பெங்களூரை விட்டு வெளிவந்த உடனே நிலப்பகுதி மாறிவிடுவது ஆச்சரியம்தான். திடீரென ராயலசீமாவுக்குள் ஆளில்லா நிலப்பரப்பில் நுழைந்துவிட்டதுபோல. உண்மையில் பெங்களூரே இப்படி ஒரு பாறைநிலப்பகுதிக்குள் தான் கட்டப்பட்டிருக்கிறது. நகரத்திற்குள் பல பாறைப்பகுதிகள் உள்ளன. பல சாலைமுனைகளில் பாறைகள் துருத்தி நின்றிருக்கின்றன.
1983ல் நான் முதல்முறையாக பெங்களூர் வந்தபோது நகரத்திற்குள்ளேயே இன்னும் பல பகுதிகள் பாறைகள் குவிந்திருப்பது போல் இருப்பதைக்கண்டிருக்கிறேன். லால் பாக்கின் பல பகுதிகளில் பாறைகள் இன்றும் இருக்கின்றன. ஆனால் நகரத்திலிருந்த பாறைக்குவியல்கள் கொஞ்சம்கொஞ்சமாக அகற்றப்பட்டு விட்டிருக்கின்றன. தெய்வங்களோடு சம்பந்தப்பட்ட பாறைகள்தான் எஞ்சியிருக்கின்றன. தெய்வங்கள் என்பவை இப்படி நம்மிடம் எஞ்சியிருப்பவைதான்போலும்
தக்காணப்பீடபூமியின் வழியாக சென்றுகொண்டே இருந்தோம். இப்பகுதியில் பயணம் செய்ய மிக உகந்த பருவம் இது. மழைமுகில்கள் குவிந்து கிடந்தன. மதிய உணவுக்கு திட்டமிருந்தாலும் அதற்கு முன்னரே ஒரு ஏரியின் கரைக்குக் கீழே அமைந்திருந்த கல்லேஸ்வரா கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். இந்தச் சிற்றூரின் பெயர் பஹலி. பழைய கல்வெட்டுகளில் பல்ஹலி. தாவண்கெரே அருகிலுள்ளது
இப்பகுதி வழியாக பல முறை சென்றபோதும் கூட இந்த ஆலயத்தை தவற விட்டிருந்தோம். இதற்கென்றே வழிபிரிந்து வரவேண்டியிருந்ததே காரணம். இம்முறை எப்படியும் இதை பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிதான் வந்தோம். தக்காணப் முக்கியமான ஆலயங்களில் ஒன்று. பேலூர் ஹளபேடு ஆலயங்களுக்கு முன்னோடியானது. கர்நாடகத்தின் கோயில்கலையின் வளர்ச்சிப் பரிணாமத்தை ஒற்றைக்கோயிலில் பார்ப்பதற்கு உகந்தது.
ஏரிக்கரையில் இருந்து பார்த்தால் காலடிக்கு கீழே கோயில் இருப்பதை போல் இருக்கும். இறங்கிச் செல்லும்போதுதான் ஒரு புத்தகம் பக்கம் பக்கமாக விரிவதுபோல ஆலயத்தொகை திறந்துகொள்கிரது. தொல்லியல் கட்டுப்பாட்டுத்துறை கீழ் உள்ளது இறங்கி வந்து ஆலயத்தை பார்த்தோம் உள்ளே செல்லும்ப்போதுதான் அது பெரிய ஆலய வளாகம் என்று தெரியும்
இந்த ஆலயம் கிபி பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ராஷ்டிரகூட மன்னர்களால் கட்டப்பட்டது. மேலைச்சாளுக்கிய அரசர்களின் காலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆகவமல்லர் என அழைக்கபப்ட்ட சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலபர் [ கிபி 987] காலத்தில் துக்கிமையா என்னும் செல்வாக்கான படைத்தலைவர் இந்த ஆலயத்தின் முகப்பு மண்டபங்களைக் கட்டினார். சாளுக்கியர்களாலேயே நரசிம்மர், சூரியன் கருவறைகள் கட்டப்பட்டு இணைக்கப்பட்டன. பின்னர் வெளியே உள்ள சிறிய கோயில்கள் கட்டப்பட்டன.
