யானைடாக்டர் [சிறுகதை] – 1

காலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும். ஏப்ரல், மே தவிர மற்ற மாதமெல்லாம் மழையும் சாரலும் குளிருமாக இருக்கும் இந்தக்காட்டில் பெரும்பாலானவர்கள் எட்டுமணிக்கே தூங்கிவிடுகிறார்கள். ஏழரை மணிக்கெல்லாம் நள்ளிரவுக்கான அமைதி குடியிருப்புகள் மீதும் கிராமங்கள் மீதும் பரவிமூடிவிட்டிருக்கும்

என்ன சிக்கல் என்றால் ஏழரைக்கே தூங்குவது வனக்காவலர்களும்தான் . ஆகவே நான் ஒன்பதுமணிக்கு மேல் நினைத்த நேரத்தில் என் ஜீப்பை எடுத்துக்கொண்டு ஏதாவது ஒரு வனக்காவலர்முகாமுக்குச் சென்று நாலைந்து காவலர்களை ஏற்றிக்கொண்டு காட்டுக்குள் ஒரு சுற்று சுற்றிவருவேன். என் பணிகளில் நான் முக்கியமானதாக நினைப்பதும் இதுதான். பகல் முழுக்கச் செய்யும் அர்த்தமற்ற தாள்வேலைகள் அளிக்கும் சலிப்பில் இருந்து விடுபட்டு என்னை ஒரு வனத்துறை அதிகாரியாக உணர்வதும் அப்போதுமட்டுமே

தொலைபேசி ஓய்ந்தது. நான் திரும்பிப்படுத்தேன். காலையில் காட்டுக்கு யாரும் கூப்பிடுவதில்லை, மிக அவசியமிருந்தாலொழிய. வனத்துறையில் அனைவருக்கும் காடுகளின் சூழல் தெரியும். யாராக இருக்கலாம், ஏதாவது பிரச்சினையாக இருக்குமோ? சரிதான் தூங்கு என்று சொன்னது மூளை. எண்ணங்கள்மேல் மணல்சரிந்து மூட ஆரம்பிக்க நான் என்னை இழப்பதன் கடைசி புல்நுனியில் நின்று மேலே தாவ உடலால் வெட்டவெளியை துழாவிக்கொண்டிருந்தபோது மீண்டும் அழைப்பு.

இம்முறை அது யார், எதற்காக என்றெல்லாம் தெரிந்து விட்டது. என் உடல் பரபரப்படைந்தது. எப்படி அதை மறந்தேன்? அரைத்தூக்கத்தில் அன்றாட வேலைகளை மட்டுமே மனம் நினைக்கிறதென்றால் அதுமட்டும்தான் நானா? ஒலிவாங்கியை எடுத்து ‘ஹலோ’ என்றேன். மறுமுனையில் ஆனந்த். ‘என்னடா, முழிச்சுக்கலையா?’ என்றான். ‘இல்ல, நேத்து படுக்க லேட்டாச்சு’ என்றேன். குளிரடித்தது. கைநீட்டி கம்பிளிப்போர்வையை எடுத்து போர்த்திக்கொண்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து ‘சொல்டா’ என்றேன்.

‘நேத்து கல்ச்சுரல் மினிஸ்டர் அவரே ஃபோன்பண்ணி பாக்கமுடியுமான்னு கூப்பிட்டிருந்தார். எனக்கு அப்பவே க்ளூ கெடைச்சிட்டுது. உடனே கெளம்பி போய்ட்டேண்டா. அவரோட ஹோம் கார்டன்ல உக்காந்து ஸ்காட்ச் சாப்பிட்டோம். அவரு ரொம்ப ரொம்ப இம்ப்ரெஸ் ஆயிட்டாரு. கமிட்டியிலே அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டு பரவசமா பேசினாங்களாம். ஒருமுறை பெரியவரை நேரிலே சந்திக்க முடியுமான்னு கேட்டார். என்ன சார் சொல்றீங்க, இங்கதானே அவார்ட் வாங்க வரப்போறார்னேன். அது இல்லை, அவரோட சூழலிலே அவர் வேலைபாக்கிற எடத்திலே அவரை நான் சந்திக்கணும்னார். எப்ப டைம் இருக்கோ ஒரு வார்த்தை சொல்லுங்க, ஏற்பாடு பண்ணிடறேன்னேன்’

‘ஸோ அப்ப?’ ‘அப்ப என்ன அப்ப? டேய் எல்லாம் கன்ஃபர்ம் ஆயிட்டுது. லிஸ்ட் நேத்து மினிஸ்டர் ஆபீஸிலே ஓக்கே பண்ணி பிரசிடெண்ட் கையெழுத்துக்கு போயாச்சு. அனேகமா இன்னிக்கு காலையிலே பிரசிடெண்ட் டேபிளிலே வச்சிடுவாங்க. மத்தியான்னம் ஒருமணி ரெண்டுமணிக்கெல்லாம் கையெழுத்து ஆயிடும். பிரசிடெண்ட் இப்பல்லாம் மதியச்சாப்பாட்டுக்குப் பிறகு ஆபீஸுக்கு வர்ரதில்லை. சாயங்காலம் நாலுமணிக்குள்ள பிரஸ் ரிலீஸ் குடுத்திருவாங்க. சாயங்காலம் அஞ்சரை மணி நியூசிலே சொல்வான்’

என் உடலின் எல்லா செல்களும் நுரையின் குமிழிகள் போல உடைந்து நான் சுருங்கிச் சுருங்கி இல்லாமலாவது போல உணர்ந்தேன். ‘என்னடா?’ என்றான் ஆனந்த். என் குரல் தொண்டைக்குள் நுரைக்குமிழி ஒன்று இருப்பது போல் இருந்தது. நான் அதை என் நுரையீரலால் முட்டினேன். அது மெல்ல வெடிப்பதுபோல ஒரு சத்தம் வந்தது ‘ஹலோ’ . ‘டேய் என்னடா?’ என்றான் ஆன்ந்த நான் மெல்லிய குரலில் ‘தாங்ஸ்டா’ என்றேன். அதற்குள் என் கட்டுப்பாடு தளர்ந்து நான் மெல்ல விம்மிவிட்டேன் ‘தாங்ஸ்டா…ரியலி’

‘டேய் என்னடா இது..?’நான் என்னை எல்லாச் சிந்தனைகளையும் கொண்டு இறுக்கிக்கொண்டேன். மேலும் சில விம்மல்களுக்குப் பின்னர் ‘தாங்ஸ்டா…நான் என்னிக்குமே மறக்க மாட்டேன்…இதுக்காக எவ்ளவோ…சரி விடு. நான் என்ன பண்ணினா இப்ப என்ன? ஒரு பெரிய விஷயம் நடந்திருக்கு. ரியலி…எப்டி சொல்றதுன்னே தெரியலைடா’ சட்டென்று என் மீது மொத்த தண்ணீர் தொட்டியே வெடித்து குளிர்ந்த நீர் கணநேர அருவிபோல கொட்டியதுபோல ஓர் உணர்வு. எழுந்து கைநீட்டி கத்தவேண்டும் போல எதையாவது ஓங்கி அடிக்கவேண்டும்போல அறைமுழுக்க வெறித்தனமாக நடனமிடவேண்டும்போல இருந்தது.

