆழமாக நிலைநாட்டும் ஆற்றல் உண்டு. ராஜராஜசோழனை பொன்னியின் செல்வன் அவ்வாறு தமிழ் உள்ளத்தில் நிலைநாட்டியது. அப்படிப்பார்த்தால் சாண்டில்யன் தமிழ் வரலாற்றுணர்வை உருவாக்கியதுபோல் எவரும் செய்ததில்லை. இங்கல்ல, உலகம் முழுக்கவே ரொமான்ஸ் எனப்படும் கற்பனாவதக் கதைகள் இவ்வாறு வரலாற்றை கட்டமைத்து நிலைநிறுத்தியிருக்கின்றன. வால்டர் ஸ்காட்டிலிருந்து பிரிட்டனின் வரலாற்றைப் பிரித்துப் பார்க்கமுடியுமா என்ன?

 

ஒரு குறிப்பிட்ட அகவையில் சாகசத்துடனும் கனவுடனும் கலந்து இவை வரலாற்றை நமக்கு அளிக்கின்றன. இவற்றை ஒருவகை நவீனத்தொன்மங்கள் என்ரே சொல்லவேண்டும். இவை வரலாறு அல்ல. வரலாற்றுக் கற்பனைகள்தான். ஆனால் நாம் இவற்றினூடாக வரலாற்றின் கலையடுக்குகளுக்குள்ச் செல்வது மிக எளிதானது. சாண்டில்யன் உட்பட பல படைப்பாளிகளின் நல்ல கதைகளை சினிமாவாக எடுக்கலாம். ஆனால் பொதுவாக சினிமாவில் அந்த ஆர்வத்தை நான் கண்டதில்லை.

வாதாபி சாளுக்கியர்களால் அமைக்கப்பட்டது இந்த ஆலயத்தின் முதற்கட்டுமானம் [ வாதாபி ஐஹோல் பட்டடக்கல் ஆகியவை இவர்களின் கலைமையங்கள்.] ராஷ்டிரகூரர்களும் பின்னர் கல்யாணி சாளுக்கியர்களும் இந்த ஆலயத்தை முழுமைசெய்திருக்கிறார்கள். கல்யாணி சாளுக்கியர்களின் ஆலயங்களிலுள்ள அலங்காரத் தூண்கள் ,முதலையுடல்வளைவுகள். களிற்றியானைநிரை அணிகள். திசைத்தேவர்களும் கந்தர்வர்களும் மிகச்சிறிய அலகுக்குள் அழகுறச் செதுக்கப்பட்டிருகின்றனர்

 

இக்கோயிலும் மாக்கல்லால் ஆனது மிக நுணுக்கமான சிற்பங்கள் இருந்திருக்கவேண்டும். ஆனால் அனேகமாக அத்தனை சிற்பங்களும் உருகி வடிவிழந்திருக்கின்றன. ஒட்டுமொத்தமாக ஆயத்தின் அழகை உணரமுடியும். ஆலயத்தை ஒட்டி மூன்றுதேவியருக்கான ஆலயம் அமைந்திருக்கிறது. அவற்றில் சரஸ்வதி [சாரதை] மையத் தெய்வமாக அமர்ந்திருக்கிறாள். கர்நாடக ஆலயங்களின் சரஸ்வதிசிலைகள் பேரழகு கொண்டவை. கையில் ஏடும் மறுகையில் அமுதகலமும் கயிற்றுப்படையும் கொக்கிப்படையும் ஏந்தி தாமரைமேல் அமர்ந்திருக்கிறாள். பேலூரிலும் ஹளபீடிலும் உள்ள சரஸ்வதி சிலைகளுக்கு முன்னோடி இச்சிலை.

அந்தி ஒளி விழத் தொடங்கியிருந்தது. கல்யாணிச்சாளுக்கியர் காலத்தில் உருவான உருளைத்தூண் மண்டபங்கள்,சுற்றி கல்லாலான சாய்வு திண்டுகள். வளைவுகளில் நீர்மை ஒளி மின்னும் அத்தூண்களுக்குமேல் தாமரை கவிழ்த்த கூரை. சிற்பங்களின்மேல் முன்னர் எப்போதோ வெள்ளை அடித்திருக்கிறார்கள். வெள்ளை அடித்ததை சுரண்டினாலும் சிற்பங்கள் மொண்ணையாகிப் போய்விடு.ம் முழுமையாக ஒரு சிற்பம் கூட சுற்று சுவரில் இல்லை. தூண்கள் அனைத்துமே சற்று பழுது பட்ட நிலையில் தான் இருந்தன.

 

கோபுரங்கள் சரிந்திருந்தன. கூரைகள் விரிந்து அவற்றின்மேல் தொல்லியல் துறையால் உருவாக்கப்பட்ட காரைப்பூச்சு மட்டும்தான் எஞ்சியிருந்தது. இங்கிருந்த கோபுரத்தின் அமைப்பை கோட்டங்களின் மேலே சிறிய அளவில் காணமுடியும். அங்கிருந்த கோஷ்ட முகப்பு முன்னால் அங்கிருந்த கோபுரம் எத்தகையதென்பதை காட்டியது நாகர-தட்சிண பாணியில் அமைந்தது. சிகரங்க்ளின் தொகுப்பாக அமைந்த கூம்புக்கோபுரம்.

