கற்காலத்து மழை -1

[ ஓசூர் புலரி]

பயணங்கள் காலையிலேயே தொடங்குவது அந்நாள் முழுக்க ஓர் உற்சாகத்தை உருவாக்குகிறது. வெயில் எழுந்தபின்னர் தொடங்கும் பயணம் தொடக்கத்திலேயே ஒரு சோர்வை அளித்துவிடுகிறது. இதை சினிமாப் படப்பிடிப்பிலும் கண்டிருக்கிறேன். காலை உணவுக்கு முன்னரே ஒரு காட்சியை எடுத்துவிட்டால் அன்றைய படப்பிடிப்பு மிகச்சிறப்பாக அமையும். காட்சிகளின் நீளம் மட்டும் அல்ல தரமும் கூட மேம்பட்டிருக்கும். ஆகவே எங்கள் பயணங்களில் வெயிலெழுவதற்கு முன் காரில் ஏறிவிடுவதை ஒரு நெறியாகவே கொண்டிருக்கிறோம்.

பலதருணங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு. குறிப்பாக முந்தைய நாள் மிகப்பிந்தி படுக்க நேர்ந்தால், இரவில் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தால், அதை எப்போதும் கட்டுப்படுத்த முயன்றாலும் பல தருணங்களில் முடிவதில்லை, குறிப்பாக இரவில் கொந்தளிப்புடன் பேச ஆரம்பிக்கும் சக்தி கிருஷ்ணன் உடன் இருக்கையில். அவர் ஓர் அசுரர். அவர்களுக்கெல்லாம் இருள் ஏற ஏற ஆற்றல் கூடிக்கொண்டே இருக்கும்

 

ஓசூர் வழியோர மலை

 

இந்தப்பயணம் மற்றவர்களுக்கு ஆறுநாள். எனக்கு மட்டும் எட்டுநாள். சேருமிடம் பெங்களூர் என்று சொல்லியிருந்தார்கள். எனக்கு பெங்களூருக்குக் காலையில் சென்றுசேரும்படி ரயில்கள் இல்லை. நெல்லையில் இருந்து ஒரு ரயில் இருந்தது. அதற்கு தத்கால் பதிவு இல்லை. ஆகவே முந்தையநாளே பெங்களூர் வந்து நவீன் வீட்டில் தங்கியிருந்தேன். பகலில் கொஞ்சம் எழுத்து. உச்சிப்பொழுதுக்குப்பின் விஷால்ராஜா, ஸ்வேதா ஆகியோரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். மாலையில் பாண்டிச்சேரி நண்பர்கள் வந்துவிட்டிருந்தனர்

கிருஷ்ணகிரி கடந்ததுமே பெங்களூரின் ‘தக்காண’ நில அமைப்பு வந்துவிடும். குவித்துப்போட்ட பாறாங்கற்களால் ஆன குட்டி மலைகள். சோர்ந்து போன மரங்கள். வெட்டவெளித்தன்மை. ஆனால் ஓசூர் எனக்குப் பிடிக்கும். முன்பு இப்பகுதியில் ராயப்பேட்டை, டெங்கனிக்கோட்டா, கெலமங்கலம், தளி என நன்றாகவே அலைந்திருக்கிறேன். கெலமங்கலத்தில் எனக்குத்தெரிந்த ஆயுர்வேத அரசுமருத்துவர் ஒருவர் பணியாற்றினார். அவரை சந்திக்கச்சென்று அவர் வீட்டில் தங்கியிருந்திருக்கிறேன். நண்பர்களும் இருந்தனர். அப்பகுதியின் பண்பாடே வேறு. தெலுங்குதான் மையமொழி. அன்று மிகப்பிற்பட்ட பகுதி அது.