‘என்னடா…?’ என்றான் ஆனந்த். ‘ஒண்ணுமில்ல’ என்றபோது நான் சிரித்துக்கொண்டிருந்தேன். ‘எந்திரிச்சு நின்னு பயங்கரமா டான்ஸ் ஆடணும்போல இருக்குடா…’ ‘ஆடேன்’ என்று அவனும் சிரித்தான். ‘சரிதான்’ என்றேன். ‘டேய் ஆக்சுவலா நானும் துள்ளிக்கிட்டுதான் இருக்கேன். நேத்து நான் வர்ரதுக்கு பதினொரு மணி. வந்ததுமே உன்னை நாலு வாட்டி கூப்பிட்டேன். நீ போனை எடுக்கலை’ ‘காட்டுக்குள்ள இருந்தேண்டா’ ‘சரிதான். அதான் காலையிலேயே கூப்பிட்டேன். டூ எர்லின்னு தெரியும். இருந்தாலும் கூப்பிடாம இருக்க முடியலை. ஆக்சுவலா நான் நேத்து முழுக்க சரியா தூங்கலை…ஃபைனலைஸ் ஆகாம மத்தவங்ககிட்ட பேசவும் முடியாது’

‘யூ டிட் எ கிரேட் ஜாப்’ என்றேன். ‘சரிதாண்டா…இதுதான் நம்ம கடமை. இதுக்குத்தான் சம்பளமே குடுக்கறான். ஆனா செய்றதெல்லாம் சம்பந்தமே இல்லாத எடுபிடிவேலைங்க. எப்பவாவதுதான் படிச்சதுக்கு பொருத்தமா எதையோ செய்றோம்னு தோணுது. அதுக்கு சான்ஸ் குடுத்ததுக்கு நாந்தான் உனக்கு நன்றி சொல்லணும். ரொம்ப நிறைவா இருக்குடா’ அவன் குரல் தழுதழுத்தபோது எனக்கு சிரிப்பாக இருந்தது ‘டேய் பாத்துடா அழுதிரப்போறே’ ‘வைடா நாயே’ என்று அவன் துண்டித்துவிட்டான்.

கொஞ்சநேரம் என்ன செய்வதென்று தெரியாமல் மடியில் கையைவைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். நிறைந்த மனதின் எடையை உடலில் உணர்வது அப்போதுதான் முதல் முறை. எழுந்து நிற்கவே முடியாதென்று தோன்றியது. சில பெருமூச்சுகள் விட்டபோது மனம் இலகுவானது. எழுந்து சென்று அடுப்பை பற்றவைத்து கறுப்பு டீ போட்டேன். சூடாக அதைக் கோப்பையில் எடுத்துக்கொண்டு கதவைத்திறந்து வெளியே வந்தேன். இருட்டுக்குள் உள்ளங்கையைப் பார்த்தது போல முற்றம் மட்டும் கொஞ்சம் வெளுத்திருந்தது. அப்பால் மரங்கள் செறிந்த காட்டுக்குள் இரவுதான் நீடித்தது. காட்டின் ரீங்காரம் மட்டும் என்னைச்சூழ்ந்திருந்தது.

சீக்கிரமே டீ ஆறிவிட்டது. கோப்பையின் சூடை கையில் வைத்து உருட்டிக்கொண்டு காலை விடிந்து சொட்டிக்கொண்டிருந்த முற்றத்தில் கூழாங்கற்கள் மெல்ல துலங்கி எழுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். வீட்டின் ஓட்டுக்கூரை வழியாக ஒரு மெல்லிய மொறுமொறு ஒலி கேட்டது. ஒரு மரநாய் விளிம்பில் எட்டிப்பார்த்தது. சில கணங்கள் என்னைப் பார்த்துவிட்டு கூரையை மடிந்து இறங்கி கீழே வந்து துணிகாயப்போடும் கொடிக்கு வந்து கொடி வழியாக மறுபக்கம் நின்ற தேக்கு மரத்துக்குச் சென்று மேலேறி மறுபக்கம் மறைந்தது.

நான் எழுந்து உள்ளே சென்று பல்தேய்த்தேன். என்ன செய்யலாம்? சாயங்காலம் வரை பொறுத்திருப்பதே முறையானது. ஆனால் அப்போது அவர்கூட இருப்பது மட்டுமே என் மனதுக்கு பிரியமானதாக இருந்தது. இங்கே பகல்முழுக்க அமர்ந்து அபத்தமான கடிதங்களுக்கு வழக்கமான அபத்த கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கவேண்டிய நாள் அல்ல இது என்று தோன்றியது. ஆம், இன்று பகல்முழுக்க அவருடன் இருப்போம். எதற்கும் கையில் டிரான்ஸ்டிஸ்டரைக் கொண்டு செல்லலாம். செய்தி வந்ததும் அவரிடம் அதை நான்தான் தெரிவிக்க வேண்டும். சட்டென்று அவரே எதிர்பாராத கணத்தில் அவர் காலைத்தொட்டு கண்ணில் வைக்கவேண்டும். அப்போது என் மனம் பொங்கி ஒருதுளி கண்ணீர் சொட்டாமல் போகாது.

ஒருபோதும் இதற்கு பின்னால் நான் இருந்திருக்கிறேன் என்று அவருக்கு தெரியக்கூடாது. எப்போதாவது அவருக்கு இயல்பாக அது தெரியவேண்டும். தெரிந்தால் என்ன செய்வார்? ஒன்றும் சொல்லமாட்டார். அல்லது அவரது வழக்கப்படி எதையேனும் செய்துகொண்டு என் முகத்தை பார்க்காமல் ‘ரொம்ப நன்றி’ என்று சொல்லி சில கணங்களுக்குப் பின் திரும்பி மெல்ல புன்னகைத்து மீண்டும் திரும்பிக்கொள்ளலாம். சம்பந்தமே இல்லாமல் பைரனைப்பற்றி அல்லது கபிலனைப்பற்றி ஏதாவது பேச ஆரம்பிக்கலாம். அந்த புன்னகை போதும். அது நானும் மனிதன்தான் என்பதற்கான அடையாளம். பிச்சைக்காரனின் தட்டில் விழுந்த தங்கநாணயம் போல.

ஸ்வெட்டரைப்போட்டுக்கொண்டு அதன் மேல் விண்ட்சீட்டரை அணிந்து கையுறைகளை இழுத்து விட்டபடி பைக்கை எடுத்து கிளம்பினேன். குடில்களுக்கு முன்னால் சுற்றுலா வந்த பத்திருபது இளைஞர்கள் ஸ்வெட்டரும் மங்கிகேப்பும் அணிந்து உடலைக்குறுக்கியபடி நின்றிருந்தார்கள். அவர்களுக்கான ஜீப் வரவில்லை போல. அந்த இடத்திற்கு தேவையான அமைதியை கடைப்பிடிக்க பயணிகள் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. கிளர்ச்சியடைந்த குரங்குகள் போல அங்குமிங்கும் தாவி மாறி மாறிக் கத்திக்கொண்டிருந்தார்கள்.

காட்டுப்பாதைக்குள் நுழைந்தேன். தலைக்கு மேலே அடர்ந்திருந்த இலைப்பரப்புகளில் இருந்து நீர் சொட்டிக்கொண்டிருந்தது. சருகுகள் பரவிய சாலைமேல் சரசரவென சக்கரம் ஏறிச்சென்ற ஒலியில் இருபக்கமும் இலைப்புதர்களுக்குள் சிறிய பிராணிகள் சலனமடைந்து சலசலத்து ஓடின. தூரத்தில் ஒரு கருங்குரங்கு உப்புபுப் என்று முரசொலிப்பதுபோல குரல் கொடுக்க ஆரம்பித்தது. அது கண்காணிப்பு வீரன். இருப்பதிலேயே உச்சிமரத்தின் இருப்பதிலேயே உச்சிக்கிளையில் அமர்ந்து நாலாபக்கமும் பார்த்துக்கொண்டிருக்கும்.

அந்த மரத்தை நெருங்கியபோது உப்உப் ஒலி இன்னும் வேகமாகவும் உரக்கவும் ஒலித்தது. தாழ்வானகிளைகளில் இருந்த கருங்குரங்குகள் எல்லாம் சரசரவென உச்சிக்கிளைகளுக்கு ஏறுவதைக் கண்டேன். இரு மரங்களில் இருந்து குரங்கின் கரியவால் தொங்குவதைக் காணமுடிந்தது. பத்திருபது குரங்குகள் இருக்கலாம். எல்லாமே என்னைத்தான் கவனிக்கின்றன என்ற உணர்வை அடைய முடிந்தது. தாண்டிச்சென்றபோது மெல்ல சீரான இடைவெளிகளுடன் காவல்குரங்கு ஒலி எழுப்பியது. அந்த குரலைக்கேட்டு பதுங்கிக்கொண்ட கேழைமான்கள் புதர்விட்டு வெளியே வந்து இலைகளை கடிக்க ஆர
ம்பித்திருக்கும்.