மேலைச்சாளுக்கியர்கள் பின்னாளில் கல்யாணி சாளுக்கியர்கள் என அழைக்கப்பட்டனர். கல்யாணி சாளுக்கியர்களின் கட்டிடக்கலையின் முதன்மையான அழகியல்கூறு என்பது கரியமாக்கல்லால் ஆன அணித்தூண்கள். பன்வாஸி, லக்குண்டி என கர்நாடகத்தின் தொல்நகர்களில் இந்தவகை ஆலயங்களின் மிகச்சிறந்த வடிவங்கள் உள்ளன. அருகர்களின் பாதை பயணத்தின்போது ஒரே வீச்சில் இவற்றைப் பார்த்துச்சென்றது ஓர் ஒட்டுமொத்த நோக்கை உருவாக்கியளிப்பதாக அமைந்தது.
உருளைகளில் இட்டு உருட்டி பளபளப்பாக்கப்பட்டு மேல்மேலே தட்டுகளையும் கலங்களையும் அடுக்கி வைத்ததுபோன்ற அமைப்பு கொண்டவை இத்தூண்கள். இவற்றாலான கல்மண்டபங்கள் நீர்நிலைபோல் கரிய ஒளிகொண்டிருக்கும். கரியமாக்கல் நுணுக்கமான சிற்பங்களை உருவாக்க உகந்தது. புடைப்புச் சிற்பங்கள் தூணிலிருந்து எழுந்தவை போல நின்றிருக்கும். அணிகளும் மலர்ச்செதுக்குகளும் ஊசியால் செதுக்கப்படுபவை. கல்யாணி சாளுக்கியர்களிடமிருந்தே மாக்கல்செதுக்குச் சிற்பங்கள் பின்னர் ஹொய்ச்சாளர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டு பேலூர் ஹளபீடு ஆலயங்களில் உச்சத்தை அடைந்தன.
தமிழக ஆலயங்களின் அமைப்புக்களில் பழக்கமுள்ளவர்களுக்குக் கொஞ்சம் குழப்பமான கோயில். முதன்மைக்கருவறையில் சிவன். நேர் எதிரில் சபாமண்டபம். அதில் ஐம்பது வட்ட அடுக்குத் தூண்கள். அதிலிருந்து நோக்கும்படியாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சூரியனுக்கு ஒரு கருவறை. சூரியனின் கதிர் ஆண்டில் ஒருநாள் லிங்கம் மேல் படுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைக்குள் இரு கைகளிலும் மலர்களுடன் சூரியன். பக்கவாட்டுக் கருவறையில் நரசிம்மர். சிவன் கருவறைக்கு நேர் எதிரில் நந்தி.
ஹொய்சாள பாணி மாக்கல் கோயில்கள் எல்லாமே மிகமிக நுட்பமான சிற்பச்செதுக்குகள் கொண்டவை. தமிழகத்திலுள்ள மணற்கல், கருங்கல் ஆலயங்களில் இத்தனை செதுக்குகள் இயல்வதல்ல. ஆகவே ஒட்டுமொத்தமாக ஒருமுறையும் துளித்துளியாக ஒருமுறையும் ஆலயத்தைப் பார்க்கவேண்டும். எத்தனை பார்த்தாலும் பார்த்தோமென்று நிறைவுகொள்ளவும் இயல்வதில்லை.
கல்லில் எழும் வழவழப்பு அதன் கடுமைக்கும் மென்மைக்கும் சான்று என்பது ஓர் அரியபடிமம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. எங்கள் தென்தமிழ்நாட்டுக் கோயில்களிலுள்ள கற்களின் வழவழப்பு அவை உறுதியான கிரானைட் வகை கற்களால் ஆனவை என்பதைக் காட்டுகிறது. இங்குள்ள சொரசொரப்பான சிலைகள்தான் மென்மையான மணற்கல்லால் ஆனவை. ஆனால் கல்யாணி சாளுக்கிய- ஹொய்சாளக் கலைக்கோயில்களில் வழவழப்பும் மெருகும் மாக்கல்லின் கொடை.
மாக்கல் ஒருவகை சுண்ணாம்புக்கல். எரிமலைச்சாம்பலும் சுண்ணமும் கலந்து உருவானது. இக்கற்கள் சிலவகை அமிலக்காய்களால் நெகிழவைக்கப்பட்டு ஊசிமுனையால் செதுக்கப்பட்டு மீண்டும் சுண்ணம் ஏற்றப்பட்டு உறுதியாக்கப்படுகின்றன என்று முன்பொருமுறை பன்வாசி ஆலயத்தில் ஒரு வழிகாட்டி சொன்னார். ஹளபீடில் இப்போதுகூட இத்தகைய சிற்பங்களை விலைக்கு வாங்கலாம். பைநிறைய காசு இருக்கவேண்டும்
ஒரே ஒரு அடி உயரமான தூண் புடைப்புச்சிலைக்குள் முழுதணிக்கோலத்திற்குள் எழுந்தருளியிருக்கும் துர்க்கை. ஆறுகைகளுடன் மயில்மேல் எழுந்த முருகன், நடராஜர் போன்ற சிலைகள். அந்த சிலைகளின் கைகளில் இருக்கும் கங்கணத்திற்குள்ளேயே முகங்கள். சிற்பங்கள் பேளூர் ஹளபேடு பாணியில் அமைந்த பல அடுக்கு கிரீடங்கள் கொண்டவை. புடைப்பு சிற்பமானாலும் தனியாக செய்துசுவரில் ஒட்டியது போல் அமைந்துள்ளன. சிற்பங்களுக்கும் பின்புறப் பரப்புக்கும் நடுவே ஓரிரு சிறு இணைப்புக்கள் மட்டும்தான். கோட்டங்களுக்குள் அமர்ந்திருக்கும் தெய்வங்களின் அனைத்து ஆயுதங்களும் படைக்கலங்களும் சுவரில் ஒட்டாமல் தனித்து வெளியே நீண்டிருக்கின்றன.
ஐம்பட்டை அடுக்கு ஏழுபட்டை அடுக்கு கொண்ட தூண்களுடன் தாமரைக் கவிழ்ப்புகள் கொண்ட மண்டபங்கள். இந்த மண்டபங்களின் தூண்களை இருபதாண்டுகளாக வெவ்வேறு ஆலயங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சலிக்கவே இல்லை. முதலில் தட்டுகளை அடுக்கியதுபோன்ற உருளைவடிவம். பின்னர் அதில் தாமரை இதழ்கள் வந்தன. பின்னர் தாமரை இதழ்களையே அறுகோண எண்கோணங்களாக ஆக்கிப்பார்த்திருக்கின்றனர். ஒருவகை கியூபிஸம்.
மண்டபத்தின் மேல் ஒன்றையொன்று தாமரை இதழ்களை அடுக்கி உருவாக்கப்பட்டது போல பெருங்குடைபோன்ற கூரை. அனைத்து தூண்களின் அடித்தளங்களிலும் மிக நுட்பமான சிற்பங்கள். அதை சூழ்ந்து சாய்ந்திருப்பதற்கு உகந்த கல்லாலான இருக்கைகள். இது நிருத்த மண்டபம் என்றும் கலா மண்டபம் என்றும் சொல்லப்படுகிறது இந்த குடைக்கீழ் தான் நடனங்கள் நிகழ்ந்திருக்கின்றன இருபுறத்திலும் அதை அமர்ந்து பார்த்து ரசித்திருக்கிறார்கள். அரசர்கள் அமர்வதற்கான இடமும் அரசகுடியினர் அமர்வதற்கான இடமும் நன்கு ஒருக்கப்பட்டிருந்தன.
இந்த ஆலயத்தின் மையச்சிலை சுயம்புலிங்கம் என்று இங்குள்ள பூசகரும் தொல்லியல் ஊழியருமான பிரவீண் சொன்னார். ஆலயங்களில் இத்தனை விரிவாக சிற்பக்கலையையும் கட்டிட அமைப்பையும் வரலாற்றையும் விளக்கும் பூசகரை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அங்கிருந்த தொல்லியல் துறை ஊழியரான ராஜேஸ்வரி என்ற பெண்மணியும் வந்து ஆலயத்தை சிற்பங்களை சுட்டிக்காட்டி ஒவ்வொன்றையும் மிக நுணுக்கமாக விளக்கினார். அவர்கள் விளக்கியிராவிட்டால் பலவற்றை இழந்திருப்போம்.