[உச்சங்கி துர்க்கம், வாயில்]

 

12 ஆம் தேதி காலை நான்கரை மணிக்கு நவீனின் இல்லத்தில் இருந்து கிளம்பி ரயில்நிலையத்துக்கு வந்துவிட்டிருந்த சென்னை செந்திலை கூட்டிக்கொண்டு ஷிமோகா ரவியின் வீட்டிற்குச் சென்றோம். அங்குதான் கிருஷ்ணன் உள்ளிட்ட மற்ற ஈரோடு நண்பர்கள் தங்கியிருந்தார்கள். பாண்டிச்சேரி நண்பர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து ஒரு வேன் ஏற்பாடு செய்திருந்தோம். இருள் விலகிக்கொண்டிருக்கையிலேயே பெங்களூரை விட்டு வெளியே சென்றுவிட்டோம். இவ்வாறு பெங்களூரை விட்டு செல்லும் வழியில் தும்கூர் சாலையில் ஒர் உணவகத்தில் தட்டு இட்டிலி என்பதைச் சாப்பிடுவதை ஒரு சடங்காக கிருஷ்ணன் மாற்றியிருந்தார். இப்படிச் சில நினைவுகள் சடங்குகளாக ஆவதன் வழியாகவே பயணங்களை அர்த்தப்படுத்திக் கொள்கிறோம்

இப்பகுதியில் இந்த இட்டிலி — அதை இட்டிலி என்று சொல்ல முடியுமென்றால் — ஒரு நல்ல அரிய உணவுதான். அரிசிமாவையும் உளுந்தமாவையும் கலந்து புளிக்க வைத்து செய்யப்படுவதல்ல.அரிசிப்பொடியை உளுந்தப்பொடியுடன் ஊறவைத்து செய்யப்படுவது. மென்மையாக இருக்கும். சாம்பாரில் இனிப்புச்சுவை உண்டு. கர்நாடகத்தின் சுவைக்குள் நுழைவதற்கான ஒரு நல்ல தொடக்கம். நன்றாக இல்லை என்றாலும் தலையை ஆட்டி “இட்லி சூப்பர்!” என்று சொல்லிக்கொண்டால் நாம் பயணத்தை உரியமுறையில் தொடங்குகிறோம் என்று பொருள்.

முதல் நாள் முழுக்க நீண்ட பயணம்தான். தாவண்கெரே வரை வெறும்பயணம் வேண்டாம் என்பதனால் வழியிலேயே சில இடங்களை பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். உச்சி மாகாளி எனப்படும் உஜ்ஜயினி மாகாளி அம்மனின் கோயில் அமைந்த உச்சங்கிக் கோட்டைக்கு முதலில் சென்றோம். உச்சங்கிதுர்க்கம் எனப்படும் கோட்டை இருப்பதனால் இந்த ஊர் உச்சங்கி என அழைக்கப்படுகிறது. ஊரின் தலைக்குமேல் இருக்கும் பெரும்பாலும் சிதைந்த கோட்டை அன்றி இந்த ஊரில் வேறேதும் இல்லை எனத் தெரிகிரது. ஹரப்பனஹள்ளி வட்டத்தில், ஆஞ்சி செல்லும் பாதையில் உள்ளது இக்கோட்டை.

இன்றிருக்கும் இக்கோட்டை நாயக்க மன்னர்களின் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. வெறுமே கருங்கற்களை அடுக்கி கட்டப்பட்ட இத்தகைய கோட்டைகளை தக்காணம் முழுக்கக் காணலாம். இந்த மலையிலேயே எடுக்கப்பட்ட கற்கள் இவை. மழைநீரை இடுக்குகளினூடாக வழிந்தோட விடுவதனால் மலையிறங்கும் வெள்ளத்தால் பாதிக்கபடாதது இந்த அமைப்பு. இத்தகைய கோட்டைகளில் நாயக்க அரசர்களின் பெனுகொண்டா கோட்டை மிகப்பிரம்மாண்டமானது. தொலைவிலிருந்து பார்க்கையில் அங்கிருக்கும் இயற்கையான கற்கள் ஏதோ ஒரு விழிமாயத்தால் கோட்டையாக மாறிவிட்டது போலவே தோன்றியது.