தடுப்பணையைத் தாண்டிச் சென்றேன். நீர்ப்பரப்பில் ஆவி தயங்கிக்கொண்டிருந்தது. பக்கவாட்டில் இறங்கிய கருங்கல்பாவப்பட்ட சாலை கிட்டத்தட்ட நூறுவருடம் முன்பு வெள்ளைக்காரர்கள் குதிரையில் செல்வதற்காக போட்டது. ஜீப் கஷ்டப்பட்டு போகும், பைக்கைக் கொண்டுசெல்ல முடியாது. நான்கு வருடங்களுக்கு முன்பு அந்தச்சாலை சென்று சேரும் ஒரு மலைச்சரிவில்தான் நான் முதன்முறையாக யானை டாக்டர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தேன். நான் வனத்துறை பணிக்கு சேர்ந்து இரண்டு வருடங்கள்தான் ஆகியிருந்தன. ஒருவருடம் குன்னூர், எட்டு மாதம் களக்காடு இரண்டரை மாதம் கோவை என வேலைசெய்துவிட்டு டாப்ஸ்லிப்புக்கு வந்தேன்.

முதல் நான்குநாட்கள் அலுவலகத்தை புரிந்துகொள்வதிலேயே சென்றது. முதல் பெரிய வேலை ஒருநாள் காலையில் நான் அலுவலகம் செல்வதற்குள் மாரிமுத்து வந்து கதவைத்தட்டிச் சொன்ன சேதியில் இருந்து ஆரம்பித்தது. மலைச்சரிவில் ஒரு யானையின் சடலம் கிடப்பதை காட்டுக்குள் சென்ற வனஊழியர்கள் கண்டு சொல்லியிருந்தார்கள். என் மேலதிகாரியும் உதவியாளர்களும் அதிகாலையிலேயே சென்றுவிட்டிருந்தார்கள்.

நான் குளித்துமுடித்து உடையணிந்து ஜீப்பில் அந்த இடத்துக்குச் சென்று சேர கொஞ்சம் தாமதமாகிவிட்டது. எனக்கு அச்செய்தியின் முக்கியத்துவமும் உறைக்கவில்லை, ஆகவே வழியில் நான்கு காட்டுஎருதுகள் கொண்ட கூட்டத்தை பக்கவாட்டு சரிவில் புல்வெளியில் பார்த்தபோது வண்டியை நிறுத்தி கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தேன். கற்கள் இளகிக்கிடந்த குதிரைப்பாதை வழியாக எம்பி அதிர்ந்து குதித்து அங்கே சென்று சேர்ந்தபோது ஏற்கனவே எல்லாருமே அங்கே இருந்தார்கள். நான் மாரிமுத்துவிடம் ‘யாருய்யா வந்திருக்கறது?’ என்றேன். ‘அய்யா டியெப்போ இருக்காருங்க. இங்கிட்டு கெஸ் அவுஸிலேதானுங்க இருந்தாரு. அப்றம் ஆனைடாக்டரு வந்திருப்பாருங்க. அவரு மேல ஆனைக்காம்புலதானுங்களே இருக்காரு. அவருதானுங்க மொதல்ல வந்திருவாரு…ஆமா சார்’

’யானைடாக்டர்’ என்ற பேரை நான் அப்போதுதான் கேள்விப்பட்டேன். நான் நினைத்தது டாப்ஸ்லிப்பின் யானைமுகாமுக்கு அரசால் நியமிக்கப்பட்ட வழக்கமான ஒரு மிருகடாக்டர் என்றுதான் அதற்குப் பொருள் என்று. என் வண்டி நெருங்கும்போதே நான் குடலை அதிரச்செய்யும் கடும் துர்நாற்றத்தை உணர்ந்தேன். ஒரு பருப்பொருள் போல, உடலால் கிழிக்க வேண்டிய ஒரு கனத்த படலம் போல துர்நாற்றம் உருமாறுவதை அன்றுதான் உணர்ந்தேன். உண்மையிலேயே அது என்னை ஒரு அழுத்தித் தடுத்தது. மேலும் செல்லச்செல்ல என் மூக்கு மட்டுமல்ல உடலுறுப்புகள் முழுக்க அந்த நாற்றத்தை உணர்ந்தன. குமட்டிக்குமட்டி உடல் அதிர்ந்தது. கைக்குட்டையால் மூக்கையும் வாயையும் சேர்த்து அழுத்திக்கொண்டேன்

வண்டியை விட்டு இறங்கியதுமே ஓடிச்சென்று ஓரமாக அமர்ந்து வாந்தி எடுத்தேன். கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். பின்பு எழுந்து நின்றபோது தலைசுற்றுவது போலிருந்தது. ஆனால் பலவீனத்தைக் காட்டிக்கொள்ளக் கூடாது என்று சட்டையை இழுத்துவிட்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நடந்தேன். பொதுச்சேவைத்தேர்வு எழுதி வரக்கூடியவர்கள் மீது எல்லா கீழ் மட்ட ஊழியர்களுக்கும் ஒரு கசப்பும் ஏளனமும் எப்போதும் இருக்கும். அவர்கள் மூச்சுத்திணற எடைசுமந்து ஒருவரோடொருவர் முட்டிமோதி படிப்படியாக ஏறிவரும் ஏணியின் உச்சிப்படியில் பறந்தே வந்து அமர்ந்தவன் என்று.

அது உண்மையும்கூட. அவர்களை கைகால்களாகக் கொண்டுதான் நாங்கள் செயல்பட முடியும். அவர்களை எங்கள் மூளை இயக்கவேண்டும். நாங்கள் அவர்களைச் சார்ந்திருக்கும்போதும் அவர்கள் எங்களைச் சார்ந்திருப்பதான பிரமையை உருவாக்க வேண்டும். அதற்குத்தான் எங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலிருந்து கீழே வந்து இவர்களை தொடும் அரசதிகாரத்தின் விரல்நுனிமட்டும்தான் நாங்கள். ஒருவகையில் அவர்களை வேவுபார்ப்பவர்கள், அவர்களுக்கு ஆணையிடும் அரசாங்கத்தின் நாக்குநுனி, அல்லது சவுக்குநுனி.

அந்தச் சிறுகூட்டத்தில் அத்தனைபேரும் யூடிகொலோன் நனைத்த கைக்குட்டையை மூக்கில் கட்டிக்கொண்டு ஒரு மேட்டில் நின்றிருந்தார்கள். ஒரு ஊழியர் ஓடிவந்து . எனக்கும் கைக்குட்டை கொடுத்தார். அதை மூக்கில் கட்டிக்கொண்ட சில கணங்களுக்கு மூக்க்குச்சவ்வு எரியும் நெடியுடன் யூடிகொலோன் இருந்தது, மீண்டும் அந்த உக்கிர வாடை. கூட்டம் விலக நான் அந்தப்பக்கம் பார்த்தேன். சிலகணங்களுக்கு எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு இருபதடி நீள பத்தடி அகல சேற்றுப்பரப்புக்குள் கம்பூட்டு அணிந்து தொப்பி வைத்துக்கொண்டு ஒரு வயதான மனிதர் பெரிய கத்தி ஒன்றுடன் நின்றுகொண்டிருந்தார். அவர் உடைகளும் கைகளும் முகமும் எல்லாம் கரிய சேறு தெறித்து வழிந்துகொண்டிருந்தது. சாணிக்குழி என்று தோன்றியது.

சில கணங்களில் அது என்ன என்று எனக்குப் புரிந்தது, அது ஒரு யானையின் பலநாள் அழுகிய சடலம். அதை வெட்டித்திறந்து விரித்து அவிழ்க்கப்பட்ட கூடாரம் போல நான்குபக்கமும் பரப்பியிருந்தார்கள். அதன் கால்கள் நான்கு நீட்டி விரிந்திருந்தன. துதிக்கையும் தலையும் விரிக்கப்பட்ட தோலுக்கு அடியில் இருந்து நீட்டி தெரிந்தன. யானையின் உடலுக்குள் அதன் அழுகிய சதை எருக்குழி போல சேற்றுச்சகதியாக கொப்பளித்துக்கொண்டிருந்தது. மேலும் சிலகணங்களில் அதில் அசைவுகளைக் கண்டேன். சேறு நுரைக்குமிழிகளுடன் கொதித்துக்கொண்டிருப்பதுபோல தோன்றியது. அது முழுக்க புழுக்கள். புழுக்கள் அவரது கால்களில் முழங்கால்வரை மொய்த்து ஏறி உதிர்ந்துகொண்டிருந்தன. அவ்வப்போது முழங்கைகளிலும் கழுத்திலும் இருந்து புழுக்களை தட்டி உதிர்த்தபடி வேலைபார்த்துக்கொண்டிருந்தார்

அதன்பின் என்னால் அங்கே நிற்க முடியவில்லை. பார்வையை விலக்கிக்கொண்டு கொஞ்சம் பின்னால் நகர்ந்தேன். என்ன நடந்ததென தெரியவில்லை. சட்டென்று என் காலடி நிலத்தை யாரோ முன்னால் இழுத்தது போல நான் மல்லாந்து விழுந்துவிட்டேன். கலவரக் குரல்களுடன் என்னை இருவர் தூக்கி ஜீப்புக்கு கொண்டுவந்து படுக்கச்செய்வதை உணந்தேன்.. நான் தலைதூக்க முயன்றதும் குமட்டிக்கொண்டுவந்தது. என்னை பிடித்திருந்தவன் மேலேயே வாந்தி எடுத்தேன். அவன் சட்டையை பிடித்திருந்த என் கைகள் நடுநடுங்கின. மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன் . விழுந்துகொண்டே இருப்பது போல் இருந்தது.

‘ அவரை ரூமுக்குக் கொண்டுபோய் படுக்க வைடா’ என்றார் மாவட்ட அதிகாரி. என்னை பின்னிருக்கையில் படுக்கச்செய்து கொண்டு சென்றார்கள். அவ்வப்போது கண்திறந்தபோது மேலே இலைபரவல் பாசிபடிந்த நீர்ப்பரப்பு போல பின்னால் சென்றது. இலைகளை மீறி வந்த ஒளி கண்மீது மின்னி மின்னி அதிரச் செய்தது. சட்டென்று எழுந்து அமர்ந்தேன். காலைத்தூக்கி இருக்கையில் வைத்துக்கொண்டு ஜீப்பின் தரையை பார்த்தேன். ஒரு சிகரெட் குச்சியை புழு என நினைத்து அதிர்ந்து உடல்நடுங்கினேன். இருக்கைகள் என் சட்டை எல்லாவற்றையும் தட்டினேன். மீண்டும் சந்தேகம் வந்து என் விண்ட்சீட்டரை கழற்றி உதறினேன். ஆனாலும் அதை திரும்பப் போட்டுக்கொள்ள மனம் வரவில்லை.

என் அறைக்கு வந்து படுக்கையில் படுத்துக்கொண்டேன். ‘டீ எதுனா போடவா சார்?’ என்றான் மாரிமுத்து ‘வேணாம்’ என்றேன். குமட்டிக்கொண்டே தான் இருந்தது. கண்களை மூடிக்கொண்டேன். நினைவுகளை எங்கெங்கோ வலுக்கட்டாயமாக திருப்பினேன். ஆனால் பிளக்கப்பட்டு விரிக்கப்பட்ட கரியபெரும் சடலம் தான் என் கண்ணுக்குள் விரிந்தது கரிய சதைச்சேற்றுக்குள் மட்காத மரத்தடிகள் போல எலும்புகள். வளைந்த விலா எலும்புகள். திரும்பிப்படுத்தேன். இல்லை வேறு எதையாவது நினை. வேறு…ஆனால் மீண்டும்.

மெல்ல தூங்கியிருப்பேன். புழுக்களால் மட்டுமே நிறைந்த ஒரு குளத்தில் நான் விழுந்து மூழ்குவது போலத்தோன்றி திடுக்கிட்டு அலறி எழுந்து படுக்கையில் அமர்ந்தேன். உடம்பு வியர்வையில் குளிர்ந்து நடுங்கிக்கொண்டிருந்தது. எழுந்துசென்று என் பெட்டியை திறந்து உள்ளே வைத்திருந்த டீச்சர்ஸ் விஸ்கி புட்டியை எடுத்து உடைத்து டம்ளரை தேடினேன். அங்கே இருந்த டீக்கோப்பையிலேயே விட்டு கூஜாவின் நீரைக் கலந்து மடக் மடக் என்று குடித்தேன். உடல் குலுங்க தலைகுனிந்து அமர்ந்திருந்தேன். மீண்டும் விட்டு குடித்தேன். வழக்கமாக நான் குடிப்பதன் நான்கு மடங்கு அது. என் வயிறு அமிலப்பை போல கொந்தளித்தது. விக்கியபோதெல்லாம் வாயில் அமிலம் எரிந்து கசந்தது.

கொஞ்சநேரத்தில் என் தலையை தாங்கமுடியாமல் கழுத்து தள்ளாடியது அப்படியே மல்லாந்து படுத்துக்கொண்டேன். உத்தரங்களும் ஓடுமாக கூரை கீழே இறங்கி வந்து கைநீட்டினால் தொடுமளவுக்கு பக்கத்தில் நின்றது. என் கைகால்கள் உடலில் இருந்து கழன்று தனித்தனியாக செயலற்றுக் கிடந்தன. இமைகள் மேல் அரக்கு போல தூக்கம் விழுந்து மூடியது. வாய் கசந்து கொண்டே இருந்தது. எழுந்து கொஞ்சம் நீர் குடிக்கவேண்டுமென எண்ணினேன். அந்த நினைப்புக்கும் உடலுக்கும் சம்பந்தமே இல்லாமலிருந்தது.

புழு ஒன்று என் மேல் ஏறி ஏறி வந்து என் முகத்தை வருடியபோது நான் விழித்துக்கொண்டேன். நள்ளிரவு. கதவு சாத்தப்பட்டிருந்தது. மாரிமுத்து வந்து என் மேல் கொசுவலையை போட்டுச் சென்றிருந்தான். எழுந்தபோது ரப்பர் போல கால்கள் ஆடின. விழாமலிருக்க சுவரைப்பற்றிக்கொண்டு சென்று சிறுநீர் கழித்தேன். சுவர் வழியாகவே நடந்து சமையலறைக்குச் சென்றேன். சாப்பாடு மூடி வைக்கப்பட்டிருந்தது. தட்டைத் திறந்து பார்த்தபோது பசி எழுந்தது.

அப்படியே தூக்கிக்கொண்டு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். நான்காவது முறை அள்ளியபோது சோறு முழுக்க வெண்புழுக்களாக தெரிந்தது. அப்படியே அதன் மேலேயே வாந்தி எடுத்துவிட்டேன். தட்டை அப்படியே சிங்கில் போட்டுவிட்டு வாய்கழுவி திரும்பி வந்தேன். சட்டென்று எழுந்த வேகத்தில் மடெர் மடேரென்று தலையை அறைந்தேன். உடனே காரை எடுத்துக்கொண்டு பொள்ளாச்சி போய் அப்படியே திருநெல்வேலி போய் நான்குநேரிபோய் அம்மா மடியில் முகம்புதைத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. தலையை ஆட்டிக்கொண்டேன். ‘சாவறேன் சாவறேன்’ என்று சொன்னபோது கண்ணீர் கொட்டியது.

வெறியுடன் எழுந்து மிச்ச விஸ்கியையும் நீர் கலந்து வயிறும் நெஞ்சும் மூக்குத்துளைகளும் காதுகளும் எரிய கண்ணீர் கொட்ட விழுங்கி முடித்தேன். படுக்கையில் அமர்ந்துகொண்டு தூக்கம் வருவதற்காக காத்திருந்தேன். என் கைகால்கள் முழுக்க புழுக்கள் ஊர்வதை உணர்ந்தேன். . ஒவ்வொரு புழுவின் குளிர்ந்த தொடுகையும் காய்ச்சல்போல சூடாகி காய்ந்த என் தோலில் பட்டு என்னை விதிர்க்கச் செய்தது.படுக்கை புழுக்களாலானதாக இருந்தது. புழுக்களில் விழுந்து புழுக்களால் மூடிப்போனேன்

மறுநாள் ஆபீஸ் போனதுமே யானைடாக்டரைப்பற்றி விசாரித்து அறிந்தேன். ஒவ்வொருவருக்கும் அவரைப்பற்றிச் சொல்ல ஒரு கதை இருந்தது. டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி வனத்துறையின் மிருகடாக்டராக முப்பதாண்டுகளுக்கு முன்னால் அங்கே வந்தவர். காட்டுமிருகங்களுக்கும் பழக்கப்பட்ட மிருகங்களுக்கும் மருத்துவ உதவி அளிப்பது அவரது வேலை. ஆனால் மெல்லமெல்ல யானைகளுக்குரிய சிறப்பு மருத்துவராக அவர் ஆனார். தமிழக வனத்துறையில் யானைகளைப் பற்றி நன்கறிந்த மருத்துவ நிபுணர் அவர்தான் என்று ஆனபின்னர் எங்கே யானைக்கு என்ன பிரச்சினை என்றாலும் அவர்தான் செல்லவேண்டுமென்ற நிலை வந்தது. இந்தியாவில் மட்டுமல்ல ஒருகட்டத்தில் உலகத்தின் பலநாடுகளில் உள்ள யானைகளுக்கு அவர்தான் மருத்துவ ஆலோசகர்.

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகளுக்கு அறுவைசிகிழ்ச்சை செய்திருப்பார் என்றார்கள். முந்நூறுக்கும் மேல் யானைப்பிரசவம் பார்த்திருக்கிறார். நூற்றுக்கணக்கில் யானைச்சடலங்களை சவப்பரிசோதனை செய்திருக்கிறார். யானைச்சடலங்களை சவப்பரிசோதனை செய்வதற்கு இப்போதிருக்கும் முறைமையையே அவர்தான் உருவாக்கினார். யானைகளின் உடலுக்குள் உலோக எலும்புகளை பொருத்துவதை பத்து முறைக்குமேல் வெற்றிகரமாகச் செய்திருக்கிறார்.

டாக்டர் கிருஷ்ணமூர்த்தி யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல்துறையின் கையேடாக இன்று உள்ளது. கிட்டத்தட்ட அதே குறிப்புகளின் இன்னொருவடிவமே காசிரங்கா காண்டாமிருகங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்றார்கள். உலகமெங்கும் யானைவிரும்பிகளுக்கும் யானைஆராய்ச்சியாளர்களுக்கும் அவர் டாக்டர் கெ. நூற்றுக்கணக்கான நூல்களில் அவரைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். உலகப்புகழ்பெற்ற வன ஆவண நிபுணரான ஹாரி மார்ஷல் அவரைப்பறி டாக்டர் கெ என்ற பேரில் பிபிஸிக்காக ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார். ஒரு சமகால வரலாற்று மனிதர் அவர்.

நான் மேலும் இரண்டுவாரம் கழித்து யானைமுகாமுக்கு ஜீப்பில் சென்றபோது டாக்டர் கே என்னெதிரே ஜீப்பில் சென்றார். என் ஜீப்பை ஒதுக்கி அவருக்கும் இடமளித்தபோது அவர் என்னை பார்த்து புன்னகைசெய்துவிட்டு மாரிமுத்துவிடம் ‘என்ன மாரி, காணுமே?’ என்றார். ‘வரேன் அய்யா’ என்றான் மாரிமுத்து. ‘வர்ரச்ச இஞ்சி இருக்குன்னா கொண்டு வா’ என்றார். மீண்டும் என்னை நோக்கி சிரித்துவிட்டு சென்றார். மீசை இல்லாத நீளவாட்டு முகம். முன் நெற்றியும் வழுக்கையும் ஒன்றாக இணைந்திருக்க இருபக்கமும் அடத்ர்தியான நரைமயிர் கற்றைகள். எடுப்பான மூக்கு. உற்சாகமான சிறுவனின் கண்கள். காதுகளில் முடி நீட்டிக்கொண்டிருந்தது. சிறிய வாய்க்கு இருபக்கமும் ஆழமான கோடுகள் விழுந்து அவருக்கு ஒரு தீவிரத்தன்மையை அளித்தன. ஆனால் சிரிப்பு நேர்த்தியான பற்களுடன் பிரியமானதாக இருந்தது.

அவர் சென்றுவிட்டபின்னர்தான் அவருக்கு நான் வணக்கம் சொல்லவோ திரும்பி புன்னகைசெய்யவோ இல்லை என்று உணர்ந்தேன். நாக்கைக் கடித்துக்கொண்டு ‘ச்செ’ என்றேன். சார்?’ என்றான் மாரிமுத்து. ‘எறும்பு’ என்றேன். ‘ஆமாசார். பூ முழுக்க எறும்பா இருக்கு. மேலே விழுந்தா நல்லாவே கடிச்சிரும். சின்ன எறும்பா இருந்தாலும் கடிச்ச எடம் தடிச்சிரும் சார், ஆமா சார்’ . நான் பதினைந்து நாட்களாக அவரைப்பற்றி மட்டும்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவரை மனக்கண்ணில் மிக துல்லியமாக பார்த்துவிட்டிருந்தேன். ஆனால் நேரில் சந்தித்தபோது என்பிரக்ஞை உதிர்ந்துவிட்டது. புத்தகத்தில் இருக்கும் படம் சட்டென்று நம்மை நோக்கி புன்னகை புரிந்தது போன்ற அதிர்ச்சி.

அவர் என்ன நினைத்திருப்பார்? சட்டப்படி நான் அவரை விட பெரிய அதிகாரி. அதிகாரத்தோரணை என்று நினைத்திருப்பாரோ? புண்பட்டிருப்பாரோ? ஆனால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்காதவர் என்று அவரது முகம் சொன்னது. மீண்டும் அவரைச் சந்திக்க வேண்டும் , அவர் மேல் நான் கொண்டிருக்கும் மதிப்பை அவருக்குச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். உண்மையில் உடனே ஜீப்பை திருப்பச் சொல்ல நாவெடுத்தேன். துணிவு வரவில்லை.

அப்படியே மேலும் பத்துநாள் போயிற்று. அந்த ஒவ்வொருநாளும் பலநூறு முறை பல்வேறு சொற்களில் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டிருந்தேன். ஆனால் அவரை நேரில் சந்தித்து என்னால் பேசமுடியுமென்றே தோன்றவில்லை. இருமுறை அவரது குடியிருப்புக்கு அருகே வரை ஜீப்பிலேயே சென்று விட்டு திரும்பி வந்தேன். என்னுடைய தயக்கம் எதனால் என்று எனக்கே தெரியவில்லை. காட்டில் யானைடாக்டர் என்றால் அத்தனைபேருக்குமே பிரியமும் நெருக்கமும்தான் இருந்தன. பாதிப்பேர் அவரிடம்தான் காய்ச்சலுக்கும் காயங்களுக்கும் மருந்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். தினமும் காலை ஆதிவாசிக்கிழவிகள் கைகளில் புட்டிகளுடன் பழைய கம்பிளிகளை போர்த்திக்கொண்டு அவரது குடியிருப்புக்கு மருந்து வாங்கச் செல்வதை பார்த்தேன்.