குறிப்பாக ரதியும் மன்மதனும் இணையாக இருப்பது தமிழக ஆயயங்களில் அரிது. தமிழகத்தில், நாயக்கர் கால ஆலயங்களில் இரு வேறு தூண்களில் எதிரெதிரே அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற சிற்பங்களையே பார்க்க முடியும். பிரவீண் மையக்கருவறைக்குமேலே சிவனுடைய பல்வேறு நடனநிலைகள் செதுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். கரியுரித்தபெருமானின் தோற்றம் ஒரு நாணயத்திற்குள் உலோகத்தில் செய்ததுபோல அத்தனை நுட்பமானது
திசைத்தேவர்களின் சிலைகள், விஷ்ணு பிரம்மா சிலைகள். முதலையின் உடலை இருபுறமும் வளைவாக அமைத்த மகரதோரணத்தில் நடனமிடும் கந்தர்வர்கள். அன்னங்களின் தொடரான ஹம்சதோரணங்கள். வெவ்வேறு இசைக்கருவிகளுடன் பாடும் யட்சர்கள். நடுவே கனலட்சுமி. இந்த இசைக்கருவிகள் மிக நுட்பமானவை. அவற்றின் நரம்புகளைக்கூட நம்மால் காணமுடியும். சாளுக்கிய- ஹொய்ச்சாள சிற்பங்களின் இசைக்கருவிகள் பல இன்றில்லை. அவற்றைப்பற்றி தனியாக எவரேனும் ஆய்வுசெதுள்ளனரா என்று தெரியவில்லை
பொதுவாக விஷ்ணுகோயில்களில்தான் இறைவன் விழாமையமாக, கோலாகலன் ஆக சித்தரிக்கப்பட்டீருப்பான். வட இந்தியாவில் சூரியன் கோயில்களில் மொத்த ஆலயமே ஒரு விழா என்று தோன்றும். பாலியல்சிற்பங்கள் அதன் ஒரு பகுதி. ஏனென்றால் சூரியன் படைப்புகளின் தலைவன். குன்றாத விழைவின் அரசன். இங்கே சிவன் கோலாகலன் ஆக அமைந்திருப்பது வியப்புதான். ஒருவேளை ஆலயத்தில் சூரியனும் கோயில்கொண்டிருப்பதனால் இவ்வாறு உருவகிக்கப்பட்டிருக்கலாம். அவ்வாறென்றால் எப்படி நரசிம்மம்? அதுவும் உக்கிரநரசிம்மம்?
ராஜேஸ்வரி தமிழ் நன்றாக பேசினார். சேலத்தை பிறப்பூராக் கொண்டவர். நரசிம்மர் சிலையும் அருகே அழைத்துச்சென்று காட்டினார். நான் இதுவரை பார்த்த்திலேயே மிக அழகான நரசிம்மர் சிலை இங்குள்ளதுதான். இதுவரை அது பெலவாடி நரசிம்மராகவே இருந்தது. சிம்மத்தின் நெளிவும் உக்கிரமும் ஒயிலும் கலந்த பாவனைகள் நோக்க நோக்க பெருகிக்கொண்டே இருப்பவை. மடியிலிட்டு இரணியனை கிழிக்கும் சிம்மத்தின் உறுமலை விழிகள் காட்டின. தமிழ்நாடு போல அழுக்குத்துணியை சுற்றிவைக்காமல் சிற்பங்களை மலரிட்டு வழிபடும் நிலையிலேயே அழகுத்தோற்றமாகவும் நிலைநிறுத்தியிருந்தார்கள்.
பூசகர் வெளிவந்து கோவிலை சுற்றியிருக்கும் சிற்பங்களை எங்களுக்கு அடையாளம் காட்டினார். கோயிலின் மேல்விளிம்பு முழுக்க பாலியல் சிற்பங்கள் இருந்தன. கர்நாடகத்தின் கஜுராகோ என்று இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. பலவிதமான புணர்ச்சிச் சிற்பங்கள். [அவர் சம்போகம் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். நம்மவர்களில் ஒருவர் சம்பவம் என்று சொல்வதாக அதை புரிந்துகொண்டு ‘சம்பவம் பண்ணியிருக்கானுக’ என உணர்ச்சி அடைந்தார்]. மிருகங்களுடனான புணர்ச்சி உட்பட அனைத்துமே இருந்தன.
கஜுராகோ சிற்பங்களில் இல்லாத இங்கிருந்த தனித்தன்மை என்னவென்றால் இவற்றிலிருக்கும் கேலிச்சித்திர இயல்புதான். அதை தென்தமிழகக் கோயில்களின் தூண்களில் ஓரளவு காணமுடியும். விரைத்த ஆண்குறியை நான்கு பேர் சுமந்து கொண்டு செல்வது போலவும், தனது ஆண்குறியை தலைக்கு மேல் வளைத்து தானே வாய்க்குள் வைத்துக்கொள்வது போன்றும் அமைந்த சிற்பங்கள். அனைத்துமே வேவ்வேறுவகையான களியாட்டுக்கள்.