கோட்டையை பற்றி எந்த குறிப்பும் அங்கு இல்லை. அழிந்த கோட்டை என்ற அறிவிப்பு மட்டுமே இருக்கிறது. இணையத்திலிருந்தே சில செய்திகளைப் பெறமுடிகிறது. வரலாற்றுச் செய்திகளின்படி இந்த ஆலயம் உச்சசிருங்கி [மலையுச்சி] கோட்டை என அழைக்கப்பட்டிருக்கிறது. தாவண்கெரே அருகிலுள்ள அனஜி என்னுமிடத்திலுள்ள கல்வெட்டுகளின்படி கிபி நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களுக்கும் கதம்ப மன்னன் கிருஷ்ணவர்மனுக்கும் இக்கோட்டையைக் கைப்பற்றும்பொருட்டு போர் நிகழ்ந்ததாகவும் கிருஷ்ணவர்மனை பல்லவர்கள் வென்று இங்கே தங்கள் ஆதிக்கத்தை நிறுவியதாகவும் சொல்லப்படுகிறது. கிருஷ்ணவர்மன் தன் தலைமையிடமான பன்வாஸிக்கு மீண்டார்.

கிபி இரண்டாம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவையே ஆண்ட சாதவாகனப்பேரரசின் வீழ்ச்சி தொடங்குகிறது. சாதவாகனப் பேரரசு என்பது உண்மையில் ஒரு அரசக்கூட்டு மட்டுமே. அதற்குள் அடங்கிய அரசுகள் தனியாதிக்கத்திற்காக போராட ஆரம்பித்த காலம் அது. பல்லவர்கள், சாளுக்கியர்கள், கதம்பர்கள், வாகாடகர்கள் அனைவரும் அதன் உறுப்புகளே. அவர்களுக்கிடையேயான போரின் வெற்றிதோல்விகளே இப்பகுதியின் அரசியலை பின்னர் முடிவுசெய்தன. கிபி ஏழாம் நூற்றாண்டு வரை பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமான போர் தொடர்ந்தது. நான்காம் நூற்றாண்டில் இப்பகுதியிலிருந்து பல்லவர்களால் கதம்பர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம்.

பல்லவர்கள் பின்னர் ஆறாம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் வெல்லப்பட்டனர். அவர்கள் மெல்ல தங்கள் தென் எல்லையான காஞ்சியை தலைமையாகக் கொண்டு தமிழக எல்லைக்குள் நிலைகொண்டனர். சிம்மவிஷ்ணுவுக்கு முந்தைய பல்லவர்கள் குண்டூர் அருகே அமராவதியை தலைமையிடமாகக் கொண்டவர்கள். அவர்களில் ஒருவரான நானாகத பல்லவர்கள்தான் இப்பகுதியை ஆண்டவர்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சாளுக்கியர்கள் ஆற்றலிழந்தபோது இக்கோட்டை பாண்டியர்களின் கைக்கு வந்தது. திருபுவன மல்ல பாண்டியன், விஜயபாண்டிய தேவன், வீரபாண்டிய தேவன் ஆகியோர் இப்பகுதியை ஆண்டிருக்கிறார்கள்.

இந்தப் பாண்டியர்கள் யாதவகுடியைச் சேர்ந்தவர்கள் என்றும் காஞ்சியிலிருந்து வந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. கர்நாடக அரசியலை வாசிப்பவர்களுக்கு குழப்பம் ஏற்படும் இடம் இது. இந்தப் பாண்டியர்களுக்கும் மதுரைப் பாண்டியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பத்தாம்நூற்றாண்டுக்குப் பின் ஆந்திர கர்நாடக பீடபூமிப் பகுதிகளில் வலுப்பெற்று ஆட்சியை அமைத்த யாதவக் குடிகளில் ஒன்றுதான் இது. பாண்டியர்கள் என அவர்கள் தங்களுக்கே பட்டம் சூட்டிக்கொண்டனர். விரைவிலேயே பிற அரசுகளால் வெல்லப்பட்டனர். இத்தகைய யாதவ அரசுகளில் ஒன்றுதான் ஹம்பியில் மலைமேல் அமைந்திருந்த ஆனைக்குந்தி அரசு. அதிலிருந்தே பின்னர் விஜயநகரப்பேரரசு உருவாகி வந்தது.