‘அவளுகளுக்கு ஒரு சீக்கும் கெடையாது சார். ஆனைடாக்கிட்டர் குடுக்கிற ரொட்டியையும் மாவுச்சீனியையும் திங்கிறதுக்காக போறாளுக, ஆமா சார்’ என்றான் மாரிமுத்து. ஆபீஸ் கிளார்க் சண்முகம் ‘உண்மைதான் சார், அவரு என்ன ஏதுன்னு கேப்பாரு. இவளுக கொஞ்சநேரம் எதாவது பிலாக்காணம் வச்சா அதை பொறுமையா கேட்டு நல்லதா நாலு வார்த்தை சொல்லுவாரு. அதுக்காக போறாளுக.’ என்றான் ‘ஆனா கைராசிக்காரர். அத இல்லேண்ணு சொல்லமுடியாது. எனக்கேகூட காலிலே கட்டி வந்தப்ப அவருதான் கீறி மருந்துபோடு சரிபண்ணினார்’

‘எல்லாம் மாட்டுமருந்துசார்’ என்றான் மாரிமுத்து. ‘யோவ்!’ என்றேன். சண்முகம் ’உண்மைதான்சார். பெரும்பாலும் மனுஷனுக்கும் மிருகங்களுக்கும் ஒரே மருந்துதான். டாக்டர் டோஸ் குறைச்சு குடுப்பார். சிலசமயம் சும்மா தண்ணி ஊசியப்போட்டுட்டு சுக்கு மெளகுன்னு ஏதாவது பச்சிலய குடுத்து அனுப்பிருவார்’ , மாரிமுத்து ‘ஆனை டாக்டர் ஆனைக்கே மருந்துகுடுக்குறாரு, அப்றம் இத்துனூண்டு மனுசப்பயலுக்கு குடுக்கிறதுக்கு என்ன? ஆனை பெரிசா மனுசன் பெரிசா? ஆமாசார்’ என்றான்.

ஒருமுறை அவரது ஜீப் சாலையில் செல்ல ஊழியர்குடியிருப்பின் குழந்தைகள் ’ஆனைலாக்கிட்டர்! ஆனைலாக்கிட்டர்!’ என்று கூவியபடி ஜீப்புக்கு பின்னால் ஓடியதைக் கண்டேன். அவர் ஜீப்பை நிறுத்தி ஒவ்வொரு குழந்தையிடமாக ஏதோ கேட்க அவர்கள் வளைந்து நெளிந்து கண்களையும் நெற்றிகளையும் சுருக்கி ஒருவரோடொருவர் ஒட்டிக்கொண்டு பதில் சொன்னார்கள். நடுநடுவே கிளுகிளுவென்று சிரித்தார்கள். அவர் கிளம்பிச்செல்வது வரை ஜீப்பை அணைத்துவிட்டு அங்கேயே நின்று கவனித்தபின் நான் கிளம்பினேன்.

அவரது எளிமையும் அர்ப்பணிப்பும் பற்றிய சித்திரங்களே எனக்குக் கிடைத்துக்கொண்டிருந்தன. ஆனால் அந்த சித்திரங்கள்தான் என்னை அவரை சந்திக்கவிடாமல் செய்தன. நான் அறியாத ஒரு வரலாற்றுக்காலகட்டத்தில் இருந்து கொண்டு அவர் என்னை பார்க்கிறார் என்று தோன்றுமோ? அசோகரோ அக்பரோ காந்தியோ என்னிடம் பேச ஆரம்பிப்பது போல. எப்படி அதை எதிர்கொள்வது? என்னிடம் சரியான வார்த்தைகள் இல்லை. ஆனால் நான் அவரிடம் பேச வார்த்தைகளை தயாரித்துக்கொண்டேன். விதவிதமான மனக்கோலங்கள். கொஞ்சநாளில் நான் அதை ரசிக்க ஆரம்பித்தேன். அதிலேயே ஆழ்ந்திருந்தேன்.

தற்செயலாகத்தான் அவரை நான் சந்திக்கப்போகிறேன் என்று நினைத்திருந்தேன். அப்படியே நடந்தது. ஜீப்பில் இருந்து இறங்கி காட்டைப்பார்த்துக்கொண்டிருந்தபோது பெரிய முறத்தால் வீசுவதுபோன்ற ஒலி கேட்டு மேலே பார்த்தேன். கிரேட்ஹார்ன்பில் பறவை ஒன்றை கண்டு வியந்து அப்படியே முன்னகர்ந்தேன். உயரமான மரத்தின் கிளையில் சென்று அமர்ந்தது. அதை நான் நன்றாக அறிவேன் என்றாலும் பார்த்ததில்லை. வெள்ளை வேட்டிக்குமேல் கறுப்பு கோட்டு போட்ட வழுக்கைத்தலை மனிதரைப்போன்ற பறவை. துப்பறியும் சாம்புவின் கேலிப்படம் நினைவுக்கு வந்தது. பெரிய வான்கோழி அளவிருந்தது.

அது பறந்து வந்து கிளையில் அமர்ந்தபோது கரிய சிறகுகளின் வீச்சகலம் பிரமிக்கத்தக்கதாக இருந்தது. பெரிய மர அகப்பையை மண்டையில் கவிழ்த்தது போன்ற அலகுடன் வந்து கிளையில் அமர்ந்து ழ்ழாவ் என்று அகவியது. கிரேட்ஹார்ன்பில் எப்போதும் துணையுடன்தான் இருக்கும் என்று தெரியும். மேலே இருப்பது ஆண்பறவை. அப்படியானால் கீழே எங்கேயோ பெண் இருக்கிறது

கண்களால் தேடிக்கொண்டே இருந்தபோது அதை கண்டேன். புதர்களுக்குள் அமைதியாக அமர்ந்திருந்தது. சரியாக தெரியவில்லை. பக்கவாட்டில் நகர்ந்தேன், என்ன நடந்ததென்றே தெரியவில்லை. மின்னதிர்ச்சி போல இருந்தது. என் உடம்பு முழங்கை திகுதிகுவென எரிய ஆரம்பித்தது. நமைச்சலா எரிச்சலா காந்தலா வலியா என்று தெரியாத நிலை. அந்தச்செடியைப் பார்த்ததுமே தெரிந்துவிட்டது. செம்பருத்தி இலையின் வடிவமுள்ள ஆனால் நுண்ணியபூமுட்கள் பரவிய தடித்த இலை. செந்தட்டியா?

என்னசெய்வதென்றே தெரியவில்லை. செந்தட்டி சிறியதாக இருக்கும். இது இடுப்பளவுக்குமேல் உயரமான செடியாக பெரிய இலைகளுடன் இருந்தது. வேறு ஏதாவது விஷச்செடியா? கணம்தோறும் அரிப்பு ஏறி ஏறி வருவதுபோல தோன்றியது. அரிப்பை விட அச்சம்தான் என்னை பதறச்செய்தது. நேராக பக்கத்தில் இருந்த குடியிருப்புக்கு போய் மாரிமுத்துவை பார்த்தேன். ‘ஆனைடாக்கிட்டரிட்ட காட்டிருவோம் சார்’ என்றான். ‘இல்லே வேற டாக்டர்கிட்ட காட்டலாமே’ என்றேன். ‘அதுக்கு ஊருக்குள்ள போவணுமே. இவரு இங்கதான் இருக்காரு. அஞ்சு நிமிசத்திலே பாத்து ஒரு ஊசியப்போட்டா போரும்..நீங்க பாத்தீங்கன்னா டவுனிலே இருந்து வந்திருக்கீங்க. நாங்க இங்கியே கெடக்கோம். எங்கிளுக்கு ஒண்ணும் ஆவுறதில்லே, ஆமாசார்’ என்றான்

மறுப்பதற்குள் அவனே ஏறி அமர்ந்து வண்டியை ஓட்டி டாக்டர் கே-யிடம் கூட்டிக்கொண்டு சென்று விட்டான். அதுவும் நல்லதற்குத்தான் என்று நினைத்துக்கொண்டேன். இப்போது அவரைப்பார்ப்பதற்கு ஒரு இயல்பான காரணம் இருக்கிறது. டாக்டரை பார்ப்பதற்கு நோயாளிக்கு உரிமை உண்டுதானே? ஆனால் மனம் படபடத்தது. அந்த எதிர்பார்ப்பில் என் எரிச்சலைக்கூட நான் கொஞ்சநேரம் மறந்துவிட்டேன்.

