பழைய முகங்கள்
அன்புள்ள ஜெ
பழைய முகங்கள் ஒரு நல்ல கட்டுரை. ஏற்கனவே நீங்கள் எழுதிய பழைய முகம் என்னும் கதையை ஞாபகப்படுத்தியது. சினிமா ஒரு மாஸ் ஆர்ட். அது பண்பாட்டின் டிராயிங்ரூம். அங்கிருந்து சிலமனிதர்கள் அப்படியே தூக்கி கொல்லைப்பக்கத்திற்கோ பரணுக்கோ போடப்பட்டுவிடுகிறார்கள்.அவர்கள் என்ன ஆனார்கள் என்று எவரும் பார்ப்பதில்லை. அந்த வீழ்ச்சி ஒரு துயரம். சினிமாவில் ஒரு சாதாரண மனிதன் மேலே வருவதைப்போலவெ கீழே போவதும் ஒருவகையான ஃபெயரிடேல் மாதிரிதான்
நான் வழக்கமாகப் போகும் ஓட்டலுக்கு அருகே ஒரு சின்ன வீட்டில் முன்னாள் நடிகர் ஒருவர் வாழ்கிறார். தினமும் சாயங்காலம் அந்த ஓட்டலில் அவரைப் பார்ப்பேன். நல்ல போதையில் இருப்பார். எல்லாரும் அவர் குடிப்பதைக் குறைசொல்வார்கள். பிரச்சினை குடி அல்ல. அவரால் அந்த ரோலை பிளே செய்ய முடியாது என்பதுதான். மிகச்சிறந்த நடிகனால்கூட முன்னாள் நடிகனின் ரோலை பிளே செய்ய முடியாது. அவன் உண்மையாகவே பின்னால் நகர்ந்து ஸ்டேஜை விட்டு பின்னாடி சென்றுவிடவேண்டும். அது பலராலும் முடிவதில்லை. ஆகவேதான் குடிக்கிறார்கள்
ஒட்டுமொத்தமாக சினிமாவை நம் காலகட்டத்தின் எபிக் என்று சொல்லலாம். அங்கே தொடர்ச்சியாக போர் நடந்துகொண்டே இருக்கிறது
எஸ்.சந்திரமௌலி
அன்புள்ள ஜெ
பழைய முகங்கள் கட்டுரையில் வந்த பாடல் நன்றாக இருக்கிறது. எம்.பிட்ஸ்ரீனிவாசனை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி. தூய்மையான வெஸ்டெர்ன். அன்றெல்லாம் வெஸ்டர்ன் நோட்களில் உள்ள சில ஓசைகளை தவிர்த்துத்தான் போடுவார்கள். சுந்தர ராவின் என்ற எடுப்பில் அந்த வெஸ்டர்ன் ஓசை துல்லியமாக உள்ளது. இன்றைக்கு அதுபிடிக்கிறது. ரஹ்மான் எல்லாம் வந்தபின்னாடி. அன்று அது அபஸ்வரமாகவே கர்நாடக சங்கீதம் கேட்டுப்பழகிய காதுகளுக்கு தெரிந்திருக்கும். ஆனாலும் ஹிட் ஆனது ஆச்சரியம்தான். வெஸ்டர்ன் நோட் இங்கேயும் உண்டு. ஆனால் பஃபூனுக்குக் கொடுத்துவிடுவார்கள்
ஸ்ரீனிவாஸ்