பாண்டியர்களிடமிருந்து ஹொய்ச்சாலர்கள் இப்பகுதியை கைப்பற்றினர். ஹொய்ச்சால மன்னர் விஷ்ணுவர்தனர் [பேலூர் ஆலயத்தை அமைத்தவர். புகழ்பெற்ற அரசியான சாந்தலையின் கணவர். சாந்தலை பற்றி ஜி.வி.அய்யர் எழுதிய சாந்தலா என்னும் நாவல் கன்னடத்தின் தொடக்ககாலப் படைப்பு. தமிழிலும் வெளிவந்துள்ளது] உச்சங்கிதுர்கா கோட்டையைக் கைப்பற்றினார். அதன்பின் நாடக்க அரசர்களிடம் கோட்டை சென்றது.நாயக்க ஆட்சியாளர்களான ஹனுமனப்ப நாயக்கரும் திம்மண்ன நாயக்கரும் இப்பகுதியை ஆட்சிசெய்திருக்கிறார்கள். இவர்கள் காலத்தில்தான் கோட்டை இன்றிருக்கும் வடிவில் கட்டப்பட்டது. முன்பிருந்த கோட்டைகள் அக்கால வழக்கப்படி மண்ணால் கட்டப்பட்டவையாக இருந்திருக்கலாம்.

இந்த கோட்டையில் ஓர் ஆர்வமூட்டும் காதல்கதை உள்ளது. நாட்டார்பாடல்களில் உள்ள கதை இது. கொஞ்சம் வரலாறும் இருக்கலாம்.திம்மண்ணநாயக்கர் கிருஷ்ணதேவராயருக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். அவர் மாவீரர். பிஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களை போரில் வென்றவர். சுல்தான் படைகள் பெருகி விஜயநகரின் எல்லைக்குள் வந்தபோது தன் சிறுபடையுடன் எதிர்த்து நின்றார். இரவில் தன்னந்தனியாக தன் புரவியில் ஏறி சுல்தான்களின் படைகளுக்குள் சென்று சுல்தானின் தலைப்பாகையை எடுத்துவந்தார். சுல்தான் அஞ்சி திரும்பிச் சென்றுவிட்டார். அதற்கு பரிசாக கிருஷ்ணதேவராயரின் முன் தலைப்பாகையுடன் தோன்றும் உரிமையைப் பெற்றார்.

 

திம்மண்ணர் விஜயநகர அரசரின் முடிவணக்க விழாவுக்காக விஜயநகரம் சென்றபோது அவையிலிருந்த ஓர் அழகிய பரத்தையைப் பார்த்து காதல்கொண்டார். அப்போது அவருக்கு நாற்பது வயது. அவளுக்குப் பதினாறு வயது. அவர் அவளை அழைத்துக்கொண்டு உச்சங்கிதுர்க்கத்திற்கு வந்துவிட்டார்.

அது பேரரசரின் அதிகாரத்தை மீறுவது என்பதுடன் குடிப்பெருமையை இழப்பதும்கூட. அரசர் அவரைக் கைதுசெய்ய ஆணையிட்டார். அவர் அவளை அழைத்துக்கொண்டு மியாக்கொண்டாவுக்கும் அங்கிருந்து அமராவதிக்கும் தப்பிச்சென்றார். ரங்கபட்ணம் என்னும் இடத்தில் அவரை சிறைப்பிடித்தனர். சித்ரதுர்க்கத்தில் அவரை விசாரணை செய்து யானைக்கால்களில் இடறி கொன்றனர். அவருடைய காதல்மனைவியும் உடன்கட்டை ஏறினார்.

 

இக்கதை வெவ்வேறு வேறுபாடுகளுடன் பேசப்படுகிறது. 2010ல் ஒரு கர்நாடக தயாரிப்பாளர் இதை சினிமாவாக எடுக்க என்னிடம் பேசினார். ஒரு மாவீரன், அரசன், ஏன் ஒரு தாசிக்காக பேரரசரையே பகைத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் கேள்வி. காதல் என்று சொல்லிவிடலாம். தன்முனைப்பும் சாகசமனநிலையும் எல்லாம் கலந்த ஒன்று அது.

திம்மண்ண நாயக்கரின் மகன் ஒப்பணநாயக்கர் சித்ரதுர்க்காவின் தலைவனாக அமர்த்தப்பட்டா. 1565ல் ஒப்பண நாயக்கர் காலத்தில் தலைக்கோட்டைப்போரில் விஜயநகரம் வீழ்ச்சி அடைந்தது. ஒப்பண்ன நாயக்கர் சித்ரதுர்க்கா தனியரசாகியது. மடகேரி நாயக்கர்கள் என்னும் பேரில் ஒப்பன்ன நாயக்கரின் குடி அதை ஆண்டது. இறுதியாக ஹைதர் அலியிடம் தோல்வியடைந்தது. உச்சங்கிதுர்க்கம் நாயக்கர் ஆட்சி மறைந்ததுமே முக்கியத்துவம் இழந்தது.

சமணப்பள்ளிகள் இதேபோன்ற மொட்டைக்குன்றுகளில் அமைவதே வழக்கம். காட்டுவிலங்குகள் அங்கே அணுகாதென்பதனால். ஆகவே எங்கெங்கோ சென்று நோக்கிய சமணக்குன்றுகளை நினைவூட்டிக்கொண்டே இருந்தது . கோட்டை உச்சியில் உச்சயினி மாகாளியம்மன் கோயில். அங்கு செல்லும் வழி முழுக்க சிறு வணிகர்கள் தேங்காய், பொரி, வாழைப்பழம் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள். அம்மனுக்கு வளையல் சார்த்துவது ஒரு நேர்ச்சை என்று நினைக்கிறேன். கண்ணாடி வளையல்கள் பல வண்ணங்களில் விற்கப்பட்டன.

பாறைக்கு மேல் பொருட்களைக் கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்படும் கழுதைகள் பணி முடிந்து ஓய்வாக லாந்திக்கொண்டிருந்தன. பயணிகள் அமர்ந்து சாப்பிடும்போது சென்று ஒருவாய் வாங்கி உண்டன. கொடுக்காதவர்களை நோக்கி தும்மல் ஓசை எழுப்பின. பாறைகளில் அண்மைக்காலத்தில் வெட்டப்பட்டிருந்த படிகளினூடாக ஏறி மேலே சென்றோம்.

 

செல்லும் வழியில் அரசரின் அரண்மனை அமைந்திருந்த உச்சிக்கோட்டை இருந்தது. பல்வேறு மாளிகைகளின் அடித்தளங்கள் எஞ்சியிருந்தன. கட்டிடம் என ஏதும் இருக்கவில்லை. அங்கே கல்லால் ஆன பீரங்கிக் குண்டுகளை பார்த்தோம். அக்கோட்டை பழங்காலப் படையெடுப்புகளைத் தான் தாங்குமே ஒழிய பிற்காலப் பீரங்கிகள் முன் நிற்காது என்று தோன்றியது.

அம்மன் கோயிலைச் சுற்றி ஒரு சிறு ஊரே உருவாகிவிட்டிருந்தது. முழுக்க முழுக்க அங்கே வரும் பயணிகளை நம்பி உருவான ஓர் இடம். பாறையுச்சிகளில் சிறிதளவு மண் தேங்கிய இடங்களில் கைப்பிடியளவு புல் முளைப்பதுபோல. ஒலிப்பெருக்கிகளில் பக்திப்பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.