நினைத்தது போலவே டாக்டர் கெ அவரது கிளினிக்காக இருந்த பெரிய தகரக்கொட்டகையில்தான் இருந்தார். அங்கே நாலைந்து மான்கள் கம்பிக்கூண்டுக்குள் கிடந்து பதற்றமாகச் சுற்றிவந்தன. வெளியே ஒருயானை கொஞ்சம் சோகமாக பேய்க்கரும்புக் குவியலை பிய்த்துச் சுருட்டி காலில் தட்டி நிதானமாக தின்றுகொண்டிருந்தது. அதனருகே ஒரு பெஞ்சில் பாகன் ஒருவன் தூங்கிக்கொண்டிருந்தான்.

டாக்ட கே குந்தி அமர்ந்து மிகக்கவனமாக எதையோ பிப்பெட்டில் அள்ளிக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்துவிட்டு வேலையை தொடர்ந்தார். மாரிமுத்து, ‘டாக்கிட்டரய்யா இருக்கீங்களா? அபீசரய்யாவ செந்தட்டி கடிச்சிட்டுதுங்க’ என்றான். ‘அவரு இன்னாமோ அவருபாட்டுக்கு காட்டுக்குள்ளார பூந்துட்ட்டாருங்க. நமக்கு இதெல்லாம் ஒண்ணும் ஆவுறதில்லீங்க. அவுரு புதிசுங்களா ரொம்ப அரிக்குதுடா மாரின்னாருங்க. நான் சொன்னேன் நமக்கு அரிக்கிறதில்லே…நீங்க வந்து ஆனைடாக்கிட்டர பாருங்கய்யான்னு. கூட்டியாந்தனுங்க. ஆமாங்க’ என்றான்.

அவர் என்னிடம் திரும்பி ‘அது இந்தக்காட்டிலே உள்ள ஒரு செடி. ஊரிலே இருக்கிற செந்தட்டியோட இன்னொரு வெர்ஷன்…இப்ப உங்களுக்கு வேணுமானா ஆன்டிஅலர்ஜெட்டிக் ஊசி போடலாம். வேணுமானா ஐஸ்தண்ணியிலே கழுவிண்டே இருக்கலாம். எப்டியும் ஒரு மணிநேரத்திலே சரியாப்போயிடும்’ என்றபடி பிப்பெட்டை ஒரு சிறிய குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டு வந்து என் கையையும் இடுப்பையும் பார்த்தார். ‘ஒண்ணுமில்லை… ஒருமணிநேரத்திலே தீவிரம் போயிடும். நாளைக்கு சுத்தமா சரியாயிடும். சொறிஞ்சீங்களா?’

‘ஆமா’ என்றேன். அவர் புன்னகை செய்தார். ‘ஒண்ணுபண்ணுவோமா? சொறியாமல் இருக்க முயற்சிபண்ணுங்க. அரிக்கும், அந்த அரிப்பை கூர்ந்து கவனியுங்க. என்ன நடக்குதுன்னு பாத்துண்ட்டே இருங்க. உங்க மனசு எதுக்காக இப்டி பதறியடிக்குது? எதுக்காக உடனே இத சரிபண்ணியாகணுனும் துடிக்கறீங்க? எல்லாத்தப்பத்தியும் யோசியுங்க…செஞ்சுடலாமா? ஊசி வேணா போடறேன், இஃப் யூ இன்ஸிஸ்ட்’ என்றார். .நான் ’இல்லை வேணாம், நான் கவனிக்கறேன்’ என்றார். ‘குட்’ என்றபின் ‘வாங்க, டீ சாப்பிடலாம்’ என்றார்

‘இந்த மான்களுக்கு என்ன?’ என்றேன். ‘என்னமோ இன்ப்ஃபெக்ஷன்…அதான் புடிச்சு கொண்டாரச் சொன்னேன். நாலஞ்சுநாளிலே என்ன ஆகுதுன்னு பாக்கலாம். இப்பதான் சேம்பிள் எடுத்திருக்கேன். கோயம்புத்தூருக்கு அனுப்பி கல்ச்சர் பண்ணிப்பாக்கணும்…நீங்க தெக்கயா?’ என்றார். ’ஆமா திருநெல்வேலிப்பக்கம்…நான்குநேரி..’ ‘எங்க அம்மாவுக்குக்கூட பூர்வீகம் அங்கதான்…நவதிருப்பதிகளிலே ஒண்ணு…அங்க உள்ள பெருமாளுக்குக் கூட நல்ல பேரு. இருங்க, மகரநெடுங்குழைகாதன்’ நான் ’தென்திருப்பேரை’ என்றேன். ‘ஆமா…போயிருக்கேளா?’ ‘பலதடவை. நல்ல கோயில்’ ‘எஸ், நல்ல அக்ரஹாரம் ஒண்ணு இருக்கு…பழமை அதிகம் மாறலை. உக்காருங்கோ’

அவர் எனக்கு டீ போட ஆரம்பித்தார். ஸ்டவ்வை பற்றவைத்துக்கொண்டே ‘வலிகளை கவனிக்கறது ரொம்ப நல்ல பழக்கம். அதைமாதிரி தியானம் ஒண்ணும் கெடையாது. நாம யாரு, நம்ம மனசும் புத்தியும் எப்டி ஃபங்ஷன் பண்ணறது எல்லாத்தையும் வலி காட்டிரும். வலின்னா என்ன? சாதாரணமா நாம இருக்கறத விட கொஞ்சம் வேறமாதிரி இருக்கற நிலைமை. ஆனால் பழையபடி சாதாரணமா ஆகணும்னு நம்ம மனசு போட்டு துடிக்குது…அதான் வலியிலே இருக்கற சிக்கலே….பாதி வலி வலிய கவனிக்க ஆரம்பிச்சாலே போயிடும்…வெல், டெஃபனிட்லி கடுமையான வலிகள் இருக்கு. மனுஷன் ஒண்ணும் பெரிய ஆள் இல்லை. ஹி இஸ் ஜஸ்ட் அனதர் அனிமல்னு காட்டுறது அந்த மாதிரி வலிதான்…’

டீயுடன் அமர்ந்துகொண்டார். பாலில்லாத டீ அத்தனை சுவையாக நான் குடித்ததில்லை. ’உண்மையிலே மனுஷன்தான் இருகக்றதிலேயே வீக்கான மிருகம். மத்தமிருகங்கள்லாம் நோயையும் வலியையும் பொறுத்துக்கறதில இருக்கிற கம்பீரத்தைப்பாத்தா கண்ணுல தண்ணி வந்திடும். உயிர் போற வலி இருந்தாலும் யானை அலறாது. துடிக்காது. கண்மட்டும் நல்லா சுருங்கி இருக்கும். உடம்பு அங்கங்க அதிரும். யானை சம்மதிச்சா அதுக்கு மயக்கமருந்தே குடுக்காம சர்ஜரி பண்ணலாம். அந்த அளவுக்கு பொறுமையா ஒத்துக்கிட்டு நிற்கும். என்ன ஒரு பீயிங். கடவுள் அவரோட நல்ல கிரியேட்டிவ் மூடிலே படைச்சிருக்கார்…’

அவர் யானையைப்பற்றிய பேச்சை எப்படியாவது நாலாவது வரியில் உள்ளே கொண்டு வந்துவிடுவார் என பலர் சொல்லி கேள்விப்பட்டிருந்தேன், எனக்கு புன்னகை வந்தது. ’யானை மட்டுமில்லை, சிறுத்தை காட்டெருமை எல்லாமே அப்டித்தான். அவங்களுக்கு தெரியும்’ என்றார். நான் ‘ஆமா, பசுவுவுக்கு பிரசவம் ஆறதை பாத்திருக்கேன். கண்ணைமட்டும் உருட்டிக்கிட்டு தலைய தாழ்த்தி நின்னுட்டிருக்கும்…’ ‘ஆமா அவங்களுக்கு தெரியும், அதுவும் வாழ்க்கைதான்னு….மனுஷன்தான் அலறிடுறான். மருந்து எங்க மாத்திர எங்கன்னு பறக்கிறான். கைக்கு அகப்பட்டதை தின்னு அடுத்த நோயை வரவழைச்சிடறான்…மேன் இஸ் எ பாத்தடிக் பீயிங்– நீங்க வாசிப்பேளா?’

‘ஆமாம்’ என்றேன். ‘யூ ஷுட் ரீட் காந்தி…இந்த ஜெனரேஷனோட சிந்தனைகளை பாதிக்கக்கூடிய சக்தி உள்ள ஒரே திங்கர் அவருதான்…எல்லாத்தைப்பத்தியும் ஒரிஜினலா ஏதாவது சொல்லியிருப்பார்’ என்றார். ‘என்னோட ஃபேவரைட் காந்தியும் அரவிந்தரும்தான். அப்றம் கைக்கு கெடைக்கிற எல்லாமே’ என்றபடி டீயை என்னிடம் கொடுத்தார். சட்டென்று எனக்கு உடல் உலுக்கியது. டீக்கோப்பையை கையில் வைத்துக்கொள்ளவே தோன்றவில்லை. அதன் வெளிப்பக்கம் முழுக்க அழுக்காக இருப்பதைப்போல. ஒருகணம் கண்ணைமூடினால் புழுக்கள் நெளியும் பரப்பு.

சீச்சீ, எனன் நினைப்பு இது? அவர் டாக்டர். மருந்துகளால் கைகழுவத்தெரிந்தவர். மேலும் அவர் அந்த பிணச்சோதனையைச் செய்து ஒரு மாதம் ஆகப்போகிறது. இல்லை, அவரது கைநகங்களின் இடுக்கில் அந்த அழுக்கு இருக்கலாம். என்ன நினைக்கிறேன். என்னாயிற்று எனக்கு? பீங்கானில் இருந்த சிறு கரும்பொட்டை கையால் நெருடினேன். அதை வாய்நோக்கி கொண்டுசெல்லவே முடியவில்லை. அதை அவர் கவனிக்கிறாரா? இது ஒரு மனநோய். இல்லை, இவருக்கு அருவருப்புகள் இல்லை. ஆகவே சற்றுமுன் கூட ஏதேனும் மிருகத்தின் நிணத்தை நோண்டியிருப்பார். கைகழுவினாரா? ஆம் கழுவினார். ஆனால்..

சட்டென்று கண்ணைமூடிக்கொண்டு மொத்த டீயையும் வாயில் விட்டு விழுங்கி விட்டேன். சூட்டில் தொண்டையும் உணவுக்குழாயும் எரிந்ன. ‘ஓ மை…’ என்றார் டாக்டர் கே. ‘ஆறிப்போச்சா? இன்னொண்ணு போடுறேனே…நானே சூடாத்தான் குடிப்பேன். நீங்க எனக்கு மேலே இருக்கறீங்க’ அந்த டீ எனக்குள் சென்றதும் அது என் நரம்புகளில் படர்ந்ததும் என் உடலெங்கும் இன்னொரு எண்ணம் பரவியது. என்ன அருவருப்பு? என் உடம்புக்குள் அதே நிணம்தான் இருக்கிறது. சளிகள் திரவங்கள் மலம் மூத்திரம்… நானும் அதேபோலத்தான். ஆனால்-

‘நீங்க அன்னிக்கு மயங்கி விழுந்திட்டீங்க இல்ல’ என்றார் டாக்டர் கே. ‘ஆமா சார்’ என்று அவர் மனதை வாசிக்கும் வித்தையை உணர்ந்து வியந்தபடிச் சொன்னேன். ‘காட்டுக்குள்ள சாகிற ஒவ்விரு மிருகத்தையும் போஸ்ட்மார்ட்டம் பண்ணியாகணும்னு நான் முப்பது வருஷமா போராடிண்டு வர்ரேன். எவ்ளவு அழுகின சடலமா இருந்தாலும் பண்ணியாகணும். முன்னாடில்லாம் அப்டி கெடையாது. ஸீ, இங்க பெரிய மிருகங்க சாகிறதிலே மூணிலே ஒண்ணு கொலைதான். மனுஷன் பண்றது..’ என்றார் ‘முன்னாடில்லாம் தொற்றுநோயை கண்டு புடிக்கிறதுக்குள்ள பாதி மிருகங்கள் செத்து அழிஞ்சிரும்’ நான் மெல்ல ’ரொம்ப அழுகிப்போனா..’ என்றேன். ‘ஏதாவது எவிடென்ஸ் கண்டிப்பா இருக்கும்… கண்டுபுடிக்கறதுக்கு ஒரு மெதடாலஜி இருக்கு… ஐ ரோட் இட்’ ‘தெரியும் டாக்டர்’ என்றேன்.

’புழுக்களைப்பாத்து பயந்துட்டேள் என்ன?’ என்றார் டாக்டர் கே. ’புழுக்களை பாத்தாலே பெரும்பாலானவங்களுக்கு பயம்… அந்த பயம் எதுக்காகன்னு எப்பவாவது கவனிச்சா அதை தாண்டி போயிடலாம். பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும். .. நீங்க இங்க கருப்பா ஒரு புளியங்கொட்டை சைசுக்கு ஒரு வண்டு இருக்கறத பாத்திருப்பேள். உங்க வீட்டுக்குள்ள கூட அது இல்லாம இருக்காது’ என்றார் ‘ஆமா, அதுகூடத்தான் வாழறதே. சோத்திலகூட கெடக்கும். பாத்து எடுத்துப் போட்டுட்டு சாப்பிடணும்’. டாக்டர் கே சிரித்து ‘அந்த வண்டோட புழுதான் நீங்க பாத்தது..வண்டு பெரிய ஆள். புழு கைக்குழந்தை. கைக்குழந்தை மேலே என்ன அருவருப்பு?’

நான் மேலே பேச முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். ‘எல்லா புழுவும் கைக்குழந்தைதான். நடக்க முடியாது. பறக்க முடியாது. அதுபாட்டுக்கு தவழ்ந்துண்டு இருக்கறது. அதுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான், சாப்புடறது. தின்னுண்டே இருக்கும். சின்னப்புள்ளைங்ககூட அப்டித்தான்…ஒரு கைக்குழந்தை சாப்பிட சாப்பாட்டை அதோட எடையோட கம்பேர் பண்ணினா நீங்க தினம் முப்பது லிட்டர் பால்குடிக்கணும்…’ என்றார் டாக்டர் கே ‘அதுக்கு அப்டி ஆர்டர். சட்டுபுட்டுன்னு அகப்பட்டத தின்னு பெரிசாகிற வழியப்பாருன்னு….’ புன்னகைத்து ‘கிறுக்கு ஃபிலாசபின்னு தோணறதா?’ இல்லை என்றேன். ‘வெல்’

அன்று முழுக்க அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரைப்போன்ற உரையாடல் நிபுணர் ஒருவரை நான் பார்த்ததே இல்லை. வேடிக்கை, தத்துவம், இலக்கியம், அறிவியல் என்று அவரது பேச்சு தாவிக்கொண்டே இருக்கும். ஜேம்ஸ்பாண்ட் போல காரில் இருந்து ஹெலிகாப்டருக்கு தாவி, பறந்து போட்டில் குதித்து, கரையில் ஏரி பைக்கில் ஆரோகணித்து விரைவது போல எனக்கு பிரமை எழும். அன்று முதல் வாரத்தில் மூன்றுநாட்களாவது அவரைப்பார்க்கச் செல்வேன். புத்தகங்கள் கொடுப்பார். புத்தகங்களைப்பற்றி விவாதிப்பார்.

தொடர்ச்சி

Chapter 1 :  http://www.jeyamohan.in/?p=12433

Chapter 2 :  http://www.jeyamohan.in/?p=12435

Chapter 3 :  http://www.jeyamohan.in/?p=12439

முந்தைய கட்டுரைபைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’
அடுத்த கட்டுரையானைடாக்டர் [சிறுகதை] – 2