கர்நாடகத்தின் ஆலயங்களை பார்க்கையில் திராவிடச் சிற்பக்கலையின் படிப்படியான வளர்ச்சியைக் காணமுடியும். நாம் தூண்களின்மேல் அமைந்த மண்டபங்களிலேயே முதலில் ஆர்வம் காட்டியிருக்கிறோம். அதன்பின் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்வதற்குரிய அரங்குகள் வந்தன. அதன்பின் வசந்தமண்டபங்கள் பல தூண்களுடன் விரிவாக அமைக்கப்பட்டன. மண்டபங்களை வெவ்வேறு வடிவில் செய்து விரிவாக்கம் செய்துகொண்டே சென்றோம்

மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலயத்தின் நுழைவுப்பகுதியில் வலப்பக்கம் இருக்கும் வசந்தமண்டபமும் அதன் ஆயிரங்கால் கொண்ட அரங்கும்தான் தமிழக ஆலய அரங்குகளிலேயே பெரியது என நினைக்கிறேன். இருபக்கமும் அது பிரிகிறது. சாதாரணமாக மூவாயிரம்பேர் நிற்க முடியும். பொன்னியின் செல்வனை மணிரத்னம் முதலில் முயன்றபோது ராஜராஜனின் அவைமண்டபமாக அது அமையலாமென்றுதான் முடிவெடுத்தார். ஆனால் ஆலயங்களில் படப்பிடிப்பு நடத்த ஒப்புதல் இல்லை என்பதனால் அது இயல்வதல்ல

 


பின்னர் நமது வளர்ச்சி திண்ணைகளில் நிகழ்ந்தது. பழைய ஆலயங்களில் அமைந்துள்ள வகைவகையான திண்ணைகள் அழகானவை. கல்லால் ஆன சாய்வமைப்பு கொண்டவை. முதலில் அவை வெறுமே கற்பலகைகளாக இருந்தன. பின்னர் யானைநிரை அமைந்தது. மலர்வேலைப்பாடுகள் உருவாயின. ஒருகட்டத்தில் திண்ணை என்பது அமர்வதற்குரியதல்ல பார்ப்பதற்குரியது என்னும் நிலை உருவானது

 

திரிகுடேஸ்வரர் ஆலயத்தின் அழகிய திண்ணை அமைப்பு சுற்றிச்சுற்றி வந்து பார்த்துக்கொண்டே இருப்பதற்குரியது. மலரிதழ் மடிந்ததுபோல அமைப்பு கொண்டது. அதன் பக்கம் முழுக்க செறிந்த சிலைகள். சிலைச்செறிவு என்பது செவ்வியலின் ஓர் இயல்பு. நவீன அழகியல் அதை மிகை என எண்ணும். ஆனால் இயற்கையில் அழகும் அல்லதும் எல்லாமே மிகைதான். ஏனென்றால் மானுடன் மிகச்சிறியவன் . மிகையை குறைக்க நினைக்கும் நவீனத்துவ உள்ளம் மானுடமையம் கொண்டது.

ஒருநாள் முழுக்க கலைக்கோயில்களைப் பார்த்திருக்கிறோம். இது தொடர்ச்சியாக இரு காவியங்களைப் பார்த்ததுபோல. இயல்பான உளநிலையில் இது சலிப்பையே அளிக்கும். ஆனால் இத்தகைய பயணங்களின்போது உள்ளம் இன்னும் இன்னும் என்றே தாவுகிறது. ஏனென்றால் நாம் இதற்கென்றே கிளம்பி வந்திருக்கிறோம். இதுவன்றி வேறில்லாமல் இந்நாளைச் செலவிடுகிறோம்

 

கலைகளை அறிமுகம் செய்யச் சிறந்த வழி என்பது கலைவிழாக்களுக்குச் செல்வதே. சிலநாட்கள் அக்கலையிலேயே மூழ்கிக்கிடந்தால் வாயில்கள் திறந்துகொள்ளும். சிற்பங்களைப் பார்க்கச் செல்வதும் அவ்வாறே. ஒரே வீச்சில் ஒரேகாலகட்டம், கலைப்பாணியைச் சேர்ந்த சிற்பங்களைக் காணும்போது ஒரு சிற்பம் இன்னொரு சிற்பத்தைப் பார்ப்பதற்கான பயிற்சியை அளிக்கிறது

ஆலயத்தை பார்த்து முடிக்கையில் அந்தியாகிவிட்டது இரவு தங்குவதற்கு ஒரு விடுதி முன்பதிவு செய்திருந்தோம். பெல்காம் வரைக்கும் செல்வதற்கு மேலும் சில மணி நேரம் ஆகும். நாங்கள் பெல்காம் சென்று சேர்ந்தபோது இரவு ஒன்பதரை மணி. அறையெடுத்து மேலே சென்றோம் உணவு அருந்திவிட்டு வரும்போது மேலும் ஒன்றரை மணி நேரம் கடினமானவற்றை உண்பதற்கு முடியாமல் தாடைவலி எஞ்சியிருந்ததனால் பெரும்பாலும் சூப் மட்டுமே நான் அருந்தினேன்.

 

பதினொரு மணிக்கு படுத்து தூங்கினேனா இல்லையா என்று சந்தேகம் வந்து தன்னினைவு மீள்வதற்குள் கிருஷ்ணன் தட்டி எழுப்பிவிட்டார். மணி நாலரை .குளித்து ஐந்து மணிக்கு கிளம்பினால் தான் அடுத்த ஊர்.

 

[மேலும்]

முந்தைய கட்டுரைஎழுத்தாளன்,சாமானியன் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது