அன்றைய கூண்டுகள் அன்றைய சிறுவெளிகள்.

மலையாளத்தின் முக்கியமான படங்களில் ஒன்று ‘சாலினி என்றே கூட்டுகாரி’. மலையாள ‘புதிய அலை’ இயக்குநர்கள் முறையே பரதன், ஐ.வி. சசி, மோகன். அவர்களுக்கு எழுத்தாளராக இருந்த பத்மராஜன் பின்னர் இயக்குநரானார். பெரும்பாலும் இவர்களுக்கெல்லாம் ஒரே எழுத்தாளர்களே திரும்பத் திரும்ப எழுதினார்கள். ஜான் பால் அவர்களில் முக்கியமானவர்.

இவர்கள் அதுவரைக்கும் இருந்த நாடக அம்சத்தை நீக்கி, இயல்பான யதார்த்தவாத சினிமாக்களை உருவாக்கினார்கள். அதற்குரிய புதிய நடிகர்களை கொண்டுவந்தனர். கோபி, நெடுமுடி வேணு முதலிய நடிகர்கள் அவ்வாறுதான் திரைக்கு வந்தார்கள். மோகனின் சிறந்த படங்கள் என இடவேள, விடபறயும் மும்பே, சுருதி, முகம், ஆலோலம் ஆகியவற்றைச் சொல்லலாம்

சாலினி என்ற கூட்டுகாரி மோகன் இயக்கிய முக்கியமான படம். பாடல்களுக்காக மட்டுமல்லாமல் அதன் மென்மையான, கொஞ்சம்கூட மிகையில்லாத யதார்த்தவாதச் சித்தரிப்புக்காகவும் இன்றும் பார்க்கப்படுகிறது. பின்னர் உருவான அடுத்த யதார்த்த அலைப் படங்களையும் பாதித்த படம் அது.

மோகன்

கதை என்றோ திருப்பம் என்றோ சொல்லத்தக்கதாக இப்படத்தில் ஏதுமில்லை. சீரான மெதுவான ஓட்டம் கொண்டது. அம்மு என்னும் கல்லூரி மாணவியின் நினைவுகள் வழியாக இன்னொரு கல்லூரி மாணவி காட்டப்படுகிறாள். அவள்தான் சாலினி. சாலினி தனித்தவளாகவும் உள்ளொடுங்கியவளாகவும் கனவுகள் நிறைந்தவளாகவும் வெளியதார்த்ததை எதிர்கொள்ள முடியாதவளாகவும் இருக்கிறாள்.அவளுடைய தடுமாற்றங்கள்  வழியாகவே செல்கிறது படம்.

கடுமையான தந்தைக்கும் சிற்றன்னைக்கும் அஞ்சியே வீட்டில் வளர்ந்தவர்கள் சாலினியும் அவள் அண்ணன் பிரபாவும். ஆகவே எவரையும் எதிர்கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். கல்லூரி சாலினிக்கு ஒரு விடுதலையை அளிக்கிறது. அங்கே அவள்மேல் காதல்கொள்ளும் கிறித்தவனான ராய் அவளுக்கு குறுகுறுப்பையும் உற்சாகத்தையும் அளிக்கிறான். ஆனால் எல்லைதாண்டும் துணிச்சல் அவளுக்கில்லை. ராயின் காதலை உதறுகிறாள். அவன் மனமுடைகிறான்.

கல்லூரி விடுமுறையில் வீடுதிரும்பும் சாலினிக்கு வீடு சிறையாகிறது. அவள்முன் கையாலாகதவனாக மாறும் அவள் அண்ணன் பிரபா தற்கொலைசெய்துகொள்கிறான். அவள் ஆழமான உளச்சோர்வுக்குச் செல்ல்கிறாள். அதிலிருந்து விடுபடும் நோக்குடன் மீண்டும் கல்லூரிக்கு வருகிறாள். இம்முறை எவரையேனும் காதலித்து வெளியேறிவிடவேண்டும் என்றே நினைக்கிறாள். கல்லூரி ஆசிரியரான ஜெயதேவனின் திமிரும் துணிச்சலும் அவளை கவர்கின்றன. அது காதலா இல்லை ஒன்றைப் பற்றிக்கொள்ளும் வேட்கையா என்று அவளுக்கே தெரியாது. அந்தக்காதல் அவளுக்கு உள அழுத்தத்தை அளிக்கிறது. அவள் அதை எதிர்கொள்ள துணிந்தாலும் நோயுற்று இறக்கிறாள்.

பி.பத்மராஜன்

சொல்லும்போது இலக்கில்லாத, வெறுமே துக்கத்தை திணித்துவைத்த கதை என்று தோன்றும். ஆனால் திரையில் வாழ்க்கையின் பொருளின்மையை மிகநுட்பமாக சித்தரித்த படம் இது. ஒரு கூண்டுக்குள் சிக்கிய மனிதர்கள் பதைபதைப்புடன் கூண்டின் வாசல்களையும் சுவர்களையும் முட்டிக்கொண்டே இருப்பதைக் காணும் உணர்வை அளித்தது. சினிமாவின் காட்சிநுட்பம் போன்ற அனைத்தையும் மீறி அதை நமக்கு அணுக்கமாக ஆக்குவது அதிலுள்ள இந்த நேரடியான வாழ்க்கைக்கூறுதான்

பத்மராஜன் எழுபது எண்பதுகளின் இளைஞருலகை தன் நுட்பமான கதைகளினூடாகக் காட்டியவர். அன்றைய இறுக்கமான குடும்பச்சூழல், அதற்கு மாற்றாக அமைந்த கல்லூரிச்சூழல் இரண்டையும் சித்தரிக்கிறது இந்தப்படம். எழுபது எண்பதுகளில் கல்லூரி என்பது அத்தனை இனிமையானதாகவும் கொண்டாட்டமானதாகவும் இருந்தமைக்குக் காரணம் அன்றைய குடும்பச்சூழலும் சமூகச்சூழலும் முற்றிலும் மூடிப்போயிருந்தமைதான். சொல்லப்போனால் பரோலில் வந்த கைதிகளின் கும்மாளம் அது.

தனிமனித உரிமை என்பதே அன்று எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் கண்காணிக்கப்பட்டார்கள். குடும்பத்தாலும் சமூகத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டார்கள். ‘ஊர் என்ன சொல்லும்’ என்பது அன்றிருந்த மிகப்பெரிய கவலை. கல்லூரி ஒரு செயற்கையான சுதந்திரவெளி. அங்கே கொஞ்சம் சிறகடிக்கலாம். ஆனால் உண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்கையில் வெளியே உள்ள அதே சிக்கல்கள் அங்கும் எழுகின்றன.

சுதந்திரமாகப் பறக்கநினைக்கும் சாலினியால் ஜாதி மதக் கட்டுப்பாடுகளைக் கடந்து ராயின் காதலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைவிட அவளுக்கு அக்காதலை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. இது எண்பதுகளின் மாணவிகளில் பெரும்பாலானவர்களின் சிக்கலாக இருந்தது. அவர்களை அறியாமலேயே காதலைநோக்கிச் செல்வார்கள். அது உயிரியல்பு, வாழ்க்கையின் ஒழுக்கு. ஆனால் அதை அணுகும்தோறும் அஞ்சி அறுத்துக்கொண்டு விலகிவிடுவார்கள்.ஆனால் முழுக்க அறுத்துக்கொள்ளும் அளவுக்கு கடுமையையும் அவர்களால் காட்டமுடியாது. அதில் அலைக்கழிந்து அழிந்த ஆண்கள் அன்று மிகுதி. அன்றைய படங்கள் அதை மிகையாக்கியானாலும்கூட ஓரளவு காட்டியிருக்கின்றன- சிறந்த உதாரணம் ஒருதலைராகம்.

எழுபது எண்பதுகள் கற்பனாவாதம் ஓங்கியிருந்த காலகட்டம். காதல் ஒரு கற்பனாவாதம். அரசியலில் அது இடதுசாரிக் கற்பனாவாதத்தின் யுகம். அக்கற்பனாவாதங்கள் யதார்த்தத்தை முட்டும்போது நுரைக்குமிழி போல உடைந்தன. ஆகவே அன்று இளைஞர்களின் தற்கொலை மிக மிக அதிகம். நானே இளமையில் இரண்டு நண்பர்களின் தற்கொலையைக் கண்டிருக்கிறேன். நானும் தற்கொலை விளிம்புவரைச் சென்றிருக்கிறேன். சாலினி என்றே கூட்டுகாரியில் பிரபாவின் தற்கொலை அப்படிப்பட்டது. அவன் நான்குபக்கமும் மூடப்பட்ட அன்றைய சமூகச்சூழலில் சிக்கி மூச்சுத்திணறி தப்பும் வழிகளை கனவுகண்டு அழிந்த தலைமுறையின் பிரதிநிதி.

சாலினிக்கு அது தன் இறப்பு போல. அண்ணன் அவளுக்கு அவளுடைய இன்னொரு வடிவம். அதுவும் அன்றைய ஒரு யதார்த்தம். இன்று அந்நிலை பெருமளவு மாறிவிட்டிருக்கிறது. அன்றைய தங்கைகளுக்கு அண்ணன்கள்தான் வெளியுலகம். அண்ணன்களாக அவர்கள் தங்கள் கற்பனையில் உருமாறி வெளியுலகை சென்றடைகிறார்கள். ஆகவே அண்ணனின் நீட்சியாகவே இருப்பார்கள். அண்ணனின் இறப்பிலிருந்து மீளவே முடியாமல் போன தங்கைகள் அன்று இருந்தனர். சாலினி உடைந்து இருளுக்குள் செல்கிறாள்.

உயிரின் இயல்பான விசையான வாழ்வாசையால் சாலினி மீள முயல்கிறாள். பிரபா மென்மையான கற்பனைநிறைந்த இளைஞன். அவனுக்கு முற்றிலும் மாறானவனான ஜெயதேவனை அவள் அணுகுகிறாள். அவன் ஆற்றல்மிக்கவன். உடைத்துச்செல்பவன். அவன் தன்னை விடுதலைசெய்வான் என சாலினி எதிர்பார்த்திருக்கலாம். அவள் தன்னம்பிக்கையை அடைகிறாள். ஆனால் அப்படி விடுதலையை நோக்கிச் செல்லச்செல்லத்தான் சமூகமும் குடும்பமும் ஆற்றல்மிக்க தடைகளாக ஆகின்றன. கல்லூரி என்ற சுதந்திரவெளி ஒரு மாயைதான் என தெரியவருகிறது.

சாலினிக்கு மீளும் வழி ஒன்றே. இறப்பு. ஒரு பேட்டியில் பத்மராஜன் சொன்னார். “சாலினிகளுக்கு ஒரே வெளியேறும்வழிதான். விதியை அப்படியே ஏற்றுக்கொண்டு எவனையாவது கல்யாணம் செய்துகொண்டு பிள்ளைகளைப் பெற்று வளர்த்து வயதாகி சாவது. ஏன் வயதாகவேண்டும், இளமையிலேயே சாகட்டுமே என நினைத்தேன். ஆகவே கான்ஸர். மற்றபடி அது அல்ல கதை”. சாலினி என்றால் சாந்தமானவள் என்று பொருள் [ஷாலினி அல்ல. அது ஒரு பிழையான தமிழ் உச்சரிப்பு.]

அன்றைய இளைஞர்களின் தத்தளிப்புகள் அனைத்தையும் மிகையில்லாமல் கூர்மையாகச் சொன்ன சாலினி என்றே கூட்டுகாரி ஒரு ‘கல்ட் கிளாஸிக்’ எனப்படுகிறது. பத்மராஜன் எழுதிய ’பார்வதிக்குட்டி’ என்ற சிறுகதையின் திரைவடிவம் 1980ல் வெளிவந்த இந்தப்படம். ஜி.தேவராஜன் இசையமைத்திருந்தார். பெரும்பாலும் அக்காலகட்டத்திற்குரிய கவிதைகளை எழுதிவாங்கி அதன்பின் இசையமைத்திருந்தார். ஆகவே இசை அப்படத்தின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாக அமைந்தது.