ஆனால் சில நாட்களில் பக்தர்கள் நிறையப்பேர் வரக்கூடும் என்பது அங்கிருந்த பெரிய வரிசைக்கம்பி அமைப்புகளை பார்த்தபோது தெரிந்தது. நாங்கள் சென்றபோது மதியம் பன்னிரண்டு மணி அன்னதானம் அளித்துக்கொண்டிருந்தார்கள். தர்மஸ்தலா போல சோறு சாம்பார் மட்டும்தான். ஆனால் வழியிலேயே மிளகாய் பஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுவிட்டு வந்திருந்ததனால் நாங்கள் உணவு உண்ணவில்லை. கிருஷ்ணன் கொஞ்சம் ஆசைப்பட்டாலும் மற்றவர்களுக்கு ஆர்வமில்லை

அம்மன் பெரிய கண்களுடன் கருவறையில் மின்னும் ஆடைசார்த்தப்பட்டு அமர்ந்திருந்தாள். போர்த் தெய்வமாக இருந்திருக்க கூடும் பெரிய கண்களுடன் சிவப்பு பட்டு சார்த்தி அமர்ந்திருந்தாள். பூசகர்கள் படியேறி வந்து ஒவ்வொரு நாளும் பூசை செய்கிறார்கள். அவர்கள் வழக்கமான அந்தணர்களாகத் தெரியவில்லை. அங்கும் நம்மூட் காளிகோயில் பூசாரிகள் [பண்டாரங்கள்] போல தனி பூசகர் சாதி இருக்கக்கூடும். அம்மனுக்கு குருதிபலி கொடுக்கும் வழக்கமிருந்தால் அந்தணர் பூசை செய்வதில்லை

அது அப்பகுதிக்கு ஒரு முக்கியமான கோயில் என்று தோன்றுகிறது. கீழிருக்கும் ஊர் கூட அந்தக்கோயிலை அந்தக்கோயிலை நம்பி உருவானது. கோயிலைச்சுற்றி மலைக்கோயில்களுக்கே உரித்தான படிப்படியாக இறங்கும் கடைகள். பெரும்பாலானவை தற்காலிக கடைகள். சில கடைகளை கான்க்ரீட்டில் புதிதாக எடுத்துக் கட்டிக்கொண்டிருப்பதைக் கண்டோம். இந்தமாதிரி கடைகளுக்கே உரிய மலிவான பிளாஸ்டிக் பொருட்கள், வகைவகையான இனிப்புகள். ஆனால் இங்கெல்லாம் ஏன் சவுரிமுடி விற்கப்படுகிறது?

ஒரு பீடத்தருகே பெண் அமர்ந்திருக்க அவளுக்கு முன் ஒரு சிறிய தீபம் கற்குவை வடிவில் இருந்தது. அதற்கு சப்பாத்தியைப் படைத்துக்கொண்டிருந்தார்கள் .அங்கு பால்ய விவாகம் அனுமதிக்கப்படுவதில்லை என்று எழுதி வைத்திருந்தார்கள். [இவ்வாறு ஓர் அறிவிப்பை வேறெங்கும் காணநேர்ந்ததில்லை] இப்போது கூட சட்டென்று வந்து குழந்தைகளின் திருமணத்தை செய்து வைத்துவிடுகிறார்கள் போல. பழங்காலத்தில் இங்கு பொட்டுக்கட்டும் பழக்கமும் இருந்திருக்கலாம்.

அங்கிருந்த ஒர் அம்மணி தமிழில் பேசினார். ‘ஊட்டா’ சாப்பிட்டுவிட்டுப் போகும்படி வற்புறுத்தினார். “இல்லை நெடுந்தொலைவு செல்லவேண்டியிருக்கிறது” என்று கீழிறங்கி வந்து பயணத்தை தொடர்ந்தோம்

 

[மேலும்]

 

இந்தியப் பயணம் 4 – பெனுகொண்டா

முந்தைய கட்டுரைமூங்கில்,செர்ரிபிளாஸம்,ஜப்பான்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : ஆற்றூர் ரவிவர்மா