இச்சிற்பங்களை ரசிப்பதற்கான உளநிலை என்ன பயிற்சி என்ன என்று அவ்வப்போது எனக்குக் கடிதங்கள் வருவதுண்டு. மேலைநாடுகளில் அங்குள்ள குழந்தைகளை இளமையிலேயே அருங்காட்சியகங்களுக்குக் கொண்டுசென்று கலைப்படைப்புக்களை காட்டுகிறார்கள். அவற்றை வெறுமே காட்டுவதில்லை, ரசிப்பதற்கான அடிப்படைச் செய்திகளையும் சொல்லித்தருகிறார்கள். பெரும்பாலான அருங்காட்சியகங்களில் இக்காட்சியைக் கண்டிருக்கிறேன்
அந்த வயதில் கலை பிடிகிடைக்குமா என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் அவை ஆழுள்ளத்தில் பதியும், பின்னர் மீண்டெழும் என நினைக்கிறேன். நான் இளமையிலேயே என் இருகுழந்தைகளையும் ஆலயங்களுக்குக் கொண்டுசென்று சிற்பங்களை காட்டுவது வழக்கம். அப்போது பெரிய ஆர்வமேதையும் அவர்கள் காட்டவில்லை. ஆனால் இன்று இருவருமே சிற்பங்களை வெறியோடு நாடெங்கும் அலைந்து அலைந்து பார்த்துக்கொண்டிருப்பதைக் காண்கிறேன்
சிற்பங்களைப் பார்ப்பதற்கான பயிற்சி ஒன்றே. அவற்றை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது. எந்தச் செவ்வியல்கலைக்கும் இது பொருந்தும். பார்க்கப்பார்க்க அவை நம் ஆழுள்ளத்திற்குள் செல்லும். கனவாக அமையும். உடன் கொஞ்சம் வரலாற்றையும் கலையையும் தெரிந்துகொண்டால் போதும். வரலாற்று விவாதங்களுக்குள் நான் செல்வதில்லை. நுணுக்கமான பல முரண்பட்ட கருத்துக்கள் இருக்கும். எனக்கு அக்கலை உருவான காலச்சூழல் என்றவகையிலேயே வரலாறு முக்கியமானது
ஒரு கலைப்படைப்யை அறிமுகம் செய்ய அங்குள்ள மிக எளியவரால்கூட முடியும். சாதாரணமான வழிகாட்டிகள் எங்களுக்குப் பெரிய திறப்பை அளித்திருக்கிறார்கள். முதல்முறை ஹாத்திகும்பா சென்றபோது அங்கிருந்த வழிகாட்டி உருவாக்கிய புரிதல் மிக விரிவானது. ஒருமுறை சித்ரதுர்க்கா ஆலயத்தில் ஒரு வழிகாட்டி வரலாற்றையே விரித்து வைத்தார். அவர்கள் அங்கிருக்கிறார்கள். பொதுவாக வெள்ளையர் வரும் இடங்களில் ஆங்கிலத்தில் பேசும் வழிகாட்டிகள் நமக்கு மிக உதவியானவர்கள்
ஒரு சிறு தகவல் ஒரு கலைப்படைப்பை விரிவாக்கிவிடும். சிலவற்றை ஒப்பிட்டு தெரிந்துகொள்ள வேண்டும். சிலவற்றை பின்னணி அறிந்து பார்க்கவேண்டும். சிலவற்றை நம் கனவிலிருந்து எடுக்கவேண்டும். உதாரணமாக ஹளபீடு ஆலயத்தில் பிரம்மன் ஒருகையில் மின்படையும் மறுகையில் தாமரையும் வைத்திருக்கிறார். படைப்பு என்பது மின்னலும் மலரும்தானே என என் உள்ளம் விரிந்தது .இந்த ஆலயங்கள் ’பழைய’ இடங்கள் அல்ல. இவை மாபெரும் படிமக்களஞ்சியங்கள் என்ற புரிதல் நமக்கு இருந்தால்போதும்
சிலநாட்களுக்குமுன் ரோஹிண்டன் மிஸ்திரி எழுதிய ஒரு நாவலை கொஞ்சம் வாசித்து தூக்கிப் போட்டேன். அவருடைய இன்னொரு நாவலையும் ஒருமுறை வாசிக்க முயன்றிருக்கிறேன். இந்தியாவில் பொது இடங்களில் மலங்கழிப்பதைப் பற்றிய மிக விரிவான வர்ணனைகள். இருக்கட்டும், அதுவும் உண்மைதான். ஆனால் அவருக்கு இந்தியா என்றால் அதற்கு அப்பால் எதுவுமே தெரியவில்லை.அதைப்பற்றி சமீபத்தில் மீண்டும் வாசித்தேன். நம் நவீன எழுத்தாளர்களுக்கு மரபுஎதிர்ப்பு நோக்கு மெல்லமெல்ல இந்திய எதிர்ப்பாக காலப்போக்கில் கலை எதிர்ப்பாகவே ஆகிவிடுகிறது. அதிலிருந்து நாம் உள்ளத்தை விடுவித்துக்கொண்டாலே போதும்.