இருபாடல்கள் மிகப்புகழபெற்றவை. ‘ சுந்தரி நின் தும்பு கெட்டியிட்ட சுருள்முடியில்…’ அன்றைய கல்லூரிச்சூழலில் எழுதப்படும் கவிதைகளின் பாணியில் அமைந்தது. ‘ஹிமசைல சைகத’ என்னும் பாடல் அன்றைய சம்ஸ்கிருதக் கலவை மிகுந்த கவிதைகளின் பாணியில் அமைந்தது.

பின்னர் இப்படம் தமிழில் சுஜாதா என்றபேரில் வெளிவந்தது. மூலத்தில் இருந்தது தமிழ்ச்சூழலின் யதார்த்தம் அல்ல என்பதே சுஜாதாவின் பெரிய குறைபாடு. அதோடு மாணவியாக சரிதா சற்றும் பொருத்தமில்லாத தெரிவு. மூலத்தில் சோபாவின் மெலிந்த தோற்றமும், விழிகளில் இருந்த ஏக்கமும் துடிப்பும் சாலினியைக் கண்களுக்கு முன் காட்டின. தொடக்கம் முதலே ஒரு நோயுற்ற தோற்றம் சாலினிக்கு இருந்தது. உள அழுத்தம் என்னும் நோய் என தோன்றும். இறப்பு எனும் நோய் என அது மாறியது. சரிதா கொழுகொழுவென இருக்கிறார். கொஞ்சம் மிகையாகவும் நடிக்கிறார்

சுஜாதாவின் நடிப்பும் காமிராக்கோணங்களுமெல்லாம் அன்றைய வழக்கமான தமிழ் ‘குடும்பப்படங்களின்’ சாயலில் இருந்தன. எம்.எஸ்.விஸ்வநாதனின் அழகிய பாடல்கள் இருந்தாலும் அவை மலையாளப்படம் போல அக்கல்லூரிச்சூழலுக்கு அசலானதாக பொருந்தவில்லை. தமிழிலும் மோகனே இயக்கியிருந்தார். ஆனால் அவர் தமிழுக்காக இயக்கியதுபோலிருந்தது.

சிலசமயங்களில் சினிமா ஒரு காலகட்டத்தின் நேர்பதிவுபோலவே ஆகிவிட்டிருக்கிறது. குருதியை ஒற்றி எடுத்த கைக்குட்டைபோலிருக்கிறது சாலினி என்றே கூட்டுகாரி. ஆனால் அன்றைய வண்ணப்படங்கள் பெரும்பாலும் பேணுவதிலுள்ள சிக்கலால் மங்கலாக மாறிவிட்டன. அதோடு அன்றைய காட்சிப்படுத்தல் முறைமையும் அதன் தொழில்நுட்பங்களும் காலாவதியாகிவிட்டிருக்கின்றன. ஆகவே ஒரு ‘பழைய’ படமாகவே இன்று தோன்றுகிறது. இதுவே ஒரு நாவலாக இருந்திருந்தால் அதற்கு புறவயமான தொழில்நுட்பம் ஒரு பொருட்டே அல்ல. வாசகனின் கற்பனையில் நிகழ்ந்திருக்கும். பத்மராஜனின் கதைகள் இன்று எழுதியவை போல உள்ளன.

படம் சுஜாதா

பாடல் நீ வருவாய் என..

இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல் கண்ணதாசன்

மூலம் சாலினி என்றே கூட்டுகாரி

பாடல் ஹிமசைல சைகத பூமியில்..