கலைக்குள் நுழைவதற்கு ஓர் ஏற்புநிலை தேவை. அக்கலையை புரிந்துகொள்ளவும் உள்வாங்கிக்கொள்ளவும் நம் உள்ளத்தை சித்தப்படுத்தி வைத்தல். சிறு ஒவ்வாமைகூட நம்மை கலையில் இருந்து அயலாக்கிவிடும். நம்மவர் மேலைநாட்டுக் கலையை இலக்கியத்தைப் புரிந்துகொள்ள அளிக்கும் உழைப்பில் சிறுபகுதியை அளித்தாலே நமது கலையைக் கண்டுகொள்ள முடியும். ஏனென்றால் இவை ஏற்கனவே நம்முளுள்ளன
நம் நவீனச் சூழல் நமது மரபுக்கலைகள் அனைத்தின்மேலும் ஒவ்வாமையை உருவாக்கி வைத்திருக்கிறது. குறிப்பாக இந்துமதம் ஆலயம் சார்ந்த அனைத்தையும் வெறுக்கும்படி பயிற்றுவிக்கிறது. இது தன்னிச்சையாக நடந்த ஒன்று என நான் நினைக்கவில்லை. இந்த உளநிலையை கம்போடியாவிலும் இந்தோனேசியாவிலும்கூட சாதாரண மக்களிடையே கண்டேன்.
இவ்வுளநிலை கீழைநாடுகளில் எவ்வாறோ உருவாகியிருக்கிறது. இதற்குப்பின்னால் ஓர் அறிவுத்திட்டம் கண்டிப்பாக உண்டு. அதை நம்முள் நாம் அடையாளம் கண்டாகவேண்டும். நம்மை நாமே வகுக்கவேண்டும், பிறர் அல்ல என்னும் தன்னுணர்வு நமக்கு உருவானாலே போதும். ஓர் அலுவலகத்தில் கல்விநிலையத்தில் கேளிக்கையிடத்தில் நீங்கள் பார்த்த சிற்பங்களைப்பற்றி ஐந்துநிமிடம் பேசமுடியுமா என்று பார்த்தாலே போதும், இன்றைய நிலை புரியும்
ஆலயத்திற்குள் நுழையும் இடத்தில் ஆகவமல்லனின் கல்வெட்டு தனியாக ஒர் அறிவிப்புத் தூணாக வைக்கப்பட்டுள்ளது. கர்நாடக ஆலயங்களில் கல்வெட்டுகள் இப்படி பட்டைத்தூண் வடிவில் செதுக்கப்பட்டு வைக்கப்படுவது வழக்கம். ஹொய்ச்சாள ஆலயங்களில் சிற்பிகளின் பெயர்களும் கட்டுவித்த தளபதியின் பெயரும்கூட இருக்கும்.
கல்லேஸ்வரர்ஆலயத்தைப் பார்த்தபோது ஒரு விதை முளைத்து ஈரிலை விட்டு நின்றிருப்பதைப் பார்ப்பதுபோலிருந்தது. கர்நாடகச் சிற்பக்கலை என்னும் அழகிய காடாக அது வளர்வதற்கு முந்தைய நிலை.
தக்காணத்தின் கற்கள் அவற்றின் பரிணாமத்தின் ஒரு பகுதியாக கூர்கொண்டு எழுந்து இக்கலைக்கோயில்களாக உருக்கொண்டன போலும் என எண்ணிக்கொண்டேன். கடல் சிப்புக்குள் முத்து என முகிழ்வதுபோல. அந்த இடத்திற்கு உகந்த ஒரு சிந்தனைதான். அவ்வாறெல்லாம் கற்பனைசெய்துகொள்கையில் அந்தக் கற்கள் மேலும் அழகு கொள்கின்றன
[மேலும்]