இசை ஜி தேவராஜன்

பாடல் எம்.டி.ராஜேந்திரன்

ஹிமைசைல சைகத பூமியில் நிந்நு நீ

பிரணய பிரவாகமாய் வந்ந்து

அதிகூட சுஸ்மிதம் உள்ளிலொதுக்குந்ந

பிரதமோத பிந்துவாய் தீர்ந்து

நிமிஷங்கள் தன் கைக்குடந்நயில்

நீ ஒரு நீலாஞ்சன தீர்த்தமாயி

புருஷாந்தரங்ஙளே கோள்மயிர்கொள்ளிக்கும்

பீயூஷ வாஹினியாயி

என்னெ எனிக்கு திரிச்சு கிட்டாதே

ஞான் ஏதோ திவாஸ்வப்னமாயி

போதம் அபோதமாய் மாறும் லஹரியில்

ஸ்வேத பராகமாய் மாறி

காலம் கனீஃபூதமாயி நில்க்கும்

அக்கரகாணா கயங்ஙளிலூடே

எங்ஙோட்டு போயி ஞான்?

என்றே ஸ்மிருதிகளே

நிங்ஙள் திரிச்சு வரில்லயோ கூடே?

[தமிழில்]

இமையமலையின் குளிர்மணல் பூமியிலிருந்து நீ

காதல்பெருக்கென வந்தாய்

மிக ரகசியமான புன்னகையை உள்ளே மறைத்துக்கொண்ட

முதல் மழைத்துளியாய் மாறினாய்

நிமிடங்களின் கைப்பள்ளத்தில்

நீ ஒரு நீலப்பளிங்கு நீரென்றானாய்

மானுடத்திரளை மெய்சிலிர்க்கச்செய்யும்

தேன் பெருக்காக மாறினாய்

என்னை எனக்கு திரும்பக் கிடைக்காமல்

நான் ஏதோ பகற்கனவாக ஆனேன்

நனவு கனவென்று ஆகும் மயக்கத்தில்

வெண்ணிற பட்டாம்பூச்சியாக மாறினேன்

காலம் உறைந்து பருவடிவமாக  நிற்கும் அந்த

கரைகாண முடியாத ஆழங்களின் வழியாக

எங்கே சென்றுவிட்டேன் நான்? என் நினைவுகளே

நீங்கள் திரும்பி வரப்போவதில்லையா?

*

மூலத்தில் ராய் பாடும் பாடல் தமிழில் கதைநாயகியே பாடுவதாக அமைந்திருக்கிறது..

படம் சுஜாதா

எங்கிருந்தோ வந்த பறவைகளே

இசை எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடல் கண்ணதாசன்

மூலம் சாலினி என்றே கூட்டுகாரி

பாடல் சுந்தரீ நின் தும்பு கெட்டியிட்ட

இசை ஜி தேவராஜன்

பாடல் எம்.டி.ராஜேந்திரன்.

சுந்தரி நின் தும்பு கெட்டியிட்ட சுருள்முடியில்

துளசிக் கதிரில சூடி

தூஷார ஹாரம் மாறில் சார்த்தி

தாருண்யமே நீ வந்நூ

சுதார்ய சுந்தர மேகங்ஙள் அலியும்

நிதாந்த நீலிமையில்

ஒரு சுக சீதள சாலீனதயில்

ஒழுகீ ஞானறியாதே

மிருகாங்க தரளித மிருண்மய கிரணம்

மழயாய் தழுகும்போள்

ஒரு சரசீருக சௌபர்ணிகையில்

ஒழுகீ ஞானறியாதே

சுந்தரி சுந்தரி…

[தமிழில்]

அழகி, அழகி

உன் நுனி முடிச்சிட்ட சுருள்முடியில்

துளசிக்கொத்து சூடி

பனிமணிமாலையை மார்பில் அணிந்து

இளமையே நீ வந்தாய்

ஒளி ஊடுருவும் அழகிய முகில்கள் கரையும்

விரிந்த நீலத்தில்

ஒர் இனிய குளிர் மென்மையில்

’நான் அறியாமல்  ஒழுகிச் சென்றேன்

முகில்கள் துளித்து மணிகளென இறங்கிய கதிர்கள்

மழையென தழுவுகையில்

ஒரு நிறைந்த தாமரைச் சுனையில்

நான் அறியாமல்  ஒழுகிச்சென்றேன்

சாலினி என்றே கூட்டுகாரி -படம்

முந்தைய கட்டுரைஈரோடு புத்தகக் கண்காட்சியில் ‘தன்னறம்’
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36